புறநானூற்றில் அறச்சீற்றம்
அறச்சீற்றம் விளக்கம்
சீற்றம் தவிர்க்கப்படவேண்டியது. ஆனால் சமூக அறச்சீற்றம் கொள்ளவேண்டியது. சீற்றம் தனிமனிதனுக்கானது. அறச்சீற்றம் சமூகத்திற்கானது. தனிமனிதச் சீற்றம் தன்னையும் மற்றவர்களையும் அழிக்கும். பொதுநலத்தில் விளையும் அறச்சீற்றம் சமூகத்தை வாழவைக்கும். சீற்றத்தைத் தணிக்கச்சொன்ன சான்றோர் அனைவரும் அறச்சீற்றம் கொண்டோர் ஆவர்.
சான்றோரின் அறச்சீற்றம்
‘காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்’ என்று வெகுளியை வெறுக்கச்சொன்ன வள்ளுவர் ‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ என்று அறச்சீற்றம் கொள்கிறார். ‘வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்’ என்று இளங்கோ சித்திரிக்கும் பேசா மடந்தை கண்ணகி, தன் கணவனுக்கு நேர்ந்த கொடுமைகண்டு பாண்டியப் பேரரசனையே ‘தேரா மன்னா’ என்று அறச்சீற்றத்துடன் அழைத்து நகரையும் அரசனையும் அழிக்கிறாள். கருணையின் வடிவாக விளங்கிய வள்ளலார் அன்றைய அரசு மக்கள் நலனைப் புறக்கணித்தமை கண்டு ‘கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக!’ என்று அறச்சீற்றத்துடன் குமுறுகிறார். ‘சினத்தை வென்றால் சாகாமல் இருக்கலாம்’ என்று சொன்ன பாரதி ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சீறுவது அறச்சீற்றமன்றோ? ‘கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே!’ என்ற பாரதிதாசனின் சீற்றமும் இத்தகையதே. ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்கால் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்’ என்று திருநாவுக்கரசர் பக்தி பரவசத்தை மீறிச் சாதி வெறியரைச் சாடுவதும் இத்தகையதே. இவர்களின் அறச்சீற்றம் சங்க காலத் தமிழ்ச்சான்றோர்களின் தொடர்ச்சியே. புறநானூற்றுப் புலவர்கள் அன்று மூட்டிய அறச்சீற்றத் தீயே தொடர்ந்து இன்றும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது.
புறநானூற்றில் அறச்சீற்ற வகைகள்
தமிழர்கள் எப்படி வாழவேண்டும் என்று கூறுவது திருக்குறள் என்றால் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கூறுவது புறநானூறு ஆகும். பண்டைத் தமிழர்களின் முகவரியாக விளங்கும் புறநானூற்றில் தமிழர்களின் உயர்பண்புகளில் ஒன்றான அறச்சீற்றத்தை உணர்த்தும் 40 பாடல்களை இனம் காண முடிகிறது.(பாடல் எண்கள்:18,35,36,44,45,46,47, 55,71,72,73,74,121,145,146,147,151,159,162,184,194,195,196,197,202,203,204,205,206,
207,208,209,210,211,213,214,237,278,292,336) முதல் வகை ஆள்வோர் செய்யத்தவறியதைச் சுட்டிக்காட்டிய பாடல்கள். இவற்றில் பலவும் புலவர்கள் தம் சீற்றத்தை மனதில் இருத்திச் செய்தியை அமைதியாகச் செப்பும் பாடல்களாகும். மன்னராட்சிக் காலத்தில் அறச்சீற்றத்தைப் புவலர்கள் அடக்கியே வெளிப்படுத்தும் நிலை உணரக்கூடியதே. எனினும் சிலர் வாள்வீச்சுக்கும் அஞ்சாது வாளினும் வலிய அறச்சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.. மன்னர்களே தங்கள் அறச்சீற்றத்தை வெளிப்படுத்தி வஞ்சினம் உரைத்த பாடல்களும் இத்தகையனவே.. இஃது இரண்டாம் வகை. அறிவுஜீவிகளான புலவர்களைப் போற்றுவதுடன் குறையின்றிக் காப்பதும் ஆள்வோரின் அல்லது வசதிபடைத்தோரின் கடைமையாகச் சமூதாயம் கருதிய காலமது. இதில் குறை நேரும்போது, ஆட்சியாளனின் அதிகாரப்போதையால் புலவரின் தன்மானத்திற்கு இழுக்கு நேரும்போது புலவர்கள் அறச்சீற்றம் கொண்டு குமுறிய பாடல்கள் உள. அவை மூன்றாம் வகையினவாம். தனிமனித பாதிப்புகளால் ஏற்பட்ட மன உளைச்சலைக் குடிமக்கள் சிலர் வெளிப்படுத்திப் பாடிய பாடல்களும் உள்ளன. அவை நான்காம் வகையினவாகும்.
சீற்றத்தால் விளைந்த அறிவுரை- முதல் வகை
அரசன் செய்யவேண்டியதைச் செய்யத்தவறுகையில் அறிஞர் சிலர் அறச்சீற்றம் கொண்டு சுட்டிக்காட்டியச் சீர்திருத்தங்கள் சில காண்போம். இது முதல் வகைத்து.
குடபுலவியானர், பாண்டியன் நெடுஞ்செழியன் நீர் மேலாண்மை செய்வதில் கவனம் செலுத்தாதபோது அவனுக்கு ‘நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்... உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே....உணவெனப்படுவது நிலத்தோடு நீரே’ என்ற பொருள் செறிந்த பாடலைப்பாடி இதனை நீ செய்தால் புகழ்பெறுவாய் இல்லையேல் புகழ்பெறாது மடிவாய் என்பதைத் ‘தட்டோர் அம்ம, இவண் தட்டோரே, தள்ளாதோர் இவண் தள்ளாதோரே’ என்று கண்டிப்புடன் கூறுகிறார் (புறம்: 18)
மக்கட்பேற்றின் அருமையைப் பாடிய பாண்டியன் அறிவுடை நம்பி, சிலரின் தவறான வழிகாட்டுதலால் தன் குடிகளைத் துன்புறுத்தி மிகுதியாக வரி செலுத்த வற்புறுத்தியபோது புலவர் பிசிராந்தையார் அறச்சீற்றம் கொண்டு ‘யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே!’ என்று அவனுக்கு அறிவுரை கூறுகிறார். ( புறம்:184) புலவர் சொல் கேட்டு அறிவுடை நம்பி அறிவு தெளிந்து வரி ஈட்டலை வகைப்படுத்தியிருப்பான்.
சோழன் கிள்ளிவளவன் நாட்டில் மழையின்மையால் மக்களால் வரி செலுத்தமுடியவில்லை. வரி கேட்டு மன்னன் துன்பம் செய்கையில் புலவர் வெள்ளைக்குடி நாகனார் ‘உன் வெண்கொற்றக்குடை வெயில் மறைப்பதற்கன்று, குடிகளின் துன்பங்களைத் துடைப்பற்கே. உன் போர்க்கள வெற்றியெல்லாம் ஏர்க்களத்தைச் சார்ந்தது. எனவே உழவர்கள் நலத்தை மறக்காதே’ என்று அறச்சீற்றத்துடன் நினைவுபடுத்தி வரி நீக்கம் செய்ய வற்புறுத்துகிறார் (புறம்:35). இதே கிள்ளிவளவன் சேர மன்னனின் கருவூரை முற்றுகையிட்டபோது சேரன் வெளியே வராமல் உள்ளே முடங்கிக்கிடந்தபோது ‘வெளியே வராதவனுடன் நீ போரிடுவது உன் வீரத்திற்கு இழுக்கு’ என்று மூளவிருந்த போரைத் தடுத்து நிறுத்துகிறார் ஆலத்தூர் கிழார் (புறம்:36)
கிள்ளிவளவன் மலையமானின் இரு சிறார்களைப் பிடித்துவந்து யானைக்காலில் இட்டுக் கொல்ல முற்படுகிறான். விவரமறியாக் குழந்தைகள், அச்சம் மறந்து யானையைக் கண்டு மகிழ்ந்து நிற்கின்றனர். இந்நிலையில் புலவர் கோவூர் கிழார் ‘புறாவின் அல்லல் தீர்த்த சோழ மன்னன் பரம்பரையில் வந்த நீயா இப்படிச் செய்கிறாய்?’ என்று கண்டனக்குரல் எழுப்பி, ‘கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே’ என்று மென்மையாகத் தம் கோபத்தை வெளிப்படுத்துகிறார். (புறம்46). இந்த அறச்சீற்றம் மன்னன் மனதை மாற்றி குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கவேண்டும்.
நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டபோது சோழன் நெடுங்கிள்ளி போருக்கு வராமல் கோட்டைக்குள் முடங்கிக்கிடந்தான். உணவும் நீரும் இன்றிக் கோட்டைக்குள் மக்கள் அல்லல்பட்டனர். குழந்தைகள் பாலின்றித் தவித்தன. இதைக்கண்டு கொதித்தெழுந்த புலவர் கோவூர் கிழார் ‘ஒன்று அறவழியில் உன் நாட்டை நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடு அல்லது மறவழியில் வந்து போரிடு. அதைவிட்டு நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத் தகவுடைத்திது’ என்று அவன் இயலாமையைச் சாடுகிறார். பின்னர் நலங்கிள்ளியையும் நெடுங்கிள்ளியையும் ஒருமிக்க அழைத்துக் கண்டிக்கிறார். ‘இருவரும் ஆத்திப்பூச் சூடும் சோழர் குடியினரே. ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழர் குடியே. பிறவேந்தர்கள் உங்களின் இச்செயலைப் பார்த்து உடல் குலுங்கும் வண்ணம் ஏளனமாக நகைப்பார்கள்’ என்று நெஞ்சில் உரைக்கும் வண்ணம் கூறுவது அறச்சீறத்தால் விளைந்த அறிவுரையே. ஆகும். (புறம்: 44, 45)
இளந்தத்தன் என்ற புலவர் ஒருமுறை உறையூருக்குச் சென்றார். அவரை நலங்கிள்ளியின் ஒற்றன் எனக் கருதி நெடுங்கிள்ளி கொல்லத் துணிந்தான். அப்போது, ஓர் அப்பாவி தண்டிக்கப்படுவதைக் கண்டு பொங்கியெழுந்த புலவர் கோவூர் கிழார் நெடுங்கிள்ளியை அணுகிப் ‘பிறர்க்குத் தீதறியாப் புலவரின் வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கையை’ விளக்கி புலவரைக் காப்பாற்றியதுடன் ‘நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே’ என்று, அரசனுக்கு இணையானவர் புலவர் எனத் தம் இனத்தின் தன்மானத்தை உயர்த்திப் பிடிக்கிறார். (புறம்: 47)
கோவூர் கிழாரின் அறச்சீற்றம் குரலற்றவர்களின் குரலாக விளங்கியதுடன் பல உயிர்கள் பலியாவதற்குக் காரணமான போர்களையும் தவிர்க்க வழிவகுத்துள்ளது.
கோப்பெருஞ் சோழனுடன் அவன் பிள்ளைகளே முரண்பட்டனர். எனவே அவன் தன் மக்களையே எதிர்த்துப் போர்செய்யப் புறப்பட்டான். மகனும் தந்தையும் போரிடும் அவலத்தைக் கண்ட புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் அறச்சீற்றமுற்று அரசனை அணுகி, ‘இந்தப் போரில் உன்னை எதிர்க்கும் இருவர் சேரனோ பாண்டியனோ அல்லர். உன் சொந்த மக்கள்! உன் மக்கள் தோற்றால் உனக்குப் பிறகு உன் செல்வத்தை யாருக்குத் தரப்போகிறாய்? நீ அவரிடம் தோற்றால் பழிதான் மிஞ்சும். எனவே போராகிய மறச்செயலைக் கைவிட்டு அறச்செயலில் ஈடுபடு’ என்று அறிவுறுத்துகிறார் (புறம்: 213). அவர் அணுகுமுறை அரசனை மாற்றியது. அவன் தன் மக்கள்மேல் கொண்ட சீற்றம் வடிந்து வடக்கிருந்து உயிர் நீக்கத் துணிந்தான். அப்போது அறவுணர்வு கொண்டு அவன் ‘தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே’ என்று கூறி மாய்ந்தபோது பாடிய பாடல் புறநானூற்றில் (புறம்:214) இடம் பெற்றுள்ளது.
வாயில்லா உயிரான மயிலுக்கு இரங்கிய வள்ளல் பேகன் தன் அருமை மனைவி கண்ணகியைக் கருணையின்றித் தள்ளிவைத்ததைக் கண்டு கொதித்துக் கலங்கினர் - பரணர், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகிய நான்கு புலவர்கள். பேகனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெறுவது எளிது. புலவன் வெறும் பரிசுக்காகப் பாடுபவன் இல்லை என்பதை மெய்ப்பித்தவர்கள் இவர்கள். அவன் மனைவியோடு அவனைச் சேர்த்துவைக்கும் பணியில் அவன் வெறுப்பை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அவர்கள் தம்மை இந்த நற்பணியில் ஈடுபடுத்திக்கொண்டார்கள். ஒரு பாணனிடம் பேகன் மனைவி தன் துயரைச் சொல்லி அழுவதுபோல சித்திரித்துப்பாடி அவளுக்கு அருள் செய்ய வேண்டுகிறார் பரணர்(புறம்: 144). அவர்கள் ஒவ்வொருவரும் அவன் அவைக்கு வந்தபோது அவன் அவர்கள் புலமையைச் சிறப்பித்துப் பரிசு கொடுக்க முன்வந்தான். ஆனால் தங்கள் அறச்சீற்றத்தை அழகாக வெளிப்படுத்தி அனைவருமே ஒரே பரிசை வேண்டினர். பிரிந்த மனைவியோடு அவன் சேர்ந்து வாழ்வதே அவர்கள் வற்புறுத்திய பரிசிலாகும். ‘இஃது யாம் இரந்த பரிசில்; அஃது இருளின் இனமணி நெடுந்தேர் ஏறி, இன்னாது உறைவி அரும்படர் களைமே!’ என்றார் கபிலர்.(புறம்: 145) ‘என்னை நயந்து பரிசில் நல்குவையாயின்.... அருந்துயர் உழக்கும் நின் திருந்திழை அரிவை... தண்கமழ் கோதை புனைய வண்பரி நெடுந்தேர் பூண்கநி்ன் மாவே’ என்றார் அரிசில் கிழார்( புறம்;146). ‘ நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல் மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப் புதுமலர் கஞல, இன்று பெயரின் அதுமன் எம் பரிசில் ஆவியர் கோவே!’ என்று மனைவின் கூந்தலைக் கழுவி மலர் சூட்டி இன்றே அழைத்துவர வேண்டினார் பெருங்குன்றூர் கிழார் ( புறம்: 147). புலவர்கள் மனதில் ஏற்பட்ட அறச்சீற்றமே கண்ணகியைப் பேகனோடு சேர்த்து வைத்தது.
தந்தையை இழந்த பரிதாபத்திற்குரிய பாரிமகளிரை மணந்துகொண்டு வாழ்வளிக்க, கபிலர் இருங்கோவேள் என்ற மன்னனை வேண்டுகிறார். அவன் மறுக்கிறான். அதனால் கோபமுற்ற கபிலர், ‘உன் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையார் என்ற புலவரை இகழ்ந்தான். அதனால் உன் நாட்டின் சிற்றரையம், பேரரையம் ஆகிய இரு ஊர்கள் அழிந்தன. நான் இவர்களின் சிறப்பைக் கூறி இவர்களை மணக்க உன்னை வேண்டுகிறேன். நீ என் சொல்லை இகழ்ந்தாய். நான் செல்கிறேன். உன் வேல் வெற்றி பெறட்டும்’ என்று குறிப்பு மொழியால் எச்சரிக்கிறார் (புறம்:202).
வஞ்சினமாக உருவெடுத்த அறச்சீற்றம்- இரண்டாம் வகை
அறச்சீற்றம்கொண்டு வஞ்சினம் உரைத்த வேந்தர்களின் பாடல்கள் இரண்டாம் வகையினவாகும். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனை எதிர்த்துச் சேரனும் சோழனும் படைதிரட்டி வருகின்றனர். அப்போது பூதப் பாண்டியன் கொதித்தெழுந்து வஞ்சினம் உரைக்கிறான். ‘பகைவர்களைப் புறமுதுகுகாட்டி ஓடுமாறு செய்யேனாயின் அன்பு மனைவியை நீங்கியவனாவேன்!; முறையற்ற ஆட்சி செய்யும் கொடுக்கோலன் என்று தூற்றப்படுபவனாவேன்!; மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் ஆகிய என் கண்போன்ற நண்பர்களோடு கூடிக்களிக்கும் மகிழ்ச்சியை இழப்பவனாவேன்!; மறு பிறவியில் பெருமைமிகு பாண்டியர் குடியில் பிறக்காமல் வளமற்ற நிலம் காக்கும் குடியில் பிறப்பவனாவேன்!’ இந்த வஞ்சினம் வழியே மனைவியைப் பிரியாதிருத்தல், நல்லாட்சிப் புரிதல், நட்பைச் சிறப்பித்தல், தம் மண்ணைப் போற்றுதல் ஆகிய அன்றைய மதிப்பீடுகள் நமக்கு அறியப்படுகின்றன(புறம் :71). ஆனால் அந்தோ! சிறந்த மதிப்பீடுகளுக்காக வாழ்ந்த இம்மன்னன் இப்போரில் வீரமரணம் எய்தினான். இவன் பிரிவைத் தாங்கமுடியா இவன் மனைவி பெருங்கோப்பெண்டு தீக்குளிக்கும் முன் பாடிய பாடலும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது
(புறம்: 246).
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரியணை ஏறிய இளம் வயதில் பகைவர் எழுவர் அவன் இளமையை இகழ்ந்து படையெடுக்கின்றனர். அப்போது அவன் சினந்தெழுந்து கூறிய வஞ்சினம் : ‘பகைவர் சிதறியோட அவர்கள் முரசைக் கைப்பற்றுவேன். இல்லையாயின் – குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!... புலவர் பாடாது வரைக, என் நிலவரை; இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.’ (புறம்:72) என்கிறான். குடிகளைக் காத்தல், புவலரைப் போற்றுதல், இரப்போர்க்கு உதவல் முதலியன மன்னரின் கடமைகளாக இருப்பதை ஒரு மன்னவனே அறிவிப்பதாக இஃது அமைகிறது.
சோழன் நெடுங்கிள்ளி , நலங்கிள்ளியின்மேல் வலிந்து போரிட வருகிறான். அப்போது நலங்கிள்ளி உரைத்த வஞ்சினம் அவன் அறச்சீற்றத்தை உணர்த்துகிறது: ‘என்னைப் பணிந்து வேண்டினால் என் அரசை மட்டுமல்ல உயிரையும் தருவேன். ஆனால் நாட்டுமக்களின் ஆற்றலைப் போற்றாது என்னை ஏளனப்படுத்தினால் அவன் தூங்கும் புலியை இடறிய பார்வையற்றவன் போல உயிர் பிழைத்தலே அரிது. யானையின் காலடியில் பட்ட மூங்கில் முளையைப்போல பகைவனை அவன் ஊர்வரை சென்று ஒழிப்பேன். ஒழிக்கத் தவறினால் காதலற்ற விலைமகளிர் என்னைத் தழுவுவதால் என் மாலை வாடட்டும்.’ என் மனைவியே என்னை ஒதுக்கட்டும் என்ற உட்பொருளுடன் விலை மகளிரோடு தொடர்பு கொள்வது இழிவானது என்று அன்றைய சமூகம் தூற்றும் நிலையை இப்பாடல் வெளிப்படுத்துகிறது (புறம்: 73).
மேற்கண்ட 3 பாடல்களும் காஞ்சித் திணையில், வஞ்சினக் காஞ்சி என்ற துறையைச் சார்ந்தனவாகும்
சேரன் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணானிடம் தோற்றுச் சிறையில் அடைபட்ட நிலையில் குடிக்க நீர் கேட்டபோது காவலர்கள் காலம் தாழ்த்தி நீர் கொணர்ந்தமையால் மனம் கொதிக்க நீர் அருந்தாது ‘ ‘மதுகை இன்றி, வயிற்றுத்தீத் தணியத் தாம்இரந்து உண்ணும் அளவை ஈன்மரோ இவ்வுலகத் தானே’ என்று மானவுணர்வுடன் எழுதிய மனதை உருக்கும் கவிதையும் புறநானூற்றில் இவ்வகையைச் சார்ந்ததாகும். அவன் இதனை எழுதிவிட்டு மடிந்தாலும் தமிழர் மதிப்பீடுகளை உயிர்ப்பித்தான்.((புறம்: 74)
அவமதிப்பால் நேரும் அறச்சீற்றம்- மூன்றாம் வகை
தங்கள் தன்மானத்திற்கு இழுக்கு நேர்கையில் புலவர்கள் வெகுண்டெழுந்து அறச்சீற்றத்துடன் பாடிய பாடல்கள் மூன்றாம் வகையினவாகும். அறச்சீற்றத்திற்குக் காரணமான இத்தகைய பாடல்களே புறநானூற்றில் மிகுதியாக உள்ளன. அறங்கூறும் அறிவார்ந்த மக்களைப் பேணிக்காப்பது மன்னனின் கடமை என்று பழந்தமிழ்ச் சமூகம் திண்ணமாக எண்ணியது. இந்தக் கடமையை உரிய முறையில் நிகழ்த்தாதபோது புலவர்களாகிய அறிவுஜீவிகள் தாங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்து அறச்சீற்றம் கொண்டு பாடியுள்ளனர்.
கடையெழு வள்ளல்கள்களில் காரி, ஓரி, அதியமான் ஆகியோரே புலவர்களின் அறச்சீற்றத்திற்கு உள்ளாகியிருப்பது வியப்பளிக்கிறது. அஃது அவர்களின் வள்ளன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. தன்னை நாடி வந்த புலவர்க்குப் பரிசில் வழங்கத் தாமதித்தல் அல்லது தகுதியறியாது சிறுபொருள் வழங்கல் ஆகிய காரணங்களால் புலவர்கள் வெகுண்டெழுந்து பாடியுள்ளனர்.
வள்ளல் காரியைக் காணப் பெரும்புலவர் கபிலர் செல்கிறார். எல்லாப் புலவர்களுக்கும் சிறப்புச்செய்வதுபோல கபிலருக்கும் அதே அளவு சிறப்புச்செய்வதைக் கபிலரால் ஏற்க முடியவில்லை. தகுதியறியாமல் அனைவருக்கும் ஒரே அளவில் பரிசு வழங்குதல் சரியன்று எனச் சினந்து ‘பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!’ என்று அவர் கடிந்துரைக்கிறார். (புறம்:121)
கழைதின் யானையார் என்ற புலவர் வள்ளல் ஓரியின் கொடைத்தன்மை பற்றிக் கேள்வியுற்று அவனைக் காணச் செல்கிறார். ஆனால் தன்னை நாடிவந்த புலவர்க்கு எந்தப் பரிசும் ஓரி வழங்கவில்லை. புலவரின் எதிர்பார்ப்புப் பொய்த்ததால் அவர் சீற்றத்தின் வெளிப்பாடாக அவனுக்கு அறிவுரை கூறி அந்த நிலையிலும் அவனை வாழ்த்தி விடைபெறுகிறார். இதனால் ‘ஈயென இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று’. என்ற ஓர் அருமையான புறநானூற்றுப் பாடல் உருப்பெற்றது (புறம்: 204). நீர்வேட்கை என்பதால் கடல்நீரைக் குடிக்கமுடியாது. கலங்கிய நீராயினும் தேடிப்போய்க் குடிக்கலாம் என்ற உண்மையையும் உணர்த்தி ‘அவன் மீது வெறுப்பில்லை வாழ்த்துகிறேன்’ என்று புலவர் கூறுவது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
ஔவைக்கு அருநெல்லிக்கனி வழங்கிய அதே அதியமான் ஒருமுறை தன் அரண்மனையில் இருந்துகொண்டு ஔவையார் தன்னைப் பார்க்க வந்தபோது காண அனுமதிக்கவில்லை. பரிசும் தரவில்லை. ஔவை தன் அரண்மனையைவிட்டுச் சென்றுவிடக்கூடாது என்பதே அவன் காலங்கடத்தியதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் ஔவையார் இதனைத் தன்மானப் பிரச்சினையாக நினைத்து அறச்சீற்றங்கொள்கிறார். ‘மரம் வெட்டும் சிறுவர்கள் கோடரியுடன் செல்லும் காடு போன்றது இவ்வுலகம். எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே’ என்று மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு கிளம்ப முயல்கிறார் (புறம்:206).
புலவர் பெருஞ்சித்திரனாருக்கும் அதியமானிடம் அறச்சீற்றம் கொள்வதற்கான ஒரு நிகழ்வு நடந்தது. அதியமானை அவர் காணச் சென்றபோது அவரைக் காணாது உதவியாளரிடம் பரிசைக் கொடுத்து அவரிடம் கொடுக்கச் சொல்கிறான். அதனால் சினமுற்ற கவிஞர் ‘ காணாது ஈத்த இப்பொருட்கு யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித் தினையனைத்து ஆயினும் இனிது அவர் துணை அளவு அறிந்து நல்கினர் விடினே’ என்று தன்மானத்துடன் தீட்டிய கவிதை வெறும் காசுக்காகப் பாடும் வணிகக் கவிஞர்களாகத் தமிழ்க் கவிஞர்கள் இல்லை என்பதைப் பதிவு செய்கிறது ( புறம்:208).
பரிசு பெறுவதில் மிகுதியாகத் தன்மானம் பாதிக்கப்பட்ட புலவராகப் பெருஞ்சித்திரனார் உள்ளார். வறுமையின் உச்சத்தைத் தொட்டவர் அவர். பறித்த இடத்தில் மீண்டும் முளைத்த குப்பைக்கீரை இளந்தளிரை உப்பில்லா நீரில் வேகவைத்து மோரும் சோறும் இன்றி வெறும் இலையை உண்ணுமளவு வறுமை! இடுப்பில் சில குழந்தைகளுடன் மனைவி! பால் கொடுத்து வற்றிப்போன மார்பகம்! வள்ளல் குமணனைச் சந்தித்தபோது தம் வறுமையைக் கூறியும் அவன் பரிசளிக்கத் தாமதித்த நிலையில் சற்றே சினமுற்று, ‘மனமுவந்து அளிக்காத பரிசு பெரிய யானையாயினும் ஏற்க மாட்டேன். மனமுவந்து அளிப்பது சிறு குன்றிமணி அளவே ஆயினும் மகிழ்வுடன் ஏற்பேன்’ என்கிறார் (புறம்:159).
பிறகு வெளிமான் என்ற வள்ளலைச் சந்திக்கச் செல்கிறார் பெருஞ்சித்திரனார். வெளிமான் அவருக்குத் தகுந்த பரிசளிக்குமாறு தன் இளவல் இளவெளிமானிடம் கூறிவிட்டு இறந்தான். இளவெளிமான் அவர் தகுதிக்கேற்ப பரிசளிக்கவில்லை. வெளிமான் இறந்தமை, இளவெளிமான் அவமதித்தமை இவற்றால் வருந்திச் சினமடைந்த புலவர், ‘சோறுண்ண நினைத்துச் சோற்றுப்பானைக்குள் கையை விட அங்கு நெருப்பு இருந்தது போல ஆயிற்று. புலி தனக்கு இரையாக யானையை வீழ்த்த முயன்று அது தப்பிவிட்டால் எலியைப் பார்த்துப் பாயாது’ என்று பாடுகிறார் (புறம்:237). இளவெளிமான் முகமலர்ச்சியின்றிக் கண்டும் காணாதவன் போலப் புலவரை அவமதித்தமையால் குமுறும் தம் நெஞ்சிற்கு ஆறுதலாக ‘எழுஇனி; நெஞ்சம்! செல்கம்; ...பெரிதே உலகம் பேணுநர் பலரே.’ என்று பாடிவிட்டு மீண்டும் குமணனிடம் செல்கிறார் (புறம்: 207).
.குமணன் பெருமளவில் பரிசளித்ததைப் பெற்றுக்கொண்டு தம் ஊருக்குத் திரும்பாமல் இளவெளிமானின் ஊருக்குச் சென்று குமணன் அளித்த யானை ஒன்றை அவனுக்குத் தம் பரிசாக அவன் காவல் மரத்தில் கட்டிவிட்டு அவர் பாடிய இந்தப் பாடல் அறச்சீற்றப் பாடல்களில் தலைசிறந்ததாகும்.
இரவலர் புரவலை நீயும் அல்லை!
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்,இனி;இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின்ஊர்க்
கடுமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடுநல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.
(புறம்;162)
பெருஞ்சித்திரனாரைப்போலத் தன்மானத்திற்கு இழுக்கு நேர்ந்தபோது சீறியெழுந்து பாடிய இன்னொரு புலவர் பெருந்தலைச் சாத்தனார் ஆவார்.
வள்ளல் நள்ளியின் இளவல் இளங்கண்டீரக் கோவும் அவன் நண்பன் இளவிச்சிக் கோவும் ஒருங்கிருந்தபோது புலவர் அங்கு வந்து இளங்கண்டீரக் கோவைமட்டும் கட்டித்தழுவினார். இளவிச்சிக் கோவைத் தழுவவில்லை. இதனால் வருந்திய இளவிச்சிக் கோ, ‘என்னை ஏன் தழுவாமல் ஒதுக்கினீர்கள்?’ என்று கேட்டதற்கு அவர் அளித்த விடையே பாடலாக அமைகிறது. ‘பெண்கொலை செய்த நன்னன் மரபில் வந்தவன் நீ. மேலும் உன் நாட்டில் என்போலப் பாடிவரும் புலவர்க்குப் பரிசளிக்காமல் கதவடைக்கும் வழக்கம் உள்ளது. எனவே உன் விச்சி மலையை என் போன்ற புலவர்கள் பாடுவதில்லை. அதனால் உன்னைத் தழுவ விரும்பவில்லை’ என்று மனதில் இருப்பதை ஒளிக்காமல் கூறுகிறார் (புறம்151). அவர் கடிய நெடுவேட்டுவன் என்பவனைக் காணச்சென்றபோது அவன் பரிசில் அளிப்பதற்குக் காலதாமதம் செய்தான். அப்போது அவர் தம் சினத்தை மறைத்து ‘உன்னிடம் வரும் பரிசிலர்கள் மேகங்கள் கடலிலிருந்து நீரைக் கொண்டு செல்வதுபோல், பரிசு பெறாமல் போவதில்லை. ஆனால் இப்பொழுது நான் பரிசில் பெறாமல் போகிறேன். நீ நோயின்றி வாழ்க’ என்று அவன் உள்ளத்தில் உறைக்கும் வண்ணம் கூறி விடைபெறுவதாகப் பாடல் அமைகிறது (புறம்: 205). இதே ஏமாற்றம் வள்ளல் மூவன் என்பவனைச் சந்திக்கும்போதும் பெருந்தலைச் சாத்தனாருக்கு ஏற்படுகிறது. அவன் பரிசளிக்கக் காலம் தாழ்த்தியதால் மூவன் தம்மை இகழ்ந்ததாகக் கருதி அறச்சீற்றமடைந்து பாடுகிறார்: ‘பழமரம் நாடிச் செல்லும் பறவைகள் அங்கு பழமில்லாமல் திரும்புவதுபோல நானும் வெறுங்கையோடு திரும்புகிறேன். இது குறித்து வருந்தமாட்டேன். நீ நோயின்றி வாழ்க. நான் பரிசு இல்லாமல் திரும்பிச்செல்வது நமக்குள் இருக்கட்டும்’ என்று கூறுவதில் பல உட்பொருள்கள் பொதிந்துள்ளன (புறம்:209).
பரிசில் கடாநிலை என்று புறப்பாடல்களில் ஒரு துறையே அமையும் வண்ணம் பரிசில் வழங்காமல் தாமதித்துப் புலவர்களை அவமதித்த நிகழ்வுகளைக் காணமுடிகிறது. இதனால் புலவர்கள் சீற்றம் கொண்டு மானவுணர்வுடன் பாடியதையும் காணமுடிகிறது. குறுநில மன்னர்களாக விளங்கிய வள்ளல்களிடம் மட்டுமா புலவர்கள் அறச்சீற்றம் கொண்டார்கள்? மூவேந்தர்களும் புலவர்களுக்கு உரிய மதிப்பு வழங்கா நிகழ்வுகளிலும் அவர்கள் வெகுண்டெழுந்து பாடியுள்ளனர்.
புலவர் பெருங்குன்றூர் கிழார் சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறையைப் பரிசில் நாடிச் சென்றார். புலவரைப் பாடச்சொல்லி இன்புற்ற சேரன் அவருக்குப் பரிசு தருவதைத் தவிர்த்தான். மனைவியின் முலைகளில் பால் இல்லாமையால் புதல்வன் பால் குடிப்பதையே மறந்துவிட்ட கொடுமை! உணவு நாடி வீட்டின் சுவர்களைச் சுரண்டித் தேடிய எலிகள் உண்ண உணவில்லாமையால் இறந்து கிடக்கும் அவலம்!- இவற்றை விளக்கிப்பாடியும் அவன் பரிசு கொடுப்பதைத் தவிர்த்தமையால் சினமுற்ற புலவர் பாடிய இரு பாடல்கள் (புறம்: 210,211). அன்றைய மன்னர்கள் சிலரின் இரக்கமற்ற இதயத்தை இயம்புகின்றன. ‘உன்னைப்போலப் புலவர்களுக்கு ஆதரவு அளிக்காத வேந்தர்கள் இருந்தால் புலவர்களுக்கு வாழ்வே இல்லை. நான் இறந்துவிட்டேன் என்று கருதாவண்ணம் என்மேல் பேரன்புள்ள மனைவியின் துன்பம் தீர இப்போதே போகிறேன். உன்னால் தாக்கப்பட்ட உன் பகைவர்களின் அரண்கள் அழிவதைப்போல என்னை நிலைகலங்கவைக்கும் என் வறுமையை முன்னே போகவிட்டு நான் பின்னே செல்கிறேன்” என்று அவர் வெறுங்கையராய் விடைபெறுகிறார்.
சேரனைப்போல பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனும் தன்னை நாடிவந்த புலவர் ஆவூர் மூலங்கிழாருக்குப் பரிசு கொடுக்காமல் காலந்தாழ்த்தினான். இதனால் அவர் அரசனுக்கு அஞ்சாமல் தம் சீற்றத்தை இப்படி வெளிப்படுத்துகிறார்: ‘தம்மால் கொடுக்க முடியாததைக் கொடுக்க முடியும் என்று கூறுவதும், கொடுக்க முடிந்ததைக் கொடுக்காமல் மறுப்பதும் இரவலரை வருத்துவதோடு, புரவலரின் புகழையும் குறைக்கும். இதுபோன்ற செயலை இதுவரை கண்டதில்லை; இப்போதுதான் கண்டேன். வெயிலிலும் பனியிலும் கல்லாகிக் கரையாது நி்ற்கும் என் வறுமையுடன், நாணத்தைத் தவிர வேறு அணிகலன்களை அணியாத என் மனைவியை நாடிச் செல்கிறேன். உன் புதல்வர்கள் நோயின்றி வாழட்டும்! உன் வாழ்நாள் பெருகட்டும்!’ (புறம்: 196). வறுமையைக் கரைக்கும் வல்லமை இருந்தும் பாண்டியன் மனம் ஏனோ கல்லாகிப்போனது. இதே பாண்டியன்தான் முன்பொரு சமயம் முறைதவறி நடந்தபோது புலவர் மதுரை மருதன் இளநாகனார் அவனிடம் சென்று அறச்சீற்றத்துடன், ‘நால்வகைப் படைகள் இருந்தும் அரசன் வெற்றிக்கு அறநெறிதான் காரணம் என்பதை மறவாதே’ என்று அறிவுரை கூறியது இங்கு எண்ணத்தக்கது (புறம்:55).
சோழ மன்னர்களையும் புலவர்களின் அறச்சீற்றம் விட்டுவைக்கவில்லை. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனை நாடிக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்ற புலவர் சென்றார். அவன் பரிசளிக்கக் காலந்தாழ்த்தியமை அறிந்து வெகுண்டார். சோழப் பேரரசனாயினும் தம் மனதில் உள்ள அறச்சீற்றத்தை அஞ்சாது இப்படி வெளிப்படுத்தினார்: ‘நாற்படையும் செல்வமும் மிக்கப் பேரரசராயினும் எங்களை மதியாதவரை நாங்கள் மதிப்பதில்லை. சிற்றூர் மன்னராயினும் எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராயின் அவரைப் பாராட்டுவோம். அறிவில்லார் செல்வம் இரவலர்க்குப் பயன்படாது எனவே அதனை விரும்போம். நல்லறிவுடையோர் வறுமையில் இருந்தாலும் அவரைப் பெரிதாக எண்ணி அவர் வாழ வாழ்த்துவோம்’ (புறம்: 197). நாட்டில் நிலவளம் இருந்தும் இந்தச் சோழ மன்னனுக்கு ஏனோ மனவளம் இல்லை.
ஒருமுறை ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்செட் சென்னியிடம் சென்று பரிசு பெற்றார். வறுமை உந்தவே மீண்டும் அவனை நாடிச்சென்றபோது அவன் பரிசில் வழங்காது தாமதித்தான். இச்செயலைக் கண்டு சீற்றங்கொண்ட புலவர், அறிவாளிகளைத் தொடர்ந்து காப்பது அரசின் கடமை என்பதை அவனுக்கு இப்படி உணர்த்துகிறார்: ‘முன்பே மழை பொழிந்தோம் என்று மேகங்கள் மழை பொழிவதை நிறுத்துவதில்லை. முன்பே விளைச்சலை அளித்தோம் என்று நிலம் மீண்டும் பயிர்களை விளைவிக்காமல் இருப்பதில்லை. அப்படி இருந்தால் உயிர்களுக்கு வாழ்க்கை இல்லை. எனவே முன்பே பரிசளித்தமையால் இப்போது நீ பரிசளிக்காமல் இருப்பது முறையன்று. இரவலனைப் பாதுகாப்பது உன் கடமையாகும் ( புறம்: 203).
பண்டைத் தமிழகத்தில் நிலவிய சான்றோரின் அஞ்சாமையையும் உயர்சிந்தனைகளையும் இப்பாடல்கள் புலப்படுத்துகின்றன.
குடிமக்கள் அறச்சீற்றம்- நான்காம் வகை
மன்னர்களும் புலவர்களும் மட்டுமன்றி குடிமக்களும் வெளிப்படுத்தும் அறச்சீற்றப்பாடல்களும் உள. இத்தகைய ஐந்து பாடல்கள் நான்காம் வகையினவாகும்.
வயதில் முதியவர்களாக இருந்தும் தம் அறிவையும் ஆற்றலையும் தீய வழியில் செயல்படுத்துவோரைக் கண்டு அறச்சீற்றமுறுகிறார் புலவர் நரிவெரூஉத் தலையார். ‘பல்சான்றீரே! பல்சான்றீரே!’ என்று அவர் அத்தகையோரை அழைக்கும் பாடலில் ‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின்’ என்ற கூறும் அறிவுரை அவர் அறச்சீற்றத்தின் வெளிப்பாடாகும்(புறம்:195).
காக்கைப் பாடினியார் நச்செள்ளையாரின் பாடல் ஒரு தாயின் சீற்றத்தை வெளிப்படுத்துகிறது. பாலோடு வீரமும் ஊட்டி வளர்க்கப்பட்ட தன் மகன் போரிலே புறமுதுகிட்டு இறந்தான் என்று வீணர் சிலர் இவளிடம் வம்பாகக் கூறினர். சினங்கொண்ட தாய் ‘அவன் அப்படி இறந்திருந்தால் அவனுக்குப் பால்கொடுத்த முலைகளை அறுப்பேன்’ என வஞ்சினம் கூறிப் போர்க்களம் செல்கிறாள். அங்கு, ‘கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள், சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணூஉ, ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே’ என்று முடியும் பாடல் அந்த வீரத்தாயின் அறச்சீற்றம் மகிழ்ச்சியாக மாறுவதைக் காட்டுகிறது(புறம்: 278).
புலவர் பரணர் ஒரு தாயின் மேல் அறச்சீற்றம் கொள்கிறார். அழகான ஒரு பெண்ணை மணமுடிக்க வேந்தன் ஒருவன் விரும்ப, அவள் தந்தை மறுக்கிறார். எனவே தந்தைக்கும் வேந்தனுக்கும் போர் மூள்கிறது. போரைத் தடுக்க யாரும் முயலவில்லை. இதைக் கண்ட புலவர், ‘தன் பெண்ணை அழகுடையவளாக வளர்த்து மகிழும் அத்தாய் இப்போது பகையையும் வளர்த்திருக்கும் பண்பில்லாதவள். போரைத் தடுக்க முயலாமையால் அறமில்லாதவள்’ எனச் சீற்றம் கொள்கிறார் (புறம்: 336).
இறுதியாக மனதை நெருடும் முத்தாய்ப்பான ஓர் அறச்சீற்றப் பாடலைச் சொல்லி நிறைவு செய்யலாம். ஒரு வீட்டில் நெய்தல் பறை முழங்க இறப்பு நிகழ்கிறது. பக்கத்திலேயே இன்னொரு இல்லத்தில் மங்கள முழவோசை முழங்க இனிய திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறுது. மணந்த மகளிர் பூவணிகின்றனர். அருகே கணவரைப் பிரிந்த மகளிர் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால், ‘படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்! இன்னாது அம்ம இவ்வுலகம்’ என்று இத்துன்பத்திற்குக் காரணமானவன் மீது கடுஞ்சீற்றம் கொள்கிறார் புலவர் பக்குடுக்கை நன்கணியார் (புறம்:194). ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கொடுக உலகியற்றியான்’ என்று வள்ளுவருக்கு ஏற்பட அறச்சீற்றத்திற்கு இணையாக இவரின் அறச்சீற்றமும் வெளிப்படுகிறது.
அறச்சீற்றம் இந்த மண்ணில் அன்றுபோல இன்றும் தொடர்கிறது. இது அழிக்கும் தீயல்ல; ஆக்கும் நெருப்பு! இத்தீயை வளர்த்து தீயன அழிப்போம்!
‘’கெடல் எங்கே தமிழின் நலம், அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!" என்ற பாரதிதாசனின் அறச்சீற்றத்தை நினைவு கூர்வோம்.
நம் இனத்திற்கும், நம் மொழிக்கும் நம் பண்பாட்டிற்கும் இன்னல் நேரும்போது நாம் புறநானூற்றுப் புலவர்களின் வழித்தோன்றல்களாக அறச்சீற்றம் கொள்ளவேண்டுமென்பதை உறுதி ஏற்போம்.