தமிழ் தெரியாத் தமிழ்க் குழந்தைகள்

தமிழ் தெரியாத் தமிழ்க் குழந்தைகள்

‘எல்லாத் தடங்கல்களையும் கடந்து தமிழ் என்றும் வாழும்’ என்று  கூறுவது பழைய பொய்யாகும். இதுவரை தமிழ் பல இன்னல்களைக் கடந்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டாலும் இன்றுள்ள சூழலில் தமிழை அழியவிடாமல் காப்பது சவாலுக்குரியதாகவே உள்ளது.

இன்று உலகமயமாக்கலின் விளைவாக இன்னும் 100 ஆண்டுகளில் 95% மொழிகள் அழியுமென்றும் ஆண்டுக்கு 10 மொழிகள் அழிந்துவருகின்றன என்றும் ஆய்வுகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

அழியும் இந்திய மொழிகளாக 42 மொழிகளை யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளது.(காண்க: தினமணி 19.02.18- இந்தியாவில் அழியும் நிலையில் 40 மொழிகள்) தமிழ் செம்மொழி என்பதாலோ, கீழடியில் தமிழின் பழமையை மெய்ப்பிப்பதாலோ, புர்ஜ் கலிபாவில் தமிழை ஒளிரவிடுவதாலோ தமிழ் உணர்வாளர்கள் மகிழலாம். ஆனால் அழிவிருந்து தமிழைக் காப்பாற்ற இவை துணை நிற்கா.  

தமிழுக்கு  இந்தியாலும், ஆங்கிலத்தாலும் நேரும் ஆபத்தைவிட  பெரும் ஆபத்து தமிழர்களாலேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எதிர்காலக் குழந்தைகள் தமிழ் பேசவும், எழுதவும் முடியாதவாறு ஓர் ஆபத்தான கல்விச்சூழல் தடுக்கமுடியாதபடி வளர்ந்துகொண்டிருக்கிறது.

ஆங்கில மோகம் கொண்ட தமிழ்ப் பெற்றோர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு செழிக்கும் மழலையர் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள் முதலியன தமிழ்க் குழந்தைகள் மீது ஓர் அமைதியான  பண்பாட்டுப் படையெடுப்பை நிகழ்த்தி வருகின்றன.

நூறாண்டுகளாக மறைமலையடிகள், திருவிக, பாரதியார், பாரதிதாசன், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட எண்ணற்ற தமிழ்ச் சான்றோர்களும் தமிழுக்காக இன்னுயிர் நீத்த நூற்றுக்கணக்கான தியாகிகளும் அரும்பாடுபட்டு வளர்த்த தமிழுணர்வை இப்பள்ளிகள் தவிடுபொடியாக்கி வருகின்றன. ஏறத்தாழ ஒரு கோடி மாணவர்களைத்  தமிழ் படிக்கவிடாமலோ, அல்லது தமிழைப் புறந்தள்ளிவைத்தோ தமிழ் மண்ணிலேயே தமிழர்களை அந்நியர்களாக்கி வருகின்றன.  

தமிழ் மண்ணில் பள்ளி நடத்தும் இவர்கள்  தமிழில் பேசினால் மாணவர்களுக்கு அபராதம் விதிப்பது கொடுமையிலும் கொடுமை. சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை நகரப் பள்ளியொன்றில் தமிழில் பேசியதற்காக மாணவர்களைக் குப்பைப் பொறுக்கச்செய்ததும் அதனை மேற்பார்வை செய்ய தமிழாசிரியர்களை நியமித்து சிறுமைபடுத்தியதும் தமிழ் உணர்வாளர்கள் நெஞ்சில் வேல்பாய்ச்சிப் போராடவைத்தன.  போராட்டத்திற்குப்  பணிந்து, திருந்தியது போலப் போக்குக் காட்டின இப்பள்ளிகள். ஆனால் இன்று இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

‘என் மகனுக்குத் தமிழ் தெரியாது. ஆனால் ஆங்கிலமும் இந்தியும் சரளமாகப் பேசுவான்’ என்று பெருமையடித்துக்கொள்கிற பெற்றோர்களால் விளைந்த கொடுமை இது. தாழ்வுமனப்பான்மையின் உச்சத்தில் உள்ள கிராமப்புற மக்களும் தங்கள் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக  ஆங்கிலப்பள்ளிகளில் சேர்த்து அடுத்த தலைமுறையை  மம்மி டாடி கலாச்சாரத்தில் ஆழ்த்திவரும் அவலத்தின் விளைவு இது. அநாகரிகத்தை நாகரிகமாகக் கருதுவோரின் இந்த அறியாமையை வைத்து வணிகம் நடத்துகின்றனர் இந்தக் கல்வி வணிகர்கள்.

தமிழறிஞர்களின் இடையறாப் போராட்டத்தின் விளைவாக அரசு 10 ஆம் வகுப்பு வரை தமிழ் படிப்பதைக் கட்டாயமாக்கினாலும், இதில் இருந்து தப்ப சிபிஎஸ்சி பள்ளிகளை உருவாக்கி வருகின்றனர். எனவே தனியார் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கையை விட சிபிஎஸ்சி பள்ளிகள் புற்றீசல்கள் போலப் பெருகி வருகின்றன. 2011 இல் வெறும் 29 ஆக இருந்த சிபிஎஸ்சி பள்ளிகள் இன்று 1417 ஆக வளர்ந்துள்ளன. சென்னையில் மட்டும் 219 பள்ளிகள்  உள்ளன.  திராவிட அரசுகள் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இருமொழிக்கொள்கையை உயர்த்திப்பிடித்ததைக் கேலிக்குரியதாக்கி 3வது மொழியாக இந்தியை இப்பள்ளிகள் கட்டாயமாகக் கற்பித்து வருகின்றன.  இந்தப் பள்ளிகளை நடத்துகிறவர்கள் மார்வாடிகளோ, குஜராத்திகளோ அல்லர்; பலரும் பச்சைத் தமிழர்கள் என்பதே வேதனைக்குரியதாகும். அதிலும்  தமிழ் உணர்வுள்ள குடும்பத்தினரின் வாரிசுகளே இப்பள்ளிகளில் சிலவற்றை நடத்துகின்றனர் என்பதைக் கேள்வியுறும்போது நெஞ்சம் புண்ணாகிறது.

கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் தமிழைப் புறந்தள்ளி அவமதிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அங்கு 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படுகிறது. அதுவும் பகுதிநேர ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். வாரத்திற்கு 2அல்லது 3 வகுப்புகள் மட்டுமே தமிழ்ப்பாடம் நடத்த அனுமதி; மேலும் 6 ஆம் வகுப்பு முதல்தான் தமிழ் கற்க முடியும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை  சமஸ்கிருதம் கட்டாயப்பாடம். 9 முதல் 12 வரை அதுவே விருப்பப்பாடம்.

சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளில் மிகக்குறைந்த ஊதியத்தில் வெறும் வயிற்றுப்பிழைப்புக்காகப் பாடம் நடத்தும் தமிழாசிரியர்களின் வகுப்புகள் மாணவர்கள் வெறுக்கும் வண்ணமே அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுகிறது. இந்நிலை மற்ற பள்ளிகளிலும் தொடர்கிறது. தமிழ் உணர்வும், தமிழ்த் தேர்ச்சியும் மிக்கத் தமிழாசிரியர்களால்தாம் தமிழ்ப் பற்றாளர்களும் சமூகச் சிந்தனையாளர்களும் கடந்த காலத்தில் உருவாகினர். கடனுக்காகத் தமிழ் கற்பிக்கும் தமிழாசிரியர்களின் போக்கும் தமிழ் படிக்கும் மாணவர்களிடம் தமிழ்மேல் வெறுப்பு வளர்ந்தமைக்குக் காரணமாகும். தமிழ்ப்பாடங்கள் சுமை உள்ளதாயும் சுவை குன்றியதாயும் இருக்கும் நிலையும் தமிழைத் தள்ளிவைக்க  இன்னொரு காரணமாகும்.

இவற்றின் விளைவாக ஆங்கிலத்தில் சிந்திக்கும் குழந்தைகள் பெருகிவருகின்றனர். வீட்டில் தமிழ் பேசாத, தமிழ் இதழ்களோ நூல்களோ படிக்கமுடியாத, தமிழ்க் குழந்தைகளின் எண்ணிக்கை மிகுந்து வருகிறது. ஒரு குழந்தையிடம் இன்னொரு தமிழ்க்குழந்தை ஆங்கிலத்தில் பேசுவதே இயல்பாகிவிட்டது .

தமிழ் மொழியின் அழிவு தமிழ் இனத்தின் அழிவு என்பதை உணராவிட்டால் நம் மொழியும் இனமும் அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

கடற்கோள்களால் நகரங்கள் அழிந்தால் மீண்டும் புதிய நகரங்களை உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் மொழி அழிந்தால் அதனை மீட்கவே முடியாது.  உலகின் மூத்த மொழிகளாக விளங்கி வழக்கொழிந்த   இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், எகிப்தியம், சம்ஸ்கிருதம் முதலியன மீண்டும் உயிர்த்தெழ வழியே இல்லை. இந்நிலை தமிழுக்கு வராமல் தடுத்தே ஆகவேண்டும்.

கல்வி மொழியாக, அலுவல் மொழியாக, வழிபாட்டு மொழியாக, சட்ட மொழியாக, வணிக மொழியாகத் தமிழ் உயர்வு பெறுவதுதான் தமிழை வாழவைக்கும் வழியாகும்.

தமிழக அரசு நினைத்தால் இதனை உறுதியாகச் சாதிக்கமுடியும். ஆனால் மாநில அரசு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இம்முயற்சிகள் நீர்த்துப்போகின்றன. எனவே தமிழக மாநிலத்தில் சுயாட்சி வரும்போதுதான் மொழியை முழுமையாக வாழவைக்கும் வல்லமை கிடைக்கும் என்பதே மெய்ப்பொருளாகும்.

அதுவரை தமிழக அரசு சமரசமின்றித்   தங்கள் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியைத் தீவிரப்படுத்தவேண்டும். அமைச்சர்களும் உயர் அரசு அதிகாரிகளும் தங்கள் பிள்ளைகளை முன்மாதிரியாக அரசு நடத்தும் பள்ளிகளில் மட்டுமே சேர்க்கவேண்டும்.  தமிழ்ப்பெற்றோர் தன்மானத்துடன் வீட்டில் தம் குழந்தைகள் தமிழில் பேசுவதையும் படிப்பதையும் பெருமையாகக் கருதி அதனை வற்புறுத்தவேண்டும்.

மெய்ப்பொருள் காண்க:9