எழுதுவோம் புதிய தமிழ் இலக்கணம்

                  எழுதுவோம் புதிய தமிழ் இலக்கணம் - முனைவர்  இ.ஜே.சுந்தர்

தமிழ் பழம்பெரும் மொழியாக இருப்பதில் உள்ள பெருமையைவிட, அதனைக் கட்டிக்காக்கும் பொறுப்பே மிகுதியாக உள்ளது. மிகுந்த சொத்துள்ளவனுக்கு அந்தச் சொத்துகளைப் பாதுகாக்கவும், பெருக்கவும் வேண்டியதில் உள்ள சிரமம் நம் செல்வத்தமிழுக்கும் உண்டு. ஏறத்தாழ 3000 ஆண்டுகாலம் சேர்த்துவைத்துள்ள சொத்துகள் அல்லவா ?

 

நமது முதல் பழம்பெரும் விலைமதிப்பற்ற செல்வம் கி.மு 500 அளவில் எழுதப்பட்ட தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்!  இதுவரை ஈட்டிய பலவற்றை நாம் இழந்தது போக இன்று வரை நம் மொழிக்கு அமைந்திருக்கும்  பாதுகாப்பு அரண்! தமிழ் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமன்றி தமிழர் வாழ்வுக்கும் நெறிமுறை அமைத்துக்கொடுத்த வழிகாட்டி!

 

250க்கும் மேற்பட்ட இடங்களில் தமக்கு முன்னே வாழ்ந்த,மற்றும் சமகாலத்தில் வாழம் அறிஞர்களைக் குறிப்பிட்டு, அவர்களின் கருத்துகளை உள்வாங்கி தொல்காப்பியர் வரைந்த இந்த இலக்கண நூல் எதிர்கால மொழிபயன்பாட்டிற்குத் தடம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இது முந்தையரின் இலக்கண, இலக்கிய மரபுகளை நினைவுகூருவதால், தொல்காப்பியத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழில் இலக்கியங்கள் பலவும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிறது.

 

 

தொல்காப்பியம் அமைத்துக்கொடுத்த இந்தத் தடத்தில் தான் சங்க இலக்கியங்கள் என்னும் பேருந்துகள் இதமாக ஊர்ந்து சென்றன. தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்குத் இந்தத்தொல்காப்பியப்  பாதையிலே தமிழ்ப்பயணம் நடைபெற்றாலும்,  காலம் செல்லச் செல்ல பாதையைச் சற்றே சீரமைக்கும் தேவை ஏற்பட்டது. ஏன்? சங்க காலத்திற்குப்பிறகு அடுத்த பல நூற்றாண்டுகள் நிகழ்ந்த ஆட்சிமாற்றங்கள், அயலக வணிகத்தொடர்புகள், சமய எழுச்சிகள் தமிழகத்தின்   சமூக வாழ்வைப் புரட்டிப்போட்டன. தம் காலத்தில் அறியப்பட்ட மக்கள் வழக்கையும்,ஏட்டு வழக்கையும் அடித்தளமாக வைத்து எழுதப்பட்ட தொல்காப்பிய விதிகளின் இறுக்கம் தளர்ந்தே ஆக வேண்டிய தேவையை சான்றோர் உணர்ந்தனர்.

 

மிகுந்த இலக்கணக் கட்டுப்பாடு கொண்ட மொழிகளைப் பேசும் மக்கள், மொழிச்சட்டப்பிடியினின்று நழுவி, வட்டார மொழிகளையும்,கிளைமொழிகளையும்  தோற்றுவித்தனர்; அதன் வளர்ச்சியாகப் புதிய மொழிகள் தோன்றத்தொடங்கின. வடமொழியின் இறுக்கத்திலிருந்து விடுவித்துக்கொண்டு வட இந்தியாவின் பல பகுதிகளில் இப்படித்தான் புது மொழிகள் பிறந்தன. இலத்தீனிலிருந்து ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகளிலும் புதிய மொழிகள்  அரும்பின.  இவ்வாறே  சேரநாட்டு வட்டாரத்தமிழ் ,மலையாளம் என்ற புது மொழியாகத் தமிழிலிருந்தும் முளைவிடத்தொடங்கியிருந்தது. இந்தச்சூழலில் தான் தமிழுக்கு இன்னொரு புது இலக்கணம் பிறந்தது. பழைய தொல்காப்பியப் பாதையைத் தடம் மாற்றாமல் சற்றே செப்பனிட்டு அமைத்த அந்த இலக்கண நூல்தான் பவணந்தி என்ற சமண முனிவர் எழுதிய நன்னூல் ஆகும்.

 

பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (1178 -1216) ஏறத்தாழ தொல்காப்பியத்திற்கு 17 நூற்றாண்டுகளுக்குப்பின்னர் இந்த நூல் காலத்தின் தேவையைப்பூர்த்தி செய்தது. இந்தப் புது முயற்சி காலத்தின் கட்டாயம் என்பதை உணர்த்துவது போல நன்னூலில் முடிவில் அமைக்கப்பட்டுள்ளது ஒரு நூற்பா:

 

 பழையன கழிதலும் புதியன புகுதலும்

 வழுவல கால வகையி னானே (462)

 

இதன் பிறகு தொல்காப்பியம், தொன்னூல் என்றும், நன்னூல், பின்னூல் என்றும்  வழங்கப்படுவது மரபாயிற்று.  மொழிச்சொத்து பாகம் பிரிக்கப்பட்டு, புதிய மொழிகள்தோன்றும் அபாயத்தை நன்னூலின் வரவு தடுத்து நிறுத்தியது மட்டுமன்றி, மொழிலக்கணம் இன்னும் இளகி படைப்பாளர்களுக்கு இதமளித்தது.

 

தமிழ் மொழி வழக்கில், தொல்காப்பியர் காலத்திலிருந்து பவணந்தியார் காலம் வரை ஏற்பட்ட மாற்றங்களைவிட, கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகுதி. கடந்த 700 ஆண்டுகளில், தமிழ் மண்ணில் வடநாட்டு இசுலாமியர், தெலுங்கர், மராட்டியர்,ஐரோப்பியர் ஆகியோர் அரியணையில் வீற்றிருந்ததன் விளைவாக தமிழ்மொழியில் வேற்றுமொழி சொற்கள் ஏராளமாக நுழைந்தன; நிலைத்தன. தொல்காப்பியர், நன்னூலார், இலக்கணங்களுக்கு அறியப்படாத புதிய இலக்கிய வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  சிற்றிலக்கியங்கள் 96 வகையாகப் பெருகின. உரைநடை என்ற ஆற்றல்மிக புதிய வடிவம் தோன்றி அந்த வடிவமே மக்களிடம் சிறுகதையாக, புதினமாக, கட்டுரையாக, நாடகமாகச் செல்வாக்குற்றது. யாப்பிலக்கண விதிகளைப் புறம்தள்ளிவிட்டு புறப்பட்டப் புதுக்கவிதைகள் புறந்தள்ளமுடியாத அளவு எழுச்சிபெற்றன. 

 

எனவே இன்றைய சூழலில் பழைய இலக்கண விதிகளை மட்டுமே அளவுகோலாகக்கொண்டு இன்றைய மக்கள் மொழியில், ஊடக பயன்பாட்டில் பிழை திருத்தம் செய்வது மறுபரிசீலனைக்குரியதாகும். எடுத்துக்காட்டாகச் சிலவற்றை நோக்குவோம்: வேண்டும் என்பதற்கு எதிர்சொல் வேண்டா என்பதாகும். ஆனால் இன்றைய வழக்கில் உள்ள வேண்டாம் என்பது இலக்கணப் பிழை! வேண்டாவாம் என்பதே மருவி வேண்டாம் ஆகியிருக்கிறது. இந்தப் பிழையை எப்பாடுபட்டு நீக்கமுடியும் ? 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  இராமப்பய்யர் அம்மானை(1623 -1659)என்ற நூலிலேயே - 'வேண்டாம் அடராமா வீரியங்கள் பேசாதே' என்று வேண்டாம் பயன்படுத்தப்பட்டிருப்பது இலக்கணப் பிழைதானே?   சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட 'உலக நீதி' - 'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் '  என்கிறதே!

 

எண்ணெய் என்ற சொல் எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யைக்குறிப்பதாகும். ஆனால் இன்று கடலை எண்ணெய், தேங்காயெண்ணெய் என்பன பயன்பாட்டில் இருப்பதோடு, எண்ணை என்று எழுதுவதும் பெருவழக்காகிவிட்டது. இதுபோன்ற இலக்கணப் பிழைகளோடு வழக்கில் பெருகிவிட்ட,நாம் பழகிவிட்ட  மேலும் சில சொற்கள்:

 

எல்லோரும்(பிழை)- எல்லாரும்(சரி)

இடதுபக்கம்(பிழை) - இடப்பக்கம்(சரி)

துவக்கம்(பிழை) - தொடக்கம்(சரி)

மென்மேலும்(பிழை) - மேன்மேலும்(சரி)

நாகரீகம்(பிழை) - நாகரிகம்(சரி)

நாழி(பிழை) - நாழிகை(சரி)

பேத்தி(பிழை) - பேர்த்தி(சரி)

வரட்சி(பிழை) -வறட்சி(சரி)

சீயக்காய்(பிழை) - சிகைக்காய்(சரி)

மிரட்டினார்(பிழை) - மருட்டினார்(சரி)

 

தமிழன் என்ற சொல் வழக்கே தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காணப்படவில்லை. அன்று அப்படி ஒரு சொல்லே இல்லை. கி.பி 7ஆம் நூற்றாண்டில் அப்பர் தேவாரத்தில் தான் முதன்முதலாக தமிழன் என்ற புதிய சொல்லாக்கம் அறிமுகமாகிறது என்பது வியப்புக்குரியதாகும். 

 

 

சில ஆண்பால் சொற்களுக்கு, இலக்கணத்திற்கு மாறான புதிய பெண்பால் சொற்களை எழுத்தாளர்கள் கையாளத்தொடங்கியுள்ளனர். இளைஞன் என்பதற்கு பெண்பால் இல்லை என்பதால் இளைஞி என்று எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உளர். ரங்கோன் ராதா என்ற புதினத்தில் அறிஞர் அண்ணா அவர்களே 'ஒருவள்' என்ற சொல்லைப்பயன்படுத்தியுள்ளார். ஒருத்தி என்பதே ஒருவனுக்குப் பெண்பால் என்பது அவருக்குத் தெரியாமலிருக்குமா? மகன், மகள் ஆகியவற்றிற்குப் பன்மை ஆண்மக்கள்,பெண்மக்கள் என்பதாகும். ஆனால் அத்தனை நாளேடுகளும் மகன்கள், மகள்கள் என்றே தவறாமல் எழுதித் , 'தவறிழைக்கின்றன'.

 

பிழையென்று கூறப்படும் மேல்குறித்த சொற்களை, தமிழார்வலர்கள் உட்பட 90% க்கும் மேற்பட்டோர்   வழக்கில் புழங்கி வருவதை 'வழு' என்று கூறி மக்கள் மேல் குற்றம் சுமத்தப்போகிறோமா? அல்லது 'வழுவமைதி' என்று சில சொற்களை ஏற்று புதிய இலக்கணம் அமைக்கப்போகிறோமா?

 

இதழ்களிலும், நூல்களிலும்,விளம்பரங்களிலும் பெருகி வரும் ஒற்றெழுத்துப்பிழைகள்- அதாவது இருசொற்களுக்கு நடுவில் வல்லின மெய்யெழுத்துகள்(க்,ச்,த்,ப்) இடுவதில் நேரும் பிழைகள்-

தமிழறிஞர்கள் எவ்வளவு கண்டித்தும்,  பாடத்திட்டத்தில் புகுத்திக் கற்பித்தும் சற்றும்  குறைவதாகத்தெரியவில்லையே! வல்லெழுத்துகள் மிகும்,மிகா விதிகளை நடைமுறைக்கேற்ப சில திருத்தம் செய்யும் சாத்தியங்களை ஏன் சிந்திக்கக்கூடாது? அங்குச் சென்றான் -என்பதில் நடுவில் ச் வருவது இலக்கண விதிதான். ஆனால் ச் இன்றி எழுதுவது தவறு என்றாலும், ஒலிக்குப்பொருத்தமாக உள்ளதே. தொல்காப்பியர் காலத்தில் ஒலித்தவாறு இன்று தமிழ் ஒலிக்கப்படாதபோது இந்த வலிமிகு விதிகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதில் தவறென்ன?

 

கலைச்சொற்களை உருவாக்குவதின் தான் எத்தனை குழப்பங்கள்? இன்னும் கணினியா, கணிப்பானா, கணிப்பொறியா என்பதில்கூட ஒருமித்த கருத்து வரவில்லை. அதிகாரப்பூர்வமாக ஒரே சொல்லை அறிவிக்கும் கலைச்சொல் அகராதி எது? உருவாகும் புதிய இலக்கணம் இதனையும் உள்ளடக்கி வழிநடத்த வேண்டும்.

 

வேற்றுமொழிச்சொற்கள் பற்றி ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும்  ஏற்கும் வண்ணம் ஒரு தெளிவான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. எது தமிழ்ச்சொல் என்பதிலேயே பலருக்கும் குழப்பம் உள்ளது. சமஸ்கிருதம்,ஆங்கிலம் தவிர வேறு மொழிச்சொற்களும் நாம் அடையாளம் காண முடியாதவாறு தமிழோடு கலந்துவிட்டன. கீழ்க்கண்ட சில சொற்கள் அத்தகையன:

 

அந்தோ, முருங்கை --சிங்களம்

மீசை, இளநீர்,வழுதுணங்காய் - முண்டா மொழி

சந்தா, அக்கரகாரம், கெடுபிடி - உருது

சாக்கு, சன்னல், மேசை - போர்த்துகீசியம்

அரிசி, சொத்து, சமாளி - கன்னடம்

நிம்மதி, குப்பம், பட்டறை,மடங்கு - தெலுங்கு

அட்டவணை, பேட்டை, பட்டாணி - மராத்தி

காயம், ஆபத்து,நபர்,பதில் - அரபி

தராசு,மனு, தயார்,புகார் - பாரசீகம்

லட்டு,லுங்கி,லாடம் - இந்துஸ்தானி

 

இந்தச் சில சொற்களுக்குத் தனித்தமிழ்ச்சொற்கள் பொருத்தமாக அமையவில்லை. கம்பர் தம் இராமாயணத்தில் 'அக்கடா' என்ற தெலுங்குச்சொல்லைக் கையாண்டுள்ளார். திருவருட்பாவில் துரை என்ற தெலுங்குச்சொல்லால் இறைவனை அழைக்கிறார் இராமலிங்க அடிகளார். தொல்காப்பியரும், நன்னூலாரும் வேற்றுமொழிச்சொற்கள் தமிழில் கலப்பதை ஏற்றே வடசொல், திசைச்சொல் என்று தமிழ்ச்சொற்களைப் பாகுபடுத்தினர்.

 

தனித்தமிழ் இயக்கம் தமிழைப் புதுப்பித்துள்ளதையும், மாசு களைந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை. வடமொழியின்றி தமிழ் இயங்கமுடியும் என்று கால்டுவெல் ஐயர் சொன்னதை இவ்வியக்கம் மெய்ப்பித்துக்காட்டியது. எனினும் இதன் பின்னணியில் ஓர் அரசியல் சூழல் இருந்ததையும் நாம் உணர வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் தீவிர தனித்தமிழ்ப்பற்றும், செயற்கையான செயல்பாடும் தமிழைப் பொதுமக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடும். தனித்தமிழாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டு இருவேறு மொழிகளாகப்பிரியும் அபாயம் நிகழலாம். இன்றைய சூழலில் மொழியின் போக்கைத் தீர்மானிக்கிறவர்கள்,அறிஞர்கள் அல்லர், பொதுமக்களே என்பதை நாம் உணரவேண்டும். இறக்குமதி இல்லாத நாடும், பிறமொழிகலப்பில்லாத மொழியும் உலகில் இல்லை. பிற மக்களோடு எந்தத்தொடர்பும் அற்ற அந்தமான் பழங்குடியினரின் மொழிகளில் வேண்டுமாயின் கலப்பற்ற தனி மொழி சாத்தியமாகலாம். தமிழ்ச்சொற்கள உலக மொழிகள் பலவற்றில் ஏற்றுமதியாகியுள்ள நிலையில் ,நாம் இன்றியமையாப் பிற மொழிச்சொற்களை இறக்குமதி செய்வதும் அவற்றை ஒலிபெயர்த்துக்கொள்வதும் தவறல்ல. 'கடிசொல் இல்லைக் காலத்துப்படினே'(சொல்:452) என்று தொல்காப்பியம் புதிய சொல்லாக்கத்திற்கும், இறக்குமதிக்கும் அன்றே உரிமம் வழங்கியுள்ளது.

 

மொழியை அறிவியல் கண்கொண்டு ஆய்ந்த தமிழறிஞர்கள் பலரும் நடுவழி மொழிக்கொள்கை இயக்கத்தைப் பின்பற்றுவதே மொழியைக்காத்து வளர்க்கும் என்று நம்புகின்றனர். இயன்றவரை தூய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தல், தேவையான இடங்களில் பழந்தமிழ்ச்சொற்களைப் புதுப்பித்துக் கையாளல், இன்றியமையா இடங்களில் மட்டும் வேற்றுமொழிச்சொற்களை நம் மொழிமரபுக்கேற்ப ஏற்றல் என்பதே இக்கொள்கையாகும். தொல்காப்பியர்,பவணந்தியார் முதலிய இலக்கண அறிஞர்களின் உணர்வுவழிப்பட்டதும் இதுவேயாகும்.

 

அன்று வேங்கடத்துக்கும் குமரிக்கும் இடையே 5 நிலங்களில் மட்டும் வாழ்ந்த தமிழன் இன்று பூமிப்பந்தில் வாழாத நாடுகள் இல்லை. ஏறத்தாழ 6 கோடியினர் தமிழகத்திலும், 3 கோடியினர் பிற இந்திய மாநிலங்களிலும்,அயல் நாடுகளிலும் பிற மக்களோடு கலந்து வாழ்கின்றனர். தமிழன் என்ற அடையாளத்தைத் தவற விடாமல் வாழ பலரும் முயல்கின்றனர். தொல்காப்பியர் காலத்திலிருந்து அண்மை நூற்றாண்டுகள் வரை தமிழர்களின் எழுத்தறிவு வெறும் 5%- க்கும் குறைவானது. இன்று பாய்ச்சலுடன் எழுத்தறிவு 65% மேல் உயர்ந்து நின்று, சில ஆண்டுகளில் 100% ஐ எட்டக்கூடும். அன்று, கற்ற மேட்டுக்குடியினரிடம் மட்டுமே பதுங்கியிருந்த தமிழ் இன்று பொதுமக்களிடம் தவழ்கிறது. இந்த உண்மைகளை மனதில் கொண்டு சூழலுக்கேற்ற புதிய தமிழ் இலக்கணம் எழுதப்படவேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

 

தமிழ்வாழ்க என்று மின்விளக்கு விளம்பரங்கள் போடுவதைவிட, தமிழ் அறிஞர்களுக்குச் சிலை வைத்து மாலைபோடுவதை விட, கவிதை அரங்குகளும், பட்டி மன்றங்களும் நடத்தி தமிழின் சிறப்பை இனிக்க, இனிக்க நாமே பேசி மகிழ்வதை விட, தமிழுக்கு உருப்படியாக செய்ய வேண்டிய முதற்பணி புதிய தமிழ் இலக்கணம் உருவாக்குவதாகும்.

 

குழு மனப்பான்மை, அரசியல் முதலிய அவலங்களை, தமிழ்மொழியின்  அவசர தேவைக்காக ஒரு முறையேனும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊடகங்களும், தமிழ் உயராய்வு அமைப்புகளும் இணைந்த குழுவினை அமைத்து, இப்பணியைச் செயல்படுத்த வேண்டும். இப்படி வெளிவரும் புது இலக்கணத்தை அரசுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். நாம் நெல்லிக்காய் மூட்டைகள் இல்லை என்பதைக்காட்ட- இது தமிழர் வாழுமிடமெங்கும் ஒரே சீராகப் பின்பற்றப்பட வேண்டும்.