'தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள் -முனைவர்.இ.ஜே.சுந்தர்,
தம் தாய்மொழியாம் தமிழையே 'தமிழ்' என்று உச்சரிக்க முடியாது, இயலாது, தெரியாது, முயலாது - தமில் என்றே உச்சரிக்கும் தமிழகத் தமிழரின் எண்ணிக்கை 95% வரை இருக்குமென ' தமிழ் 'ழ' கரப்பணி மன்றம்' என்ற தன்னார்வ அமைப்பு அறிவித்துள்ளது. இந்த வெட்கக்கேடு, ஓரளவு உண்மையாயினும், தேவையற்ற பிற தமிழ் விளம்பரப் பணிகளை ஓரங்கட்டிவிட்டு இதைச் சரிப்படுத்த வேண்டியதே இன்றைய இன்றியமையாத் தமிழ்ப்பணியாகும்.
தமிழ் எழுத்துவடிவம் காலந்தோறும் மாறியதால் தமிழ்ச் சாரம் குறையவில்லை. தமிழ் இலக்கிய வடிவம் கவிதையிலிருந்து உரைநடையானதால் தமிழ்ச்செழிப்பு மங்கவில்லை.தமிழ் இலக்கண விதிகள் நெகிழ்ந்தபோது தமிழ்ச்சீர்மை குலையவில்லை. ஆனால் கி.மு நூற்றாண்டுகளிலிருந்து கட்டிக்காத்துவரும் எழுத்து ஒலிப்புமுறை மாறினால் தமிழ் திரிந்து விடும் என்பதே பேருண்மையாகும். நாக்கு,பல்,மேல் வாய், உதடு,மூக்கு முதலிய 8 உறுப்புகளின் துணையுடன் ஒவ்வோர் உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் எப்படி உச்சரிக்கப்பட வேண்டுமென அறிவியலாளரின் கூர்மையுடன் தொல்காப்பியரும் பிற இலக்கண அறிஞர்களும் விளக்கிக்காட்டியுள்ளனர்.
ஒவ்வொரு தமிழ் எழுத்தையும் ஒலிக்க மாத்திரை என்ற ஒலியளவை அமைத்தவர்கள் நம் முன்னோர். மனித உடல் இயக்கத்திலிருந்து இந்த அளவை அற்புதமாக வடிவமைத்தனர் இந்த இலக்கண அறிவியலார். இயல்பாக கண்ணிமைக்கின்ற, கைநொடிக்கின்ற நேரத்தை ஒரு மாத்திரை என்றனர்.
''இயல்பெழு மாந்தர் இமை நொடி மாத்திரை'' - (நன்னூல்: நூற்பா.100)
மேலும் ஒன்றுக்கும் குறைவான மாத்திரையை அளக்க ,
'' உன்னல் காலே, விடுத்தல் அரையே,
முறுக்கல் முக்கால், விடுத்தல் ஒன்றே'' என்றனர். அதாவது நினைப்பது கால், விரல்களை ஒன்றின் மேல் ஒன்று வைப்பது அரை, இருவிரல்களை முறுக்குதல் முக்கால், விடுத்தல் ஒரு மாத்திரை. கால் மாத்திரையிலிருந்து, இரண்டு மாத்திரை வரை தமிழ் எழுத்துகள் அமைந்துள்ளன. இப்படி அறிவியல் நேர்த்தியுடன், தேர்ந்த உள்கட்டமைப்புடன் அமைக்கப்பட்ட நம் மொழியின் பெயரே, த என்ற வல்லினம், மி என்ற மெல்லினம், ழ் என்ற இடையினம் - இவற்றின் இனிய முச்சேர்க்கையாகத் தமிழ் என்று பெயரிடப்பட்டதன் நுட்பம் வியக்கத்தக்கதாகும். எனினும் தவறான மக்களுக்குத் தமிழ், தாய்மொழியாகிவிட்டதோ, அல்லது இன்றைய தமிழர்கள் தமிழை வடிவமைத்தவர்களின் வழித்தோன்றல்கள் இல்லையோ என்று ஐயுற வேண்டியுள்ளது.
உலகின் பல மொழிகளுக்கு இல்லாத இச்சிறப்பைப்பெற்றிருக்கிற தமிழர், இதனை உணர்ந்து காப்பாற்றும் முறை எப்படி உள்ளது? எழுத்துகளை ஒலிமாற்றி உச்சரிப்பதால் எவ்வளவு பொருள் மாற்றக்குழப்பம் நேரிடுகிறது என்பது உணரப்படுகிறதா? ழ,ல,ள,ற,ர,ந,ண,ன ஆகிய எழுத்துகளின் உச்சரிப்பு வேறுபாடுகள் பள்ளிகளிலும், இல்லங்களிலும் பயிற்றுவிக்கப்படுவதே நின்றுவிட்டதா? படிப்பறிவில்லாத மக்கள் இதனைத் தவறாக உச்சரித்தால் கூட மன்னிக்கலாம். ஆனால் படித்த மக்கள் - ஊடகங்களில் செய்தி வாசிப்போர், அறிவிப்பாளர்கள், கவிதை அரங்குகளிலும்,பட்டி மன்றங்களிலும் தமிழைத் தூக்கி நிறுத்துவோர், ஏன் தமிழாசிரியர்கள் கூட, வந்தார்கள் என்பதை, வந்தார்கல் என்றும் கழிப்பறை என்பதை, களிப்பறை என்றும், ஈழம் என்பதை ஈளம் என்றும், வாழ்க்கை என்பதை வாள்கை என்றும் பொறுப்பற்று உச்சரிக்கும் அவலத்தைக் கேட்கும்போது நெஞ்சில் ஈட்டி பாய்ந்து, காதில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றும் வேதனை ஏற்படுகிறது. தவறான உச்சரிப்புக்கு இவர்கள் வருத்தப்படுவதில்லை; வெட்கப்படுவதில்லை. கேட்டால், 'இப்படியே பளகி விட்டது' என்று கூசாமல் பதில் உரைக்கின்றனர்.
15 மாதங்கள் மட்டுமே பள்ளி சென்று படித்த சிவாஜி கணேசன், திரைப்படங்களில் வசனங்களைப் பேசும்போது தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பில் தமிழ்ச் சொற்கள் வீறு பெற்று உயிர்க்கும்; அவரின் திருத்தமான வல்லின, மெல்லின, இடையின ஒலிப்பு வேறுபாட்டால் தமிழ், தென்றலாகவும், பொங்கிவரும் புதுவெள்ளமாகவும், காலைக்கதிராகவும் உணர்வூட்டும். தமிழ்ப்பேராசிரியர்களுக்கே ஒலிப்புமுறையில் பாடம் நடத்த தகுதி படைத்தவர் அவர். 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்பதைக் கடும் பயிற்சி வழி முயன்று, முனைந்து செயல்படுத்தியவர். இன்று தமக்கு 'முன்' பட்டங்களை ஆங்கிலத்தில் சூட்டிக்கொண்டுள்ள,படித்த, எத்தனையோ தமிழ் நடிகர்கள் தமிழ் என்பதைக்கூட தமில் என்று உச்சரிக்காமலிருக்க முடியவில்லை. நடிகைகள் பற்றிப் பேசவே வேண்டாம். பேசாத இவர்களுக்குக் குரல் கொடுப்பவர்களும் தமிழ் உச்சரிப்பைப்பற்றிக் கவலைப்படுவதில்லையே!
தமிழைத்தாய் மொழியாகக் கொள்ளாத தெலுங்கர் பி.சுசீலா 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்று பாடுவதைக்கேட்டால் அவர் தமிழ் உச்சரிப்பில் தேன் வந்து பாயும். 'மன்னவன் வந்தானடி', 'அன்புள்ள அத்தான்' முதலிய அவரின் நூற்றுக்கணக்கான ழகர, லகர, ளகர ஒலிகள் அழகு பெறும் தமிழ்ப்பாடல்களைக் கேட்டாலே நம் உச்சரிப்பைக் கூர்தீட்டும் ஆசை வரும். தமிழ்த்திரைப்பாடல்களில் தமிழ் எழுத்தொலிகளை மிகச்சரியாக உச்சரித்துப்பாடிப் பரவசப்படுத்திய டி.எம்.சவுந்தரராஜன் ஒரு சௌராட்டிரர் ! 'முத்தைத் தரு..' என்று அவர் பாடிய அருணகிரியார் பாடல், தமிழ் உச்சரிக்கத்தெரியாத தமிழர்களை நாண வைக்கும். கன்னடரான பி.பி.சீனிவாஸ் பாடிய எந்தப்பாடலிலும் இனிமையும், தமிழ் உச்சரிப்பும் போட்டி போடும்.
இவர்களையெல்லாம் தாம் இசையமைத்த பெரும்பாலான படங்களில் தமிழுக்குக் குறைநேராது பாடவைத்து தமிழ்த்திரையிசையில் தமிழ்ஒலியைக் காத்த பெருமை மலையாளியான எம்.எஸ்.விஸ்வநாதனைச் சாரும். இன்று தாம் நிகழ்த்தும் தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சிகளில் பாடுவோர் ழகரம் முதலிய உச்சரிப்புகளைச் சரியாக உச்சரிக்கத்தவறும்போது கடுமையாகக் கண்டித்து வழிநடத்தி வருபவர் ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இப்பின்னணியில் இன்று தமிழ் உச்சரிப்பைப்பற்றி அறவே கவலைப்படாத, தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட இசையமைப்பாளர்களையும், பாடகர்களையும் நினைத்தால் நெஞ்சு வெடிக்கிறது. ஏனெனில் திரைப்படத்தில் இவர்கள் வெளிப்படுத்தும் தவறான ஒலிக்கூறுகள் கோடிக்கணக்கான மக்களை ஊடுருவி ஊறு செய்யும்; ஒரு தலைமுறையைத் தவறாக வழிநடத்தும்.
தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வசனம் பேசுவோர் பலரும் தங்கள் பங்கிற்குத் தமிழ் உச்சரிப்புக்கொலை செய்தே வருகின்றனர். எழுதப்படிக்கவே அறியாத நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரட்டைக்குரல் வசனத்தில் என்றும் ழகர,லகர,ளகர உச்சரிப்புகள் கம்பீரமாக மிளிரும். ஆனால் அவர் மகள் ராதிகா வாள்கை, வாள்கை என்றே தொடர்ந்து கூசாமல் அழுத்தம் திருத்தமாக எல்லாத் தொடர்களிலும் குழப்பி வருவதை எந்த இயக்குநரும், உரையாடல் எழுதுவோரும் பயந்துகொண்டு சுட்டிக்காட்டுவதே இல்லையா ? வாழ்க்கையை, வாள்கை என்பது தான் சரி என்று அவர் ரசிகர்கள் புரிந்துகொண்டுவிடுவார்களோ என்ற நியாயமான பயம் நமக்கிருக்கிறது.
தமிழுக்கு மட்டுமே உரிய ழகரம் தமிழுக்குச் சிகரமாகும். எனவே இதற்குச் சிறப்பு ழகரம் அல்லது தமிழ் ழகரம் என்று பெயர். இதை உச்சரிக்கத்தெரியாமல் இருப்பது மொழி ஊனமே. ஏனெனில் தமிழில் முக்கியமான செற்கள் ழ வில் தான் அமைந்துள்ளன. ழகரச்சொற்கள் ஐயமற தனித்தமிழ்ச்சொற்கள். 'தமிழ் இசை கடன்பெற்றதே; தமிழில் உள்ளார்ந்த இசை மரபில்லை' என்ற அவதூறு எழுப்பப்பட்ட காலத்தில், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தமிழில் உள்ள 3 வகை இசைக்கருவிகளின் பெயர்களும் ழகரத்தில் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இவை தமிழுக்கே உரியவை என மெய்ப்பித்து எதிர்வாதங்களைத் தகர்த்தெறிந்தார். நரம்புக்கருவி - யாழ், காற்றுக்கருவி- குழல், தோல்கருவி - முழவு என்று அவர் குறிப்பிட்ட மூன்றும் தூய தமிழ்ச்சொற்களாகும். வாழ்க்கை, குழந்தை, கிழவன், அழகு, எழில், பழம், மழை, சூழல், தழல், கிழமை,வழி,வாழ்க, இதழ்,பழக்கம், மகிழ்ச்சி, கிழக்கு, வாழை, உழவு,எழுத்து முதலிய இன்றியமையாச் சொற்கள்- நேசிக்கப்படும் சொற்களாகும். இந்த ழகரச்சொற்களை நீக்கி நம்மால் வாழவே முடியாது
ழகரம் இந்திய மொழிகளில் தமிழிலும், தமிழிலிருந்து அண்மையில் பிரிந்த மலையாளத்திலும் மட்டுமே உள்ளது. பிரஞ்சு மொழியில் 'ழ'- ஒலியில் இருக்கிறதேயொழிய சொல்லில் இல்லை. ஜீணீரீமீ என்பதை பாழ் என்று உச்சரிப்பர். அது கூட க்ஷ் கலந்த ழகரம் போன்ற ஒலிதானேயன்றி ழகரமன்று.
9ஆம் நூற்றாண்டு வரை தெலுங்கிலும், 10ஆம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் ழகரம் வழக்கில் இருந்திருக்கிறது. இன்னும் பல திராவிட மொழிகளிலும் இருந்த ழகரம் சகரமாக மாறி வழக்கிறந்தது. ழகர ஒலி தாய் திராவிட ஒலி என்பது மொழியறிஞர்கள் கருத்து. தமிழர்களை விட மலையாளிகள் ழகரத்தை இன்னும் சிறப்பாக போற்றிக்காத்து உச்சரிக்கின்றனர். சோழ நாட்டுத் திருச்சியிலே வண்டியில் ஏற்றப்படும் வாழைப் பழம், பாண்டி நாட்டு மதுரை வரும்போது வாளப் பளமாகும்; தொண்டை நாட்டு காஞ்சியில் இறக்கப்படும்போது வாயப் பயமாகும். ஆனால் சேர நாட்டு மலையாளிகள் வாயில் என்றும் அது வாழைப் பழமாகவே விளங்கும். ழகரத்தைத் தவறாக உச்சரிக்கும் மலையாளிகளைக் காணவே முடியாது.
ஒருகாலத்தில் தமிழ் பயிற்றுவிக்கும்போது ழ,ற,ர,ல,ள,ந,ண,ன ஆகிய எழுத்துளை உச்சரிக்கப் பள்ளிகளில் கடும் பயிற்சி தரப்பட்டது. சரியாக ஒலிக்க வைக்கும் அக்கறையில் தமிழாசிரியர்கள், குட்டு, பிரம்படி, உதை, வழங்குவர். இதை ஒலிக்கக் கற்காமல் அடுத்த வகுப்புக்குத் தேற முடியாது. அன்று திராவிட இயக்கங்களும், நாடகக் கம்பெனிகளும் கடுமையான ஒலிப்புப்பயிற்சி அளித்து மேடைப்பேச்சாளர்களையும், நடிகர்களையும் திறம்பட உருவாக்கினார்கள். இஃது இன்று தொடருவதாகவும் தெரியவில்லை. ஒட்டக்கூத்தரும், வில்லிபுத்தூராரும், பிள்ளைப்பாண்டியனும் தமிழில் பிழைசெய்தோரைக் கடும் தண்டனைக்கு உட்படுத்தியதாக வரலாறு உண்டு. மொழிகெட்டால் வாழ்வு கெடும் என்ற அச்சத்தில் மொழித்தவறைத் தண்டனைக்குரியதாக அவர்கள் கருதினார்கள்.
பள்ளிகள் செய்யத்தவறிய இப்பணியை, இன்று மொழிப்போர் மறவர் கவிஞர் கடலூர் அ.தேவநாதன் அவர்களின் தமிழ் 'ழ'கரப்பணி மன்றம் அர்ப்பணிப்போடு செய்து வருவது பாராட்டிற்குரியது. இம்மன்றத்தினர் ழகரம் முதலியவற்றைச் சரியாக உச்சரிக்க இலவச பயிற்சியும், சான்றிதழும் வழங்குகிறார்கள். ழகர மாநில மாநாடே இருமுறை இவர்கள் நடத்தியுள்ளனர். (முகவரி:71/27, அசீசு முல்க், 2ஆவது தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை 600 006)
இந்த 8 முக்கிய எழுத்துகளின் உச்சரிப்பைக் கற்றுக்கொள்ள உலகத்தமிழர்கள் இணைய தளத்தின் வழியாகவும், குறுந்தகடுகள் வழியாகவும் பயிற்சி பெறும் வசதி இன்று வந்துவிட்டது. சற்றே முயன்றால் யாரும் எளிதாக இந்த தமிழ் எழுத்துகளைச் சிறப்பாக உச்சரிக்கலாம். பக்கத்தில் அமைந்துள்ள படம் சரியான உச்சரிப்பைப் பயில உதவும். பெரிய ற, சின்ன ர முதலிய பெயர்களைத் தவிர்த்து, இவற்றிற்கு உரிய பெயர்களைக் காண்க:
ல -(ஒற்றல் லகரம்) மேல் வாய்ப் பல்லின் அடியை நாவின் ஓரம் தடித்துப்பொருந்தினால்-ஒற்றினால்- 'ல' ஒலி வரும்.
ள -(வருடல் லகரம்) மேல் வாயை நாவின் ஓரம் தடித்துத்தடவுவதால்-வருடுதலால்- 'ள' பிறக்கும்.
ர,ழ -(இடையின ரகரம், சிறப்பு ழகரம்) மேல் வாயை நாவின் நுனி தடவுதலால் 'ர' , 'ழ' தோன்றும்.
ற,ன -(வல்லின றகரம், றன்னகரம்) மேல் வாயை நாவின் நுனி மிகப் பொருந்துவதால் 'ற', 'ன' ஒலிக்கும்.
ண - (டண்ணகரம்) மேல் வாயின் நுனியை நாவின் நுனி பொருந்துவதால் 'ண' ஒலி பிறக்கும்.
ந - (தந்நகரம்) மேல் வாய்ப் பல்லின் அடியை நாவின் நுனி பொருந்தும்போது 'ந' உச்சரிக்கப்படும்.
மொழியுணர்வும், மொழி உச்சரிப்பும் தமிழ் என்ற துள்ளுந்தின் இரு சக்கரங்கள். ஒரு சக்கரம் காற்றிழந்தாலும் தமிழ்ப்பயணம் தடையாகும்.
இவ்வளவு வாய்ப்பும், வசதியும் இருந்தும் தவறாக உச்சரிப்போர் இன்னும் திருத்திக்கொள்ள அசட்டை செய்தால், எல்லை மீட்புப் போராட்டம் போல், தமிழ் உச்சரிப்பு மீட்புப் போராட்டம் தவிர்க்கமுடியாததாகும்.
( தங்கம் இதழில் தினமணியில் 08.06.2014 லும் வெளிவந்தது)