தூய்மை எனப்படுவது யாதெனின்....

குமுறும் நெஞ்சம்:5                   

                   

சில ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்றிருந்தேன். பயணத்தில் பழக்கமான ஒரு சீன அன்பரை இந்தியாவுக்கு வாருங்களேன் என்று மரியாதை நிமித்தம் அழைப்பு விடுத்தேன். ஒரு கணம்கூடத் தயங்காமல் ' வந்தால் உயிருடன் பத்திரமாகத் திரும்ப முடியுமா?' என்று அதிர்ச்சி பதில் அளித்தார். காரணம் கேட்டதற்கு, அண்மையில் இந்தியா வந்து சென்ற. அவர் நண்பர்கள் சிலர் இந்தியாவின் தூய்மைக்கேட்டால் தொற்றுநோய்க்கு உள்ளாகி காலமாகிவிட்டதால், நண்பர்கள் வட்டத்தில் இந்தியா என்றாலே  அசுத்தத்தின் இருப்பிடமெனவும் உள்ளே வந்தால் மீள்வது கடினம் எனவும் அஞ்சுவதாகக் குறிப்பிட்டார்.

அவர் கூற்று நெஞ்சில் ஈட்டியெனப் பாய்ந்தாலும், நாட்டில் நாள்தோறும் காணும் உண்மை நிலையை எப்படி மறுப்பது?

கடற்கரை ஓரங்களும், ஆற்றோரங்களும், ரயில் தண்டவாளங்களும், கழிப்பறையாகியிருப்பதை எந்த நாட்டில் காணமுடியும்,? மின்சாரப் பெட்டிகளிலும், பள்ளி, ஆலயச் சுவர்களிலும்,  சிறுநீர் கழிப்பதை எந்த நாட்டினர் பொறுப்பார்கள்?  பேருந்தில் போகும்போது சாலையில் செல்வோரைப்பற்றிக் கவலைப்படாமல் காரி உமிழும் கலாச்சாரம் வேறு எந்த நாட்டில் உள்ளது?

இங்கு எவ்வளவு பெரிய பணக்காரனும் தெருவிற்கு வந்தால் ஏழைதான்!

வீடு சுத்தமாக இருக்கக் குப்பையைத் தெருவில் கொட்டும் மன அழுக்கு நமக்கு எங்கிருந்து வந்தது? யார் எக்கேடு கெட்டால் என்ன, என் வேலை முடிந்தால் சரி என்ற சுயநல எண்ணமே தூய்மைக்கேட்டின் ஆணிவேர்.  எம்மதத்தினராயினும் அனைவருக்கும் இங்கு பொது மதம் சுயநலமே.

மற்றவர்களுக்குச் சிறிதும் நம்மால் துன்பம் நேரக்கூடாதென்று எண்ணும்  சமூகமே தூய்மையாக இருக்கும். அவசரமாக எச்சில் துப்ப நேர்ந்தால்கூட, தம் கைக்குட்டையில் துப்புவதும், தம் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச்செல்கையில் அது மலம் கழித்தால் கையோடு கொண்டு வந்த பிளாஸ்டிக் பையிலிட்டு  நீக்குவதும் மேல்நாடுகளில் அன்றாடம் காணும் நாகரிக நிகழ்வுகள். மற்றவர்களுக்குத் தீமை இலாத செயலே தூய்மை என்பதை உணர்ந்தவர்களின் நாடு தூய்மையாக உள்ளது..

பொதுமக்களும் அரசும் தூய்மைக்கேட்டிற்குப் பொது பங்குதாரர்களாக விளங்கி, இத்தனை ஆண்டுகள் இந்தியாவைக் குப்பைக்காடாக்கிவிட்டனர்.  

உலகிலேயே தூய்மையற்ற நகரங்களைக்கொண்ட இந்தியாவில் தூய்மைக்கேட்டிற்கு நோபல் பரிசு கொடுத்தால் அதை நிச்சயம் இந்தியா பெற்றுவிடுமென்று கூறினார் முன்னாள் நடுவண அமைச்சர் ஒருவர்.  அவரேதான் இங்கு ஆலயங்களைவிட கழிப்பறைகளுக்கான தேவை மிகுதியாக உள்ளது என்றும் கூறினார். இந்த உண்மைக்கூறியதால் பலர் அவர் மேல் பாய்ந்தார்கள்.   

42% மக்களைக்கொண்ட  53 இந்திய நகரங்கள் நாளொன்றுக்கு ஓர் இலட்சம் டன் குப்பையை உருவாக்குகின்றன. அரசு ஒரு டன்னுக்கு ரூ 500 முதல் ரூ1500 வரை செலவிடுகிறது. இதில் சேகரிப்பு செலவு 65%; போக்குவரத்து 30%; முறுசுழற்சிக்கு செலவிடுவது வெறும் 5%தான். குப்பையை எரிப்பதும், புதைப்பதும் தீர்வல்ல. குப்பை வராமல் தடுப்பதும், மறுசுழற்சி செய்வதுமே தீர்வு.

தூய்மை கேட்டினை நீக்க எத்தனை கவர்ச்சித்திட்டங்கள் போட்டு, கோடிகளைக் கொட்டினாலும் தூய்மையின்மை என்ற நோயின் மூலத்தை நீக்காவிடின் என்றும் இந்தியா அசுத்த அரக்கனாவே கோலோச்சும்.

நம் மக்களின் மனதில் ஏற்படும் மனமாற்றத்திற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் அரசியல்வாதிகளும், நடிகர்களும் துடைப்பத்தை எடுத்து ஒரு நிமிடம் தரையைத் தடவுவதும், கடற்கரையில் ஒரு நாளைக்கு மாணவர்களைக் கொண்டு  காகிதங்களைப் பொறுக்கவைப்பதும், கிழிஞ்சல்களைக்கொண்டு கடல்நீரைத் தூர்க்கும்  முயற்சியாகும்.

பள்ளிப்படத்தில் தூய்மை முதலியவற்றைப் புகட்டும் குடிமைப்பயிற்சிக்குப் பிற பாடங்களைவிட முக்கியத்துவம் தரவேண்டும். அதில் செயல்முறையும் கட்டாயம் இடம்பெறுவதோடு,. அடுத்த வகுப்பிறகு முன்னேற இப்பாடத்தில் தேறுவதை உறுதிசெய்யவேண்டும். புதிய தலைமுறையேனும் பழைய தலைமுறையின் கெடுகெட்டப் பழக்கவழக்கங்களிலிருந்து அறவே விடுதலை பெறவேண்டும்.  

பொதுத்தூய்மைக் கேட்டிற்குப் பாதகம் விளைவிக்கும் யாராயினும் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதைத் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பில் விடவேண்டும். தண்டனை என்பது சில நாள்கள் சிறையில் அடைத்து குடிமைப்பயிற்சி தருவதாக அமையவேண்டும்.

இந்நிலை மாறாதவரை இந்தியா என்ன சாதனை செய்தாலும் அது நரகலின் நடுவில் வைக்கபட்ட ரோஜாதான்.  .

.