இன்னும் எத்தனை காலம்தான் நம்மை நாமே புகழ்ந்துகொண்டிருப்போம்? நமக்கு நாமே முதுகில் தட்டிக்கொண்டு மகிழ்வோம் ? நம் பெருமையை நாம் அறியாத போது, 'நீ யாரையும் விடக்குறைந்தவனில்லை' என்று அயலவர்கள் நமக்கு அறிவித்து உற்சாகப்படுத்தினார்கள. இதனால் நாம் நம் தாழ்வுமனப்பான்மையைத் தகர்தெறிய முயன்றது சரிதான்.
ஆனால் நம் பழம் பெருமையிலேயே லயித்துப்போய் நம்மில் பலர் மயங்கிக்கிடக்கிறோம். இறந்த காலத்தைவிட்டு நகர மறுக்கிறோம். நிகழ்கால எதார்த்தங்களைக் காணத் தயங்குகிறோம். எதிர்கால சவால்களைச் சந்திக்க முடியாதிருக்கிறோம்.
எனவே நம் பழம் பெருமைபற்றிய போதையைத்தெளிய வைத்தாக வேண்டும். சிலரின் அரசியல்,சமூக ஆதாயங்களுக்காக ஊதிப்பெரிதாக்கப்ப்பட்ட சில கருத்துருக்களை மறுபரிசிலனை செய்தாக வேண்டும். நம்மைப்பற்றிய உண்மையற்ற புகழ்ச்சிகளை உதறித்தள்ள வேண்டும்.
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி' என்று தமிழர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்வதை அப்படியே ஏற்க முடியுமா? உலகின் 'முதல் மனிதன் தமிழன். அவன் தமிழில் தான் பேசினான்' என்று கூறினால் நகைப்புக்கு இடமாகாதா? வாழும் பழைய மொழிகளிலே மூத்தது தமிழ் என்றால் சீனர்கள் போட்டிக்கு வருகிறார்கள். பக்கத்து மாநிலத்தினர் கூட தமிழிலிருந்து தங்கள் மொழி பிரிந்ததாக ஏற்பதில்லையே.
தமிழகத்தின் தென் பகுதி குமரிக்கண்டமாகச் சிறந்திருந்த கதையைச் சொன்னால் மனிதன் இந்த உலகில் தோன்றுவதற்கு முன்னரே ‘இந்தக் கண்டத்தைக் கடல் கொண்டுவிட்டது இதில் எப்படித் தமிழர்கள் வாழ்ந்திருக்க முடியும்’ என்கின்றனர் புவியியலாளர்கள். சிந்துசமவெளி நாகரிகம் திராவிடத் தமிழருடையது எனப்பெருமைப்பட்டால், 'இதற்கு முழுமையான ஆதாரங்கள் போதவில்லை. ஹரப்பா எழுத்துகளை இன்னும் படிக்கமுடியவில்லை. இப்போது எந்தமுடிவுக்கும் வரமுடியாது' என ஆராய்ச்சி உலகம் நம் ஆர்வத்திற்குத் தடைபோடுகிறது. அதுமட்டுமன்றி சுமேரிய(கி.மு.5300), எகிப்திய(கி.மு.4000) நாகரிகத்திற்குப் பிற்பட்டதுதான் சிந்துசமவெளி(கி.மு.3300) நாகரிகம் என்கின்றனர். சுமேரியர்களின் எழுத்துகளைப் படிக்க முடிவதுபோல சிந்துவெளி எழுத்துகளைப்படிக்க முடியாமலிருப்பது ஒரு பின்னடைவாகிறது. சிந்துசமவெளியினர் போலன்றி சுமேரியரின் வரலாற்றைக் குழப்பமின்றி அறியமுடிகிறது. (படம்1,2)
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் என்கிறோம். 4449 ஆண்டுகாலம் கடல்கொண்ட தென்மதுரையில் முதற்சங்கமும், பின் 3700 ஆண்டுகாலம் பாண்டியரின் கபாடபுரத்தில் இடைச்சங்கமும், 1850 ஆண்டு காலம் இன்றைய மதுரையில் கடைச்சங்கமும் இருந்ததாக இறையனார் களவியல் உரை முதலிய நூல்கள் விரித்துரைத்தாலும் இவை நம்புவதற்கு உரியனவாக இல்லையே.10,000 ஆண்டுகளுக்குமுன் சங்கம் தொடங்கியிருக்கமுடியுமா? மேலும் சங்கம் இருந்ததற்கான எந்தச் சான்றும் சங்க இலக்கியங்களிலேயே இல்லை..சங்கம் என்ற சொல்லே தமிழ்ச்சொல் அன்று. தமிழ் இலக்கியங்களில் பெரும்பான்மையானவை சங்கம் வளர்த்ததாகச் சொல்லப்படும் மதுரைக்கும் பாண்டிய நாட்டிற்கும் வெளியே எழுதப்பட்டவையே. திருவள்ளுவர்,இளங்கோவடிகள், கம்பர்,சேக்கிழார், திருத்தக்கதேவர்,ஒட்டக்கூத்தர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலிய தமிழ் இமயங்கள் பலரும் பாண்டி நாட்டினர் அல்லர். மதுரைக்கு வெளியே தான் மிகுந்த தமிழ் இலக்கியங்கள் பிறந்து வளர்ந்திருக்கின்றன..
தூய தமிழ்க்கலாச்சாரம், தூய தமிழன் முதலிய சொற்றொடர்கள் பொருள் உள்ளனவா எனச்சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலில் எது நம் கலாச்சாரம் என்பதிலேயே நாம் குழம்பிப்போய் இருக்கிறோம். நம் முன்னோரின் வாழ்வு நெறியே நம் கலாச்சாரம் என்றால், யார் நம் முன்னோர் ? திருவள்ளுவர் காலத்தினரா? பிற்காலச்சோழர் காலத்தினரா? சென்ற நூற்றாண்டினரா? ஒவ்வொரு நூற்றாண்டிலும் நம் உணவு, உடை, பழக்கவழக்கங்கள் மட்டுமன்றி, மதிப்பீடுகளும் மாறியே வந்துள்ளன.
திருவள்ளுவர் காலத்திற்குக் காலஎந்திரத்தில் போய்ச்சேர்ந்தால் நாம் ஒருநாள கூட அங்குத் தாக்குப்பிடிக்க முடியாது. நெல்லின் சோற்றை உடும்புக்கறியோடு உண்ணவேண்டிய விருந்தோம்பல் மட்டுமன்றி, அன்றைய சமூக அங்கீகாரம் பெற்ற பரத்தமையும், கள்ளுண்ணலும் நம் ஒழுக்கத்தைச் சோதிக்கும்.. இன்றைய இளைஞர்களும் இளம் பெண்களும் உடுத்தும் ஆடைகள் தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிராக இருப்பதாக வருந்துவோர் எது தமிழருடைய ஆடை என்று அறுதியிட்டு விளக்கினால் நல்லது. நாம் நினைப்பது போலப் பழங்காலத்தில் பெண்கள் உடலை இழுத்துமூடியபடி பதினெட்டுமுழச்சேலையையும், ஆண்கள் எட்டுமுழவேட்டியையும், உடுத்திக்கொண்டு உலவவில்லை. அண்மைக்காலம் வரை மார்பைமூடி உடுத்தும் ஆடைகூட உயர்குலப்பெண்களுக்கு மட்டும்தான். தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் மார்பை மூடுவதற்குக்கூட உரிமையில்லாதவர்கள்! ஆண்களில் பெரும்பாலோர் அரையில் மட்டும் ஆடை அணிந்தனர். பெண்கள் ஆடைகளினால் முழுவதும் மறைக்கப்படாத தம் உடலை அணிகலன் பூண்டு மறைத்தனர்.(காண்க: தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்- கே.கே.பிள்ளை பக்:145) பண்டைக்காலத் தமிழர் உடுத்திய ஆடைகளை அணிந்துகொண்டு இன்று தெருவில் நடமாட முடியுமா?
தூயதமிழ் இனம் என்று ஏதுமில்லை. 'தூய ஆரிய இனம்' என்று இட்லர் முழங்கிய காலத்திலேயே தூய இனக்கொள்கை பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் உட்பட உலகில் எந்த இனமும் கலப்பினமே. ஐக்கிய அமெரிக்காவில் வாழும் ஆசிய,ஆப்பிரிக்க, ஐரோப்பிய இனங்களை வைத்து அண்மையில் நடத்திய மரபணு சோதனையில் 99.9% ஒற்றுமையே காணப்படுகிறது. 0.1% மட்டுமே வேறுபாடு காணப்படுகிறது. இன்றைய மனிதனின் முன்னோடியான 'ஹோமோ சாப்பியன்' வகை மனித இனத்தினர் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் பரிணாம வளர்ச்சிபெற்று, பல்கிப்பெருகி ஏறத்தாழ 70,000 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து பெயர்ந்து ஐரோப்பிய ஆசிய கண்டங்களில் நுழைந்துள்ளனர்.(படம்:3) இவர்களே கறுப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு எனப் பல வகையாகத்தோற்றமளிக்கும் இன்றைய உலக மக்கள். பல நாடுகளிலிலிருந்தும் பெறப்பட்ட 133 வகை மரபணுக்களைச் சோதித்துப்பார்த்ததில் எல்லாமே ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒரு பெண்ணின் மரபணுவிலிருந்து கிளைத்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உலக மக்கள் அனைவரும் ஒர் ஆப்பிரிக்கத்தாயின் மக்கள் என்பதே ஆகக் கடைசியான அறிவியல் கண்டுபிடிப்பு. ' யாதும் ஊரே. யாவரும் கேளிர்' என்று நம்மவர் சொன்னதே மீண்டும் உண்மையாகியுள்ளது. இந்த உண்மைகள் கண்டறியப்பட்ட பின்பும் சாதிவேறுபாடுகள், இனவேறுபாடுகள் பற்றிப்பேசுவது மடமையிலும் மடமையன்றோ!. தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்து, தமிழைப்பயன்படுத்தும் அனைவரும் தமிழரே. முற்போக்குச்சிந்தனையுடையவர்கள் எனக் கூறிக்கொள்வோரே தலித்மக்களை மறைமுகமாக ஒதுக்குவதும் , பிராமணர்களை ஆரிய இனத்தவர் என முத்திரையிட்டு இழிவுபடுத்துவதும் இனியும் நடக்க அனுமதிக்கலாகாது.
தலித் மக்கள் காலங்காலமாக ஒதுக்கிவைக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களாக்கப்பட்டதற்குப் பார்ப்பனர்கள் மட்டுமன்றி, உயர் சாதியினர் அனைவரும் காரணமாவர். சமூகத்தின் உயர் மட்டத்தில் இருந்த பிராமணர்கள் இந்த சமூக அநீதிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளனர் என்பதில் ஐயமில்லை. இன்றும் பிராமணர்களின் ஒரு பகுதியினர் மனதளவில் இந்த மேலாதிக்கச் சிந்தனையிலிருந்து,மாறவில்லை. தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டே, வீட்டில் தமிழ்பேசிக்கொண்டே போலி உயர்வு மனப்பான்மையுடன், தங்களைத் தமிழ் இனத்தோடும், தமிழ்மொழியோடும் அந்நியப்படுத்திப்பார்ப்பதும் , ஆங்கிலத்தையோ,சமஸ்கிருதத்தையோ உயர்த்திப்பிடிப்பதும், தமிழ் நெஞ்சங்களுக்குத் தீவிர வெறுப்பை இவர்கள் மேல் உருவாக்குவதாகும். செல்வத்தாலும், கல்வியாலும் உயரத்திற்குச் சென்றுவிட்ட பிற சாதி தமிழ் மக்கள் சிலரிடமும் இம்மனப்பான்மை காணப்படுகிறது. இவர்கள் இந்த மமதையிலிருந்து விடுபட்டு தங்களைத் தமிழர்ளோடும் ,தமிழோடும் ஐக்கியப்டுத்திக்கொள்ளும் மனமாற்றம் வரவேண்டும்; வரவழைக்க வேண்டும். இதைவிட்டு விட்டு இத்தகையோரை ஓரங்கட்டுவதோ, இழிவுபடுத்துவதோ, அவர்களை இன்னும் கடின நெஞ்சர்களாகவே மாற்றும்.
அரசு தரும் உதவிகளாலும், ஒதுக்கீடுகளாலும் தலித் சமூகம் இன்று உயர்ந்துள்ளதாயினும் அவர்களின் உண்மையான முன்னேற்றம் அவர்கள் வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொள்வதில்தான் இருக்கிறது. அவர்கள் பின்தங்கிப்போனதற்கும், உயர்சாதியினர் முன்னேறி உயர்ந்ததற்கும் ஆன வாழ்வுமுறைக் காரணங்களை அவர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அடிப்படை ஒழுக்கம், தூய்மை போன்ற பண்புகளை அவர்களிடம் அவர்கள் மேல் அக்கறை உள்ள அமைப்புகளேனும் பயிற்றுவிக்க வேண்டும். மற்றவர்களைவிட அவர்கள வாழ்வுநெறிகளில் உயர்ந்தோங்குவதே அவர்களுக்கு உண்மையான மறுக்கமுடியாத சமூக அங்கீகாரத்தை நிலையாக வழங்கும்.
இவற்றையெல்லாம் செய்யாமல் மறைவாக நமக்குள்ளே நம் பழம் பெருமை பேசுவதில் மகிமையில்லை . நிகழ்காலத்தில் தமிழ்ச்சமூகத்தின் நிலை, தமிழின் நிலை என்ன? இன்னும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கூட தமிழ் பயிற்றுமொழியாக்கப்படவில்லை. தமிழ்வழிக் கல்வி கற்றவர்கள் ஆங்கில வழி கற்றவர்களைவிட தாழ்வாகவே தமிழ்த்திரு நாட்டில் மதிக்கப்படுகிறார்கள். தமிழ் மெல்ல மறைந்து தமிங்கலம் என்ற புது மொழி உருவாகிக்கொண்டிருக்கும் ஆபத்தை நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
பணம் கொடுத்துத் தமிழனிடமிருந்து வாக்குரிமையைப் பறிக்க முடியும். காசுக்குப் பல்லிளிப்பான தமிழன். மதுவுக்கு தன்னை இழப்பான். ஊடகக்கவர்ச்சியில் மெய்மறப்பான். நுகர்பொருள் மோகத்தில் மூழ்குவான். உணர்ச்சிவயப்படுதல், கால உணர்வற்றிருத்தல், தன்னை நம்புவதைவிட சோதிடத்தையும், சாமியார்களையும் நம்பிச்செயல்படுதல், அறிவியல் ஆதாரமற்ற பல்வேறு மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடத்தல், உடனடி பலன்களுக்காகக் குறுக்குவழிகளில் செல்லும் நேர்மையின்மை முதலிய இழிகுணங்கள் தமிழரின் நிகழ்கால வாழ்வை எப்படிப் பெருமைப்படுத்தும்?
அயலகத்து மண்ணிலும் தமிழர் நிலை பெருமையாக இல்லையே. மலேசியாவில் உள்ள தமிழர்களில் பாதிப்பேர் தமிழ் எழுதப்படிக்கமுடியா நிலையில் உள்ளனர். தமிழர்களின் விழுக்காடும் பெருமளவிலிருந்து 7% ஆக அங்கு வீழ்ச்சியடைந்து வருகிறது. தமிழர்களின் அடிப்படை கோரிக்கைகளுக்காகப் போராடிய் மலேசிய மக்கள் சக்தி இயக்கம் பிளவு பட்டு நிற்கிறது. கர்நாடகத்திலோ மொழிச்சிறுபான்மை சிறப்பையும் தமிழ் இழந்த நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள 160 தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஈழத்தில் ஆயிரக்கணக்கான இன்னுயிர்களைப் பலிகொடுத்தும், எண்ணற்ற தியாகங்கள் செய்தும் தமிழருக்குத் தனிநாடோ அல்லது சம உரிமையோ கிடைக்கவில்லை. 'ஒற்றுமையின்றி போரினால் அழிந்தனர் மூவேந்தர்' என்ற பழைய வரலாறு மீண்டும் ஈழத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. நாம் ஏன் தோற்றோம் என்பதை ஆய்ந்து கத்தியைத்தீட்டுவதை விட புத்தியைத்தீட்டி வெற்றிக்குரிய புதிய உத்திகள வகுத்தாக வேண்டும்.
இன்றைய உலகில் மொழிகளின், அல்லது இனங்களின் சிறப்பை வல்லமை தீர்மானிக்கிறது ! பெரும்பான்மை தீர்மானிக்கிறது ! மொழிச்செம்மையோ அல்லது இனப் பழமையோ தீர்மானிப்பதில்லை என்பதே உண்ணமையாகும்
பழம் பெருமையும், நிகழ்காலச்சிறுமையும் மறந்து தமிழர் நாளை புதிதாய் பிறக்கட்டும். உயர்பண்பாளர்களாய், சாதனையாளர்களாய், கல்விஅறிவுடையோராய், ஒன்றுபட்ட ஒரே இனமாய், வல்லவர்களாய் நிமிரும்போது உலகம் நம்மை வணங்கிப்போற்றும்.
பட விளக்கம்
படம்: 1 கி.மு.26 ஆம் றூற்றாண்டு சுமேரிய மொழி எழுத்துகள். உயர் பெண் குருவாகத் தேர்வு செய்யப்பட்ட அடாப் என்பவருக்கு தரப்பட்ட அன்பளிப்புகளை விளக்குகிறது.
படம: 2 இன்னும் புரியாத சிந்து சமவெளி எழுத்துகள்
படம்: 3 இன்றைய மனிதர்களின் மூதாதை.
படம்: 4 ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் பரவிய பாதை.