புறநானூற்றில் போர் மறுப்புச் சிந்தனைகள்

புறநானூற்றில் போர் மறுப்புச் சிந்தனைகள்

 

புறநானூற்றின் இன்னொரு முகம்  

எட்டுத்தொகை நூல்களில் போர்கள் பற்றி விரித்துரைக்கும் நூல்கள் புறநானூறும் பதிற்றுப்பத்தும் மட்டுமே ஆகும். சங்க காலப்  போர்கள் பற்றிய போதிய புறச்சான்றுகள் இன்னும் கிடைக்கப் பெறாத நிலையில் புறநானூறு வழி அறியலாகும்  செய்திகள் அதனை ஓரளவு ஈடு செய்கின்றன. போர் பற்றிய செய்திகளை மிகுதியாகத் தெரிவிக்கும் போர் நூலாகப்  புறநானூறு கருதப்படுகிறது. ஆனால் போர்முகம்  மட்டுமன்றி அமைதியான முகமும் இந்நூலுக்கு உண்டு. இந்நூலில் போர் மறுப்புச் செய்திகளும் உள்ளதை இந்நூலின் இன்னொரு சிறப்பாகக் கொள்ளலாம். கிடைத்த 398 புறப்பாடல்களில் 232 பாடல்களில் ஏதோ ஒரு வகையில்  இரத்தக்கறை படிந்தே உள்ளதாயினும் அறவே போர் மற்றும் அது தொடர்பான எந்தச் செய்திகளையும்  குறிப்பிடாத 166 பாடல்கள் புறநானூற்றின் இன்னொரு முகமாக உள்ளன.1 போருக்கு எதிர்மறைச் சிந்தனைகளை உருவாக்கும் இத்தகைய புறநானூற்றுப் பாடல்கள் போரில்லா உலகைப் படைக்க விழைவோருக்கு உதவுவனவாகும்.

போர்க்கொடுமைகள் ஒப்பீடு

வீர ஊழிக்காலத்தில் உலகெங்கும் போர்கள் இயல்பாகவும், நியாயப்படுத்தப்பட்டும் நிகழ்ந்துள்ளன. இறைவன் என்பது அரசனுக்கும் கடவுளுக்கும் பொதுப்பெயர். அரசு இறைமை ஆக்கப்பெற்று அரசன் இறைவன் ஆக்கப்பட்டமையால்  அரசரைச் சார்ந்து எழும் போருக்கும் இறைமை ஏற்கப்பட்டது.2. எனவே போர் புனிதமானதாக மாறியதால். அதில் நிகழும் கொலைகளும் வன்முறைகளும் கொடுமைகளும் சிறப்பிக்கப்பட்டன. எதிரியைக் கொல்வது  வீரம்; அவன் சொத்தைச் சூறையிடுவது போர்ச்செலவுகளை ஈடுகட்ட; எதிரியின் நிலத்தை, அரண்மணையை இடிப்பது அவனுக்குப் பாடம் புகட்ட என நியாயங்கள் கற்பிக்கப்பட்டன.  சங்க கால அறநோக்கு இன்றைய அறநோக்கிலிருந்து மாறுபட்டது என்ற புரிதலோடு புறநானூற்றை அணுகவேண்டியுள்ளது.

இவ்வகையில் புறநானூறும் போர்க்கொடுமைகளை   வீரச்செயல்களாகவே சித்திரிக்கிறது. இக்கண்ணோட்டத்துடன்தான் புலவர்கள் போர்க்கொடுமைகளைப்  பாடியுள்ளனர். அவற்றில் சில வருமாறு:

  1. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப்  பகைத்தவர் நாடு தாயில்லாக் குழந்தை பசியால் ஓயாது ஒழியாது கதறுவது போன்று துயருற்றுப் புலம்பும் நாடாகும் என்கிறார் பரணர் (புறம்:4).
  2. கரிகாற்பெருவளத்தான் பகைவரை அழித்தலை இரவும் பகலும் கருத்தாகக்கொண்டவன். அவன் ஊர்களைக் கொளுத்தும் பெருந்தீயின் ஒளியில் அச்சத்துடன் அவ்வூரார் தம் சுற்றத்தாரை உருக்கமாக அழைத்துக்கொண்டிருக்கும் கூக்குரல் கேட்கும். அந்த இரைச்சலிலும் சூறையாடலில் விருப்பமுடையவனாகச் செல்பவன் கரிகாலன் எனப் பாராட்டுகிறார் கருங்குழல் ஆதனார் (புறம்-7).
  3. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி பகைவர் நாட்டுத் தெருக்களைக் கழுதைகளைப் பூட்டிச் சீரழித்து, விளைவயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி அழித்து, பகைவரின் காவற்குளங்களில் யானைகளை விட்டுப் பாழ் செய்வான் எனப் போற்றுகிறார் நெட்டிமையார் (புறம்:15).
  4. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரின் நெல்விளையும் வயல்களைக் கொள்ளையிட்டு வீடுகளை இடித்து எரியூட்டி, ஊர்க்குளங்களில் யானைகளை இறக்கி நாசப்படுத்திய செயலைப்  பாராட்டுகிறார் பாண்டரங் கண்ணனார் (புறம்:16).
  5. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பகைவர் முடித்தலைகளை  அடுப்பாக்கிக் குருதியைப் புனலாகப்பெய்து, அவர்கள் தசைகளையும் மூளையையும் அதனுள் இட்டு வெட்டிய தோள்களைத் துடுப்பாகக் கொண்டு துழாவி. களவேள்வி செய்த சிறப்பைப் புகழ்ந்துரைக்கிறார் மாங்குடி கிழார் (புறம்: 26).
  6. திறைகொடா மன்னரின் மதில்களை அழித்துத் தசையும் குருதியும் தோய்ந்ததால் ஈரமடைந்த, துன்பந்தரும் பேய்மகள் உறையும் பெரிய போர்க்களமெல்லாம், வெளுத்த வாயுள்ள கழுதையை ஏரில் பூட்டி உழுது வெண்ணிற வரகும், கொள்ளும் விதைத்து, இடைவிடாமல் போராகிய உழவைச் செய்யும் வேந்தே நீ நீடு வாழ்க என அதியமான் நெடுமானஞ்சியை வாழ்த்துகிறார் பெருமாட்டி ஔவையார் (புறம்: 392).

பயனற்ற செடிகளைப் பசு மேய்ந்தமைக்குப் பசுவின் உடைமையாளரின் கண்ணைக் குருடாக்கி ஒறுத்த செய்தியை அகநானூறு கூறுகிறது (அகம்:262). ஆனால் நெல்விளையும் கழனியை அழிக்கும் மன்னர்களின் செயல்கள் பாராட்டப்படுகின்றன. போரில் செய்யும் கொடுமைகள் அன்றைய நிலையில் தவறாகக் கருதப்படாமல் வெற்றிபெற்றவனின் சிறப்பாகப் பார்க்கப்பட்டன. இஃது அக்காலத்தின் கோலமாகும். மற்றும் மன்னனிடம் பரிசிலை நாடிச்செல்லும் புலவர்கள் பலருக்கு இப்படி மன்னனைப் பாராட்டுவது தேவையும் தவிர்க்கமுடியாததுதாகும்.

போர்க்கொடுமையைப்  புகழ்ந்து பாடிய நெட்டிமையாரும் ஔவையாரும் பெண்பாற் புலவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமகாலத்தில் உலகின்  நான்கு பழம்பெரும் நாடுகளில் நிகழ்ந்த போர்க்கொடுமைகளில் சிலவற்றைத் தமிழக நிலையோடு ஒப்புநோக்குவோம்:

  • கி.மு 1182 இல் லிபியர்கள் முதலிய வட ஆப்பிரிக்க இனத்தினர் நைல் டெல்டா பகுதியில் படையெடுத்தபோது எகிப்தியப் பேரரசன் 3வது இரமேசஸ் எதிரிப்படைகளை முறியடித்துத் தோற்ற வீரர்கள் 12,536 பேரின் ஆண்குறிகளையும் கைகளையும் இரக்கமின்றி வெட்டியெடுத்ததாக அவன் வெற்றிச்சாசனம் குறிப்பிடுகிறது.3
  • மூன்றாவது பியூனிக் போரில் ரோமானியர்கள் இழைத்த படுகொலைகள் கொடூரமானவை.  இப்போரில் ரோமானியர்கள் கார்தேஷ் நகரை  கி.மு 149-147 வரை 3 ஆண்டுகள் முற்றுகையிட்டுப் கைப்பற்றினர். தோற்ற கார்தீஜினியர்கள் ரோமானியர்களிடம் அடிபணிந்து கெஞ்சியும் இரங்காது அப்பாவி ஆண்,  பெண், குழந்தைகள் உட்பட 4,50,000 பேரை ரோமானியர்கள் கொன்றனர். சாவுக்குத் தப்பிய 50,000 பேரை அடிமைகளாக்கி விற்றனர்.4
  • கி.மு 416 இல் கிரேக்கத்தின் ஏதென்ஸ் அரசுப்படை அருகிலுள்ள மெலோஸ் தீவு மக்கள் மேல் நடத்திய கோட்டை முற்றுகைப்போரில் தோல்வியுற்ற மெலோஸ் மக்கள் சரணடைந்தும் ஏதென்ஸ் வீரர்கள் தீவின் அத்தனை ஆண்களையும் கொன்று, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக்கி அழைத்துச் சென்றனர்.5
  • கி.மு 260 இல் சீனாவில் நிகழ்ந்த சாங்பிங் (Changping) போரும் படுகொலைகளில் புகழ்பெற்றதாகும். குவின்(Qin) மாநிலத்தினர் பகை மாநிலமான ழகாவோ(Zhao) மீது தொடுத்த போரில் வெற்றிபெற்றனர். இராணுவத் தலைவன் பாய் குய் (Bai Qi) பிடிபட்ட வீரர்கள் அனைவரையும் உயிரோடு மண்ணில் புதைக்க ஆணையிட்டான். ஆனால் எதிர்விளைவுகளைக் கருதி அவர்களை வெட்டிக்கொன்றான். போரிலும் அதற்குப்பின்னும் அவன் 4,50,000 பேர்கள்வரை கொன்றுகுவித்தான். தம் 30 ஆண்டு இராணுவத்தலைமையில் 73 நகரங்களை நாசப்படுத்தி, மொத்தம் 10 இலட்சத்திற்கும் மேலானவர்களைக் கொன்ற இவனைச் சீன வரலாறு மனித கசாப்புக்காரன் என அழைக்கிறது.6

உலகம் முழுவதும் நிலவிவந்த  போர்க்கொடுமைகளுக்குத் தமிழகமும் தப்பவில்லையாயினும் இந்தக் கொடுமைகள் இடையே இங்குள்ள மனித நேயமும் ஊடறுத்துச்சென்றதால் போர்க்கொடுமைகளின் வீச்சுத் தணிந்துள்ளதை உணர முடிகிறது.

போர்க்காரணங்களும் போர்த்திணைகளும்

ஆதிக்க விரிவாக்கம் (புறம்:7,8), பொறாமை (புறம்:109), குடும்ப மனவேறுபாடு (புறம்:165), மகள் மறுத்தல் (புறம்: 336,349), குலத்துக்குள் உட்பூசல் (புறம்: 45,73), தன்மானம் காத்தல் (புறம்:72) முதலிய காரணங்களால் போர் தவிர்க்கமுடியாது என்ற பேருண்மையை உணர்ந்ததால்தான் ‘ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும் புதுவது அன்று; இவ்வுலகத்து இயற்கை’ (புறம்:76) என்று இடைக்குன்றூர் கிழார் குறிப்பிடுகிறார். தவிர்க்கமுடியா இப்போரை முறைப்படுத்தும் முயற்சியாகவே போர்த்திணைகள் வகுக்கப்பட்டன.

மனிதரின் பாலியல் உணர்வுகள் தவறான திசைநோக்கிச் செல்கையில் அதனை  முறைப்படுத்த ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ (தொல்:கற்பியல்-4) என்று தொல்காப்பியர் திருமணம் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வைக் குறிப்பிடுவார். அதன் தொடர்சியாக அகத்திணைகள் ஐந்தும் தமிழ்ச்சான்றோரால் நிறுவப்பட்டன. இதே வழித்தடத்தில் மனிதர்களின் மறச்செயல்கள் அத்துமீறிச்செல்வதை அடக்கி முறைப்படுத்தவே புறத்திணைகள் ஏழும் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு புறத்திணை நிகழ்வுக்கும்  ஒவ்வொரு பூ அணிந்து செல்லும் முறை இந்த ஒழுங்குபடுத்தலின் ஓர் அங்கமாகும்; நிகழ்வுகளுக்கேற்ப சீருடை அணியும் இன்றைய முறைக்கு ஒரு முன்னோடியுமாகும்.

வெட்சி, வஞ்சி. உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி. பாடாண் என்று தொல்காப்பியம் கூறும் 7 புறத்திணைகளில் காஞ்சி. பாடாண் திணைகளும் பின்னர் சேர்க்கப்பட்ட பொதுவியல் திணையும் புறநானூற்றில் போரைப் பற்றி மிகுதியாகப் பாடாத திணைகளாக உள்ளன. போர்ச்சூழலை எதிர்க்கும் பாடல்களாகவும் இத்திணைப்பாடல்கள் சில அமைந்துள்ளன. எனவே போர்த்திணைகளை வகுத்தவர்களுள் சிலர் போருக்கு எதிரான கருத்துகளையும் கொண்டவர்களாக விளங்கியதால்தான் இந்த 3 திணைகளையும் சேர்த்துள்ளனர்  என்பதைத் தெற்றெனப் புரிந்துகொள்ளமுடியும்.

மேலும் தொல்காப்பியம் தெரிவிக்கும் போர் பற்றிய செய்திகள் பழங்காலச்சமூகத்தின் எச்சங்களாகவும், நினைவுகளாகவும் இருந்து எழுதப்பட்டவையே அன்றி உண்மையில் சங்க காலத்தில் நிகழ்ந்தவை அல்ல என்கிறார் அருட்திரு தனிநாயகம் அடிகளார்.7

போர் மேலாண்மை

போரினால் வன்மை அற்றோருக்கு இடுக்கண் நிகழாவண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் போர் மேலாண்மை பற்றியும் புறநானூறு கூறுகிறது.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி தாம் முற்றுகையிடும் நகரங்களில் போருக்கு ஈடு கொடுக்கமுடியா உயிரினங்களைப் பாதுகாப்பான இடங்களுக்குப் போய்ச்சேர எச்சரிப்பானென இதே மன்னனின் போர்க்கொடுமைகளைப் பாராட்டிய நெட்டிமையார் இந்தப் போர் அறத்தையும் பாராட்டுகிறார்:

‘ ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம் அம்பு கடிவிடுதும், நும் அரண் சேர்மின்’ (புறம்:9)

இது பண்டைய மன்னர் பலரும் பின்பற்றிய மனித நேய நடவடிக்கை என்பதை இப்பாட்டின் மூலம் உணரலாம்.

போர் அழிவைத் தடுக்கக் கோட்டையை முற்றுகையிட்டிருப்பவர்களுக்கு அறம் உணர்த்தும் வகையில் கோட்டைக்குள் இருப்போர் கரும்பு அம்பு எய்து காட்டுவர். சோழன் நலங்கிள்ளி இம்முறையைப் பின்பற்றியதாக உறையூர் முதுகண்ணன் சாத்தனார் கூறுகிறார் (புறம்:28).

 

போர்த்தடுப்பு முயற்சிகள்

போர் மூள்வதையே தடுக்கும் முயற்சிகளை மன்னர்கள் மேற்கொண்டுள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள. அன்றைய ஊடகவியலாளர்களான புலவர்களும், பார்ப்பனர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதியமானுக்காக ஔவையார் தொண்டைமானிடம் தூது சென்று போர்த்தடுப்பு முயற்சியில் சூசகமாக ஈடுபட்டார் (புறம்:95). ஒரு பகை மன்னனிடம்  இரவு நேரத்தில் போய்ச்சேர்ந்த ஒரு பார்ப்பன இளைஞன் தன் திறமையான உரையாடலால் போரைத் தடுத்து நிறுத்துகிறான். மதிலைக் கைப்பற்றுவதற்கு ஆயத்தமாக இருந்த அம்மன்னன் ஏணி, சீப்பு ஆகியவற்றையும் யானைகளின் மணிகளையும் உடனே நீக்கியதாக பார்ப்பன வாகைத்துறையில் மதுரை வேளாசன் கூறுகிறார் (புறம்: 305)

போரில்லா நாட்டின் மகிழ்ச்சி

போர் அச்சமின்றி மன்னன் அமைதியாக ஆட்சி நடத்தும் நாட்டில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் என்பதை விளக்கிக்காட்டி புலவர்கள் போருக்கு எதிரான கருத்தாடல் செய்த பாடல்களையும் புறநானூற்றில் காண முடிகிறது. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் நாட்டில் சோறாக்கும் நெருப்பையும், செஞ்ஞாயிற்றின் வெம்மையையும் தவிர போர், வறுமை ஆகிய வெம்மைகளை மக்கள் அறியார். இந்திர வில்லையன்றிக் கொலைவில்லை அவர்கள் கண்டதில்லை. கருவுற்ற பெண்டிர் மண்ணை உண்பாரேயன்றி பகைவர் மண்ணைக் கைக்கொள்ளார். கம்பத்தில் கட்டப்பட்ட போர் யானை வெண்கொற்றக்குடை நிழலில் நின்று சுகம் காணும். இது கண்ட வாள் இல்லாதோர் அக்குடையே காவலாக அதன் கீழ் உறங்குவர். நாடு போரின்றி இருப்பதால் பொன்னால் செய்த தும்பை மாலையணிந்த போர்வீரர்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடுவர். சுற்றிக் கரும்பால் கட்டப்பட்டு நெற்கதிரால் வேயப்பட்ட பாடிவீடுகள் எங்கும் மிளிரும். அரிசி குற்றுவோரின் உலக்கையொலி அங்கே முழங்கும். அங்குப் பாசறைக்கே காவல் போடுவதில்லை. இப்படிப் போரில்லா நாட்டில் மகிழ்ச்சி நிறைந்திருப்பதைப் புலவர் குறுங்கோழியூர் கிழார் விளக்குகிறார் (புறம்:20,22). இப்பாடல்கள் போரின்றி நாடுகள் வாழவேண்டும் என்ற விழைவைத் தூண்டுவனவாகும்.

போர் விளைவித்த குற்றவுணர்ச்சி

போரில் ஒருவர் நிகழ்த்தும் கொலைகள் போர் அறத்தின்படி  ஏற்கக்கூடியதாயினும்  மனித நேயம் மிக்கவர்கள் மனதில் இக்கொலைகள்  குற்ற உணர்ச்சியை  விளைவித்தே தீரும். மாமன்னர் அசோகர் மனதில் ஏற்பட்ட இக்குற்றவுணர்ச்சியே அவரின் பெரும் மனமாற்றத்திற்குக் காரணமாகி நாடெங்கும் பௌத்தம் தழைக்க வழிவகுத்தது. புறநானூற்றில் பாண்டியன் பல்யாகசாலை  முதுகுடுமிப்பெருவழுதி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகிய 3 மன்னர்களும் பகைவர் நாடுகளை அழித்து பலரின் இறப்புக்குக் காரணமாக இருந்தவர்கள்; அதேநேரத்தில் பெரும் யாகங்களையும் நிகழ்த்தியவர்கள். இவர்களில் இருவரின் பெயர்களோடு யாகச்செயல்பாடு சிறப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. போர் கொடுமைகள் விளைவித்த குற்ற உணர்ச்சியே இவர்களைப் பெரும் யாகங்கள் நிகழ்த்த தூண்டியிருக்கக்கூடும். அவர்கள் மனித நேயர்களாக விளங்கியதை அவர்களைப் பாடும் புலவர்கள் புகழ்ந்துரைத்திருக்கின்றனர் (புறம்:15,16,26).

பாண்டிய நெடுஞ்செழியன் போரில் பகைவரை அழித்தபோது அவர் மனைவியர் கூந்தல் களைந்து கைம்மை பூணுவதைக்கண்டு மனம் இரங்கி தொடர்ந்து  போரிடுவதை அவன் கைவேல் நிறுத்திற்று எனக் குறிப்பிடுகிறார் புலவர் கல்லாடனார் (புறம்:25).

இனிப் புலவர்கள் நேரடியாகப் போரைத் தணிக்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட நிகழ்வுகளை விரிவாகக் காண்போம்

அன்பும் அருளும் காட்டுக

மனிதவாழ்வின் உயர்பண்புகளை அரசர்களுக்கு எடுத்துரைப்பது அவர்களிடம் உறைந்துள்ள மனிதநேயத்தை வெளிக்கொணரும். சிறப்பாக அன்பும் அருளும் இருக்கும் இடத்தில் பகை மறையும். அதன் விளைவாக அவர்கள் போர்வெறி தணியும்.

  1. எனவே அத்தகைய முயற்சியில் நரிவெரூஉத் தலையார் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரலை வழிநடத்த முயன்றுள்ளார். நாட்டின் அரசனாவது எளிதில் வாய்ப்பதன்று. எனவே பெற்ற தாய் குழந்தையைப் பேணுவது போல நாட்டைப் பேணிக்காக்கவேண்டும் என்றும், அருளையும், அன்பையும் வாழ்விலிருந்து நீக்காவிட்டால் நீங்காத துயரம் ஏற்படும் என்றும் அவர்  அறிவுறுத்துகிறார். (புறம்:5)
  2. ’பசியால் வாடிவருவோருக்கு அன்பும் அருளும் காட்டிப் புலவர்பாடும் சிறப்பைப் பெற்றால் ஓட்டுநர் இல்லா வானவூர்தியில் செல்லும் அளவுக்கு உயரலாம். (‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப’). எந்தக்குறைபாடும் இல்லா நல்லுடல் பெற்ற நீ அறம், பெருள், இன்பம் மூன்றும் ஆற்றும் செயல் தொடரட்டும். கொடியோரை ஒறுப்பதோடு நல்லோரையும் நீ காப்பது கடமை’ என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியை வழிநடத்துகிறார் (புறம்: 27,28,29)
  3. பாண்டியன்  இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்கு மதுரை மருதன் இளநாகனார், ‘நாற்படைகள் மட்டும் பெருமை தரா. அறநெறியை முதலாக உடையதே உனக்குச் சிறப்புச் சேர்க்கும்’ என்று நேரடியாகவே அவன் போர்வெறியை மடைமாற்றுகிறார் (புறம்:55).

போர் இல்லா அருளாட்சியே புலவர்களின் மனமார்ந்த விழைவு என்பது இதனால் பெறப்படும்.

 

வேளாண்மைப் போற்றுக

நாட்டின் அடிப்படை தேவையான உணவை உருவாக்கும் வேளாண்மைக்குச் சிறப்பளிக்கும் சிந்தனையை மன்னர்களிடம் தோற்றுவித்தால் அவர்கள் கவனம் போரிலிருந்து திசை திரும்பும். இதனைக் காவலர்களுக்கு உணர்த்தும் பாடல்கள் சில புறநானூற்றில் மிளிருகின்றன.

  1. இவ்வகையில் குடபுலவியனார் மன்னன் பாண்டிய நெடுஞ்செழியனுக்கு எடுத்துரைத்த திறம் சிறப்பானதாகும். உலகை வெல்ல விரும்பினாலும், மறுமை இன்பத்தை விரும்பினாலும், நிலைத்த புகழை விரும்பினாலும் நீரையும் நிலத்தையும் ஒன்றுகூட்டி வேளாண்மைக்கு உதவுக என்று நீண்ட விளக்கவுரை ஆற்றுகிறார் புலவர் (புறம்-18).
  2.  இதே கருத்தை வெள்ளைக்குடி நாகனார் கிள்ளிவளவனுக்கும் அறிவுறுத்துகிறார். வெண்கொற்றக்குடை வெயில்  மறைபதற்கன்று. மக்கள் வருத்தத்தைப் போக்குவதற்கே பயன்படவேண்டும். போர்க்கள வெற்றியெல்லாம் ஏர்க்களத்தைச் சார்ந்தே நிகழமுடியும். உழவர் குடியினரைப் பாதுகாப்பது போரை இல்லாது செய்யும் உத்தியாகும் என்கிறார் (புறம்:35).
  3. வேளாளருக்கு வரிநீக்கம் செய்து நாட்டை வளப்படுத்தும் அவசியத்தைப் பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் புலவர் பிசிராந்தையார் எடுத்துரைக்கும் திறமும் ஒரு போரற்ற வலுவான சமூகத்தை உருவாக்கும் வழிமுறையை எடுத்துரைப்பதாக அமைகிறது (புறம்:184).

 

மண்ணாசை வேண்டா

எல்லா அதிகாரமும் அரசன் கையில் குவிந்துள்ள சமூக அமைப்பில் மன்னனுக்கு நற்சிந்தனைகளை உணர்த்த பெரும் எச்சரிக்கையைக் கையாளவேண்டியுள்ளது. மன்னன் சீற்றத்திற்கு ஆளானால்  சொல்ல வந்த அறிவுரை வீணாவதுடன் உயிரை இழக்கவும் நேரிடலாம். எனவே சில மனம் வருத்தும்  அறிவுரைகளை வெல்லத்துள் கசப்பு மருந்திட்டு வழங்குவதுபோலப் புலவர்கள் வழங்கினர். மாற்றான் மண்ணைக் கவர மன்னன் அவா உறும்போது அவன் போருக்கான பேராசையைத் தவிர்க்க இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

  1. பாண்டியன் பல்யாகசாலை  முதுகுடுமிப் பெருவழுதிக்குப் புலவர் நெட்டிமையார் வஞ்சப்புகழ்ச்சியில் வழங்கிய அறிவுரை அத்தகையது. பிறர் மண் வென்று பரிசிலர்க்குக் கொடையளித்தல் முறையோ? என்று மறைமுகமாகக் கேள்வி விடுக்கிறார்.(புறம்:12)
  2. இன்னொரு புறப்பாடலில் இதே முறையில் ஆலத்தூர் கிழார் கிள்ளிவளவனுக்குப் போரை நிறுத்த அறிவுறுத்துகிறார். ‘மதிலுக்கு வெளியே காவற் காடுகளை  வெட்டும் ஒலி சேரனின் காதுகளில் விழுந்தும் அவன் வெளியே வரவில்லையே. இத்தகையவனுடன் போரிடுவது வெட்கம் தரும் செயல்’ என்று கூறுகிறார். ‘அடுநையாயினும் விடுநையாயினும்’ என்று தொடக்க வரியிலேயே போரை நிறுத்தும் சிந்தனையை மன்னனுக்குத் தூண்டி விடுகிறார். போரிடுவதும் போரை நிறுத்துவதும்  உன் கையில் என்று எச்சரிக்கையாக, அவன் சினத்திற்கு ஆளாகாமல் அவர் சொல்ல வந்ததை அழகாகச்சொல்லி போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கிறார். (புறம்:36)
  3. இதே தொனியில் இன்னொரு பாடல்: ‘வளமான நாடு உனக்கு இருக்கையில் உன் நாட்டு மக்கள் மகிழ்வுடன் விருந்தளிக்கும் நாட்டின் மீது நீ போர் தொடுக்கலாமா?’ என்று கிள்ளிவளவனிடம் கேட்டு அவன் மண்ணாசையைத் தணிக்கிறார் புலவர் இடைக்காடனார். (புறம்:42)
  4. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் மண்ணாசை கொண்டு மாற்றரசர் மேல் போர் தொடுக்க முயன்றபோது மறைமுகமாக தம் உட்கிடக்கையைப்  புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கூறி அப்போரைத் தடுக்க முயல்கிறார்: ‘ நீ பிறரது நாட்டைக் கைப்பற்றும் காலத்தில் அந்நாட்டு விளைச்சல் நிலங்களை உன் போர் மறவர்கள் கைப்பற்றினாலும், ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினாலும் உன் வீரர்கள் பகைவரைக் குத்திக் கொன்றாலும், எது செய்தாலும்  செய்க. ஆனால் பகைவர் நாட்டுக் காவல் மரங்களை வெட்டுதலை மட்டும்  கைவிட்டுவிடுக. ஏனெனில் அவை உன் யானைகளைக் கட்டிவைப்பதற்கு உதவா.‘ காவல் மரங்களை வெட்டாமல் போரில்லை. எனவே அவர் கூற்று, போர் செய்யாதே என்று மன்னனுக்கு மறைமுகமாக உணர்த்துவதாகும். .(புறம்:57)

 

போரே வேண்டா

இலைமறை காய்மறையாகக் கூறாமல் நேரடியாகவே போரை நிறுத்த அறிவுறுத்தும் பாடல்கள் சில உள்ளன. புறநானூற்றில் இடம்பெற்ற 157 புலவர்களின் சிலர்  நாட்டு நலன் கருதி  எதற்கும் அஞ்சாது மன்னனுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். மேம்பட்ட அறிவுலகச்சூழல் அன்று இருந்ததை இத்தகைய சான்றோர் பாடல்கள் உணர்த்துகின்றன.

 

  1. சோழன் நெடுங்கிள்ளி மதிற்கதவுகளை அடைத்துக்கொண்டு கோட்டைக்குள் இருப்பதால் அவன் மக்கள் குடிநீரும் இன்றிக் கதறுகின்றனர். அவன் போரிடும் வலிமையிழந்துள்ளான். எனவே போர் செய்; முடியாவிடில் கோட்டைக் கதவைத்திறந்து போரை நிறுத்த வழிவகை செய். இப்படியே இருப்பது வெட்கக்கேடானது என இடித்துரைக்கிறார் புலவர் கோவூர் கிழார் (புறம்: 44)
  2. போர் முடிவுக்கு வராமையால் மக்கள் படும் துன்பம் கண்டு நெடுங்கிள்ளிக்கும் அவனை முற்றுகையிட்டுள்ள அவன் உறவினன் நலங்கிள்ளிக்கும் உள்ளத்தில் உறைக்கும் வண்ணம் கோவூர் கிழார் அளிக்கும் அறிவுரை : ‘ ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழர் குடியே. இருவரும் வெற்றிபெறுவது இயற்கை அன்று. எனவே உடனே போரை நிறுத்துங்கள். உங்கள் செயல் பிற வேந்தர்க்கு உடம் பூரிக்கும் வண்ணம் நகைப்பை உண்டாக்கும்’ (புறம்: 45)
  3. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் நிகழ்த்திய போர் மிகக் கொடுமையானதாகும். இப்போரில் மன்னர்கள் இருவர் மட்டுமன்றி இரு புறத்து வீரர்கள் அனைவரும் மாண்டனர். இறந்தோர் மனைவியர் கிடந்தழும் காட்சிக் காணவொண்ணாதது. யாருக்கும் வெற்றி தோல்வியில்லா இப்போர் பிற மன்னர்களுக்கும் பாடமாகும். போரே இனி வேண்டா என்ற சிந்தனையைத் தோற்றுவிக்கும் இந்நிகழ்வினைப் புலவர்கள் கழாத்தலையாரும் பரணரும் நெஞ்சுருகும் வண்ணம் பதிவுசெய்துள்ளனர். (புறம்: 62,63)
  4. கோப்பெருஞ்சோழனின் புதல்வர்கள் அவனோடு மாறுபட்டு நிற்க அவர்களோடு போர்புரிய சோழன் களம் புகுந்தான். அப்போது புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் அப்போரைத் தடுத்து நிறுத்த அளித்த அறிவுரை: ‘இப்போரில் நீ மறைந்தால் ஆட்சிக்கு உரியவர் உன் புதல்வரே. உன் புதல்வர் தோற்றால் உன் செல்வத்தை யாருக்குத் தரப்போகின்றாய்? பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் போரை நிறுத்தி அறப்பணியில் ஈடுபடு’. (புறம்:213)

மன்னன் போரை நிறுத்தியதோடு புதல்வர்களின் போக்கிற்கு எதிராக வடக்கிருந்து உயிர்நீத்து அறவழியில் பாடம் புகட்டினான்

 

போர்த்தீயைத் தணிக்கும் நிலையாமை

வறுமையுற்ற பாலை நிலத்து மறவர் ஆநிரையைக் கவர்ந்து செல்ல, அதனை முல்லை நிலத்து ஆயர் மீட்டுவர, ஆநிரை காரணமாக வெட்சி, கரந்தை திணை போர்களாக மாறிய சூழல் வலுப்பெற்று கால மாற்றத்தில் வேறு உருவம் கொண்டு மன்னரிடையே கடும் போரிடும் நிலை உருவாகி பேரழிவிற்குக் காரணமாயிற்று.

இதனை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியே காஞ்சித்திணை ஆகும். காஞ்சித்திணையின் 20 துறைகளில்  மாற்றுவதற்கரிய கூற்றுவனின் கொடுமையக்கூறும் ஒரு துறையாக பெருங்காஞ்சி உள்ளது. புறநானூற்றில் உள்ள 9 பாடல்கள் (194,357,359,360,362,364,363,365,366) பெருங்காஞ்சித் திணையில் அமைந்துள்ளன. போர்வெறி நோய் மன்னவர்க்கும் மற்றவர்க்கும் தலைக்கேறாமல் தடுப்பூசியாகச் செயல்படுவது நிலையாமையை உணர்த்தும் பெருங்காஞ்சித்துறைப் பாடல்களாகும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

  1. ‘தமிழகம் மூவேந்தர்க்கும் பொது என்று கருதாது தாம் ஒருவரே ஆண்ட பெருவேந்தரும் மறைந்தனர். அவர்களின் திரண்ட செல்வம் அவர்களுக்குத்  துணைவரவில்லை. மனைவி கதற, யாரும் உதவமுடியாது கூற்றுவன் உடலைக் கவரவருகையில் அறச்செயல் ஒன்றே உடலையொழித்துப் புகழால்  நிலைபெறத் துணை நிற்கும்’ என்கிறார் பிரமனார் (புறம்:357).
  2. ‘நாடாண்ட பெருமன்னரும் இறுதியில்  பிணங்களைத் தின்னும் குறுநரிகள், தசை ஒட்டிய பற்களுடன் திரியும் இடுகாட்டையே அடைந்தனர். உனக்கும் அந்த நாள் வரும். இவ்வுலகில் செய்யும் பழியும் நிலைத்து நிற்கும். புகழும் நிலைத்து நிற்கும். நீ புகழை விரும்புவாயாயின் உன்னிடம் உள்ள செல்வங்களை வரையாது இரவலர்க்கு வழங்குக’ என்று அந்துவன் கீரன் என்ற சிற்றரரசனுக்கு அறிவுரை வழங்குகிறார் கரவட்டனார் (புறம்:359).
  3. ’உடைவேல மரத்தின் சிறிய இலை அளவு இடம்கூடப்  பிறர்க்கு வழங்காது ஆண்ட சுயநல மன்னர்கள் கடற்கரை மணலிலும் பலராவர். ஆனால் முடிவில் அவர்கள் நாடு பிறருக்கு உரிமையாக அவர்களுக்கு இடுகாடே சொந்தமானது. அழியா உடலோடு யாரும் இருந்ததில்லை. இது தெளிவான உண்மை. எனவே உப்பில்லாச் சோற்றைப்  பிணத்தருகே வைத்துத் திரும்பிப்பாராமல் புலையன் ஈமச்சடங்கு நிகழ்த்தும் நாள் உனக்கு வருமுன் நீயும்  மண்ணாசையை மறந்து புகழ்பெற்று உய்வதற்கு ஆவன செய்க’ என ஒரு மன்னனுக்கு ஐயாதிச் சிறுவெண் தேரையார் அறிவுறுத்துகிறார் ( புறம்: 363)
  4. ‘என்னில் இருந்து எனக்கு வாழ்வளித்த மன்னர்கள் பலரும் மறைந்துவிட்டனரே. அவர்களுடன் செல்லாது பலரின் இகழ்ச்சிக்கு ஆளாகி விலைமகளிரைப்போல எந்நாளும்  வாழ்கின்றேனே’ என்று நிலமகள் அழுகின்றாள்’ என்று கூறும் மார்க்கண்டேயனார், ‘உலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர்கள் இவ்வாறே உரைப்பார்கள். எனவே புகழால் நிலைத்தற்குரியவற்றைக் கருதிச்செய்வாயாக’ என்று ஒரு மன்னனுக்கு அவர் அறிவுறுத்துகிறார் (புறம்:365).
  5. ‘தம் ஒருமொழியை வைத்தே உலகாண்ட பெருவேந்தரும் தம் புகழை மட்டும் நிலைநிறுத்திவிட்டு மறைந்தனர். எனவே இரவின் எல்லை வருகின்றது என உணர்ந்து பகலுள் முயற்சிகள் அனைத்தும் நடக்க உதவுக. பலி கொடுப்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் ஆடுகளைப்போல நாம் ஒரு நாள் உயிரிழப்பது உண்மை என்பதை உணர்ந்து செயல்படு’ என்று கோதமனார் ‘அறவோன் மகனே!’ என விளித்து ஒரு வேந்தனுக்கு உண்மை உரைக்கிறார் (புறம்:366).

மண்ணாசையால் விளைந்த போர்த்தீயை இதுபோன்ற பாடல்கள் தணித்திருக்கும் என்பது உண்மை.

 

மூவேந்தரை ஒருமைப்படுத்தும் முயற்சி

புறநானூற்றில் நமக்குக் கிடைத்துள்ள 398 பாடல்களில், 138 பாடல்களில் 43 மூவேந்தர்களும், 141 பாடல்களில் 48 குறுநில மன்னர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டதை விளக்கும் பாடல்கள் மிகுதியாக உள்ளன. ஆனால் இவர்கள் போர்க்களத்திற்கு வெளியே ஒன்றிணைந்து செயல்பட்ட நிகழ்வுகள் அரிதாகவே உள்ளன. தமிழ் மன்னர்கள் போரின்றி ஒன்றுபட்டுச் செயல்பட்டிருந்தால்   பல நூற்றாண்டுகள் தமிழகம் அந்நியர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்ததைத் தவிர்த்திருக்கலாம். ஒற்றுமையின் இன்றியமையைத் தமிழறிஞர்கள் கூட உரிய அளவு  எடுத்துரைக்கவில்லை. பல உயர் பண்புகள்  பற்றிப் பாங்குடன் பாடிய திருவள்ளுவர் கூட ஒற்றுமை பற்றி ஓர் அதிக்காரம் அமைக்காமல் விட்டது வியப்பளிக்கிறது. அறக்கருத்துகள் பலவற்றை வற்புறுத்திய புலவர்கள், மன்னரகள் போரின்றி ஒற்றுமையாக வாழவேண்டும் எனப் பாடிய பாடல்கள் எத்தனை?  இரு பாடல்களில் மட்டும் ஒன்றாகக் காட்சியளித்த மன்னர்களைப்  புலவர்கள் பாராட்டிப் பாடும் அரிதினும் அரிதான நிகழ்வு காணப்படுகிறது.

  • காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தபோது அவர்களை வாழ்த்திப் பாடியுள்ளார். அந்தப் பாடலில் மன்னர்கள் பகையின்றி ஒற்றுமையுடன் செயல்படுவதைக் காணும் மகிழ்ச்சி வெளிப்படுகிறது.

‘நீங்கள் இருவரும் பலராமனும், திருமாலும் போல ஒன்றாக இருப்பதைக் காண்பதைவிட இனியது எனக்கு வேறில்லை. நீங்கள் இப்படி ஒற்றுமையாக இருந்தால் கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் உங்கள் கைப்படும். நீங்கள் ஒருவருக்கொருவர் உதவுங்கள். உங்கள் அன்பு நெஞ்சத்தைப் பிரிப்பதற்கு முயல்வோரின் சிறப்பற்ற சொற்களைக் கேட்டுவிடாதீர்கள்! இன்று போல் என்றும் இணைந்தே வாழுங்கள்’’ என்று புலவர் இந்த ஒன்றிப்பை அளவற்ற மகிழ்வோடு வரவேற்றுப் போற்றுகிறார். ( புறம்:58)

  • சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி இயற்றிய யாகத்திற்கு சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் வந்திருந்தனர். வேந்தர்கள் மூவரும் ஒன்றாக இருக்கும் இந்த அரிய நிகழ்வை வியந்து போற்றிப் பாரட்டுகிறார் ஔவையார். பாராட்டுவதோடு நிலையாமையையும் அவர்களுக்கு உணர்த்துகிறார்:

’நிலவுலகம் நம்முடையதே என்று ஆள்வோர் எந்நாளும் கூற முடியாது. மன்னர்  மறைந்தபின் அவர்களோடு தொடர்பில்லா வலியவர்களுக்கு அது போய்ச் சேரும். எனவே அந்தணர்க்கும், இரவலர்க்கும் வழங்கி நிலையான புகழ்பெறுங்கள். பார்ப்பார் வளர்த்துள்ள முத்தீ போல மூவேந்தர்களும் ஓரிடத்தில் இருக்கிறீர்கள். வானத்து மீன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மழையில் உள்ள நீர்த்துளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஒருங்கிருக்கும் உங்களது வாழ்நாள் பெருகவேண்டும். ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு சுடர்களும் இணைந்து செல்வதில்லை. நீங்களோ மூவரும் இணைந்து காட்சி தருகிறீர்கள். இது பெரும்பேறு. பிறரை வாழச்செய்வதுதான் நல்வினை. இந்த நல்வினை உங்களை ஏற்றிச் செல்லும் மிதவையாக உதவும். வாழ்க்கைத் துன்பத்தில் மூழ்கும்போது உற்றத் துணையாகும். இந்த நல்வினை போல வாழ்க்கைக்கு இன்பம் தந்து உதவக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.’ இந்தப் பாராட்டுக் கலந்த அறிவுரையில் போரில்லா அமைதியான  தமிழகம் மலரவேண்டும் என்ற ஔவையின் வேட்கை புலப்படுகிறது.(புறம்:367)

மூவேந்தர் ஒற்றுமைக் காப்பியமாக சிலப்பதிகாரத்தை உருவாக்க இளங்கோவடிகளுக்கு இப்பாடல் வழிகாட்டியிருக்கக்கூடும்.

 

போரில்லா உலகிற்கு வழிகாட்டும் பாடல்

‘மனித உள்ளங்களில்தான் போருக்கான காரணங்கள் தோன்றுவதால் மனித உள்ளங்களில்தான் அமைதிக்கான அரண்கள் அமைக்கப்பெறல் வேண்டும்’ என்பது ஐநாவின் முகப்பு வாசகம்.8 இந்த முகப்பு வாசகத்திற்கு அருகே புறநானூற்றில் போரில்லா உலகிற்கு வழிகாட்டும் ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளும்(புறம்:192)  இடம்பெறத் தகுதியானதாகும். போரில்லா உலகிற்குப் புறநானூறு அளித்த மிகப்பெரும் கொடை இதுவாகும். உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாக ஒன்றிணக்கும் இப்பாடல் போர் மறுப்புப் பாடல்களில் தலைசிறந்ததாகும். இன, சாதி, சமய பூசல்களை நிரந்தரமாக சாய்க்கவும் இப்பாடல் வழிகாட்டும். எனவேதான் இப்பாடல் உலக அரங்கில் பல சிறப்புகளைப் பெற்றுத் தமிழ்ச்சமூகத்திற்குப் பெருமையளிக்கிறது. அமேசான் அனைத்துலக இசைப்பட்டியலில் இப்பாடல் முழுவதும் இசையுடன் இடம்பெற்றுள்ளது.12

 

போர் மறுப்புக்குப் புறநானூற்றின் பங்களிப்பு

புறநானூற்றில் உள்ள பல பாடல்கள் மனித நேயத்தை வளர்த்துப் போரில்லா உலகைப் படைக்கும் பணிக்குத் துணைநிற்க முடியும். அவற்றில் சில வரிகள்:-

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்கென முயலுநர் ஓம்புமின் (புறம்: 182)

 

நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (புறம்; 186)

 

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்:187)

 

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே ( புறம்: 189)

 

இன்னாது அம்மஇவ் வுலகம்

இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே (புறம்:194)

 

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் (புறம்: 195)

உலகெங்கும் 2020 ஆம் ஆண்டில் இராணுவச்செலவுகள் $2 டிரில்லியன் அளவை எட்டிய நிலையில் அதில் இந்தியாவின் பங்களிப்பு 3வது நிலையில் உள்ளது.13 குடிநீருக்கும்,வறுமை ஒழிப்பிற்கும், கல்விக்கும் செலவிடுவதை விட இராணுவத்திற்குச் செலவிட நாடுகள் மிகுந்த அக்கறை காட்டுகின்றன.  $24 பில்லியன் மட்டுமே செலவிட்டால் பூமிப்பந்து முழுவதும் தூய்மையான நீரும் சுகாதார வசதிகளும் அனைவருக்கும் வழங்க முடியும்.14 ஆகவே உலக நாடுகள் ஒன்றுகூடிப் போர்நிகழும்  சூழலைக் கைவிட்டால்தான் வளமான வாழ்வு கைகூடும்.  எனவே ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்ற பாரதிதாசனின் கூற்றை உண்மையாக்க  வேண்டும்.  அதற்குப் புறநானூறும் சிறப்பான பங்களிப்பை வழங்கமுடியும்.

 

சான்றெண் விளக்கம்

1.புறம்:1,5,10,18,20,30,34,46,47,49,50,55,56,58,67,70,75,83,101,102,105-108,112,113,117-119,121-124,127,129,131-138,140,141,143-155,157,159-166,168,171-173,175,176,182-197,199,201,202,204-210,212,214-223,228,231,232,234-238,240-252,256,266,312,313,320,328,331,333,335,358-361,363-367,374-376,379,381,383-386,388,389,391,393-395,398,399=166 பாடல்கள்

2. க.ப. அறவாணன், தமிழ் இலக்கியச் சமூகவியல்- முதற் பதிப்பு பக்:70

3. The End of the Bronze Age p 50-51 by Robert Drews. Drews himself references The Historical Records of Ramesses III by William Edgerton and John Wilson

4. Siege of Carthage (Third Punic War) – Wikipedia

5. Siege of Melos – Wikipedia, List of massacres in Greece - Wikipedia

6. Battle of Changping – Wikipedia, Bai Qi – Wikipedia

7.ஆச்சாரி, சங்ககாலப் போர்முறைகளும், விதிகளும், சிறகு இணைய இதழ் மே 5,2021

8. நா.சங்கரராமன், போர் இல்லாத பூமி வேண்டும் இன்று உலக அமைதி தினம்- தினமலர் செப் 21,2015

9. தமிழில் ஒரு புரட்சி என்ற முகநூல் பக்கப்பதிவு: https://www.facebook.com/தமிழில்- ஒரு- புரட்சி

10. தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்- தமிழச்சி தங்கப்பாண்டியன் பேச்சு – தினமலர், அக்09,2010

11. தமிழில் ஒரு புரட்சி என்ற முகநூல் பக்கப்பதிவு: https://www.facebook.com/தமிழில்- ஒரு- புரட்சி          

12. கணியன் பூங்குன்றனார் -  தமிழ் விக்கிப்பீடியா

13. https://www.sipri.org/media/press-release/2021/world-military-spending-rises-almost-2-trillion-2020

14. Scilla Elworthy, Working for a world without war, Resurgence & Ecologist magazine issue 302, May/June 2017

 

துணைத்தூண்கள்  

1.புறநானூறு  - மூலமும் உரையும்- உ.வே. சாமிநாதய்யர்

2. புறநானூறு  - மூலமும் உரையும்- ஔவை சு. துரைசாமிப் பிள்ளை

3. புறநானூறு தெளிவுரை- புலியூர்க் கேசிகன்

4. புறநானூறு – மூலமும் எளிய உரையும் இரு பகுதிகள், முனைவர்  பிரபாகரன்,  காவ்யா வெளியீடு

5. புறநானூறு – தமிழ்த்துளி- வலைப்பதிவு- vaiyan.blogspot.com

6. பண்டைத்தமிழர்  போர்நெறி- புலவர் கோவிந்தன்

7. பேராசிரியர் இ. பாலசுந்தரம், சங்ககாலத் தமிழர் பண்பாட்டில் மானுடம், மனிதராய் இருத்தல்-, கருத்தியல் நிலை- புறநானூறு தழுவிய  ஓர் ஆய்வு,  வலைப்பதிவு: TamilAuthors.com

8. Nazir Ali, Decoding the battlelust: A Note of the Provocation to war in the Purananuru, International Journal of Tamil Research

9. முனைவர் ப.சு. மூவேந்தன், ஆய்வு: புறநானூற்றில் வாழ்வியல் அறம், பதிவுகள், Pathivukal.com

10.  முனைவர் அ.ஹெப்சி ரோஸ் மேரி, புறநானூறு காட்டும் போர் நிர்வாகமும் மேலாண்மையும், வல்லமை வலைப்பதிவு, Vallamai.com

11. பெ. பெருமாள் சாமி, புறநானூற்றில் ஒலித்த போர் எதிர்ப்புக் குரல், செம்மலர், பிப்ரவரி 06, 2010

12. சங்ககாலப் போர்முறை, தமிழ் விக்கிப்பீடியா

13. புறநானூறு- முக்குல மன்னர்கள், வலைப்பதிவு: mukkulamannargal.weeby.com

14.புறநானூறு, தமிழ் விக்காஸ்பீடியா,   ta. Vikaspedia.in