சேர நாட்டில் விபத்திற்குள்ளான தமிழ்

குமுறும் நெஞ்சம்:22               

 

இன்று கேரளாவாகிவிட்ட சேரநாடு சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை தமிழ் நாடாகவே இருந்தது என்பதை மலையாளிகள் பலரும் ஏற்பதில்லை.. ஒரு பொதுத் திராவிட மொழியிலிருந்து இருவேறு மொழிகளாக மலையாளமும், தமிழும் பிரிந்தன என்றே பள்ளிகளில்  சொல்லிக்கொடுக்கின்றனர். சாகித்ய அகாடமி வெளியிட்ட மலையாள இலக்கிய வரலாறு என்ற நூலில் அதன் ஆசிரியர் பி.கே. பரமேசுவரன் நாயர் ‘ மலையாளம் மூலத்திராவிட மொழியிலிருந்து பிரிந்து தனக்கே உரித்தான உருவம் பெற்றுவிட்ட பிறகு முதலில் செந்தமிழின் ஆதிக்கத்திற்கும் பிறகு சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்திற்கும் உட்பட்டு வளர்ந்திருக்கிறது’ என்ற உண்மைக்கு மாறான கருத்தைப் பதிவுசெய்துள்ளதையே அங்குள்ளோர் படித்து நம்புகின்றனர்.

நெல்லுக்குள் அரிசி இருக்கிறது  என்பதையும், கடல் நீர் உப்பாக இருக்கிறது என்பதையும் மறுப்போருக்கு உண்மை உணர்த்த  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச்சென்று ஆய்வு நிகழ்த்தவேண்டுமா?

தமிழே மக்கள் மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், இலக்கியமொழியாகவும் பல நூற்றாண்டுகள் அங்கு விளங்கியது என்பதை அடிப்படைத் தமிழிலக்கிய அறிவுடையோரே அறிவர். எனினும்  விழித்துக்கொண்டே தூங்குவது போல நடிப்போரை உசுப்பிவிட சில செய்திகளை உரத்த குரலில் சொல்லியாக வேண்டும்.

தமிழின் பழம்பெரும் நூலான தொல்காப்பியத்தின் பாயிரம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்கள் பலவும் வடக்கே வேங்கடமலைக்கும், தெற்கே குமரிக்கும் இடைப்பட்ட நிலம் முழுவதும் தமிழ் வழங்கும் நிலம் எனத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

இன்னும் விரிவாகக் கூறவேண்டுமாயின் பேச்சுத் தமிழ்ப்  புழங்கும் இடங்களை 12 நிலப்பகுதிகளாகப் பிரித்தனர். இந்த நிலப்பகுதிகளில் பூழிநாடு(கோழிக்கோடு), குடநாடு (வடமலபார்), குட்ட நாடு (கோட்டயம், கொல்லம் மாவட்டங்கள்), வேணாடு (திருவிதாங்கூரின் தென்பகுதி), கற்காநாடு (கோவை,பாலக்காட்டுப்பகுதி) ஆகிய  5 பகுதிகள் சேரநாட்டில் இருந்தன. சோழ(24 காதம்), பாண்டிய(56 காதம்) நாடுகளைவிட சேரநாடு(80 காதம்) இருமடங்காக விரிந்திருந்தது.. இன்றைய கர்னாடக மாநிலத்தின் தென்பகுதியும், இன்றைய தமிழகத்தின் கொங்கு, கரூர் பகுதிகளும் இதில் அடங்கியிருந்தன.

சேரநாட்டின் தலைநகரான வஞ்சி என்பதுதான் இன்றைய கரூர் என்று இலக்கிய, தொல்லியல் சான்றுகளை வைத்து  அறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர். பழந்தமிழகத்தில் சோழன் தலைநகரான உறையூரும், பாண்டியன் தலைநகரான மதுரையும், சேரன் தலைநகரான வஞ்சியும் அருகருகே இருந்தன.

பாண்டிநாட்டு மதுரைக்கு இணையாக சேரநாட்டிலும் தமிழ் இலக்கியங்கள் செழித்துள்ளன. மூத்த இலக்கண நூலான தொல்காப்பியமே சேரநாட்டில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. அதன் பின் எழுந்த இலக்கண நூலான நன்னூலை எழுதிய பவனந்திமுனிவரும் சேரநாட்டின் பகுதியான கொங்கு நாட்டினர், இன்னொரு இலக்கண நூலான புறப்பொருள் வெண்பா மாலை எழுதிய ஐயனாரிதனார், சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள், ஐங்குறுநூறு தொகுப்பித்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, அதில்  நெய்தல் திணை பாடிய  அம்மூவனார், கலித்தொகையிலும், நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு முதலியவற்றில் பாலைத்திணை பாடல்கள்பாடிய பெருங்கடுங்கோ, புறநானூற்றில் தமிழரின் மானத்தினை வெளிப்படுத்திப் பாடிய கணைக்கால் இரும்பொறை முதலியோர் சேர அரச குடும்பத்தினரே. 10 சேர மன்னர்களைப்பற்றிப் பாடும் எட்டுத்தொகை நூலான பதிற்றுப்பத்தின் பாடல்களுக்காகச் சேரமன்னர்கள் வாரிவழங்கிய பரிசில்கள் அவர்கள் தமிழ் உணர்விற்குச்  சான்று பகரும்.

தமிழில் பக்திச்சுவை சொட்டப்பாடிய  63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் நாயனாரும், 12 ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வாரும் பிற்காலத்துச்  சேர மன்னர்களே. இப்படித் தமிழ்த்தொண்டாற்றிய சேர மண்ணின் மைந்தர்களின் பட்டியல் நெடியது.

தமிழ் இன உணர்வைத் தமிழகத்தில் வேரூன்ற வைக்கும் தமிழ்த்தேசியக் காப்பியம் சேரன் தம்பி எழுதிய  சிலப்பதிகாரமாகும். தமிழ் மன்னர்களின் ஆற்றலைக் கனகவிசயரும், பிற வடநாட்டு வேந்தர்களும் ஒரு விழாவில் பழித்துரைத்தது சேரன் செங்குட்டுவனுக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த இழிசெயலைத் துடைத்துத் தமிழ்மானம் காக்க மூவேந்தர் சார்பாக இமயம் வரை படையெடுக்கிறான் சேரன் செங்குட்டுவன். வடவரை வென்று வட நாடுகளில் மூவேந்தர் கொடிகளையும் பறக்கவிடுகிறான். தமிழரை இழித்துரைத்த கனகவிசயரைச் சிறைபிடித்து சோழ, பாண்டிய மன்னர்களிடம் அனுப்புகிறான். ஆனால் இருபெரும் வேந்தரும் இதனைப் பொருட்படுத்தவில்லை என்பதே துயரமாகும். சோழ, பாண்டிய மன்னர்களைவிட தமிழின் மேல் சேரனுக்கிருந்த அன்பும், அக்கறையும், பொறுப்பும் நம் கவனத்திற்குரியன.

10ஆம் நூற்றாண்டு வரை தமிழ் செழித்திருந்த சேர நாட்டில் அன்றைய ஆள்வோர் வடநாட்டிலிருந்து வைணவ பார்ப்பனர்களைத் தம் நாட்டிற்கு வரவழைத்துச் சிறப்பித்தனர். நம்பூதிரிகள் எனப்படும் அவர்கள் உள்ளே நுழைந்து தமிழின் மேல் கலாச்சார படையெடுப்பு நடத்தி மெல்ல மெல்ல தமிழை வடமொழியோடு கலக்கவிட்டனர். புராணகதைகளைப் பரப்பினர், முன்குடுமியும், பெண்கள் முண்டு உடுத்துவதும், மருமக்கள் தாயமும் அறிமுகப்படுத்தப்பட்டன.  வடமொழியே உயர்ந்ததென்றும், உள்ளூர் தமிழ் தாழ்ந்ததென்றும் எண்ணும் போக்கை வளர்த்தனர். சேரநாட்டுத் தமிழரின் தாழ்வுமனப்பான்மையின் உச்சமே மலையாளமானது. தம் மொழியை ஆரியத்தின் புதல்வி என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்தப் போக்கே இன்றுவரை மலையாளிகளிடம் தொடர்கிறது.

10-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கொடுந்தமிழும், வடமொழியும் கலந்து எழுதப்பட்ட மணிப்பிரவாள நூல்களும் தமிழ்மரபைப் புறக்கணிக்கத் தயங்கின.  கி.பி 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ராமசரித காப்பியம், கிருஷ்ண காதை போன்ற காவியங்களும் தமிழுக்கே முதலிடம் கொடுத்தன. இவற்றைப்படைத்த புலவர்களும் தங்கள் பாடல்களைத் தமிழ்க்கவி என்று கூறிக்கொள்வதில் தயக்கம் காட்டவில்லை. இக்காலக்கட்டத்தில் எழுந்த லீலா திலகம், கேரள பாணினீயம் முதலிய நூல்கள் தமிழ் இலக்கண நூல்களை மேற்கோள் காட்டுகின்றன, எனினும்  இலக்கியவாதிகள் பழந்தமிழ்ச்சொற்களைத் தங்கள் படைப்பில் எழுதத்தயங்கினர், இந்தத் தயக்கம் கூட்டு வெறுப்பாக வளர்ந்தது. இத்தகைய படைப்பாளிகளில் பெரும்பாலானோர் நம்பூதிரிகள் ஆவர்,

பாண்டி நாட்டில் பயன்படுத்தப்பட்ட தமிழ் வட்டெழுத்தே கேரளத்தில் 15 ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்தது. இக்காலக்கட்டத்தில்  கொச்சியைத் தலைநகரமாகக்கொண்டு ஆண்ட பாஸ்கர ரவிவர்மன் யூதர்களுக்குச் செப்புப்பட்டயம் மூலம்  அளித்த  நன்கொடை தமிழ் வட்டெழுத்தில் உள்ளது. நம்பூதிரிகளுக்கு  மன்னர்கள் நன்கொடையாக வழங்கிய நிலப்பத்திரங்களுக்கான மூலப்பத்திரங்கள் தமிழில்தான் இருந்தன.   கி.பி1650-இல் துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள மொழிக்கு வடமொழியை ஒட்டி எழுத்து முறைகளையும், இலக்கண விதிகளையும் அமைத்தபின்பே மலையாளம் தமிழுடனான தொப்புள் கொடி உறவை அறுத்துக்கொண்டது. எனினும் மலையாளத்தின் அடித்தளமும், மேற்கூரையும் தமிழால் ஆனவையே. மலையாளத்தின் 50% சொற்கள் தமிழ்ச்சொற்களே. மலையிடத்தை ஆள்பவர்  என்ற பொருளுடைய மலையாளம் என்பது தூய தமிழ்ச்சொல்லே. கேரளம் என்பது சேரலன் என்பதன் வேறு வடிவே.

கேரளத்தில் உள்ள ஈழவர்களும், தீயர்களும் அதன் மக்கட்தொகையில் 23% உள்ளனர். இவர்கள் ஈழத்தமிழர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் வாழ்விடங்களும், உணவுப்பழக்கங்களும் ஈழத்தமிழர்களுடன் ஒத்துப்போகின்றன. எனினும் ஈழம் பற்றி எரியும்போது இவர்கள் இது யாருக்கோ எங்கோ நடக்கிறது என்று மரத்துப்போயிருந்தது வேதனைக்குரியதாகும். வீரத்திற்கும், மானத்திற்கும், மனித மேன்மைகளுக்கும் சேரத் தமிழர் வரலாற்றில் பெருமைக்குரிய கூறுகள் பலவும் இருப்பதை இன்றைய கேரள மக்களால் எப்படிக் கண்டும் காணமலும் பெருமைப்படாமலும் இருக்க முடிகிறது?

அரசியல்வாதிகளின் முறையற்ற அழுத்தங்களால் நேற்று முளைத்த மலையாள மொழி தமிழைப்போலச்  செம்மொழி நிலையை அடைந்தது. செம்மொழிக்குரிய 11 தகுதிகளில் அதற்கு எத்தனை தகுதிகள் உள்ளன?. நியாய உணர்வுடைய முற்றயில் கோவிந்த மேனன் போன்ற கேரள வரலாற்றாய்வாளர்களே இந்தக் கேலிக்கூத்தைக் கண்டித்துள்ளனர். செம்மொழித் தகுதிக்குரிய ஆவணமாகத் தங்கள் நாட்டில் எழுதப்பட்ட, ஆனால் தம் மாணவர்களுக்குச் சொல்லித்தராத சிலப்பதிகாரத்தை இவர்கள்  ஆதாரம் காட்டியுள்ளது வேடிக்கையானதாகும்.

சேரன் செங்குட்டுவனோ, இளங்கோவடிகளோ, சேரமான் பெருமாள் நாயனாரோ, குலசேகர ஆழ்வாரோ இன்று திரும்பி வந்தால் தங்கள் நாடு இன்று தமிழ்நாடு இல்லையே என்று அதிர்ச்சியடைவார்கள்.

மூன்றரை கோடி மலையாளிகளும் தமிழர்களாக இருந்தால் நம் குரல் ஓங்கி ஒலிக்குமே! நம் தமிழினமும் தமிழ்நிலமும் உலகை வெல்லுமே! என்ற ஆற்றாமை நெஞ்சை நெருடுகிறது. கருவாடு மீண்டும் மீனாகாது என்ற உண்மையும் சுடுகிறது,

மொழி சிதைந்தால், மொழியுணர்வை இழந்தால், அந்நிய கலாச்சாரத்தின் கவர்ச்சிக்கு வசப்பட்டால் மொழி அழிந்து அதனால் இனமும் அழியும் என்பதைச் சேரநாட்டில் நேர்ந்த விபத்தால் நாம் பாடம் கற்றாக வேண்டும்.

.