குமுறும் நெஞ்சம்:17
தமிழக வரலாற்றில் விடை தெரியாத கேள்விகள் பல உள்ளன அவற்றிற்கான பதில் தேடும் நெடிய பயணத்தின் முக்கிய இடமாக கீழடி அமைந்துள்ளது. தமிழகத்தொல்லியல் துறை மட்டும் இதுவரை 40 இடங்களில் அகழாய்வு நிகழ்த்தியுள்ளது. இவற்றில் எல்லாவற்றையும் விட கீழடி முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம் நான்கு.
1. இங்கு 50 க்கும் மேற்பட்ட மட்கலத்துண்டுகளில் பொறிக்கப்பட்ட தமிழி(தமிழ் பிராமி) எழுத்துகள் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே பரவலாக தமிழர்கள் எழுத்தறிவு பெற்றதை மெய்ப்பிக்கிறது 2. பழந்தமிழ்நாட்டில் கங்கைக்கரைக்கு இணையான நகர நாகரிகம் இருந்தது தெளிவாகியுள்ளது 3. சங்க இலக்கியங்கள் தீட்டும் காட்சிகள் பல கற்பனையல்ல உண்மையென நீரூபணமாகியுள்ளன.4 இங்கு கண்டறியப்பட்ட 1001 பானைக்கீறல்களில் சில சிந்து சமவெளியில் உள்ள இத்தகைய பொறிப்புகளோடு பொருந்துகின்றன.
இந்தச் சிறப்புகளோடு இங்கு கவனத்திற்குரியது இங்கு பிற்கால வேத நாகரிகத்தின் அடையாளங்கள் ஏதும் காணப்படவில்லை என்பதுதான். கிடைத்த 5000 க்கும் மேற்பட்ட பொருள்களில் ஒன்றில் கூட சாதி, மத அடையாளங்கள் இல்லை. இது தொடர்பாக கீழடி அகழ்வாய்வை இழுத்து மூட நடுவண அரசால் இடமாற்றம் செய்யப்பட்ட கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாறுதல் பெற்ற சமயத்தில் நக்கீரன் இதழுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
“இதுவரை அகழாய்வு பணியில் உள்ள அதிகாரியைப் பணி நிறைவுபெறாமல் மாற்றுவது என்பது நடைமுறையில் இல்லை. வேண்டுமென்றே என்னை மாற்றியிருக்கிறார்கள். என் தலைமையில் இதுவரை கண்டுபிடித்த ஆவணங்களின் பட்டியலை அனுப்பியிருந்தேன். அப்போது மத்திய அரசினர் ‘ஏன் சாமி சிலைகள் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை’ என்ற கேட்டனர். அதற்கு நாங்கள் சரியான பதிலைக் கொடுத்திருந்தோம் ‘திராவிட நாகரிகம் 2,500 வருடங்களுக்கு முந்தியது. இப்போது உள்ள கடவுள் வணக்கம் அப்போது இல்லை. தமிழர்களிடம் முன்னோர்கள் வழிபாடு காணப்பட்டதால் தற்போதைய சாமி சிலைகள் இல்லை’ என்று பதில் அளித்திருந்தேன்” அதன் பின்பு இரண்டு நாட்களில் எனக்கு இடமாறுதல் தபால் வந்தது”.
ஆரிய நாகரிகமே இந்தியாவின் பழம்பெரும் நாகரிகம் என்று முழங்கிவருவோர்க்குக் கீழடி அகழாய்வு, பேரிடியாக இறங்கியுள்ளதன் விளைவே இது
வலைத்தளத்தில் இரா.உமாமகேஸ்வரன் என்பவர் ‘சிந்துவெளியை மட்டுமே கைகாட்டிகொண்டிருந்த தமிழர் வரலாற்றின் "கோடிட்ட இடங்களை நிரப்ப” இந்த "வைகைவெளி" வகைசெய்யும் என்று தெரிந்து விட்டதால், தமிழரின் தொன்மையில் மண்ணைக் கொட்டி மூடி "தென் மொகஞ்சதாரோவை" மறைக்கவே முனைகிறது அரசு’ என்று குமுறியது போல எண்ணற்றோர் கொதித்தனர்.
எவ்வளவு தடை போட்டாலும் உண்மையை நோக்கி விரைய வேண்டிய கடமை தமிழர்களுக்கும் தமிழக அரசிற்கும் உள்ளது. கீழடி மண்பாண்ட கீறல்களுக்கும் சிந்துவெளி கீறல்களுக்கும் தொடர்பு உள்ளதை இன்னும் ஆழமாக ஆய்ந்தாக வேண்டும். சிந்துவெளி காலம் கி.மு3300- 1300 என்பதால் கீழடிக்கும் சிந்துவெளிக்கும் 1000 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. இந்த 1000 ஆண்டுகாலத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது? சிந்துவெளி கீறல்கள் எந்தக்கட்டத்தில் தமிழி எழுத்துகளாக மாறின? சிந்துவெளிக்கு முன் இந்த மண்ணில் இருந்தவர்கள் யார்? இக்கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்.
குமரிக்கண்டம் தமிழரின் தாயகம் என்ற கருத்தியலை ஆய்வுலகம் பரணியில் போட்டுவிட்டது. எல்லா இன மக்களின் தாயகமும் ஆப்பிரிக்க கண்டம்தான் என்பதே இன்று மெய்ப்பிக்கப்பட்ட உண்மையாக உள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து முதலில் இந்தியாவிற்குள் நுழைந்த முதல் மக்களே தமிழர்களாக இருக்கக்கூடும் என அண்மைய மரபியல் ஆய்வுகள் திசை காட்டுகின்றன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தோடு இணைந்து மதுரைக் காமராசர் பல்கலைக்கழக மரபியல் பேராசிரியர் ராமசாமி பிச்சப்பன் நிகழ்த்திய ஆய்வு வியப்பூட்டும் தகவல்களைத் தருகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்குள் குடியேறிய முதல் மனிதனின் வாரிசாக மதுரை அருகே உள்ள ஜோதிமாணிக்கம் என்ற குக்கிராமத்தில் விருமாண்டித் தேவர் என்ற இளைஞர் கண்டறியப்பட்டுள்ளார். இவரது ஜீன் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய ஆப்பிரிக்க மனிதனின் ஜீன்களோடு ஒத்துப்போகின்றது. இவரது ஜீன் எம் 130 ரக ஜீனாகும். இதுதான் இந்தியாவில் தற்போதைய தேதியில் மிகவும் பழமையான ஜீனாகும். இக்கிராம மக்களும் ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்து வந்த முதல் மனிதர்களின் வாரிசுகள் எனக் கருதப்படுகின்றனர். தமிழர்களைப் போன்ற தோற்றம் கொண்ட கிழக்கு ஆப்பிரிக்கர்கள் உள்ளனர். அவர்கள் வாயைத்திறந்து பேசினாலொழிய அவர்களை நாம் தமிழர்கள் என்றே எண்ணவேண்டியிருக்கும். குறிப்பாக சோமாலியர்கள், எத்தியோப்பியர்கள், எரித்திரியர்கள் போன்ற இன மக்கள் தமிழர்களின் முகச்சாயலைக்கொண்டுள்ளதோடு, உணவு சமைத்தலிலும், உடை உடுத்துவதிலும், சில பழக்கவழக்கங்களிலும் தமிழர்களை ஒத்துள்ளனர். இந்த மொழிகளில் ஏராளமான தமிழ்ச்சொற்களும் காணப்படுகின்றன. எனவே நம் ஆய்வை கிழக்கு ஆப்பிரிகாவிலிருந்தும் தொடங்கலாம். இந்த கிழக்கு ஆப்பிரிக்க தமிழர்களின் முன்னோர்களே சுமேரிய நாகரிகத்தையும் உருவாக்கியர்கள் என்பதும் அவர்களின் ஒரு பிரிவினரே இந்தியாவில் குடியேறிச் சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்பதும் சில தொல்லியலாளர்களின் கருத்தாகும். எதிர்காலத்தில் மேலும் சில உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் வரை பொறுத்திருப்போம்.
இது ஒருபுறம் இருக்க - கீழடி அகழாய்வு வெளிப்படுத்தும் நம் பழம்பெருமை மட்டும் நம் இனத்தை உயர்த்தாது என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். சங்க காலத்தில் சாதி வேறுபாடில்லை; உருவ வழிபாடில்லை; புராண, இதிகாச குப்பைகள் அண்டவில்லை; பல தொழில் புரிந்த மக்கள் பலரும் வேறுபாடின்றிக் கல்வி கற்க முடிந்துள்ளது. நகர நாகரிகத்தின் மேன்மையில் திளைத்த தமிழர்கள் ஏன் இந்தச் சிறப்பையெல்லாம் இழந்தார்கள் என்ற கேள்விக்கான விடையை நாம் கண்டாக வேண்டும்.
கடந்த 100 ஆண்டுகளாக நாம் போராடிப்பெற்ற உரிமைகள்- இட ஒதுக்கீடு, ஒடுக்கப்பட்டோருக்கான மருத்துவக் கல்வி உரிமை, பகுத்தறிவு சிந்தனை மதநல்லிணக்கம் முதலியவற்றை இழந்துகொண்டிருக்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல தமிழர்கள் தங்கள் சுயமரியாதையையும், உரிமைகளையும் எப்படி இழந்தார்கள் என எண்ணிப்பார்க்க கீழடி அகழாய்வு வழிகோலும், மேலும் நம் உரிமைகளை, உன்னதங்களை இழக்காமல் இருக்கவும் இது வழிகாட்டும்.
.