மறைவாக நமக்குள்ளே பழம்பெருமை பேசலாமா?

 குமுறும் நெஞ்சம்:8                   

 

சில காலமாக சமூக வலைத்தளங்களில் உலா வரும் ஒரு செய்தி இது;

அண்டார்டிகாவில் அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் கையில், திருவள்ளுவர் கைப்பட எழுதிப் பனியில் புதைந்திருந்த திருக்குறள் பக்கம் ஒன்று  கிடைத்துள்ளதாம். இதைக் கார்பன் டேட்டிங் செய்து பார்த்தபோது இதன் வயது 3000 முதல் 4000 வரை என்று தெரியவந்துள்ளதால் அவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்,  உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பது நிரூபணமாகிவிடுமென்பதால் இதை நாசா அழித்துவிட  முயற்சி செய்தது. அங்கே பணிபுரியும் தமிழக விஞ்ஞானி ஒருவர் உயிரைப் பயணம் வைத்து அதைப் படமெடுத்து தம் நண்பர் ஒருவருக்கு அனுப்ப அது இங்கே வெளியாகியுள்ளது. நண்பர்களே இந்த அரிய பொக்கிஷத்தை நாசா சர்வரிலிருந்து அழித்துவிடுமென்பதால் இதைக்கண்ட மறுவிநாடி ஷேர் செய்துவிடவும்.

நாசா விஞ்ஞானிகளுக்கு அண்டார்டிகாவில் என்ன வேலை? அறவே ஆதாரமற்ற இதுபோன்ற செய்திகளால் தமிழின் பெயர் கெடுமேயன்றித் தமிழுக்கு எந்தச் சிறப்பும் வந்துவிடாது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று சொல்வது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்! ஆனால் அறிவுலகம் இதனை ஏற்குமா?   நம்மிடம் இருக்கும் பல அரிய செல்வங்களை நாமும் உணராமல், மற்றவர்களுக்கும் உணர்த்திப் பரப்பாமல் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், இல்லாத பெருமைக்காகக் கூத்தாடுவது ஏன்?

சில காலம் முன்பு காந்தி பிறந்த போர்பந்தர் நகரில் உள்ள 'பாரத் மந்திர்' என்ற மாமனிதர்களின் காட்சியகத்திற்குச் சென்றேன். இந்திய மண்ணில் தோன்றி அரும்பணியாற்றியோரின்  சிலைகளும், ஓவியங்களும் நூற்றுக்கணக்கில் அங்கு இடம்பெற்றிருந்தன.  உலகப்பொதுமறை தந்த வான்புகழ் திருவள்ளுவர் உருவத்தைக் கூடமெங்கும் தேடிப்பார்த்தேன். ஏமாற்றமே விஞ்சியது. திருவள்ளுவர் யாரென்று அந்தப் பாரத் மந்திர் அமைத்த மேதைகளுக்குத் தெரியவில்லையா? அல்லது தெரிவிக்கப்படவில்லையா? பார்வையாளர் ஏட்டில் ' தமிழ்நாட்டில் பிறந்து உலகப் பொதுமறை தந்த மாமேதை திருவள்ளுவர் இங்கே புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். பொதுவாகவே தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆழ்ந்த வருத்தத்துடன் இதனைப் பதிவு செய்கிறேன். இனியேனும் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆவன செய்யவேண்டும்' என்று வேதனையுடன் எழுதி வைத்தேன்.

திருக்குறளின் பெருமையை வட இந்தியர்கள் உணரவில்லை என்பது வருந்துதற்குரியது. ஆனால் நாமாவது உணர்த்திருக்கிறோமா? திருக்குறளை  மாணவர்கள் மனப்பாடம் செய்ய வற்புறுத்தி மதிப்பெண் பெறவைப்பதையும், சடங்காகத் திருக்குறளை ஒப்புவித்து பரிசு வழங்குவதையும் தான் பெரும் தமிழ்த்தொண்டாக  நம்மவர்கள் செய்து வருகிறோம். திருக்குறள் நெறியில் இளந்தலைமுறையினரை வாழ வழிகாட்டும்  முறைகளை சொல்லித்தரவில்லையே!

செய்திருந்தால், மதுக்கடைகள் வீதியெங்கும் குடிகாரர்களை வளர்க்குமா?

நாள்தோறும் வழிப்பறியும், கொலையும், கற்பழிப்பும் வகைவகையாய் நிகழுமா?

சாதிவேறுபாடுகளை இன்னும் களையமுடியாமல் சமூகம் தத்தளிக்குமா?

ஊழலும், ஒழுக்கமின்மையும், தரமற்ற கல்வியும், பாலியல் வன்முறையும் இப்படி உச்சத்தில் இருக்குமா?

அண்டை மாநிலமான கேரளத்தில் சிவானந்தன் என்பவர் திருக்குறளால் ஈர்க்கப்பட்டு அதனையே வாழ்வுநெறியாகக் கொள்ளவேண்டுமென முடிவுசெய்து  திருக்குறளையே வேதமாக்கி நூற்றுக்கணக்கான குடும்பங்களை இதில் ஈடுபடுத்தி திருக்குறள் நெறிப்படி வாழவைத்துக்கொண்டிருக்கிறார். இதுபோல திருக்குறளைச் சமயமாகப் போற்றி பரப்பும் முயற்சியைத் தமிழ்நாட்டில் யாரும் செய்யவில்லை.

கோடிக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக பகவத் கீதையை பரப்புகிறார்கள்.  ஆனால் பகவத் கீதையை விடப் பலவகைகளிலும்  மேலான திருக்குறளை இந்திய மக்கள் அறியவில்லையே!. ஏறத்தாழ 32 உலக மொழிகளிலும், 30 க்கும் மேற்பட்ட முறை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை இந்திய மாநிலங்களிலும் உலகத்தின் எத்திசையிலும் உள்ள நாடுகளிலும் பரப்புவதற்கு எல்லா வகையிலும் அரசும் அமைப்புகளும், நல்லோர் அனைவரும் தீவிரமாக முயன்றால் திருக்குறள் நெறி உலகையே மேம்படுத்தும். தமிழுக்கும் தமிழனுக்கும் புகழ் சேர்க்கும்.

இதுவே நம் முதன்மைத்தமிழ்ப்பணி. இலமூரியா கண்டம் என்றும், சிந்துவெளி நாகரிகம் என்றும், தமிழ்ச்சங்கம் என்றும் பேசிவரும் பழம்பெருமைகள் மட்டும் தமிழை வளர்க்காது.,  

தமிழுக்கு உண்மையான புகழ்- எதனையும் விடத் திருக்குறளில்தான் இருக்கிறது

தமிழனுக்கு உண்மையான சிறப்பு திருவள்ளுவர் நெறியில் வாழ்வதில்தான் இருக்கிறது.