தமிழர் திருநாளில் மறக்கக்கூடாதவர்கள்

குமுறும் நெஞ்சம்:29             

    

இன்று உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தேசியம், சமயம்,கட்சி,சாதி வேறுபாடுகள் களைந்து கொண்டாடும் விழாவாகப் பொங்கல் விளங்குவது நமக்கு மகிழ்வளிப்பதாகும்.

தமிழர்  இனக்குழுவாக வாழ்ந்த காலத்தில் இயற்கையைப் போற்றிக் கொண்டாடிய தைத் திருநாள் சமய விழாவாக மாற்றப்பட்டு, பின் நம் இனத்தின் பெருவிழாவாக மாறியது எப்படி என்பதைப் பார்ப்போம்.

சங்க காலத் தமிழகத்தில் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் விழாவாக எதுவும் இல்லை. இடத்தாலும் இனத்தாலும் விழாக்கள் மாறுபட்டிருந்தன. இந்திர விழா பூம்புகாரிலும், பங்குனி விழா உறையூரிலும், கார்த்திகை, புனல் விழா, ஓண விழா ஆகியன மதுரையிலும், சலுங்கை கட்டி ஆடும் உள்ளி விழா கொங்கு நாட்டிலும் கொண்டாடப்பட்டன.

படைக்கலப்பயிற்சி பெற்றுத் திரும்புவோர் பூந்தொடை விழாவும், குறிஞ்சி நில மக்கள் வெறியாட்டு விழாவும், இசைக்கலைஞர்கள் கோடியர் விழாவும் கொண்டாடினர். இன்றைய காதலர் தினத்திற்கு முன்னோடியாக இளவேனில் விழா என்ற காமன் விழா கொண்டாடப்பட்டது. சிறந்த கணவனைப் பெற இளம்பெண்கள் தைநீராடல் செய்து விழா கொண்டாடினர். ஆனால் பொங்கல் என்ற பெயரில் எந்த விழாவும் கொண்டாடிய குறிப்புகள் இல்லை.

இளம்பெண்கள் கொண்டாடிய இந்தத் தைநீராடல் பற்றியும் தைத் திங்களின் சிறப்புப் பற்றியும் நற்றிணை(80), குறுந்தொகை(196) புறநானூறு(70), அகநானூறு(269), கலித்தொகை(59) ஆகிய சங்க இலக்.கியங்களில் சிறு செய்திகள் காணப்படுகின்றன. பொங்கலிட்டு வழிபடுவது  பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது (புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து' - சிலப். 5:68-69). சீவக சிந்தாமணியில்  பொங்கல் வைப்பது பற்றிய குறிப்பு வந்துள்ளது (மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்'' - சீவக.சிந். 1821). இவை பொங்கல் விழாவைக் குறிப்பனவன்று. இதனால் அன்றே பொங்கல் கொண்டாடப்பட்டதாக எண்ணுவது  தவறாகும். இன்றைய பொங்கல் விழாவுக்கான மூலங்களாக இவற்றைக் கொள்ளலாம்.

இன்று கேரளத்தில் மலையாளிகள் கொண்டாடும் ஓணம் விழா சங்ககாலத்தில் தென்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட பெருவிழாவாகும்.  மதுரையில் பாண்டியன் நெடுஞ்செழியன் ஓணத்தன்று வெற்றிபெற்ற வீரர்களுக்குப் பசுக்களை வழங்கிப்  பெருவிழாவாக் கொண்டாடியதைப் பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சி சிறப்பிக்கிறது (ம.கா:590-599). பெரியாழ்வாரும், திருஞானசம்பந்தரும் திருமாலுக்குச் சிறப்புச் செய்யும் ஓணம் விழா தமிழகத்தில் கொண்டாடப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர். தமிழர்கள் கொண்டாடி மறந்த ஓணம் விழா கேரளத்தில் பெருவிழாவாக எப்படியோ நிலைத்துவிட்டது.

பல்லவர் காலத்தில் ஏற்பட்ட சைவ, வைண எழுச்சியால், வைதீக தாக்கத்தால் தை முதல் நாள் மகர சங்கராந்தி (சங்கராந்தி- நுழைதல்) எனப் பெயர்பெற்றது. சூரியன் மகர ராசியில் நுழைந்து உத்தராயணம் என்ற வடக்குப் பயணத்தைத் தொடங்கும் நாள் இது என்பதால் இந்நாளில் புனித நீராடிப் புண்ணியம் பெறலாமென்ற நம்பிக்கை விதைக்கப்பட்டது.   இந்நாள் பிரம்மாவின் சாபத்தால் தொழுநோயுற்ற நவக்கிரகங்கள் சிவாலயத்தில் சாபவிமோசனம் பெற்ற நாளாக  ஒரு புராணக் கதை புனையப்பட்டது. வைதீகத் தாக்கத்தால் மகர சங்கராந்தியாகத் தைத்திருநாள் பிற்காலச் சோழ மன்னர்களால் கொண்டாடப்பட்டது. கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி சதுர்வேத மங்கலத்தில் மகர சங்கராந்தியன்று  100 பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு கொடுத்ததை விளக்கும் கல்வெட்டில் காணப்படும்  ‘உத்தராயண சங்கராந்தி’  ‘பொங்கல் சோறு’ ஆகிய சொற்றொடர்கள் நம் கவனத்திற்குரியன. 10 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை உள்ள சோழர், நாயக்கர் கல்வெட்டுகள் பலவும் மகர சங்கராந்தியைக் குறிப்பிடுகின்றன.

சிற்றூர் வேளாண் மக்களிடம் தை முதல் நாளைக் கதிரவனுக்குப் பொங்கலைப் படையலிட்டுக் கொண்டாடும் வழக்கம் நீண்ட காலமாக இருந்தபோதும் தை முதல் நாளைப் பொங்கல் என்ற பெயரில் தமிழர் திருநாளாக மாற்றியவர் மாநிலக்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் கா. நவச்சிவாய முதலியார் (1876-1936) ஆவார். தம் பதிப்பகத்திற்குப் பாடநூல் எழுதித் தரும் தமிழாசிரியர்களுக்குச் சிறப்புச் செய்திடும் வகையில் அவரே தை முதல் நாளைத் ‘தமிழர் திருநாள்’ என்று அறிவித்து முதலில் விழா நடத்தினார்.

1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள்  தமிழறிஞர்களைக் கூட்டித் திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் கூட்டத்தில் நமச்சிவாயரும் முக்கிய பங்களிப்பு வழங்கியதோடு தமிழர் திருநாள் பற்றிய கருத்தையும் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

1928 ஆம் ஆண்டு  மாநிலக்கல்லூரியில் நமச்சிவாயரின் மாணவராக இருந்த பெரியசாமி தூரன்தான் முதல்முதலில் பொங்கல் வாழ்த்து அட்டையை அறிமுகப்படுத்தினார். பெ.தூரன், சி.சுப்பிரமணியம், ஓ.வி.அழகேசன் முதலானோர் மாநிலக்கல்லுாரியில் சங்கம் ஒன்றை அமைத்திருந்தனர். சங்கக் கூட்டமொன்றில் கிறிஸ்துமஸ் வாழ்த்து மடலைப் போல நாமும்
வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கத்தைத் தோற்றுவித்தால் நலமாக இருக்குமே என்று பெரியசாமித் தூரன் கருத்துத் தெரிவித்தார். அவரே பனங்குருத்துகளை நறுக்கி அவற்றில் வண்ண மைகளில் அழகு செய்து
பொங்கல் வாழ்த்துகளையும் எழுதினர். இந்தப் பொங்கல் வாழ்த்துகளைத் தம் ஆசிரியர் நமச்சிவாயருக்கும், தமிழ்ப் பெருமக்களாகிய திரு.வி.க., கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு அனுப்பினார். இதனால் கவரப்பட்ட திரு.வி.க., தம் நவசக்தி ஏட்டில் தமிழ்மக்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோளும் விடுத்தார். இதன் பின்னரே பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் 1928ஆம்  ஆண்டுமுதல் தமிழர்களிடையே பரவியது. 

1935 ஆம் ஆண்டு திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற ‘அகில தமிழர் மாநாடு’ பொங்கல், சமயம் சார்ந்த பண்டிகையா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் கூட்டமாக அமைந்தது.  மறைமலையடிகள், திரு.வி.க., பெரியார், உமா மகேசுவரனார், கா. சுப்ரமணிய பிள்ளை, ஆற்காடு ராமசாமி முதலியார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், பி. டி. ராசன், பட்டுக்கோட்டை அழகிரி, பாரதிதாசன் முதலியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்து இறுதியில் பொங்கல் சமய அடையாளமற்ற தமிழர் பண்டிகை என்பதைத் தமிழறிஞர்களும் திராவிட கருத்தியலாளர்களும் ஒருமனதாக ஏற்றனர்.

இதன் தொடர்ச்சியாக 13.01.1936 அன்று பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற ‘தமிழ்த் திருநாள்’ நிகழ்வில் பெரியார், திரு.வி.க., நமச்சிவாயர் முதலியோர் பொங்கலைத் தமிழ் மக்களிடம் கொண்டுசெல்லும் வழிமுறைகளை விளக்கினர்.   பிற மதசார்பான விழாக்களைப் போலன்றிப் பொங்கலைத் தமிழர் திருநாளாக இனிக் கொண்டாட வேண்டும் என்று ஆழமான உரையாற்றினார் பெரியார்.

1937ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ உலகத் தமிழ் மக்கள் பேரவையினைத் தோற்றுவித்து “உலகத் தமிழ் மக்களே ஒன்று சேருங்கள்” என்றும், “தமிழ்த்தாயைத் தனியரசாள வையுங்கள் ” என்றும் கொள்கை முழக்கம் செய்தார். அவற்றைத் தமிழர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் தமிழர் திருநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் தம் வாழ்நாள் இறுதிவரை நமச்சிவாயர் வழியில் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார்,

பேரறிஞர் அண்ணா 1946-இல் “தமிழகத்தின் மே தின விழாவே பொங்கல் விழா'' என்பதை அறிவித்தார். பொங்கல் விழாவைப் பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்ததில் தி.மு.க.வுக்குப் பெரும்பங்குண்டு

1946 இல் ம.பொ.சி.  “தமிழரசுக் கழகம்”  தொடங்கியபின் தமிழர் திருநாள் விழா கொண்டாட அறை கூவல் விடுத்ததுதான் அக்கழகத்தின் முதல் பணியாக அமைந்தது. சென்னை மட்டுமல்லாது தமிழர் வாழும் பிற பகுதிகளிலும், மாநிலம் கடந்து, நாடு கடந்து தமிழர் திருநாள் விழாவை நடத்துவதற்குத் தூண்டுகோலாகத் தமிழரசுக் கழகம் விளங்கியது. தமிழரசுக் கழகத்தின் சார்பில் ஒரு கூட்டறிக்கையை ம.பொ.சி. வெளியிட்டார்.  அதில்,
 

தைத் திங்கள் முதல் நாளை நமது நாட்டுத் திருநாளாகக் கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு அம்முதற் பெருநாள் 1947, சனவரி 14 அன்று வருவதால் இம்முறை தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலும் சிறப்பாக நிகழ்பெறல் வேண்டும். காரணம் அது தமிழ்நாட்டிற்கெனச் சுயநிர்ணய அறிக்கையை உறுதி செய்வதாகும். சுய நிர்ணயத்தின் வழியே தமிழ்நாட்டின் எல்லை கோலல், அரசியல் அமைப்பை வரையறுத்தல் முதலியன நிகழ்தல் வேண்டும். தமிழகத்தின் விடுதலைக்குரிய ஒரு விழாவில் கலந்து உழைக்குமாறு எல்லாக் கட்சியாரை வேண்டுகிறேன். தமிழர் திரு நாளை நடத்த தொழிலாளர், மாணாக்கர் முதலிய யாவரும் முற்படவாராக. தமிழ் இனம் எழுவதாக!” என்று அறைகூவல் விடுத்தார்.

இந்தக் கூட்டறிக்கையில் திரு.வி.க., காமராசர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ப.சுப்பராயன், ப.ஜீவானந்தம், வ.ரா., கல்கி, பாரதிதாசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், டி.கே.சி., செங்கல்வராயன் ஆகியோர் கையொப்பமிட்டனர். திராவிடர் கழகத் தலைவர் பெரியாருக்கும் பொதுச் செயலாளர் அண்ணா துரைக்கும் இந்தக் கூட்டறிக்கை நகல் அனுப்பப்பட்டது.

 

அறிவித்தபடி 1947ஜனவரி14 அன்று  தமிழர் திருநாள் விழா தமிழகமெங்கும் நடத்தப்பட்டது. சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சி சுந்தரானார், ரா.பி. சேதுப்பிள்ளை, உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.

 

அகில மலாயா திராவிடர் கழகத்தினரும், தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும்  தமிழர் திருநாளைத் தமிழர் வீடெங்கும் கொண்டாட அரும்பாடுபட்டுள்ளனர்.

ஈழத்தில் போராட்டக்களத்தில்  கூடப் போராளிகள் பொங்கல் பானை வைத்துத் தைப்பொங்கல் கொண்டாடிய செய்தி உலகத் தமிழர்களுக்கு எழுச்சியூட்டுவதாகும்.

 

பொங்கலன்று கிறித்துவ தேவாலயங்களில் பீடத்திலேயே கரும்பு வைத்து அலங்கரிக்கின்றனர். திருப்பலிப்பூசையில் பொங்கலையும் ஆசீர்வதித்து, பின் அதனைப் பக்தர்களுக்கு வழங்கிக் கொண்டாடிக் கிறித்துவர்களும் பொங்கலைத் தமதாக்கி வருகின்றனர்.

 

தமிழ் முசுலீம் குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப்பொங்கலுடன் 16 வகை காய்கறிகளைச் சமைத்து விருந்து வைக்கும் வழக்கமுள்ளது. அன்று அவர்கள் அசைவத்தைத் தவிர்க்கின்றனர்.

 

பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் பரவியிருக்கும் ஒன்பது கோடித்தமிழர்களை ஒரே இனமாகப் பொங்கல் அரவணைக்கிறது.

 

மதச்சார்புள்ள ஓணம் பண்டிகையை அனைத்து மலையாளிகளும் கொண்டாடும் நிலையில் மதச்சார்பற்ற பொங்கல் பண்டிகை தமிழருக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும்.

 

பொங்கல் என்பது தூய்மை பேணுதல், உழைப்பிற்கு உயர்வு தருதல், பகிர்ந்து மகிழ்தல், விலங்குகளைப் பாதுகாத்தல், நன்றியறிவித்தல், இயற்கையைப் போற்றுதல் ஆகிய சிறந்த மதிப்பீடுகளை உள்ளடக்கிய தனிப்பெரும் திருவிழாவாகும். தமிழ் மக்களுக்கு உயர் சிந்தனைகளை வழங்கி,  பெருமை சேர்க்கும் பெருவிழாவாகும்.

 

பல உலக நாடுகளின் தலைவர்கள் பொங்கலுக்கு வாழ்த்துச்சொல்லும் நிலையில் வரலாற்றில் முதல்முறையாக, பொங்கல் பண்டிகைக்கு இந்திய உச்சநீதிமன்றம் 2021 முதல் விடுமுறை அறிவித்துள்ளது. இது பொங்கலுக்கு இந்திய அளவில் கிடைத்த அங்கீகாரமாகும்.

 

அனைத்துச் சமயத்தினரும், சமய நம்பிக்கையற்றவர்களும் இணைந்து கொண்டாடும் தமிழ்த்திருவிழாவாக, உலகத்தமிழரின் தனிப்பெரும் விழாவாகப் பொங்கல் இன்று விளங்கிவருவதற்குக் காரணமானவர்களை நாம் இன்றைய ஆரவார அரசியல் சூழலில் மறந்துவிடக்கூடாது.