குமுறும் நெஞ்சம்:12
'தமிழ் கடினமான மொழி. ஏகப்பட்ட எழுத்துகள். சிக்கலான உச்சரிப்பு. இலக்கணம் வேறு ஒரு தலைவேதனை.. அதனால் தான் பலரும் வாய்ப்புக்கிடைத்தால் இந்தி, பிரஞ்சு முதலிய வேறு மொழிகளுக்குத் தாவத் துடிக்கிறார்கள். இப்போது தமிழைக்கட்டாயப்படுத்தி மாணவர்களை வதைக்கிறார்கள் ' என்ற சில தமிழ்ப்பெறோர்கள்- சிறப்பாக சென்னை போன்ற நகரங்களில்.- ஆங்கில வழிக் கல்வியில் தம் சிறார்களைப் பயிலவைக்கும் மேல்தட்டு வர்க்கத்தினர், புலம்புவதைப் பலமுறை கேட்டிருக்கிறோம்.
சீனாவில் நான் கண்ட காட்சிகளும், அறிந்த செய்திகளும் இத்தகையோரின் அறியாமைக்குப் பதிலமளிக்கும், சவுக்கடியாக அமைந்துள்ளன..
தமிழைப்போலச் சீன மொழியும் ஏறத்தாழ 5000 ஆண்டுகள் பழமையானது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே சீன எழுத்துகளை விலங்குகளின் எலும்புகளிலும், ஆமை ஓட்டிலும் இவர்கள் பதித்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர். சீன எழுத்துகள் பட எழுத்துகள் !.அதாவது ஒரு சொல்லுக்கு ஒரு படம். பழஞ்சீன எழுத்தையும் கணக்கில் கொண்டால் சீன மொழியில் 1,06,230 எழுத்துகள் உள்ளன. 1950 களில் சீனமொழி எளிமையாக்கப்பட்ட பின்னர் ஏறத்தாழ 7000 பட எழுத்துகளாகக் குறைக்கப்பட்டன. ஒரு நாளிதழைப் படிக்கவேண்டுமாயின் குறைந்தது 3000 பட எழுத்துகளாவது தெரிந்திருக்கவேண்டும். மேலும் சீன ஒலிப்பில் 5 வகையான ஏற்ற இறக்கங்கள் வேறு மொழியைச் சிக்கலாக்கிறது..( தமிழில் குறில் நெடில் என்று இரு ஒலிப்புகள் மட்டுமே இருப்பது போல) எனவே உலகிலேயே கற்க கடினமான மொழிகளில் ஒன்றாகச் சீனம் உள்ளது. ஐநாவின் வெளிநாட்டுச் சேவை பயிற்சியகத்தின் கணக்கீட்டின்படி ஆங்கிலம் அறிந்த ஒருவருக்குச் சீன மொழியைக் கற்க 2200 மணிநேரம் தேவைப்படுகிறது.
இத்தகைய சீன மொழி பேச்சிலும் எழுத்திலும் பலவடிவங்களையும் கொண்டுள்ளது. பீஜிங்கில் பேசப்படும் மாண்டிரின் என்ற சீன மொழிவடிவே அதிகாரப்பூர்வமானதாகும். உலகில் அதிகமாகப்பேசப்படும் தங்கள் மொழியை உலக மாந்தரில் ஐந்தில் ஒருவர் பேசுகின்றனர் என்பதில், சீனர்களுக்கு அளவற்ற பெருமை.
சீனாவின் தொடக்கப்பள்ளிகளில் 60% நேரத்தைச் சீன மொழியையும், கணிதத்தையும் கற்பிக்கவே செலவிடுகின்றனர. 3வது வகுப்பில்தான் ஆங்கிலம் அல்லது அயல்மொழி கற்பிக்கப்படுகிறது. 1949 முதல் 1960 வரை அங்கு ரஷ்ய மொழியே முதன்மையான அந்நியமொழியாகப் பயிற்றுவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் நிக்சன் சீனா வந்த பின்னரே ஆங்கிலம் முதல்முறையாக நுழைந்தது. 2003 முதல்தான் ஆங்கிலம் ஒருபாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை சீன மொழியே பாடமொழி என்பதில் மக்களும், அரசும் உறுதியாக உள்ளனர். சீனமொழியை 96.7% சீனர்கள் வாசிக்கின்றனர். சீனர்கள் அனைவரும் தம் தாய்மொழியை நேசிக்கின்றனர் என்பதைவிடச், சுவாசிக்கின்றனர் என்பதை நேரில் உணர்ந்தேன்.. சுற்றுலா வரும் அயல்நாட்டினருக்குத் தங்கள் மொழியைச் சிறிதேனும் சொல்லித்தர அவர்கள் காட்டும் முனைப்பைப் பலவிடங்கில் என்னால் காணமுடிந்தது.
சுற்றுலா, வணிகம், வெளியுலகத்தொடர்பு முதலிய பயன்பாடுகள் கருதி ஆங்கிலம் ஒருபாடமாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலத்தேர்வில் எழுத்துத்தேர்விற்கு 80% மதிப்பெண்தான் ! மீதி 20% மதிப்பெண் வாய்மொழி, கவனித்தல் ஆகியவற்றிற்கு வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பும் அங்கு மிகவும் குறைவு.. தங்கள் தாய்மொழியின் வழியே அனைத்தையும் செயல்படுத்தமுடியும் என்ற தலைநிமிர்வு அவர்களுக்கு இருப்பதால் அவர்களுக்கு ஆங்கிலமோகம் அறவே இல்லை. எனவே 1% க்கும் குறைவானவர்களே அங்கு ஆங்கிலத்தில் உரையாடக்கூடியவர்கள் என தி டெலிகிராப் இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது. நான் தங்கியிருந்த உயர்தர விடுதியின் வரவேற்பாளருக்கு ஆங்கிலத்தில் எண்கள்கூடத் தெரியவில்லை. நான் பேசிய ஆங்கிலத்தைக் அவர்கள் கைப்பேசியில் எழுத்தாக்கி, சீனத்தில் மொழிபெயர்த்து அவர்கள் சீனத்தில் கூறியதை ஆங்கிலத்தில் மறு மொழிபெயர்ப்பு செய்து எனக்கு நன்கு புரியவைத்தார்கள். கைப்பேசி செய்யும் மொழிபெயர்ப்பு 'ஜாலங்கள்' சாத்தியமான நிலையில் ஆங்கிலமே அவசியமில்லை என்று நினைக்கிறார்கள்.
ஆங்கிலம் இங்குச் செல்வாக்குப்பெற்றால் தாயகத்தின் ஒருமைப்பாடு கெடும் என அண்மையில் சீன இதழ்கள் தலையங்கங்கள் எழுதி ஆங்கிலத்தின் ஆதிக்கத்திற்கு எச்சரிக்கையாக அணைபோட்டுள்ளன.
நம்மைப்போல பிற இனங்களின் படையெடுப்புகளுக்குச் சீனர்களும் இரையானவர்களே. மங்கோலியரும், ஆங்கிலேயர்களும், ஜப்பானியரும், கொரியரும், சீனர்களின்மேல் பல நூற்றாண்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஆனால் ஒருபோதும் சீனம் தம் தாய்மொழியை இழந்துவிடவில்லை. மதிப்பைக் குறைத்துவிட அனுமதித்ததுமில்லை. தம் மொழிமேல் தாழ்வுமனப்பான்மை கொண்டதேயில்லை. மாறாகச் சீன பட எழுத்துகளே பல தென்கிழக்காசிய மொழிகளளின் எழுத்தாகியுள்ளன.
அன்று சமஸ்கிருதமும், பின்னர் ஆங்கிலமும், இன்று இந்தியும் தமிழ் உட்பட இந்திய மொழிகளின் மேல் ஆதிக்கம் செலுத்துவதை நாம் கண்டும் காணமல்தானே இருக்கிறோம்.
மொழியைக் கண்ணெனக் காப்பதினால் சீனா இன்று உலக வல்லரசாகும் உயரத்தில் வீற்றிருக்கிறது. தமிழ் உட்பட உலகமொழிகள் பலவும் இன்னும் சில ஆண்டுகளில் அழியக்கூடும் என்ற ஐநா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அழியாத மொழித் தகுதியில் சீனம் செம்மாந்து நிற்கிறது.
முன் பத்தியில் புலம்பிய தமிழ்ப்பெற்றோர் போன்றோர் திருந்தும்வரை தமிழை அழியவிடாமல் காப்பாற்றுவது சாத்தியமா?
.