குமுறும் நெஞ்சம்:19
தம் தாய்நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். இதுவரை 1 கோடியே 75 இலட்சம் இந்தியர்கள் உலக நாடுகளில் குடியேறியுள்ளனர். 1990 இல் இருந்து பார்த்தால் இந்த வெளியேற்றம் 144% உயர்ந்துள்ளது.. முன்பெல்லாம் தமிழர்களும் மலையாளிகளும் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களாக அயல்நாடுகளுக்குப்படையெடுத்த நிலை மாறி இப்போது உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து செல்வோர் நம்மைப் பின்னுக்குத் தள்ளியுள்ளனர்..
27 ஆண்டுகட்கு முன்பு கத்தாரில் வெறும் 2738 பேர்களாக இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 2017 இல் 22 இலட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது 82,669% உயர்வு. வளைகுடா நாடுகளில் மட்டும் 50 இலட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். இந்தியர்களின் கூட்டம் அந்நாடுகளின் மக்கட்தொகையையே கூட்டியுள்ளது.
உலக நாடுகளிலிருந்த 27 கோடி 20 இலட்சம் மக்கள் இடப்பெயர்வு செய்துள்ளனர். இதில் இந்தியர்களின் பங்கு 6.5% ஆகும். இதில் நம்மைவிட மக்கட்தொகையில் மிகுந்துள்ள சீனர்கள் வெளிநாடுகளில் 1,10,00,000 பேர்களே உள்ளனர். 32 வெளிநாடுகளில் வாழும் அயல்நாடு வாழ் இந்தியர்களையும், இந்திய வம்சாவழியினர்களையும், (NRI & PIO) சேர்த்துக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 31.12.2018 புள்ளிவிவரப்படி 3 கோடியே 10 இலட்சம பேர்கள் அயல்நாட்டில் உள்ளனர். முக்கிய நாடுகளில் இவர்களின் எண்ணிக்கை வருமாறு: ஐக்கிய அமெரிக்கா- 44,20,420, சௌதி அரேபியா- 41,00,000, அமீரகம்- 31, 04,586, மலேசியா- 29,87,950, மியன்மார்- 20,08,991, பாகிஸ்தான்- 11,00,000, இங்கிலாந்து- 18,25,000, ஶ்ரீலங்கா- 16,14,000, தென்னாப்பிரிக்கா- 15,60,000, கனடா- 18,00,000
.கடந்த நூற்றாண்டுகளில் இங்கு பசி, பட்டினியால் வாடி தொழிலாளர்களாகச் சென்றவர்கள் ஒரு புறமிருக்க, தற்போது இங்குப் பிழைக்க வழி கிடைக்காமல், கல்விக்கூடங்களில் இடம் கிடைக்காமல், தங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல், சாதி, மத இன வேறுபாடுகளால் தாக்குண்டு இந்த நாட்டினை விட உயர்ந்த நிலையை அயலகத்தில் பெறலாமென்றே பலரும் கடும்முயற்சி மேற்கொண்டே வெளிநாட்டிற்குச் சென்றுள்ளனர். சென்றவர்கள் பலரும் திரும்ப விரும்புவதில்லை.
ஓரிடத்தை விட்டு மக்கள் நீங்குவது நம் பண்பாட்டில் கீழாகவே கருதப்பட்டது. ‘பதிஎழு அறியாப் பழங்குடி மக்கள்’ பூம்புகாரில் வாழ்ந்தனர் என்று சிலப்பதிகாரம் பாராட்டுகிறது. பதிஎழும் மக்கள் மிகுந்துள்ள நாடு இந்தியா என்பது நமக்குப் பெருமையா? உலக மக்களில் 96.5% பேர்கள் தங்கள் தாய் நாட்டிலேயே வாழும்போது இத்தனை இந்தியர்கள் இங்கு தம் பாதப்புழுதியைத் தட்டிவிட்டு இந்நாட்டினை நீங்கி உலகெங்கும் ஓடுகிறார்கள் என்றால் அந்த ஓட்டத்தைத் தடுத்த நிறுத்த அரசு ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? உலகிலேயே அந்நிய செலாவணியை மிகுதியாகப்பெறும் நாடு இந்தியா என்று பெருமைகொள்ளும் வண்ணம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் 7860,00,00,000 டாலர்களை நிரப்பிவருவதைக் கண்டு இவர்கள் அங்கேயே இருக்கட்டும் என்று மகிழ்ச்சியில் திளைப்பதா? இதுவே இந்தியாவின் மொத்த உள்நாடு உற்பத்தியை(GDP} 3% ஆக உயர்த்துகிறது என்று நிம்மதி அடைவதா?
இந்தியாவிற்கு வாருங்கள் என அயலவர்களுக்கு Incredible India (நம்ப முடியா இந்தியா) என்று அழைப்பு விடும் சுற்றுலாத்துறை விளம்பரத்தை நம்பி இங்கு வந்துள்ள வெளிநாட்டவர்கள் இணையத்தில் பதிவு செய்த துயரச்செய்திகள் நம் நாட்டினைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றன.. ஏழ்மை, கொசுத்தொல்லை, எங்கும் தூசி, தூய்மையற்ற ஓட்டைச் சாலைகள், பாதுகாப்பற்ற குடிநீர், கழிப்பிடக்கொடுமை, பிக்பாக்கெட்காரர்கள்- ஏமாற்றுக்காரர்கள்- பிச்சைக்காரர்கள் தொல்லை, வயிற்றைக்கெடுக்கும் உணவு, சுற்றுச்சூழலை மதிக்காமை முதலியவற்றை மறைத்து அரசு சுற்றுலா விளம்பரத்துறை விளம்பரம் செய்துள்ளது எனப் பலரும் புலம்பித் தீர்த்துள்ளனர்.
உலகிலேயே வெளிநாட்டிற்கு வெளியேறுவோர் மிகுந்துள்ள இந்த தேசம் தான் உலகிலேயே அயலக மக்கள் வந்து குடியேறும் நாடுகளின் பட்டியலில் கடைசி வரிசையில் உள்ளது. பல நாடுகளின் மக்கட்தொகையை இந்தியர்கள் தம் எண்ணிக்கையால் உயர்த்தும் நிலையில் இந்தியாவில் வந்து குடியேறியவர்கள் இந்தியாவின் மக்கட்தொகையை 1% மட்டுமே உயர்த்தியுள்ளனர். இப்படி குடியேறியவர்களில் பெரும்பாலானோர் வங்கதேச அகதிகள். இச்சூழலில் இந்தியாவில் இருக்கும் புலம்பெயர்ந்தோரை 2024 க்குள் திருப்பி அனுப்புவோம் என ஒரு கும்பல் கூச்சலிடுகிறது. இதனையே இந்தியர்கள் வாழும் நாடுகளின் அரசுகள் பதிலடியாகச் செயல்படுத்தினால் நம்மவர் நிலை என்னவாகும்?
‘இந்திய மக்கள் யாராயினும் உலகின் எந்த நாட்டிலும் குடியேறத் தடையில்லை! இலவசமாக விமானம் ஏறுங்கள்!’ என்று ஒரு திறந்த அழைப்பு விடுக்கப்படுமாயின் இந்த நாட்டில் எத்தனை பேர் மிஞ்சுவார்கள்? நாட்டைத் தீவிரமாக நேசித்து ஜெய் ஹிந்து முழக்கமிடும் மேல்தட்டு ஐஐடி, ஐபிஎம் அறிவுஜீவிகள்தான் முதலில் இந்த நாட்டைவிட்டு வெளியேறத் துடிப்பார்கள் என்பதே உண்மை.
தேசபக்தபூச்சுப் போட்டு எத்தனை தகிடுதத்தம் செய்தாலும் இந்தியாவின் எதார்த்தத்தை மறைத்து இங்குள்ளவர்களையும் வெளிநாட்டினரையும் ஏமாற்ற முடியாது. வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ள புள்ளிவிவரங்கள் உண்மைக்குச் சான்று பகரும்.
ஊழல் தடுப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வின்படி ஆசிய நாடுகளில் இந்தியாவே ஊழலில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் உள்ள 821 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட உலகில் முதல் 150 இடத்தில் இல்லை. மும்பை இந்தியத்தொழில்நுட்பக் கழகம் 152 வது இடத்தில் உள்ளது. சென்னை ஐஐடி க்கு 271வது இடம்! இதுவரை நோபல் பரிசு பெற்ற 9 இந்தியர்களில் 8 பேர்கள் அயல்நாட்டுப் பல்கலைக்கழங்களில் உயர்கல்வி கற்று அங்கேயே ஆய்வுநடத்தியே இத்தகுதிக்கு ஆளாயினர்.
தாம்சன் ராய்டர்ஸ் நிறுவனம் ஆய்வுசெய்து உலகிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு இந்தியாதான் என்ற துர்சான்றிதழை நமக்கு வழங்கியுள்ளது.
உலகளாவிய போட்டித்திறன் தரவரிசையில் 58வது இடத்திலிருந்து 68வது இடத்திற்கு இந்தியா தாவிவிட்டது. குடிமக்களின் சுகாதார வாழ்க்கை அடிப்படையில் நாம் பெற்ற தகுதி 141 நாடுகளில் 109 இடம். பணியாளர் பாலினப் பாகுபாடு அடிப்படையில் நமக்கு 128வது இடம்.
வேறு எதில் முதலிடம்? நிறைய உண்டு. ஒரு சில… சாலை விபத்து ஏற்படுத்துவதிலும் உயிரிழப்பு ஏற்படுத்துவதிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியே தெரிவித்துள்ளார். குழந்தைத்தொழிலாளர் மிகுந்துள்ள நாடு என்பதில் முதலிடம்; ஓர் ஆண்டிற்குள் குழந்தைகள் இறப்பதில் முதலிடம்; கேடுவிளைவிக்கும் கந்தக டை ஆக்சைடை காற்றில் கலப்பதில் முதலிடம்; புதிய காசநோயாளிகள் மிகுதியில் முதலிடம்; ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவோர் மிகுதியுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடம்; தேவையற்ற கைப்பேசி அழைப்புகளை விடுப்பதில் முதலிடம்; பல்வேறு காரணங்காட்டி இணையசேவையைத் தடைசெய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடம்; அதேநேரத்தில் ஆயுத இறக்குமதியிலும் முதலிடம்; இதனானோலே என்னவோ டாப்-10 பொருளாதார நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடம்; கூடுதலாக, 2027 ஆம் ஆண்டில் உலக மக்கட்தொகையில் முதலிடம் காத்திருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட நாட்டின் 1% மக்கள் நாட்டின் 73% சொத்தை உரிமையாக்கியுள்ளனர் என்பதே தணிப்பறியாத் துயரமாகும். இதனால் 29.8% மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிடும் தகுதிகளோடு இந்தியாவை ஒப்பிட்டுப்பார்த்தால் நம் சீரழிவு இன்னும் தெளிவாகப் புரியும்.
இந்தியாவின் இந்த அவலங்களுக்கு முடிவுகட்ட இந்தியாவின் அடிப்படை பிரச்சினைகளுக்குக் காரணமான சமத்துவமின்மைக்குச் சவக்குழி தோண்டியாகவேண்டும். இல்லையேல் இந்தியா சவக்குழிக்குள்தான் வாழும்.