சீனா ஏற்படுத்திய சீற்றம்

குமுறும் நெஞ்சம்:11                   

 

செஞ்சீனத்திற்குச் சென்ற மாதம் செல்லும் வாய்ப்புக் கிட்டியது, சீனா இப்போது முழு சிவப்புடன் இல்லையென்பதும், அனைத்தும் தாராளமயமாக்கப்பட்டு மூங்கில் திரை நாடான சீனாவின் முந்திய முகமே மாறிப்போய்விட்டது என்பதும் உண்மைதான். ஆனாலும்  தன் அடிப்படை பொதுவுடைமைச் சித்தாந்தத்திலிருந்து முழுவதும் மாறாமல் அது பெரும் வல்லரசாகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் முனைப்பை எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது. நமக்கிருக்கும் பல பிரச்சினைகளைத்தான் சீனாவும் எதிர்கொள்கிறது. ஆனால் அவற்றை எப்படித் தீர்த்து வருகிறது என்று அறிய முயன்றால் பல புதிய பாடங்களை நாம் படிக்கமுடியும்.

சீனத்தலைநகர் பீஜிங் சிங்கப்பூரைவிட 25 மடங்கு பரப்புள்ளது. இரண்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற இந்த ஒரு நகரமே வடகொரியா, சிரியா, ருமேனியா ஆகிய மூன்று நாடுகளில் மொத்த மக்கட்தொகையை உட்கொண்டது. எனினும் இவ்வளவு பெரிய நாட்டின்  நெரிசலான தலைநகர் பொலிவிலும், தூய்மையிலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் தலைநகரங்களுக்கு எந்த விதத்திலும் குறையாமல் விளங்குகிறது. கட்டடங்களின் செம்மாந்த அணிவகுப்பு- பார்க்குமிடமெங்கும் மரங்கள், மலர்கள்- மிக அகன்ற சாலைகள்-  பெரிய நடைபாதைகள். போக்குவரத்து விளக்குகளுக்கும், சாலையைக் கடப்போருக்கும் பொறுமை காட்டும் வாகனப் பண்பாடு- இவை  எல்லாவற்றையும் விட இந்தப்பெரிய நகரை மிகத் தூய்மையாகப் பேணும் பெரும் பொறுப்பை வெற்றிகரமாக அரசு சாதித்திருக்கிறது.

மே தினத்திற்கு முன்தினம் விடுமுறை விடப்பட்டது. சீனப்புரட்சிக்கு நிலைக்களமான தினமன் சதுக்கத்திற்கு அன்று நான் சென்றேன்.. ஏறத்தாழ இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த அந்த நெரிசலான இடத்தில் பொதுக் கழிப்பிடங்கள் இருந்தன. உள்ளே நுழைந்தபோது வியப்பில் ஆழ்ந்தேன். அங்கேயே உட்கார்ந்து இலைபோட்டுச் சாப்பிடும் அளவுக்குப் பரிசுத்தமாக இருந்தது. ஊழியர்கள் தூய்மை செய்தவண்ணம் இருந்தார்கள்.. தண்ணீருக்கும், துடைதாளுக்கும், சோப்பிற்கும் குறைவில்லை.. தூய்மையான கழிப்பிடங்களை உருவாக்குவதாக வாய்ச் சவடால் விடும் நம் அரசியல் தலைவர்களின் முகம் எனக்கு அப்போது அழையாத விருந்தாளியாக வந்தது.

புதிதாகக் கிளர்ந்தெழுந்துள்ள வணிக நகரமான ஷாங்காயின் விண்ணுயரக் கட்டடங்கள் ஒளிவெள்ளத்தில் வண்ண ஜாலம் காட்டி மிளிர்ந்தாலும், 3000 ஆண்டு பழமையான தலைநகர் பீஜிங் இன்னும் புதுப்பொலிவுடன் பேணுப்படுவதே கவனத்தைக் கவர்ந்தது. ஷாங்காயிலிருந்து  பீஜிங் செல்ல ஒரு நாளைக்கு 94 புல்லட் ரயில்கள் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் 1,65,000 மக்களை தினமும் ஏற்றிச்செல்கிறன.. இரண்டுக்கும் உள்ள 1318 கி.மீ தூரத்தை நாலரை மணிநேரத்தில் ரயில் கடக்கிறது. அதாவது சென்னையிலிருந்து மும்பைக்குச் செல்லும் தூரம். சீனாவின் மொத்த மக்கட் தொகையில் 25% இந்த இரு நகரங்களுக்குள் அமைகிறது. எனவே இந்தப்பாதையில் பல நகரங்களை வழியில் கண்டபோது ஒவ்வொன்றும் பெருநகரங்களைப்போல நவீன வசதிகளுடன் காட்சியளித்தன. நாட்டின் பெரும் வளரச்சி வழியெங்கும் தெரிந்தது.  

சுற்றுச்சூழல் மாசைத் தடுக்க நகரங்களில் கார்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் மின்கலத்தில் இயக்கும் சிறுவகை ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதைக் கண்டேன். பாதிக் கார்களும், பேருந்துகளும், மின்சாரத்தில் இயங்குகின்றன. பெட்ரோலின் பயன்பாடு மிகவும் குறைக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் சுகமாக உள்ளது.

எங்கும் சுவரொட்டிகளோ, வணிக விளம்பர பேனர்களோ, அரசியல் தலைவர்களின் படங்களோ இல்லவே இல்லை.  சீனப்பொருள்களை மலிவான விலையில் தயாரிப்பதற்குக் காரணம் தொழிலாளர்களுக்கு மிகக் குறைவாகத் தரப்படும் ஊதியம் என்ற செய்தி உண்மை இல்லை என்றும் கூறப்பட்டது. தடையில்லா மின்சாரம், விரைவான போக்குவரத்து வசதி, தடங்கலற்ற செய்தித்தொடர்பு, சிறப்பான நீர் மேலாண்மை. தொழில் முனைவோர்க்குப் பல்வேறு சலுகைகள் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் நாடு முழுவதும் மிக வலிமையாக இருப்பதே மலிவாக பொருள்களைத் தயாரிக்க முக்கிய காரணம் என  விளக்கப்பட்டது. வேலை என்று வந்தால் சீனர்களை மிஞ்சமுடியாது என்பதை பலவிடங்களில் உணர முடிந்தது. எங்கும் எதிலும் சீனமொழியே நீக்கமற நிறைந்துள்ளது. உயர் கல்விவரை அனைத்தும் சீனமொழியில்தான்! ஆங்கிலத்தில் எண்களைக் கூறினால் கூட பலருக்கும் புரியவில்லை.

மக்கள் சீனத்தின் திட்டமிட்ட வளர்ச்சி தாராளமயமாக்கப்பட்டதாலும், கட்சியின் சர்வாதிகாரத்தாலும் சாத்தியமாயிருக்கிறது. இந்தியர்களிடமுள்ள எல்லா பலவீனங்களும் சீனர்களிடம் மிகுதியாகவே இருந்தன. இன்னுங்கூட இருக்கின்றன. இலஞ்சம் கொடுத்தல், எச்சில் துப்பல், தெருவில் குப்பைப்போடல், தூய்மையின்மை. கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு முன்னேறல், மோசடி செயல்பாடுகள், பிக்பாக்கெட் அடித்தல், திருட்டு, போதைப்பொருள்களுக்கு அடிமையாதல் முதலியன அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்படவில்லையாயினும் அரசின் கடுமையான சட்டங்களாலும் கல்விக்கூடங்களில் புகட்டப்படும் ஒழக்கங்களாலும் அடுத்த தலைமுறைக்குப் பரவாவண்ணம் தடுக்கப்பட்டுள்ளன. 9 ஆண்டுகள் கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசம்.  50 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து  கடந்த 40 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2020 க்குள் ஏழைகளே இல்லா நாட்டை உருவாக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. .

இதனால் புதிய சீனாவை உருவாக்கி உலகின் கண்முன் நிறுத்திக்காட்டிவருகிறார்கள். எந்த ஊருக்கும் யாரும் சென்றுவரத் தடையில்லை. வல்லரசாகும் வல்லமையை எல்லாவிதங்களிலும் பெற உன்னதங்களை எல்லா மட்டங்களிலும் உருவாக்கிவருகின்றனர்.. அரசுக்கு கடவுள், மத நம்பிக்கையில்லை. ஆனால் மதங்களைப் பின்பற்றுவோரைத் தடுப்பதுமில்லை. பௌத்த ஆலயங்களும், கிறித்துவ தேவாலயங்களும், மசூதிகளும் கண்ணில் பட்டன. மதத்தின் பெயரால் எந்த அவலமும் நிகழாவண்ணம் அரசு கண்காணிக்கிறது.  மக்களுக்கு வாக்குரிமை இல்லை. கட்சிக்குள் மட்டுமே தேர்தல். ஆனாலும் மக்களுக்குத் தேவையானவை கிடைப்பதால் நிறைவுடன் இருப்பதாகக் கேட்டவர்கள் கூறினர்.

மக்களாட்சி, சுதந்திரம் என்ற பெயரில் பெருமையடித்துக்கொள்ளும் நம்மவர்களால் எந்தச் சீர்கேட்டையும் நிறுத்தமுடியவில்லை. காசு கொடுத்து வாக்கு வாங்கும் அரசியலார்-  அதைக் கூச்சநாச்சமின்றி வாங்கி தம் தலையில் தாமே மண்ணைப்போட்டுக்கொள்ளும் பாமர மக்கள்-  எல்லாவிதமான தில்லுமுல்லுகள். தகிடுதத்தங்கள் நிறைந்த தேர்தல் நாடகம்-  உலகின் அத்தனை சீரழிவுகளையும் சுமந்து நிற்கும் இந்த தேசம் இப்படியே தவறான அரசியல் பாதையில் சென்றால் வளரந்த நாடுகளை எட்டிப்பிடிப்பது பகற்கனவே.   

சீனா போன்று பாய்ச்சலுடன் முன்னேறி வரும் நாடுகளை அடிக்கடி பார்த்துவரும் அதிகாரிகளுக்கும்,, அரசியலாளர்களுக்கும்  இன்னும் சொரணை வரவில்லையே என்ற சீற்றம்  சீனப்பயணத்தில் எழுந்தது.