தமிழர் கற்க வேண்டிய பஞ்சாபியப் பாடங்கள்

                                            தமிழர் கற்க வேண்டிய பஞ்சாபியப் பாடங்கள்    -            முனைவர் இ.ஜே.சுந்தர்

 

                                            

          1.கவர்ந்திழுக்கும்  பாட்டியாலா, பக்ராநங்கல்

குளிர்ப்பெட்டியில் போட்ட பொருளாய் மாற்றமின்றி, வெளியுலக வெளிச்சமின்றி, நம்மை நாமே வியந்து பார்த்துக்கொண்டு, தற்புகழ்ச்சியில் உறைந்துபோய் வாழ்வது நம்மை உயர்த்துமா?. நமக்கு வெளியே வீசும் சூறாவளியையும், தென்றலையும், அனலையும், பனியையும் நாம் பட்டுணர வேண்டாமா?

 

தமிழகத்திற்கு வெளியே உள்ள இடங்களையும், மக்களையும் கண்டுணர்வது நம் நிலையைப் பரிசீலிக்கவும், மேம்படுத்தவும் பெருந்துணை புரிவதாகும். இந்நோக்கோடு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் கடந்த சில ஆண்டுகளாகக் கண்டறிந்து வரும் என் திட்டத்தில் இந்த மே மாதம் இதுவரை பார்க்கத் தவறிய பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்று வந்தேன்.

 

சிந்துவெளி நாகரிகம் சிறந்திருந்த இந்தப் பஞ்சாபின் ஒரு பகுதி இன்று பாகிஸ்தானுக்குள் அடங்கியுள்ளது. எஞ்சிய இந்தியப் பஞ்சாப் மாநிலம் தமிழகத்தின் நிலப்பரப்பிலும், மக்கட்தொகையிலும் 39% மட்டுமே உள்ளது. மக்கட்தொகையில் இந்தியாவில் 15வது இடத்தில்  இருந்தாலும் இந்தியாவின்  20% கோதுமையும், 9% அரிசியும், 14 % பருத்தியும் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன. இதற்குக் காரணம் சிந்து நதியின் கிளை நதிகளாகிய ரவி, பியாஸ்,சட்லெஜ் முதலியன பாய்வதால் 85% நிலம் பயிர்த்தொழிலுக்கு ஏற்றதாகி, உலகத்தின் செழிப்பான பூமிகளுள் ஒன்றாகப் பஞ்சாப் விளங்குகிறது.

 

வளமான பூமி வல்லமையான மனிதர்களையும் உருவாக்குகிறது. வாட்டசாட்டமான உடல் அமைப்பும்,  புன்னகை தவழும் முகமும் உள்ள மனிதர்கள் பலரை அங்கு காணமுடிகிறது. கி.மு326இல் கிரேக்க மாவீரர் அலெக்சாண்டர் சிந்து நதியைக்கடந்து பல மன்னர்களை வென்று பஞ்சாபில் நுழைந்தபோது,     வீரத்துடன் எதிர்த்துப் போரிட்டவர் பஞ்சாபிய குறுநில மன்னர் புருசோத்தமன். பெரும் படைகொண்டு பேரரசர்கள் பலரையும் புறமுதுகிடச்செய்த அலெக்சாண்டருக்குப் புருசோத்தமனை வெல்வது எளிதாக இல்லை.  எனினும் இறுதியில் புருசோத்தமனை வென்று  கைது செய்த நிலையில்   'என்னை நீ ஒரு அரசனைப்போல நடத்த வேண்டும். ' என்று தலைவணங்காது உரிமைக்குரல் எழுப்பிய தன்மானத்தையும் இறுதி வரை பணியாது போரிட்ட அஞ்சாமையையும் கண்டு வியந்தார் அலெக்சாண்டர்.  தாம் வென்ற பஞ்சாபோடு வேறு இடங்களையும் அவருக்குப் வீரப்பரிசாக அளித்து தம் ஆளுநராகச் சிறப்பித்தார்.

 

பஞ்சாபியரின் இந்த வீரப்பரம்பரை இன்றும் தொடர்கிறது. காவல்துறையின் சாதனை வீராங்கணையும் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண் பேடி,அஞ்சா நெஞ்சம் கொண்ட பத்திரிகையாளர்கள் குஷ்வந் சிங், குல்தீப் நய்யர், அருண் ஷோரி, அருண் பூரி, விண்வெளியில் வீரசாதனை நிகழ்த்திய கல்பனா சாவ்லா, ராகேஷ் சர்மா,ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடலில் முதல் தங்கம் வென்ற அபிநவ் பிந்ரா முதலிய பஞ்சாபியர் பட்டியல் நீண்டதாகும். இந்திய விடுதலைப்போரிலும், இராணுவத்திலும் அவர்கள் பங்களிப்பு பற்றிக் கூறத் தனிக்கட்டுரையே எழுத வேண்டியிருக்கும்.

 

இன்று பஞ்சாபியரில் 70% மக்கள் கடுமையாக உழைத்து உழுதுண்டு வாழ்வோரே. இந்தியாவில் உள்ள டிராக்டர்களில் மூன்றில் ஒன்று இங்கு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 100 கோடிமதிப்புள்ள பால்பெருட்கள் தயாரிக்கப்பட்டு பசுமைப் புரட்சியில் மட்டுமன்றி வெண்மைப்  புரட்சியிலும் பஞ்சாப் உச்சத்தில் உள்ளது. மின்சாரம் இல்லாத ஒரு குக்கிராமும் இல்லை என்ற நிலை உள்ளதால் மின்நுகர்விலும் முதலிடம் வகிக்கிறது. 54,836 கி.மீ சீரான அழகிய சாலைகள் கிராமங்களிலும், நகரங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. எங்கிருந்தும் எங்கும் மாநிலத்திற்குள்  சில  மணிநேரத்திற்குள் செல்லுமளவுக்குத் தடங்கலற்ற கறும்பட்டுச்      சாலைகள் எல்லா இடங்களையும் இணைக்கின்றன.

 

இந்திய மத்திய தொகுப்பிற்குப் பஞ்சாபின் மகத்தான பங்களிப்புகளாக 60-70% கோதுமையும், 40-50% அரிசியும் வழங்குமளவுக்கு வேளாண்மையில் செழித்திருந்தாலும், தொழில்துறையையும் பஞ்சாபியர் விட்டுவைக்கவில்லை. இந்தியாவின் 75% மிதிவண்டிகள், தையல் இயந்திரங்கள், விளையாட்டுச்சாதனங்கள்  பஞ்சாபின் தயாரிப்புகளாகும். எந்திரபாகங்கள், மின்சார சாதனங்கள், வாகன உதிரிகள் முதலியன தயாரிக்க 600 பெருந்தொழிற்சாலைகளும், 2.04இலட்சம் சிறு நடுத்தரத்தொழிற்சாலைகளும் உள்ளன.

 

இந்தியாவின் தொழில்துறையில் பஞ்சாபியரின் பங்களிப்பு நம் சிந்தனைக்குரியது. ஏர்டெல் தலைவர் சுனில் பாரதி மிட்டல், ஹீரோ குழும நிறுவனர் பிரிஜ் மோகன் லால் முன்ஜால், இந்திய மென்பொருள் தந்தை எப்.சி.கோக்லி, ஓபராய் ஓட்டல் தலைவர் மோகன் சிங் ஓபராய், சன் மைக்ரோ சிஸ்டம் இணை நிறுவனர் வினோத் கஸ்லா, ஹாட்மெயில் இணை நிறுவனர் சபீர் பாடியா, ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் ஆகியோர் பஞ்சாபிய தொழிலதிபர்களில் சிலராவர்.

 

பெருமைக்குரிய சாதனைகளை நிகழ்த்தி வரும்  பஞ்சாபிய மக்களிடம் உறவாட  நான் சென்ற பாட்டியாலாவிலும், பக்ராநங்கலிலும், அனந்தபூர் சாகிப்பிலும், அமிர்தசரசிலும், ஜலந்தரிலும் எனக்கு வாய்ப்புக்கிடைத்தது.

 

இணையத்தில் உள்ள  வலைப்பூ ஒன்றில் பஞ்சாபியரையும் தமிழரையும் ஒன்றுபடுத்தும் சில செய்திகளைக் கண்டேன். 'இருவரும் எளிதாக நண்பர்களாகிவிடுவர். சிறப்பாக சர்தார்ஜிகள் நம் நட்புக்கு உரியவர்கள்.' ' பஞ்சாபியர் தம் பங்களிப்புகளால் வட இந்தியாவைக் கட்டுப்படுத்துவது போல  தென்னிந்தியாவில் தமிழர் உள்ளனர்' - இப்படிப் பல கருத்துகள் காணப்படுகின்றன. பயண ஏற்பாட்டின்போதே இக்கருத்துகளை  உள்வாங்கிக்கொண்டேன். .

 

பாட்டியாலாவில் நான் விடுதியில் நுழைந்தவுடன் அன்பாக வரவேற்றவர் ஒரு சீக்கியரே. நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டபின் பாட்டியாலாவில் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள், வாங்கவேண்டிய பொருள்கள், அதற்குரிய  சரியான  கடைகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதி ஆர்வமுடன் விளக்கினார். இந்தி தெரியாமையும், பஞ்சாபி மொழிபுரியாமையும்  தடங்கலாயினும் கண்ணில் கண்டோர் அனைவரும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசி உதவினர். பாட்டியாலா  தனிமன்னராட்சி நடத்தப்பட்ட ஒரு சமஸ்தானமாக இருந்ததால் இங்கு மோத்திபாக் அரண்மணை, சேஷ் மகால், குவில்லா முபாரக் கோட்டை முதலிய பழமையான சின்னங்களைக் கண்டேன். அவற்றில் பலவும் பராமரிப்பின்றிக் காணப்பட்டன.சில இடங்களில் சீரமைப்புப்பணிகள் நடைபெறுவதால் பார்வையாளர் அனுமதி மறுத்தனர். 

 

தமிழகத்திலும், இந்தியாவின் பல மாநிலங்களில் பழம் சின்னங்களைப் பாதுகாப்பதில் செலுத்தும்  கவனம் இங்கு இல்லை என்றே தோன்றியது. பஞ்சாபியரின் வீரத்தை விளக்கிக் காட்டும் 'கோட்டை தர்பார் மண்டப அருங்காட்சியகம்' ஒன்றே நான் கண்டதில் பயனாக இருந்தது.  கோட்டை அருகே அமைந்துள்ள நெரிசலான கடைவீதிகளில் பஞ்சாபி கலாச்சாரம் மிளிரும் கைவினைப்பொருட்கள், அணிகள், ஆடைகள், 'புல்காரி' வகை வேலைப்பாடமைந்த துணிமணிகள், ஜுட்டி என்ற பஞ்சாபிய காலணிகள் முதலின விற்கும் நூற்றுக்கணக்கான கடைகள் காணப்பட்டன. விதவிதமான ஊறுகாய் வகைகளை மட்டும் விற்பதற்கே அங்கு 'அச்சார் பஜார்' என்ற பகுதி இருந்தது. மூன்று வேளை உணவிலும் பஞ்சாபியர் ஊறுகாய் பாட்டிலைப்   பக்கத்தில் வைத்திருப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர் என்பதை அறியலானேன்..

 

கடைக்குச்சென்றால் மிக மரியாதையாக வரவேற்று சளைக்காமல் பொருள்களைக்காட்டிவிட்டு, நாம் வாங்காமல் போனாலும் நம்மவர்கள் போல முகம் சுளிப்பதில்லை. அதிகமாகப் பேரம் பேசவாய்ப்பில்லை. விலையை ஏற்றிக் குறைத்தலும்  இல்லை. வாங்கச்சொல்லி வற்புறுத்தலும் இல்லை.  தமிழக நகரங்களைப்போல ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் அதிர்ச்சிதரும் கட்டணம் கேட்டு பின் ஆளுக்குத்தக்கபடி இறங்கி வருவது என்ற தந்திரமெல்லாம் இவர்கள் அறியவில்லை. எந்த நேரத்திலும், அஞ்சாமல் வாடகை வாகனங்களில் ஏறி, அவர்களின் மரியாதையை ஏற்று அவர்கள் கேட்கும் நியாயமான தொகைக் கொடுத்துவிட்டு வருவதே சென்னையில் கிடைக்காத, இங்குக் கிடைக்கும் சுகமான அனுபவமாகும்.

 

இந்தியாவிலேயே தனிநபர் வருவாயில் முதலிடம் பெறும் மாநிலம் பஞ்சாப்.  அதன் 10% என்ற வளர்ச்சி விகிதமும் இந்தியாவில் முதன்மையானதாகும். எனினும் இங்கும் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்போர் ஏறத்தாழ 14 இலட்சம் பேர் உள்ளனர். நடுத்தர உணவு விடுதிகளில் கூட உணவுச்செலவு தமிழகத்தோடு ஒப்பிட்டால் இருமடங்காக உள்ளது.தென்னிந்திய உணவுகள் பலவிடங்களில் கிடைத்தாலும் அவை மிகுந்த விலையுடையன. ஒரு சாதா தோசை ரூ60 க்குமேல் விற்கப்படுகிறது. எனினும் வசதியற்றோர் உண்ணும் அளவுக்கு எளிய விடுதிகளிலும், தெருவோரக் கையேந்தி பவன்களிலும் பஞ்சாபி உணவுகள் விலை குறைவாக உள்ளன.  ஆனால் அவை பெரும்பாலும்  தூய்மைக்குறைவோடு காணப்படுகின்றன. ஊறுகாய்க் கடைகளில் கூடக் கரண்டியின்றிக் கையைப் பயன்படுத்தும் வழக்கம்  அருவருப்பைத்தருகிறது.

 

பொருளாதார மேம்பாடும், ஓரளவு கல்வி வளர்ச்சியும், உயரிய பாரம்பரியமும் உள்ள

பஞ்சாப் மாநிலம்  சுகாதாரத்தில் இன்னும் மாறவேண்டியுள்ளதை வருத்தத்தோடு உணர்ந்தேன். இந்தியாவெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எச்சில் துப்பல், தெருவில் சிறுநீர் கழித்தல்,போக்குவரத்து விதிமீறல்கள், குப்பைகளைக்கண்டபடி வீசல், புழுதிமயமான தெருக்கள், பராமரிப்பில்லாச் சாக்கடைகள்  முதலியனவற்றிற்கு இங்கும் குறைவில்லை.

 

எனினும் ஊரைவிட்டு வெளியே வந்தால் பளபளக்கும் சாலைகளும், கோதுமை, சூரியகாந்தி வயல்களும் கண்ணுக்கு இனிமையாக உள்ளன. ஏறத்தாழ 1500 கி.மீ தூரம்  இந்த மாநில சாலைகளில் பயணித்ததால் பல அனுபவங்கள் கிடைத்தன.நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பயணிகளின் உணவுத்தேவையை நிறைவு செய்ய, தாபாக்கள் என்னும் சாலை உணவு விடுதிகள், தாராள இடப்பரப்பில், நிறைய காணப்படுகின்றன. அங்கும், உணவு  மலிவு என்று கூறுதற்கில்லை.. தேநீர் விலையே

ஏழு ரூபாய். இந்த தாபாக்களில் லாரி ஓட்டுநர்கள் வந்து இளைப்பாறியபடி உண்ணவும் சற்றே உறங்கவும்  நிறைய கயிற்றுக்கட்டில்கள் போட்டு உதவியிருக்கிறார்கள்.

 

சாலை வழியே பாட்டியாலாவிலிருந்து ஏறத்தாழ 100 கி.மீ பயணத்தில் பக்ரா நங்கல் அணையை மிகுந்த எதிர்பார்ப்புடன் அடைந்தேன். அணைக்கு மலைப்பாதையில் நுழைவதற்கு முன்   அனுமதிச்சீட்டு பெற்றால்தான்  அணையை நெருங்க முடியும். குறிப்பெட்டில் கையெழுத்திட்டு அனுமதிச்சீட்டுப்பெற்று, என் வாகனத்திற்கும் அனுமதிபெற்று ஆவலுடன் வளைவுகள் நிறைந்த இமயத்தின் சிவாலிக் பகுதி மலைப்பாதையில் பயணமானேன். படித்த தகல்கள் நினைவுக்கு வந்தன.

 

'மீட்சிபெற்ற இந்தியாவின் புதிய ஆலயம்' என்று ஜவகர்லால் நேரு அவர்களால் சிறப்பிக்கப்பட்ட அணை! பசுமைக்காடுகளுக்கு நடுவே பஞ்சாப் - இமாசல பிரதேச எல்லையில் சட்லெஜ் நதியின் குறுக்கே கடல் மட்டத்திலிருந்து 226 உயரத்தில் புவி ஈர்ப்புக்கு சவால் விட்டபடி எழுப்பப்பட்ட அணை! 1948 இல் தொடங்கி15 ஆண்டுகள் முயன்று 1963இல் முடிக்கப்பட்ட  தொழில்நுட்ப சாதனை !முடிந்தபோது ஆசியாவின் முதற் பெரிய, உலகின் இரண்டாவது பெரிய கான்கிரீட் அணை!  ராஜஸ்தான், டில்லி, பஞ்சாப், அரியானா, இமாசல பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களின் வயல்களுக்கு நீர்ப்பாசனமும், ஒரு மில்லியன் கிலோ வாட் மின்சாரமும் வழங்கும் ஆற்றலுடைய அணை! மழைக்காலங்களின் சட்லெஜ் நதியில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தைத் தடுத்துத் துயர் நீக்கும் அன்னையாம் அணை!

 

இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக்காண நெருங்கியபோது பாதுகாப்புத்துறையினர் தடுப்புப்போட்டு நிறுத்தி எங்களையும், எங்கள் பெட்டிகளையும் சோதித்த பின்னரே போக விட்டனர். தீவிரவாத அச்சத்தால்  பாதுகாப்புத்துறையினரின் தொடர் சோதனைகளும், 'செல்பேசியை அணை, படம் எடுக்காதே' போன்ற ஆணைகளும், சுற்றுலா வருவோரைத் தொல்லைக்கு உள்ளாக்குவது தவிர்க்கமுடியாதபடி, வாடிக்கையாகிவிட்டது.

 

இவ்வளவு சிரமங்களுக்குப்பின்னர் அணையை அடைந்தபோது பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

             

 

                                             தமிழர் கற்க வேண்டிய பஞ்சாபியப் பாடங்கள்

                       

 2.சீக்கிய வரலாறு சொல்லும் அனந்தபூர் சாகிப்

 

தமிழகத்தில் உள்ள சாத்தனுர் அணை, வைகை அணை, கல்லணை முதலியவற்றையெல்லாம்  பார்த்த எனக்கு இவற்றை விடப்  பலமடங்கு பெரியதும் சாதனைக்குரியதுமான பக்ரா நங்கல் அணை என்னை வியப்பில் ஆழ்த்துமென்று எதிர்பார்த்திருந்தேன்.

 

ஆனால் சுற்றுலா பயணிகள் செல்லவும், பார்வையிடவும்  மிகுந்த சிணுங்குண்ணித்தனத்துடன், சிறு அளவே அனுமதித்திருந்தனர். அணையின் மேல் பாலத்தில் சென்று பார்க்கத் தடை! கொஞ்சம்  பூங்காமாதிரி தெரிந்த பகுதிக்குள் நுழைய தடை! படமெடுக்கத் தடை!அக்கம் பக்கம் எங்கும் போகத்தடை!வளைந்த சாலையில் நின்றுகொண்டு தூரத்திலிருந்த அணையைப் பாரக்க மட்டுமே முடிந்தது. பார்க்கும் காட்சியும் சொல்லும்படியாக இல்லை. மொட்டையாய் மிக உயரமாக இருந்த அணையின் 4 மதகுகள் பெரிதாகத் தெரிய, அணை பரிதாபமாக வறண்டு கிடந்தது. தூரத்தில் சிலை வடிவில் ஜவகர்லால் நேரு தம் கனவு நனவாகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு நின்று 15 நிமிடத்திற்கு மேல் பார்க்க ஏதுமே இல்லை.

 

'இதற்காகவா இவ்வளவு  நேரம் மலையில் பயணித்துப் பாதுகாப்புச் சங்கடங்களை அனுபவித்து வந்தோம்?' என்ற ஏமாற்றக்கசப்பு எழுந்தது. நானும் என் மனைவியும் எங்கள் கார் ஓட்டுநரும் தவிர வேறு சுற்றுலாப்பயணிகள் யாரும் இல்லை. எல்லோரும் விவரம் தெரிந்தே இப்போது வருவதில்லை போலும். பயணக்களைப்பும் மதியஉணவு நேரத்தைக்கடந்த பசியும் வயிற்றைக்கிள்ள, அங்கு ஓர் அழுது வடிந்த உணவில்லா உணவகத்தில் மூவரும் தேநீரும் பிஸ்கெட்டும்  மட்டும் சாப்பிட்டு மீண்டும் பார்த்த பகுதிக்கு வந்த போது,   குழுவினராகச் சில இளம் பெண்களும், இளைஞர்களும் நின்றிருந்தனர். எங்களைப்போல அங்கு வந்து ஏமாற்றமடைந்து  எங்களிடம் இந்தியில் ஏதோ ஐயம் கேட்க ''நாங்கள் தமிழகத்திலிருந்து வருகிறோம் ஆங்கிலத்தில்  பேசமுடியுமா ? ''என்றேன்.

 

மரத்திலிருந்து  பறித்த குளிர்ச்சியான இமாச்சல ஆப்பிள் போன்று  தோற்றமளித்த 18 வயது மதிக்கத்தக்க ஓர் இளம்பெண்   தம்மையும் தம்முடன் வந்தவர்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டு சுமாரான ஆங்கிலத்தில் மிகவும் மரியாதையாகவும், அன்புடனும் அளவலாவினார். மற்றவர்களால் ஆங்கிலம் பேசமுடியவில்லை. எங்கள் ஏமாற்றத்தைப் பகிர்ந்துகொண்டோம். அணை ஏமாற்றமளித்தாலும் இவர்களைச் சந்தித்துப்பேசியது  மிகவும் மகிழ்ச்சியும் பயனும் அளித்தது. பஞ்சாபியப் பண்பாட்டை உணர உதவியது.

 

இவர்கள் பஞ்சாப் - இமாச்சல் எல்லையூர் ஒன்றில் வாழும் பஞ்சாபியக் குடும்பதினராம். பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் இப்பெண்  பிபிஎ அஞ்சல்கல்வி பயில்கிறாராம். இதற்கு முன் இந்த அணைக்கு இவர்கள் வந்தபோது இப்படி வறண்டிருக்கவில்லையாம். ஏரியில் படகுப்பயணத்தை மேற்கொண்டு இயற்கைகாட்சிகளைக் கண்டுகளிக்க அனுமதித்தார்களாம். இப்போது வந்த காலமும், சூழலும் சரியில்லையென உணர்ந்தோம். கள்ளம் கபடின்றி பேசிய அந்த இளம்பெண்  தாம் ஒரு குழந்தைக்குத் தாய் என்று சொன்னதை நம்ப முடியவில்லை. அவர் கணவர் அமெரிக்காவில் வாகன ஓட்டுநராகத் தொழில்புரிகிறாராம். எங்கள் ஆங்கில உச்சரிப்பையும் தமிழர்களின் அறிவாற்றலையும் மெச்சினார். அங்குள்ள வாழ்வியல், கல்வி, சூழலைப்பற்றி அவரிடம் அறிய முயன்றோம். எங்களைப்பற்றியும் கேட்டறிந்தார். என் மனைவி ஆசிரியை என்று அறிந்தவுடன், தனி மரியாதை காட்டி, காலைத்தொட்டு வணங்கி, '' நான் விரைவில் என் கணவரிடம் போய் சேர நீங்கள் ஆசிர்வாதம் செய்யுங்கள்!'' என்று வேண்டியது நெகிழ்ச்சியளித்தது. மனமார அவர்களை வாழ்த்தியதுடன் பஞ்சாபிய உயர்மரபைப்  புரிந்துகொண்டோம். பக்ரா நங்கல் அணையைவிட அந்த அன்னை எங்கள் மனதில் நின்றார்.

 

பக்ரா நங்கலிலிருந்து அன்று மாலை இமயத்தின் சிவாலிக் மலைத்தொடர்களின் எழிலார்ந்த பின்னணியில் அமைந்த அனந்தபூர் சாகிப் என்ற சீக்கியரின் புனித நகரை அடைந்தோம். ஊருக்கு மேற்கே 4 மைல் தூரத்தில், பரந்த பச்சை வெளிகளை அடுத்து சட்லஜ் நதி   சலசலத்துக்கொண்டிருந்தது. அமிர்தசரசுக்கு அடுத்த சிறப்புமிக்க சீக்கியர்களின் வழிபாட்டுத்தளம் இதுவே. பஞ்சாப் தலைநகர் சந்திகாரிலிருந்து 95 கி.மீ தொலைவிலும், அமிர்தசரசிலிருந்து 161 கி.மீ  தொலைவிலும் இவ்வூர் உள்ளது.

 

இந்தச் சீக்கிய தெய்வீகப்பேரின்ப நகருக்குச் செல்லும் முன் சீக்கிய சமயத்தைப்பற்றிய  சில அடிப்படை உண்மைகளைப் படித்தறிந்தேன. கி.பி1469 ஆண்டு லாகூர் அருகே உள்ள தல்வாண்டி என்ற ஊரில் ஓர் இந்து சத்திரிய குடும்பத்தில் பிறந்த நானக்   காசிக்குச்சென்று எல்லோரும் நீரை வானத்தை நோக்கி தம் முன்னோரிடம் போய்ச் சேருமெனத் தெளித்தபோது, இவர் பஞ்சாபை நோக்கித்தெளித்தார். கேலிபேசியவர்களிடம், 'மேலே தெளித்து அது முன்னோரிடம் போய் சேருமாயின் மேற்கு நோக்கித்தெளித்தால் அது பஞ்சாப் வயல்களுக்குப்போகாதா' என்றாராம். இந்து மதச்சடங்குகளையும், சாதியத்தையும் வெறுத்தார். இந்து, முஸ்லீம் முதலிய மதங்களுக்கெல்லாம் பொதுவான  ஒரே கடவுளை உணரும் வழிமுறையை நாடி 4 திசைகளிலும் நீண்ட பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டுக்கும் வந்து ஞானம் தேடினார். மெக்காவிற்கும் கூடச்சென்றார். தம் காலத்துக்கருத்துகளை உள்வாங்கி புதுச்சமய நெறியை உருவாக்கினார். குருநானக் போதனையின் சாரம்: ''உண்மையை உணர்தல் அனைத்தையும் விடப்பெரிது. உண்மையாய் வாழ்தல் அதனையும் விடப்பெரிது''

 

தமிழகத்துப் புது நெறியாளர்களாகிய திருவள்ளுவர், திருமூலர், வள்ளலார் முதலியோர் சீடர்களை உருவாக்கவில்லை . தம் கொள்கைகளைப் பரப்ப கட்டுக்கோப்பான வழிமுறைகளை வகுக்கவில்லை. எனவே நம்மண்ணின் உயரிய சிந்தனைகள் நம் மக்களிடையே கூடப் பரவில்லை. மாறாக, குரு நானக் தம் கொள்கைகள் பரவவும், தொடரவும் சீடர்களை உருவாக்கினார். குருநானக்கைத் தொடர்ந்து 1499 முதல் 1708 வரை வாழ்ந்த 9 குருமார்கள் அர்ப்பணிப்புடன் சீக்கியத்தை வளர்த்தெடுத்தனர். சீக்கிய கொள்கைகளுக்காகத் தம் இன்னுயிரையும் இழந்தனர். ஐந்தாவது குருவான அர்ஜூன் தேவ் 43 வயதில், மொகலாய மன்னர் அக்பர் மகன் ஜகாங்கீரால் சித்திரவதை செய்யப்பட்டு ஆற்றில் வீசி  கொல்லப்பட்டார். சீக்கிய நெறிகளுக்காக முதல் தியாகியான இவர் நினைவுநாளை, ஒவ்வோர் ஆண்டும் சீக்கியர்கள்  கொண்டாடிவருகின்றனர்.

 

சீக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் பலவும் இன்று 15,229 மக்கட்தொகை உள்ள இந்த அனந்தபூர் சாகிப்பில் நிகழ்ந்துள்ளன. சீக்கியர்களின் ஒன்பதாவது குரு தெக் பகதூர், பிலாஸ்பூர் அரசியிடமிருந்து 1665 இல் ரூ500 மட்டுமே அளித்து இவ்வூரின் நிலப்பரப்பை வாங்கினார். அவர் அப்போது தம் தாயின் நினைவாக சகி நான்கி என்றே இவ்வூருக்குப்பெயரிட்டார். ஔரங்கசீப்பால் கட்டாய மதமாற்றம் அல்லது சாவு என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட காஷ்மீர் பிராமணப் பண்டிதர்கள் இதே அனந்தபூர் சாகிப்பிற்கு   வந்து குரு தெக் பகதூரிடம் தம்மைக்காக்கும்படி இறைஞ்சினர். '' சீக்கிய குருவை மதமாற்றம் செய்தால் நாங்கள் மதம் மாறுகிறோம் என்று  ஔரங்கசீப்பிடம் சொல்லுங்கள்.நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறி, குரு தெக் பகதூர், மதசுதந்திரத்திற்காகவும் பலவீனமானவர்களைக் காக்கவும் முகலாயப்பேரரசனுடன் மோதவும் சீக்கிய நெறிகளுக்காக உயிர்த்தியாகம் செய்யவும் தயாரானார். பண்டிதர்கள் அவர் சொன்னபடி செய்தார்கள்.

 

ஔரங்கசீப்பிடமிருந்து அழைப்பு வருவதற்கு முன்பே பாதுகாப்பாகத் தம் 9 வயது மகன் கோபிந்தை 10வது மத குருவாக அறிவித்து குரு டில்லிக்குப் பயணமானார். அவருடன்,  சீக்கியத்திற்காக எதனையும் செய்யத்துடித்த 3 சீடர்கள் மதிதாஸ், தயாள் தாஸ், சதிதாஸ் ஆகியோர் தடுத்தும் கேளாமல் உடன் சென்றனர். ஔரங்கசீப், குருவிடம், ''அதிசயங்கள்  நிகழ்த்திக்காட்டு அல்லது இசுலாத்திற்கு மாறு, அல்லது இறந்து போ - இந்த 3 வழிகளில் ஒன்றைத்தேர்ந்தெடு'' என்றார். சீக்கியத்திற்காகச் சாகத்துணிந்த குருவை மன்னன் உடனே கொல்லவில்லை. அவர் சீடர்களுக்கும் மதமாற்ற வற்புறுத்தல் அல்லது மரணம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அவர்கள் மகிழ்ச்சியுடன் மரணத்தைத்தழவத் தயாராயினர். குருவின் கண்முன்பே சீடர் மதிதாஸ் நடுத் தலையிலிருந்து உடல் வரை ரம்பத்தால் அறுத்துக்கொல்லப்பட்டார். சீடர் தயாள் தாஸ் கொதிநீர் அண்டாவில் வேகவைத்துக் கொல்லப்பட்டார். சீடர் சதிதாஸ் உடல் முழுவதும் துணியால் சுற்றப்பட்டு எண்ணெய் ஊற்றிக்கொளுத்தப்பட்டார். இக்காட்சிகளைக்கண்டும் மதம் மாற, சிறிதும் மசியவில்லை  குரு தெக் பகதூர்.  டில்லி சாந்தினி சௌக்கில் அவர் தலை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டது. அன்றைய மனித உரிமைகளுக்காக இவர்கள் இரத்தம் சிந்திய இதே இடத்தில்தான் இன்று குருதுவாரா சிஸ் கஞ்ச் சாகிப் உள்ளது.

 

மயிர்க்கூச்செறியும் மனஉறுதி படைத்த  பஞ்சாப் மண்ணின் மைந்தர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றவர் 10வது குருவான குரு கோபிந் சிங். இன்றைய சீக்கியத்தின் வடிவம் இவரால் உருவாக்கப்பட்டதாகும். தியாக இயக்கமாக இருந்த சீக்கியத்தைப் போராளி இயக்கமாக இவர் மாற்றினார். 20 முறை நடந்த பாதுகாப்புப்போர்களில் தாமே தலைமையேற்று வலிமையான மொகலாயர்களையும், அவர்கள் கூட்டாளிகளையும் கலங்கடித்தார். பஞ்சாபியரில் உயிரைத்தர சித்தமாயிருப்போரைத்தயார் செய்து 1699 இல் கல்சா பந்த்(தூய பிரிவு) எனப்பெயரிட்டார். இதே அனந்தபூர் சாகிப்பில் தம் தலையையே அவர் வாளுக்கு வழங்க முன்வந்த இளைஞர்கள் ஐவரை பாஞ்ச் பியாராஸ் (அன்புக்குரிய ஐவர்) என்று அழைத்து கிறித்துவர்களைப்போல் அவர்களுக்குத் திருமுழுக்குச்செய்தார். அவர்கள் முன் மண்டியிட்டு, அவர்கள் கையால் தாமும் திருமுழுக்குப்பெற்றார். உருவ வழிபாடற்ற கடவுளை வணங்கும், சாதியற்ற, சகோதரத்துவம் மிக்க சீக்கியத்தைப் புதுப்பித்தார். கல்சா என்றால் புனித வீரன். வெளிஅடையாளமாக ஐந்தை அவன் (5K)கொள்ளவேண்டும்.1.வெட்டாதமுடி(Kesha),2.வளைந்தபிச்சுவா(Kirpan),3.சீப்பு(Kangua),4.இரும்புவளையம்(Kada),5.உள்ளாடை(Kachha) 

உள்ளத்தில் அவன் பக்தியும் சக்தியும் உடையவன். சுயமரியாதையும் பணிவும் உயர்பண்பாகக்கொண்டவன். .ஆயுதப்பயிற்சி பெற்று பலவீனர்களைக் காக்க எப்போதும் தயாராக இருப்பவன். விபச்சாரம், புகையிலை, போதைப்பொருட்கள்- நினையாதவன்.வரதட்சணை வாங்காதவன்.மூடநம்பிக்கைகளை முட்டிச் சாய்ப்பவன். கல்லறைகள் உட்பட எங்கும் யாருக்கும் நினைவுச்சின்னம் எழுப்பாதவன். வருவாயில் பத்தில் ஒன்றை சீக்கியத்திற்கு வழங்குபவன்.எப்போதும் நன்னம்பிக்கையுடன்  (optimism) வாழ்பவன். பர்தா அணியாத, விதவையானால் தீக்குளிப்பில் நம்பிக்கையற்ற பெண்களும், ஆண்களுக்கு இணையாக இந்த கல்சாவில் இணைந்தனர்.

 

இந்தப் புனிதவீரர்கள் ஆண்கள் சிங் (சிங்கம்) என்றும், புனித வீராங்கணைகள் கவுர்(இளவரசியர்) என்றும் அழைக்கப்பட்டனர். எதிரிகளை அச்சுறுத்தும் தோற்றமும் ஆனால் பண்பு நிறைந்த செயல்பாடும் உடையவர்களாகச் சீக்கியர்கள் குருகோபிந்தால்  உருவாக்கப்பட்டனர். வல்லமையும், நல்லமையும் படைத்த மனிதர்களை உருவாக்கும் இத்தகைய அமைப்பு பஞ்சாபிய சமூகத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. எதிர்காலத்தில் மிகச்சிறந்த மன்னர்களும்,  மிகுதியான விடுதலை வீரர்களும், உண்மைத் தியாகிகளும்,பல்துறையிலும் மாபெரும் செயல்வாதிகளும்  இந்த மண்ணில் மிகுதியாகத் தோன்ற விதை விதைக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாகவே இன்று 2.6 கோடி சீக்கிய சிங்கங்கள் உலகெங்கும் தனித்தன்மையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

 

தத்துவ ஞானியாக, கவிஞனாக, சிறந்த போர்வீரனாக, உயர்ந்தமனிதநேயனாக,கொள்ளைப்பிடிப்பில் இமயமாக - மொத்தத்தில் மிகச்சிறந்த மனிதனாக விளங்கியர் குருகோபிந் சிங். போலிச்சாமியார்களும், போலித்தலைவர்களும் மிகுந்துவரும் தமிழகச்சூழலில், குருகோபிந் சிங் மாதிரி தலைவர்கள் தமிழ்மண்ணில் யாராவது பிறந்திருக்கிறார்களா என்று ஏக்கத்துடன் எண்ணிப்பார்க்கிறேன். தமிழர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் விளங்க சீக்கியர்களின் வரலாற்றை விரிவாகப் படித்து உணர்வும், உத்வேகமும் பெறுவது அவசியமானதாகும்.

 

இந்த எண்ணவோட்டத்துடன் நான் அனந்தபூர் சாகிப் புனித வீதிகளில் நடந்து வரலாற்றுப்புகழ்மிக்க சீக்கிய வழிபாட்டிடமான கேஸ்கர் சாகிப் குருதுவாராவை அடைந்தேன். இது சீக்கியர்களின் 4 அதிகாரப்பீடங்களில் ஒன்று. இங்குதான் குருதெக் பகதூரின் தலை புதைக்கப்பட்டது. இதே இடத்தில் நின்றுதான் குருகோபிந்து சிங் தம் வாளுக்குத் தலை கொடுக்கமுன்வந்த அன்புற்குரிய ஐவரை திருமுழுக்குச்செய்து கல்சா பந்தைத் தொடங்கிவைத்தார். குருகோபிந் சிங்கின் 12 நினைவுப்பொருட்களும்,மற்றும் சீக்கியத்தியாகிகள் அறுவரின் நினைவுப்பொருட்களும் இக்குருதுவாராவில் வைக்கப்பட்டுள்ளன. குருகோவிந் சிங் தமக்கு அடுத்த  வாரிசாக மனிதர்கள் இனி இல்லை, புனித  கிரந்தமே என்று அறிவித்து முதலில் வழிபாட்டுப்பொருளாய் அதனை வைத்ததும் இங்குதான். 11வது சீக்கிய நிரந்தர குருவாக குரு கிரந்த் சாகிப் என்ற புனித நூலே விளங்குகிறது.

 

இதுவரைக்கும் எந்தச் சீக்கிய வழிபாட்டிடத்திற்கும் நுழையாத எனக்கு, இந்தக் கேஸ்கர் சாகிப் குருதுவாராவில் பல புதிய அனுபவங்கள் காத்திருந்தன.

                                                                 

 

                                          தமிழர் கற்க வேண்டிய பஞ்சாபியப் பாடங்கள்

                              

   3.இந்திய - பாக் எல்லையில் மக்கள் ஆரவாரம்

 

சீக்கியப் புனித நகரமான அனந்தபூர் சாகிப்பின் புகழ்பெற்ற வழிபாட்டிடமான கேஸ்கர் சாகிப் குருதுவாரா, ஒரு காலத்தில் சிறு குன்றாக விளங்கிய இடமாகும். அந்த  மேடான நிலப்பரப்பில், மேடை அமைத்து சிறப்பு செய்ததுபோல இந்தக் குருதுவாரா கம்பீரமாக அமைந்துள்ளது. பளிச்சிடும் வெண்மைநிறத்தில் காணப்பட்ட கட்டடமும், கோபுரமும்,  வெள்ளை ஆடை தரித்த பக்தர்களும், தூய்மைபோற்றும், அமைதி தவழும் சூழலும்,   மனத்திற்கு  இதமளித்தன.  உள்ளம் தூய்மையாக, உடல்தூய்மையும் அவசியம் என்று வற்புறுத்தும் வண்ணம் செயல்பாடுகள் அமைந்திருந்தன. 

 

பணிவுடன் காலணிகளைத் தம் கைப்பட பக்தர்களிடமிருந்து பெற்று, அதற்குரிய அறையில் பாதுகாப்பதை இலவசப்பணியாகச் சிலர் குருதுவாராக்களில் செய்து வருகின்றனர். சீக்கியர் அல்லாதவராயினும் ஆண்களும், பெண்களும் கைக்குட்டையாலேனும் தலையை மூடவேண்டும். மூடாமல் வருவோர்க்கு   அதற்கான துணியொன்றை இலவசமாக வழங்கி மூடச்சொல்கிறார்கள். குருதுவாராவின் நுழைவாயிலில்   தொடர்ந்து பெருக்கெடுத்து நீர் வந்துகொண்டேயிருக்கும் முறையில்  நீரோடை அமைத்திருக்கிறார்கள். இதில்  கால்களை நன்றாகக் கழுவித் தூய்மையாக்கிக் கொண்டு அடுத்து அமைந்துள்ள நீண்ட மிதியடிகளில் கால்களை ஈரம் நீங்கத் துடைத்துக்கொண்டு தூய்மையான உணர்வுடன் குருதுவாராவுக்குள் படியேறிச் சென்றோம்.

 

தர்பார் சாகிப் என்ற வழிபாட்டிட மண்டபத்திற்குள் அந்நிய உணர்வுடன் நுழைந்தோம். எனினும் எங்களை யாரும் அந்நியராகப் பார்க்கவில்லை. வாசலில் இருந்தோர் மரியாதையாக வரவேற்றனர். அச்சமூட்டும் சிங்கம்போல் காட்சியளிக்கும் சீக்கியர்கள் இங்கு பசுவின் சாந்தத்துடன் பக்திவயப்பட்டிருந்தனர். தூய வெள்ளைத்துணி விரிப்பில் சீக்கிய பக்தர்களுடன் காலை மடித்து அமர்ந்தோம். வெள்ளைவிரிப்பில் சிறு தூசிவிழுந்தாலும் ஒரு பெண்தொண்டர் அதைத் தூய்மைசெய்த வண்ணம் இருந்தார்.

 

மண்டபத்தின் மையத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகிய பீடத்தில் 11வது சீக்கிய குரு - அதாவது புனித நூலான கிரந்த் சாகிப்  அமைந்திருந்தது. கிரந்தம் தவிர வேறு எதனையும் சீக்கியர்கள் வழிபடுவதில்லை. அதனை ஒரு மதகுரு  பக்திபரவசத்துடன் படித்தார்; பாடினார். பாடலுக்கேற்ப பக்கத்தில் ஹார்மோனியம், தபலா வாசித்தார்கள்.  அங்கு குரு கோபிந் சிங்  மற்றும் சீக்கிய தியாகிகளின் வாள் முதலிய நினைவுச்சின்னங்களைத்  துலக்கி, புதிதுபோல வைத்திருந்தனர். இதே இடத்தில் தான், 30.03.1699 அன்று வைசக்தி நாளில்,  குருகோபிந் சிங்கின் வாளுக்கு தம் தலையை அர்ப்பணிக்க முன்வந்தனர் தியாக வீரர்கள் ஐவர். அதே வாள் அங்கே ஒளிவீசிக்கொண்டிருந்தது.  தடுப்பு அமைந்த  பீடப்பகுதிக்கு வெளியே  உள்ள பச்சை விரிப்பில் சில பக்தர்கள் முழந்தாளிட்டு நெற்றித் தரையில் பட வணங்கி வேண்டினர்.

 

எங்களருகே வெள்ளைவிரிப்பில் அமர்ந்த பக்தர்களில் சீக்கியரல்லாத பஞ்சாபியரும் இருந்தனர். எல்லாரிடமும் அப்பழுக்கற்ற பக்தியையும், ஈடுபாட்டையும் காண முடிந்தது. நேரமின்மை கருதி, அமைதியாக அங்கிருந்து  பாதியில் வெளியேறியதை யாரும் பொருட்படுத்தவில்லை. வருவோர் அனைவருக்கும், எம்மதத்தினராயினும் அவர்களும் உடன்பிறப்புகளே எனக்கருதி குருதுவாரக்களெங்கும் இனிப்புப்பிரசாதமும், லாங்கர் என்னும் உணவுக்கூடத்தில் இருவேளை சுவையான பஞ்சாபி உணவும் வழங்குகிறார்கள். ஒரே தகுதி, தலையை மூடவேண்டும் என்பதே. உலகெங்கிலும் உள்ள சீக்கிய குருதுவாராக்களெங்கும் இந்த இலவச உணவுச்சேவை தட்டாமல்  நடைபெறுகிறது. இதற்காக சீக்கியர்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை வழங்குகிறார்கள். பசி நீக்கி, வயிறார உண்ண உணவு வழங்குவதை இறைப்பணியின் முக்கிய அங்கமாகச் சீக்கியம் போற்றுகிறது.

 

அனந்தபூர் சாகிப் குருதுவாராவில் பெற்ற புதிய அனுபவங்களுடன் சீக்கியர்களின் முதல் புனித நகரான அமிர்தசரசுக்கு  மறுநாள் காலை 200 கி.மீ பயணம் மேற்கொண்டோம். அமிர்தசரஸ் நகருக்குள் நாங்கள் தங்க முன்பதிவு செய்திருந்த  விடுதியைத் தேடிக்கண்டுபிடிப்பது சற்றுக்கடினமாக இருந்தது. கார் ஓட்டுநர் விடுதிக்குப் பேசி  பாதையைக் கேட்டறிந்தும், சரியாகப் போய்ச்சேரமுடியவில்லை. விடுதி உரிமையாளரே எங்கள் சிரமம் அறிந்து, நாங்கள் இருந்த இடத்திற்கு ஓர் ஊழியரைத் பைக்கில் அனுப்பி எங்களுக்கு அவர் முன்னே சென்று வழிகாட்டச் செய்தார். ஒரு விடுதி நிர்வாகமே இவ்வளவு சிரமம் எடுத்துகொண்டு தங்கள் விருந்தினரைப் பேணுவது வியப்பளித்தது.

 

'இஷன் வில்லா' என்ற பெயருடைய அந்த விடுதி நகரின் எல்லையில் இருந்தபோதிலும், பலவற்றில் தனித்தன்மையுடன் விளங்கியது. உள்ளே நுழைந்தவுடன் விடுதி உரிமையாளரே அன்புடன் வரவேற்றார்.  அறையின் தரை, கட்டில், அலமாரிகள், விளக்குகள், குளியலறை சாதனங்கள் முதலிய அனைத்திலும்  உபயோக எளிமையும், கலையுணர்வும் கலந்து வெளிப்பட்டன. தூய்மையான அந்த அறையில் விருந்தினர் முதன்முதலாக நுழையும் போது, இலவச பழச்சாறு காத்திருந்தது. பக்கத்தில் இரு துண்டறிக்கைகள். ஒன்று காலைநேர இலவச சிற்றுண்டி விவரங்களை விளக்கியது. இலவசமாக தரும் சிற்றுண்டியைக் கையில் கட்டி எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்றது. சிலர் இலவசம் என்பதால் கையிலும் எடுத்துச்சென்று  மதியத்திற்கும் பயன்படுத்தியிருப்பார்கள் போலும்!

 

இன்னொரு துண்டறிக்கை சுற்றுலா பயணிகளுக்கு மிகப்பயனளிக்கும் தகவல்களை இரத்தினச் சுருக்கமாகச் சொல்லியது. அமிர்தசரஸ் நகரில் பார்த்தே ஆக வேண்டிய இடங்கள - சுவைத்துப் பார்க்கவேண்டிய சிறப்பான பஞ்சாபிய உணவுவகைகள்- அவை  சிறப்பாக இருக்கும்  உணவகங்கள் - வாங்கியே ஆக வேண்டிய இந்த ஊருக்குரிய பொருட்கள்- அவை சிறப்பாகக் கிடைக்கும் கடைகள் - அவசர மருத்துவ உதவிக்கான மருத்துவ மனை, மருத்துவர் விவரம், மருந்துக்கடை விவரம் இவற்றுடன் பஞ்சாபின் மற்ற நகரங்களுக்குச் சென்றால் அந்தந்த ஊர்களில் உள்ள சிறந்த விடுதிகள் பற்றிய தகவல்கள் ஆகியனவும் இதில் காணப்பட்டன. இவை எல்லாவற்றையும் விட அன்பே பஞ்சாபின் சிறந்த பொருள் என்று குறிப்பிட்டிருந்ததே என் கவனத்தை ஈர்த்தது.

 

வந்து தங்கும் விருந்தினர் அனைவரிடமும்  தங்கியதில் காணும் குறை நிறைகள் பற்றிக் குறிப்பேட்டில் எழுதச்சொல்வதுடன், விடைபெறும் ஒவ்வொருவரையும் ஒளிப்படமெடுத்து 'எங்கள் விருந்தினராக இருந்தவர்கள்' என்று தலைப்பிட்டு விடுதியில் பாதுகாத்துச் சிறப்பிக்கிறார்கள். மாறுபட்ட சிந்தனையுடனும் ஒரு அர்ப்பணிப்புடனும் இந்த விடுதியை  நடத்தும் நபரைச்சந்தித்துப் பேசினேன். ஒரு புகழ்பெற்ற மருந்து நிறுவனம் நடத்தும் குடும்பத்தைச்சேர்ந்த பஞ்சாபிய இளைஞர் விவேக்கும், அவர் மனைவி கோம்பாலும் சேர்ந்து   உன்னதமான ஒரு விடுதியை நடத்த வேண்டும் என்ற் குறிக்கோளுடன்  நடத்துகிறார்கள்.

 

திரு.விவேக்குடன் கலைக்கூடம் போன்று காட்சியளிக்கும் உண்ணும் அறைக்குச் சென்றபோது அசந்து போனோம். அங்கு ஒரு நிஜ மரத்தையே கொண்டு வந்து தூணாக்கியிருக்கிறார்கள். மரத்தின் உச்சியில் குருவியொன்று கூடிகட்டி குஞ்சுகளுடன் வாழ்வதுபோல் அமைத்திருக்கிறார்கள். உலக நாடுகள் பலவற்றின் விதவிதமான நாணயங்களும், நோட்டுகளும் கண்ணாடிக்குள் காட்சியகம் போல வைக்கப்பட்டிருந்தன. இவர்களுடைய நீண்ட நாள் சேமிப்பான  இவை பல இலட்சம் மதிப்புடையனவாம். மேசை, கைகழுவும் தொட்டி, கண்ணாடி டம்பளர்கள் முதலிய பலவும் இதுவரை பார்த்தறியாப் பொலிவுடன் புதமைத்தோற்றத்தில் மிளிர்ந்தன. 'இங்குள்ள மிடுக்கான மேசையில் அமர்ந்து  பஞ்சாப் அனுபவங்களை இங்கேயே எழுது' என்று அச்சூழல் ஆசைமூட்டியது.   'அழகுணர்ச்சியும், ஆர்வமும் உள்ள என் மனைவி கோம்பல் தான்  நீங்கள் பார்க்கும் இதுபோன்றவற்றைத் திட்டமிட்டவர்.  இரவு நீங்கள் திரும்பியவுடன் அறிமுகப்படுத்துகிறேன். நீங்களே புரிந்துகொள்வீர்கள்' என்று கூறி தம் பங்களிப்பை  அடக்கி வாசித்தார்.  பஞ்சாபியர்களைப்பற்றி மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விவேக் இணையரை  நேர்காணல் செய்வது பயனளிக்கும் என்று தோன்றியது.

 

மிகச்சுவையான பஞ்சாபிய மதிய உணவை அந்த உணவறையில் முடித்தவுடன், விவேக் அவர்கள் அன்றைய எங்கள் பயணத்திற்கு  ஆலோசனை வழங்கினார். ''இன்று மாலையை வீணாக்காமல் இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் உள்ள வாஹா எல்லைக்குச் செல்லுங்கள். மாலை 4.30 க்குக் கொடியிறக்க நிகழ்ச்சி தொடங்கினாலும், நீங்கள் ஒருமணிநேரம் முன்னதாகச்சென்றால் தான் இடம் கிடைக்கும். அதன் பின் பொற்கோவிலைக் கட்டாயம் இரவில் பாருங்கள். வெயில் நேரத்தில் பார்க்க சிரமப்படுவீர்கள். இரவில் மின் ஒளியில் பொற்கோவிலின் இதமான அழகே தனி. எவ்வளவு நேரமானாலும் இரவு அங்கே போய்விடுங்கள்'' என்று அவர் வழிகாட்டியது நூறு விழுக்காடு சரியாக இருந்தது.

 

அமிர்தசரசிலிருந்து 28 கி.மீ தூரத்தில் லாகூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாஹா எல்லை என்ற இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு மாலை 3.30 க்கே போய்ச்சேர்ந்தோம். அதற்குள் பாதி இருக்கைகள் நிரம்பியிருந்தன. சாலையின்  ஒரு புறம் மிகப்பெரிய  விளையாட்டரங்க சிமிண்டு இருக்கைகள் அமைத்திருந்தார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு இடங்கள்.  குடிநீர் பாட்டில் உட்பட குழைமப்பொருட்கள், கைப்பேசி முதலியனவற்றிற்கு ஒரு எல்லைக்குப்பின் தடை விதித்திருந்தார்கள். நுழைவாயிலில் ஒவ்வொருவரும் பாதுகாப்புச்சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் .எல்லைப் பாதுகாப்பாக,  ஒருபுறம் 66,000 வாட் மின்சார முள்வேலி கண்ணுக்கெட்டிய தூரம் அச்சமூட்டிக்கொண்டிருந்தது. 'உலகின் மிகப்பெரும் மக்களாட்சி நாடான இந்தியா உங்களை வரவேற்கிறது' என்ற வரவேற்புப்பலகை பாகிஸ்தானிலிருந்து வருவோர் கண்ணில் படும்படி அமைக்கப்பட்டுள்ளது.

 

வாஹா என்ற பஞ்சாபிய சிற்றூர் 1947 பாகிஸ்தான் பிரிவினையின்போது சர்ச்சைக்குரிய ராட்கிளிப் கோடு (சர் சிரில் ராட்கிளிப் என்ற வெள்ளையரிடம் பிரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது) போடப்பட்டு ஊரின் கிழக்குப்பகுதி இந்தியாவிற்கும், மேற்குப்பகுதி பாகிஸ்தானிற்கும் போய் சேர்ந்தது. இந்த எல்லை 'ஆசியாவின் பெர்லின் சுவர்' என்று அழைக்கப்படுகிறது. நெடுஞ்சாலையின் குறுக்கே இந்தியாவும், பாகிஸ்தானும் இருபெரும் இரும்புக்கதவுகளை அமைத்துள்ளன. இந்திய கதவிலிருந்துதான் தேசிய நெடுஞ்சாலை எண்:1 தொடங்குகிறது. இந்தக் கதவுகளின் அருகே உள்ள பார்வையாளர்கள் இருக்கைகளில்தான் இப்போது நாங்கள் அமர்ந்திருந்தோம். கூட்டங்கூட்டமாக மக்கள் திரள் வந்துகொண்டிருந்தது.  ஒருநாளைக்கு சராசரியாக 8,000 பேர் வருகின்றனர். தமிழகத்திலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூட்டமும் கண்ணில் பட்டது.

 

இலண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில், நாள்தோறும் அரசு காவலர்கள் மாற்றப்படும் புகழ்பெற்ற சடங்கைவிட, வாகா எல்லையில் இருநாடுகளின் எல்லைப்படையினர் அணிவகுத்துவந்து சில சம்பிரதாயங்களை நிகழ்த்தி கொடியிறக்கி, கதவுகளை மூடும் சடங்கு ஆரவாரமிக்கதாகும். காரணம்  இரு நாட்டுமக்களின் போட்டி முழக்கமும், இருதரப்பு வீரர்களின் அதிரடி நடையும், விறுவிறுப்பானதாகும்.

தேசிய உணர்வைத்தூண்டும் பாடல்கள் ஒலிபெருக்கில் போடத்தொடங்கியவுடன் சாலைக்கே வந்து இளைஞர்கள் தேசிய கொடியுடன் பாடவும்,ஆடவும் தொடங்கினர். சுற்றுலா வந்த  பள்ளி, கல்லூரி மாணவிகள்,  கொடிகளுடன் அணிஅணியாக சாலைக்கு வந்து ஆரவாரமுழக்கமிட்டுச்  சென்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெய்ஹோ பாட்டு ஒலித்தவுடன் கூட்டத்தினரின் உற்சாகம் கரைபுரண்டது. ஆயிரக்கணக்கானவர்களும் எழுந்து நின்று இந்தப்பாட்டோடு சேர்ந்து உணர்ச்சிவயப்பட்டு முழங்கினர்.

 

மேலும் மேலும் மக்களைக் கோஷமிட்டு உற்சாகப்படுத்த உடற்பயிற்சி ஆசிரியர்போல ஒருங்கிணைப்பாளர் ஒருவர் காணப்பட்டார். 'பாரத் மாதா கி ஜெய்' என்று அனைவரையும் அவர் முழங்கச்செய்தார். தொடர்ந்து 'இந்துஸ்தான் ஜிந்தாபாத்' என்ற முழக்கம் எழுப்பப்ட்டது. அதே நேரத்தில் பாகிஸ்தான் பார்வையாளர் பகுதியிலிருந்து 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற முழக்கம்  கேட்டது. 'நீங்கள் முழங்குவது கேட்கவேயில்லை. இன்னும் உற்சாகமாக இன்னும் சத்தமாக முழக்கமிடுங்கள்' என்று பார்வையாளர்களை உசுப்பிவிட்டுக்கொண்டேயிருந்தார் அந்த  ஒருங்கிணைப்பாளர்.

 

இந்த உணர்ச்சிப்பின்னணியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் சாலைக்கு வந்தனர். காக்கி உடையில் தலையில் கோழிக்கொண்டை போன்ற சிவப்புத் தலைப்பாகை அணிந்திருந்தனர். அணித்தலைவர் மூச்சை உள்வாங்கி ஒரே சொல்லையே நீண்ட நேரம் நீட்டி முழக்கி ஆணையைக் கூற, வரிசையிலிருந்து ஒரு வீரர் நெஞ்சு வரை கால்களை உயர்த்தி நடந்தார். இப்படியே பலர் குறுக்கும் நெடுக்கும் நடந்து காட்டினர். இது எதிரியை எட்டி உதைப்பது போன்ற ஒரு பாவனையாக இருந்தது.  கதவைத்தாண்டி எல்லைக்கு நடந்து சென்ற அணித்தலைவர், அதே நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த பாகிஸ்தான் அணித்தலைவரிடம் முகத்தில் கோபத்துடன், எந்திரகதியில் கைகுலுக்கினார். கூட்டம் கைதட்டியும், முழக்கமிட்டும்  ஆர்ப்பரிக்க சில வீரர்கள் எல்லையருகே சென்றனர். தொள தொளப்பான கறும்பச்சை உடையும் கோழிகொண்டைத்தலைப்பாகையும் அணிந்த பாகிஸ்தான் வீரர்களும், அங்கு வர இரு அணியினரும் ஒருவரையொருவர் உதைப்பதுபோல எதிர்எதிராக நடந்து , ஆராவாரத்திற்கிடையேயும், பியூகிள் இசைக்கருவியின் முழக்கத்திற்கிடையேயும் தத்தம் நாட்டு கொடிகளைக் கீழே  இறக்கினர். பின்பு இருநாட்டு எல்லைக் கதவுகளையும் ஒருவரை ஒருவர் அடிப்பது போல வேகமாக இழுத்து மூடினர். கோபம், வெறுப்பு, பலப்பரிட்சை இவற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்த இந்தச் சடங்கு இருநாட்டு உறவு நிலையின் எதிரொலியாக மதிப்பிடப்படுகிறது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு நாள் மாலையும் தடையின்றி 365 நாள்களும், நடைபெற்று வரும் இந்த  நிகழ்ச்சியில் சில விபரீத நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

 

                                          தமிழர் கற்க வேண்டிய பஞ்சாபியப் பாடங்கள்

  

                         4.பொற்கோயில் போரும், அமைதியும்

        

நாள்தோறும் நடைபெறும் இந்திய -பாக் எல்லையாகிய வாகா எல்லையின் கொடியிறக்கச் சடங்கு  பகைகொண்ட இருநாடுகளின் மனக்கசப்புகளை, கோபங்களை கொட்டித்தீர்க்கும் நிகழ்வாகவே  தோன்றியது. 2001 இல் இந்திய நாடாளுமன்றத்தைப் பாக் தீவிரவாதிகள் தாக்கியதன் எதிரொலியாக பாக் எல்லையில் இந்தியப்படைகள் குவிக்கப்பட்டன. இச்சூழலில், ஒருநாள் மாலை வாகா எல்லை கொடியிறக்க நிகழ்ச்சியில் ஒரு பாக் எல்லைப்பாதுகாப்புப்படை வீரர் இந்திய பார்வையாளர்கள் மீது தம் துப்பாக்கியை வீசி எறிந்து தம் வெறுப்பை நேரடியாகவே வெளிப்படுத்தினார்.

 

இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக்கூடாதென்றும், இந்தக் கசப்புணர்வுகள் நீங்கவேண்டுமென்றும்  இருபக்கத்திலும் உள்ள மனித நேயர்கள் பல ஆண்டுகளாக எல்லையில் மெழுகுவர்த்தி ஏற்றி  அமைதி ஊர்வலம் நடத்திவருகின்றனர். சென்ற மாதம் இருநாட்டு சுதந்திர தினத்தின் மையமாக ( பாக் சுதந்திர தினம் - ஆகஸ்டு 14) 14.08.2010 அன்று இரவு இரு நாட்டு மனித நேயர்களும், ஆயிரக்கணக்கானோர் இணைந்து நடத்திய இந்த அமைதி ஊர்வலத்தில், பாலிவுட் இயக்குநர்,தயாரிப்பாளர் மகேஷ் பட், எழுத்தாளர் குல்தீப் நய்யார், பாக் உச்சநீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர் சங்கத்தலைவர் அய்ட்சாஸ் அக்சான் முதலியோர் கலந்துகொண்டனர் . 'இந்தியா பாக் நட்புறவு வாழ்க' என்ற முழக்கங்களிடையே 'இருநாடுகளும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட வீணான இராணுவச்செலவுகளைக் குறைப்பதே வழியாகும். இதற்கு இருநாட்டு நல்லறவே தீர்வாகும்' என்று  வற்புறுத்தப்பட்ட கருத்து தொடர்புடையோரின் சிந்தனைக்குரியதாகும்.

 

அன்று மாலை வாகா எல்லை கொடியிறக்க அணிவகுப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் எட்டாயிரம் மக்களும் அலைகடல் கரைக்கு வந்ததுபோல் பெருந்திரளாகக் கலைந்து சென்றனர்.  ஆண்களும் பெண்களும் தனித்தனி இடங்களில் பிரிக்கப்பட்டிருந்தனர்;  பாதுகாப்புக்காரணங்களுக்காக செல்பேசிகள், பைகள் வைத்திருப்பது தடைசெய்யப்பட்டது. என் மனைவி கையில் செல்பேசியோ, பணமோ இல்லை  என்பதால் அந்தப்பெருவெளியில் என்னைத்தவறவிட்டால் பெரும்சங்கடம் நேரக்கூடுமே என்ற அச்சம் எழுந்தது. ஈழப்போரில் எத்தனையோ தமிழ்க்குடும்பங்கள் குண்டுவீசிய குழப்பத்தில்  சிதறி கணவன்,மனைவி, மகன், மகள் முதலியோர் ஒருவரையொருவர் கண்டுபிடிக்க முடியாது தனித்தனியே பிரிந்தபோன சோகத்தை அந்த வினாடியில் சற்றே உணர முடிந்தது.

 

ஒருவழியாக, மக்கள்திரளில் நீந்தி, என் மனைவி  நான் காத்திருப்பதாகக் குறிப்பிட்ட ஒரு கடையருகே பத்திரமாக வந்துசேர்ந்தார். கூட்டச்சந்தடிகளில் நம்மூர்களில் காணப்படும் அநாகரிகமான செய்கைகள் பலவும் பஞ்சாபியரிடம் இல்லை. இளம்பெண்களும், ஆண்களும் கூட்டமாகக் காணப்பட்டாலும்   கூச்சலோ, ரௌடித்தனமோ நிகழாமல் அனைவரும் கட்டுப்பாடகக் கலைந்து சென்றதில் அம்மக்களின் நல்லொழுக்கம் தெரிந்தது.

 

எல்லையருகே உள்ள சாலையில் சீக்கியர் ஒருவர் நடத்தும் தேநீர் கடை; அதற்கு .'நயகரா பாலஸ்' என்று பெயர். நயகரா நீர்வீழ்ச்சி இரு நாடுகளுக்கும் பொதுவாக உள்ளதை வெளிப்படுத்துவது போல அமெரிக்கா,கனடா  நாட்டுக்கொடிகளைக் குறுக்காகப் பறக்கவிட்டிருந்தார். நம் எல்லையிலும்  இருநாட்டுக்கொடிகளையும் ஒன்றாகப்பறக்கவிடும் நாள் வருமா என்ற ஏக்கத்தை அவர் வெளிப்படுத்தினார். இனத்தாலும்,மொழியாலும்,பண்பாட்டாலும் ஒன்றுபட்ட மக்களை செயற்கையாகக் கோடுபோட்டு மதத்தால் பிரித்துவைக்கும் நிலை ஏற்பட்டது மிகவும் வருந்துதற்குரியது என்றார். அவரைப்போன்ற உணர்வுடையோர் ஒற்றுமைக்கான வாய்ப்பைச் சீரழிக்கும் பாக் தீவிரவாதிகளின் செயல்களால்  இந்தியா அடையும் இன்னல்களையும் கண்டு குமுறுகின்றனர்.

 

இந்த அனுபவங்களைச் சுமந்துகொண்டு , புதிய அனுபவங்களைத்தேடி அன்றிரவு 9 மணிக்கு அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்றோம்.   தாஜ்மகாலைவிட   மிகுதியான பார்வையாளர்களை ஈர்ப்பது பொற்கோயில் என்ற உண்மை,  அந்த இரவிலும் வரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் தெரிகிறது. வாரநாட்களில் மட்டுமே  இலட்சம் பேர் வருகின்றனராம். மின்ஒளியின் மிதமான வெளிச்சத்தில்,  பொற்கோவிலின் மஞ்சள் அழகின் அமைதியும், மிகப்பெரும் நீர்த்தடாகத்தின் குளிர்ச்சியும் எவர் உள்ளத்தையும் கொள்ளையிடும். விடுதி உரிமையாளர் விவேக் சொன்னது உண்மைதான். பளிங்குத்தரையில் கால் சுடும் பகலில் வந்திருந்தால் இந்த மெல்லிய அழகைப் பருகியிருக்க முடியாதுதான்.   இதமும் இனிமையும் தவழும் இந்த இடத்திலா கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மனித உயிர்களைப்பலிகொண்ட பயங்கர நிகழ்வுகள் நடந்துள்ளன என்பதை நம்பமுடியவில்லை. 400 ஆண்டுகால வரலாறு மனதில் ஓடியது.

 

இதற்குமுன் இந்த இடத்தில் மரங்களடர்ந்த காட்டுக்கு நடுவே ஒரு பெரிய குளம் மட்டுமே இருந்தது. முகலாயப் பேரரசர் அக்பர் இந்த இடத்தை 3வது சீக்கிய குரு அமர்தாசின் மகள் பிபி பாணிக்குத் திருமண அன்பளிப்பாக வழங்கினார். பாணியின் கணவரும் 4வது சீக்கிய குருவுமான குரு ராம்தாஸ் 3வது குருவின் விருப்பப்படி இந்தக் குளத்தின் புனிதத்தை உணர்ந்து இதைச்சுற்றிய இடத்தைச் சீரமைக்கும் பொருட்டு துங்க் கிராமத்தாரிடமிருந்து வெறும் 700 ரூபாய்க்கு 1574-இல் இந்தப் பகுதியை வாங்கினார்.  அப்போது இது ராம்தாஸ்பூர் என்றே மக்களால் அழைக்கப்பட்டது. இந்த குளம் சாகாமையின் குளம் என்ற பொருளில் அமிர்தசரஸ் என்று பின்னால் தான் அழைக்கப்பட்டது. அதைச்சுற்றிய பகுதியும் பின்னாளில் குளத்தின் பெயராலே  அமிர்தசரஸ்  என்ற ஊரானது.

 

குரு ராம்தாசின் மகனும் 5வது குருவுமான குரு அர்ஜுன் தேவ் இங்கு ஆலயம் எழுப்ப 1589-இல் முஸ்லீம் புனிதர் மியான் மீர் என்பவர் கையால் அடித்தளம் அமைக்கச்செய்தார். குளத்தின் நடுவே அமைக்கப்பட்ட கோவில் கடவுளின் இருப்பிடம் என்ற பொருளில் ஹர்மந்திர் சாகிப் என்று அழைக்கப்பட்டது. 1601-இல் குருதுவாரா கட்டிமுடிக்கப்பட்டு 1604- இல் சீக்கிய புனித நூலான கிரந்தம் இங்கு வைக்கப்பட்டது. 1609- இல் 6வது குரு ஹர்கோபிந் சாகிப் சீக்கிய ஆன்மீக அதிகாரப்பீடமான அகல் டக்கட் என்பதனை இங்கு அமைத்தார்.(அகல்-காலவரையறையற்ற இறைவன். டக்கட்- கிரீடம்)  அதற்கான கட்டடமும் கம்பீரமாக எழுப்பப்பட்டது.  1634- இல் முகலாயப்படைகள் இந்த கோவிலுக்குள் நுழைந்து குரு ஹர்கோபிந் சாகிப் மேல் தாக்குதல் நடத்திப் பெரும் சேதம் விளைவித்தன. 1757 -இல் ஆப்கானிய படைகள் இதற்குள் நுழைந்து பெரும் தாக்குதல் நடத்தின. இந்தப் படையெடுப்பை எதிர்கொண்ட பாபா தீப் சிங் தலைமையிலான  பல்லாயிரம் சீக்கிய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து 1762 ,1764 ஆகிய ஆண்டுகளில் இடைவிடாது இதனைத்தாக்கிய ஆப்கானியர்கள் கோயிலையும், அதிகாரபீடக்கட்டடத்தையும் சிதைத்தனர். 1776- இல்  சேதமுற்றவை புதுப்பிக்கப்பட்டன. சீக்கியர்களின் தொடர் அர்ப்பணிப்புகளுக்கும், தியாகங்களுக்கும், இழப்புகளுக்கும் விடிவு காலம் பிறந்தது போலத் தோன்றியவர்தாம் சீக்கியப் பேரரசர் மகாராஜா ரஞ்ஜித் சிங். இப்படியும் ஓர் அரசர் வாழ்ந்தாரா என்று வியக்கவைக்கும் அவருடைய உன்னதமான வரலாற்றை அவரின் அருங்கட்சியகத்திற்குச் செல்லும்போது நினைவுகூர்வோம். இவரே  தம் செலவில் ,   165 கிலோ தங்கத்தைக்கொண்டு(அன்றைய மதிப்பு 65 இலட்சம்)  இந்தக்கோவிலைப் பொன்மயமாக்கினார். உயர்ந்த சலவைக்கற்களைப்பதித்துப் புதுப்பொலிவாக்கினார். 25 ஆண்டுகால உழைப்பில்,  1830- இல், இக்கோயில் அழகாகப் புதுப்பிக்கப்பட்டு இன்றைய வடிவப் பொற்கோயிலானது.

 

புனிதக் குளத்தைச்சுற்றி 4 திசைகளில் அமைந்த பளிங்குத்தரையில் நடந்தபடி சுற்றியுள்ளவற்றைப் பார்வையிட்டோம். .4 திசைகளிலிருந்தும் வருவோரை வரவேற்கும் வண்ணம்  பொற்கோயிலுக்கு 4 வழிகளை அமைத்துள்ளனர்.  சாதி, இன, மத , பால், வயது வேறுபாடின்றி அனைவரும் இந்த ஆலயத்திற்கு வரவேற்கப்படுகிறார்கள். யாராயினும் உள்ளே வருகையில் மது அருந்தக்கூடாது, புலால் உண்ணக்கூடாது, புகைக்கக்கூடாது, கால்கழுவித் தலையை மூடிக்கொண்டு வரவேண்டும் என்பனவே இங்குள்ள கட்டுப்பாடுகள். இதைப் பராமரிக்க  கையில் ஈட்டி ஏந்தியபடி சீக்கியத் தொண்டர்கள் பலவிடங்களில் பாதுகாப்புப்பணியில் நின்றிருந்தனர். சீக்கியப் புனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் வழியெங்கும் சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும், விளக்கக்குறிப்புகளாகவும் அவர்கள் சமய வரலாற்றைப் புரிய வைத்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கும் பெரும் மண்டபங்கள், பல அறைகளைக் கொண்ட குடியிருப்புகள், ஆயிரக்கணக்கானோர் உண்ணும் பெரும்  உணவுச்சாலை, புனிதர்கள் பெயரால் அமைந்த மண்டபங்கள், தலவிருட்சமாகக் கருதப்படும் புனித மரங்கள் முதலியவற்றைக் கடந்து தண்ணீரில் பாலம்போன்ற பாதை அமைந்த இடத்திற்குள் நுழைந்தோம். அங்கு நீண்டிருந்த வரிசையில் ஏறத்தாழ அரைமணிநேரம் காத்திருந்து இரவு பத்து மணியளவில் பொற்கோவிலுக்குள் நுழைந்தோம். 

 

அனந்தபூர் சாகிப் குருதுவாராவில் கண்ட அதே சூழல் தான். ஆனால் கூட்ட நெரிசலால் வழிபாட்டிடத்தில் சில விநாடிகளே நிற்க அனுமதிக்கப்பட்டோம். ஆனால் வழிபாட்டிடத்திற்கு மேல் அமைந்த பார்வை மாடங்களுக்குப் படிகளில் ஏறிச்செல்ல அனுமதித்தார்கள். அங்கிருந்து எந்தத்தடையுமின்றி மேலேயிருந்து எல்லா நிகழ்வுகளையும் கண்ணாரப்பார்த்தோம். அதற்கு மேலும் சென்று பொன்வேயப்பட்ட குருதுவாராவின் நுணக்கமான வேலைப்பாடுகளின் அழகில் மனதைப் பறிகொடுத்தோம். கீழே பக்திப்பரவசத்துடன்   10வது குருவான கிரந்த் சாகிப்பை மக்கள் தொழுது , காணிக்கைகள் செலுத்தி, தொண்டர்கள் கைகளிலிருந்து அன்பளிப்புகளும்  பெற்றுச் சுற்றி வந்து வேறுபாதையில் திரும்பிச்செல்ல மரியாதைமிக்க சேவகர்கள் ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தனர். திரும்பும் ஒவ்வொருவருக்கும் அல்வா போன்ற இனிப்புப்பிரசாதம் வழங்கப்பட்டது.

 

பொற்கோயிலுக்குச்செல்லும் பாதைக்கு நேர் எதிரே சீக்கிய ஆன்மிக தலைமைப்பீடமான  'அகல் டக்கட்' மாளிகை சீக்கியர்களின் தோற்றப்பொலிவைப்போல பேருருவாகக் காட்சியளித்தது. இங்கிருந்து தான் காலைநேரத்தில் புனிதநூலான 'கிரந்த் சாகிப்'  ஆடம்பர ஊர்வலமாகப் பொற்கோயிலுக்குள் கொண்டுசெல்லப்பட்டு  இரவு திரும்பி கொண்டு வரப்படுகிறது.

 

இனிய அனுபவங்களுடன் அந்த வளாகத்திலிருந்து திரும்பும்போது அழையாத விருந்தாளியாக பொற்கோவிலின் மேல் இந்திய இராணுவம் தொடுத்த  போரான 'ஆபரேஷன் புளு ஸ்டார்' நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. இந்நிகழ்வு இந்திய அரசியலில் நிகழ்ந்த 10 மானக்கேடுகளுள் ஒன்றாக இந்தியா டுடே இதழால் மதிப்பிடப்பட்டது. பிந்தரன்வாலே தலைமையில் பொற்கோவிலில் தங்கியிருந்த பிரிவினைவாதிகளின் மேல் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் தொடுத்த ஈவுஇரக்கமற்ற தாக்குதலாக  சீக்கியர்கள் பலரால் இது கருதப்பட்டது. இந்திய இராணுவத்தலைவர் எ.எஸ்.வைத்யா, துணைத்தலைவர் சுந்தர்ஜி (செங்கல்பட்டைச் சேர்ந்த தமிழர்)  ஆகியோரின் திட்டமிட்ட இராணுவ உத்திகளின்படி இத்தாக்குதலைச் சீக்கியரான குல்திப் சிங் ப்ரார் தலைமையில் நடத்தினர்.  சீக்கிய இராணுவ வீரர்கள் சிலரும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

1984 ஆம் ஆண்டு ஜூன் 3 முதல் 6 வரை எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை, சீக்கியரின் ஆண்டுத்திருவிழா காலத்தில் நிகழ்ந்ததாகும். சீக்கிய பக்தர்கள் பலவிடங்களிலிருந்தும் பெருங்கூட்டமாகக் குழுமியிருந்த இந்த விழா காலத்தில் திட்டமிட்டே இத்தாக்குதல் தொடங்கியது. இது போன்றதோர் விழா நாளில்தான் இக்கோவிலை முன்பு முகலாயர்களும், ஆப்கனியர்களும் தாக்கினர். பெரும்பாலான சீக்கியர்கள் மனதில் அச்சத்தைத் தோற்றுவிக்கும் நோக்கமே இதற்குக்காரணமாகக் கருதப்பட்டது.

 

தாக்குதலுக்கு முன் உலகத்தொடர்பிலிருந்து பஞ்சாப் துண்டிக்கப்பட்டது. பஞ்சாபின் முக்கிய நகரங்களை 36 மணிநேர ஊரடங்கு சட்டம் முடக்கியது. எல்லாவிடங்களிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பலவிடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பத்திரிகையாளர்கள் காலை 5 மணிக்கே இராணுவ வாகனங்களில் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு அரியானா எல்லையில் இறக்கிவிடப்பட்டனர். இந்த நிகழ்வை அறிவிக்கமுயன்ற செய்தியாளர்கள் காவல்துறையால் அச்சுறுத்தப்பட்டனர். எல்லா செய்தித்தாள்களும் தணிக்கை செய்யப்பட்டன.

 

ஏழு விஜயந்தா இராணுவ டாங்குகள் உட்பட  இராணுவத் தளவாடங்கள் பலவும் பொற்கோவிலில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன. கமாண்டோ படையின் முதல் அணியும், பாரசூட் படையும் உட்புகுந்தன. இராணுவம் 5ஆம் தேதி இரவு  தாக்குதலைத் தொடங்கி  7ஆம் தேதி விடியற்காலை  வளாகத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது. ''இந்திரா காந்தி பங்களா தேஷ் போரில் பெற்ற வெற்றியை விட இது மகத்தானது'' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இதைக் கொண்டாடியது. பிந்திரன் வாலே, இந்திய முன்னாள் இராணுவ ஜென்ரலும் தீவிரவாதியுமான சாபெக் சிங் உட்பட போராளிகள் பலரும் கொல்லப்பட்டனர்.இராணுவத்தினர் 83 பேரும், மற்றவர்கள் 492 பேரும் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்தது. ஆனால் 8000 பேர் வரை மாண்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வழி அறியப்படுகிறது. அகாலிகட்சித் தலைவரான லோங்கோவால் மற்றும் 450 தீவிரவாதிகள் இராணுவத்திடம் சரண்டைந்தனர் எலிப்பொறியில் சிக்கியது போல அப்பாவி பக்தர்கள் பலரும் இராணுவ நடவடிக்கையில் படுகாயமுற்றோ மாண்டோ போயினர். தாக்குதலின் போது சீக்கிய ஆன்மிக தலைமையகமான அகல் டக்கட் கட்டடம் சேதமடைந்தது; சீக்கிய பார்வை நூலகம் தீக்கிரையானது. அரிய நூல்களும், கையெழுத்துப்பிரதிகளும் அழிக்கப்பட்டன.

 

 

உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், மக்கள் உரிமை இயக்கத்தின் தந்தையுமாகக் கருதப்படுகிற வி.எம். தார்குண்டே உட்பட பலரும் இந்நடவடிக்கை அப்பட்டமான மனித உரிமை மீறல் எனக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

இராணுவ நடவடிக்கையின் பின் விளைவாகப் பல சீக்கிய இராணுவ வீரர்கள் கலவரத்தில் இறங்கினர். இராணுவம் உட்பட பல அரசு பணிகளிலிருந்த சீக்கியர்கள் பலர் பணிகளிலிருந்து விலகி தம் எதிர்ப்பைக் காட்டினர். இந்திய அரசு வழங்கிய பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்ற சீக்கிய சாதனையாளர்கள் பலர் அவற்றை அரசுக்கே திருப்பித்தந்தனர். பழிவாங்கும் நடவடிக்கையாக, நான்கே மாதத்தில் 31.101984 அன்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தம் சீக்கிய மெய்க்காப்பாளர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்திய இராணுவத்தலைவர் எ.எஸ்.வைத்யா பணிஓய்வுபெற்று தம் சொந்த ஊரான புனேயில் 10.08.1986 அன்று காரில் சென்றுகொண்டிருந்தபோது இரு சீக்கியர்கள் அவரைச் சுட்டுக்கொன்று பழிதீர்த்தனர்.

 

                                                    தமிழர் கற்க வேண்டிய பஞ்சாபியப் பாடங்கள்

 

         5. ஜாலியன்வாலா பாக் அனுபவங்கள்          

         

'ஆபரேஷன் புளு ஸ்டார்' நிகழ்வுகளுக்குப் பின்னர்  சீக்கிய சமூகத்தின் வற்புறுத்தலால்   பொற்கோவில் வளாகத்தைவிட்டு இராணுவம் நீங்கவேண்டியதாயிற்று.

 

இந்திராகாந்தி கொல்லப்பட்ட நிகழ்ச்சியின் எதிர்விளைவாக வெடித்த கலவரத்தில் 15,000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அன்றைய அரசியல் சூழலில்   சீக்கியப்படுகொலைகளைக் காவல்துறை வேடிக்கைபார்த்தது. சீக்கியரான ஜெயில்சிங் நாட்டின் குடியரசுத்தலைவராக இருந்தும் சீக்கியர்களைக் காப்பாற்ற சக்தியற்றவரானார். சீக்கிய ஆன்மிக தலைமையகமான 'அகல் டக்கட்டு'க்கு வந்த அவர்,  சீக்கிய குருவின் முன் விசாரிக்கப்பட்டார். பொற்கோவில் தாக்குதலும் பிறவும் தம்மை மீறி நிகழ்ந்தவை என அவர் விளக்கம் தந்த பின் மன்னிக்கப்பட்டார்.எனினும் பிராயசித்தமாக, பொற்கோவில் நுழைவாயிலில் பக்தர்களின் காலணிகளைப் பெற்றுப் பாதுகாக்கும் தொண்டை  இந்திய குடியரசுத் தலைவர் செய்யவேண்டியதாயிற்று.

 

சீக்கியர்களுக்கு நேர்ந்த இந்தக் கொடுமைகள் பற்றி நாடெங்கும், உலகெங்கும் கண்டனங்கள் எழுந்த சூழலில்தான் பொற்கோவிலைவிட்டு இராணுவம் வெளியேறியது. இராணுவம் மீண்டும் நுழையாது என்ற தைரியத்தில் போராளிகள் அங்கு மீண்டும் குடியேறி தங்கள் அடுத்த வியூகங்களை அமைக்கத்தொடங்கினர். பொற்கோவில் ஏறத்தாழ இரண்டாண்டுகள் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த்தைக்கண்டுகொள்ளாமல் இருந்த இராஜீவ் காந்தி  அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடின. அவர்களின் தொடர் வற்புறுத்தலின் விளைவாக  'ஆபரேஷன் பிளாக் தண்டர்' என்ற பெயரில்  30.04.1986 அன்று 300 தேசிய இராணுவப்படையினரும்,700 எல்லைப்பாதுகாப்புப்படையினரும்   பொற்கோவில் வளாகத்தில் நுழைந்து 300 பிரிவினைவாதிகளைப் பிடித்தனர்.  முந்தைய அனுபவத்தில் பாடம் கற்ற இராணுவமும், அரசும் மிக எச்சரிக்கையாக புதிய உத்திகளுடன் தம் தாக்குதலை நிகழ்த்தினர்.8 மணிநேரம் நடந்த போரில் ஒருவரே மாண்டார்; இருவருக்கே காயம்.

 

ஆனால் இதில் தப்பியோடிய போராளிகள் மீண்டும் பொற்கோவிலைக் கைப்பற்றிக்கொண்டு தம் நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். எனவே இறுதியான ,உறுதியான நடவடிக்கையாக மீண்டும் 09.05.1988 அன்று ஆபரேஷன் பிளாக் தண்டர்-2 என்ற பெயரில் , பஞ்சாப் காவல்துறைத்தலைவர் கன்வார் பால்சிங் கில் தலைமையில், பலத்த தாகுதல் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு எந்தச் சேதமும் நிகழாவண்ணம் திட்டமிடப்பட்டது. பத்திரிகையாளர்கள் எதனையும் கண்காணிக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. இதில் எஞ்சியிருந்த 200 போராளிகள் சரணடைந்தனர். 41 பேர் இறந்தனர்.குறைவான இழப்புகளுடன் பொற்கோவில் வளாகத்தில்  அமைதி மீண்டது. ஒருவழியாக 23.05.1988 முதல் பொதுமக்கள் வழிபாட்டிற்கு வளாகம் திறக்கப்பட்டது.அரசியல் கட்சிகளோ, இராணுவமோ இனி பொற்கோவில் வளாகத்தைப் பயன்படுத்தக்கூடாது என அரசு தடைஆணை பிறப்பித்தது.    இதுபோன்ற மாற்றுமுறைகளை 'ஆபரேஷன் புளு ஸ்டார்' கையாண்டிருந்தால் சீக்கியர்களின் கோபத்திற்கும், உலகின் கண்டனத்திற்கும் ஆளானதைத் தடுத்திருக்கலாம் என்று விமர்சிக்கப்பட்டது.

 

1998 இல் சோனியா காந்தி அம்மையார் இங்கு வந்தபோது இராணுவம் பொற்கோவில்மேல் தாக்குதல் நடத்தியது தவறு என்று வருத்தம் தெரிவித்து அதிகாரப்பூர்வாக மன்னிப்பும் கேட்டார்.

 

இத்தனை நிகழ்வுகளும் நடந்த சுவடேயின்றி, நான் பார்த்த பொற்கோவில், அமைதியின் வடிவமாக, சீக்கியர்களின் பக்தியின் உறைவிடமாக  காட்சியளித்தது. காலமே துயரங்களைக் கழுவிட்டிருந்தது. இனி அங்கு வந்து தொழும் சீக்கியர்களுக்கு மகிழ்ச்சியும், நிம்மதி கிடைக்கட்டும் என்று வேண்டி நாங்கள் இரவு 11 மணியளவில் அங்கிருந்து விடுதிக்குத் திரும்பினோம்.

 

மறுநாள் காலைமுதல் அமிர்தசரஸ் நகரில் நாங்கள் பெற்ற அனுபவங்கள் வாழ்வில் மறக்கமுடியாதன. அன்று காலை முதலில் எங்களை மெய்சிலிர்க்க வைத்த இடம் ஜாலியன்வாலா பாக் ஆகும். பொற்கோவில் வளாகத்திலிருந்து இது ஐந்து நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைவரலாற்றில் முக்கிய அங்கம் வகித்த இவ்விடத்தில் அப்பாவிகள் சிந்திய இரத்தத்தை நினைவுறுத்துவது போல சிவப்புநிற கற்களால் அமைந்த வெளிமுகப்பு!பின் குறுகலான நுழைவாயில்.   அங்கு நுழைந்து குறுகலான சந்து வழியாகச் சென்றால் ஏறத்தாழ 7 ஏக்கர் அளவுள்ள மாபெரும் திடல் காணப்பட்டது. திடலின் எல்லாப்புறமும் வீடுகள், பெரிய கட்டடங்கள் சூழ்ந்திருந்தன. பஞ்சாபின் புகழ்பெற்ற பைசக்தி திருவிழாநாளான 13.04.1919 அன்று ஏறத்தாழ 20,000 மக்கள் கூடியிருந்தபோது அடுத்த சில நிமிடங்களில் நடக்கப்போகும் கொடூரங்களை அவர்களில் யாரும் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள.  அந்த மைதானத்தில் நின்று நோட்டமிட்டபோது   சங்கிலித்தொடரான நிகழ்வுகள் என் கண்முன்னே  ஓடின.

 

முதல் உலகப்போரில் பிரிட்டனுக்காக, பெரும்பான்மையான பஞ்சாபியர் உட்பட,  43,000 இந்திய வீரர்கள் உயிர்நீத்தனர். இத்தியாகத்தால் இந்தியர் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. போரின் எதிரொலியான பொருளாதார நெருக்கடி, மக்களின் வாழ்வை மேலும் அவலமாக்கியது. ஆட்சியாளர்களான வெள்ளையர்மேல் கடும் அதிருப்தி ஏற்பட்டதன் விளைவாக விடுதலைப்போராட்டம் சூடுபிடித்தது. இதனை அடக்க ' யாரையும் கைது செய்து விசாரணையின்றி சிறையிலடைக்கலாம்' என்று ஆங்கிலேயர் போட்ட ரவுலத் சட்டத்தை அகிம்சைமுறையில் எதிர்க்க காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார்.

 

சிறிதும் அச்சமின்றி, கொடுமைகளைக்கண்டு கொதித்தொழுதல், அநீதியை எதிர்த்தல், என்பன பஞ்சாபியர்களின், சிறப்பாக சீக்கியர்களின் சமூகப்பண்பாக இருப்பதால் இதற்கு விலையாக அம்மக்கள் இந்தியாவில் மற்றவர்களைவிட  மிகுந்த உயிர்த்தியாகம் செய்பவர்களாக இருக்கிறார்கள். அநீதியான ஒரு சட்டத்தை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கில் அமிர்தசரஸ் நகரில் ஒரு பெரும் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்த பஞ்சாபின் புகழ்பெற்ற விடுதலை போராட்டத்தலைவர்களான டாக்டர் சைபுதீன் கீச்சுலு, டாக்டர் சத்யபால் ஆகிய இருவரையும்  கைது செய்து இரகசிய இடத்தில் சிறைவைத்தனர். இவர்கள் இருவரும் அகிம்சை வழியில் நம்பிக்கையுடையவர்கள். ஆங்கிலேயர்களுக்கு உதவியாக முதல் உலகப்போரில் மருத்துவச்சேவை புரிந்தவர் டாக்டர் சத்யபால். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டமும், ஜெர்மன்பல்கலைக்கழகமொன்றில் முனைவர் பட்டமும் பெற்று வழக்கறிஞராகப்பணியாற்றி, பின் பணியைத்துறந்து காந்தியவழியில் அறபோரில் இறங்கியவர் டாக்டர் சைபுதீன் கீச்சுலு. (அவர் மகளைத் தமிழகத்து இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசன் மணந்தார்).

 

இந்த தலைவர்கள் இருவரையும் விடுதலை செய்யக்கோரி பஞ்சாபில் கலவரம் வெடித்தது.வங்கிகள், அரசுநிறுவனங்கள், இரயில் நிலையங்கள், தந்திக்கம்பிகள் சேதப்படுத்தப்பட்டன. பல வெள்ளையர்கள் தாக்கப்பட்டு 5 பேர் கொல்லப்பட்டனர். 15 ஆண்டுகளாக அமிர்தசரஸ் நகரில் வாழ்ந்த கல்வியாளரும், மிஷினரியுமான ஆங்கிலப்பெண்மணி   மார்செல் ஷெர்வுட் சைக்கிளில் செல்லும் போது கடுமையாகத்தாக்கப்பட்டு குற்றுயிரானார். இதுபோன்ற நிகழ்வுகளைக்கண்டு ஆங்கிலேயர்களுக்குப் பாதுகாப்பின்மை ஏற்பட்டிருக்கிறது எனப் பீதியடைந்து ஆங்கில அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு டயர்  இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கத்துடித்தார்.  அவரின் மேலதிகாரியான பஞ்சாப் லெப்டினென்ட் கவர்னர் மைக்கிள் ஓ ட்வையர், 1857 இல் நடந்தது போன்ற இன்னொரு சிப்பாய்க்கலகம் வருமென அஞ்சி கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். இதன் விளைவாக இராணுவச்சட்டம் கொண்டுவரப்பட்டு, ஆர்ப்பாட்டக்கார்கள்மேல்  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பலர் இறந்தனர். ஊரடங்குச்சட்டம் அமிர்தசரசில் பிறப்பிக்கப்பட்டது..

 

துப்பாக்கிச்சூட்டைக்கண்டித்து ஜாலியன்வாலா பாக்கில் பைசக்தி திருநாள் கொண்டாடும் நாளில் ஓர் அமைதியான கண்டனக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அமிர்தசரசில் ஊரடங்கு  சட்டம் இருக்கிறதென்பதறியாத கிராமத்து மக்கள் பலரும் விழாநாளில் பொற்கோவிலில் வழிபட்டுவிட்டு பக்கத்தில் நடைபெறும் கூட்டத்திற்குப் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.  இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பஞ்சாபியரைப் பயமுறுத்திப்பாடம் கற்பிக்க முடிவு செய்தார் ஜெனரல் டயர்.கூட்டம் மாலை 4.30க்குத்தொடங்கியது. ஏறத்தாழ 5.30 மணிக்கு இரண்டு பீரங்கி வண்டிகளில் எந்திரத்துப்பாக்கிகளை ஏற்றிக்கொண்டு குர்கா மற்றும் பத்தான் இராணுவ வீரர்கள் 90 பேரைத்திரட்டிக்கொண்டு அங்கு வந்தார். இதில் 50 பேரிடம் துப்பாக்கிகளும் மற்றவர்களிடம் வேறு ஆயுதங்களும் இருந்தன. பீரங்கி வண்டி குறுகலான அந்தச் சந்தில நுழையாதது டயருக்குப் பெரும் ஏமாற்றமாயிற்று. கோபத்துடன் வீரர்களை அணிவகுத்துக்கொண்டு உள்ளை நுழைந்தார்.

 

டயர் நிற்கும் இடத்திலிருந்து சில அடிதூரத்தில் ஒரு பேச்சாளர் பேசிக்கொண்டிருக்க மக்கள் சிலர் அவர் பேச்சைக்கேட்டுக்கொண்டும், சிலர் தமக்குள் பேசிக்கொண்டும், சிலர் அரைத்தூக்கம் போட்டுக்கொண்டும் இருந்தனர். மக்களுக்கு எந்த முன் எச்சரிக்கையும் தராமல், அவர்களைக்கொல்வதே நோக்கமாக, டயர்   'சுடுங்கள்' என வீர்ர்களுக்கு உத்தரவிட்டார். வீரர்கள் முதலில் மக்களை நோக்கிச்சுடாமல் துப்பாக்கிகளைச் சற்று உயர்த்தி வானத்தில் சுட்டனர். 'இதற்காகவா உங்களை அழைத்து வந்தேன்.துப்பாக்கியை இறக்கி, மக்கள் மேல் சுடுங்கள்' என்று கத்தினார் டயர். உடனே குண்டுமழை பொழிந்தனர். எதிர்பாராத இந்த ஆவேச குண்டுத்தாக்குதலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சிதறி ஓடினர். மரணக்கூச்சலுடன் தப்பிஒட முயன்றவர்கள் வாசலில் பீரங்கிவண்டியும், டயரும் நிற்பதைப்பார்த்து மிகக்குறுகலான வேறு வழிகளில் தப்பியோட முயன்றனர். கூட்டமாக மக்கள் தப்பிஓடும் வழிகளை நோக்கிச்சுடச்சொன்னார் கொடுமனங்கொண்ட டயர். குண்டுதாக்காமல் இருக்க தரையோடு தரையாகப் படுத்தவர்கள்மீதும் சுட்டனர். சாவு பயத்தில் வேறுவழியின்றி அங்கிருந்த கிணற்றில் குதித்து தப்பமுயன்ற 120 பேர் மாண்டனர்.குண்டுகள் தீர்ந்த துப்பாக்கிகளில் குண்டுகளை மேலும் நிரப்பிச்சுடச்சொன்னார் டயர்.  கொணர்ந்த குண்டுகள் தீரும்வரை 1650 ரவுண்டுகள் சுட்டுவிட்டு, குண்டடிபட்டவர்களையும், இறந்தவர்களையும் பற்றிக் கவலையின்றி, தீராப்பழியைச்சுமக்கப்போகிறோம் என்ற  குற்றவுணர்வுமின்றி, 10 முதல் 15 நிமிடங்களில், அந்த இடத்தைவிட்டு டயர் வீரர்களுடன் நீங்கினார்.  வெளியே ஊரடங்கு சட்டம். எனவே மருத்துவமனைக்குச்செல்ல வழியின்றி அடிபட்டவர்கள் சிலர் சிகிச்சையின்றி இறந்தனர்.

இந்த நிகழ்வை அமுக்கமுயன்ற அரசு இறந்தோர்- 379, காயமுற்றோர்- 1100 என்று குறிப்பிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி அமைத்த விசாரணைக்குழு இறந்தோர்- 1000 அடிபட்டோர்- 1500 என்று அறிவித்தது.

 

இந்திய தேசிய காங்கிரசின் தீர்மானத்தின்படி 1920 இல் இந்த இடத்தில் நினைவுச்சின்னம் ஏற்படுத்த ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.விடுதலை வரலாற்றின் புனிதபூமியான   இந்த இடத்தை 1923 இல் உரியவர்களிடமிருந்து அந்த அறக்கட்டளை வாங்கியது. மறக்கவியலாத் துன்பநிகழ்வு நடந்து 42 ஆண்டுகளுக்குப்பின்  நெடியதோரு நினைவுச்சின்னமும் பிறவும் உருவாக்கப்பட்டு இந்திய குடியரசுத்தலைவர் இராஜேந்திர பிரசாத், பிரதமர் ஜவகர்லால் நேரு முன்னிலையில் 13.04.1961 அன்று மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.தியாகிகளின் நினைவுத்தீபம் பின்னர் ஏற்றப்பட்டது. இந்த நினைவுச்சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர் பெஞ்சமின் போல்க் ஆவார்.

 

இந்த நினைவுகளை உட்கொண்டு நாங்கள் ஜாலியன்வாலா பாக் வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட சின்னங்களைப் பார்க்கும்போது நெஞ்சு விம்மியது.  துப்பாக்கி குண்டுகள் துளைத்த வடுநீங்காச் சுவர்கள் வரலாற்றுப்பதிவாக உள்ளன. மாடம் அமைத்து     கம்பி வளைபோட்டு பத்திரப்படுத்தியுள்ள  மரணக்கிணற்றைக்குனிந்து நோக்கியபோது அப்பாவிகளின் அடங்காத அழுகுரலின் ஒலியை உணர முடிந்தது. 'இங்கு நின்றுதான் டயரும், கூலிப்படையினரும் நாலாப்பக்கமும் மக்களைச்சுட்டார்கள்' என்று குறிக்கும் பிரமிட் வடிவ நான்குபுற அறிவிப்பருகே  நின்றுபார்த்தபோது  விலங்குகளைப்போல    மனிதர்களை வேட்டையாடிய  இந்தக் கல்நெஞ்சர்கள் மிருகங்களாக அப்போது மாறியிருக்கவேண்டும் என்றே தோன்றியது. அச்சுறுத்தலுக்கு அடிபணியாது நிமிர்ந்து நிற்கும் விடுதலை வீரர்களின் நெஞ்தைப்போன்று காணப்பட்ட நெடிய சிவப்பு நிற நினைவுச்சின்னம் புதிய தலைமுறைக்கு நிறைய பாடங்களை அறிவுறுத்துகிறது. சுடர்விட்டு எரியும்  அணையாத தியாகதீபம் உயிரிழந்த தியாகிகளை நாடு மறக்கவில்லை என்று சுட்டிக்காட்டிக்கொண்டேயிருக்கிறது.

 

இந்த வாளாகத்தில் அமைந்த தியாகிகளின் காட்சியகம் பார்த்தே ஆகவேண்டிய ஒன்றாகும். ஜாலியன்வாலா பாக் நிகழ்வை நேரில் காண்பதுபோல வரையப்பட்ட ஓவியம் நிழல்படத்தைவிட நிஜமாக, நடந்தைக் காட்சிப்படுத்துகிறது. பாஞ்சாபிய விடுதலைச்சிங்கங்களின் வீரவரலாறை அங்கு நெஞ்சுருக விளக்கியிருந்தார்கள். அவர்கள் செய்த அர்ப்பணிப்பிற்கு முன் நம்மவர்கள் பங்களிப்பெல்லாம் மிகச் சிறிது என்ற உண்மையை உணராமல் இருக்க முடியவில்லை.

 

காட்சியகத்தில், ஜாலியன்வாலா பாக் மைதானத்தில் தம் கணவனைக் கண்முன் பறிகொடுத்த இரத்தன் தேவி என்ற வீரப்பெண்ணின் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலம்  பஞ்சாபிய மங்கையரின் மனதிடத்திற்குச்  சான்றாகும். அவர் கூறுகிறார்: ''இரவெல்லாம் கண்டதும் சுடும் ஊரடங்கு சட்டம் இருந்ததால் என் கணவரின் சடலத்தை நான் எடுத்துச்செல்ல முடியவில்லை. இரமுழுவதும் கண்விழித்து கையில் ஒரு மூங்கில் தடியுடன் நரிகளிடமிருந்தும், பிணந்தின்னிக்கழுகுகளிடமிருந்தும் என் கணவரின் உடலைக்காப்பாற்றிக்கொண்டிருந்தேன்.என் அருகே மூன்று ஆண்கள் வலியால் கதறிக்கொண்டிருந்தனர்.  12 வயது சிறுவன் இடத்தைவிட்டு நகர முடியாமல் என்னிடம் தண்ணீர் கேட்டுக்கெஞ்சினான். ஆனால் அங்கு எங்கும் தண்ணீரே இல்லை. இரவு 2 மணிக்குச் சுவரோடு சுவராக சாய்ந்திருந்த ஜாட் ஒருவர் தம் காலைத்தூக்கிவிடும்படி கேட்டார். அவரிடம் சென்று இரத்தத்தில் தோய்ந்திருந்த அவர் ஆடைகளை நீக்கி அவரைத் தூக்கி நிறுத்தினேன். குவியல் குவியலாக உடல்கள் கிடந்தன. அவற்றில் பலவும் அப்பாவிக்குழந்தைகளுடையன. அந்தக் காட்சியை நான் என்றும் மறக்கமுடியாது. இரவு முழுவதும் அழுதுகொண்டே கவனித்துக்கொண்டிருந்தேன்...''

 

இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணமான ஜெனரல் டயர் தான் செய்த செயலை மேலிடத்திற்கு அறிவித்தவுடன், மறுநாள் பஞ்சாப் லெப்டினென்ட் கவர்னர் மைக்கிள் ஓ ட்வையர் அவர்களிடமிருந்து வந்த தந்தி வாசகம்: 'உங்கள் நடவடிக்கை சரியானதே. இதை ஆமோதிக்கிறேன்'         

           

 

                                                               தமிழர் கற்க வேண்டிய பஞ்சாபியப் பாடங்கள்

 6.துன்பப்பட்டவர்களின் கண்ணீர் குண்டாகப் பேசியது        

             

ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்ந்த மறுநாள் பஞ்சாப் கொந்தளித்தது. கடைகள் மூடப்பட்டன. தன் முந்திய நாள் அராஜகத்திற்குச் சிறிதும் கவலைப்படாது, மாறாக மேலும் இதனால் ஆவேசமடைந்த ஜெனரல் டயர் மறுநாள் (14.04.1919)  மதியம் அமிர்தசரஸ் மக்களை நோக்கி,'' நான் ஒரு சிப்பாய் மற்றும் இராணுவ வீரன் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? உங்களுக்கு என்ன வேண்டும்? அமைதியா? சண்டையா?  சண்டைவேண்டுமெனில் அதற்கு அரசு தயாராக உள்ளது. அமைதி வேண்டுமெனில் எல்லாக்கடைகளையும் திறவுங்கள். இல்லையேல் துப்பாக்கிமுனையில் திறக்க வைப்பேன். நான் நேரடியாக செயலில் இறங்கும் இராணுவக்காரன். ஆங்கிலேயர்களைக்கொன்ற தவறான செயலில் ஈடுபட்டுள்ளீர்கள். அதற்கு உங்கள்மீதும், உங்கள் குழந்தைகள்மீதும் பழிதீர்க்கப்படும்'' என்று கோப வெறிகொண்டு பேசினார்.

 

அதுமட்டுமன்றி அமிர்தசரஸ் நகரில்  கலகக்காரர்களால் தாக்கப்பட்ட பெண்மணி  மார்செல் ஷெர்வுட் வாழ்ந்த தெருமுனையில் இதுவரை கேள்விப்படாத தவழ்ந்துசெல்லும் அறிவிப்பு அவரால் வழங்கப்பட்டது. ஏப்ரல் 19 -25 வரை 150 கஜமுள்ள  அந்தத் தெருவில் யாரும் நடந்து போக அனுமதியில்லை. தெருவுக்குள் நடக்கவேண்டுமாயின் வயிறு தரையில் படும்படி இரு கை, கால்களால் தவழ்ந்து வரவேண்டும். மனிதர்களை மிருகங்களாகச்சிறுமைப்படுத்தும் இந்த ஆணையால் தெருவின் மக்கள் அதிர்ச்சியடைந்து கூரை வழியே வீடுகளுக்குமேலே நடந்து தெருவைக்கடந்தனர்.

 

ஜாலியன் வாலாபாக் கொடுமைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து பஞ்சாபியர் ஏப்ரல் 15 அன்று குஜ்ரன்வாலா என்ற ஊரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதை அடக்க விமானத்தில் பறந்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.12பேர் கொல்லப்பட்டு, 27 பேர் படுகாயமுற்றனர். மேலதிகாரிகளிடம், 'புரட்சிப்படை எதிர்கொண்டதால் பஞ்சாபிற்கு நல்லொழுக்கப்பாடம் கற்பிக்கவேண்டியதாயிற்று' என்று தம் அத்துமீறிய செயல்களுக்கு விளக்கமளித்த டயரின் 'வீர'த்தைப் பாராட்டி மேலதிகாரிகள் பிரிகேடியர் பதவியில் இருந்த அவரை மேஜர் ஜெனரலாக உயர்த்தினர். நடந்த நிகழ்வுகளை இயன்றவரை அதிகாரிகள் வெளியேவிடாமல் பார்த்துக்கொண்டதால் பிரிட்டனில் கூட டிசம்பர் மாதம் தான் விரிவான விவரம் தெரியவந்தது.

 

டயரின் செயலுக்கு வெள்ளையரிடையே ஆதரவும் எதிர்ப்பும் இருந்தன. பிரிட்டிஷ் உழைப்பாளர் கட்சி ''டயரும், மைக்கிள் ஓ ட்வியரும்,   வைஸ்ராய் லார்டு செம்ஸ்போர்டும்  நிகழ்த்தியது கொடுமையான காட்டுமிராண்டித்தனமான செயல்'' என்று தீர்மானம் போட்டது. அப்போது போர் செயலாளராக இருந்த   வின்ஸ்டன்    சர்ச்சில் '' ஆங்கில் ஏகாதிபத்தியத்தின் நவீன வரலாற்றில் இதற்கு இணையான நிகழ்வு நடந்ததில்லை. அசாதாரனமான, மிருகத்தனமான இந்நிகழ்வு தனித்துவம் வாய்ந்தது'' என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார்.

 

பலரின் கண்டனங்களின் விளைவாக  ஆங்கில அரசு லார்டு வில்லியம் ஹண்டர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்தது. விசாரணைக்குழுவின் முன் 'அமிர்தசரசின் கசாப்புக் கடைக்காரன்' என்று பெயரெடுத்த டயர் உதிர்த்த சில புண்மொழிகள் வருமாறு:

 

 

''துப்பாக்கிச்சூடு நிகழ்த்தாமல் அந்தக்கூட்டத்தைக் கலைத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் திரும்பி வந்து நகைத்திருப்பார்கள்.நான் என்னை முட்டாளாக்கிக்கொண்டிருக்க வேண்டும்.

 

''பீரங்கி வண்டி உள்ளே நுழைய முடிந்திருந்தால் எந்திரதுப்பாக்கியைப் பயன்படுத்திச்சுட்டிருப்பேன். கூட்டம் கலையத்தொடங்கியவுடன் நான் சுடுவதை நிறுத்தவில்லை.ஏனெனில் கூட்டம் முற்றிலும் கலையும் வரை சுடுவது என் கடமை என நினைத்தேன். சிறிதளவே சுடுவது பயனளிக்காது.

 

''துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டவர்களைக் கவனிப்பது என் வேலையன்று. மருத்துவமனைகள் திறந்திருந்தன. அவர்கள் அங்குச் சென்றிருக்கமுடியும்.''

 

விசாரணைக்குழு சில கண்டனங்களை மட்டும் முன்வைத்தது: ''அடக்கப்படவேண்டிய கிளர்ச்சி என்று டயரும், சர் மைக்கிள் ஓ ட்வயரும் குறிப்பிட்ட சூழல் அங்கு இல்லை. மக்களைக் களையும்படி எச்சரிக்கவில்லை. நீண்டநேரம் சுட்டது தவறு. மக்களுக்குப் பாடம் கற்பிக்க இதனைச்செய்ததாகக்கூறுவது தவறு. காயம்பட்டவர்களைக் கவனிக்காமல் விட்டது தவறு. இறுதியாக கடமை என்ன என்பதைத் தவறாகப்புரிந்துகொண்டு டயர் செயல்பட்டிருப்பது குற்றமாகும்.''

 

டயரின் செயல்பாடுகளுக்கு ஓ டவ்யர் முதலிய மேலதிகாரிகளின் ஒப்புதல் இருந்ததால் விசாரணைக்குழு அவருக்குத் தண்டனை ஏதும் வழங்கவில்லை. வெறுமனே அவருடைய பணியிலிருந்து மட்டுமே விடுவிக்கப்பட்டார்.மீண்டும் பணியில் சேரவிரும்பாது பணிநீங்கிக்கொள்வதாகக் கடிதம் தரும்படி இந்திய இராணுவத்தலைவர் சர் மன்றோவால் கேட்டுக்கொள்ளப்பட்டார். அவ்வளவுதான் !

 

பிரிட்டன் திரும்பிய அவரை, 'மார்னிங் போஸ்டு' என்ற இதழ் 'டயரின் நடவடிக்கை ஐரோப்பிய மகளிரின் மதிப்பைக்காத்த செயல்' என்று பாராட்டியதோடு மட்டுமன்றி, தம் இதழ் சார்பாக  26,000 பவுண்டு பணமுடிப்பும் வழங்கிச் சிறப்பித்தது. டயருக்குச்சிறப்புச்செய்ய 13 பெண்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு அக்குழு அவருக்குத் தங்கவாளும், பணமுடிப்பும் வழங்கி 'பஞ்சாபின் மீட்பன்' என்று பாராட்டவும் செய்தது. இந்த நிகழ்வு  நோபல் பரிசு பெற்ற வங்கக்கவிஞர் இரவீந்திரநாத் தாகூரை அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியது. தம் எதிர்ப்பைக்காட்ட ஆங்கில அரசு தந்த ''நைட்வுட்'' பட்டத்தைத் திருப்பித்தந்தார்.

 

டயர் ஆங்கிலேயராயினும் பிரிட்டிஷ் இந்தியாவில், இன்றைய பாகிஸ்தானில் உள்ள முர்ரி என்ற இடத்தில் பிறந்து சிம்லாவில் கல்வி கற்றவர். இந்தியர்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் பார்த்து வளர்ந்தவர். இந்தியர்களுக்குத்  தாம் செய்த கொடுஞ்செயல்களைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாது 21.01.1921 தேதியிட்ட 'குளோப்' என்ற இதழில் 'பேரரசுக்கு இன்னல்' என்ற தலைப்பில் தாம் உணர்ந்த இந்தியாவைப்பற்றி ஒரு சூடான கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் உதிர்த்த சில வரிகள்:

 

0 இந்தியர்களுக்குச் சுயாட்சி தேவையில்லை. அவர்களுக்கு அது புரியாது.

0 அறிவொளி படைத்த மக்களுக்கே பேச்சுச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் வழங்க முடியும். இந்தியர்கள் அறிவொளி படைத்தவர்களாக இருக்க விரும்பவில்லை.

0 பதினோராவது கட்டளை இந்தியாவிற்குத்தேவை 'அது கிளர்ச்சி செய்யாதே' என்பதாகும்.

0 மக்களின் தீய எண்ணம், ஒழுங்கிலிலிருந்து நெறி தவறல் இவற்றிற்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்கும் காலம் இந்தியாவிற்கு வரும்.

0 இந்தியா தகுதியான சுயாட்சியைப்பெற காந்தி வழிகாட்டமாட்டார். எல்லா மக்களுக்கும் நீதி கிடைக்க, அசைக்கமுடியா நிர்வாகச்சீர்மையுடன் பிரிட்டிஷ் அரசு தொடரவேண்டும்.

 

1927 இல் டயர் பக்கவாத நோயால் தாக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தபோது அமிர்தசரஸ் நிகழ்வுகள் அவரைத் தூங்கவிடாமல் துன்புறுத்தின.மனமுடைந்தே அவர் இறந்ததாகக் குடும்பத்தினர் கூறினர். கடைசியாக அவருக்கு ஆறுதலும், சிகிச்சையும் அளித்த ஒருவரிடம் அவர் கூறினாராம்: ''உங்கள் உதவிக்கு நன்றி. ஆனால் நான் குணமாக விரும்பவில்லை. அமிர்தசரசின் நிலையை உணர்ந்த பலர் நான் செய்தது சரி என்றனர். ஆனால் மற்றவர்கள் நான் செய்தது தவறு என்கின்றனர். நான் இறந்துபோய் என்னைப்படைத்தவனிடம் நான் செய்தது சரியா தவறா என்று கேட்டறியவேண்டும்''

 

ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தனத்திற்கும், அடக்குமுறைக்கும் எதிரான பிரகடனம் செய்ததும், மதிப்புமிக்க மக்கள் உரிமைச்சட்டம்-1864 என்பதனைக் கொணர்ந்ததுமான பெருமைமிக்க 1864 ஆம்  ஆண்டில்   பிறந்த டயர், 23.07.1927 இல் தம் 62 வது வயதில் காலனுக்கு இரையானார். அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தில் தம் அடக்குமுறையால் புகழ்பெற்ற டயரின் ஜாலியன்வாலா பாக் துப்பாக்கிக்குண்டின் பாதிப்புக்கு உள்ளான பலரின் உடல் காயங்கள் அப்போது ஆறியபோதும், உள் காயங்கள் இரணமாகவேதான் இருந்தன. அன்று நடந்த அனைத்தையும் பார்த்து, பதறி, பரிதவித்து, செயற்றுத்துடித்த 20 வயது இளைஞர் ஒருவர் மனதில் இதற்குக் காரணமானவர்களுக்குப்பாடம் கற்பித்தே ஆகவேண்டும் என்ற வெறி கனலாக மூண்டது. ஜாலியன்வாலா பாக்கில தம் கண்முன்னே தமக்கு வேண்டியவர்கள் துடிதுடித்துச்செத்ததைக் கண்டு, தப்பிவந்த அந்தச் சீக்கிய இளைஞர் பொற்கோயில் குளத்தில் மூழ்கியெழுந்து,'' இக்கொடுமைக்குக் காரணமானவர்களைப் பழிதீர்த்து என் தாயகத்துக்கு நேர்ந்த இழிவைத்துடைப்பேன்'' என்று சபதம் செய்தார். அவர் பெயர் உத்தம் சிங்.

 

பெற்றோரை குழந்தைப்பருவத்திலே இழந்து அமிர்தசரசில் மத்திய கல்சா சீக்கிய அனாதை விடுதியில் சீக்கிய நெறிமுறைகளோடு வளர்க்கப்பட்டவர்.  ஜாலியன்வாலா பாக் நிகழ்ச்சிக்குப்பின் மெட்ரிகுலேசன் படித்து முடித்திருந்த உத்தம் சிங் விடுதியைவிட்டு நீங்கி தம் இலட்சியத்தை நிறைவேற்ற ஆப்பிரிக்காவில் நெய்ரோபி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இரகசியப்பயணம் மேற்கொண்டு விடுதலைக்கான தீவிரவாதக்குழுக்களுடன் சேர்ந்து திட்டமிட்டவர். மாவீரன் பகத் சிங்கைத் தம் வழிகாட்டியாகக்கொண்டவர். அவர் அழைப்பின்படி 1927 இல் இந்தியா திரும்பியவர். அப்போது அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களைக் கடத்திவந்ததற்காகப் பிடிபட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர். பகத் சிங்கும் அவரின் தோழர்களான சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரும் தூக்கிலிடப்படும்போது செயலற்று சிறையில் நொந்தவர். விடுதலையான பின் சாதி மதங்களைக் கடந்தவர் என்று காட்டத் தம் பெயரை ராம் முகமது சிங் அசாத் என மாற்றியமைத்து, அமிர்தசரசில் பெயர்பலகை ஓவியராகத் தொழில்செய்துகொண்டு ஜாலியன்வாலா பாக் கொலையாளிகளைப் பழிதீர்க்க முனைந்து வியூகம் அமைத்தவர்.

 

டயரைக் காலன் விழுங்கி உத்தம்சிங்கிற்கு வேலைப்பளுவைக்குறைத்து விட்டதால் இன்னொரு மிக முக்கியமான குற்றவாளியை மட்டும் தேடிக்கண்டுபிடித்து தண்டிக்க முனைந்தார் உத்தம் சிங். அவர்தான் மைக்கிள் ஓ ட்வயர். 1912 முதல் 1919 வரை பஞ்சாபின் லெப்டினென்ட் கவர்னராக இருந்து டயரின் நடவடிக்கைகளை ஊக்குவித்தவர். ஜாலியன்வாலா பாக் படுகொலையை முன்கூட்டி திட்டமிட்டவராகக் கருதப்பட்டவர். அந்தப்படுகொலையைத் 'திருத்தமுயற்சி' என்று கொச்சைப்படுத்தியவர். இந்தியாவில் செய்யப்படும் சீர்திருத்தங்களுக்கு எதிராக இருந்தவர். அன்று இந்தியாவின் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதரானவர். அவர் அப்போது இலண்டன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியறிந்து அங்கு சென்று குடியேற உத்தம் சிங் முடிவு செய்தார். ஜெர்மனிக்குத்தப்பியோடி அங்கிருந்து இத்தாலி,பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் தங்கித்தங்கி ஒருவழியாக 1934 இல் இங்கிலாந்து போய்ச் சேர்ந்தார்.சீக்கிய தோற்றத்தைக்களைந்து, முகத்தை மழித்து,  வெள்ளையரைப்போன்று உடையணிந்தார். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஒரு காரைச் சொந்தமாக்கிக்கொண்டு, ஆறு குண்டறையுள்ள கைத்துப்பாக்கியையும், வெடிமருந்துகளையும்  வாங்கிவைத்துக்கொண்டு  சரியான இடம்,நேரம் அமையக் காத்திருந்தார்.

 

ஆறு ஆண்டுகளுக்குப்பின் அந்த வாய்ப்பு கனிந்தது. ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் முடிந்து   21 ஆண்டுகளுக்குப் பிறகு, 13.03.1940 அன்று இலண்டன் காக்ஸ்டன் ஹாலில் கிழக்கிந்திய சங்கமும், ராயல் மத்திய ஆசிய கழகமும் இணைந்து நடத்திய கூட்டத்தில், ஆங்கில அதிகாரிகள் சிலருடன் 75 வயது மைக்கிள் ஓ ட்வயரும் உரை நிகழ்த்த வந்தார்.  துப்பாக்கியை அதற்கேற்றபடி வெட்டப்பட்ட புத்தகத்திற்குள் மறைத்துக்கொண்டு உத்தம் சிங் எளிதாக மண்டபத்திற்குள் நுழைந்தார்.கூட்டத்தின் தலைப்பு: 'ஆப்கனிஸ்தானின் இன்றைய நிலை'. ஓ ட்வயர் தம் பேச்சை முடிக்கும்போது கூட்டத்தினரிடையே சிரிப்பொலியை ஏற்படுத்த இந்திய தேசியவாதிகளை ஏளனமாகக் கிண்டலடித்தார். பேச்சாளர்கள் பேசி முடிந்தவுடன் கூட்டம் எழுந்து நிற்க, ஓ ட்வயர் மேடையில் இந்தியாவின்  செயலாளர் லார்டு ஷெட்லாண்டிடம் பேச நகர்ந்தார். அப்போது உத்தம் சிங் தம் கைத்துப்பாக்கியின் பெரும்பசிக்கு இருகுண்டுகளை வழங்கி ட்வயரை நோக்கிச் சுட்டதில் அவர் உடனே இறந்து விழுந்தார். பின் லார்டு ஷெட்லாண்டை நோக்கிச்சுட்டார். அடுத்தடுத்து சர் லூயிஸ்  டேன், லார்டு லாமிங்டன் ஆகியோர் மீதும் குண்டுகள் பாய்ந்தன.  6 குண்டுகள் தீர்ந்து வஞ்சினம் முடிந்தது.மற்றவர்கள் காயங்களுடன் உயிர்பிழைத்தனர்.

 

1925 இல் வெளிவந்த 'நான் அறிந்த இந்தியா' என்ற தம் நூலில் மைக்கிள் ஓ ட்வயர் ஜாலியன்வாலா பாக் நிகழ்வுபற்றி ''புரட்சி ஆபத்தானது என்ற பாடத்தை விரைவில் நெஞ்சில் நிறுத்திக்கொண்டவர்கள் பஞ்சாபியர்''என எழுதியது காக்ஸ்டன் ஹாலில் பொய்யானது. எண்ணியதை எண்ணியாங்கு முடிக்கும் திண்ணியர் பஞ்சாபியர் என்பதை உத்தம் சிங் செயல்படுத்திக்காட்டிவிட்டார்.

 

உலகமே அதிர்ச்சியடைந்த இந்த நிகழ்வைப்பற்றி '' துன்பப்பட்டவர்களின் கண்ணீர் குண்டாகப்பேசியது''  என்று விமர்சித்தது ஜெர்மன் வானொலி.ஒரு தலைமுறையே மறந்திருந்த ஜாலியன்வாலா பாக் நிகழ்வை தூசிதட்டி மீண்டும் இதழ்கள் முடிவுரையோடு  வெளியிட்டன.

 

''மக்களின் நம்பிக்கையை ஏமாற்றியும், கோழைத்தனமான ஓர் அரசை அச்சுறுத்தியும், தம்மைப்பெரிதாக விளம்பரப்படுத்திக்கொண்டவர்'' என்று காந்தியைப்பற்றி சொன்ன ஓ ட்வயர் சுடப்பட்டபோது, காந்தியும், நேருவும் ''இஃது ஓர் அறிவற்ற செயல்'' என்று உத்தம் சிங்கைக் கண்டித்து அறிக்கை விட்டனர்.

 

உத்தம் சிங் மகிழ்வுடன் சரணடைந்தார். நிருபர்கள் இந்நிகழ்வுக்குக் காரணம் கேட்டபோது,'' என் மக்களின் உணர்வுகளை நசுக்க முயன்றார். எனவே அவரைக்கொன்றேன். 21 ஆண்டுகளாகப் பழிதீர்க்க முயன்று இப்போது வெற்றிபெற்றதற்கு  மகிழ்கிறேன். சாவைக்கண்டு அஞ்சவில்லை. நான் தாய் நாட்டிற்காக மரணத்தைத் தழுவுவது எவ்வளவு பெரும் பேறு !'' என்று குறிப்பிட்டார். 31.07.1940 இல் அவர் தூக்கிலிடப்பட்டு தம் உடல் தாயகத்துக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததற்கு மாறாக பென்டன் வில்லி சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டார்.

 

அமிர்தசரஸ் நகரில், ஜாலியன்வாலா பாக்கிலிருந்து நடக்கும் தொலைவில், முக்கிய பகுதியில்  கோட் சூட் அணிந்து, சீக்கிய தலைப்பாகையுடன், கையில் துப்பாக்கி ஏந்திய நிலையில் உத்தம் சிங்கிற்கு வைக்கப்பட்டிருந்த சிலையைப்பார்த்து வியந்தேன். வியப்புக்குக் காரணம் - இந்தச் சிலை அமைந்த பகுதி காந்தியை நினைவுகூரும் காந்தி கேட் என்ற இடமாகும்.  காந்தியுடன் உத்தம் சிங் தம் நிலைப்பாட்டைச் சொல்லி உரையாடுவதுபோல இச்சிலை அமைக்கப்பட்டதாகவே தோன்றியது.

 

 

                                            தமிழர் கற்க வேண்டிய பஞ்சாபியப் பாடங்கள்

 

 

  7.உயர்த்தப்பட்ட உத்தம்சிங்கும், வஞ்சிப்பட்ட வாஞ்சிநாதனும்.        

                     

             

  

ஜாலியன்வாலா பாக் செயலுக்குப் பதிலடி தந்த உத்தம்சிங்கின் செயலை முட்டாள்தனமானது என்று 1940-இல் கடுமையாகக் கண்டித்தார் ஜவகர்லால் நேரு. ஆனால், 1962-இல் அவர் மனமாற்றம் அடைந்து ''நாம் விடுதலை பெறவேண்டுமென்பதற்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட ஷாகீத்-ஐ-அசாம்(தியாகச்செம்மல்) உத்தம்சிங் அவர்களை மரியாதையுடன் வணங்குகிறேன்'' என்று புகழ்ந்தது பர்தாப் என்ற நாளிதழில் வெளிவந்தது. காந்தியடிகள் உயிரோடிருந்தால் காலமும், நிகழ்வுகளும் அவர் சிந்தனையையும் மாற்றியிருக்கக்கூடும்.

 

உத்தம்சிங் மறைந்து 35 ஆண்டுகளுக்குப் பின் சுல்தான்பூர் லோதி என்ற தொகுதியின் சட்டசபை உறுப்பினர் எஸ்.சாதுசிங் திண்ட் அவர்களின் வற்புறுத்தலால் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி பிரிட்டிஷ் அரசிடம் வேண்டி உத்தம்சிங்கின் எஞ்சிய உடலை இந்தியாவிற்குக் கொணரச்செய்தார்.

 

சாதுசிங்கே நேரே சென்று ஆவன செய்து நன்மேனியைத்தோண்டியெடுத்துக்கொண்டு ஜூலை 1974-இல் இந்தியா திரும்பியபோது தியாகிக்குரிய மரியாதையுடன் வரவேற்பு நிகழ்ந்தது. புதுடில்லி விமானநிலையத்தில் அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கர் தயாள் சர்மா, பஞ்சாப் முதலமைச்சர் ஜெயில் சிங் (இருவருமே பின்னர் இந்தியக்குடியரசுத் தலைவர்களாயினர்) ஆகியோர் நன்மேனியைப்பெற்றனர். இந்திரா காந்தி அம்மையார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

 

உத்தம் சிங்கே மீண்டும் வந்ததுபோல மகிழ்ந்து, சந்திகார், லூதியானா, ஜலந்தர், பதன்கோட் முதலிய பஞ்சாபிய  நகரங்களில் மக்கள் பெருந்திரளாகக்கூடி அவர் உடல்வைத்த பெட்டகத்தினை ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். அமிர்தசரசில் ஜாலியன்வாலா பாக் திடலுக்கு ஊர்வலம் சடலத்துடன் வந்தபோது பஞ்சாபிய மக்களின் உற்சாக ஆரவாரம் கரை புரண்டது. 'ஜாலியன்வாலா பாக் கொடும் நிகழ்ச்சிக்குக்  காரணமானவர்களைப் பழிதீர்த்து என் தாயகத்துக்கு நேர்ந்த இழிவைத்துடைப்பேன்' என்று சபதம் செய்து  அதனை நிறைவேற்றி மானம் காத்து புகழுடம்படைந்த மாமனிதர் உத்தம்சிங்கின் பூத உடலை அதே ஜாலியன்வாலா பாக்கில்  உலவ விட்டுப்  பூரித்தனர்.

 

உத்தம்சிங்கின் 35வது நினைவு நாளான 31.07.1975 அன்று அவர் பிறப்பிடமாகிய சூனம் என்ற ஊருக்கு அவர் சடலம் எடுத்துச்செல்லப்பட்டு, முதலமைச்சர் ஜெயில்சிங் இறுதி அஞ்சலி செலுத்தினார்.   மதச்சார்பற்று தம் பெயரை ராம் முகமது சிங் அசாத் என்று மாற்றிக்கொண்டவரின் உணர்வுகளைப் போற்றும் வகையில் 02.08.1975 அன்று பிராமண பண்டிதரும், இசுலாமிய மௌல்வியும், சீக்கிய கிரந்தியும் ஈமச்சடங்குகளை இணைந்து நிகழ்த்தினர். எரியூட்டியபின், அவர் உடல் சாம்பல்  சடலஜ் நதியில் கரைக்கப்பட்டு அவர் இறுதி ஆசை  நிறைவேற்றப்பட்டது. உத்தம்சிங்கின் தியாகத்தை மறவாப் பஞ்சாபியர் அதனை நினைவுகூரும் வகையில் பஞ்சாபில் மட்டுமன்றி அவர்கள் வாழும் பிற இடங்களிலும் சிலைகளை வடித்துள்ளனர்.அவருடைய சொந்த ஊரான சூனத்தில் அவருக்கு ஒரு வெண்கலச்சிலையும், அவர் பெயரில் ஒரு கல்லூரியும் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்டு மாநிலத்தில்  சீக்கியர்களோடு, இசுலாமியரும், இந்துக்களும், பிற மாநிலத்தவரும் ஒற்றிணைந்து வாழும் மாவட்டத்திற்கு உத்தம்சிங் நகர் என்றே பெயரிடப்பட்டுள்ளது. அங்கும் அவருக்கு ஒரு சிலை உள்ளது.பஞ்சாப் அரசு  ஒவ்வொரு ஆண்டும அவர் நினைவுநாளில் விழா எடுத்து அவர் நினைவைப்போற்றி வருகிறது. 20ஆம் நூற்றாண்டின் 80 முக்கிய சீக்கியர்களுக்கு வழங்கப்பட்ட நிசான்-இ- கல்கா என்ற பெருமைக்குரிய பட்டத்தை அனந்தபூர் சாகிப் அறக்கட்டளை இவருக்கு வழங்கியுள்ளது. 1977இல் இந்தியில் வெளிவந்த ஜாலியன்வாலா பாக் என்ற திரைப்படத்தில் பால்ராஜ் சகானி உத்தம் சிங்காக நடித்தார். 2000இல் ஷாகீர் உத்தம்சிங் என்ற திரைப்படம் இக்பால் தில்லான் இயக்கத்தில் இந்தியிலும் பஞ்சாபியிலும் வெளிவந்தது. அவற்றில் நடிகர் ராஜ் பாபர் மிகவும் ஈடுபாடு கொண்டு நடித்து உத்தம்சிங் பாத்திரத்தை உயிர்ப்பித்தார்.

 

தம் மண்ணின் மைந்தன் செய்த தியாகத்தை மறக்காமல் இருக்கும் சீக்கியர்களின் செயல் பாராட்டிற்கும் நம்மவர்களின் பின்பற்றுதலுக்கும் உரியது. தமிழகத்துச் சுதந்தரப்போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரனாருக்குக் கடுங்காவல்தண்டனை வழங்கி செக்கிழுக்க வைத்தும், சுப்பிரமணிய சிவாவைச் சிறையில் கொடுமைப்படுத்தித் தொழுநோயாளியாக்கியும், எண்ணற்ற விடுதலை வீரர்களை ஒடுக்கித் தண்டித்தும் வந்த கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்று தம்மையும் மாய்த்துக் கொண்ட வாஞ்சிநாதனை உத்தம்சிங் சிலையருகே நினைவுகூர்ந்தேன்.உத்தம்சிங்கின் குருவான பகவத் சிங் செயலுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே (17.06.1911)   வாஞ்சிநாதன் நிகழ்வு நடந்தது. பட்டதாரியான வாஞ்சி, நல்ல அரசு வேலையை விட்டு நீங்கி, மணமான புதிதில் , 25வது வயதில், விடுதலை வேள்வியில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். தம் செயலால் அவர் ஆங்கிலப் பேரரசை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் என்பது மிகையில்லை.

 

இந்திய விடுதலையில் மிகவும் அக்கறை கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஆதரவு காட்டிய  மேடம் காமா அவர்கள் அப்போது பாரீஸ் நகரிலிருந்து வெளியான தமது வந்தே மாதரம் பத்திரிகையின் தலையங்கத்தில் வாஞ்சிநாதனின் தீரச் செயலைப் புகழ்ந்து இவ்வாறு எழுதினார்: ''திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப் பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டு விட்டது. இதுவரை மிதவாத அரசியலின் தொட்டிலாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வர வேண்டியிருக்கும்''.

 

இத்தகைய சிறப்புமிக்க தமிழக விடுதலை வீரர் வாஞ்சிக்கு உரிய உயர்வை வழங்கினோமா?  மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு ஆஷ் சுடப்பட்ட இரயில் நிலையத்திற்கு மட்டும் வாஞ்சி மணியாச்சி சந்திப்பு என்று பெயர்மாற்றம் செய்தனர். சொந்த ஊரில் ஒரு சிலை வைத்தனர். ஆனால் வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள் தியாகியின் மனைவிக்குரிய நியாயமான ஓய்வூதியத்தைப்பெறுவதில் கூட எத்தனை காலதாமதம்.! ஆனால் ஆஷ் இறந்த மூன்றே மாதங்களில் அவர் மனைவிக்கும், 4 குழந்தைகளுக்கும் உயர்ந்தபட்ச ஓய்வூதியமாக முறையே ஆண்டுக்கு 140 பவுனும், தலா 21 பவுனும் வழங்கப்பட்டன. ஆனால் விடுதலைக்குப் பின் அரசால் வாஞ்சியின் மனைவிக்கு உதவித்தொகை மறுக்கப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் முதலியோர் திருமதி வாஞ்சிக்கு ஓய்வூதியம் வழங்க, சட்டமன்றத்தில் குரல் கொடுத்துப் பல ஆண்டுகள் கழித்து வெறும் ரூ50 மட்டுமே உதவியாகப்பெற்றார் .1967- இல் முதலமைச்சர் அண்ணா  பாளையங்கோட்டை வந்தபோது, அவரைச்சந்திக்கச்சென்ற வாஞ்சிநாதன் மனைவியைக்   காவல்துறை அதிகாரிகள்  விரட்டியடித்தனர். இதைச்சன்னல் வழியாகப்பார்த்த அண்ணா அவரை வரவழைத்து விசாரித்தார். ''வீர வாஞ்சியின் மனைவி நான். வெறும் ரூ50 தான் தியாகிகள் ஓய்வூதியமாகப்பெறுகிறேன். அரசு  இதனை உயர்த்தித்தர வேண்டுகிறேன்'' என்று பொன்னம்மாள் இறைஞ்சியவுடன் அண்ணா அவரது மட்டுமன்றி அனைத்துத் தியாகிகளின் ஓய்வூதியத்தையும் உயர்த்தச்செய்தார்.

 

ஆஷ் இறந்த மறு ஆண்டே  தூத்துக்குடியின் முக்கிய சாலைகளின் சந்திப்பில்  எட்டுத்தூண்களையுடைய எண்கோண வடிவிலான ஆஷ் நினைவுமண்டபம், நான்கு திசை மணிக்கூண்டுடனும், பூங்காவுடனும் திட்டமிடப்பட்டது. இதற்காகப் பொதுமக்களிடம் நன்கொடை பெற்று , அடுத்த ஆண்டே திறப்புவிழாவும் நடந்தது. விடுதலைக்குப்பின் இதற்கு வாஞ்சிநாதன் நினைவுமண்டபம் என்று பெயர் மாற்றம் செய்யத் தூத்துக்குடி நகரசபை தீர்மானம் போட்டும் அரசு அதனை ஏற்கவில்லை. வாஞ்சி இறந்துபோய் 46 ஆண்டுகளுக்குப்பின் 08.08.1957 அன்று முதலமைச்சர் காமராசர் அவர்கள் வாஞ்சியின்  பிறந்த ஊரான செங்கோட்டையில் முத்துசாமி பூங்காவில் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அடிக்கல் கவனிப்பாரற்று அரை நூறாண்டுக்கு மேலாக அமுக்கிய கல்லாகவே இருந்தது.  அரைநூற்றாண்டுக்குப்பிறகு  சிலரின் தீவிர முயற்சியால் அரசு இப்போது மணிமண்டபம் கட்டும் முயற்சியைப் புதுப்பிப்பதாகச் செய்திவந்துள்ளது. வாஞ்சி செய்த தியாகத்தைத் தமிழர் ஒருசாரார் மறந்தனர்; இன்னொரு சாரார் கொச்சைப்படுத்தி வருகின்றனர். 

  

உத்தம்சிங்கை உச்சத்தில் வைத்துப் போற்றும் பஞ்சாபியரோடு, நம் தமிழர் மனோபாவத்தை ஒப்பிட்டு கனத்த இதயத்துடன் அமிர்தசரசின் இன்னொரு சுற்றுலா தளத்திற்குச் சென்றோம்.

 

சீக்கியத் தலைநகரான அமிர்தசரசில் பொற்கோவில் போலவே உருவம் கொண்ட இந்துகோயில் ஒன்று 16ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டுள்ளது. துர்கையானா மந்திர் என்று அழைக்கப்படும் இக்கோயில் பொற்கோலிலிருந்து சிறிது தொலைவில் தான் உள்ளது. பொற்கோவிலின் வடிவமைப்பையும், சூழலையும் அப்படியே பின்பற்றி, சிறிய ஏரியின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளியாலமைந்த வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய கதவுகள் கோவிலுக்குப் பொலிவூட்டுகின்றன. எனவே பொற்கோயில் போல இது வெள்ளிக் கோயிலென்றும் அழைக்கப்படுகிறது. துர்கையின் பெயரில் கோயில் அமைந்தாலும் இலட்சுமிக்கும், நாராயணருக்கும், கிருஷ்ணருக்கும் இங்கு வழிபாடு நடப்பதால் எல்லாவகையான பக்தர்களுக்கும் இங்கு திரளாக வருகிறார்கள்.

 

சீக்கிய பொற்கோயிலைப்போலக் காட்சியளிக்கவேண்டுமென இஃது அமைக்கப்பட்டாலும் அதன் பேருருவிலும், அழகிலும் இக்கோயிலை ஒப்பிடுவதற்கில்லை.

 

அமிர்தசரஸ் நகரின் புறநகர் பகுதியில், நகரிலிருந்து மேற்கே 11 கி.மீ தொலைவில் சொகாவான் சாலையில் இராம் தீரத் என்ற இந்துக்களின் புனித இடமொன்றிற்கும் சென்றோம். வால்மீகி முனிவரின் ஆஸ்ரமம் இருந்த இடமாகவும், இங்கு இராமனால் கைவிடப்பட்ட சீதை தங்கியதாகவும் , சீதா இராமனின் இரட்டையர்களான லவ, குசா இங்கே தான் பிறந்ததாகவும், இதே இடத்தில் தான் வால்மீகி  இரட்டையர்களுக்குக் கல்வியும், போர்ப்பயிற்சியும் அளித்ததாகவும்,  வால்மீகி இராமாயணம் எழுதப்பட்ட இடமாகவும் இது நம்பப்படுகிறது.

 

இராமயணத்தின் முக்கிய பிற்பகுதி நிகழ்வுகள் நடந்தேறிய இடம் மட்டுமன்றி, இராமயணமே எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்த  இராம் தீரத், நிகழ்வுகளுக்குரிய சிறப்புடன்  பேணப்படவில்லை என்றே தோன்றியது. இராம் தீரத் கோயில் வளாகத்தில் வடிவமைப்பு, உள்ளே உள்ள மண்சிலைகள் முதலியன ஒரு தற்காலிகப் பொருட்காட்சி அரங்கையே நினைவுறுத்தின. எனினும்   கண்ணாடி, ஜரிகை  இழையாலான இராமாயண ஓவியங்களில்  புதுமையும், நேர்த்தியும் காணப்பட்டன. கோயிலுக்கு வெளியே 3 கி.மீ சுற்றளவுள்ள பெரிய  குளம் காணப்பட்டது. இது சீதைக்காக அனுமன் தோன்டியதாம். பக்கத்தில்,  80 அடி உயர ஆரஞ்சு வண்ண அனுமன் சிலை பிரமிக்க வைக்கிறது. ரூ 9 இலட்சம் செலவில் 40 ஒரிசா கலைஞர்கள் 14 மாதம் உழைத்து கட்டிய பேருருவம். ஆனால் அதையொட்டிய சுற்றுச்சூழல் முகம் சுழிக்க வைக்கிறது. 

 

தீபாவளிக்கு 2 வாரத்திற்குப்பின் இராம் தீரத் திருவிழா ஆண்டுதோறும் 5 நாட்கள்  சிறப்பாக நடைபெறுவதே இவ்விடத்தின் சிறப்பாகும்.  ஏறத்தாழ  இலட்சம் பேர் கலந்துகொள்ளும் இவ்விழா, பஞ்சாபின் முக்கிய திருவிழாக்களில்  ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

இந்தியாவின் அரசியல், சமய வரலாறுகளில் பஞ்சாபின் பங்களிப்பு மகத்தானது என்பதை நான் சென்ற பலவிடங்கள் உணர்த்தின. அதில் முக்கியமானது மகாராஜா ரஞ்சித் சிங் அருங்காட்சியகமும், பரந்த காட்சியகமுமாகும்.(Maharaja Ranjit Singh Museum and Panorama) அது, நான் இதுவரை அதிகம் அறியாததும், இப்போது ஆர்வமுடன் அறிந்த கொள்ளத்தூண்டுவதுமான ஒருவரைப்பற்றி அறிந்துகொண்ட இடமாகும். இப்படியொரு மாமன்னர் இந்த மண்ணில் ஆட்சி செலுத்தினாரா என்று வியக்கவைத்த ஓவியங்களும், முப்பரிமாணப் படங்களும், தகவல்களும், பல்ஊடக விளக்கங்களும் அடங்கிய இந்த இடம் என்றும் நினைவில் நிற்பதாகும்.

 

அமிர்தசரஸ் நகரின் மையத்தில் 4.5 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள ராம்பாக் ஹெரிடெஜ் பூங்காவில் இந்த எழிலார்ந்த உருளை வடிவக் கட்டடம் மாமன்னர் ரஞ்சித் சிங்கின்(1780- 1839) வாழ்வு நிகழ்வுகளைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

 

அவர் பஞ்சாபில் குஜ்ரன்வாலா வட்டாரத் தலைவரின் மகனாகப் பிறந்த சீக்கியர். சீக்கியப்பகுதிகள் முழுவதையும் ஒன்றுபடுத்திபடுத்தியவர்.   இந்துகுஷ் எல்லைகளுக்கு அப்பால் ஆப்கானிஸ்தானத்திற்குள் நுழைந்து அன்று கஜினி முகமது சோமநாதர் கோவிலை இடித்துக் கொள்ளையடித்துக் கொண்டுசென்ற கதவுகளை மீட்டுக்கொண்டுவந்தவர். ஆப்கானிய மன்னர் அகமது ஷாவால் எரிக்கப்பட்ட அமிர்தசரஸ் ஹர்மந்திர் சாகிப் சீக்கியர் கோவிலை முழுவதும் புதுப்பித்துத் தங்கத்தகடால் வேய்ந்து பொற்கோயிலாக்கியவர். ஐரோப்பிய  இராணுவ மேதைகள் சிலரைப்    பணியிலமர்த்தி இராணுவத்தை மிக நவீனப்படுத்தியவர்.   இன்றைய பஞ்சாப், அரியானா, ஜம்மு, காஷ்மீர், இமாசல பிரதேசம், சீன மேற்கு திபெத்தின் ஒரு பகுதி , பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான்,  ஆகிய இடங்களில் தம் ஆட்சியை விரிவுபடுத்தி  40ஆண்டுகள் பஞ்சாபியருக்கும், மற்றவர்களுக்கும் ஒரு பொற்காலத்தை உருவாக்கியவர். கீழைநாட்டு நெப்போலியன் என்று புகழப்பட்டவர்.

 

பெருமதிப்புள்ள கோகினூர் வைரத்தைக் கைப்பற்றி, அதனைப் பூரி ஜகநாதர் கோயிலுக்கு உயில் எழுதியவர். சாதி, சமய வேறுபாடுகள் நிறைந்த இந்தியாவின் பிற பகுதிகளுக்கு எதிராக தம் குடியினர் அனைவருக்கும் ஒரே வாழ்வியல் நியதிகளை நடைமுறைப்படுத்தியவர். பஞ்சாபிய மொழியை முதன்மைப்படுத்தி அச்சுவாகனமேற்றியவர். தம் ஆட்சி காலத்தில் கொடிய குற்றம் செய்தவருக்கும் மரண தண்டனை வழங்குவதைத் தவிர்த்தவர். பஞ்ச காலத்தில் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் அரசின் தானிய கிடங்குளைத் திறந்து வாரி வழங்கியவர்.

 

ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போரிட்ட பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுசகோதரர்கள், திப்பு சுல்தான், கர்நாடகக் கிட்டூர் ராணி சென்னம்மா, ஜான்சி ராணி   இலட்சுமி பாய் முதலியோர் இறுதியில் வீரமரணம் அடைந்தனர் அல்லது தோல்வியுற்றனர். இப்படி எதிர்ப்பாளர்களையெல்லாம் வென்று, ஆங்கிலேயர் கிட்டத்தட்ட இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் கைப்பற்றி முடித்துவிட்ட நிலையில் அவர்களால் நெருங்கமுடியாத வலிமையான ஒரே பேரரசாக நிமிர்ந்து நின்றது ரஞ்சித் சிங் ஆண்ட இந்தியப்பகுதியாகும். சட்லஜ் நதிக்கரையிலிருந்து சிந்து நதிக்கரை வரை பரந்த விரிந்த  தம் எல்லைகளுக்குள் ஆங்கிலேயர்  நுழையாதபடி தம் உலகத்தரம் வாய்ந்த இராணுவ வலிமையாலும், ஆளுமையாலும் ஆங்கிலேயர்களை ஒப்பந்தம் செய்ய வைத்தார் ரஞ்சித் சிங்.  இந்தியா முழுவதையும் விழுங்கும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கக்கனவு பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங் உயிரோடு இருக்கும்வரை சாத்தியமாகவில்லை.

 

இத்தகைய ஆற்றல்மிக்க பேரரசர் ரஞ்சித் சிங் முறையான கல்வி கற்காதவர்; எழுத்தறிவற்றவர். சிறு வயதில் பெரியம்மைக்கு இரையாகி இடக்கண் பார்வையை இழந்தவர். உடலெங்கும் ஆழமான அம்மைத்தழும்புகளும், அழகற்ற தோற்றமும் கொண்டவர். எனினும் இந்தியாவின் 3 முக்கிய மன்னர்களில் ஒருவராகக்கருதப்படும் இவரைக்காண  உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் சான்றோர் பலர் வந்தவண்ணம் இருந்தனர். அருங்காட்சியகத்தில் இத்தகையவரின் ஆர்வமிகு வாழ்வைப் படம் பிடித்துக்காட்டும்  சில ஓவியங்கள, பல அரிய தகவல்களை விளக்கி,  என்னை வியப்பில் ஆழ்த்தின.

 

 

 

                                               தமிழர் கற்க வேண்டிய பஞ்சாபியப் பாடங்கள்

 

   8.பஞ்சாபியரைத் தலைநிமிர வைத்த மாமன்னர் ரஞ்சித்சிங்          

 

மகாராஜா ரஞ்சித் சிங் அருங்காட்சியகத்தில் 12 மீட்டர் உயரமும், 100 மீட்டர் நீளமும் கொண்ட மாபெரும்  முப்பரிமாண ஓவியம் அவருடைய வெற்றிகரமான 6 போர்களைக் கண்முன் நிறுத்தியது. பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள ஒலியமைப்பு நேரே நின்று போர்க்களக்காட்சியைக் காண்பதைப்போன்ற சிலிர்ப்பை ஏற்படுத்தியது.  அவருடைய இராணுவத்தில் ஐரோப்பியத் தளபதிகள் சிலர் பணியாற்றியுள்ளனர். அதில் முக்கியமானவர்கள்: வென்சுரா என்ற இத்தாலியர்; அல்லேர்டு என்ற பிரஞ்சுக்காரர். இவர்கள் இருவரும் ஆங்கிலேயர்களைக் கலங்கடித்த நெப்போலியனின் படையில் பணியாற்றியவர்கள்; வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோற்றபின்,பணியிழந்ததால் ரஞ்சித்சிங் பற்றிக் கேள்வியுற்று  அவரிடம் பணிகேட்டு வந்தனர்.

 

அவர்களுக்குப்  பெரும் ஊதியமும் வசதிகளும் அளித்து எதிர்காலத்தில் தம் சீக்கிய படைக்கும் ஏதோ ஒரு ஐரோப்பிய படைக்கும் போர்நேர்ந்தால் எச்சூழலிலும் தம் பக்கமே இருந்து போர்புரியவேண்டும் என ஒப்பந்தம் செய்துகொண்டு,  மாட்டிறைச்சி உண்ணாமலும், புகையிலையைப் பயன்படுத்தாமலும், தாடியை மழிக்காமலும் இருக்கும் நிபந்தனையை விதித்து அவர்களைக்கொண்டு தம் சீக்கிய வீரர்களுக்கு ஐரோப்பிய முறையில் பயிற்சியளிக்கச் செய்தார்.

 

இதே போல ஹங்கேரிய மருத்துவர் டாக்டர் ஹோனிக்பெர்கர் என்பவரை இராணுவ மருத்துவராக நியமித்தார். அமெரிக்காவிலிருந்து வந்த டாக்டர் ஹார்லஸ் என்பாரை நிர்வாகச்சீர்மைக்காக தம் நாட்டின் ஒரு பகுதிக்கு ஆளுநராக்கினார். ஹார்பன் என்ற ஸ்பானியரைப் பொறியாளராகவும்,ஹென்றி ஸ்டெயின் பாச் என்ற ஜெர்மானியரை தரைப்படை பிரிவு ஒன்றின் தளபதியாகவும், டாக்டர் பெனட் என்ற பிரஞ்சுக்காரரைத் தம் படைவீரர்களுக்கு அறுவை மருத்துவராகவும், வியூகெனாவிட்ச் என்ற ரஷ்யரை ஆயுதப்படையின் முக்கிய பதவிக்கும் நியமித்து உண்மையில் உலகத்தரம் வாய்ந்த மிக நவீன இராணுவத்தை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலைக்கு உயர்த்தினார்.

 

அருங்காட்சியகத்தில் 5 தொடுதிரைக் கணினிகள் இருந்தன. அவற்றை இயக்கி பார்வையாளர்கள் ரஞ்சித் சிங்கின் படைத்தளபதிகள், சபையினர் பற்றிய சுவையான தகல்களையும் படங்களையும் திரையில் பார்க்க முடிகிறது. 

 

வல்லமை மிக்கப் பேரரசராக மட்டுமன்றி கருணைமிக்கக் கொற்றவனாகவும் அவர் விளங்கியதைச் சில ஓவியங்கள் சித்திரித்தன. அதில் என்னை உற்றுப்பார்க்க வைத்த ஓர் ஓவியம் சொன்ன செய்தி இது: சிறுவனொருவன் மாங்காய் பறிக்கக் கல்லெறிகிறான். கல் தவறி, அந்த வழியாக வந்துகொண்டிருந்த மாமன்னர் ரஞ்சித் சிங் மீது விழுந்து காயப்படுத்தியது.காவலர்கள் சிறுவனைக் கைது செய்து  தண்டிக்க மன்னர்முன் நிறுத்தியபோது மன்னர் சொல்கிறார்: '' மாமரத்தின்மீது கல் எறிந்தால் அது கனியைக்கொடுக்கிறது. என் மீது இச்சிறுவன் கல்லெறிந்ததால் நான் ஏதாவது தராவிட்டால்  எப்படி?'' என்று கூறி பயந்து நடுங்கிய சிறுவனுக்குத் தங்கக் காசைப் பரிசளிக்கிறார்.

 

ரஞ்சித் சிங் போர்களை வென்றவர் என்பதை  விளக்கும் காட்சிகளை  விட மக்கள் மனங்களை வென்றவர் என்பதை உணர்த்தும் சித்திரிப்புகளே அவரை மதிப்புறு மன்னராக்கியது. அத்தகைய நிகழ்வு ஒன்று எனக்கு நம் கொற்கைப்பாண்டியனை நினைவுறுத்தியது. பஞ்சம் வந்தபோது அரசின் கோதுமைக்கிடங்குகளை மக்களுக்காகத்திறந்து விட்டவர் ரஞ்சித் சிங். அப்போது.  மக்கள் தம்மைபற்றி என்ன நினைக்கிறார்கள் என்றறிய ஓரிரவில் லாகூர் தெருவொன்றில் மாறுவேடம் பூண்டு உலா வந்தபோது ஒரு மூதாட்டி பஞ்சத்தில் வாடும் தம் மக்களுக்காகக் கோதுமை மூட்டையைத் தூக்கிச் செல்லச் சிரமப்பட்டு தவிப்பதைப்பார்த்து அம்மூட்டையை வாங்கி தம் முதுகில் வைத்து  சுமந்துகொண்டு அவர் வீடுவரை சென்று உதவுகிறார்.

 

ஆள்வோரின் சமயமே நாட்டின் சமயமாக வற்புறுத்தப்பட்ட காலக்கட்டத்தில் எல்லாச் சமயங்களையும் அரவணைத்துச் சென்றவர் ரஞ்சித் சிங். சீக்கியராயினும் ரம்லான் மாதத்தில் இசுலாமியருடன் விரதம் இருப்பார். இந்துக்களுடன் ஹோலி கொண்டாடுவார். அதே சமயம் மாதமொருமுறை அமிர்தசரஸ் பொற்கோயில் குளத்தில் குளிக்கவும் தவறமாட்டார். தம் வெளியுறவு அமைச்சராகப் பசீர் அசீசுதீன் என்ற இசுலாமியரை நியமித்திருந்தார்.

 

அந்த அமைச்சரைப் பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் லார்டு ஆக்லாந்து சிம்லாவில் சந்தித்தபோது கேட்டாராம்: '' மகாராஜாவின் எந்தக்கண் குருடானது இடமா? வலமா?'' அதற்கு அந்த இசுலாமிய அமைச்சரின் பதில்:'' எங்கள் மகாராஜா கதிரவனைப் போன்றவர். கதிரவனுக்கு ஒற்றைக்கண். அந்த ஒற்றைக்கண்ணில் ஒளியும், பொலிவும் மிகுதியாக இருப்பதால் நான் இன்னொரு கண்ணையே பார்க்கத் துணிந்ததில்லை'' ..இந்தப் பதிலைக்கேட்டு, மெச்சி, அமைச்சருக்கு தம் தங்கக் கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார் கவர்னர் ஜெனரல்.

 

ரஞ்சித் சிங்கின் சபைக்கு வந்த ஐரோப்பிய பயணிகளும், அறிஞர்களும் எழுதிய குறிப்புகள் அவரைப்பற்றிய உண்மைச்செய்திகளைப்  புலப்படுத்துகின்றன. பாரன் சார்லஸ் ஹக்கல் என்ற ஜெர்மானிய அறிவியலாளர் இந்திய பகுதிகள் பலவற்றைப் பராத்துவிட்டு ரஞ்சித் சிங்கைச் சந்தித்த பின் எழுதுகிறார்: '' ரஞ்சித் சிங்கின்  ஆட்சி, பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சியை விட மிகவும் பாதுகாப்பாக உள்ளது. அவரைச் சந்தித்தபோது, 'நீங்கள் ஜெர்மன் படையில் இருந்திருக்கிறீர்களா? போரில் பிரஞ்சுப்படைகளை எதிர்கொண்ட அனுபவம் உண்டா?' என்று கேட்டார். தம் இராணுவச் சீர்மையைக்காட்டி, 'ஓர் ஐரோப்பியப் படையை எதிர்கொள்ளுமளவுக்குச் சீக்கியப்படை வலிமையாக இருக்கிறதா ? ' என்றும் என்னிடம் கேட்டார்.''

 

உலகின் சிறந்த இராணுவத்தைத் தம் தாயகத்தில்  உருவாக்கும் துடிப்பை அவர் அயலகப் பயணிகள் பலரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

 

அவர் உருவத்துக்கும் ஆற்றலுக்கும் பொருத்தமற்றிருப்பதைக் கண்டு ஐரோப்பிய பயணி ஏடன் எமிலி வியக்கிறார்: ''பஞ்சாப் முழுவதும் இப்படி ஓர் அழகற்ற, கவர்ச்சியற்ற தோற்றத்தைப் பார்க்க முடியாது. கடந்து செல்வோர் கவனத்தை ஈர்க்காத உருவம். அவர் உடல் அவயவங்கள் பொலிவற்றவை. இடக்கண் நசுங்கி மூடியுள்ளது. ப்ரவுன் நிறம். உடலில் அம்மைத் தழும்புகளால் பலவிடத்தில் பள்ளம் விழுந்துள்ளது''

 

 

 

எனினும் அவருடன் பழகும் போதும், தம் குதிரையில் ஏறி போர்க்களத்திற்குச் செல்லும்போதும் அவரைவிட வசீகரமானவர்கள் எங்கும் இல்லை என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

 

பிரஞ்சுப்பயணி விக்டர் ஜாக்குவோ மாண்ட் இவரைச்சந்தித்த அனுபவத்தைத் தம் நூலில் எழுதுகிறார்: '' பலவற்றை அறியும் ஆர்வத்துடிப்புள்ள இந்தியர் ஒருவரை இவர்போலப்  பார்த்ததில்லை. நூறாயிரம் கேள்விகள் கேட்பார். இந்தியாவைப்பற்றி, ஆங்கிலேயர்களைப்பற்றி, ஐரோப்பாவைப்பற்றி, நெப்போலியனைப்பற்றி...இவை மட்டுமன்றி மோட்சம், நரகம், ஆன்மா , இறைவன், சாத்தான் இவற்றைப்பற்றியும் கேளவிமேல் கேள்வி கேட்டு அறிவார்''

 

கல்லாதவராயினும் கற்றவர்களுக்கும் கற்பிக்கும் வண்ணம்  கேள்வி ஞானத்தால் தன் அறிவு எல்லையை அவர் விரிவு படுத்தியதால் தான் விரிந்த நாட்டை வெற்றிகரமாக ஆள முடிந்தது.

 

கொடிய தண்டனைகளால் மட்டும் குற்றவாளிகளைத் திருத்தமுடியும் என அவர் நம்பவில்லை. குற்றங்கள் குறைவதற்கான சூழலை உருவாக்கும் நல்லாட்சியை வழங்குவதே தீர்வாக நினைத்தார். அவர் ஆட்சியில் ஒருவர் கூட மரண தண்டனை பெற்றதில்லை. தம்மைக்கொல்ல வந்தவரே பிடிபட்டபோது கூட அவர் மரண தண்டனை வழங்கவில்லை என்பது நம்மை வியப்பிலாழ்துவதாகும்.

 

மருத்துவர்கள் எச்சரித்தும் ஓய்வின்றி உழைத்ததால்  தம், 59வது வயதில் காலமானார்.(20.06.1839) ஏறத்தாழ 40 ஆண்டுகள்  நல்லாட்சி செய்த இவர் இறந்தபோது தம் குடும்பத்தலைவன் இறந்ததாக நினைத்து ஒவ்வொரு பஞ்சாபிய குடும்பமும் அழுதது.

 

இப்படி மாமன்னர் ரஞ்சித்சிங் அவையில் ஒருவனாக இருந்து பார்த்த உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது  அந்தக்காட்சியகம். காட்சியகத்தை விட்டு வெளியே வந்து அவர் சிலையருகே நின்று படமெடுத்துக்கொண்டபோது அவர் அருகே நின்று தோழமையுடன் படமெடுத்துக்கொண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.

 

ரஞ்சித்சிங் பஞ்சாபிய மண்ணில் பொற்காலத்தை உருவாக்கிய சம காலத்தில் என் தாய் தமிழகத்தின் நிலையைத் திரும்பிப்பார்த்தேன். அது மூட்டையிலிருந்த சிதறிய நெல்லிக்காய்களாய் பாளையக்காரர்களும், சிற்றரசர்களும், ஜமீன்தார்களும் தமிழகத்தைக்கூறு போட்டு ஆண்ட காலம். அந்நியரை எதிர்த்து நிற்கும் ஆற்றலும், மக்கள் செல்வாக்கும் உள்ள தலைவர்கள் கடந்த ஐந்து நூற்றாண்டுகாளாகத் தோன்றாத காலம். நல்லவனாக ஒரு வல்லவன் உருவாகி வளர முடியாதவாறு ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து அழித்துக்கொண்ட காலம். சாதி, சமயப்பூசல்களால் மக்கள் அல்லலுற்றும், உயர் மதிப்பீடுகளை இழந்து சீரழிந்தும், அதனால் அறமும், பொருளும் வறுமையுற்று இன்பமிழந்த காலம்.

 

ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போரிட்ட மருது சகோதரர்கள் காடுகளில் ஓடி ஒளியவேண்டியதாயிற்று. அவர்களுக்கு எதிராக புதுக்கோட்டை தொண்டைமான் பகைமை காட்டி ஆங்கிலேயருக்கு உதவினார். ஆங்கிலேயர் மருதுபாண்டியர்களின் தலைகளுக்குப் பரிசு அறிவித்தவுடன் அதற்காக நப்பாசை கொண்ட பலர் அவர்களைதேடி அலைந்தனர். கடைசியில் அவர்கள் பிடிபட்டு குடும்பத்தார், நண்பர்களுடன் தூக்கிலிடப்பட்டனர்.(1801)

 

தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜி வெல்லெஸ்லி பிரபுவுடன் உடன்படுக்கை செய்துகொண்டு தம் தஞ்சைகோட்டையைத் தவிர தம் தேசமனைத்தையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்(1799)

 

கொங்குநாட்டில் திப்புசுல்தானுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்த தீரன் சின்னமலை கடைசியில் பிடிபட்டு தம் உடன்பிறப்புகளுடன் சங்ககிரி கோட்டையில் ஆடிப்பெருக்கு நாளில் தூக்கிலிடப்பட்டார்(1805)

 

தமிழகத்து விடுதலைப்போராட்ட வீரர்களில் மிகுதியாகச் சிறப்பிக்கப்படும் வீரபாண்டிய கட்டபொம்மனின் உண்மை வரலாறு வருத்தமளிக்கிறது. வரிதண்டுவதில் கிழக்கிந்திய கம்பெனிக்கும் கட்டபொம்மனுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பூசல்களே போரில் முடிந்தன. அதனை மட்டுமே கொண்டு அவர் விடுதலை வீரராகச் சித்திரிக்கப்படுவது மறுபரிசீலனைக்குரியது. மேலும் கட்டபொம்மன் குடிமக்களுக்கு இழைத்த கொடுமைகள் அளப்பரியன.

 

கட்டபொம்மன், கம்பெனியின் பெயரால் மக்களிடம் வரிகளை வற்புறுத்திப் பெற்றார்.  விளைச்சலில் 100 க்கு 16 பங்கு மட்டுமே உழவர்களுக்கு அனுமதித்து மற்றவற்றை வரியாகப்பறித்தார்.  கம்பெனிக்குத்துணிகள் வழங்கிய நெசவாளர்களைத் துன்புறுத்திப் பணம் பறித்தார். கொடுக்க மறுத்தவர் செருப்பாலும், சாட்டையாலும் புடைக்கப்பட்டனர். பலருடைய பற்கள் நொறுக்கப்பட்டன.   அவர்கள் கைகளைப் பின்புறம் கட்டி உடம்பில் அட்டைகளைக் கடிக்கவிட்டார்.  அவர்கள் கண்களில் கள்ளிப்பால் ஊற்றப்பட்டது. கட்டபொம்மன் ஆட்கள் நெசவாளர் வீடுகளைக் கொள்ளையிட்டு அங்குள்ள பெண்களின் வாயில் மண்ணைக்கொட்டினர். 'இந்தக் கொடுங்கோலரை நீக்கிவிட்டு ஆங்கிலேயரே நம்மை ஆளட்டும்' என மக்கள் நினைக்குமளவு  கட்டபொம்மன் ஆட்சி அவலமாக இருந்தது. போரில் தோற்றுத் தப்பியோடிய கட்டபொம்மனையும் அவர் கூட்டாளிகளையும் ஆங்கிலேயர் பிடித்து நீதிவிசாரணை செய்தபின் தூக்கிலிட்டனர்(1799) {ஆதாரம்: தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்- கே.கே.பிள்ளை பக்:475}

 

பஞ்சாப் சிங்கம் ரஞ்சித்சிங்  இதே காலக்கட்டத்தில் 40 ஆண்டுகள் ஆங்கிலேயர்களை அண்டவிடாமல் நல்லாட்சி செய்த பெருவல்லமையை, ஆளுமையை நினைந்து அதிசயித்தேன். குருநானக்கிற்கு முந்திய காலத்திலிருந்து 5 நூற்றாண்டுகளாக பல சோதனைகளையும், தியாகங்களையும் தாங்கி நின்ற பஞ்சாபியருக்கு வாய்த்த பரிசுதான் மாமன்னர் ரஞ்சித் சிங் என்றே உணர்ந்தேன்.

 

ரஞ்சித் சிங்கின் மரணத்திற்குப்பின் பல்வேறு குழப்பங்களால் சீக்கியப்பேரரசு பலவீனமடைந்தும் ஆங்கிலேயர்களால் அதனை அவ்வளவு சீக்கீரம் கைப்பற்றமுடியவில்லை.. அப்போது மூண்ட ஆங்கிலோ சீக்கிய முதல் போரைப்பற்றி(1845-46)  எழுத நேர்ந்த பொதுவுடைமைச்சிற்பி காரல் மார்க்ஸ் அதில் தென்னிந்தியத்தமிழரையும், பஞ்சாபியரையும் ஒப்பிட்டுக்காட்டியுள்ளது நம்மை சிந்திக்கவைப்பதாகும். அவர் எழுதுகிறார்: '' ஆங்கிலேயப் பெரு முட்டாள்கள், தென்னிந்திய மக்களை எளிதே அச்சுறுத்தி வெற்றி கொண்டது போலப் பஞ்சாபியரையும் அச்சுறுத்தி வெற்றி கொண்டு விடமுடியும் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டனர்''(Karl Marx Notes on India)

 

 'அஞ்சி அஞ்சி சாவார் அவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே' என்று பாரதி குறிப்பிடும் தமிழர் குணத்தையே மார்க்சும் உறுதிப்படுத்துவதோடு, அந்நியரைக்கண்டு கலங்காதிருக்கும் வீர பஞ்சாபியரின் அஞ்சாமையையும் பதிவு செய்கிறார். 'அச்சம் என்பது மடமை' என்ற பாடத்தை அதனை உண்மையாகவே உடமையாக்கியுள்ள பஞ்சாபியரிடமிருந்து தமிழர் கற்க வேண்டும் என்ற உணர்வை பஞ்சாபிய மண்ணில் நான் கண்ட பல காட்சிகளும் மனிதர்களும் பதியவைத்தனர்.

 

இந்தச் சிந்தனைகளுடன் அன்று மாலை நாங்கள் தங்கியிருந்த 'இஷன் வில்லா'  விடுதிக்குத் திரும்பினோம். அப்போது விடுதி உரிமையாளர்களாகிய விவேக் தம்பதியினர் எங்கள் பயண அனுபவங்களை ஆர்வமுடன் விசாரித்தனர்.

 

''எங்கள் அனுபவங்கள் பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளன. சிலவற்றை விளக்கமாகத் தெரிந்துகொள்ளவும் விரும்புகிறோம். உங்களுக்கு இன்று மாலை நேரமிருப்பின் எங்களுடன் கொஞ்சம் கலந்துரையாட முடியுமா ?'' என்று கேட்டதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர்.

 

அறிவார்ந்த பேச்சும், ஆழ்ந்த நகைச்சுவையுணர்வும் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும்போது மிளிர்ந்தன. இந்த மண்ணின் மைந்தர்களாகவும், பட்டதாரிகளாகவும், பொதுமக்களுடன் தொடர்புடையவர்களாகவும் உள்ள இந்த இணையரிடம் கேட்டுப்பெறும் தகவல்கள்  இன்றைய  பஞ்சாபையும், பஞ்சாபியரையும் புரிந்து கொள்ளத் துணை செய்யும் என்று தோன்றியது.

 

 

அன்று மாலை அவர்களின் பரபரப்பான பணிகளிடையே, தொலைபேசி அழைப்புகளின் குறுக்கீடுகளிடையே ஏறத்தாழ ஒரு மணிநேரம் எங்கள் சுவையான

உரையாடல் நிகழ்ந்தது.

எங்கள் முதல் கேளவி அவர்களிடம் : நீங்கள் பெருமை கொள்ளத்தக்க உங்கள் பஞ்சாபிய மக்களின் சிறப்பான பண்புகள் எவை

 

பொத்தானைத் தட்டியவுடன் எரியும் மின்விளக்குபோல் ,சற்றும் தயங்காமல், சிந்திக்காமல்,  திரு விவேக் பதிலளித்தார்.

 

   

                                        தமிழர் கற்க வேண்டிய பஞ்சாபியப் பாடங்கள்

 

   9.பாரதியைக் கவர்ந்த பஞ்சாபும், பஞ்சாபியரும்

                     

 

'உங்கள் மக்களின் சிறப்பான பண்புகள் எவை?' என்று தமிழர்களிடம் கேட்டால் பலரும் சிந்தித்துவிட்டு ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்வார்கள். இதே கேள்வியைப் பஞ்சாபியர் வேறு சிலரிடமும் கேட்டேன். விவேக் தம்பதியர் கூறிய பதிலையே அவர்களும் உடனடியாக மொழிந்தனர் என்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர்கள்  வாழ்வியல் நியதியின் தெளிவான வெளிப்பாடாக அமைந்த அந்தப் பதில்:-

 

''அன்பு, அஞ்சாமை இவையிரண்டும்  எங்கள் சிறப்பான பண்புகள்''

 

இருநாள்களுக்குப் பிறகு, நாங்கள் ஜலந்தர் நகரில் இராணுவ வளாகமொன்றைக் கடந்து  செல்லும்போது அதன் சுவரில் ''அச்சமற்று இருந்தால்தான் அன்பு சாத்தியமாகும்'' என்று  பெரிதாக பொறிக்கப்பட்டிருந்த வாசகம் இந்தப் பதிலின் தொடர்ச்சிபோலக் காணப்பட்டது எவ்வளவு பொருத்தம்!  இதுவே பஞ்சாபியரின் பண்பாட்டுச்சாரமாக எனக்குத்தோன்றியது.

 

எங்கள் கலந்துரையாடல் தொடர்ந்தது.

 

''இந்த அமிர்தசரஸ் நகரின் வளர்ச்சிவேகம் எப்படி இருக்கிறது?''என்று கேட்டேன்.

 

திருமதி கோம்பல் விவேக் கூறினார்: '' நான் சண்டிகர் நகரில் பிறந்து வளர்ந்தவள். அங்கு தான் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றேன்.சண்டிகாரின் வளர்ச்சி, செழுமை நிச்சயம் அமிர்தசரசில் இல்லை. அமிர்தசரஸ் பல ஆண்டுகளாக  ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக சண்டிகர் உள்ளது.''

 

''தமிழகத்தில் எங்களுக்கு ஒரே பெரிய நதி காவிரிதான்(765 கி.மீ நீளம்) ஆனால் பஞ்சாபில் உங்களுக்குச் சிந்து நதியின் 3 செழிப்பான கிளை நதிகளாகிய ராவி(720 கி.மீ), பியாஸ்(615 கி.மீ), சட்லெஸ்(1500 கி.மீ) ஆகியவை பாய்வதால் எங்களைப்போல்  உங்களுக்குத் தண்ணீர் பஞ்சமோ, மின்வெட்டோ அடிக்கடி ஏற்பட வாய்ப்பில்லை அல்லவா?''

 

'' அதுதான் இல்லை. நேற்றிரவு பல முறை மின்வெட்டு ஏற்பட்டு நான் ஜெனரேட்டர் போட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா? அமிர்தசரசில் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. 'தண்ணீரை வீணாக்காதீர்கள். துணி துவைக்காதீர்கள்' என்று குளியல் அறைகளில் அதனால்தானே எழுதிவைத்திருக்கிறோம்''என்றார்  கோம்பல்.

 

''அமிர்தசரஸ் நகரின் மேற்கே ராவியும், கிழக்கே பியாசும் ஓடியும் தண்ணீர்ப்பஞ்சம் எப்படி இருக்க முடியும் ?''

 

வருத்தத்துடன் கூறினார் விவேக், ''இருக்கிறதே! மக்கட்தொகைக்கு ஏற்ப தண்ணீர் அளவு நதிகளில் போதுமானதாக இல்லை. எனவே இதனால் மின்வெட்டும் உள்ளது. மக்கள் தேவைக்கேற்ப இவற்றைப் பெருக்க அரசுகள் எடுக்கும் முயற்சிகள் போதவே போதாது.''

 

''பாகிஸ்தானுக்கு அமிர்தசரஸ் வாகா எல்லை வழியாக இப்போது சாலை, ரயில் போக்குவரத்து திறக்கப்பட்டுள்ள சூழல் இருநாடுகளின் நல்லுறவிற்கு வழிவகுக்குமா?''

 

''இங்கிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைபவர்கள் மிகக்குறைவு. லாகூரிலிருந்து அமிர்தசரசுக்கு வருபவர்களே மிகுதி. வருபவர்கள், அமிர்தசரசிலிருந்து நேரே டில்லிக்குச் சென்றுவிடுகிறார்கள்.தீவிரவாதிகள் எளிதாக நம் நாட்டிற்குள் நுழையவே இது வழிவகுத்துவிட்டதோ என்ற அச்சமே ஏற்படுகிறது. இதனால் அதிகப் பயனடைபவர்கள் பாகிஸ்தானியர்களே.'' என்றார் விவேக்.

 

''சீக்கியர்களுக்கும் இதர பஞ்சாபியருக்குமான உறவு எப்படி ?''

 

''பலரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல நீங்கள் இன்று காணும் சீக்கிய மார்க்கத்தைத் தொடங்கியவர் குருநானக் அல்லர். 10வது குருவான கோபிந்சிங் தாம். மென்மையாக, சாதுவாக இருப்பதனால்தானே படையெடுப்போர் எளிதாக நம்மை முறியடிக்கின்றனர் என்பதால் பார்த்தவுடன்  தோற்றத்தில் ஒரு மிடுக்கும், அச்சுறுத்தலும் ஏற்படுத்தும் வண்ணம் சீக்கியர்கள் தலைப்பாகையுடனும், மழிக்காத தாடி, முடிகளுடன் விளங்கவேண்டுமென்று குருகோபிந் சிங் கொணர்ந்த நெறியால் பஞ்சாபியற்குப் புது முகமே ஏற்பட்டது. கண்டவுடன் எதிரியை அச்சுறுத்தும் சிங்கமுகம் அது. குருநானக்கின் தியாகச் சீக்கியத்தை , கோபிந்சிங் போராளி இயக்கமாக மாற்றினார். வீட்டுக்கு ஒருவர் நாட்டைக்காக்கத் முன்வர வேண்டுகோள் விடுத்தார். அப்படி அர்ப்பணிக்க முன்வந்தவர் கல்சா (புனித வீரர்) ஆயினர். தலைப்பாகை உட்பட 5 அடையாளங்களை மேற்கொண்டனர். குடும்பத்தில் மற்றவர்கள் அவருக்குத் துணைநின்றனர். ஒரே குடும்பத்தில் கல்சா பந்த் அமைப்பில் இணைந்தவரும், இணையாதவரும் இருப்பர். அதாவது சீக்கியரும், சீக்கியரல்லாதவரும் சகோதரர்களாக ஒரே வீட்டில் இருப்பர். தாயகத்தைக் காக்கும் சூழலில் அன்று அந்த வேறுபாடு இருந்ததில்லை. இன்று சில அரசியல் ஆதயங்களுக்காக இந்நிலை மாறியிருக்கலாம். ஆனால் அடிப்படையில் சமயங்களுக்கு அப்பால் பஞ்சாபியர் அனைவரும் ஒரே குடும்பத்தினரே.'' என்று  விளக்கினார் விவேக்.

 

''உங்கள் பெயர்கொண்ட புகழ்பெற்ற நகைச்சுவை தமிழ் நடிகர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?''

 

''என்பெயரில் ஒரு தமிழ் நடிகரா ? இதுவரை கேள்விப்பட்டதில்லையே. காரணம் தமிழ்ப் படங்களைப் பார்க்க இங்கு எனக்கு வாய்ப்பில்லை''.

 

 

''குருநானக் பற்றி நாங்கள் பலரும் அறிவோம். இன்னும் பல வட இந்தியத் தலைவர்களையும், மகான்களையும் அறிவோம். நீங்கள் எங்கள் திருவள்ளுவரைப்பற்றி அறிந்திருக்கிறீர்களா? இந்தியிலும், பஞ்சாபியிலும் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் படித்திருக்கிறீர்களா?'' 

 

''அப்படியொருவர் பற்றி இப்போதுதான் உங்கள் வழியாக அறிகிறோம். எங்கள் பகுதியில் இப்படியொருவரைப் பற்றியோ, திருக்குறள் என்ற நூல் பற்றியோ மக்கள் அறியார். அறிவிக்கப்படவில்லை.'' என்றனர் இருவரும்.

 

''இங்கு பள்ளிகளில் தாய்மொழிக் கல்விக்குத்தானே முதலிடம். பஞ்சாபி வழிதானே கல்வி நடைபெறுகிறது ?''

 

''நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. முன்பு பெரும்பாலான பள்ளிகளில் பஞ்சாபியோ, இந்தியோ கல்வி மொழியாக இருந்தது. இன்று பலரும் ஆங்கிலப்பள்ளிகளையே நாடுகின்றனர். அமிர்தசரஸ் போன்ற நகரங்களில் மட்டுமன்றி கிராமப்புறங்களிலும்கூட ஆங்கிலப்பள்ளிகளில் படிப்பதையே விரும்புகிறார்கள்.ஆங்கிலப் பள்ளிகள் மாநிலமெங்கும் பெருகிவருவதும், அதில் சேர எல்லாவகையினரும் முண்டியடிப்பதும், இங்கு ஆங்கில மோகம் தலைவிரித்தாடுவதைக் காட்டுகிறது.'' என்றார் திருமதி விவேக்.

 

'' கடைசியாக ஒரு வெளிப்படையான கேள்வி. தமிழர்களைப்பற்றி உங்கள் கருத்தைக் கூறுங்கள்?''

 

''வெளிப்படையாகச் சொன்னால் கோபித்துக்கொள்ளமாட்டீர்கள் என்றால் சொல்கிறேன்''என்று மனதில் நினைப்பதைச் சொல்லத் தயங்கினார்  திரு.விவேக்.

 

''எதுவாயினும் பரவாயில்லை. சொல்லுங்கள். மற்றவர்கள் எங்களைப்பற்றி எண்ணிக்கொண்டிருப்பதை நாங்கள் அறிந்தால்தான், எங்கள் உண்மை நிலை, எங்களுக்குப் புரியும். எங்கள் குறைபாடுகளை நாங்கள் களைய முடியும். தயங்காமல் கூறுங்கள் ?''

 

''தென்னிந்தியாவின் நிலப்பரப்பு குறுகியிருப்பதுபோலத் தென்னிந்தியர் பலரும் குறுகிய மனப்பான்மையுடன் இருப்பதைப் பார்க்கிறேன்.எங்கள் விடுதிக்கு வரும் பல தென்னிந்திய வாடிக்கையாளர்களை வைத்தே இக்கருத்தைக் கூறுகிறேன். நீங்கள் மாறுபட்டவராக இருக்கலாம். மலையாளிகள் எதற்கெடுத்தாலும் சட்டம் பேசுகிறார்கள். சிறு விஷயங்களிலும் கறாராக நடந்து கொள்கிறார்கள். தமிழர்கள் பலர் மிகவும் கஞ்சத்தனமாக நடந்துகொள்கிறார்கள். செலவு செய்யவே அஞ்சுகிறார்கள். மிகவும் கணக்குப் பார்க்கிறார்கள். சிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டை பிடிக்கிறார்கள். பரந்த, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை பலரிடம் குறைவாக உள்ளது.பிற வட இந்திய மாநிலங்களிலிருந்து வருபவர்களின் பெருந்தன்மை இவர்களிடம் இல்லை.''

 

இப்படி ஒரு கருத்தை அவர் பொதுப்படையாக முன்வைத்தவுடன் நான் அவருக்கு ஒரு சிறு விளக்கமளித்தேன்: '' முந்தைய தலைமுறையினரின், சிறப்பாக நடுத்தர வர்க்கத்தினரின் குணாதிசயம் இது. நெடுந்தூர வெளிமாநிலங்களுக்கு வரும்போது, பாதுகாப்புக் கருதிக் கடைப்பிடிக்கும் எச்சரிக்கையான போக்கு இது. வட இந்திய மாநிலங்களிலிருந்து தென்னிந்தியா வரும் நடுத்தர வர்க்கத்தினரும் இப்படி நடந்துகொள்வதைக் காணமுடியும். எனினும் இன்றைய இளைஞர்களின் போக்கு வேறுமாதிரியாக இருக்கிறது. மாறவேண்டியவற்றில் மாறுவதற்குத் தமிழர்கள் பலர் முன்வந்துகொண்டிருக்கிறார்கள்'' என்று  நம்மவர்களின் பக்கம் நின்று பேசினேன்.

 

 

உள்ளதை உள்ளபடி பேசிய விவேக் தம்பதியினரின் கருத்துகள் பஞ்சாபின் உண்மை நிலையை ஒரளவு புரிந்துகொள்ளத் துணைசெய்தன. இவர்களைப்போல வார்த்தைகளுக்கு அரிதாரம் பூசாமல், மனதில் பட்டதை ஒளிக்காமல், அதேநேரத்தில் மனதைப்புண்படுத்தாமல் பேசும் பஞ்சாபியர்கள் பலரைச் சந்தித்தேன். வெகுளித்தனம் கலந்த இந்த நேர்மை என்னை ஈர்த்தது.

 

மறுநாள் காலை விவேக் தம்பதியினரின் இனிய தொடர்பிற்கும், அவர்களின் விடுதி வழங்கிய விருந்தோம்பலுக்கும் நன்றி கூறி விடைபெற்றோம். அன்புடன் விடையளித்து எங்களை நிழற்படமெடுத்து வாடிக்கையாளர் பட்டியலில் இணைத்தனர்.

 

 

அமிர்தசரசிலிருந்து 85 கி.மீ தொலைவிலுள்ள ஜலந்தர் நகரத்தை நோக்கி காரில் பயணிக்கும்போது, பஞ்சாபையும், பஞ்சாபியரைப் பற்றியும்  100 ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதி உணர்ந்து எழுதியவை  என் நினைவிற்கு வந்தன.   

 

பாரதி தாம் ஆசிரியராக இருந்த  சக்ரவர்த்தினி  என்ற பெண்கள் இதழில், அக்டோபர் 1905.-இல், 'ஓர் பஞ்சாபி மாது' என்று தலைப்பில் எழுதிய கட்டுரையில் உள்ள சில வரிகளை இங்கே தருவது இதுவரை நான் உணர்ந்தவற்றிற்கு வலு சேர்க்கும்.

 

மனோன்மணீயம் சுந்தரனார் தம் தமிழ்த்தெய்வ வணக்கத்தில்(தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து) உலகத்தின்முகமாக இந்தியாவையும், அந்த முகத்தின் நெற்றியாகத் தென்னாட்டையும் அந்த நெற்றியின் திலகமாகத் திராவிட நாட்டையும், அந்தத் திலகத்தின் நறுமணமாகத் தமிழ்த்தாயையும் உருவகிப்பார். ஆனால் பாரதியோ இந்தக்கட்டுரையில் இந்திய அன்னையின் முகமே பஞ்சாப் என்று குறிப்பிடுகிறார்:

 

''...பஞ்சாப் தேசமானது பரத கண்ட மாதாவின் முகமென்று கூறுதல் வெறும் அலங்கார வசனமாக மாட்டாது. உண்மையாகவே இமவானுடைய மடியின்மீது தலைவைத்து முப்புறங்களும் கடல் சூழப் பள்ளி கொண்டிருக்கும் நமது தாய்த்தேசத்தின் முகப் பிரதேசத்தில் பஞ்சாப் அல்லது பஞ்ச நதத் திருநாடே இலங்குகின்றது.''

 

பஞ்சாபின் வளத்தையும் பஞ்சாபியரின் அஞ்சாமையையும் பற்றி அவர் விரிவாக எழுதுகிறார்:

 

''வேத கர்த்தர்களாகிய மகரிஷிகளால் வர்ணிக்கப்பட்ட பஞ்சாப் தேசத்தின் இயற்கை யழகையும், வளனையும், செல்வத்தையும் இங்கு வருணித்தல் நமது சக்திக்குப் புறம்பாகிய விஷயம். ஆயின் அந் நாட்டின் ஜனங்களுடைய தன்மையைப் பற்றி மட்டிலும் சிறிது கூறிய பிறகுதான் நாம் எடுத்துக்கொண்ட விஷயத்தைப்பற்றிப் பேசுதல் எளிதாகும்.

 

''பஞ்சாபிகள் இந்தியாவின் மற்றெல்லாப் பகுதியிலுள்ள ஜனங்களைக்காட்டிலும் வீரத் தன்மையில் மிகுந்தவர்களென்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.... பஞ்சாபிலுள்ள சிக்கர்கள் (சீக்கியர்கள்) என்ற ஜாதியாரது போர்விறலை உலக முழுவதும் புகழ்கின்றது...தாம் தொகையிற் குறைவுற்றிருந்த போதிலும் ஸத்தியமே பலமாகக் கொண்டு தமது எதிரிகளை யெல்லாம் முறியடித்து வந்த பராக்கிரமம் அளத்தற்கரியது. ......சிக்கர்களும் ஹிந்துக்களும் ஒன்றாக இருந்துண்பார்கள். பெண் கொடுத்துச் சம்பந்தம் செய்வார்கள். இது மட்டுமா? ஒரே குடும்பத்தில் தமையன் சிகை வளர்த்துக்கொண்டு விக்கிரக வணக்கம் செய்யாமல் சிக்க மத ஆசாரம் கொண்டிருப்பான். தம்பி சிகை யில்லாமல் விக்கிரக பூஜை செய்து கொண்டு ஹிந்துவாக இருப்பான்.

 

''சரீர வளர்ச்சி,நிறம், பலம், ஆண்மை,அழகு இவற்றில் பஞ்சாப்காரரினும் சிறந்தவர்கள் பரத கண்டத்திற் கிடையாது.....உண்மையான மனிதர்களுக்கு இன்றியமையாத பெருங்குணங்களாகிய தேச பக்தி, மத பக்தி, சுஜனாபிமானம், கொடுங்கோன்மையில் துவேஷம் என்பவை பஞ்சாபிகளிடம் சிறப்பாக விளங்குகின்றன''

 

இங்கிலாந்து சென்று உயர் மருத்துவக்கல்வி கற்று, சென்னையில் பெரிய அரசு அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த தேசப்பற்றுமிக்க ஒரு  பஞ்சாபியரையும்  அவருடைய அன்பு மனைவியையும் பற்றி இக்கட்டுரையில் பாரதி தொடர்ந்து எழுதுகிறார்:

 

''.... கல்வித் தேர்ச்சி கொண்ட பஞ்சாப் கனவா னொருவரின் மனைவி எங்ஙனமிருப்பா ளென்பதற்கு இம்மாதை நல்லதோர் திருஷ்டாந்தமாகக் கொள்ளலாம்....இம்மாதின் கல்வித் திறமையானது பலருங் கண்டு வியத்தற்குரியது.....சென்னை மாகாணத்து மாதர் தமது கணவர்களை நகை வேண்டுமென்று உபத்திரவஞ் செய்வதுபோல இம் மாது தமக்குக் கல்வியாகிய பூஷணத்தை மேன்மேலுந் தரவேண்டுமென்று தமது கணவனை வற்புறுத்தும் இயற்கை யுடையவர்....இத்தகைமை கொண்ட மாதர்கள் பலர் தமிழ் நாட்டிலும் பெருக வேண்டுமென்ற நமது மனப் பூர்வமான விருப்பத்தில் ஒவ்வொரு தேசாபிமானியும் கலப்பனென்று நம்புகின்றோம்''

 

 வடநாட்டு காந்தியடிகள் தென்னாட்டு மதுரையின் எளிய  உழவரைப்பார்த்து தாமும் அதே பாணியில் அரையாடைக்கு மாறியதுபோல, தென்னாட்டு பாரதியும் வடநாட்டு வீர பஞ்சாபியர் ஒருவரைப் பார்த்தே அஞ்சாமைமிக்க தோற்றம் பெறத் தலைப்பாகை அணியத் தொடங்கினார். தம் தோற்றத்தைப் பாதிக்குமளவுக்குச் சீக்கியர்களின் தாக்கம் பாரதிக்கு இருந்திருக்கிறது. இப்படிப் பாரதி பஞ்சாபிடத்தும், பஞ்சாபியரிடத்தும் மனதைப் பறிகொடுத்ததற்கு எல்லா நியாயமும் இருப்பதை நான் நேரில் உணர்ந்தேன்.

 

பஞ்சாபிய மண்ணில் அடுத்த அனுவங்களைப் பெறும் ஆர்வத்துடன் இரண்டு மணிநேர கறும்பட்டுச்சாலை கார் பயணத்தில் பஞ்சாபின் முந்தைய தலைநகரும்,தொழில்நகருமான ஜலந்தருக்குள் நுழைந்தோம்.

 

                 

 

                                                  தமிழர் கற்க வேண்டிய பஞ்சாபியப் பாடங்கள்

 

 

                   10.உற்ற நண்பனைப் பிரியும் சோகம்

                   

 

 

சட்லெஜ் நதிக்கரையில், பியாஸ், சட்லெஜ் நதிகளுக்கிடைப்பட்ட வளமான சமவெளியில் அமைந்திருந்த ஜலந்தருக்குள் நுழைந்தபோது மதியம் 12 மணி ! பெயரிலேயே குளிர்ச்சி இருப்பதாலோ என்னவோ( ஜல் - நீர், அந்தர்- உள்ளே) கோடை வெயிலின் கொடுமை ஊருக்குள்ளே தெரியவில்லை. 

 

இதுவே பஞ்சாபின் மிகப்பழமையான நகரம்; மூன்றாவது பெரிய நகரம்; அது மட்டுமன்றி, சண்டிகர்  1953 இல் தலைநகராகும் வரை இதுவே மாநிலத்தின் தலைநகர். இந்த ஜலந்தர் நகரம் எத்தனை  புகழ்பெற்ற மனிதர்களை  வழங்கியிருக்கிறது என்று  அறிந்தபோது மலைப்பு ஏற்பட்டது. இந்திய முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால், பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜியா உல் அக்,பிரித்தானிய பாராளுமன்ற பிரபுக்கள் சபையில் முதல் இந்திய உறுப்பினர் சுராஜ் பால், பாகிஸ்தானின் 4வது பிரதமர் சௌத்ரி முகமது அலி, முன்னாள் உள்துறையமைச்சர் சுவரன் சிங், பழம்பெரும் கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத், பாலிவுட் இயக்குநர் யாஷ் சோப்ரா, திரை நடிகர் அம்ரீஷ் பூரி, இதழாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி முதலியோர் இந்த நகரில் தோன்றி, புகழ்பெற்றோருள் சிலராவர்.

 

இத்தனை மனிதர்களை உருவாக்கிய இந்த நகரில் வீதிகள் வழியே  வந்தபோது  பஞ்சாபின் உயிரோட்டமான சூழலை உணர முடிந்தது. மகா பாரத காலத்திலிருந்து பலரும் விரும்பி வாழ்ந்த இந்த மண்ணின் மகிமை மக்களின் அன்றாட செயல்களில் பளிச்சிட்டது. எங்கள் வாகனம் போய் இறங்கிய மகாராஜா ரெசிடென்சி விடுதியில் நுழைந்தவுடன் விடுதியினர் அளித்த இன்முக உபசரிப்பில் நகரின் நாகரிகம் தெரிந்தது. அறைக்கு உத்தரவாதம் பெறும்முன்பே, நாங்கள் கேட்கமாலேயே, அவர்கள் பண்பாட்டின்படி பாட்டிலில் தூய குளிர்நீரை இலவசமாக எங்களுக்கு வழங்கி தாகம் தீர்த்து மகிழ்வித்துனர். 'மகாராஜா மாதிரி இருங்கள்' என்று சொல்லாமல் சொல்லி, குறையெதுமில்லா   அழகிய அறையை எங்களுக்கு வழங்கியதுடன்,  எங்கள் கார் ஓட்டுநர் சர்மாவிற்கும் இலவச  தங்குமிடமும், உணவும் வழங்கினர். பஞ்சாபின்  எல்லா ஊர்களிலும்,   பயணிகளுடன் வரும் வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளிலும், உணவகங்களிலும் இலவசமாக இடமும், உணவும் வழங்குவது நல்ல மரபாக உள்ளது. தமிழகத்து நெடுஞ்சாலைகளில் பலமணிநேரம் கார் ஓட்டிவிட்டு, வண்டியிலேயே களைப்புடன் அரைகுறையாகத் தூங்கி, தெருவிலேயே காலைக்கடன்களை முடிக்கும் பரிதாபத்திற்கு உரிய தமிழக ஓட்டுநர்கள் என் நினைவுக்குவந்தனர். எல்லா மனிதர்களையும் சமமாக மதித்துச் சுயமரியாதை குறையாமல் நடத்தும்போக்கே பஞ்சாபிய சமூகத்தைக் கூட்டாக முன்னோக்கி உயர்த்துகிறது போலும்.

 

விடுதியில் உள்ள உணவத்தில் நுழைந்தவுடன் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என பரிமாறுபவர் எங்களை இனம் கண்டு, ''நானும் சென்னை விடுதியொன்றில் பணியாற்றியிருக்கிறேன். உங்கள் சுவை எனக்குத்தெரியும். உங்களுக்கேற்ற உணவுவகைகளைத் தேர்வு செய்துதருகிறேன்'' என்று நாங்கள் விரும்பி உண்ணும் வகைகளை  வழங்கி இதமளித்தார். இருநாள்களுக்குப்பின் விடுதியை விட்டுக்கிளம்பிய காலைப்பொழுதில் உணவகம் திறக்காத நிலையிலும் பாசமுள்ள தாயைப்போல, அவர் விடியலில் சீக்கிரம் எழுந்து சிற்றுண்டி தயாரித்துப் பார்சல் செய்து எந்தக் கைமாறும் கருதாது எங்களை  வழியனுப்பிவைத்தார்.

 

மதிய ஓய்விற்குப்பின் நகர்முழுவதும் ஒரு பெரும் சுற்றுச் சுற்றி வரலாற்றுப்பின்னணியோடு பார்வையிட்டோம். ஒரு காலத்தில் இது கடலாக இருந்து நிலமாக எழுந்ததாக நம்பப்படுகிறது. மகா பாரதத்தில்  இந்நகர்  பிரஸ்தலா என்று பெயர்பெற்றிருக்கிறது. இங்கு ஜலந்தரா என்ற கடலின் மைந்தன் ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகப் பத்ம புராணம் குறிப்பிடுகின்றது. இராமனின் மகன் லவன் ஆண்ட நாட்டின் தலைநகர் ஜலந்தர் என்றும் கருதப்படுகிறது.

 

மாமன்னர் அலெக்சாண்டர் தம் ஆட்சியின் கிழக்கு எல்லையைக்குறிக்க, பெரும் தூண்களை இந்நகரத்தில் தான் நிறுவினார். அருகே அலெக்சாண்டிரியா என்ற நகரையும் உருவாக்கி,பல மாசிடோனியர்களையும் குடியேற்றினார். மாமன்னர் ஹர்சவர்த்தனரின் காலத்தில் சீனபௌத்த துறவியும் பயணியுமான யுவான் சுவாங் கி.பி 634 இல் இந்நகருக்கு வருகை தந்திருக்கிறார். அவரே பின் பல்லவர் தலைநகர் காஞ்சிபுரத்துக்கும் வந்தார்.   அப்போது ஜலந்தர், கடோஜ் குல ராஜபுத்திர மன்னர்களின் தலைநகராக  விளங்கியதாகவும், ஹர்சருக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னராகிய ராஜா உடிடோ ஆண்டதாகவும் குறிப்பிடுகிறார். கடோஜ் அரச குலத்தினர் உலகில் வாழும் பழமையான மன்னர் மரபினராவர். இங்கு முதல் நூற்றாண்டில் மாமன்னர் கனிஷ்கர் காலத்தில் 4ஆவது பௌத்த சங்கம் நடைபெற்றதாகவும், அப்போது புத்தரை கடவுளாக்கிப் பார்த்த மகாயான நெறி இங்கு உருவானதாகவும் , வட இந்தியா வந்த சீனப்பயணி பாகியான்(கி.பி. 399-412) எழுதியுள்ளார்.  முகலாயர் காலத்தில் அவர்களின் வடக்குப்பகுதிக்கு இதவே தலைநகராக விளங்கியது. இந்நகர் சீக்கியர் கைகளுக்கு 1757-இல் தான் வந்தது. 1811- இல் மன்னர் ரஞ்சித் சிங் தம் ஆட்சியில் இந்நகரை இணைத்தார். ஆங்கிலேயர் ஆண்டபோது இந்நகர் ஜூலுந்தர் ஆனது.

 

இன்று  ஏறத்தாழ 10 இலட்சம் மக்கள் இந்நகரிலும், இன்னும் 10 இலட்சம் பேர் ஜலந்தர் மாவட்டத்திலும் வாழ்கின்றனர். ஒலிம்பிக் அளவில் ஹாக்கியில் புகழ்பெற்ற 12 பேர் இந்நகரத்தவர். விளையாட்டு வீரர்களின் உருவாக்கத்தில் மட்டுமன்றி விளையாட்டுப்பொருட்கள் தயாரிப்பிலும்,ஏற்றுமதியிலும் நாட்டில் முதலிடம் வகிக்கிறது இந்த 'இந்தியாவின் விளையாட்டு நகரம்'. விளையாட்டுப் பொருள்களோடு தையல் எந்திரக் கருவிகள், ரப்பர் பொருட்கள்,தோல்பைகள், கைக்கருவிகள், மருத்துவக்கருவிகள் முதலியன தயாரிக்கும் 100 பெரிய தொழிலகங்களும், 20,000 சிறிய தொழிலகங்களும்  ஆண்டுக்கு ரூ450 கோடி வணிகம் செய்கின்றன.  இதில் 318வகை விளையாட்டுப்பொருள்கள் தயாரிக்கும் பணியில் மட்டுமே 10,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.  இத்தொழில் நகரம், நகரமயமான விகிதாச்சாரத்தில் இந்தியாவில் 2ஆவது இடத்தில் சிறந்துள்ளது.

 

மிகப்பழமையான இராணுவ கண்டோன்மென்டு வளாகங்கள் மனங்கவரும் வாசகங்களை அறிவித்தபடி நகரின் அமைதியான பகுதியில் விரிந்துள்ளன. கண்டோன்மென்டு பகுதியில் உள்ள செயின்ட் மேரீஸ் கதீட்ரல், போப் இரண்டாம் ஜான் பாலால் அடிக்கல் மந்திரிக்கப்பட்டு அதன் முகப்பு பஞ்சாபின் மத நல்லிணக்கத்தைக்காட்டும் வண்ணம் இந்து, இசுலாமிய, கிறித்துவ, சீக்கிய அடையாளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது அரிதான காட்சியாகும்.   தாய்மொழி இதழ்களை வெளியிடுவதில் இந்தியாவில் ஜலந்தர் முன்னணியில் இருப்பதால் ஏராளமான அச்சகங்களும், பத்திரிகை அலுவலகங்களும் நிறைய காணப்பட்டன.புகழ்பெற்ற இந்தி, பஞ்சாபி இதழ்களான ஹிந் சமாச்சார், பஞ்சாப் கேசரி,  ஜக் பானி, அகாலி பத்ரிகா முதலிய இதழ்கள் இந்நகரத்திலிருந்து தான் மலர்கின்றன.

 

பஞ்சாபின் வரலாற்று,சமய,கலாச்சார  அடையாளங்களாகக் காணப்படும் பல இடங்கள் இந்நகரில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கும். 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இமாம் நசீர் மசூதி, தேவி டலாப் மந்திர், 400 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதி, மற்றும் தேவி தலாப் மந்திர்,துளசி மந்திர்,சிவ் மந்திர், குருதுவாரா ஷேவின் பட்சாகி, சன்யாஸ் ஆசிரமம், தேஷ் பகத் நினைவகக்கூடம் ஆகியன இவற்றில் முக்கியமானவை. ஆயினும் தவறவிடாமல் பார்த்தே ஆக வேண்டிய, வித்தியாசமானவை என  இந்நகரில் நான் உணர்ந்தவை இரண்டு இடங்கள் தாம். ஒன்று புஷ்ப குஜ்ரால் அறிவியல் நகரம், மற்றது ஹவேலி தாபா உணவக வளாகம்.

 

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் உள்ள புகழ்பெற்ற பெஞ்சமின் பிராங்கிளின் அறிவியல் மையத்தை நான் வியந்து பார்வையிடும் வாய்ப்பு 2007 இல் கிடைத்தது. இப்படி ஓர் அறிவியல் மையம் நம் நாட்டில் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைப்பதாக அமைந்தது தான் ஜலந்தர் அருகே உள்ள புஷ்ப குஜ்ரால் அறிவியல் நகரம்.

 

பொதுமக்களுக்கும், சிறப்பாக மாணவர்களுக்கும் அறிவியல், தொழில்நுட்பத்தின் உன்னதத்தை உணர்த்தும் வண்ணம், இளம் உள்ளங்களில் தேடல் உணர்வையும், கற்பனையாற்றலையும் தோற்றுவிக்கும் வண்ணம், விளையாட்டு வழியே அறிவியலைக் கற்கும் வண்ணம் மிக அற்புதமாக அமைக்கப்பட்டதே இந்த அறிவியல் நகரம். அமெரிக்காவில் நான் கண்ட மையத்தை விட பலமடங்கு இஃது அளவில் பெரிதாகும். அறிவியல் உன்னதத்தின் உயரத்தில் வீற்றிருக்கும் தேசத்திற்கு  இணையாக சிலவற்றை நம் அறிவியல் சிந்தனையாளர்களும் காட்சிப்படுத்தியிருந்த விதம் நம் இயலாமை சிந்தனையைத் தகர்தெறிவதாகும்; பஞ்சாபிய மண்ணுக்கும் மக்களுக்கும் புதிய பெருமை சேர்ப்பதாகும்.

 

72 ஏக்கர் நிலப்பரப்பில் ஜலந்தர் - கபர்தலா சாலையில் ரூ100 கோடி செலவில் மத்திய மாநில அரசுகளின் கூட்டுமுயற்சியாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு ரூ2.62 கோடி செலவில் இங்குத் துணைமின் நிலையமே கட்டியதுடன், 20' அகலங்கொண்ட ஜலந்தர் - கபர்தலா சாலையையே 44'க்கு அகலப்படுத்தியுள்ளது.  12-ஆவது இந்தியப்பிரதமரான ஐ.கே.குஜ்ராலின் தாயார் பெயரைத் தாங்கியுள்ள இவ்வறிவியல் நகருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தாம்  தலைமைப்புரவலர்.

 

வெட்ட வெளியிலும், கட்டடங்களிலுமாக மொத்தம் 200 காட்சியமைப்புகள் இயற்பியல்,பொறியில், கணினியியல், விண்ணியல், உடலியல் முதலிய பல்வேறு அறிவியல்துறைகளின் விதிகளையும், பயன்பாடுகளையும்  விளக்கி வியப்பூட்டுகின்றன.

 

முதன்மைப் பேரரங்கில் நுழைந்தவுடன் பஞ்சாபி உடையிலிருக்கும் ஓர் எந்திரன்  நமக்கு வரவேற்பளிக்கிறது. அதனருகே பூமி சுழலுகிறது என்பதை நிரூபிக்கும் வண்ணம் பெரிய கடிகாரமொன்றை அமைத்து, அதில் 24 பொம்மைகளை நிற்க வைத்துள்ளனர். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் பூமியின் அசைவால் ஒரு பொம்மை தட்டிவிடப்படுவதைக்கண்டு பூமியின் சுழற்சியைப்புரிந்துகொள்ள முடிகிறது.

 

உடலியல் இயக்கங்களைக்காட்டும் பகுதியில் இதயத்தின் இயக்கத்தைப் புரிந்துகொள்ளப் பெரிய இதயத்தையே உருவாக்கி நாமே அதனுள் நுழைந்து, நடந்து பார்த்துவிட்டு வரும்படி அமைத்திருக்கிறார்கள்.

 

கணினி அரங்கில் சிலிக்கான் சில்லிலிருந்து தொடங்கி, இணையம் வரை ஒவ்வொரு கணினி தொடர்பான செயல்பாட்டையும் படிக்காதவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி காட்சிப்படுத்தியிருப்பது, கணினி பற்றி இதுவரை புரியாத மொழியில், வல்லுநர்கள் விளக்கி, தலைவலி ஏற்படுத்தியதற்கு மாமருந்தாக உள்ளது.

 

விண்வெளித்துறை அரங்கில்   சந்திரயான் முதலிய ஏவுகணைகள், விண்கல மாதிரிகளுக்கிடையே விண்வெளி வீரர்களின் விண்வெளி வாழ்க்கைமுறையைக் காட்டியிருக்கும் பாங்கு பல புதுச் செய்திகயைச்சொன்னது.  விண்வெளிவீரர்கள் தம் சிறுநீரையும், குளிக்கும் நீரையும் 100% தூய்மையாக்கி அதி அற்புதமாக மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் உத்தியைக்கண்டோம்.

 

23 மீட்டர் விட்டமுள்ள கோள வடிவ அரங்கும் ,ஐமாக்ஸ் திரையும் அறிவியல் நகரத்தின்  மையக்கவர்ச்சியாகும். வழக்கமான திரையைவிட 10 மடங்கு பெரிதானதும், முப்பரிமாணத்தோற்றத்தை ஏற்படுத்துவதுமான அந்த அரங்கில் எகிப்தியப் பிரமிட்டுகள் பற்றிய படத்தைக்காண்பித்தார்கள். பாரோ மன்னன் வாழ்ந்த எகிப்திய அரண்மனைக்குள்ளும்,பிரமிட்டுகளுக்குள்ளும் நம் உடலோடும், உணர்வோடும் சென்று வந்த அனுவத்தை உணர்ந்தோம்.

 

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைவிட பெரிய நிலநடுக்கத்தை ஓரரங்கில் அனுபவித்தோம்.ஆம். நாற்காலியில் நம்மைப் பத்திரமாகச் சங்கிலி போட்டுப் பிணைக்க, தரையில் செயற்கை நிலநடுக்கம் ஏற்படுகிறது. நம் எதிரே திரையில் கட்டடங்கள் அதிர்கின்றன. 5 ரிக்கடரிலிருந்து தொடங்கி  அதிகரித்துக்கொண்டே போய் 9 ரிக்கடர்வரை நம்மை உணரச்செய்தார்கள். 9 ரிக்டரில் பூமி அதிர்ந்தபோது பதற்றம் பற்றிக்கொள்ள,  நம் கதி என்னவாகும் என்று புரியவைத்தார்கள். நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வழிகளையும் சொல்லிக்கொடுத்தார்கள்.

 

வெட்டவெளியில் சூரிய சக்தியால் என்னென்ன செய்யமுடியும் என்று பல கருவிகளை இயக்கியே காட்டினார்கள். போரில் பயன்படும் பல குட்டி விமானங்களையும், ஆற்றல்மிகு  விஜயேந்தா டாங்கையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். பிரமிடு ஒன்றையே கட்டிக்காண்பித்திருந்தார்கள்.

 

வெட்டவெளியில் பார்த்த காட்சிகளில் மிகவும் ஆர்வத்துக்குரியது டினோசர் பூங்காவாகும். இந்தியாவில் பலவிடங்களில் வாழ்ந்திருந்த ஏறத்தாழ 20 வகையான டினோசர் வகைகளை  அதே அளவில், அதே சூழலில் நேரில் காண்பதுபோல வடித்திருந்தார்கள். இதைக்கண்ட சிறுவர்கள்- ஏன் பெரியோர்களும்கூட -  அடைந்த வியப்பு கலந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

 

இப்படிப் பலவகையான  அறிவியல் விந்தைகளை நாள்முழுவதும் பார்த்தாலும் முடிவடையாது போலத்தோன்றியது. இன்னும் புதிய அரங்குகள் பலவற்றை உருவாக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.

 

அறிவியல் நகர அனுபவங்களைச் சுமந்தபடி அன்று மாலை நேராக ஹவேலி தாபா உணவக வளாகத்திற்குச் சென்றோம். ஊரின் எல்லையில் ஜலந்தர் பக்வார நெடுஞ்சாலையில் 23 ஏக்கர் பரப்பில் அமைந்த சாலையோர உணவகம் என்றாலும் இது பஞ்சாபியரின் உணவு மற்றும் வாழ்வியல் கலாச்சாரத்தை வெளிக்காட்டும் இடமாக மிளிர்கிறது. மாநிலமெங்கும் பஞ்சாபிய நெடுஞ்சாலை தாபா உணவகங்களில் காணலாகும் அருவருப்பான தூசியும், ஈக்களும் அறவேயின்றி, சூழலையே புரட்சிகரமாக மாற்றியமைத்துள்ளது ஹவேலி !

 

பஞ்சாபிய கிராமிய சூழலில் தூய்மையான முறையில், நவீன வசதிகளுக்குக் குறைவின்றி இன்முக உபசரிப்புடன்  உணவு வழங்குகின்றனர்.முற்றிலும் சைவ உணவுதான் என்றாலும் இதைவிட பஞ்சாபியர்களின் அச்சான சுவைமிக்க உணவை இப்படியொரு சூழலில் வேறெங்கும் காணமுடியாது. உணவகத்திற்குள் சீக்கியர் ஓட்டுநர் ஒருவர் லாரியில் அமர்ந்திருக்கிறார்; சிறுவர்கள் கோலி விளையாடுகின்றனர்; பல சமயத்தினர் சேர்ந்து சீட்டாடுகின்றனர்; கிணற்றடியில் குடங்களுடன் பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்; கண்ணாடி பார்த்து கண்களுக்கு மைதீட்டுகிறாள் ஒருத்தி; சப்பாத்தி இட்டுக்கொண்டிருக்கிறாள் இன்னொருத்தி; பெண்கள் சிலர் புடவையை விரித்து எம்ராய்ட்ரி வேலை செய்கிறார்கள்; சீக்கிய தச்சர் மர சக்கரமொன்று செய்துகொண்டிருக்கிறார்...இத்தகைய காட்சிகள் பல தத்ரூபமாகச் சிலைவடிவில் இந்த தாபாவில் காணப்படுகின்றன.

 

பரிமாறும் ஆட்கள் 'டெக்மாட்' குருத்தாவும், 'புல்காரி' ஜாக்கெட்டும் அணிந்தபடி, பஞ்சாபிய பெருந்தட்டுகள், சிறு குடங்கள, கிண்ணங்கள், பாரம்பரிய டம்ளர்கள் போன்றவற்றிலேயே உணவை வழங்குகின்றனர். உணவகத்தையொட்டி ரங்லா பஞ்சாப் திருமண மாளிகையும் , மண்டபமும் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் பஞ்சாபிய கிராமிய நடனத்தாலும், நாட்டுப்புற இசையாலும்  பஞ்சாபிய கலாச்சாரத்தை உயிர்ப்பித்துகொண்டிருக்கிறது. 24 மணிநேரமும், எல்லா நாளும் இந்த உணவகம் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது.  சாலையோர உணவகங்ளில் இந்தியாவிலேயே இதுவே முதல்நிலையில் மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஊரிலுள்ள ஜைனர்கள் சிலர் இதனை நடத்துவதாக அறிந்தேன்.

 

பஞ்சாபிய தாளி உணவைப்பற்றி விசாரித்தறிந்து பின், வரவழைத்து உண்டோம். நமக்குப் பழக்கமில்லா உணவாயினும் சுவை நாக்கில் நின்றது. இந்த நெடுஞ்சாலையைக்கடப்போர் மட்டுமன்றி, ஜலந்தருக்கு வருவோரெல்லாம் இங்குச் சாப்பிட்டுச்செல்லவேண்டும் என்ற ஆசையைத் தவிர்ப்பது ஏன் அரிது என்பது புரிந்தது. இதே பெயரில் பல தாபாக்கள் பிற நகரங்களில் காணப்பட்டாலும் ஒன்றும் இதற்குப் போட்டியாக வரமுடியவில்லை,

 

இந்தியாவெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலும், லஞ்சலாவண்யமும், தூய்மைக்குறைவும், பஞ்சாபையும் விட்டுவைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால்  இந்த அவலங்களையும் மீறிப் பஞ்சாபியரிடம் இன்னும் சமூகப்பொறுப்புணர்வும், அநீதிக்கெதிராகப்பொங்கும் போர்க்குணமும், அன்பு காட்டும் மனமும் சீக்கிய சமயத்தின்  தாக்கத்தாலும், பண்பாட்டு சீர்மையாலும் இன்னும் மங்காமல் ஒளிவிடுகின்றன. எந்தப் பாதுகாப்பு பிரச்சனையும் இன்றி, அன்றிரவு 10 மணியளவில் குறுகிய கடைவீதியொன்றிலும் சில சந்துகளிலும் நடந்தே சுற்றி வந்தோம். அந்தமாதிரி பயமெல்லாம் இங்கில்லை என்றனர் அங்குள்ளோர். பிச்சைக்காரர்களையோ, சோம்பித்திரிவோரையோ, தெருவில் சண்டையிடுபவரையோ, ரௌடித்தனம் செய்வோரையோ எங்கும் காணமுடியவில்லை.

 

வீரமும், ஈரமும் செறிந்த பஞ்சாப் மண்ணைவிட்டு, மறுநாள் காலை கிளம்பும்போது உற்ற நண்பனைப்பிரியும் சோகம் ஏற்பட்டது.   பார்க்காமல் விட்ட சிற்றூர்களையும், கிராமத்து மக்களையும் மீண்டும் வந்து பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

 

கண்டுணர்ந்த நல்லவை அனைத்தையும் நம்மவர்க்குச்சொல்ல வாய்ப்பளித்த தங்கம் ஆசிரியருக்கு நன்றி..

                                                           ---முற்றும்---