புதுப்பிக்கப்படும் தமிழர் அடையாளங்கள்

 

உலகம் முழுவதும் வாழும்  ஒன்பது கோடி தமிழர்களுக்கு எவையெல்லாம் அடையாளங்கள்? அல்லது மற்றவர்கள் தமிழர்களை எப்படி அடையாளப்படுத்துகிறார்கள்?

 

இந்தக்கேள்வி ஒரு சிந்தனையாளர் சபையில் எழுந்தபோது இதற்கான விடையை உடனடியாக என்னால் கூற முடியவில்லை. இதற்கான விடையைக் கண்டறிய  தமிழரின் சமூக வரலாற்றினுள் ஒரு நெடும்பயணம் செய்யவேண்டியுள்ளது.

 

நம் வரலாற்றில் கடந்த 2000 ஆண்டுகளைத்  திரும்பிப்பார்த்தால், தமிழர் என்றே சொல்லே அரிதாக உள்ளது. மூவேந்தர் ஆண்ட சங்க காலத்தில் எழுதப்பட்ட எந்த இலக்கியங்களிலும் தமிழர் என்ற சொல்லே காணப்படவில்லை. அதற்கு அடுத்த சில நூற்றாண்டுகளில் எழுந்த நூல்களிலும்,கல்வெட்டுகளிலும் தமிழர் என்ற ஒட்டுமொத்த அடையாளச்சொல் இல்லவே இல்லை. கி.பி.600-630 அளவில் ஆண்ட பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்து அவரைச் சமணசமயத்திலிருந்து சைவத்திற்கு மாற்றிய திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் வரிகளில் தான் முதல் முறையாக தமிழர் என்ற சொல் காணப்படுகிறது. அதற்குப்பின்னால் கூட இந்தச்சொல் எங்கோ  சில இடங்களில் அபூர்வமாகவே கையாளப்பட்டுள்ளது. காரணம் தமிழகத்தில் வாழும் தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட மக்கள் தம்மை மொழியின் பெயரால் அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

 

தமிழகத்திற்குள்ளேயே பல நாடுகள் இருந்தன. பல சமயங்கள் விளங்கின. பல சாதிப்பிரிவுகள் தழைத்தன. எனவே மக்கள்   நிலத்தாலும்,  மதத்தாலும்,   சாதியாலும் தம்மை,  சோணாட்டான் அல்லது வைணவன் அல்லது செட்டியார் என்றே அடையாளப்படுத்திக்கொண்டனர். தமிழ் என்பது மன்னர் புகழ்பாடுதல், சமயஉணர்வுகளை வெளிப்படுத்தல், முதலியவற்றிற்கு ஒரு கருவியாகவே பயன்பட்டிருக்கிறது. இப்போது 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற வரிகளைப்பாடினால் அது   நம்மை உணர்ச்சிவயப்படுத்துகிறது. அத்தகைய தமிழுணர்ச்சி அன்று இல்லை. . தமிழ் என்ற சொல்லைக்கூட இனிமை,அறிவு,செழுமை முதலிய பல்வேறு பொருள்படவே கவிஞர்கள் கையாண்டுள்ளனர.  ஐரோப்பியர் வருகைக்கு முன் தமிழ்மொழிப்பற்றோ , அல்லது தமிழின உணர்வோ  இந்த மண்ணின் மக்கள் அறிந்திலர்;  உணர்ந்திலர். பல்லவரும்,முகமதியரும்,நாயக்கரும், மராட்டியரும் அயல்மொழிகளைத் திணித்து ஆண்டபோதும் நம் மக்களுக்கு மொழி, இன உணர்வு தோன்றவில்லை. விதிவிலக்காக, தீர்க்கதரிசன சிந்தனையுடன் இளங்கோவடிகள் மட்டும் 1800 ஆண்டுகளுக்கு முன் தம் சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்தில் தமிழின ஒற்றுமையையும், தமிழின ஆற்றலையும் உரத்தகுரலில் உரைக்கிறார். ஆனால் அவர் காலத்து முடிமன்னர்களே இதை உணரவில்லை என்ற சோகத்தையும் சிலப்பதிகாரம் அறிவிக்கிறது.

 

ஸ்காட்லாந்து நாட்டினரான கால்டுவெல் பாதிரியாரின்(1814 -1891) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலே முதலில் தமிழின் சிறப்பபுமிக்க தனித்தன்மையை உலகுக்கு ஒளிவட்டமிட்டுக்காட்டியது. தமிழ் மொழியின  உண்ர்வுக்குத் தோற்றுவாயான இந்த அயலவரின் ஆய்வின் தொடர்ச்சியாக   பெ. சுந்தரம்பிள்ளை (1855-1897) எழுதிய மனோன்மணீயம் நாடகத்தின் தமிழ்தெய்வ வணக்கம் தமிழிய உணர்வை வளர்த்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ஆங்கிலக்கல்வியின் வாயிலாக பெற்ற உலக அறிவும் , விடுதலை வேட்கையும், சாதி,சமய உணர்வுகளை விடத் தாய்மண்மீதும், தாய்மொழிமீதும் கற்றோர் பற்று கொள்ளக் காரணமாயின. இந்த உணர்வுகள் 20 ஆம் நூற்றாண்டில் பாரதியார், மறைமலையடிகள், பாரதிதாசன் முதலியோரின் வலிமைமிக்க எழுத்துகளால் மக்கள் மத்தியில் தீப்பற்றின.  அரசியல் சக்தியாகுமளவு வலிமைபெற்றன. எனவே இன்றைய பொருளில் நாம் பயன்படுத்தும் தமிழ், தமிழர் என்ற அடையாளங்கள் வெறும் 150 காலத்திற்குட்பட்டவையே. நீண்ட நெடிய வரலாறு தமிழ்மொழிக்கு உண்டே தவிர தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டோருக்கு இல்லை. இந்தப்பின்னணியில் தான் தமிழரின் அடையாளங்களை நாம் கண்டறிய வேண்டியுள்ளது.

 

ஒன்றரை கோடி மட்டுமே எண்ணிக்கையுடைய யூதர்கள் பல நாடுகளில் பல நூற்றாண்டுகள் சிதறி வாழ்ந்தாலும் சினகாக் எனும் அவர்கள் வழிபாட்டிடங்கள், அவர்கள் உண்ணும் குபுஸ் ரொட்டி,குழந்தை பிறந்த எட்டாம் நாள் சடங்கு முதலியவற்றில் மாறாத தனி அடையாளம் தெற்றெனத் தெரியும். தாவீது அரசரின் விண்மீன் சின்னத்தை அவர்களின்  இன அடையாளமாக இன்றும் கொள்கின்றனர்.

 

சீனர்கள், ஜப்பானியர்கள், கொரியர்கள் ஆகியோரைப்பார்க்கும்  அயலவர்களுக்கு அவர்கள் ஒரே மாதிரியாகத் தோற்றமளித்தாலும், அவர்கள் மாறுபட்ட தனி அடையாளங்களைக் கொண்டுள்ளனர். சீனர் முகம் வட்டம்; ஜப்பானியரது நீளமுகம்; கொரியர் சற்றே உயரமாக சிறிய கண்களுடன் காணப்படுவர். வணக்கம் செலுத்தும்போது சீனர் லேசாகக் கழுத்தை மட்டும் வளைப்பர். ஜப்பானியரோ கையை முன்னால் குவித்தபடி 90% உடலை வளைப்பர். கொரியர் 45% மட்டுமே வளைப்பர்.பின் கைகுலுக்குவர். இந்த நான்கு இனத்தவருக்கும் இன ஒற்றுமை அடிப்படை அடையாளமாகும்.

 

தமிழ்நாட்டின் ஒவ்வொரு சாதியினருக்கும், சமயத்தவருக்கும்,நிலப்பிரிவினருக்கும் தனித்தனி அடையாளங்களை நிறைய காண முடிகிறது. ஆனால்  ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பொது அடையாளங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. இன்று நம் அடையாளங்களாக நினைக்கும் பலவும் நம்முடையன அல்ல என்பதை நம்மில் பலர் அறியோம். பெண்கள் அணியும் மூக்குத்தி முகமதியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. தெலுங்கு நாயக்கமன்னர்களால் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுப் பின்னர், கதர் ஆடைகளை விற்பனை செய்யும் வண்ணம், காங்கிரஸ் இயக்கத்தின் தாக்கத்தால்தான் நம்மவர்கள் தீபாவளி கொண்டாடும் பெருவழக்கம் தோன்றியது. நம் தவிர்க்கமுடியா உணவுப்பண்டமாக மாறிவிட்ட சாம்பார் தஞ்சை மராட்டியர்களின் சமையலறையில் எதிர்பாராவிதமாக உருவாகி, சத்ரபதி சிவாஜியின் மகன் மன்னர் சாம்பாஜியின் பெயரால் சாம்பார் எனப்பெயரிடப்பட்டது. நம் முக்கிய சிற்றுண்டியான இட்லி  இந்தோனேசியாவிலிருந்து அறிமுகமானதாகும். ஆவியில் வேகவைக்கும் சிற்றுண்டிகள் பலவும் அந்நாட்டிலிருந்தே வந்தனவாகும்.

 

தமிழரைப்பற்றி வெளிநாட்டினரும், வெளிமாநிலத்தவரும் என்ன எண்ணுகின்றனர்? எவ்வாறு அடையாளப்படுத்துகின்றனர்? என்று அறிவது நம் அடையாளங்களை மறுபரிசீலனை செய்ய உதவும்.

கடந்த நூற்றாண்டுகளில் தமிழகத்திற்கு வந்த மெகஸ்தனீஸ்,மார்க்கோ போலோ,  யுவான்-சுவாங் முதலிய அயல்நாட்டுப்பயணிகளின் குறிப்புகளின் வழி தமிழ்மக்களின் அடையாளங்களை ஒரளவே அறியமுடிகிறது.    மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் (கி.பி. 1268 - 1310)பாண்டிய நாட்டுக்கு வந்த மார்க்கோ போலோ மக்கள் வலக்கையால் உண்பதையும், தண்ணீரை எச்சில் படாமல் தூக்கிக்குடிப்பதையும் வியந்து பாராட்டியுள்ளார்; ஆனால் குடிமக்களும், அரசனும் மிகுந்த நகையணிந்தும் கோவணத்துடன்  இருப்பதைக்கண்டு அதிசயிக்கிறார்.

 

இணையத்தளங்களிலும், திரைப்படங்களிலும் அயல் மாநிலத்தவர்களும், அயல் நாட்டினரும் தமிழரைப்பற்றி அடையாளப்படுத்துவதும் இருவகையாக உள்ளது. சுலேகா என்ற இணையத்தளத்தில்(யீஷீக்ஷீuனீs.suறீமீளீலீணீ.நீஷீனீ) தமிழர் தம் கலாச்சாரத்தைப்பற்றித் தற்புகழ்ச்சியுடையோர். அவர்களின் உயர்வு மனப்பபான்மை தாழ்வுமனப்பான்மையிலிருந்து பிறந்ததாகும்  என்று ஒருவர் விமர்சித்ததைப்பற்றி ஆதரித்தும் எதிர்த்தும்  உலகெங்கிலுமிருந்து நூற்றுக்கணக்கான கடிதங்கள்  வந்துள்ளன.

 

மலையாளத் திரைப்படங்களில் தமிழர்கள் பாண்டி என்று அழைக்கப்படுகிறார்கள். பாண்டியென்றால் குளிக்காதவன் முதலிய பல அர்த்தங்களை மலையாளிகள் கற்பிக்கிறார்கள். தமிழர்களை 'ரௌடி'களாகவும் அங்கு சித்திரிக்கிறார்கள்.நரன் என்ற மலையாளப்படத்தில் நடிகர் மோகன்லாலுக்கு  கலாச்சாரக் காப்பாளர் வேடம். தமிழில் பெயர்ப் பலகை வைப்பதை எதிர்ப்பார் லால். அப்படி வைத்தால் கடைக்குத் தமிழன் வருவான். கடையே வன்முறைக்கு உள்ளாகிவிடும் என்பார். லாலின் பேச்சை கேட்காமல் ஒருவர் தமிழில் பெயர்ப் பலகை வைப்பார். அதிசயம்! அடுத்தக் காட்சியில் கடைக்கு வரும் தமிழர்கள் காசு தராமல் கடைக்காரனையே இழுத்துப் போட்டு மிதிப்பார்கள் உலகமெல்லாம் உதைபடும் தமிழர்கள் இப்படி மலையாள சினிமாவில் மட்டும் அப்பாவி மலையாளிகளை உதைத்துக் கொண்டிருப்பார்கள்.

 

சாகித்ய அக்காதெமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் சக்கரியா அவர்கள் அரபிக்கடலோரம் என்ற நூலில் தமிழரின்,,தமிழ்நாட்டின் சீரழிவுகளையும், சிறப்புகளையும், கேரளப்பின்னணியில் ஒப்பிட்டுக்காட்டுகிறார்.புதுமைப்பித்தனையும், மௌனியையும், க.நா.சுப்ரமண்யத்தையும், அசோகமித்திரனையும் போன்ற மகத்தான தமிழ் எழுத்தாளர்களை மலையாள நவீனத்துவம் இழந்துவிட்டது என்று வருந்துகிறார். கறுப்பு ரிப்பன்கள் போலப் புதிய நெடுஞ்சாலைகள் தமிழகத்தின் மூலைமுடுக்குகளை இணைப்பதைக்கண்டு வியக்கிறார்.சிறு கிராமங்களில் கூட தென்படும் பள்ளிமாணவர்களின் அபரிமிதமான பிரவாகத்தையும், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாய்ச்சலையும் பாராட்டுகிறார்.அதே நேரத்தில் ஒலியையும்,இசையையும் ஒலிபெருக்கிகள் மூலம் துஷ்பிரயோகம் செய்வது - தமிழ்நாட்டைப்போலப் பரவலாகவும்,கொடூரமாகவும் வேறு இந்தியக் கலாச்சாரங்கள் எதிலும் நிகழ்வதில்லை என்று நமக்கு மோசமான சான்றிதழும் வழங்குகிறார்.

 

மனித வரலாற்றில இதுவரை இல்லாத அளவில் கடந்த சில நூற்றாண்டுகளில் சூறாவளி வேகத்தில் நிகழும் மாபெரும் அறிவியல் பண்பாட்டு மாற்றங்களை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய அடையாளங்களை உருவாக்குவோம். அதே நேரத்தில் நம்மை உயர்த்திய, மற்றவர்கள் பாராட்டுதலைப்பெற்ற நல்ல அடையாளங்களைக் கைவிடாமல் பேணிக்காப்போம்.

 

 

1.அரசன் தவறிழைக்கும்போது அஞ்சாமல் அறிவுறுத்திய கோவூர் கிழாரும், கடலில் வீசீனாலும்,சுண்ணாம்புக் காளவாயில் போட்டாலும் தம் கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் 'நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்' என்ற  திருநாவுக்கரசரும் நிலைநிறுத்திய அஞ்சாமையை நம் அடையாளமாக்குவோம்.

 

2.'தாகத்தால் தவிக்கும் பசுவிற்கு நீர் வேண்டும்' என்று கூட மற்றவர்களிடம் யாசிக்காதீர்கள் என்று அறிவுறுத்திய திருவள்ளுவரின் வழி நின்று 'ஏற்பது இகழ்ச்சி'  என்பதை மனதில் கொண்டு தமிழர்களில் பிச்சைக்காரர்களே இல்லை என்பதை  நம் அடையாளமாக்குவோம்.

 

3.நாயன்மார் அறுபத்துமூவரில் முதலிடம் வகிக்கும் திருஞானசம்பந்தர் கோள்களையும், நல்ல நாள்களையும் நம்பி இறைபக்தர்கள் செயல்படலாகாது என்று கோளறு திருப்பதிகம் பாடி சோதிடத்தைப் புறந்தள்ளியதையும்,. 'நாள் என் செயும் வினைதான் என் செயும் என்னை நாடி வந்த கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும்' என்று அருணகிரிநாதர் நாள், கோள் பார்ப்பதை எதிர்த்ததையும் தொடர்ந்து பாரதி 'சோதிடம் தனை இகழ்  என்று புதிய ஆத்திச்சூடியில் முரசறைந்ததையும் நம் நெறியாகக்கொண்டு சோதிடத்தை நம்பாமல்,மூட நம்பிக்கைகளுக்கு முடிவு கட்டி,  நம்மிடம் உள்ள சக்தியை மட்டும் நம்புவதை நம் அடையாளமாக்குவோம்.

 

 

5.தண்ணீர் பிரச்சினை காலங்காலமாகத் தொடரந்த நிலையிலும், கந்தையானாலும் கசக்கிக்கட்டு, கூழானாலும் குளித்துக்குடி என்று நம் முன்னோர் சொன்னபடி, சுற்றுச்சூழல் தூய்மை போற்றும் முன்னோடி இயக்கமான 'எக்ஸ்நோரா' உருவான தமிழகத்தில் , தூய்மையை நம் அடையாளமாக்குவோம்.

 

6.தமிழ் மக்கள் இந்திய மாநிலங்களிலும், பிற நாடுகளிலும், சிறப்பாக ஸ்ரீலங்காவிலும் சந்திக்கும் நெருக்கடிகள் நம் இன ஒற்றுமைக்கான கடும் அவசியத்தைத் தோற்றுவித்துள்ளன. சாதி,சமய,கட்சி,கொள்கை,நாட்டு வேறுபாடுகளைக் களைந்து தமிழால் தமிழினம் ஒற்றுமையாய் செயல்படும்  என்பதை நம் அடையாளமாக்குவோம்.

 

7.'கண்ணுடையர் என்பவர் கற்றோர்' என்பதை செயல்படுத்தும் வண்ணம் அனைவரும் கசடற கல்வி கற்று, உணர்ச்சிவயப்படாமல், அறிவு வழியில் அனைத்தையும் தீர்மானிக்கும்  அறிவார்ந்த சமூகம் நாம் என்பதை நம் அடையாளமாக்குவோம்..

 

8.தனி மனித ஒழுக்கமே சமூக ஒழுக்கமாகிறது என்பதையுணர்ந்து  தனக்கும், சமூகத்திற்கும் கேடுவிளைவிக்கும் அனைத்தையும் புறந்தள்ளி ஒழுக்கமே உயிராக நினைப்பதை நம் அடையாளமாக்குவோம்.

 

9.’பிறிதின் நோய் தன் நோய் போல்’ காணும் பண்பட்ட மனநிலையை இல்லங்களிலும், பள்ளிகளிலும் போற்றி வளர்த்து உள்ளங்களில் நிலைநிறுத்தி மனித நேயத்தை நம் அடையாளமாக்குவோம்.

 

10'.யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதை நாம் ஏற்பதால் எந்தத் திசையிலிருந்து உன்னதங்கள் வந்தாலும், நாம் ஏற்போம். பிறர் பண்பாட்டில் எது சிறந்ததோ,எது நம்மை மேம்படுத்துகிறதோ அந்த நல்லவற்றையெல்லம் நமதாக்குவதை நம் அடையாளமாக்குவோம்.

 

உணவு,உடை முதலிய வெளி அடையாளங்கள் நிலையில்லாமல் காலந்தோறும் மாறும். அதைவிட சிறந்த வாழ்வியல் பண்பாடுகளை- மேற்கண்ட '10 கற்பனைகளை' உண்மையாகச் செயல்படுத்தி அடையாளங்களாக வளர்த்தால் அவையே என்றும் நம்மிடம் நிலைக்கும்.நம் இனைறைய தீராப்பிரச்சினைகள் பலவற்றைத் தீர்க்கும். உலகம் நம்மை மதிப்புடன் திரும்பிப்பார்க்கும்.

 

              

 

 

பட விவரம்: 1.கால்டுவெல் 2. யூதர்களின் இன அடையாளம் 3.இட்லி சாம்பார் 4.மார்க்கோ போலோ5.நரன் படத்தில் மோகன்லால்