தண்ணீர் பிரச்சினை: சீனாவிலும் இந்தியாவிலும்

 

குமுறும் நெஞ்சம்:13                  

 

மழையின்மையை மட்டும் காரணங்காட்டி தண்ணீர் பிரச்சினைக்குச்  சாக்குப்போக்குச் சொல்வது ஏமாற்று வேலையாகும், குளங்களை அழியவிட்டது, பெய்த மழை நீரைச் சேகரிக்காதது, பணத்துக்காக நிலத்தடி நீரை உறிஞ்சவிட்டது - ஒருபுறமிருக்க,   தண்ணீரை இடமாற்றம் செய்ததும் பஞ்சத்திற்கு முக்கிய காரணமென வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

வேளாண்மையிலிருந்து தண்ணீரைத் தொழில்துறைக்கு இடமாற்றம் செய்ததும், நெற்பயிரிலிருந்து பணப்பயிருக்கு இடமாற்றம் செய்ததும், கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு இடமாற்றம் செய்ததும் நீர் பஞ்சத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தின் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது நம் கவனத்திற்குரியது. பெரும்பாலும் இந்தியா முழுவதும் வறட்சி அல்லது வெள்ளம் என்ற நிலைதான் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.

சீனத்திலும் கடுமையான தண்ணீர் பிரச்சினை உண்டு. 80% தண்ணீர் தெற்குச் சீனாவில் இருக்க வட சீனா வறட்சியில் தவிக்கிறது. சீனாவின் 28,000 ஆறுகள்  கடந்த 25 ஆண்டுகளில் வறண்டு விட்டன. ஆனால் நீரின் தேவை உலகத்தின் மிகுதியான மக்கள் தொகை கொண்ட  இந்நாட்டில் ஆண்டுக்கு 670 பில்லியன் கன மீட்டராக உள்ளது. உலக மக்கள் தொகையில் 21% சீனர்கள். ஆனால் உலக அளவில் அவர்களிடம் உள்ள நன்னீர் 7% தான்.  நீர் மிகுதியாகத் தேவைப்படும் 85% நிலக்கரிச் சுரங்கங்கள் வறண்ட இடங்களில் அமைந்துள்ளன. நாட்டின் 20% நீர் நிலக்கரி சுரங்கங்களுக்கும், 70% நீர் விவசாயத்திற்கும் தேவைப்படுகிறது. சீன நகரங்களில் கிட்டத்தட்ட 90% நிலத்தடி நீர் மாசுபாட்டால் பாதிப்புக்குள்ளாகியது, அதே போல் சீனாவின் 70% ஆறுகள் மற்றும் ஏரிகள் மாசடைந்துவிட்டன.  சீனாவின் 600 நகரங்களில் 400 நகரங்களும், 32 பெருநகரங்களில் 30ம்  நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டன. தலைநகர் பீஜிங்கில் ஏற்பட்ட தண்ணிர் பிரச்சினையால் தலைநகரையே மாற்றலாமா என்ற சிந்தனை கூட எழுந்தது.

ஆனால் நான் சில மாதங்களுக்கு முன்பு கோடையில், பீஜிங்கில் தங்கியிருந்தபோது தண்ணீர் பிரச்சினையின் சுவடுகள் ஏதும் தெரியவில்லை. திரும்பிய பக்கமெங்கும் பொதுக்கழிப்பறைகளில் தாராளமாகத் தண்ணீரும் வெந்நீரும் கூட வந்துகொண்டிருந்தன. தண்ணீர்த் தட்டுப்பாட்டைத் தங்கும் விடுதியிலோ, உணவகங்களிலோ உணர முடியவில்லை. எனவே மேற்கண்ட பிரச்சினைகளுக்குச் சீனாவில் ஓரளவு தீர்வு ஏற்பட்டிருக்கிறது என்று என்னால் உணர முடிந்தது.

இந்தியா விடுதலை பெற்ற சில ஆண்டுகள் வரை ஒரு  சீனரின் வாழ்க்கைத்தரத்தைவிட ஓர் இந்தியரின் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருந்தது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் சீனாவின் பாய்ச்சலான வளர்ச்சி இந்தியாவை வெகுதூரம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. கணினி மென்பொருள், தொழில் வேளாண்மை ஆய்வு ஆகிய இரு துறைகள் தவிர தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்தின் எல்லாப் பிரிவுகளிலும் சீனா  நம்மைவிடப் பலமடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. எதிர்பாராப் பிரச்சினைகள் சீனாவுக்கு வந்தாலொழிய சீனாவை இந்தியா எட்டிப்பிடிக்க இன்னும் 25 ஆண்டுகள் ஆகுமென உலகப் பொருளாதார வல்லுநர்கள் கணிப்பதைப் படித்தபோது நெஞ்சம் குமுறுகிறது. நீக்கமற நிறைந்துள்ள ஊழல், அரசியலாரின் சுயநலம்,  சாதி மத பேதங்கள், சட்டப்பிரச்சினைகள் போன்றவற்றால் நாம் உலக வகுப்பின் இறுதி பெஞ்சுகளில் உட்கார்ந்திருக்கிறோம்.

இச்சூழலில் மேற்சொன்ன நம்மையொத்த தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காண சீனா எத்தகைய முயற்சியை மேற்கொண்டது என்பதை நாம் அறிவது நம் பிரச்சினைத் தீர்க்க உதவக்கூடும்.

2015 இல் கடும் தண்ணீர் பிரச்சினையால் துவண்டபோது சீனா தண்ணீருக்கான 10 அம்ச திட்டத்தை வெளியிட்டு நடைமுறைப்படுத்தியது.  காற்று, நிலம், நீர் ஆகிய மூன்றின் மீதும்  'மாசுபாடு நீக்கும் போர்' என முழங்கி, ஒவ்வொன்றிற்கும் 10 அம்ச திட்டத்தினை அரசு அறிவித்தது. அதில் ஒரு பகுதியாக நீரின்றி அமையாது வளர்ச்சி என்பதை உணர்ந்து நீர்jப் பாசனத்திற்கு மட்டும் 800 பில்லியன் யுவான்களை (ரூ8 இலட்சம் கோடி) செலவிட்டது, மேலும் 600 பில்லியன் யுவான்களை (ரூ 6 இலட்சம் கோடி) அடுத்த சில ஆண்டுகளின் நீர் மேலாண்மைக்கு வழிவகுக்கும் திட்டங்களுக்கு ஒதுக்கியது. நீர் ஆதாரங்கள் அனைத்தையும் காத்து மேம்படுத்தல், கழிவு நீரை மறுசுழற்சி செய்தல், மக்களுக்குக் குழாய்களில் வழங்கும் நீர்  முற்றிலும் சுத்தமான குடிநீராக இருக்க வழிவகை செய்தல், மஞ்சள் நதி உட்பட 7 பெருநதிகளின் தரத்தை 70% உயர்த்தல், தொழிற்சாலைகளால் மாசுபடும் நீரை கட்டுப்படுத்தி மாசை அனுமதித்த ஊழல் அதிகாரிகளின் மேல் மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்தல் முதலிய முக்கிய அம்சங்களில் சமரசத்திற்கு இடமின்றி தீவிரமாக நடவடிக்கை எடுத்துள்ளதால் சீனாவின் வளரச்சிக்குத் தண்ணீர் தட்டுப்பாடும், மாசும் ஒரு தடைக்கல்லாக இல்லை. வெறும் வாய்ச்சவடால் அறிக்கையாக இல்லாமல் அனைத்தையும் சீனா செயல்படுத்திக்காட்டி வருகிறது. உலக வங்கி சீனாவின் இந்த நீர் மேலாண்மைப் பாராட்டி  நற்சான்று வழங்கியுள்ளது.

உலகின் மாசுபட்ட நதிகளில் முதன்மையாக உள்ள  நம் புண்ணிய கங்கையைக்கூட சரிப்படுத்தமுடியாது, நாம் இன்னும் எத்தனை நாள்களுக்கு வாய்ச்சொல் வீரர்களாக இருக்கப்போகிறோம்? இந்தியாவில்  வறட்சியும் வெள்ளமும் தீரும் நாள் வருமென இன்னும் எத்தனை காலம் பொறுத்திருக்கப் போகிறோம்?

 

 

 

+