புதுப்பிக்கப்படுமா தமிழ் இலக்கணம்?

குமுறும் நெஞ்சம்:27             

      

‘நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் தமிழைக் கொலைசெய்யும் போக்கு எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது.

தமில் என்று உச்சரித்து ழ வை உச்சரிக்கவே அறியாமல் தமிழ்ச் செய்தி வாசிக்கிறார்கள். ல, ள , ர, ற வேறுபாடே தெரியாமல் ஊடகங்களில் பேசுவோரை  எப்படிச் சகித்துக்கொள்வது?

ஒற்றுப்பிழைகளைப்பற்றி அறவே கவலைப்படாமல் கைக்கு வந்தபடி எழுதும் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் நாளும் செய்துவரும் மொழிப்படுகொலையைத் தட்டிக்கேட்க ஆளில்லையா?’

- இப்படி மனதில் இரத்தக்கண்ணீர் வடிக்கும்  தமிழ் அன்பர்களின் நியாயமான வேதனை புரிந்துகொள்ளக்கூடியதே.

அதேநேரம் இதழாளர்களும் எழுத்தாளர்களும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தரும் விளக்கங்களும் காதில் விழுகின்றன.

‘அவசர யுகத்தில் ஊடகங்கள் இயங்குகின்றன. செய்தியின் சாரத்தில் கவனம் செலுத்தும்போது ஒற்றுப்பிழைகளை முழுவதுமாகக் கவனித்து எழுத முடியாது. ஒற்றுப்பிழைகளை நீக்க 60 விதிகள் வைத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு செயல்பட முடியாது. இலக்கணக் கவலையோடு எழுதினால் எழுத்தாளர்களின் கற்பனை தடைபடும்.  பள்ளிக்கூடங்களிலேயே உச்சரிக்கப் பயிற்சி தரப்படாதபோது சரியாக உச்சரிப்போரைத் தேடி வேலைக்கு ஆள் எடுப்பது சவாலாக உள்ளது’. 

ஊடகங்களின் வாயிலாகத்தான் தமிழ் இன்று  உயிர்த்திருக்கிறது. எனவே தமிழைக் காக்கவேண்டிய பொறுப்பு மற்ற யாரையும் விட ஊடகங்களுக்கே மிகுதி.

இதைச் செயல்படுத்த தமிழ் இலக்கணத்தைக் கண்டு அஞ்சும் நிலையை ஊடகவியலாளர்களிடமிருந்து நீக்குதல் முக்கியமானதாகும்.

ஆறு கண்டபடி ஓடாதவாறு எழுப்பப்படும் கரையே இலக்கணம் என்பதை முதலில் உணரவேண்டும். தமிழகம் முழுவதும் பேச்சு மொழி பலவிதமாக இருப்பதை ஒழங்குபடுத்த எழுத்துமொழி தேவைப்பட்டது. எழுத்துமொழியே தமிழை ஒருமைப்படுத்தியது. பேச்சு மொழியை எழுத்துமொழியாக ஒழுங்குபடுத்தாவிட்டால் வட்டாரம்தோறும் புதுமொழிகள் தோன்றிக்கொண்டேயிருக்கும்.

நமக்குக் கிடைத்த முதல் இலக்கணநூல் கி.மு 5 ஆம் நூற்றூண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தொல்காப்பியமே ஆகும். அதற்கு முன்னாலேயே பல இலக்கண நூல்கள் இருந்திருப்பதைத் தொல்காப்பியமே குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் வழிகாட்டிய பாதையில்தான் சங்க இலக்கியங்கள் நடைபோட்டன.

 

அதன்பின் 1700 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய இன்னொரு இலக்கண நூல் பவணந்தி என்ற சமண முனிவர் எழுதிய நன்னூல் ஆகும். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே (462) என்ற அறிவுப்புடன் கடந்த காலங்களில்  தமிழில் எற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி தமிழ் இலக்கணத்தை இந்நூல்  புதுப்பித்தது. புது வெள்ளத்தால் கரை உடைக்கப்படும் போது புதுக்கரையை உருவாக்கும் முயற்சியில் தமிழில் 40 க்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள் தோன்றின. ஆனால் தொன்னூல் என்ற போற்றப்படும் தொல்காப்பியத்திற்கும் பின்னூல் என்று சிறப்பிக்கப்படும் நன்னூலுக்கும் இணையான இலக்கணநூல்கள் எழுதப்படவில்லை.

 

நன்னூல் எழுப்பட்டு 700 ஆண்டுகள் ஆகிவிட்டன. கரை பலமுறை உடைந்தும் அதனைச் சரிப்படுத்தும் முயற்சிகள் சிலரால் ஒரளவு நடைபெற்றுவந்தபோதிலும் நன்னூல் போல இன்றைய நடைமுறைக்கு உகந்த புதிய இலக்கண நூல் உருவாகவில்லை.

வட இந்திய முகமதியர்கள் , தெலுங்கு நாயக்கர்கள் , ஐரோப்பியர் முதலியோர் நன்னூலார் காலத்திற்குப்பின் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளனர். இதனால் விளைந்த அரசியல், சமூக, பண்பாட்டு மாற்றங்கள் மொழியிலும் நிறைய மாற்றங்களை விளைவித்துள்ளன.

எடுத்துக்காட்டாக நாயக்கர் காலத்திலேயே வேற்றுமை உருபுகளுக்கு இணையான சொல்லுருபுகள் தோன்றியுள்ளன, 3ஆம் வேற்றுமை உருபான ஆல், ஆன் என்பதற்குப் பதிலாக ‘கொண்டு’ என்ற சொல் உருவானது, எ-டு வாளால் வெட்டினான் > வாள் கொண்டு வெட்டினான்.

4 ஆம் வேற்றுமை உருபான கு விற்குப் பதிலாக ‘பொருட்டு’, ‘ஆக’ என்று இதுவரை இல்லாத புதிய சொற்கள் தோன்றியுள்ளன, எ-டு: அவனுக்காக வாங்கினான், அவன் பொருட்டு வாங்கினான். இவை போல இருந்து, நின்று, உடைய, வைத்து ஆகிய சொற்கள் பிற வேற்றுமை உருபுகளின் பணிகளைச் செய்ய வழக்கில்  உருவாயின. எனவே இந்தப் புதிய வேற்றுமை உருபுகளை ஏற்கவேண்டாமா? ஆனால் நாம்  பழைய நன்னூல் காலத்து உருபுகளையே மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்..

இப்போதுள்ள தமிழ் உரைநடை இல்லாது, செய்யுளே பெருவழக்காக இருந்த காலத்தில்தான் தொல்காப்பியமும், நன்னூலும் எழுதப்பட்டன. கடந்த 200 ஆண்டுகளில் சிறுகதையாக, புதினமாக, கட்டுரை வடிவாக, செய்தி அமைப்பாக, நாடகமாக, புதுக்கவிதையாகத் உரைநடைத் தமிழ் பல வடிவங்களை எடுத்துள்ளது. பேச்சுத்தமிழும் , எழுத்துத்தமிழும் கலந்த நடையில் திரைப்பட, நெடுந்தொடர் உரையாடல்கள் அமைந்துள்ளன. கல்வி கற்றோர் எண்ணிக்கை பெருகியதால்  தமிழில் கடந்த  100 ஆண்டுகளில் ஏற்பட்ட பாய்ச்சல்  அளப்பரியதாகும். ஆட்சித்தமிழ். சட்டத்தமிழ், அறிவியல்தமிழ் எனத்  தமிழின் பயன்பாடு விரிவடைந்துள்ளது. தமிழகத்திலுள்ள  6 கோடி தமிழர்களுக்கு மட்டுமன்றி வெளியே உள்ள 3 கோடி தமிழர்களுக்கும்  தமிழ்ப் பயன்பாடு தேவைப்படுகிறது.    இந்தப் போக்கை எதிர்கொள்ள நமக்கு பழைய இலக்கண நூல்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கமுடியும்?

பழைய இலக்கண நெறிகளைப் பின்பற்றியே  இன்றைய தமிழில் எழுதப்படுகின்றவற்றைப் பிழையெனக் கணிக்கிறோம்.

.எடுத்துக்காட்டுக்குச் சில:- ஆண்மக்கள், பெண்மக்கள் என்று எழுதவேண்டும், மகன்கள், மகள்கள் என்று எழுதக்கூடாது என்கிறது தமிழ் இலக்கண மரபு. ஆனால் 95% பயன்பாட்டில் மகன்கள், மகள்கள் என்று எழுதும் வழக்கம் வந்துவிட்டது. வலப்பக்கம் இடப்பக்கம் என்று குறிப்பிடுவதே சரியானது. ஆனால் 95% பயன்பாட்டில் வலது இடது பக்கம் என்று குறிப்பிடும் நிலை உள்ளது. இளைஞனுக்குப் பெண்பால் தமிழில் இல்லை. சில புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இளைஞி என்ற புதுச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.  ஒருவன் என்பதற்குப் பெண்பால் ஒருத்தி- ஆனால் பேரறிஞர் அண்ணா அவர்களே தம் ரங்கோன் ராதா என்று புதினத்தில் ஒருவள் எனப் பயன்படுத்தியுள்ளார். அவர் என்பது தொல்காப்பிய, நன்னூல் காலத்தில் பலர்பால். இன்று அது ஒருமையைக் குறிப்பதால் 6வது பாலாக இதனை உயர்பால் என்று சேர்க்கலாமெனச் சிலர் கூறுகின்றனர். அவன் வரும்; அவள் வரும் என்பன தொல்காப்பியர் காலத்தில் வழுவற்ற தொடர்கள். இன்று அவன் வருவான், அவள் வருவாள்  என்று மாற்றியிருக்கிறோம்.

இன்று வழக்கில் இருக்கும் அம்மா, அப்பா போன்ற பல உறவுச்சொற்களும் ஏன் தமிழன் என்ற சொல்கூடச் சங்க காலத்தில் இல்லை. திருக்குறளில் எங்கே உள்ளது அம்மா அப்பா? இவைபோன்ற பல சொற்கள் பல நூற்றாண்டுகளுக்குப்பின் தமிழில் உருவானவை, அல்லது வேறு சொல்லிலிருந்து திரிந்தவை. இந்த உண்மைகளை மனதில் இருத்தி நாம் சிந்திக்கவேண்டாமா?

இதழ்களிலும், நூல்களிலும், விளம்பரங்களிலும் பெருகி வரும் ஒற்றெழுத்துப்பிழைகள்- அதாவது இருசொற்களுக்கு நடுவில் வல்லின மெய்யெழுத்துகள்(க்,ச்,த்,ப்) இடுவதில் நேரும் பிழைகள்- தமிழறிஞர்கள் எவ்வளவு கண்டித்தும்,  பாடத்திட்டத்தில் புகுத்திக் கற்பித்தும் சற்றும்  குறைவதாகத் தெரியவில்லையே! வல்லெழுத்துகள் மிகும்,மிகா விதிகளை நடைமுறைக்கேற்ப, சில திருத்தங்களைச் செய்யும் சாத்தியங்களை ஏன் சிந்திக்கக்கூடாது? அங்குச் சென்றான் -என்பதில் நடுவில் ச் வருவது இலக்கண விதிதான். ஆனால் ச் இன்றி எழுதுவது தவறு என்றாலும், ஒலிக்குப் பொருத்தமாக உள்ளதே. தொல்காப்பியர் காலத்தில் ஒலித்தவாறு இன்று தமிழ் ஒலிக்கப்படாதபோது இந்த வலிமிகு விதிகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதில் தவறென்ன?

 

தமிழிலக்கணத்தைக் கசடறக் கற்ற பாரதியாரே அங்கு சென்றான் என்றுதான் எழுதுவாராம். அங்கு என்பதை அடுத்து ச் வரவேண்டுமே நீங்களே இப்படித் தவறு செய்யலாமா என்று நண்பர்கள் கேட்கும்போது ‘‘தவறுதான் ஓய்! .அங்குச்சென்றான் என்றால் நன்றாகவே இல்லை அதனால் தான் அப்படி எழுதுகிறேன் ‘‘ என்பாராம். பேராசிரியர் மு.வ அவர்கள் ஒற்று எங்கு போடவேண்டுமெனக் குழப்பம் நேர்ந்தால் இடத்திற்குத்தக ஒலித்துப்பார்த்து முடிவுசெய்யுங்கள்போதும் என்று மாணவர்களுக்குச் அறிவுறுத்துவார்.

முனைவர் த. பொற்கோ அவர்கள் இன்றைய தமிழுக்குப் புதிய இலக்கணம் தேவை என்பதனை  மனதிற்கொண்டு எழுதியுள்ள  ‘இக்காலத் தமிழ் இலக்கணம்’ என்ற நூலில் ‘சந்தி இலக்கணத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதை உணர்ந்து இன்றைய மொழி நிலைக்கு ஏற்ப ஒரு சந்தி இலக்கணத்தை நாம் இங்கே விளக்கவேண்டியுள்ளது’ என்று கூறிப் புதிய விதிகளை விளக்கியுள்ளார்.

இவரைப்போன்று தமிழில் ஏற்பட்டுள்ள நடைமுறை மாற்றங்களை உணர்ந்து உரைநடைக்கான இலக்கணங்கள் பல எழுதப்பட்டுள்ளன. எம்.எ. நுஃமான் எழுதிய அடிப்படைத் தமிழ் இலக்கணம், கு. பரமசிவம், அவர்களின் இக்காலத் தமிழ் மரபு, ஆகிய நூல்களோடு மரபிலக்கணத்தையும் மொழியியலின் வீச்சையும் உள்வாங்கிக் கொண்டு அகத்தியலிங்கம், அ.சண்முகதாஸ், செ.வை.சண்முகம், முத்துச் சண்முகன், ப.ரா.சுப்பிரமணியன், த.ராஜாராம் போன்றோர் தமிழிலும், ஆந்திரநோவ், இ.அண்ணாமலை, தாமஸ் லெக்மோன், எஸ்.ஆரோக்கியநாதன் போன்றோர் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள நூல்கள் முழுமையும் இக்காலத் தமிழுக்கான – உரைநடைக்கான இலக்கணங்கள் ஆகும்.

இந்நூல்கள் அனைத்தையும் மனதிற்கொண்டு தமிழர்கள் அனைவரும் இனி இப்படித்தான் பின்பற்றவேண்டுமென புதிய முழுமையான இலக்கண நூலை உருவாக்க வேண்டுவது இன்றைய அவசரத் தேவையாகும். சாதி, சமயம், ஊழல், செல்வாக்கு முதலியவற்றில் சிக்கியுள்ள இன்றைய அரசியல் சூழலுக்கு அப்பால்  இம்முயற்சி அமைய வேண்டும்! ஓர்  அயல்நாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் உலகத்தமிழ் அறிஞர் குழுவை நேர்மையாக  அமைத்து, இதனை செயல்படுத்துவது  சிறப்பாக அமையலாம்.

இனி ஒரு விதி செய்வோம் இதனை அனைவரும் ஏற்போம் என்ற நிலை வந்தால்தான் தமிழ் செழிக்கும்.