மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் நம் நாட்டைப்போல உலகில் எங்கேயும் இப்படி ஆலாய்ப் பறப்பதில்லை. இதற்கு அடுத்து பி.காம் படிப்பிற்கு அலைமோதுகிறார்கள்.. இவை தவிர மற்றவையனைத்தும் தரம் தாழ்ந்தனவாக எண்ணும் மனோபாவம் எப்படி வந்தது? பிற நல்லரசுகளும் வல்லரசுகளும் போற்றும் வரலாறு, இலக்கியம், புவியியல், பொருளாதாரம் போன்ற படிப்புகள் இங்கு ஒதுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தனவாகிவிட்டனவா?
தமிழகத்தின் பல கல்லூரிகளில் தமிழ் இளங்கலை, முதுகலை படிப்பில் சேர ஆளே இல்லை. தமிழ் இலக்கிய முதுகலை படிப்பு தீண்டத்தகாததாகிவிட்டதால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அப்படிப்பிற்கு இனி கட்டணம் இல்லை- இலவசம் என அறிவித்துள்ளது. வாய் கிழிய தமிழ் வாழ்க என முழக்கமிடும் தமிழ்நாட்டில், தமிழ்ப் படிப்பின் இலட்சணம் இதுதான். எப்படிப்பிற்கும் தகுதியற்று, எதுவும் கிடைக்காதவர்களும், இலாயக்கற்றவர்களும் தான் இனி தமிழ் படிக்க முன் வருவார்கள். வக்கற்றவனுக்குதான் இனி தமிழ் வாத்தியார் வேலை கிடைக்கும் என்ற நிலை வரும்போது அதன் பாதிப்பு மாணவர்களிடம் எவ்வாறு இருக்கும் என்று நினைக்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது..
தமிழில் பிழையின்றி பத்திரிகைகள் எழுதுவதில்லை. தொலைக்காட்சி வாசிப்பாளர்களின் உச்சரிப்புக்கொடுமையைச் சகிக்க முடியவில்லை. பிழையின்றித் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற அக்கறை பெரும்பாலான ஊடகங்களுக்கு இல்லவே இல்லை. கைநாட்டு வைப்பவர் கூட ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச, முடிவதில்லை. வாய்ப்புக் கிடைத்தால் தமிழ் கற்பதை அறவே விட்டுவிட்டு பிற மொழிகளைப் பள்ளிகளில் கற்க விரும்புவோரின் கூட்டம் மிகுதியாகிறது, தாய் மொழியாம் தமிழை வீட்டில் பேசாதவர்கள் எண்ணிக்கை தொற்றுநோயாய் வளர்ந்து வருகிறது. தமிழ் நூல்களையும், இதழ்களையும படிப்பவர்கள் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே!. தமிழ் வழி கற்பதை அறவே ஒழித்துக்கட்டும் முயற்சிக்குப் பெற்றோரும் அரசும் உடந்தையாக இருக்கும் அவலத்தைத் தடுத்த நிறுத்தமுடியவில்லை..
எல்லாவகையிலும் தமிழ் இழிந்திருக்கும் நிலையில் இனி வரும் தமிழாசிரியர்கள் இந்தச் சவாலைச் சந்திக்கும் வலிமை பெற்றவர்களாக இருப்பார்களா?
ஆழ்ந்த தமிழ்ப்பற்றும், சிறந்த தமிழறிவும், சமூகச் சிந்தனையும் உலக அறிவும் கொண்டவர்கள் தமிழாசிரியர்களாகத் திகழ்ந்த காலம் ஒன்றிருந்தது. அதன் விளைவாகத் தமிழ்நாட்டில் தமிழுணர்வுடைய ஒரு தலைமுறை பலதுறைகளில் செழித்தது. தமிழறிஞர்கள் பலர், முக்கியத் துறைகளின் தலைமைப் பொறுப்பைத் தாங்கி நின்றார்கள்.
ஆனால் இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளதே.
தமிழ் இனி அழியும் மொழிகளில் ஒன்றாகிவிடும் சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா ?