குமுறும் நெஞ்சம்:6
'தமிளண் என்று சொள்ளடா' என்று உரத்தக்குரலில் முழங்குவோரால் தமிழ் தலைநிமிர்ந்து நிற்க முடியாமல் கூனிக் குறுகுகிறது.
மொழிக்கலப்பைப் பற்றி ஆவேசமாகப் பேசுவோர், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகளில் தம்மைக் கலாச்சார காவலர்களாகக் காட்டிக்கொள்வோர் முதலிய பலரும் தமிழ் உச்சரிப்பு ஊடகங்களிலும், மக்கள் பயன்பாட்டிலும் சீரழிந்து வருவது பற்றிக் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.
உச்சரிப்பு பிழைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த காலம் மாறி, இப்பொழுது பிழைகள் இல்லாமல் உச்சரிப்பவர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பதுதான் காலக்கொடுமை. ழ,ல,ள,ற,ர,ந,ண,ன ஆகிய எழுத்துகளின் உச்சரிப்பு வேறுபாடுகள் பள்ளிகளிலும், இல்லங்களிலும் பயிற்றுவிக்கப்படுவதே நின்றுவிட்டதா?
தமிழைப் பிழைப்பு மொழியாக கொண்டிருப்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லை என்பதுதான் சகிக்க முடியாத வேதனை. .தொலைக்காட்சியில் செய்தி வாசிப்போர், நிகழ்விடத்திலிருந்து நடந்ததை விளக்கும் செய்தியாளர், நிகழ்ச்சி நெறியாளர்கள், நேர்காணல் செய்வோர், அரங்குகளிலும்,பட்டி மன்றங்களிலும் தமிழைத் தூக்கி நிறுத்துவோர், ஏன் தமிழாசிரியர்கள் கூட, வந்தார்கள் என்பதை, வந்தார்கல் என்றும் கழிப்பறை என்பதை, களிப்பறை என்றும், ஈழம் என்பதை ஈளம் என்றும், பொறுப்பற்று உச்சரிக்கும் அவலத்தைக் கேட்கும்போது நெஞ்சில் ஈட்டி பாய்ந்து, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும் வேதனை ஏற்படுகிறது. தவறான உச்சரிப்புக்கு இவர்கள் வருத்தப்படுவதில்லை; வெட்கப்படுவதில்லை. கேட்டால், 'இப்படியே பளகி விட்டது' என்று கூசாமல் பதில் உரைக்கின்றனர்
பாடல்களின் ஸ்ருதியையும், தாளத்தையும் திருத்தும் நடுவர்களின் பலர், உச்சரிப்பைத் திருத்துவதில்லை என்பது இன்னும் கொடுமை. . இதையெல்லாம் விடப் பெரிய கொடுமை தவறாக உச்சரிப்பதும், பாடுவதும் நாகரிகமாகி வருவதுதான். திரைத்துறையினரின் வாயிலாக இந்த அவலம் அரங்கேறி வருகிறது.
ஜேசுதாஸ் போன்ற சிலர் கடைசி வரை ல, ள, ழ வித்தியாசத்தைக் காட்டாமலேயே பாடி முடித்துப் பெயரும் வாங்கி விட்டனர். அவர் பாடும் உச்சரிப்பையே நாகரிகமாக நினைத்து பல இளஞர்கள் மதி மயங்கி அவரைப்போலப் பாடிக்கொண்டிருக்கின்றனர். இப்போது உதித் நாராயண் போன்றவர்களின் வாயில் தமிழ் நுழைந்து கிழிந்து நார் நாராக நாறிப் போய் வெளியே வருவதை லேட்டஸ்ட் பேஷன் என்கிறது கோலிவுட்.
இது பற்றி கவிஞர் வைரமுத்து ஒரு நேர்காணலில், 'உதித் நாராயணன் பாடுவதைப் பாருங்கள். ஒருமுறை தேவாவின் இசையில் அவர் ஒரு பாடலைப் பாடியபோது, எனது பாடலை மிக மிகத் தவறாக உச்சரித்தார். நான் எழுதியது 'பிரியமான பெண்ணை ரசிக்கலாம்' என்பது. ஆனால் அவரோ, 'பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம்' என்று பாடி விட்டார்' என்று வேதனையுடன் குறிப்பிட்டது நம் சிந்தனைக்குரியது. திரைப்படத்தில் இவர்கள் வெளிப்படுத்தும் தவறான ஒலிக்கூறுகள் கோடிக்கணக்கான மக்களை ஊடுருவி ஊறு செய்யும்; ஒரு தலைமுறையைத் தவறாக வழிநடத்தும்.
தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வசனம் பேசுவோர் பலரும் தங்கள் பங்கிற்குத் தமிழ் உச்சரிப்புக்கொலை செய்தே வருகின்றனர். எழுதப்படிக்கவே அறியாத நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரட்டைக்குரல் வசனத்தில் என்றும் ழகர,லகர,ளகர உச்சரிப்புகள் கம்பீரமாக மிளிரும். ஆனால் அவர் மகள் ராதிகா வாள்கை, வாள்கை என்றே தொடர்ந்து கூசாமல் அழுத்தம் திருத்தமாக எல்லாத் தொடர்களிலும் குழப்பி வருவதை எந்த இயக்குநரும், உரையாடல் எழுதுவோரும் பயந்துகொண்டு சுட்டிக்காட்டுவதே இல்லையா ? வாழ்க்கையை, வாள்கை என்பது தான் சரி என்று அவர் ரசிகர்கள் புரிந்துகொண்டுவிடுவார்களோ என்ற நியாயமான பயம் நமக்கிருக்கிறது.
தமிழ் எழுத்துவடிவம் காலந்தோறும் மாறியதால் தமிழ்ச் சாரம் குறையவில்லை. தமிழ் இலக்கிய வடிவம் கவிதையிலிருந்து உரைநடையானதால் தமிழ்ச்செழிப்பு மங்கவில்லை. தமிழ் இலக்கண விதிகள் நெகிழ்ந்தபோது தமிழ்ச்சீர்மை குலையவில்லை. ஆனால் கி.மு நூற்றாண்டுகளிலிருந்து கட்டிக்காத்துவரும் எழுத்து ஒலிப்புமுறை மாறினால் தமிழ் திரிந்து விடும் என்பதே பேருண்மையாகும்.
அறிவியல் நேர்த்தியுடன், தேர்ந்த உள்கட்டமைப்புடன் அமைக்கப்பட்ட நம் மொழியின் பெயரே, த என்ற வல்லினம், மி என்ற மெல்லினம், ழ் என்ற இடையினம் - இவற்றின் இனிய முச்சேர்க்கையாகத் தமிழ் என்று பெயரிடப்பட்டதன் நுட்பம் வியக்கத்தக்கதாகும். தமிழ் என்று உச்சரிக்கமுடியாத தவறான மக்களுக்குத் தமிழ், தாய்மொழியாகிவிட்டதோ, அல்லது இன்றைய தமிழர்கள் தமிழை வடிவமைத்தவர்களின் வழித்தோன்றல்கள் இல்லையோ என்று ஐயுற வேண்டியுள்ளது
மொழியுணர்வும், மொழி உச்சரிப்பும் தமிழ் என்ற துள்ளுந்தின் இரு சக்கரங்கள். ஒரு சக்கரம் காற்றிழந்தாலும் தமிழ்ப்பயணம் தடையாகும்.
.