மெய்ப்பொருள் காண்க:8
அறிவியல் சாதனையின் உச்சமாகப் பேருருவம் எடுத்து நம் வாழ்வைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருப்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பதில் ஐயமில்லை.
இயந்திரங்கள் அல்லது மென்பொருள்களுக்குப் புலனாய்வு அறிவைச் செலுத்துவதே செயற்கை நுண்ணறிவு எனப்படுகிறது; இது மனிதர்களைப்போல அல்லது மனிதர்களைவிட ஆற்றலுடன் செயல்பட வைக்கும் தொழில்நுட்பம்; கொடுக்கப்படும் உள்ளீட்டிற்குத் தகுந்தாற்போல கருவிகளைச் செயல்படவைக்கும் அறிவியல்; கடந்த கால நிகழ்வுகளை வைத்து எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைக் கணிக்கும் கணியன். 1950 களிலேயே இது கணினி வல்லுநர்களால் உருவாகப்பட்டு இதற்குச் செயற்கை நுண்ணறிவு என்ற பெயர் சூட்டப்பட்டது. புதிய மின்சாரம் என்றும் சிறப்பிக்கப்பட்டது.
நாம் நாள்தோறும் பயன்படுத்தும் நவீன சலவை எந்திரம், குளிர்ப்பெட்டி, ஆன்லைன் வணிக சேவைகள், திறன் பேசிச் செயல்பாடுகள், வங்கிச் செயல்பாடுகள், ஊபர், சுகி சேவைகள் போன்றவற்றில் செயற்கை நுண்ணிறிவு புகுந்து செயலாற்றிக்கொண்டிருக்கிறது. இப்போது பயன்பாட்டில் உள்ள இதன் செயல்பாடுகள் செ.நு வின் தொடங்கமே! இனி இதன் வளர்ச்சியில் காணப்போவது கற்பனைக்கெட்டாததாகும் என்று வல்லுநர்கள் கணிக்கிறார்கள்
மனிதர்களைவிட இது எந்தவிதத்தில் சிறப்பாகச் செயல்படும்? மனிதனால் செய்யவியலாக் கடினமான, ஆபத்தான பணிகளை இது சோர்வின்றிச் செய்யும். மின்சக்தி மட்டும் தடையின்றிக் கிடைத்தால் ஓய்வின்றி ஆண்டு முழுவதும் இரவு பகலாக அதே நேர்த்தியுடன் பணியாற்றும்.
வங்கிகளில் ஒரே மாதிரியான சோர்வான பணிகளைக் களைப்பின்றி விரைந்து முடிக்கும்; பிழையின்றிக் கணக்கு வழக்குகளைச் சரிபார்க்கும்; வானிலையை முன்கூட்டிக் கணிக்கும்; இயற்கைப் பேரிடர்கள் வருவதை முன்பே எச்சரிக்கும்; தீ விபத்து நேரும் இடத்திற்கு உடல் கருகாது சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்; சுரங்கங்களிலும், ஆழ்கடலிலும், விண்ணிலும் சென்று மனிதக்கட்டளைகளை நிறைவேற்றும்; மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மறுவாழ்வு தரும்; புது மருந்துகள் தயாரிக்கச் சிறந்த மருத்துவ மூலப்பொருள்களைத் தேர்ந்து வழிகாட்டும;. நுட்பமான அறுவை சிகிச்சையைச் சிரமமின்றிச் செய்து உயிர்காக்கும்; உலக மொழிகளை ஒன்றுடன் ஒன்று மொழிபெயர்க்கும்... இப்படி இந்தப் பட்டியல் நீள்கிறது.
ரோபோ என்ற எந்திரன் செயற்கை நுண்ணறிவை உள்வாங்கி இயங்கும் அற்புத கண்டுபிடிப்பு ஆகும். இது கணினி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் இவற்றின் இணைப்பில் அமைந்த சாதனை. இன்று தொழிற்சாலைகளில், உணவகங்ளில், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் எந்திரன்கள், கார்களை, இரயில்களை, விமானங்களை ஓட்டத்தொடங்கியிருக்கும் எந்திரன்கள் எதிர்காலத்தின் நம் இல்லங்களிலும் இடம்பெறவிருக்கின்றன. நம் வீட்டில் துணி துவைப்பது, வீட்டைப் பெருக்குவது, சமையல் செய்வது, கடைக்குச் செல்வது, குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுப்பது உள்ளிட்ட அன்றாட பணிகளை இவை மனங்கோணாமல் செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இப்போது வீட்டைப் பெருக்கித் துடைக்கும் எந்திரன்கள் நம் நாட்டிலேயே ரூ. 9799 முதல் நடுத்தர மக்களே வாங்கும் விலைக்கு வந்துவிட்டன (காண்க: deebot@amzon.in). 2030 க்குள் 20 மில்லியன் எந்திரன்கள் தயாரிக்கப்பட்டு 30% பணிகள் எந்திரனால் ஆற்றப்படும் என்று கணிக்கிறார்கள்.
புலவர் பாடும் புகழ் பெற்றோர் விமானியின்றிச் செலுத்தப்படும் விமானத்தில் பயணிக்கும் சிறப்புக்குரியவர்கள் என்பதைக் குறிப்பிடும் புறநானுற்றுப் பாடலில் இடம்பெறும் ‘வலவன் ஏவா வான ஊர்தி’ (புறம்;27) என்ற சொற்றொடர் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கவிஞனின் இந்தக் கற்பனை இன்று கற்பனைக்கெட்டா அளவு நனவாகியுள்ளது.
சோபியா என்ற பெண் எந்திரiன் தன்னிடம் பேசுவோரை இனங்கண்டு அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு முகபாவனையுடன் பதிலளிக்கிறது. இதைச் சிறப்பித்து சௌதி அரேபிய அரசு சோபியாவிற்குக் குடியுரிமையே வழங்கியுள்ளது. மும்பை கணினி அறிவியல் ஆசிரியர் தினேஷ் பட்டேல் உருவாக்கியுள்ள பெண் எந்திரன் ஷாலுவுக்கு தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளும், 38 வெளிநாட்டு மொழிகளும் அத்துபடி. மனித உழைப்பை நீக்காமல் மனிதர்களோடு இணைந்து பணியாற்றும் கோபோக்களும் (Cobots) இப்போது உருவாக்கப்பட்டுள்ளன. கூகுளின் செயற்கை நுண்ணறிவு எந்திரம் ஒரு மனிதனை மருத்துவமனையில் சேர்த்த 24 மணி நேரத்தில் அவர் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார், எப்போது இறப்பார் போன்ற தகவல்களை 95 % கணித்துவிடுகிறது.
செயற்கை நுண்ணறிவியலின் அதிஆற்றல்மிக்க வீச்சு எந்த அளவில் போய் முடியும்? இதனால் உலகின் எதிர்காலம் எந்த அளவு பாதிக்கப்படும் ?
நமக்குப் பெரும் வரமாக அமைந்துள்ள இந்தச் செயற்கை நுண்ணறிவு உண்ணமையில் வரம்தானா? அல்லது சாபமா? என்ற ஐயத்தை அறிவியலாளர்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இன்றிருப்பதைவிட மேலான வாழ்வைச் செ.நு வழங்குமா? 2030 அளவில் இதன் பாதிப்பு எப்படி இருக்கும்? 2018இல் உலகப்புகழ்பெற்ற தொழில்நுட்ப முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள், செயல்பாட்டாளர்கள் ஆகிய 979 பேரிடம் இந்த வினாக்கள் கேட்கப்பட்டன. 63% பேர்கள் செ.நுவுக்கு ஆதரவாகவும், 37% பேர்கள் எதிராகவும் கருத்துரைத்தனர்.( காண்க: artificial intelligence and the future of humans | pew research center – www.pewrearch.org)
உலகை விட்டு முழுமையாக வறுமை ஒழியும்; பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படும்; பூமியெங்கும் அனைவருக்கும் கல்வியைச் சாத்தியமாக்க முடியும்; இவை போன்ற, நூற்றாண்டுகளாகச் சாதிக்கமுடியா அடிப்படை பிரச்சினைகளைச் செ.நு சாதிப்பதால் இதன் பலன்கள் எதிர்காலத்தில் வரவேற்கக்கூடியதே என்ற கருத்தைப் பலரும் முன்வைத்தனர்.
ஆனால் எதிர்மறையான கருத்துகளைக் கூறியோரில் சிலர் புகழ்பெற்றவர்கள் ஆவர். அவர்கள் குறிப்பிடும் சில கருத்துகள் வருமாறு;
· செ.நு வை கட்டுப்படுத்துகிறவர்கள் இலாப நோக்குடைய கார்ப்ரேட் நிறுவனங்களும், அதிகார வேட்கை கொண்ட அரசியலாளரும் என்பதால் மதிப்பீடுகளும், ஒழக்கங்களும் நிராகரிக்கப்படும் ஆபத்து உள்ளது. அதிகாரமும், பண பலமும் உள்ள அமெரிக்க, சீன பெரும்புள்ளிகளின் கட்டுப்பாட்டில் உலகம் சீரழியும்
· இராணுவ ரீதியான இதன் வளர்ச்சி உலகுக்கு அச்சுறுத்தலானதாகும். பொய்ச்செய்திகளைப் பரப்புவதும், சைபர் குற்றவாளிகள் பொருளாதார கட்டமைப்புக்குள் நுழைவதும் எளிதாகும்.
· சங்கேத மொழியில் அமைந்த இந்த நுண்ணறிவு சாதனங்களின் இயக்கம், இதன் குழப்பமான உள்கட்டமைப்பு முதலியன சாதாரண மக்களுக்குப் புரிவதில்லை. எனவே தனிமனித சுதந்திரம், தனிமை முதலியவற்றை இதற்குப் பலிகொடுக்க நேரிடும். மேலும் இது சுய சிந்தனையைப் பலவீனமாக்கும்.
· வேலை வாய்ப்பைப் பெருமளவு பறிக்கும் சாத்தியம் உள்ளது. அனைவரும் சமம் என்பதும் அனைவருக்கும் வாய்ப்பு என்பதும் கேள்விக்குரியதாகும்.
டெஸ்லோ நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் 2015-ல் புகழ்பெற்ற அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உடன் சேர்ந்து கொலைகார எந்திரன்கள் (Killer Robots) உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருந்தார். (காண்க:https://www.nytimes.com/2021/12/17/world/robot-drone-ban.html) “ரோபோக்கள் அனைத்து வேலைகளையும் நம்மைவிடச் சிறந்த முறையில் நிச்சயம் செய்யும். ஆனால் அதன் வளர்ச்சி மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று. அதை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. அரசு இது குறித்த ஆராய்ச்சிகளில் மூக்கை நுழைத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். விதிகளைக் கடுமையாக்க வேண்டும். இதில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஆபத்துதான்! இதன் ஆபத்துகள் மனிதர்களுக்கு விளங்கும்போது, இன்று ரோபோக்களை இரசிக்கும் நாம், அதைப் பார்த்து அஞ்சத் தொடங்கியிருப்போம்” என்று கவலையுடன் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு புகுத்தப்பட்ட கருவிகள் தாமே சிந்தித்து மனிதனை வீழ்த்த முற்படும் சாத்தியம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மனிதனின் கட்டுப்பாடுகளை மீறி இவை தாமாகச் சிந்தித்துச் செயல்படச் சாத்தியமில்லை என்று வல்லுநர்கள் கூறிவரும் நிலையில்-
முகநூல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வக (FAIR) ஆராய்ச்சியாளர்கள், ‘ஸ்கிரிப்ட்டில்’ இருந்து வெளியேறிய ‘சாட்பாக்ஸ்கள்’, எந்த விதமான மனித உள்ளீடும் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு புதிய மொழியில் தொடர்பு கொண்டதைக் கண்டறிந்து அதிர்ந்து போயுள்ளனர். இந்நிறுவனத்தின் செ.நு ஆனது மனிதர்கள் புரிந்துகொள்ளமுடியாத அதன் சொந்த தனித்துவமான மொழியை உருவாக்கியுள்ளது என்பதை உரியவர்கள் கண்டுபிடித்தவுடனே முகநூலின் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மூடப்பட்டுள்ளது. எனவே செயற்கை நுண்ணறிவு தானே சிந்தித்துச் செயல்பட்டு மனிதர்களை வீழ்த்தக்கூடும் என்ற ஐயம் இப்போது எழுந்துள்ளது.
ஸ்டீபன் ஹாக்கிங் 3 செயல்கள் மனித இனத்தை அழிக்கும் வல்லமை படைத்தவை என்று கணிக்கிறார். அதில் அவர் முதலாவதாகக் குறிப்பிடுவது செயற்கை நுண்ணறிவைத்தான்! (2வது மனிதனின் ஆக்ரமிப்பு மனப்பான்மை; 3வது வேற்றுக் கோள்களிலிருந்து வருவோரின் படையெடுப்பு) “மனிதர்களால் உருவாக்கம் பெறும் இயந்திரங்கள் மனிதர்களை விட மிகுந்த அறிவைப் பெறும்போது, மனித இனத்தின் அழிவு சாத்தியமே” என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒருபட்சமான ஆய்வுகளில் மட்டும் ஈடுபடாமல், அதீத செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துக்களைத் தவிர்க்கும்படியான ஆய்வுகளிளும், நுண்ணறிவு அறிவியலாளர்கள் ஈடுபடுவது மிக முக்கியம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துளார். ஸ்டீபன் ஹாக்கிங் மட்டுமின்றி எலான் மஸ்க், பில் கேட்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக் முதலிய ஒளிமயமானவர்களும் கூடச் செயற்கை நுண்ணறிவால் எதிர்பாராத, துன்பகரமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்
மனிதனின் ஆக்கப்பூர்வமாக அனைத்துக் கண்டுபிடிப்புகளும் அழிவுக்கும் வழி வகுத்துள்ளன. ஒளி தரவும், சமைக்கவும், விலங்குகளிலிருந்து தன்னைப் பாதுக்காக்கவும் மனிதன் கண்டுபிடித்த நெருப்பு அவன் சக மனிதர்களை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டது. அவன் கண்டுபிடித்த கற்கருவிகள், சக்கரங்கள், மதம், அணுசக்தி இவை அனைத்தும் ஆக்கத்திற்கு மட்டுமன்றி அழிவுக்கும் பயன்படுத்தப்பட்டன. இதே நிலை செயற்கை நுண்ணறிவுக்கும் நேர்ந்துவிடாமல் அனைத்து முயற்சிகளும் அனைத்து மட்டங்களிலும் செய்தாக வேண்டும்.
பிறக்கும் எந்த மனிதக் குழந்தையையும்போல மேன்மையான மனிதர்கள் உருவாக்கும் படைப்புகளும் சிறந்தவைதான்; ஆனால் அது பின்னால் நன்மை ஆவதும் தீமை ஆவதும் மனிதர் கைகளிலே என்பதே மெய்ப்பொருளாகும்.