திருவள்ளுவரை அவமானப்படுத்தும் அநாகரிகம்

திருவள்ளுவரை  அவமானப்படுத்தும் அநாகரிகம்

எந்தச் சமயத்தையும் சாராத நூல் என்ற பெருமையை உடையது திருக்குறள். அது உலகப்பொதுமறை என்பதால் தான் வள்ளுவன் தன்னை உலகினுக்கே  தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதி பாடினார். இப்போது திருக்குறளின் பெருமையைச்  சிதைக்கும் முயற்சியாகத் திருவள்ளுவருக்குக்  காவி ஆடை உடுத்தி உத்தாரட்சம் அணிவித்து அவரை இந்துத்துவ துறவியாக மாற்றி  பா.ஜ.க அலுவலகத்தில் சிலை வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். பா.ஜ.க  மேலிடப் பொறுப்பாளர்  முரளிதர் ராவ் திருக்குறளை ஓர் இந்துத்தவ நூல் என்றும் இந்துத்துவத்தைப் பரப்ப திருக்குறளைப் பயன்படுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது தமிழ் மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

திருக்குறள்  மீது இவ்வளவு காலம் இல்லாத பற்று இந்த இந்துத்துவ கும்பலுக்குத் திடீரென வந்தது எப்படி ?  மோதி அழிக்கமுடியாததை   எட்டுக் கரங்களால் அணைத்துக்கொண்டு அழிக்கும் ஆக்டபஸ்  முயற்சியில்  இறங்கியிருக்கிறது இந்துத்துவக் கூட்டம்.

காலங்காலமாகத்  தமிழ்மீதும் திருக்குறள் மீதும் வன்மம் கொண்டதே வைதீகம் என்பதை உறுதிப்படுத்த பலரும் மறந்து போன ஒரு நிகழ்வை நினைவுறுத்த வேண்டியுள்ளது . திருப்பாவை, திருவெம்பாவை  தொடர்பான தமிழக அறநிலையத்துறை விழாவொன்றில்  காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்பட்ட  சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் திருப்பாவையில் உள்ள ‘செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்’ என்ற வரிக்கு  "திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன. வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாதென்ற பொருளில் தான் `தீக்குறள்’ என்று ஆண்டாள் நாச்சியார் குறிப்பிட்டுள்ளார்" என்ற புதிய விளக்கத்தைக் கூறித் திருக்குறளை இழிவுபடுத்தினார்.

குமுதம் நாளிதழ் மகாப்பெரியவா சொன்னதைச் சிறப்புச் செய்தியாக வெளியிட்டு, நிறைய தர்ம அடி  வாங்கியது. மகாப்பெரியவரின் திருக்குறளுக்கு எதிரான கருத்துக்குத், தமிழகமெங்கும் எதிர்ப்புக் குரல்கள் ஆவேசமாக எழுந்தன.  கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. ஏன் வைணவர்களே இவருக்கு எதிரணியில் திரண்டனர். குமுதம் 'வருத்தம்' தெரிவித்தது. மகாப்பெரியவா தன்னிலை விளக்கமாக, ஒரு 'சப்பைக்கட்டு' சொல்லி, சமாளித்தார். ஆனால், வருத்தம் தெரிவிக்கவில்லை. குளித்து பூசை முடிக்கும் வரை நீச பாஷையாம் தமிழில் பேசாதவர்; அதுவரை சம்ஸ்கிருதத்தில் மட்டுமே பேசுபவர்; தமிழ் வழிபாட்டிற்கு எதிரானவர்; தமிழை  மாசுபடுத்திய வடமொழி கலப்பை நீக்கக் கடும்  எதிர்ப்புத்தெரிவித்தவர். திருக்குறளைப்பற்றி  இப்படி வன்மத்துடன் விளக்கியிருப்பது வியப்பில்லை. 'தீக்குறளை' என்று சொன்னதன் பொருள் 'தீய கோள்கள் சொல்ல மாட்டோம், அதாவது புறம் பேசுதல் செய்ய மாட்டோம்' என்பதுதான். இதனைத்தான் இப்படித்திரித்துகூறி திருக்குறளை  இவர்  சிறுமைப்படுத்த முயன்றார்.

 

இன்றைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் ஆளுநர் முன்னிலையில் நடந்து பெருவிழாவொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அவமரியாதை செய்த நிகழ்ச்சியும் இதன் தொடர்ச்சியேயாகும.

‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’’

என்றும்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்                                                                                                                                                                                                           உயிர்செகுத் துண்ணாமை நன்று

 

என்றும், வைதீகத்திற்கு எதிராகச் சவுக்கடி தரும். திருக்குறளை இந்துத்துவ நூலாக பகுத்திறிவுள்ள எந்த மனிதனாலும் ஏற்க முடியாது.

திருவள்ளுவரைச் சைவராகவோ, வைணவராகவோ ஏற்றிருந்தால் திருக்குறள் சைவத்திருமுறைகளிலோ,  வைணவ நாலாயிர திவ்ய பிரபந்தத்திலோ ஏன் இடம்பெறவில்லை? திருக்குறளை எந்தப் பக்தி இலக்கியமும் ஏன் எடுத்தாளவில்லை? தமிழகப்  பேரரசர்கள், நாயக்க மன்னர்கள்  கட்டிய  ஆயிரக்கணக்கான  தமிழக  இந்துக்கோயில்களில் ஒன்றிலேனும் திருக்குறளை ஏன்  பதிக்கவில்லை?

1931-ல் அனந்தநாத நயினார் எழுதிய ”ஜைன சமயமும் திருக்குறளும்” என்ற நூலுக்கு  திரு.வி.க எழுதிய  முன்னுரையில் திருக்குறள் இந்து நூல் இல்லை என்பதை  இப்படித் தெள்ளந் தெளிவாக நிறுவுகிறார்: ”திருக்குறள் இந்து மதத்தின் சைவம் சார்ந்ததாகவோ அல்லது வைணவம் சார்ந்த நூலாகவோ இருந்திருந்தால் சைவ அடியார்களில் ஒருவராகவோ அல்லது வைணவர்களின் பன்னிரு ஆழ்வார்களின் வரிசையிலோ வள்ளுவரைச் சேர்த்திருப்பர். அப்படி நடைபெறவில்லை. பிற்காலத்தில் வந்த சைவ, வைணவ ஆலயங்களிலும் திருவள்ளுவர் சிலை எங்குமே இல்லை. மற்ற அடியார்களுக்குச் சிலை உள்ளது.”

எதிர்கால உலகிற்காகத் தமிழகத்திலிருந்து சிந்தித்த  மாமனிதரான திருவள்ளுவர் எந்த நிகழ்காலக் கோட்பாடுகளிலும் தம்மைச் சிறைப்படுத்திக்கொள்ளவில்லை. இந்தியாவில் விளங்கிய எல்லாச்சமயங்களிலும் உள்ள நல்லதைத் தமதாக்கினார். அல்லவற்றைத் துணிவாக எதிர்த்தார். அந்த முறையில் வைதீக இந்த மதத்தின் பல தீமைகளை வன்மையாகக் கண்டித்தார்.

இத்தகைய வள்ளுவருக்கு மத அடையாளத்தைப்புகுத்தி  தமது அரசியலுக்குப் பயன்படுத்துவத்துவது வள்ளுவரின் சிலைக்குச் சாணி அடிப்பதை விடக்  கேவலமான செயலாகும்.

இந்தத் திருவள்ளுவர் அரசியலை தருண் விஜய் என்னும் பாஜக எம்பி மூலமாக நீண்ட காலத்துக்கு முன்பே செய்ய முயன்றனர். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. அதுமட்டுமல்லாது தமிழகத்திலிருந்து சென்ற திருவள்ளுவர் சிலையைக் கங்கைக்கரையில் எப்படிக் கோணியில் போட்டு அவமதித்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

அதன்பிறகும் பிரதமர் மோடி அடிக்கடி திருக்குறளைப் பயன்படுத்தத் தொடங்கினார். எந்த அடையாள அரசியலையாவது பிடித்துத் தமிழர்களின் வாக்குகளை வேட்டையாட வேண்டும் என்பதன் உத்தியாகத் திருவள்ளுவரைப் பயன்படுத்துகின்றனர். தாய்லாந்து மொழியில் திருக்குறளை மோடி வெளியிட்டது இதன் தொடர்ச்சியே. தமிழ்நாட்டில் திருக்குறளுக்கான அங்கீகாரத்தை அப்படியே பாஜக அரசியலுக்கான அங்கீகாரமாக மாற்ற முயற்சி நடைபெறுகிறது. 

 

ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் பெருமையும் இந்துப் பெருமையும் வேறு வேறல்ல என இரண்டையும் முடிச்சுப் போடுவது; பின்னர் இந்துத்துவத்தை எதிர்த்தால் அதை இந்துமத எதிர்ப்பாக மடைமாற்றி அப்படியே அந்த குறிப்பிட்ட மாநிலப் பண்பாட்டுக்கு எதிரானதாக நிறுவுவது- இந்த அடிப்படையிலான முழக்கங்கள் தான் “குஜராத்தி அஸ்மிதா” மற்றும் “மராத்தி மானூஸ்” போன்ற முழக்கங்கள். இந்த வரிசையில்தான் தற்போது தமிழுக்குப் பூணூல் மாட்டும் முயற்சியாகும்.

 

 தமிழ்மொழிமேல் உண்மையான பற்றிருக்குமாயின் தமிழை மத்திய அலுவல் மொழியாக, உயர்நீதி மன்றத்திலும் உச்சநீதி மன்றத்திலும் வழக்காடு மொழியாக, இந்தியாவின் மூத்த மொழியாக அறிவிக்கத்தயாரா? திருக்குறள் கண்டிக்கும் வர்ணாஸ்சிரம தர்மத்தை விட்டு வெளிவரத்தயாரா?

 

திருவள்ளுவரைப் பகடைக்காயாக வைத்து தமிழர்களை ஏமாற்றவும் திருவள்ளுவரை இழிவுபடுத்தவும் செய்யும் முயற்சி  வெற்றிபெறாது. சல்லிக்கட்டுப் போராட்டத்தில் தொடங்கிய தமிழர் ஒற்றுமை, கீழடி அகழ்வாய்வில் பெற்ற அனுபவங்களால்  மேலும் வலுப்பெற்று , திருவள்ளுவர் பிரச்சனையால் முற்றிலும் விழிப்படைந்து இந்துத்துவ சக்திகளை அறவே  புறமுதுகிட வைக்கும் என்பது உறுதி.