இன்றைய இலண்டன் - ஒரு வேகப் பார்வை!

             இன்றைய இலண்டன் - ஒரு வேகப் பார்வை!                முனைவர்..ஜே.சுந்தர்

 

ஏறத்தாழ இரு நூற்றாண்டுகள் நம்மை அடிமைப்படுத்தியிருந்த நாட்டையும், அதன் மக்களையும், பலத்தையும் பார்வையிட  வேண்டுமென்ற என் நெடுநாள் கனவு மே மாதம் 7 ஆம் நாள்,2013 அன்று  நனவாகியது.

 

ஏழு மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் காண நான் கலந்துகொண்ட சுற்றுலாப் பயணத்தில், நான் கண்ட முதல் நகரம் இங்கிலாந்தின் தலைநகரான இலண்டன் நகரமாகும். 3 நாள்கள் மட்டுமே நான் அங்குத் தங்குவதற்கு எத்தனை எத்தனை  விசா கெடுபிடிகள். 10 விரல் ரேகைகள், கண் விழிகள், நம் முகத்தின் பல துல்லியங்கள் - இவை கோரும் ஒளிப்படங்கள்; இவற்றோடு நம் வங்கி கணக்குகள், சொத்து விவரம் இவற்றின் மூலப்படியையே ஒப்படைக்க வேண்டும். இப்படிப் பல, இன்னும் பல நிர்பந்தங்களை நிறைவு செய்தாக வேண்டும். ஏனெனில் அந்நாட்டிற்கான பாதுகாப்புப் பிரச்சினைகள், சட்டப்பிரச்சினைகள் அப்படி. ஆனால் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விசா எடுப்பது மிக எளிது. 26  ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல ஏதாவது ஒரு நாட்டிற்கான சென்கண் என்ற விசா எடுத்தால் போதும்.  இத்தாலி நாட்டிற்கான விசாவை நான் நேரில் செல்லவே அவசியமின்றி,விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து  கொடுத்து பயண ஏற்பாட்டாளர் வழி எடுத்தேன். 5 வேலை நாள்களுக்குள்  சிக்கலின்றி விசா வந்து சேர்ந்தது. ஆனால் பிரிட்டிஷ் விசா வருவதற்கு 15 நாள்களுக்கு மேலும் காத்திருக்க வேண்டியிருந்தது.

 

இரண்டரை நாள்கள் மட்டுமே இலண்டனில் தங்கிச்செல்வதற்கு இத்தனை சிரமப்பட்ட நான், இலண்டன் ஈத்ரூ விமான நிலையத்தில் போய் இறங்கியவுடன் இதன் தொடர்ச்சியாக வேறு என்னென்ன கெடுபிடிகளைச் சந்திக்கவேண்டியிருக்குமோ என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால்  அங்கு முற்றிலும்  எதிர்பாராத இதமான சூழலே நிலவியது. யாரிடமும் கேட்கத்தேவையற்ற குழப்பமில்லாத தெளிவான அறிவிப்புகள்-அப்படியும் தேவைப்பட்டால் விளக்கம் கூறுவதற்கு அங்குள்ள பணியாளர்கள் இன்முகத்துடன் பதிலளிக்கத் தயங்கவில்லை. விமான நிலைய உள் இரயில் பயணத்திற்குப்பின் ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டமில்லாக் குடியேற்ற(இமிகிரேஷன்) வரிசையில் நின்று, எங்கள் நிலை வந்தபின் அங்கிருந்த அதிகாரியான , இசுலாமிய உடையணிந்த பெண்மணி அழகிய ஆங்கிலத்தில் தம் வீட்டுக்கு வந்தவர் போல  நலம் விசாரித்து நானும் என் மனைவியும் செய்யவிருந்த ஐரோப்பியப் பயணத்தைக் கேட்டு, 'இரண்டாவது தேன்நிலவு அனுபவியுங்கள்' என வாழ்த்தி, கடவுச்சீட்டுத் தாளில் முத்திரை குத்தி விடையளித்தார். விமான நிலையத்தின் கடைப் பகுதியல் வாடகைக்கார்கள் என பெயர் பலகை குறிப்பிட்ட இடத்தில் ஒருவர் வாடகைக்காரில் எங்களை ஏற்றிவிட்டார். சிறிய காராயினும் 4 பெரிய பெட்டிகளை விழுங்கும் வண்ணம் அதன் உட்பகுதி அமைக்கப்பட்டிருந்தது. வெள்ளையரான ஓட்டுநரே 4 பெட்டிகளையும் சுமந்து வந்து உள்ளே வைத்துவிட்டுச் சரிபார்க்கச் சொன்னார். நாங்கள் செல்லவேண்டிய  வெம்ப்லி பகுதியில் உள்ள குவாலிட்டி ஓட்டல் முகவரியை எழுதிக்கொடுத்தவுடன் அரைமணிநேரத்தில் ஓட்டலில் எங்களை இறக்கிவிட்டுப் பெட்டிகளைத் தாமே சுமந்து வந்து நுழைவாயில் அடுக்கிவிட்டு மீட்டர் அறிவித்த தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு மீதி சிறு தொகையான சில்லறையையும் திருப்பித்தந்து தொகைக்குப் பற்றுச்சீட்டும் வழங்கினார். சென்னையிலிருந்து வந்த எங்களுக்கு இச்செயல்கள் வியப்பிலும் வியப்பாக இருந்ததைச் சொல்ல வேண்டியதில்லை.

 

ஏற்கனவே 2 இரவுகள் பயண ஏற்பாட்டுப்பணிகளில் சரியாகத் தூங்காமையாலும், அடுத்து பத்தரை மணிநேரப்பயணத்திற்குப்பின் ஏற்பட்ட களைப்பினாலும் உடல் சோர்ந்திருந்தாலும்  ஆர்வம் பொங்கும் குழந்தையின் துருதுருப்புடன் மனம் ஊரைச்சுற்றிப்பார்க்கவே துடித்தது.

 

அன்று மாலை ஓய்வெடுப்பதா அல்லது சுற்றுவதா என்ற குழப்பத்தில் இருந்தபோது, எங்கள் நீண்ட நாள்  நண்பர் விக்கி(விக்னேஸ்வரன்) தொடர்பு கொண்டு இன்னும் ஒரு மணிநேரத்தில் தம் மனைவியுடன் எங்களைச் சந்திக்கவந்து, பின் இலண்டனைச் சுற்றிக்காட்டவும், இரவு சேரந்து உண்ணவும்  அன்பு அழைப்பு விடுத்தார். களைப்பு காணாமல் போனது.   எங்கள் உள்ளம் கவர்ந்த  குடும்ப நண்பர் அவர். அவருடைய தந்தை திரு. திருநாவுக்கரசு அவர்கள் யாழ்ப்பாணத்தில் பெரிய சுருட்டுத் தொழிலகம் வைத்திருந்தபோது, இராணுவத்தால் தாக்கப்பட்டு முற்றிலும் சீரழிக்கப்பட்ட நிலையில் தம் உடைமைகளுடனும் குடும்பத்தினருடனும் தமிழகம் வந்தார். சென்னை அண்ணாநகரில் தங்கியிருந்தபோது அவரின் உயர்ந்த பண்புகளையும், கொடை உள்ளத்தையும் அறிய முடிந்தது. மாற்றுத்திறனாளியாகக் கால்கள் ஊனமுற்ற நிலையிலும், சர்க்கரை நோயிலும் சக்கர வண்டியில் பயணித்தே பலருக்கும் உதவிய அருளாளர். தம்மைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் தினமணி இதழின் வாயிலாகச் சக்கர வண்டிகளை நன்கொடையாகப் பலமுறை வழங்கியுள்ளார். அவர் கொழும்பு திரும்ப முடிவு செய்த நேரத்தில் என் மகளின் திருமண தேதி முடிவான நிலையில் எங்கள் மேல் கொண்ட அன்பிற்காக,  தம் பயணத்தைத் தள்ளிப்போட்டு, திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்வித்தார். கொழும்பு திரும்பியவுடன் உடல் நலம் பாதிப்பட்ட நிலையில் மருத்துவமனையிலிருந்து என்னிடம் பேசி எல்லோரையும் நலம் விசாரித்தார். அவர் பேசிய இரண்டாம் நாள் அவர் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அவருடைய முதல் மகனான விக்கி,   சென்னை இலயோலா கல்லூரியில் தமிழிலக்கியம்  படித்துவிட்டு இலண்டன் பிபிசி வானொலியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகப் பணியில் சேர்ந்தார். வேறு வானொலிகளிலும் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்று இப்போது வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய துணைவியார் கலா அவர்கள் பெட்ரோல் பங்க் ஒன்றைத் திறம்பட  நிர்வகித்து  வருகிறார்.

 

இருவரும்  வார்செஷ்டர்ஷயர், என்ற 130 மைல் தொலைவிலிருந்த ஊரிலிருந்து நெரிசல் நேரத்தில் ஏறத்தாழ இரண்டரை மணிநேரம் பயணித்து அன்று  மாலை 7 மணியளவில் எங்கள் அறைக்கு வந்து எங்களை அழைத்துச் சென்றனர். கோடைகாலத்தில் இலண்டனில் இரவு 9 மணிக்குப் பிறகு தான் இருட்டுகிறது என்பதால், வெளிச்சத்திலேயே அவர் காரில் நாங்கள் இருந்த வெம்ப்லி என்ற பகுதியைச் சுற்றிப் பார்த்தோம். இந்தியர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் இஃது ஒன்றாகும். ஏறத்தாழ 300 மொழிகள் பேசுகிற  82 இலட்சம் மக்கள் வாழும் இலண்டன்  மாநகரில் மட்டும் 5 இலட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் தமிழர்கள் ஒரு இலட்சம் இருக்கக்கூடும். அவர்களில் பெரும்பாலோர் ஈழத்தமிழர்களே.    தென்னிந்திய உணவகங்கள் பல கண்ணில் பட்டன. ஒரு தரமான தமிழக உணவகத்தில் இரவு சுவையான சுற்றுண்டி உண்டு இரவு 10 மணியளவில்  தம்பதியினர் எங்களை விடுதியில் விட்டு விட்டு, மறுநாள் மாலை சுற்றுலா நிகழ்வில் கலந்துகொள்ளும் வரை நாங்கள் அவசியம் பார்க்கவேண்டிய இடங்களைப் பற்றிய விவரங்களை விளக்கிவிட்டு, தாங்கள் நேரில் மீண்டும் வரமுடியாமைக்கு வருந்தி எங்கள் போக்குவரத்துக்கு உதவியாக, நாங்கள் மறுத்தும் கேளாது, 50 பவுண்டுகளை வலுக்கட்டாயமாக எங்களிடம் திணித்துப் பிரியா   விடைபெற்றனர்.

 

மறுநாள் காலை இலண்டனின் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ள எங்களுக்கு உறுதுணை புரியும் என அறிவுறுத்தப்பட்ட ஆக்ஸ்போர்டு வீதிக்குச் செல்லத் திட்டமிட்டோம். இலண்டனின் போக்குவரத்துக்கு ஆணிவேரான டியூப் இரயிலில் பலமுறை பயணிக்கவும் முடிவு செய்து ஒரு நாள் சலுகைக்கட்டணச்சீட்டை (8 பவுண்டு) வாங்கினோம். இந்தச்சீட்டில் நாள்முழுவதும் டியூப் இரயில் என அழைக்கடும் சுரங்க  இரயிலில் மட்டுமன்றி நகரெங்கும் சிவந்த வண்ணத்துடன் செம்மாந்து செல்லும் மாடிப் பேருந்திலும் பயணம் செய்யலாம். இலண்டன் நகரின் முதல் அற்புதம் அதன் சுரங்க இரயில் போக்குவரத்துத்திட்டம் தான். உலகிலேயே முதல்முறையாக 150 ஆண்டுகளுக்கு முன் (09.01.1863) தொடங்கப்பட்டு இன்று இலண்டன் நகரில் 270 இரயில் நிலையங்களுடன், 11 வழித்தடங்களில் 402 கி.மீ தூரத்திற்கு இருப்புப்பாதை அமைத்து 45% பூமிக்கு அடியிலும் செல்கின்றன இந்தக் 'குழாய் இரயில்கள்' . இவற்றின் 11வழித்தடங்களுக்கும் 11 வகை வண்ணங்கள் அமைத்து பெயர்சூட்டி வரைபடம் போட்டு வழிகாட்டுகின்றனர். காலை முதல் இரவு 1 மணிவரை ஓயாமல் ஓடும் டியூப் இரயில்களின் நேரந்தவறாமை அற்புதமானதாகும். மிக மிக அரிதாக 15 நிமிடத்திற்குமேல் தாமதமாக நேர்ந்தால் பயணிகளுக்குக் கட்டணத்தைத் திருப்பித் தருகிறார்கள். இரயில் விபத்துகளும் மிகக்குறைவே. 19.03.2013 தேதியிட்ட  ஓர் அறிவிப்பில் 'ஒருவர் தண்டவாளத்தில விழுந்து இறந்த நிகழ்வுக்குப்பின், கடந்த 310 நாள்களாக ஒரு விபத்தும் நிகழவில்லை.' எனக்குறிக்கப்பட்டிருந்தது. இரயில் நிலையங்களில் வண்டி நின்றவுடன் கதவு திறக்கப்பட்டு, சில விநாடிகளில் மூடும் நிலையிலும்,நெரிசல் நேரத்தில் சிலர் நின்று கொண்டு பயணம் செய்தாலும் ஏறுவோரும் இறங்குவோரும் விட்டுக்கொடுத்தபடி பயணிக்கும் நாகரிக நிலையைக் காணமுடிந்தது. எங்கும் பேச்சு சத்தம் இல்லை. புத்தகம் படித்தல்,  காதில் கருவி பொருத்தி இசைகேட்டல், அல்லது ஐ-பேசி (இரயிலில் இலவச கம்பி இல்லா இணைய வசதி உண்டு) பயன்பாட்டில் மூழ்கல் என்று அவரவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

இரு தடங்களில் மாறிப்பயணித்து இலண்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு வீதியை அடைந்தோம். ஐரோப்பாவிலேயே பரபரப்பானதாகக் கருதப்படும் இவ்வீதி, மேற்கு இலண்டனின் கடைசியில் அமைந்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டிலேயே இவ்வீதி இங்கு இருந்துள்ளது என்ற வரலாற்று சிறப்புடையது. 2.4 கி.மீ தூரம் நீண்டுள்ள இவ்வீதியில் ஏறத்தாழ 300 கடைகள் அமைந்துள்ளன.  இவ்வீதியில் பாதிதூரம், இருபுறமும் நடந்து பார்த்தோம். கார்களை விடச் சிவப்பு வண்ண மாடிப்பேருந்துகள் சாலையில் பெரும்பகுதியை அடைத்துக்கொண்டிருந்தன.  இதுவரை கண்டறியா வகையில் புதுப்புது ஆடைகளை உடுத்திய பொம்மைகள் பலவும் துணிக்கடைகளின் கண்ணாடி கூண்டுகளுக்குள் - உலகிற்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்பது போல- பல கோணங்களில்- பெரும்பாலும் அரைநிர்வாண உடைகளை உடுத்தியபடி, நடந்துசெல்வோரை வரவேற்றுக்கொண்டிருந்தன. எல்லாவகையினரையும் ஈர்க்கும் ஆடைகள் அங்கு இருந்தாலும் பெண்களைச் சுண்டியிழுக்கும் வண்ணம் காட்சியளிப்பவையே மிகுதி. இவை தவிர, சங்கிலித்தொடர் பேரங்காடிகள், உணவகங்கள், வங்கிகள், உலகநாடுகளின் பல முக்கிய நிறுவனக்கிளைகள், பழக்கடைகள் இப்படிப் பலதரப்பட்டவை அணிவகுக்கும் இச்சாலையின் நடைபாதையில் ஏராளமானோர் நடந்துசென்றாலும் நடைபாதையின் அகலமும், நடைபாதை விதிகளை மீறாது கடைப்பிடிக்கும் நடந்து செல்வோரின் நாகரிகப்போக்கும் நடக்கும் அனுபவத்தை இனிமையாக்கின. நம்மூர் வேர்கடலையை  வறுத்து ஒரு சிறிய கடையில் ஒருவர் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். விலை ஒரு கப் 2 பவுண்டு. நம்மூரில் தெருக்களில் மலிவாக விற்கும் சணல் பைகளை ஓரிடத்தில் பையொன்று 3.99 பவுண்டு என்று விற்றுக்கொண்டிருந்தார்கள்.(1 பவுண்டு- ரூ90) இது 50% தள்ளுபடி விலையாம்! எந்தப் பொருளும் நம் மதிப்பில் வாங்கும்படியாக இல்லை. நாம் வேடிக்கை பார்க்க மட்டுமே தகுதிபடைத்தவை.

 

ஆக்ஸ்போர்டு வீதியில் காலைப்பொழுதைக் கழித்துவிட்டு, அன்று மாலையும் மறுநாள் முழுவதும் இலண்டனின் முக்கிய இடங்களைப் சுற்றுலாப் பயணக்குழுவுடன் பார்வையிட்டோம். 'இலண்டன் ஐ' என்ற பேருருவச் சக்கரத்தில் பொருத்தப்பட்ட பல கூண்டுகளில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் பயணித்து இலண்டன் நகரின் முழுத்தோற்றத்தையும் பல்வேறு உயரங்களிலிருந்தும் பார்க்கும்படி அமைத்துள்ளது அருமையான உத்தியாகும். சக்கரம் மிக மெதுவாக நகரும்; நம் கூண்டு கொஞ்சம் கொஞ்சமாக மேலேறும்; உச்சிக்கு வந்து, பின் மெதுவாகக் கீழே வரும். எங்கள் குழுவிலுள்ள 18 பேரும் ஒரே கூண்டில் நுழைந்து ஏறத்தாழ முக்கால் மணிநேரம் நகரைப் பல கோணங்களில் வலம் வந்தது நிறைவான அனுபவமாக அமைந்தது. இதில் நுழைவதற்கு முன் முப்பரிமாணத் தொழில்நுட்பத்துடன் இலண்டன் நகரம் பற்றிய குறும்படத்தைத் திரையிட்டுக்காட்டுகின்றனர். முக்கிய காட்சிகளில் நம் உடலைக்குலுக்கியும்,  நீர்த்திவலைகளைத் தூவியும், பார்ப்போரைப் புல்லரிக்கவைத்தது புதிய அனுபவம்!

 

மறுநாள் இலண்டன் டவர், பக்கிங்காம் மாளிகை, டிராபால்கர் சதுக்கம், வெஸ்ட்மினிஸ்டர் மாளிகைப்பகுதி இவற்றை உள்ளே நுழைய வாய்ப்பின்றிப் பக்கத்திலிருந்தே பார்வையிட்டோம். எல்லாம் அருகருகே உள்ள இடங்களே. திரைப்படங்களில் பார்த்ததிலும், நூல்களில் படித்ததிலும் இவை பற்றி நமக்கு ஏற்பட்ட  தோற்றப்பொலிவும், பிரும்மாண்டமும் ஏனோ நேரில் தெரியவில்லை. இவையும் பெரும்பாலம் நகரின் எல்லாக்கட்டடங்களும் பழைய தோற்றத்துடன் பராமரிக்கப்படுகின்றன.    வெள்ளையடிக்கப்படாமல் ஏன் இப்படி அழுக்குத்தோற்றத்துடன் வைத்திருக்கிறார்கள் எனக் கேட்கத்தோன்றும் அமைப்புடன் உள்ள கட்டடங்கள் நிறைந்த வீதிகள்; வீடுகள் கூட அப்படித்தான். எங்குப் பார்த்தாலும் இப்பபடியொரு பழைமை வெறியுடன் ஆங்கிலேயர்கள் நகரின் பெரும்பகுதியைப் பேணுகிறார்கள். தூரத்தோற்றம் தான் பழைமையே தவிர, நெருங்கிப்பார்த்தால்  தூய்மையாக, சீராக அனைத்தும் காணப்படுகின்றன. உள்ளே நுழைந்தால் தேவையான வசதிகளுக்கும், நவீன சாதனங்களுக்கும் குறைவில்லை. 

 

 

நாங்கள் உள்ளே நுழைந்து பார்வையிட்ட இரண்டு இடங்கள் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று தேம்ஸ் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள உலக மரபு சின்னமாகவுள்ள டவர்  ஆப் இலண்டன் வளாகம். கி.பி 1066 இல் நார்மன் இனத்தினர் இங்கிலாந்தை வென்றதன் அடையாளமாக அமைக்கப்பட்டுத் தொடர்ந்து பல வரலாற்று நிகழ்வுகளின் இருப்பிடமாக அமைந்து, மாறி வந்த பல அரசுகளின் தேவைக்கேற்ப, கோட்டையாக, அரசின் காசுகள் தயாரிக்கும் இடமாக, நிதிச்சாலையாக, பதிவேடுகள் காப்பகமாக, பாசறையாக , அரச மாளிகையாக மட்டுமன்றி,  புகழ்பெற்ற சிறைச்சாலையாகவும் இயங்கிய இடம். இங்கு அரசி முதலாம்  எலிசபெத் கூட ஒருமுறை சிறைவைக்கப்பட்டிருக்கிறார்.  14 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இங்கிருந்து தான், வெஸ்ட்மினிஸ்டர் அபே வரை அரச ஊர்வலம் சென்று அரசரின் முடிசூட்டு விழா நடைபெறுமாம். இங்கிலாந்தின் ஆயிரம் ஆண்டு வரலாற்றை உள்ளடக்கியுள்ள இவ்விடத்தை முழுவதும் சுற்றிப்பார்க்க ஒரு நாளைக்கு மேலாகும். எங்களுக்கு அளிக்கப்பட்டதோ  இரண்டு மணிநேரமே. எனவே அங்கு முக்கியமாகக் கருதப்பட்ட ,  அரசர்- அரசிகளின் அணிகளும், மணி             முடிகளும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிப்பார்க்க முடிவு செய்தோம். சூரியன் மறையாத அளவு வையமெங்கும் தம் ஆட்சியைப் பரப்பிய பிரிட்டிஷ் பேரரசின் செல்வச்செழிப்பின் எச்சங்களை இவ்விடத்தில் காண முடிந்தது. தங்கத்தினால் செய்யப்பட்ட தாம்பாளங்கள், தட்டுகள், பாத்திரங்கள், செங்கோல்கள், ஒளிவீசும் வைரங்கள் பதித்த மோதிரங்கள்....இப்படித் தன் நாட்டில் செய்யப்பட்டதும், தான் அடிமைப்படுத்திய பிறநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டதுமான அரியவை பலவும் அங்கு அணிவகுத்திருந்தன. ஒருபுறம், நகரும் தரையில் பார்வையாளர்களை நிறுத்தி மங்கிய ஒளியில் உலகெங்கும் கைப்பற்றிச்சேர்த்த வைரங்களைக் காட்சிப்படுத்தினார்கள். அங்கு  நம் நாட்டின் பெருமைக்குரிய கோகினூர் வைரத்தைத் தேடினோம்.  பளிச்சென கோகினூர் வைரம் 105.6 மெட்ரிக் காரட் அளவில், 21.6 கிராம் எடையில் கண்ணைப் பறித்தது. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் கொல்லூர் சுரங்கத்தில் தோண்டியெடுக்கப்பட்ட இந்த வைரம் பல ஆட்சியாளர்களின் கைகளுக்கு மாறி விக்டோரியா பேரரசி இந்தியாவின் அரசியாக 1877- இல் முடிசூட்டிக்கொண்டபோது இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் அரசி 1997- இல் இந்தியா வந்தபோது இந்த அரிய வைரத்தைத் திருப்பித் தரும்படி பல இந்தியர்கள் கோரிக்கை விடுத்தனர். அரசியிடமிருந்து எதிரொலி ஏதுமில்லை. அண்மையில், 21.02.2013 அன்று பிரிட்டிஷ் பிரதமர் இந்தியா வந்திருந்தபோது மீண்டும் இதே கோரிக்கை வைக்கப்பட்டபோது அவருடைய தெளிவான பதில் இது தான்: '' இதை மீண்டும் தரும்படி கேட்பது உங்களுக்கு உகந்ததல்ல. நியாயமுமல்ல.திருப்பித்தரவியலாது!'' இப்படி ஒவ்வொரு நாட்டினரும் திருப்பிக் கேட்டால் அந்த அருங்காட்சியகம் வெறும்காட்சியகமாகிவிடுமென ஆங்கில ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர் போலும்.

 

அன்று மாலை இலண்டன் நகரில் கண்டே ஆகவேண்டிய இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் மேடம் டுசே மெழுகு பொருட்காட்சிக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தும், ஒழுங்குபடுத்திய முறையில் வரிசைப்படி தள்ளுமுள்ளுவிற்கு இடமின்றி உள்ளே விட்டுக்கொண்டிருந்தனர். உலகெங்கும் உள்ள தலைவர்கள், பெருமக்கள், திரைப்படத்துறையினர் முதலியோரின் உருவச்சிலைகள்  கூடங்களில் பார்வையிட வந்த மக்களொடு மக்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாங்கு மிக இயல்பாக அமைந்திருந்தது. பிரான்சின், ஸ்டிராஸ்பர்கில் 1761- இல் பிறந்த மரிய டுசே தம் தாயார் பணிசெய்த டாக்டர் பிலிப் டுயூரிடஸ் என்பவரிடமிருந்து இந்த அரிய மெழுகு சிற்பக் கலையைக்கற்று பின்பு தம் கணவருடன் இலண்டனில் குடியேறி பல இடுக்கண்களைக் கடந்து இத்தகைய காட்சியகத்தை இலண்டன் பேக்கர் தெருவில் அமைத்தார். 1777 இல் அவர் முதலில் செய்த பிரஞ்சு எழுத்தாளர் வால்டேரின் உருவம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. மேடம் டுசேயின்  பேரனின் முயற்சியால் இப்போதுள்ள இடத்திற்கு இக்காட்சியகம் மாறி 2007 முதல் மெர்லின் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் நிர்வாகத்தில்  உலகில் 12 பெருநகரங்களில் கிளைவிரித்து இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான சிலைகளில் மிகச்சிலவே தத்ரூபமாக அமைந்துள்ளன. மேடம் டுசே வடித்த நிலைகள் பலவும் இப்பொழுது இல்லை. பல புதிய மெழுகுச்சிற்பிகளை வைத்து வடிக்கச்செய்த சிலைகளில் எதார்த்தம் இல்லை என்றே என்னைப்போல் பலரும் உணர்ந்தனர். சிறப்பாக நம் நாட்டு காந்தி , நடிகை ஐஸ்வர்யா ராய் சிலைகளில் நிஜமில்லை. எனினும் வேடிக்கையான முறையில் அமைக்கப்பட்ட சில சிலைகளும் அதன் அருகே நின்று பார்வையாளர்கள் எந்தக் கட்டுப்பாடுமின்றிப் படமெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் சுதந்திரமும் பாராட்டிற்குரியன. அமெரிக்க அதிபர் ஒபாமா தம் அலுவலக மேசையருகே கைகட்டி நின்று கொண்டிருக்க அவர் அமரும் நாற்காலியில் பார்வையாளர்கள் அமர்ந்து படுமெடுத்துக்கொண்டிருந்தனர்.  இட்லரின் முகத்தில் ஓங்கிக் குத்தும் பாவனையில் சிலர் படமெடுத்துக்கொண்டிருந்தனர். மெழுகுக்காட்சியகத்தில் பயமுறுத்தும் சிலைகள் அடங்கிய அறையொன்று சிறுவர்களை, ஏன் சில பெரியோர்களையும் கவர்ந்திழுத்தது. கடைசியாக திறந்த  பெட்டிகளில், பெட்டிக்கு   இருவர் உட்காரும் நிலையில் அமைந்துள்ள ஒரு வேக இரயில் பயணம் காட்சியகத்தின் சில வேடிகையான வித்தியாசமான சிற்பங்கள் அமைந்துள்ள பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் இவற்றைக்கண்டு உணர்வுகளை வெளிப்படுத்தும் போது நம்மை நிழற்படம் எடுக்கிறார்கள். நாம் விரும்பினால் அவற்றை நமக்கு விற்கிறார்கள். ஆங்கிலேயர்கள் எவ்வளவு திறமையான வணிகர்கள் என்பது புரிந்தது.

 

இலண்டன் நகர வீதிகளில் அன்று மாலை பேருந்தில் சுற்றி வந்தபோது,  அங்கு நான் கண்ட சைக்கிள்களின் பெருக்கமே என் கவனத்தை ஈர்த்தது. நாளுக்கு நாள் இந்திய நகரங்களில் சைக்கிள்களின் பயன்பாடு குறைந்துவரும் நிலையில் நாகரிக நகரமான இலண்டனின் முக்கிய சாலைகளெங்கும் ஆண்களும், பெண்களும். இளைஞர்களும், நாகரிக உடையணிந்த செல்வர்களும், சராசரியினரும் சைக்கிள்களின் மிகுதியாகப் பயணம் செய்வது மகிழ்ச்சியும், வியப்புமளித்தது. எளிதாகவும், விரைவாகவும், நெரிசல் நேரத்தில் செல்லும் போக்குவத்துச்சாதனமாக மக்கள் அங்கு மிதிவண்டியைக் கருதுகின்றனர். சைக்கிள்களுக்கென்றே 'சைக்கிள் சூப்பர் ஹைவே' என்ற பெயரில் தனிப்பாதை முக்கிய வீதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2000- ஆம் ஆண்டிலிருந்து 2012- இல் மிதிவண்டி பயண்படுத்துவோர் தொகை அங்கு இருமடங்காகியுள்ளதாம். ஒரு நாளைக்கு 5,40,000 சைக்கிள்கள் வீதிகளில் ஓடுகின்றன. நெரிசல் நேர வாகனங்களில் சைக்கிளின் பங்கு 24% என்கின்றனர். பார்க்லே வங்கி அங்கு ஒரு கவர்ச்சிகரமான வாடகை மிதிவண்டித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாடகை மிதிவண்டியை ஒரு நிறுத்தத்தில்  பெற்றுக்கொண்டு இன்னொரு நிறுத்தத்தில் விட்டுவிட்டு அதற்குரிய கட்டணத்தை மின்னணு அட்டைமுறையில் செலுத்தலாம். நகரெங்கும் பலவிடங்களில் மிதிவணடி நிறுத்தங்கள் உள்ளன. ஓரிடத்தில் மிதிவண்டியைப் பெற்றுக்கொண்டு இன்னொரு இடத்தில் விட்டுச்செல்லலாம். மலிவான வாடகை. தொல்லையில்லாப் பயணம். அரசு, சூழலைப்பாதுகாக்கவும், நெரிசலைக்குறைக்கவும், மக்கள் உடல்நலத்தைப் பேணவும் மிதிவண்டிப் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

 

இதன்பின் நான் ஐரோப்பாவின் வேறு பல நகரங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனினும்  இலண்டன் நகர போக்குவரத்து வசதிகளும், தூய்மையான சுற்றுச் சூழலும், தம் பணியைப்பார்த்துக்கொண்டு செல்வதும், உதவி கேட்டால் மகிழ்வுடன் வந்து உதவுவதுமான மக்களின் போக்கும் இலண்டன் நகரையே என் தேர்வின் முதன்மையாக்கியது.  உலகின் நாகரிக நகரமென  அழைக்கப்படுவது இந்நகருக்குச் சாலப்பொருத்தமே.