குமுறும் நெஞ்சம்:20
தமிழ்நாட்டில் தன்மானம் என்ற கோவணம் இழந்து வாழ்வோர் மிகுந்து வருகின்றனர். தனி மனித நிலையிலும் சமூக நிலையிலும் இந்த இழிநிலை பெருகிவருவதை இன்று பெரியார் உயிரோடிருந்து கண்டால் கொதித்தெழுந்து புது இயக்கம் காண்பார் . மானமும் அறிவும் பெற்ற சமூகத்தை உருவாக்க வாழ்நாள் முழுவதும் போராடிய அவர் முயற்சியைப் பயனின்றிப் போகச் செய்யும் பேராபத்து முன்பைவிட இப்போது மிகுதியாகச் சூழ்ந்துள்ளது.
அத்தனை அரசியல் கட்சிகளும் தமிழர்களைக் கூறு போட்டுத் தேர்தல் களத்தில் விற்பனைப்பொருளாக்கி விலை பேசி வருகின்றன. தன்மானமும் சுயமரியாதையும் இழந்து வரும் இன்றைய தமிழர்களில் பலரும் வெட்கமின்றிக் காசுவாங்கி ஓட்டுப்போட்டுத் தங்கள் தலையில் தாங்களே தீவைத்துக்கொள்கின்றனர்.
கட்சித்தொண்டர்கள் தொண்டு நோக்கமின்றிப் பதவிக்காகக் கட்சித்தலைவர்களிடம் கூனிக்குறுகி முதுகெலும்பு முறிந்து கிடக்கிறார்கள். பதவியும் பணமும் இவர்கள் தன்மானத்திற்கு உலைவைத்து மனிதப்பண்புகளை இழக்கச் செய்து வருகின்றன.
திரைப்பட நடிகர்களுக்குப் பல்லாக்குத் தூக்கும் ஊதியமில்லா ஊழியர்கள் ஒருபுறம் தன்மானமிழந்து தங்கள் ஆக்கப்பூர்வமான சக்தியையும் நேரத்தையும் வீணடித்து வருகின்றனர்.
தன்மானத்தைத் அறவே துறந்து, வடமொழியில் பெயர் சூட்டல், ஆங்கில வழிக்கல்விமேல் அளவற்ற மோகம் கொள்ளல், தாழ்வுமனப்பான்மையுடன் தமிழை எல்லா வகையிலும் புறந்தள்ளல் என்ற அருவருப்பான சூழல் மேலும் மோசமாகி வருகிறது.
மதிப்பீடுகளைத் தொலைத்த ஒரு கூட்டத்தினர் வசதியில் இருப்பவர்களை இனம்கண்டு வாலாட்டி நெருக்கமாகித் தம்மை எப்படியேனும் வளர்த்துக்கொள்வதை இலட்சியமாகக் கொண்டுள்ளனர். பொருளீட்ட எவர் காலில் விழவும் விழுந்த காலை வாரவும் தயங்குவதில்லை. இந்தக் கூட்டமே இன்று அரசு நிர்வாகத்திலும் நீதித்துறையிலும், கல்வித்துறையிலும் இன்ன பிற முக்கிய துறைகளிலும் கோலோச்சி வருகிறது.
இதன் விளைவாக இங்கு அரசு நிர்வாகத்தையோ, நீதித்துறையையோ, கல்வித்துறையையோ காசு கொடுத்து, ஆசை காட்டி அல்லது அச்சுறுத்தி வளைக்கமுடியும். தவறு செய்து மேல்நிலையில் இருப்பவர்கள் யாரும் பயமின்றி எளிதில் தப்பமுடியும். உயர் மட்டத்தில் இருக்கும் பெரும்பாலோர் ஊழலில் திளைப்பதால் அரசும் தமக்கு இணங்கா யாரையும் அச்சுறுத்தி பணியவைக்கமுடியும்.
எனவே தன்மானமிழந்து மதிப்பீடுகளை மறந்த தமிழ்ச்சமூகத்தில் எந்த உன்னதங்களையும் உருவாக்குவது அரிதாகிறது. உருவாக்க முயலும் தன்மானமுள்ள மிகச்சிலரின் முயற்சிகளும் தோற்கடிக்கப்படுகின்றன.
தன்மானத்திற்காக உயிரையும் துச்சமாக மதித்த மாமனிதர்கள் வாழ்ந்த மண் இது. கோவலனைத் தவறாக தீர்ப்பிட்டுக் கொன்றதற்காகப் பாண்டிய நெடுஞ்செழியன் ‘யானோ அரசன் யானே கள்வன்’ என்று உயிர்விட்ட இடத்தினருகே தான் கீழடி உள்ளது. கீழடியைத் தோண்டும்போது மட்பாண்டங்களும் அணிகலன்களும் மட்டுமல்ல, ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்’ என்பதும் மீட்டெடுக்கப்பட வேண்டும். தமிழ் மதிப்பீடுகளை விளக்கும் சங்க இலக்கியங்கள் அரங்கேறிய இடமும் கீழடிக்கு அண்மைதானே! சாதிவேறுபாடின்றி, பெரும்பாலானோர் கல்வி கற்று மானத்துடன் அங்கு வாழ்ந்த வரலாறும் நமக்கு வழிகாட்டவேண்டும்..
தமிழக வரலாற்றின் நெடிய பாதையில் நம் தன்மானத்திற்குச் சான்று காட்டி வாழ்ந்த மாமனிதர்கள் நிறைய உள்ளனர். அப்போது மட்டுமன்றி அண்மையிலும் இத்தகையோர் பலரும் தம் வாழ்வால் வழிகாட்டியுள்ளனர். நடிகர் சிவகுமார் இத்தகையோரைப்பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருவது பாரட்டிற்குரியது. அவர் பொழிவிலிருந்து அறிந்த ஒரு நிகழ்வு வருமாறு:
விடுதலை பெற்றவுடன் தமிழகத்தின் முதல் முதலமைச்சராக விளங்கிய ஓமந்தூரார் தம் 12 வயது மகனுடன் கோவையிலிருந்து சென்னைக்குத் தொடர்வண்டியில் பயணிக்கிறார். சேலம் நெருங்கும்போது இரவு 12 மணியாகிறது. மகனுக்கு 12 வயது பூர்த்தியடைந்து அவன் சலுகைக் கட்டணத்தில் பயணிக்கும் நேரம் முடிந்ததை உணர்கிறார். உடனே அங்கிருந்த இரயில்வே ஊழியரை எழுப்பி சேலத்திலிருந்து அவனுக்கு முழு டிக்கெட் வழங்க வலியுறுத்திப் பெறுகிறார். இதே ஓமந்தூரார் தம் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு நலிந்திருந்த நிலையில் அவருக்கு இலவசமாக அரசு மருத்துவ மனையில் சிறப்பான உயர் மருத்துவம் செய்ய அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் முன்வந்தபோது, மக்களின் வரிப்பணத்தில் சல்லிக்காசும் செலவழித்து நான் சிகிச்சை பெற விரும்பவில்லை என்று மறுத்து வீட்டிலேயே இருந்து காலமானார். இதே போலத் தலைவர் ஜீவா ஒரு குடிசையில் வாழ்க்கை நடத்திவந்தபோது முதலமைச்சர் காமராசர் அவர்கள் அவருக்கு அரசு வீட்டை ஒதுக்க முன்வந்தார், ஆனால், ‘இந்த நாட்டில், வீடு இல்லா ஏழைகளுக்கு என்று வீடு கிடைக்கிறதோ அன்று எனக்கு வீடு கொடுங்கள் . இப்போது வேண்டா’ என ஜீவா மறுத்தார். இந்தத் தன்மானமிக்க முதலமைச்சருடனும் , தலைவருடனும் இன்றைய அரசியலாளரை ஒப்பிட்டுப்பார்த்தால் நாம் எவ்வளவு தொலைவு தன்மானத்தில் பின்னடைந்துள்ளோம் என்பது விளங்கும்.
அண்மையில் தமிழக அரசியல் தொடர்பாக இலயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பொன்றில் கிடைத்த முடிவின்படி இன்றுள்ள தலைவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளே; மக்களுக்கான தலைவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை என்ற மக்கள் எண்ணத்தைப் பதிவுசெய்துள்ளனர்.
தன்மானம் மிக்க தமிழகம் மீண்டு வர தமிழ்மக்களிடமிருந்து அடிப்படை நேர்மைக்கான ஆவேசம் சமூக சுனாமியாகப் பொங்கிவரவேண்டும்.