குப்புற வீழ்த்தும் கூட்ட மனப்பான்மை

 குமுறும் நெஞ்சம்:26             

     

‘எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரிச் சிந்திக்கிறார்கள் என்றால் ஒருவரும் சிந்திக்கவில்லை என்றே பொருள்’ என்றார் பெஞ்சமின் பிராங்கிளின்.

அட்சய திருதியைக்கு நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்று கடன்வாங்கியேனும் நகை வாங்குகிற கூட்டம்.

ஆங்கிலத் திரைப்பட நகைச்சுவைக்காட்சியைப் பார்த்து  எதுவும் புரியாவிட்டாலும் பெரிதாகச் சிரிக்கும் கூட்டம்.

கிரிக்கெட் பற்றிப் பேசாவிட்டால் அநாகரிகம் என்று கருதிப்  போவோர் வருவோரிடம் ‘ ஸ்கோர் என்ன? ‘ என்று கேட்கும் கூட்டம்.

தாய்த் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலப்பள்ளிகளில்  தம் மழலையரைச் சேர்க்க முந்திய இரவே கால்கடுக்க வரிசையில் நிற்கும் கூட்டம்

நாகரிகம் எனக் கருதிக் கிழிசலிட்டக் காலாடையைப் பணம் கொடுத்து வாங்கியணியும் கூட்டம்.

இப்படிச் சுயமாகச் சிந்திக்கும் திறனற்ற மந்தை மனப்பான்மை கொண்டவர்களே நம் சமூகத்தில் மிகுதி. இதில் படிக்காதவர்கள் மட்டுமல்ல, படித்தவர்களும் அடக்கம். கூட்ட மனப்பான்மை என்பது பைத்தியக்காரத்தனத்தை நவீனமாக நிலைப்படுத்துவதாகும் என்ற கருத்தை அழகாக விளக்கும் கலீல் கிப்ரானின் கதை ஒன்று உள்ளது.

அந்த ஊரில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்று அரண்மனையில் இருந்தது. அதை அமைச்சரும் அரச குடும்பத்தினரையும் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாது. மற்றொன்று ஊரின் நடுவே இருந்தது. அதை மற்ற அனைவரும் பயன்படுத்தினர்.

ஒருநாள், ஒரு மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து சில
மந்திரங்களைக் கூறிக்கொண்டே ஏதோ ஒன்றை அந்தப் பொதுக் கிணற்றினுள் போட்டான். இந்தக் கிணற்றிலிருந்து
தண்ணீர் குடிப்பவர் யாராயிருந்தாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவர் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டான்.

தண்ணீர் குடிக்க வேறு வழியில்லை,
அரண்மனைக்கும் போக முடியாது. எனவே தாங்கள் பைத்தியமாகி
விடுவோம் எனத் தெரிந்தபோதிலும் மக்கள் வேறு வழியில்லாமல் இந்தத் தண்ணீரையே குடித்தனர். கதிரவன் மறையும்போது அந்தத் தண்ணீரைக் குடித்த  முதியவரிலிருந்து சிறு குழந்தை வரை அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. அரசர், அரசி, இளவரசர், அமைச்சர் ஆகியோரைத் தவிர ஊர் முழுமைக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. எல்லோரும் பைத்தியமாகிவிட்டதால் எடுத்துச் சொல்ல யாருமே அங்கு இல்லை.!

மக்கள் எல்லோரும் இப்படி இருப்பதைப் பார்த்து உண்மையில் நாம்தான் பைத்தியமாகிவிட்டோமோ என்று  அமைச்சரும் அரசக் குடும்பத்தினரும் ஐயுறத்தொடங்கினர்.  

அரசரும், அமைச்சரும் வேறுமாதிரியாக இருப்பதைச் சிலர் உணர்ந்ததால்  அவர்கள் பைத்தியமாகிவிட்டனர் என்ற வதந்தி பரவியது. மக்களெல்லாம் அரண்மனை முன் ஒன்று கூடி அரசன் பைத்தியமாகிவிட்டான் எனக்கூச்சலிடத் தொடங்கினர்.

காவலர்கள், படைவீரர்கள் ஆகியோரும் பைத்தியமாகிவிட்டதால் அங்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. அவர்களும் சேர்ந்து கூடி, கூத்தாடிக் கொண்டு, “மரியாதையாக இயல்பாகி விடு,
இல்லையேல் அரண்மனையை விட்டு வெளியே வா! நாங்கள் எங்களைப் போலவே இருக்கும் ஒருவரைப் புதிய அரசராகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறோம்,” எனக் கூக்குரலிட்டனர்.

அரசர், அமைச்சரிடம், “நமது படைகளுக்கும் கூடப் பைத்தியம்
பிடித்து விட்டதே! என்ன செய்வது? நமக்குப் பாதுகாப்பில்லையே!” என்று புலம்பினார். புத்திசாலியான அமைச்சர், “ஒரே ஒரு வழிதான் உள்ளது! முன்வாசலை அடைத்துவிட்டுப் பின்வாசல் வழியே தப்பிச் சென்று அவர்கள் தண்ணீர் குடித்த அந்தக் கிணற்றிலிருந்தே தண்ணீர் எடுத்துக் குடித்து நாமும் பைத்தியமாகிவிடவேண்டியதுதான். இல்லாவிடில் இந்தப் பைத்தியக்காரக் கும்பல் நம்மைக் கொன்றுவிடும்.” என்றார்.

அரசரும் அமைச்சரும் அரசக் குடும்பத்தினரும் பின்வாசல் வழியே ஓடினர். அந்த மந்திரவாதி வேதியியல் மாற்றம் செய்திருந்த அந்தக் கிணற்றுத் தண்ணீரைக் குடித்தனர். பின் அவர்கள் பின்வாசல் வழியே    திரும்பவில்லை; ஆடிக்கொண்டும், கத்திக்கொண்டும், குதித்துக் கூத்தாடிக்கொண்டும், முன் வாசலை உடைத்து உள்ளே நுழைந்தனர். தங்களின் அரசரும் அமைச்சரும் இயல்பாகி விட்டதைக் கண்ட கூட்டம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. ‘அரசரும் அரசக் குடும்பத்தினரும் அமைச்சரும்  இயல்பு நிலையடைந்து விட்டனர்‘ என்று கூட்டம் மகிழ்ந்து அந்த இரவைக் கூத்தாடிக் கொண்டாடியது.

இந்தக் கதைதான் நாட்டில் பலவிடங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

பொறியில் கல்லூரியில் சேர்ந்தால் எதிர்காலம் ஒளிமயமாகும் என்று எல்லோரும் சொல்கிறார்கள் என்று வீட்டுக்கு வீடு தங்கள் பிள்ளைகளை இலட்சக்கணக்கில் பணம் வட்டிக்கு வாங்கிச் சேர்த்தார்கள். கலைக் கல்லூரிகள் காற்று வாங்கின. ஒருகாலத்தில் சென்னை மாகாணத்திற்கே ஒரே ஒன்றாக இருந்த பொறியில் கல்லூரி இந்தக் கூட்டமனப்பான்மையின் தாக்கத்தால்  தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கணக்கில் காளானானது. பொருளீட்ட நினைத்த அரசியல்  வணிகர்களுக்குப் பொறியியல் கல்லூரிகள் காமதேனு ஆகி பலரைக் கோடீஸ்வரர்களாக்கியது. இன்று பாவம் பொறியல் பட்டதாரிகள்! ‘வாட்ச்மென்’ வேலையும், ‘சுகி டெலிவரிபாய்’ வேலையும் கூடக் கிடைக்காது அலைகிறார்கள். அடுத்துக் கூட்டம் பி.காம் நோக்கி ஓடுகிறது. என்ன ஆகுமோ அதன் கதியும்?

கூட்டத்தில் ஒருவர் கொட்டாவிவிட்டால் பலரும் கொட்டாவி விடுவதுபோல ஒரு பேய்ப் படம் வெற்றிப் பெற்றால் பெருங்கூட்டமாகப் பேய்ப் படம் எடுக்கப் படையெடுக்கிறார்கள். ஒருவர் கவர்ச்சி விளம்பரத்தை நம்பிக் கண்காணா இடத்தில் நிலம் வாங்கினால்  அவரைப் பின்பற்றி ஆயிரக்கணக்கானோர் நிலம் வாங்கிப்போடுகின்றனர். இவை போன்றே தேக்குமரத்தோட்டத்தில், ஈமுகோழி வளர்ப்பில், இறால் பண்ணைகளில் மந்தை மனப்பான்மையுடன் பலரும் பணத்தை முதலீடு செய்தனர். இவர்களில் பலரும் ஒளிமயமான எதிர்காலத்தைக் கனவில் கூடக் காணமுடியவில்லை.

 

நண்பர்கள் குடிக்கிறார்கள், எனவே நானும் குடிக்கிறேன் என்று குடிகாரக்கூட்டம் வளர்கிறது. எல்லோரும் இலஞ்சம் வாங்குகிறார்கள் நானும் வாங்கினால் தவறில்லை என்று ஊழல் கூட்டம் வளர்கிறது.

மந்தை மனப்பான்மை ஏற்படும்போது உள்ளுணர்வு, ஒழுக்கநெறி, படைப்பாற்றல், தன்னம்பிக்கை, சுயமாகச் சிந்திக்கும் தெளிவு முதலியன காணாமல் போகின்றன. கூட்டத்தில் இருக்கும்போது தனிநபர் தயக்கங்களும், மதிப்பீடுகளும் இழந்துபோனதால் நல்ல மனம்படைத்த சாதாரணர்கள்கூட  ஜெர்மெனியில் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதற்குத் துணைபோனார்கள்.

கூட்டமாக இருக்கும்போது விலங்குகள் கொடுமையற்று விளக்குகின்றன. ஆனால் தனியாகப்போகும் யானை முதலியன ஆபத்தானவை. இதற்கு நேர்மாறாகக் கூட்டமாக இருக்கும்போது மனிதன்  கொடியவனாகிறான். பொதுச்சொத்துக்களைச் சூறையாடுவதும், தீயிடுவதும், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதும் கூட்டமாக இருக்கும்போதே நிகழ்கிறது. தனியாக இருக்கும்போது மனிதனிடம் கொடுமைகள் குறைவு. தனியாக இருந்து  சிந்திக்கும்போது நல்ல எண்ணங்கள் வரும் வாய்ப்புகள் மிகுதி. தனித்திரு என்று வள்ளலார் வற்புறுத்தியது இதனால்தான்.

பாதுகாப்பற்றத் தன்னம்பிக்கையற்றச் சமூகமே கூட்ட மனப்பான்மையில் திளைக்கிறது. சாதிகள் வளர்ந்தது கூட்ட மனப்பான்மையினால்தான். சமயங்கள் பெருகியது கூட்ட மனப்பான்மையினால்தான். பகுத்தறிவிற்கு மேல் ‘கீழ்களின் ஆசாரமான’ அச்சம் என்ற பாசிப் படர்ந்ததால் சமூகச் சறுக்கல்கள் தவிர்க்கமுடியாதனவாகின்றன. ஏன்? என்ற மந்திரச்சொல்லை அடிக்கடி பயன்படுத்திச் சிந்திப்பவர்கள் கூட்ட மனப்பான்மையில் அமிழ்ந்து வாழ்வைக் கோட்டைவிட மாட்டார்கள். இலட்சம்  பேர் ஒரே தவறான கருத்தைக் கூறினாலும் சுயமாகச் சிந்திப்பவர்கள் மெய்ப்பொருள் காண்பார்கள்.

உயர்ந்த குறிக்கோளுடன்  செயல்படும் ‘கூட்டு’ மனப்பான்மை, கூட்ட மனப்பான்மையிலிருந்து வேறுபட்டதாகும்.

கூட்டு மனப்பான்மை அர்ப்பணிப்புணர்வுடன் பிறப்பது; தோழமையானது; தியாகத்திற்குத் தயங்காதது; சுயநலமற்றது; மற்றவர்கள் நலனில் அக்கறையுள்ளது; கருத்துச் சுதந்திரம் கொண்டது; மக்கள் நலன் கருதிப் படைப்பாற்றலுடன் இயங்குவது. தீமைகள் பலவற்றைத் தீர்த்த மக்கள் இயக்கங்கள் இதற்குச் சான்று

கூட்ட மனப்பான்மை மனிதனின் அடிப்படை அச்ச உணர்விலிருந்து பிறந்து தம் பாதுகாப்பற்ற நிலைக்குப் பாதுகாப்புத் தேடும் சுயநலமிக்கது; சுயசிந்தனை மறுப்பது; படைப்பாற்றலுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் எதிரானது; கண்மூடித்தனமானது; ஒழுக்கநெறிகளை உதறித்தள்ளத் தயங்காதது. மக்கள் மந்தையாக இயங்கி மூடத்தனத்தில்  தலைகுப்புற வீழ்ந்த பல நிகழ்வுகள் இதற்குச் சான்று.

இந்தக் கூட்டமனப்பான்மையைச் சாதகமாக்கிகொண்டே பல ஊடகங்களும் அரசியலாளரும் பல பொய்களை நம் மேல் மெய்போல நாள்தோறும் வீசித் தம் காரியங்களைச் சாதித்து வருகின்றனர். வணிக நிறுவனங்கள் நம் காதின் வழியும் கண்ணினூடும் புகுந்து ஊடகங்களில் ஏன் அன்றாடம்  விளம்பரங்கள் செய்கிறார்கள்? நம் கூட்ட மனப்பான்மையைக் காசாக்கத்தானே!.

கூட்ட மனப்பான்மைக்குப் பலியாகாமல்  விலகி நின்று நம்மைக் காப்பாற்றிக்கொள்வது கடினம்தான். விலகி நிற்கும்போது கூட்டம் நாம் தனித்தியங்குவதைப் பொறுக்காது. உணர்ச்சிகரமான சாடல்களாலும், கேலிப்பேச்சுகளாலும் நம்மை உள்ளிழுக்க முயலும். என்ன எதிர்ப்பு வந்தாலும் துன்பங்களைத் தாங்கி நாம் சரியென நினைப்பதைச் சாதித்துக்காட்டுவதே நிலைத்த மனநிம்மதி அளிக்கும். அத்தனை புதிய தத்துவங்களும், கண்டுபிடிப்புகளும் கூட்ட மனப்பான்மையிலிருந்து விலகி நின்று சிந்தித்தவர்களால் நிகழ்ந்தவையே.

கதிரவன் உலகைச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று அனைவரும்  நம்பிக்கொண்டிருந்த கூட்ட மனப்பான்மைக்கு எதிராக, பூமி உள்ளிட்ட கோள்கள் கதிரவனைத்தான் சுற்றிவருகின்றன என்ற பேருண்மையைக் கலீலியோ அன்று  மெய்ப்பிக்காமல் இருந்திருந்தால் இன்று செவ்வாய்க் கோளுக்கு விண்கலங்கள் போகுமா? இச்சாதனைக்கு அவருக்குக்கிடைத்த பரிசு சிறைதான்.

‘உலகத்தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள்’ என்று கூறி அவர்களின் விலங்கொடித்து அவர்களுக்கான பொன்னுலகத்தை மீட்டுத்தர மற்றவர்களிடமிருந்து தனித்துச் சிந்தித்தார் காரல் மார்க்ஸ். 1500 நூல்களைப் படித்துத்  தம் 12 ஆண்டுகள் அறிவுழைப்பால் அவர்  ‘மூலதனம்’  எழுதியிராவிட்டால் இன்று உலகெங்கும் நாம் காணும் சமதர்ம சிந்தனைக்கு வழி பிறந்திருக்குமா?. அதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு தம் இறந்த குழந்தைக்குச் சவப்பெட்டிகூட வாங்கமுடியா வறுமைதான்.

மூடத்தனத்தில் மூழ்கியிருக்கும் கூட்டத்திலிருந்து விலகி சொல்லடிகளையும்,  செருப்படிகளையும் தாங்கிப் பெரியார் தனிவழியில் சிந்தித்துச் செயலாற்றியிராவிடின் இன்று   தமிழகம் சமூக நீதி பெற முடிந்திருக்குமா?. கூட்ட மனப்பான்மையிலிருந்து விலகி நி்ன்றவர்களாலேயே என்றும் உலகில் நல்லன நடக்கின்றன.

கூட்ட மனப்பான்மையிலிருந்து நீங்கிய முகநூல் இளைஞர் ஒருவரின் நகைச்சுவை கலந்த இந்தச் சிந்தனைக் கவிதை மந்தை மனப்பான்மையிலிருந்து நம்மை விடுவிக்கட்டும்:

கூட்டத்தோடு கூட்டமாய் வெள்ளைக்கொடி ஏந்தி வெந்துபோகின்ற இட்லி அல்ல நான்! சுட்டுப்போட்டுக் கருக வைத்தாலும் தனியாளாகப் போகின்ற தோசைநான்

                                   தொடர்புக்கு: ejsundar@gmail.com