இந்தி சவாரி ஆபத்தானது

குமுறும் நெஞ்சம்:14                  

  

இந்திமொழி இந்த மண்ணிற்குரியதன்று.  இது முகலாயர் ஆட்சியின்போது  அவர்களின் படையிலிருந்த பார்சி, அரபி, துருக்கி மொழிகளைப் பேசிய படை வீரர்களுக்கும் , அப்படையில் இணைந்த கரிபோலி (இந்தியின் ஒரு கிளை மொழி) பேசிய இந்து வீரர்களுக்கும்  இராணுவக் கூடாரங்களில் ஏற்பட்ட கலந்துரையாடல்களில் கருவானது. அரபி எழுத்துகளில் எழுதப்பட்டு  இந்துஸ்தானி என்ற உருது மொழி   பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் டில்லி வட்டாரத்தில் முழு உருப்பெற்றது.  

ஆங்கிலேயர் காலத்தில் கல்வி, நீதி மொழியாக ஆங்கிலத்துடன் உருதுவும் நீடித்தது. ஆனால் அரபி எழுத்துக்களில் இதனை எழுதுவது என்பது இந்து உயர்சாதி அறிவாளிகளால் சமய மற்றும் தன்மானப் பிரச்சனையாக உணரப்பட்டது. 1872 இல் உயர்சாதி இந்துக்களும், ஆரிய சமாஜிகளும், பிரம்ம சமாஜிகளும் அரபி எழுத்து வடிவிலான உருது மொழியைத் தேவநாகிரி எழுத்துவடிவிற்கு மாற்றி, தம் சமயச்சார்புகளுக்கேற்ப இந்தி என்ற  மொழியாக்கினர்.   மதமாற்றம் செய்யப்பட்ட உருது இந்தியானது.

 இதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, தேவநாகரியில் எழுதப்படும் இந்தியும், அரபி எழுத்தில் எழுதப்படும் உருதும்  வெவ்வேறு வண்ண சட்டைப்போட்ட இரட்டைக்குழந்தைகளாகப் பிரிந்தன. இந்துக்கள் இந்தியுடனும், முஸ்லீம்கள் உருதுவுடனும் தங்களை அடையாளjப்படுத்திக்கொண்டனர். இதன் காரணமாக வட இந்தியாவில் அவரவர் தாய்மொழிகளில் குழப்பம் உருவாகி விட்டது. இதுவரை அவர்கள் பேசிவந்த தாய்மொழிகளைக் கைவிட்டுlத்  தத்தம் சமயம் சார்ந்து   இந்தியையும், உருதுவையும் பேசத்தொடங்கினர். மொழியைவிட மதமே முன் நிறுத்தப்பட்ட நிலையில் ., வட இந்தியாவில் மொழிவாரி மாநில எல்லை சீர்திருத்தம் நடக்கவில்லை.

வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த இந்தியை விட பல நூற்றாண்டுகள் பழமையான 50 க்கும் மேற்பட்ட பழம்பெரும் மொழிகளை விழுங்கி ஏப்பம் விட்டே  இந்தி இன்று வயிறு வளர்த்துக்கொண்டிருக்கிறது.

உத்திரப்பிரதேச மக்கள் பேசிய அவாதி, பிரஜ் பாஷா, புண்டேலி, பகேலி, கனோஜி, கரபோலி, போஜ்புரி, உத்திரகாண்ட் மக்களின் குமானி, ஜான்சாரி, மத்தியப் பிரதேசத்தினரின் மால்வி, நிமாடி, கோண்டி கட்லோ, பிலி, நிகாலி, கொர்கு, பீகாரின் அஞ்சிகா, பாஜிகா, குடுமலி, மகாசி, மைத்திலி, நாக்பூரி கர்ஜாபூரி இமாச்சலப் பிரதேசத்தினரின் கின்னேரி, நேபாளி, காஷ்மீரி, டோக்ரி, லகோலி, இராஜஸ்தானியர்களின் இராஜஸ்தானி முதலிய பல பழம்பெரும் மொழிகளைப்பேசி யானை சவாரி செய்தவர்கள் இந்தி என்ற மட்டக்குதிரையில் ஏறவேண்டிய நிலை ஏற்பட்டது.

இச்சூழலுக்கு எதிராக 1965 இந்தி எதிர்ப்புப்போர் தமிழகத்தில் நிகழ்ந்தபோது போஜ்புரி மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட இந்திக் கவிஞர் சுதாமே பாண்டேதூமில்  எழுதிய கவிதை இந்திக்குப் பலியான வட இந்தியர்களின் அவலத்தைச்சுட்டிக்காட்டுகிறது;

துமரா ஏ தமிழ்- துக் மேரி இஸ் போஜ்புரி பீடாகா பாய் ஹை

பாஷா உஸ் திக்தமி தரிந்தே கா கௌர் ஹை

( உன்னுடயை தமிழ்த் துயரம்

என்னுடைய போஜ்புரி துயரத்துக்குச் சகோதரன்.

வஞ்சகமிகுந்த மிருகத்துக்கு மொழி வெறும் பருக்கைதானே}

பெரும்பாலான பயன்பாட்டிற்கு இந்தி மட்டும்  போதும் என்ற நிலையால் இந்தியாவின் வடக்கிலும், மேற்கிலும், கிழக்கிலும் ஒரளவு தெற்கிலும் கூட மக்கள் மெல்ல மெல்ல தங்கள் தாய்மொழி பயன்பாட்டை மறந்து வரும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர். இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 அலுவல் மொழிகளும் கூட அழிவிலிருந்து தப்ப முடியாது.

 

 

.இத்தனை மொழிகளை அழித்துவரும் இந்தியின் தற்போதைய நிலை என்ன? கோடானகோடி ரூபாய்களை  மத்திய அரசு வாரி இறைத்து எல்லா மட்டங்களிலும் நீக்கமற பரப்ப முயன்றும்  இம்முயற்சி வெற்றி பெறுகிறதா? பன்றிக்கு உதட்டுச்சாயம் பூசி இளவரசியாக்கிவிட முடியுமா ?

தம் தாய் மொழியை இழந்து இந்தியைப் படித்தவர்கள் இப்போது இந்தியைவிட ஆங்கிலம் படிப்பதே உகந்தது என்று  உணரத்தொடங்கிவிட்டனர்.

இந்தியைத் திணிப்பது போல ஆங்கிலத்தை யாரும் திணிக்காத நிலையிலும்   தேவை கருதி, கௌரவம் கருதி  இந்திக்குப்பதில் ஆங்கிலம் படிப்பதிலும் , ஆங்கிலத்தில் படிப்பதிலும் இப்போது இந்தியா முழுவதும் பெரும் ஆர்வம் பீறிட்டு வருகிறது. வட இந்தியா முழுவதும் இந்திப் பள்ளிகளிலும்  தாய்மொழி பள்ளிகளிலும் படிப்போர் குறைவதால்   ஆங்கிலப்பள்ளிகள் பெருகி வருகின்றன. இந்தி, தாய்மொழிகளை அழித்தது. இந்தியை ஆங்கிலம் அழித்துக்கொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை.

ஓர் எடுத்துக்காட்டு. மத்தியப்பிரதேசத் தலைநகர் போபாலில், 'அடல்பிகாரி வாஜ்பாய் இந்திப் பல்கலைக்கழகம்’ செயல்படுகிறது. இங்கு, கடந்த ஆண்டு இந்தி மூலம் 3 பொறியியல் பிரிவுகளில் 180 பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால், மொத்தம் நால்வரே இதில் சேர்ந்தனர். முதல் ஆண்டில்தான் இந்நிலை என்றால், இந்த ஆண்டில் அதுவும் இல்லை! பொறியியலில் டிப்ளமோ படிப்பு முடித்த 11 பேர் மட்டும், நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். ஆனால், பி.இ. முதலாம் ஆண்டில் ஒருவர்கூடச் சேரவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இந்நிலை எல்லா மட்டங்களிலும் தொடர்கதையாகி வருகிறது. 

எனவே இந்திக் குதிரை இந்தியர்களைக் கீழே தள்ளி விடுவதோடு ஆங்கிலக்குழிக்குள் இந்திய மக்களைப் புதைக்கும் நிலைக்கே வழிவகுத்து வருகிறது.  அழியும் மொழிகளில் பட்டியலில்  இந்திய மொழிகள் பலவும்  நுழையக் காத்திருக்கின்றன.

தமிழ் மட்டும் தப்பிக்குமா என்பது தமிழர்கள் கையில் தான் உள்ளது.