ஊடகங்கள் - தற்போதைய பண்பாட்டு வீழ்ச்சிக்குப் பெரும் காரணம்

 

இன்று திரை, இதழ், தொலைக்காட்சி, வானொலி, இணையம், கைப்பேசி முதலியபன மக்களின் அன்றாட வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய ஊடகங்களாக உள்ளன.

 

இவற்றில் மக்களை மிகுதியாகப்பாதிக்கும் ஆற்றல் திரைப்படத்திற்கே மிகுதியாக உள்ளது. திரைப்படம் பாரக்க கொட்டகைக்குச்செல்வோர் குறைந்தாலும், திரைப்படத்தின் செல்வாக்கு பலமடங்கு மிகுந்தே உள்ளது. திரைச்செய்திகள் இன்றி நாளிதழ்கள் கூட இல்லை. வானொலிகள் மிகுதியானவர்கள் கேட்பது திரைப்படப்பாடல்களைத்தாம். இணையத்தில் திரைப்படங்களும், பாடல்களும், திரைத்தொடர்பானவையும் கொட்டிக்கிடக்கின்றன. கைப்பேசியின் அழைப்பில் கூட இன்று திரைப்பாடல்களே ஒலிக்கின்றன. திரைப்பட ஆதிக்கத்தின் உச்சத்தில் இருப்பது தொலைகாட்சியே.

 

இதழ்களும், இணையமும்  படித்தவர்களை மட்டும்  சென்று சேர்கின்றன. வானொலி கேட்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்நிலையில் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஊடகமான  திரை இன்று கொட்டகையைவிட்டு  தொலைக்காட்சிப்பெட்டிக்குள் தஞ்சமடைந்து விட்டது என்றே சொல்லலாம்.  படித்தவர்களும், பாமரர்களும் வீட்டுக்குள்  இருந்தபடி 24 மணிநேரமும் கண்டும், கேட்டும் வரும் ஆற்றல்மிகு ஊடகமாக தொலைக்காட்சி விளங்குகிறது. எல்லா வயதினரையும், எல்லா தரப்பினரையும் கட்டிப்போட்டு தவிர்க்கமுடியாச் சக்தியாக இந்த ஊடகம் ஆட்சிசெலுத்திவருகிறது.

 

தொலைக்காட்சியின் ஆற்றலை உணர்ந்தே கட்சி தலைவர்கள், மிகப்பெரும் தனியார் ஊடக நிறுவனங்கள் அதனைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். மக்களிடம் தம் கருத்துகளைத் திணித்து மூளைச்சலவை செய்வதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒரு பத்திரிகையோடு, ஓர் அலைவரிசையையும் சொந்தமாக வைத்துள்ளன. வணிக மயமாகிவிட்ட ஊடகங்களின் ஒரே நோக்கம், எண்ணிக்கையில் மிகுதியான வாசகர்களையும், கேட்பாளர்களையும், பார்வையாளர்களையும் எப்படித் தம் பக்கம் ஈர்ப்பது என்பதுதான். மனித மதிப்பைவிட, பணமதிப்புதான் பல ஊடகங்களின் அறிவிக்கப்படாத கொள்கையாகிவிட்டது.

 

தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மட்டுமன்றி விளம்பரங்கள் கூட நல்ல மதிப்பீடுகளைத் தகர்த்தெறிகின்றன. மிபீமீணீறீ விஷீதீவீறீமீ விளம்பரம்  ஷ்ணீறீளீ ணீஸீபீ tணீறீளீ என்கிறது. திணீவீக்ஷீ ணீஸீபீ லிஷீஸ்மீறீஹ் விளம்ரத்தில் ஒரு வசனம்: ' பொண்ணு கறுப்ப இருக்காளே, கல்யாணம் ஆகுமா ? வேலைகிடைக்குமா ?' என்று கறுப்பு நிறம் உடையோரின் தாழ்வுமனநிலையை காசக்குகிறது.

ஹமாம் சோப்பு விளம்பரத்தில் தாய் கூறுவாள்; வேற சோப்பு போட்டா என் பொண்ணுக்கு தன்னம்பிக்கை குறைஞ்சிடும்- இப்படி மக்களிடம் தவறான கண்ணோட்டங்களை இவை வளர்க்கின்றன. 

 

தமிழருவி மணியன் அவர்கள் ஒரு வார இதழில் பதிவு செய்த கருத்துகள் நம் தலைப்போடு நெருக்கமாகவும் ஆணி அடித்தாற்போல்  அழுத்தமாகவும் உள்ளன. அதன் ஒரு பகுதி வருமாறு:

 

எந்த நாட்டிலும் நம் நாட்டைப்போல தொலைக்காட்சி மூலமாக கலாச்சாரச்சீரழிவு வேகம் பெற்றதில்லை. உணவு, உடை, பழக்கவழக்கம், உறவுமுறை என்று நம் வாழ்வின் சகல நுனிகளிலும் அமெரிக்கத்தன்மை படிந்துவிட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமை தெரியாத ஆடைக்கலாச்சாரத்தில் இருந்து ஓரினச்சேர்க்கை வரை எல்லாவற்றிலும் நம் மண்ணுக்குரிய நிறமும், மணமும் அடியோடு மாறிவிட்டன. நுகர்வெறியின் உந்துதலில் ஒவ்வொருவரும் இதயத்தில் ஈரமற்றுச் சுயநலத்தில் சுருங்கிவிட்டோம். முதியோர் இல்லங்களின் வளர்ச்சி நம் நாகரிக வறட்சியின் வாழ்வுக்காலச் சாட்சியம். மதன காம லேகிய மன்மதத் தீனி தரும் தொலைக்காட்சிகளால் பாதிக்கப்பட்டு இளம் தலைமுறைப் பெண்களில் 20% பேர் ஒரு மாநிலத்தில் கருச்சிதைவில் ஈடுபடுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஊடகங்கள் நம்மை எங்கே கொண்டுபோகின்றன?

 

தனிமனித வளர்ச்சிக்கும்,சிந்தனை வளத்துக்கும், கலை இலக்கிய பண்பாட்டு மலர்ச்சிக்கும் ஒருவன் தன் ஓய்வுப்பொழுதை எப்படிப் பயன்படுத்துகிறான் என்பதுதான் அடித்தளம். இன்று நம்மில் பலருக்குத் தொலைக்காட்சி பார்ப்பதுதான் ஒரே ஓய்வுநேரப் பொழுதுபோக்கு.

 

நம்முடைய தொலைக்காட்சிகளுக்கு ஒரு பொதுவான ஃபார்முலா உண்டு. குடும்ப உறவுகளைக்கொச்சைப்படுத்தும் அபத்தமான மெகா தொடர்கள்,பாரம்பரியக்கலைகளை வளர்க்கும் போர்வையில் அருவருப்பூட்டும் ஆபாசமான அரை நிர்வாணக் குத்தாட்டங்கள், கதாநாயகன் நெஞ்சில் தன் மார்பைமோதவிட்டு ஒரு பெண் விரகதாபத்தை விரசமாக வெளிப்படுத்தும் மோகலாகிரிப் பாடல்கள், அறிவார்ந்த செய்திகளை உள்ளடக்கமாகக்கொண் டிராத சாரமற்ற வெட்டிப்பேச்சு அரட்டைகள், நபும்சகத்தனமான நகைச்சுவைக் கூத்துகள் - இல்லாத சேனல்கள் இங்கு அரிதிலும் அரிது.

 

புகழ்பெற்ற தொலைக்காட்சி சேனலில் ஒரு விவாத அரங்கம் நிகழ்ந்தது. ' உங்கள் கணவர்  யாரைப்போல் அமைய வேண்டும் என்று கனவு கண்டீர்கள்?' என்று ஒரு பெண்ணைக்கேட்டனர். 'கமலஹாசனைப்போல அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எல்லோருக்கும் கமலஹாசன் கணவராக முடியுமா?' என்று ஏக்கப்பெருமூச்சுடன் அந்தப்பெண் பதில் சொன்னார். அவருக்கு எதிரில் அப்பாவிக்கணவர் அசடு வழியச் சிரித்தபடி

அமர்ந்திருந்தார். என்னே தாம்பத்திய பண்பாடு! ' கிடைச்சது பழையது ஆனாலும் நினைப்பு பிரியாணிமேல் இருக்கக்கூடாதா?' என்று 'சினிமாவுக்குப் போன சித்தாளு' வில் ஜெயகாந்தன் எழுதியதை அந்த நிகழ்ச்சி நிஜமாக்கியது.

 

நம் சேனல்கள், சந்தைப்பொருளாதார தேவைக்கு மக்களை ஆட்டு மந்தைகளாக்கி விளம்பரதாரர்களிடம்  விற்றுக் காசைக் குவிப்பதில் குறியாய் உள்ளன, பொதுவாகவே, காசுக்காக ஊடகங்கள் செய்துவரும் சாகசங்களில் நம் கலாசாரம் காற்றில் பறக்கிறது.

 

எந்த நாட்டிலும் புரட்சியும் சமூகமாற்றமும், பணக்காரர்களாலும், ஏழைகளாலும் நடந்தது இல்லை. பணம் படைத்தவர்களுக்கு யார் எப்படிப் போனாலும் கவலை இல்லை. ஏழைக்கோ, வயிற்றுப்பாட்டுக்கு வழி தேடுவதற்கு மேல் நேரம் இல்லை. கல்வியும்,ஓரளவு பொருளாதார வசதியும் கொண்ட நடுத்தர் வர்க்கம்தான் ஓய்வுப் பொழுதில் சமூக அவலங்கள் குறித்துச் சிந்திக்கும்; தீமைக்கும், அடிமைத்தனத்துக்கும் எதிராகப் போராடக் கிளர்ந்து எழும். நடுத்தர வர்க்கத்தின் நடைமுறைகளால்தான் புரட்சி பூக்கும். இன்று, அந்த நடுத்தர வர்க்கம், ஊடகங்களின் போதை மாத்திரைகளில் மயங்கிக் கிடக்கிறது. போதை எப்போது தெளியும் ? (சிந்திக்க வாங்க :10.07.10)