தமிழ்ப்பண்பாடு என்பதே அண்மைய கருத்தாக்கமாகும். தமிழர் என்ற சொல்லே முதலில் அப்பர் பாடல்களில் தான் இடம்பெறுகிறது. பண்பாடு என்ற சொல்லை முதலில் 1937 இல் தான் வையாபுரிப்பிள்ளை வழக்குக்கு கொண்டுவந்தார். தூய தமிழ்க்கலாச்சாரம், தூய தமிழன் முதலிய சொற்றொடர்கள் பொருள் உள்ளனவா எனச்சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலில் எது நம் கலாச்சாரம் என்பதிலேயே நாம் குழம்பிப்போய் இருக்கிறோம். நம் முன்னோரின் வாழ்வு நெறியே நம் கலாச்சாரம் என்றால், யார் நம் முன்னோர் ? திருவள்ளுவர் காலத்தினரா? பிற்காலச்சோழர் காலத்தினரா? சென்ற நூற்றாண்டினரா? ஒவ்வொரு நூற்றாண்டிலும் நம் உணவு, உடை, பழக்கவழக்கங்கள் மட்டுமன்றி, மதிப்பீடுகளும் மாறியே வந்துள்ளன.
திருவள்ளுவர் காலத்திற்குக் காலஎந்திரத்தில் போய்ச்சேர்ந்தால் நாம் ஒருநாள கூட அங்குத் தாக்குப்பிடிக்க முடியாது. நெல்லின் சோற்றை உடும்புக்கறியோடு உண்ணவேண்டிய விருந்தோம்பல் மட்டுமன்றி, அன்றைய சமூக அங்கீகாரம் பெற்ற பரத்தமையும், கள்ளுண்ணலும் நம் ஒழுக்கத்தைச் சோதிக்கும்.. இன்றைய இளைஞர்களும் இளம் பெண்களும் உடுத்தும் ஆடைகள் தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிராக இருப்பதாக வருந்துவோர் எது தமிழருடைய ஆடை என்று அறுதியிட்டு விளக்கினால் நல்லது. நாம் நினைப்பது போலப் பழங்காலத்தில் பெண்கள் உடலை இழுத்துமூடியபடி பதினெட்டுமுழச்சேலையையும், ஆண்கள் எட்டுமுழவேட்டியையும், உடுத்திக்கொண்டு உலவவில்லை. அண்மைக்காலம் வரை மார்பைமூடி உடுத்தும் ஆடைகூட உயர்குலப்பெண்களுக்கு மட்டும்தான். தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் மார்பை மூடுவதற்குக்கூட உரிமையில்லாதவர்கள்! ஆண்களில் பெரும்பாலோர் அரையில் மட்டும் ஆடை அணிந்தனர். பெண்கள் ஆடைகளினால் முழுவதும் மறைக்கப்படாத தம் உடலை அணிகலன் பூண்டு மறைத்தனர்.(காண்க: தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்- கே.கே.பிள்ளை பக்:145) பண்டைக்காலத் தமிழர் உடுத்திய ஆடைகளை அணிந்துகொண்டு இன்று தெருவில் நடமாட முடியுமா?
தமிழ்நாட்டின் ஒவ்வொரு சாதியினருக்கும், சமயத்தவருக்கும்,நிலப்பிரிவினருக்கும் தனித்தனி அடையாளங்களை நிறைய காண முடிகிறது. ஆனால் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பொது அடையாளங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. இன்று நம் அடையாளங்களாக நினைக்கும் பலவும் நம்முடையன அல்ல என்பதை நம்மில் பலர் அறியோம். பெண்கள் அணியும் மூக்குத்தி முகமதியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. தெலுங்கு நாயக்கமன்னர்களால் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுப் பின்னர், கதர் ஆடைகளை விற்பனை செய்யும் வண்ணம், காங்கிரஸ் இயக்கத்தின் தாக்கத்தால்தான் நம்மவர்கள் தீபாவளி கொண்டாடும் பெருவழக்கம் தோன்றியது. நம் தவிர்க்கமுடியா உணவுப்பண்டமாக மாறிவிட்ட சாம்பார் தஞ்சை மராட்டியர்களின் சமையலறையில் எதிர்பாராவிதமாக உருவாகி, சத்ரபதி சிவாஜியின் மகன் மன்னர் சாம்பாஜியின் பெயரால் சாம்பார் எனப்பெயரிடப்பட்டது. நம் முக்கிய சிற்றுண்டியான இட்லி இந்தோனேசியாவிலிருந்து அறிமுகமானதாகும். ஆவியில் வேகவைக்கும் சிற்றுண்டிகள் பலவும் அந்நாட்டிலிருந்தே வந்தனவாகும்.
மனித வரலாற்றில இதுவரை இல்லாத அளவில் கடந்த சில நூற்றாண்டுகளில் சூறாவளி வேகத்தில் நிகழும் மாபெரும் அறிவியல் பண்பாட்டு மாற்றங்களை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய அடையாளங்களை உருவாக்குவோம். அதே நேரத்தில் நம்மை உயர்த்திய, மற்றவர்கள் பாராட்டுதலைப்பெற்ற நல்ல அடையாளங்களைக் கைவிடாமல் பேணிக்காப்போம்.
1.அரசன் தவறிழைக்கும்போது அஞ்சாமல் அறிவுறுத்திய கோவூர் கிழாரும், கடலில் வீசீனாலும்,சுண்ணாம்புக் காளவாயில் போட்டாலும் தம் கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் 'நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்' என்ற திருநாவுக்கரசரும் நிலைநிறுத்திய அஞ்சாமையை நம் அடையாளமாக்குவோம்.
2.'தாகத்தால் தவிக்கும் பசுவிற்கு நீர் வேண்டும்' என்று கூட மற்றவர்களிடம் யாசிக்காதீர்கள் என்று அறிவுறுத்திய திருவள்ளுவரின் வழி நின்று 'ஏற்பது இகழ்ச்சி' என்பதை மனதில் கொண்டு தமிழர்களில் பிச்சைக்காரர்களே இல்லை என்பதை நம் அடையாளமாக்குவோம்.
3.நாயன்மார் அறுபத்துமூவரில் முதலிடம் வகிக்கும் திருஞானசம்பந்தர் கோள்களையும், நல்ல நாள்களையும் நம்பி இறைபக்தர்கள் செயல்படலாகாது என்று கோளறு திருப்பதிகம் பாடி சோதிடத்தைப் புறந்தள்ளியதையும்,. 'நாள் என் செயும் வினைதான் என் செயும் என்னை நாடி வந்த கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும்' என்று அருணகிரிநாதர் நாள், கோள் பார்ப்பதை எதிர்த்ததையும் தொடர்ந்து பாரதி 'சோதிடம் தனை இகழ் என்று புதிய ஆத்திச்சூடியில் முரசறைந்ததையும் நம் நெறியாகக்கொண்டு சோதிடத்தை நம்பாமல்,மூட நம்பிக்கைகளுக்கு முடிவு கட்டி, நம்மிடம் உள்ள சக்தியை மட்டும் நம்புவதை நம் அடையாளமாக்குவோம்.
5.தண்ணீர் பிரச்சினை காலங்காலமாகத் தொடரந்த நிலையிலும், கந்தையானாலும் கசக்கிக்கட்டு, கூழானாலும் குளித்துக்குடி என்று நம் முன்னோர் சொன்னபடி, சுற்றுச்சூழல் தூய்மை போற்றும் முன்னோடி இயக்கமான 'எக்ஸ்நோரா' உருவான தமிழகத்தில் , தூய்மையை நம் அடையாளமாக்குவோம்.
6.தமிழ் மக்கள் இந்திய மாநிலங்களிலும், பிற நாடுகளிலும், சிறப்பாக ஸ்ரீலங்காவிலும் சந்திக்கும் நெருக்கடிகள் நம் இன ஒற்றுமைக்கான கடும் அவசியத்தைத் தோற்றுவித்துள்ளன. சாதி,சமய,கட்சி,கொள்கை,நாட்டு வேறுபாடுகளைக் களைந்து தமிழால் தமிழினம் ஒற்றுமையாய் செயல்படும் என்பதை நம் அடையாளமாக்குவோம்.
7.'கண்ணுடையர் என்பவர் கற்றோர்' என்பதை செயல்படுத்தும் வண்ணம் அனைவரும் கசடற கல்வி கற்று, உணர்ச்சிவயப்படாமல், அறிவு வழியில் அனைத்தையும் தீர்மானிக்கும் அறிவார்ந்த சமூகம் நாம் என்பதை நம் அடையாளமாக்குவோம்..
8.தனி மனித ஒழுக்கமே சமூக ஒழுக்கமாகிறது என்பதையுணர்ந்து தனக்கும், சமூகத்திற்கும் கேடுவிளைவிக்கும் அனைத்தையும் புறந்தள்ளி ஒழுக்கமே உயிராக நினைப்பதை நம் அடையாளமாக்குவோம்.
9.’பிறிதின் நோய் தன் நோய் போல்’ காணும் பண்பட்ட மனநிலையை இல்லங்களிலும், பள்ளிகளிலும் போற்றி வளர்த்து உள்ளங்களில் நிலைநிறுத்தி மனித நேயத்தை நம் அடையாளமாக்குவோம்.
10'.யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதை நாம் ஏற்பதால் எந்தத் திசையிலிருந்து உன்னதங்கள் வந்தாலும், நாம் ஏற்போம். பிறர் பண்பாட்டில் எது சிறந்ததோ,எது நம்மை மேம்படுத்துகிறதோ அந்த நல்லவற்றையெல்லம் நமதாக்குவதை நம் அடையாளமாக்குவோம்.
உணவு,உடை முதலிய வெளி அடையாளங்கள் நிலையில்லாமல் காலந்தோறும் மாறும். அதைவிட சிறந்த வாழ்வியல் பண்பாடுகளை- மேற்கண்ட '10 கற்பனைகளை' உண்மையாகச் செயல்படுத்தி அடையாளங்களாக வளர்த்தால் அவையே என்றும் நம்மிடம் நிலைக்கும்.நம் இனைறைய தீராப்பிரச்சினைகள் பலவற்றைத் தீர்க்கும். உலகம் நம்மை மதிப்புடன் திரும்பிப்பார்க்கும். ( சிந்திக்க வாங்க..)
.