தாலி கட்டுவது தமிழர் வழக்கமா?

  

தமிழக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்து அலசி,ஆய்ந்தால், அதிர்ச்சிதரும் சில உண்மைகள் காத்திருக்கின்றன. அவை நம் நம்பிக்கைகள் சிலவற்றைக் கேள்விக்குரியதாக்குகின்றன.

 

நாம் தமிழ்ப்பண்பாடு என்றும், தமிழர் சாதனை என்றும்  நம்பிக்கொண்டிருக்கும் பலவும், நம்மவை அல்ல என்பது கசப்போடு புரிய வருகிறது. தமிழ் அடையாளமாக நாம் கருதி அணியும் ஆடை அணிகலன்கள்,உண்ணும் உணவுப்பண்டங்கள்,கொண்டாடும் திருவிழாக்கள் முதலிய பலவும் அந்நிய கலாச்சாரப் படையெடுப்புகளால் தந்திரமாக நுழைந்தவை;நிலைத்தவை!

 

தமிழ்ப்பெண்ணின் புனிதச் சின்னமாக,கற்பின் அடையாளமாக,வணங்குதற்குரியதாக நாம் நம்பும் தாலியை, மூவேந்தர்கள ஆண்ட காலத்தில், சங்க இலக்கியங்கள் எழுந்த காலத்தில், 'கற்புக்கரசி' கண்ணகி வாழ்ந்த காலத்தில்  திருமணத்தின்போது பெண்களுக்கு அடையாளச்சின்னமாக  அணிவித்தார்களா?

 

இந்தக்கேள்விக்குச் சரியான பதில் அறிய இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த திருமணங்களைப் பற்றி ஏதேனும் குறிப்புக் கிடைக்கிறதா என்று பார்ப்போம். சங்க இலக்கியத்தில் ஒன்றான அகநானூற்றில் இரு பாடல்களில் (அகம்:86,136)பழந்தமிழர் திருமண நிகழ்வுகளைப்பற்றிய செய்தி காணப்படுகிறது.

 

அவை குறிப்பிடும் சில முக்கிய நிகழ்வுகள்: திருமணம் நல்ல நாளில் விடியற்காலையில் நடைபெறுகிறது.இறைவழிபாடு நடத்தப்படுகிறது. முதுபெண்டிர் நீர்க்குடங்களைத்தலைமேல் சுமந்து வருகின்றனர். குழந்தைகளைப்பெற்றெடுத்த மங்கையர் மணமகளை நீராட்டி,நெல்லும் மலரும் தூவி, கணவன் விரும்பும் துணைவியாக விளங்க வாழ்த்துகின்றனர்.மணமகளின் பெற்றோர் தம் மகளைப் 'பெரிய இல்லக்கிழத்தியாகுக' என வாழ்த்துகின்றனர். மணமுழவு முழங்குகிறது. வாகையிலையோடு அறுகம்புல் கிழங்குகளைக் கோத்த மாலையை மணமகள் அணிகிறாள். உளுத்தம்பருப்புடன் கலந்த அரிசிப்பொங்கல் அல்லது இறைச்சியும் நெய்யும் கலந்த வெண்சோறு விழாவில் விருந்தாகிறது.

 

இப்படிப் பல நிகழ்வுகளை விரிவாகச்சொல்லும் இப்பாடல்கள் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டியதாக எங்கும் குறிப்பிடவில்லை. அதுமட்டுமல்ல சங்க காலத்துத்திருமணத்தில் புரோகிதர் தீ வளர்த்து,மந்திரம் ஓதி, மணமக்கள் தீவலம் வந்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, புரோகிதர் தட்சணை பெற்று நடைபெற்றதாக எங்கும் செய்தியில்லை. ஐம்படைத்தாலியையும், புலிப்பல் தாலியையும் குழந்தைகளுக்குக் காப்பு அணியாக மட்டுமே அணிவித்ததாகத் தெரிகிறது.

 

கோவலன் கண்ணகி திருமணத்தைப்பற்றி விரிவாகப்பேசும் சிலப்பதிகாரம் தாலி கட்டும் சடங்கைப் பற்றி மட்டும் எங்கும் மூச்சே விடவில்லை. சீவக சிந்தாமணியில் சீவகனை மணந்த எட்டுப் பெண்களில் ஒருத்திக்குக் கூடச் சீவகன் திருமணத்தின்போது தாலி கட்டியதாகக் குறிப்பில்லை. பெரியபுராணம், கந்தபுராணம் ஆகிய நூல்களில் விரிவாக மணவிழாவை வருணிக்கும் இடங்கள் உண்டு. ஆனால் இவற்றில் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டியதாக ஒரு திருமணமும் காட்டப்படவில்லை.

 

திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார்,தம் தோழியிடம் கண்ணன் தம்மை மணந்ததாகக் கண்ட கனவை உருக்கமாக விளக்குகிறார். திருமணச்சடங்கள் அத்தனையும் குறிப்பிடும் ஆண்டாள் கண்ணன் தமக்குத் தாலி கட்டியதாக மட்டும் குறிப்பிடவில்லை. 'மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்' என்றவர் அவ்வழக்கம் அன்ற இருந்தால் எப்படிக் குறிப்பிடமால் விடுவார் ?

 

புறநானூற்றிலும்(127), சிலப்பதிகாரத்திலும்(1:47, 4:50), சீவக சிந்தாமணியிலும் (2697) 'மங்கல அணி' என்ற சொல் இடம் பெறுகிறது. மணமான பெண்கள் சிறப்பான ஓர் அணியாக இதனை அணிந்திருக்கலாமேயொழிய தாலி கட்டித் திருமணம் செய்ததாக எங்குமே தடயமில்லை.

 

தாலிகட்டித்திருமணம் செய்ததாகக் கிடைக்கும் முதல் கல்வெட்டுச்செய்தி கி.பி. 958 ஆம் ஆண்டிறிகுரியதாகும்(5.1ஙீ111ழிஷீ144). எனவே பல்லவர் ஆட்சி காலத்தின் கடைசிக் கட்டங்களில் அவ்வழக்கம் திருமணங்களில் அறிமுகமாகியிருக்கலாம் என்றே ஊகிக்க முடிகிறது.

 

நம் பண்பாட்டோடு நீண்ட காலம் தொடர்பற்று, பின்பு எப்படியோ புகுத்தப்பட்ட  இந்தத்தாலி கட்டும் வழக்கம் நம் பண்பாட்டிற்குப் பெருமையா என்று சற்றே உரத்துத் சிந்தித்துப் பார்ப்போம்.

 

திருமணமான பெண்ணுக்கு அடையாளம் தாலியாகிய வேலியாம். ஆனால் திருமணமான ஆணுக்கு எந்த வேலியும் கிடையாதா? ஒருத்திக்கு ஒருவன் என்பதுபோல ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ்ச்சமூகத்தில் வற்புறுத்தப்படவில்லை என்பது தானே உண்மை. நீண்ட காலம் பெண்கள் ஒரு தலைப்பட்சமாக நடத்தப்பட்ட அநீதிக்குத் தாலி ஒரு சாட்சி அல்லவா?

 

அமரர் கல்கி அவர்கள் எழுதிய 'பொன்னியின் செல்வன்' புதினத்தைப் படித்தபின் இராஜ இராஜ சோழனும் அவன் காதலித்து மணந்த வானதியும் நம் கண்முன் இலட்சிய காதலர்களாகக் காட்சியளிக்கின்றனர். ஆனால் வானதி தவிர இன்னும் 14 பெண்களைச் சோழன் மணந்ததை அப்புதின வாசகர்கள் சீரணிப்பது சிரமமாயினும் அதுவே வரலாற்று உண்மை! இதே புதினத்தில் இடம் பெறும் வானவரையர் வந்தியத்தேவர் - குந்தவை பாத்திரங்கள் நம் கண்முன் நிற்கும் இனிய இணையர்கள். ஆனால் வந்தியத்தேவர் தம்அன்பு மனைவி குந்தவை தவிர இன்னொரு பெண்ணையும் மணந்தார் என்பது புதின வாசகர்களுக்குச் சொல்லப்படவில்லை. காவியக் காதலர்களாக விளங்கிய அம்பிகாபதி அமராவதி பற்றி நாம் அறிவோம். கம்பர் மகன் அம்பிகாபதி ஏற்கனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவன். திருமணத்திற்குப் பின்னரே,மனைவி இருக்கும்போது, அவன்  சோழன் மகளைக் காதலித்தான் என்ற செய்தி எத்தனை பேருக்குத் தெரியும்?  திருமலை நாயக்கர் இறந்தபோது அவர் மணந்த 200 மனைவியருள் பலரும் உடன்கட்டையெறினர் என்பது எவ்வளவு கொடுமையானது!

 

நம் வரலாறு முழுவதும் இப்படிப் பெண்கள் வஞ்சிக்கப்படுவதையே பார்க்கிறோம். குடும்பப் பெண்கள்  தப்பித்தவறி கற்பு நெறி தவறினால் அவளைத் தீர்த்துக் கட்டவும் ஆண்கள் தயங்குவதில்லை. ஆனால் ஆண்கள் கற்பு நெறியில் தவறிழைப்பது சர்வ சாதாரண செயலாகவே கருதப்பட்டிருக்கிறது. சங்க காலத்தில் கணவன் மனைவிக்கிடையே சிறு பூசல் ஏற்படுவதை ஊடல் என்பர். வயலும், வயல்சார்ந்த இடத்தையும் குறிக்கும் மருதத்திணையின் உரிப்பொருள் ஊடல். இந்த ஊடல் கணவன் மனைவியரிடையே பல காரணங்களால் நிகழலாம். ஆனால் சங்க இலக்கியத்தில் காணப்படும் கிட்டத்தட்ட எல்லா மருதத் திணைப்பாடலகளிலும் ஊடல் என்பது கணவன் பரத்தை என்ற விலைமாதிடம் தலைவியைத் தவிக்க விட்டுச்செல்வதால் நிகழ்வதாகவே காட்டப்படுகிறது. கணவன் கற்பு நெறி தவறும்போது ஊடல் என்ற சிறு பிணக்கு மட்டுமே மனைவியிடமிருந்து எதிர்விளைவாகிறது. காரணம் அந்த ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு கணவன் பரத்தையிடம் செல்வது என்பது மிகப் பரவலான ஒரு செயலாக இருந்திருக்கிறது. நெறிபிறழ்ந்த ஆண்களின் தேவைக்காகப் பெரும் எண்ணிகையில் பரத்தையர்கள் உருவாகியிருக்கிறார்கள். மதுரையில் வாழ்ந்த பரத்தையர்களை மட்டுமே ஓரூர் முழுவதிலும் குடியேற்றலாம் என்று குறிப்பிடுகின்றது சங்க இலக்கியமான கலித்தொகை (மருதக்கலி.2).பரத்தமையின் தொடர்ச்சியாக மது அருந்தலும் அந்தச் சமூகத்தில் பரவலானது. திருக்குறள் தவிர வேறு எந்த சங்க கால இலக்கியமும் ஆண் தவறு செய்வதையும், மது அருந்துவதையும் கண்டித்ததாகவே தெரியவில்லை. சங்க காலச் சமூகம் சீரழிந்து அந்நியர்க்கு அடிமைப்பட்டதற்கு ஆண்களின் இவ்விரு ஒழுக்கக்கேடுகள் முக்கிய காரணமாயின.

 

பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி நீநி வழங்குவதற்கு உறுதுணை செய்யும் தாலி கட்டும் போலிப் பண்பாடு களையப்பட வேண்டும். 'கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இருவர் கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்' என்று பாரதி பாடியதை நடைமுறைப்படுத்த   கீழ்க்கண்ட ஒன்றைப் பின்பற்றலாம்:

1. கணவனின் உருவத்தை மனைவியும், மனைவியின் உருவத்தை கணவனும் ஏற்ற வடிவில் அமைத்து  சங்கிலியில் கோத்து இருவருமே கழுத்தில் அணியலாம்.

2. திருமணமானதைக் காட்ட இருவருமே கை சுண்டு விரலில் வளையம் அணியலாம்

3. எந்த அடையாளமும் இருவருக்கும் தேவையில்லை. மனதில் ஆழமான அன்பும், ஒருவர்மேல் ஒருவர் நம்பிக்கையும் கொள்ளும் தம்பதியினருக்கு இந்த வெளி அடையாளங்கள் எதற்கு?