மெய்ப்பொருள் காண்க:4
.இரவு நேர வானத்தை அண்ணாந்து பார்க்கையில் தெரியும் காட்சிகள் நம் கண்ணுக்கு மட்டுமன்றிச் சிந்தைக்கும் விருந்தளிக்கின்றன. ஆனால் வானக்கடலில் விண்மீன்களும் கோள்களும் நீந்திவரும் விந்தையைப்பற்றி அறிய அறிய அறியாமையே புலப்படுகிறது.
சட்டென இனங்காணக்கூடிய பால்வெளி வீதியே நம் பூமியும் கதிரவன் குடும்பமும் குடியிருக்கும் விண்மீன் திரளாகும்(Galaxy).இந்த விண்மீன் திரளில் நம் கதிரவனைப் போல கோடிக்கணக்கான விண்மீன்கள் சிதறிக்கிடக்கின்றன,. விண்ணோக்கியில் பார்க்கையில் இத்தனை விண்மீன்களையும் தவிர 90% பகுதி இந்த விண்மீன் திரளில் பார்க்கமுடியாக் கருப்புப் பேரிடமாகவே உள்ளது. இந்தப் பால்வெளி வீதி தம் அனைத்து மண்டல உறுப்பினர்களுடன் தம் மையத்தை நோக்கி ஒரு விநாடிக்கு 600 மைல் திசை வேகத்தில்(velocity)விண்ணில் சுழன்றுகொண்டிருக்கிறது. பால்வெளி வீதி மையத்தை விநாடிக்கு 135 மைல் வேகத்தில் நம் கதிரவன் ஒருமுறை சுற்றி வர 22.60 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சென்ற சுழற்சி தொடங்கியபோது பூமியில் டினோசர்கள் உலவி வந்தன. இப்போது சுழற்சி முடிகையில் பழைய உயிர்களில் 99.9% இல்லை. அடுத்த சுழற்சியில் என்னாகுமோ?
நாம் போற்றிக்கொண்டாடும் நம் கதிரவன் பால்வெளி வீதியின் சிறப்பில்லா ஒரு கிளைப்பகுதியில் இடம் பெற்றிருக்கும் சிறு வெளிச்சப்புள்ளியே. நம் கதிரவனைவிடப் பெரிய விண்மீன்கள் கோடிக்கணக்கில் உள்ளன. ஐ.ஆர்.எஸ்-5 என்ற விண்மீன் கதிரவனைவிட 10,000 மடங்கு பெரியது. தென்னை மரம் அருகே ஊரும் சிற்றெறும்பு நம் கதிரவன்.
பால்வெளி வீதி போல நம் பேரண்டத்தில்(Universe) 20,000 கோடி விண்மீன் திரள்கள் உள்ளன. IC 1101 என்ற விண்மீன் திரள் பால்வீதியை விட 50 மடங்கு பெரியது. மொத்த விண்மீன்களைக் கணக்கிட்டால்(2x1023) உலகில் உள்ள ஒவ்வொரு மணல் துளிக்கும் ஈடாக ஒரு விண்மீனை வைத்தாலும் மணல் துளி போதாது. இதுவரை பிறந்து இறந்த மனித உயிர்களின் எண்ணிக்கை இதைவிட மிகவும் குறைவு. இத்தனையையும் உள்ளடக்கிய நம் பேரண்டம் ஏறத்தாழ 150 பில்லியன் டரில்லியன்(150x1021) மைல்கள் நீளத்தில் தட்டையான வடிவத்தில் இருப்பதாக அண்மை கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.
1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருவெடிப்பில் தோன்றியது நம் பேரண்டம். இதன்பின் நீண்ட நாள் கழிந்து 454 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான் நம் உலகம் பிறந்தது. 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தான் உயிர்கள் தோன்றின. ஆனால் மனித இனம் தோன்றி 30 இலட்சம் ஆண்டுகளே ஆகின்றன .அதாவது உலகம் தோன்றி ஒரு நாள் ஆகிறதென்றால் உயிரினங்கள் அதில் உருவாகி ஒரு மணி நேரமே கழிந்துள்ளது. மனிதன் பரிணமித்து ஒரே ஒரு நிமிடமே ஆகியுள்ளது.
நம் உலகின் கோடிக்கணக்கான ஆண்டு பரிணாம வரலாறு பேரண்டத்தின் வரலாற்றில் ஒரு நிகழ்வே இல்லை. பூமியின் நாயகனான கதிரவனின் தோற்றமும் மறைவும் பற்றிய வரலாறு கூடப் பேரண்ட நாட்குறிப்பில் ஒருவரி கூட எழுதப்படுவதற்கில்லை.
இந்தப் பிரபஞ்சம் பெருவெடிப்பிலிருந்து தோன்றியதென்றால் அதற்கு முன் இருந்த நிலை என்ன என்று அறிவியலாளர்களிடேயே பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கனடா நாட்டு அறிவியலாளர்கள் மூவர் பேரண்டத்தில் காணப்படும் ஆற்றல்மிகு கரும் பகுதியை ஆய முற்படும்போது பெருவெடிப்பிற்கு முன் எதிர் பேரண்டம் என்ற அமைப்பு இருந்ததாகவும், காலம் பின்னோக்கிச் சென்றதாகவும் இப்போது காணும் பேரண்டத்தின் கண்ணாடி பிம்பமாக அது விளங்கியதென்றும் பொருளுக்குப் பதில் எதிர்ப்பொருள் இருந்ததாகவும் கூறுகின்றனர்.
பல அறிவியாளர்கள் நம் பேரண்டத்தைப் போல மேலும் பல பேரண்டங்கள் இருப்பதாகக் கருதுகின்றனர். சிலர் சவ்வியல் குமிழிகளாக( Membranious bubbles) 11 பேரண்டங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். அவை கொந்தளித்தபோது அலைகள் எழுந்துள்ளன; இதன் விளைவாகக் குமிழிப் பிரபஞ்சங்கள் ஒரு யுகத்தில் ஒன்றையொன்று தொட்டபோது மிகப்பெரும் வெடிப்பு நேர்ந்து நம் பேரண்டம் தோன்றியது என்கின்றனர்.
நவீன வானவியலின் வேத நூலான குவாண்டம் இயற்பியல் வழி செய்யும் கணக்கீடுகளும் ஆற்றல்மிகு ஹப்பிள் விண்ணோக்கி தரும் காட்சிகளும் மேற்கண்ட உண்மைகளைக் கண்டறியத் துணைபுரிகின்றன. அனைத்துச் சோதனைகளிலும் வென்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கொள்கையே அண்டத்தின் கடந்த கால மற்றும் எதிர்காலத் துல்லியக் கணிப்புக்கு வழிகாட்டுகிறது. அண்டத்தின் செயல்பாடு முழுவதும் இயற்பியல் விதிகளாலும் மாறிலிகளாலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை . பிரபஞ்சம் விரிந்துகொண்டே செல்கிறதென்றும் அது தட்டையாக இருக்கிறதென்றும், 96% பிரபஞ்ச வெளி கருப்பாற்றலால் நிறைந்திருக்க வெறும் 4% மட்டுமே பார்க்கவியலும் நிலையில் உள்ளதென்றும் இந்தக் கணக்கீடுகள் வழி அறிந்து கூறுகின்றனர்.
தோற்றம் எப்படியாயினும் படைப்புகள் அனைத்தும் அழிவது உறுதி என்பதில் அறிவியலாளர்களிடம் பெரும்பாலும் கருத்துவேறுபாடில்லை. நம் கதிரவனை எடுத்துக்கொண்டால் இன்னும் 500 கோடி ஆண்டுகளில் இதன் ஹைட்ரஜன் முழுவதும் தீர்ந்துபோய் அதன் பருமன் 100 மடங்குப் பெரிதாகி அதன் ஒளி 1000 மடங்கு மிகுந்து பூமி உட்பட அனைத்துக்கோள்களும் எரிந்து மாயும்.
பேரண்டம் என்னவாகும்? பேரண்டம் விரிந்துகொண்டே செல்வதன் விளைவாக பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி அழிவைச் சந்திக்கும். இன்னும் 280 கோடி ஆண்டுகள் முதல் 2200 கோடி ஆண்டுகளுக்குள் இது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இதன் தொடக்கம் தொடங்கிவிட்டது. பேரண்டத்தின் கடைசி காலங்கள் பற்றிப் ‘பேரண்டத்தின் விந்தைகள்’(Wonders of the universe) என்ற நூலில் பிரையன் காக்ஸ்( Brion Cox) இப்படி எழுதுகிறார்: ‘’ எஞ்சியுள்ள பொருள்கள் கறுப்புக் குள்ளனுக்குள் வீடுபேறு அடையும். ஓர் அணுவும் மிஞ்சாது. எஞ்சியிருப்பவை ஒளித்துகள்களும், கருந்துளைகளும் மட்டுமே. கற்பனைக்கு எட்டாக் காலத்திற்குப்பின் இந்தக் கருந்துளைகளும் ஆவியாகும். பேரண்டத்தின் கதை முடியும். முதல் முறையாக நிலையாமை மறைந்து நிலைக்கும் நிலை நிகழும். எதுவும் நிகழாமை நிரந்தரமாகும். இறந்த- நிகழ்- எதிர்காலங்கள் என்ற வேறுபாடுகள் இனி இல்லை. இயற்பியலின் விதிப்படி இந்நிகழ்வு தவிர்க்கமுடியாததாகும்.’’
‘இந்நிகழ்வுகள் நம்மைப் பாதிக்காது. நம் பூமிக்கு இப்போது ஆபத்தில்லை’ என்று நிம்மதி அடையலாமா? மனிதர்களே இப்பூமிக்கு அழிவை 5 வகைகளில் ஏற்படுத்தலாம். 1.காற்று மாசு விளைவிக்கும் பருவநிலை மாற்றம், 2.மரங்கள் அழிப்பு, 3.உயிரினங்கள் நலிந்து பல்லுயிர் பெருக்கமின்மை 4.மண் சாரமிழத்தல் 5.மக்கட் பெருக்கம் முதலிய காரணங்களால் அழிவை நாமே வரவழைக்கலாம். இவற்றைத் தவிர்த்தாலும் உலகிற்கு நேரும் பிற ஆபத்துகளும் உள்ளன. இயற்கைச் சீற்றங்களையும் தொற்று நோய்களையும் தவிர விண்ணிலிருந்தும் சில ஆபத்துகள் நேரலாம். 14.08.2126 அன்று பூமியின் மீது மோத வந்து கொண்டிருக்கும் ஸ்விப்ட் டட்டில் என்ற வால்விண்மீனின் தாக்கம் கடைசியாக உலகைத் தாக்கிய வால்விண்மீனின் தாக்கத்தைவிட 28 மடங்கு மிகுதியாக இருக்கும். காமா கதிர் வெடிப்பு ஏற்பட்டு உலகம் அழியக்கூடும். விண்ணில் உலாவும் விண்மீன்கள், கோள்கள், வான் மிச்சங்கள், கருந்துளைகள் சற்றே திசை மாறி நம் கதிரவன் குடும்பத்தில் நுழைந்தாலும் அதன் ஈர்ப்பு உலகை அழிக்கக்கூடும்.
எண்ணி எண்ணி மாளாத பேரண்டத்தின் பேராற்றலும் நம்மை எந்த நாளும் அழிக்கக்கூடிய பேரண்டத்தின் அழிவாற்றலும் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
இவற்றின் பேருருவமும் காலப்பெருவெளியும் நாம் எவ்வளவு அற்பத்திலும் அற்பமாக வாழ்கிறோம் என்பதை உணர்த்தவில்லையா? சமயத்திற்காகவும், சாதிக்காவும், பணத்திற்காகவும், புகழுக்காகவும், அதிகாரத்திற்காகவும், சிற்றின்பத்திற்காகவும் நம் சிறுதுளி வாழ்வில் போரிட்டுச் சீரழியும் கேடுகெட்ட நிலைமை புரியவில்லையா ?
உலகில் இதுவரை வாழ்ந்த மாமனிதர்களின் இமாலயச் சாதனைகளையும் நாளைய உலகம் மறந்தே தீரும் அல்லது பிரபஞ்சம் துடைத்தெறியும் என்பதே பேருண்மை.. நெருப்பை, உழவை, சக்கரத்தை, இரும்பைக் கண்டறிந்த முதல் அறிவாளிகளை யாருக்காவது தெரியுமா? 10,000 ஆண்டுகளுக்கு முன் இந்த உலகை மாற்றியமைத்த பெரும் சாதனையாளராம் நம் மூதாதையர் ஒருவர் பெயரேனும் தெரிந்தவர் உண்டா?
பேரண்டம் உணர்த்தும் மெய்ப்பொருள் இதுதான்:
வானத்தை அண்ணாந்து பார்த்தால் எந்தத் துன்பமும் தூசியாகும். எனவே வாழும் வரை மகிழ்ச்சியாக வாழுங்கள். அந்த மகிழ்ச்சி மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதில்தான் நிலையாக உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள்.