சாகாமை சாத்தியமா?

மெய்ப்பொருள் காண்க:2            

 

எல்லாப் பயங்களையும் மிஞ்சுவது மரண பயமே. பேரச்சத்திற்குரிய இந்த இறப்பை இல்லாமல் போக்கடிக்க மனிதன் காலங்காலமாக முயன்றே வந்துள்ளான். இந்த முயற்சியின் வெளிப்பாடாகச் சிரஞ்சீவி மாந்தர்கள்  சிலர் இன்றும் வாழ்வதாகப் புராணங்கள் பேசுகின்றன. அசுவத்தாமன், மகாபலி, வேதவியாசர், அனுமன், வீடணன், கிருபாச்சாரியார், பரசுராமன், மார்க்கண்டேயன் முதலியோர் இத்தகையோர்.

பதினெண் சித்தர்கள் ஒவ்வொருவரும் ஜீவசமாதி அடைந்து சாவை வென்றதாகப் பல கதைகள் உண்டு. 18 சித்தர்களும் சதுரகிரி மலைக்கு அவ்வப்பொழுது வந்து வழிபாடு செலுத்துவதாகக் கூறுவோர் உளர். 5000 ஆண்டுகளாக இமயமலையில் உலவும் மகா அவதார பாபாஜியைக் கண்ணால்  கண்டதை யாரோ சிலர் கூறியதாகப் பலர் கூறுகின்றனர். சுமேரிய அரசன் ஜியாசுத்ரா, பிரஞ்சுநாட்டு நிக்கோலஸ் பிளேமெல், நைஜீரியாவின் ஒலும்பா ஒலும்பா என்று இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் இன்னும் முழுவுடலோடு வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படும் மனிதர்களின் பட்டியல் மிக நீண்டது.

சாகாமைக்குச் சாவு மனித அடித்த இவர்களின் கதையை நம்புவோரும், நம்புவதுபோல நடிப்போரும், நம்ப மறுப்போரும் உளர்,

ஆனால் அண்மையில் வாழ்ந்த வள்ளலாரும், பாரதியாரும் மரணமில்லாப் பெருவாழ்வு பற்றிப் பாடியுள்ளது நம் சிந்தனைக்குரியது. சன்மார்க்கத்தின் முடிவு சாகாமலிருப்பதே என்பதே வள்ளலாரின் பிரகடனம். அவர் சொன்னபடி பருவுடலை நீத்து ஒளியுடலாகி வாழ்வதாக நம்பப்படுகிறது. ‘பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்’ என்று சாகாமை பற்றிப் பாடியும் பேசியும் வந்த பாரதி  39 வயதில் மறைந்து, தம் படைப்புளை மட்டும் சாகாதிருக்கச் செய்தார்.

இதுவரை பருவுடலுடன் ஒரு மனிதனேனும் சாகாமல் வாழ்ந்ததற்கான சான்றை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் யாரும் காட்ட முடியவில்லை. காயகல்பமோ, பாற்கடல் அமுதமோ, கருநெல்லிக்கனியோ சாவை நிறுத்த முடியவில்லை.  எனவே இதுவரை மனிதனின் சாகாமை என்ற விழைவு நிறைவேறவில்லை என்பதே உண்மையிலும் உண்மை.

அதே சமயம் ஓர் உண்மை என்னவெனில் சாகாமல் இருக்கவேண்டும் என்று சாதாரணர்களைவிட சான்றோர்களே ஆசைப்பட்டு  முயன்றிருப்பதையே சித்தர்கள், ஞானிகள் போன்றோரின் வாழ்க்கை காட்டுகிறது.

ஆன்மீக வாதிகளும், ஞானிகளும் விட்ட இடத்திலிருந்து  அறிவியலாளர்களை இந்தப் பேராசை இப்போது பற்றியுள்ளது.

எதிர்கால உலகைப்பற்றி அதிர்ச்சியூட்டும் செய்திகளைத் தாங்கிய ஹோமோ தேயூஸ் (Homo  Deus- A brief history of Tomorrow) என்ற நூலின் ஆசிரியர் யூவல் நோவா ஹராரியின் கூற்று பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் கூற்றின் சுருக்கம் இதுதான்: ‘ வாழ்வது என்பது மனிதனின் அடிப்படை உரிமை. இறப்பு அந்த உரிமையைப் பறிக்கிறது. எனவே இறப்பு மனிதத்திற்கு எதிரான குற்றவாளி என்பதால் இறப்பிற்கு எதிரான போரை நாம் நிகழ்த்தியாக வேண்டும். மனிதரிடையே போர் குறைந்துவிட்டது. வறுமை மறைந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலான நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவருகிறது. எனவே மனிதனுக்கு அடுத்த சவால் சாவை வெல்வதுதான். மரணம் என்பது வெறும் தொழில்நுட்ப பிரச்சினைதான். இந்த நூற்றாண்டில் மனிதனின் சராசரி ஆயுள் 150 ஐ எட்டும். 2200 அளவில் சாவை வென்று விடமுடியும்.

கடந்த இரு நூற்றாண்டுகளில் மனித ஆயுளின் சராசரி 40 ஆண்டுகளாக  இருந்தது, இப்போது 72 ஆக உயர்ந்துள்ளதை மனதில் கொண்டால் எதிர்காலத்தில் அவர் சொல்வது சாத்தியமாகலாம். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் இப்போது நாம் அனுபவிக்கும் அறிவியல் முன்னேற்றங்களைப் பற்றி அப்போது யாரேனும் சொல்லியிருந்தால் நம்ப மறுத்திருப்பார்கள். எதிர்காலத்தை பற்றி இப்போது அவர்  சொல்வதும் நம்புவதற்கரிதாயினும் நிகழப்போகும் அறிவியல்  அதிர்ச்சிகள் தவிர்க்கமுடியாதனவாகும்.  

இவர் சொல்வது அதீத எதிர்பார்ப்போ, நடவாத கற்பனையோ அன்று. இன்று பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மரணத்தை வெல்லும் தொழில் நுட்பத்தில் கோடிக்காணக்கான டாலர்களை வாரியிறைத்து வருகின்றன. கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சர்ஜி பிரின், ஆரகிள் நிறுவனத்தின் பங்குதாரரும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான லாரி எல்லீசன், புகழ்பெற்ற அறிவியலாளர் ஆப்ரே டே கிரே ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

சாகாத உயிரினம் ஏதேனும் உண்டா என்ற கேள்விக்கு உண்டு என்ற பதிலளிக்கின்றனர் அறிவியலாளர்கள். டுரிடாப்சிஸ் (Turri Topsis) என்ற ஜெல்லி மீன் பிறந்து வளர்ந்து, முதிர்ந்து இளமையாகி மீண்டும் இந்தச் சுழற்சியைக் கடைப்பிடித்து மரணத்தை நிராகரிப்பதைக் கண்டறிந்துள்ளனர். எனவே இதன் வாழ்வுமுறை மரணத்தை வெல்ல ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியுள்ளது.

அமெரிக்காவின் நார்த்வெஸ்ட் பல்கலைக்கழக அறிஞர்கள் மரபணு செயல்பாட்டு மூலத்தைக் கண்டறிந்து முதுமையை நிறுத்த கற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளனர். புழுக்களிடம் இவர்களின் ஆய்வு வெற்றியடைந்த நிலையில் மனிதர்களிடமும் இதனை நிகழ்த்த முயன்று வருகின்றனர். முதுமையடைந்த எலிக்கு இளம் எலியின் குருதியைப் பாய்ச்சி இளமையாக்கிய அறிவியலாளர்கள் விரைவில் இதனை மனிதர்களுக்கும் செயல்படுத்தும் ஆய்வில் உள்ளனர்.

 

முதுமை, நோய், விபத்து ஆகியனவே மரணம் நிகழ்வதற்குரிய காரணங்கள் ஆகும். இம்மூன்றையும் நீக்கினால் மரணத்தை வெல்ல முடியுமென்பது ஆய்வாளர்களின் முடிவு. முதலில் முதுமையை ஏற்படுத்தும் காரணிகளான டிஎன்ஏ பழுதைச் சரிசெய்தல், எல்லா நோய்களையும் மரபியல் பொறியியல், ஸ்டெம் செல் ஆகிய வழிமுறைகளை வைத்துச் சரிப்படுத்தல், விபத்துகளால் நேரும் உடல் சேதத்தை நானோ தொழில்நுட்பம் வழி சரிசெய்தல் ஆகிய அடிப்படைகளில் மரணமில்லா வாழ்வு பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன.

இறந்தவர்களையே மீண்டும் உயிரோடு  எழுப்பும் நம்பிக்கையில் கிரயோனிக்ஸ்(Cryonics) என்ற செயல்பாடு   இப்போது பெரும் பேசுபொருளாக உள்ளது. இறந்த உடலை மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அளவில்  பெரிய திரவ நைட்ரஜன் தொட்டிகளில் வைத்து தொடர்ந்து அழியாது பாதுகாக்கின்றனர். சில ஆண்டுகளில்  திசு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையில் இந்த உடல்களுக்கு மீண்டும் உயிரூட்ட முடியும் என்ற நம்பிக்கையின்  அடிப்படையில்  இந்தத் தொழில்நுட்பம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, போர்ச்சுகல், சீனா ஆகிய நாடுகளில் உள்ள  மொத்தம்  6 க்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை ஏறத்தாழ 350 பேர்களின் உடல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டிருக்க ஆயிரக்கணக்கானோர் முன்பதிவும் செய்துள்ளனர். உடலைப் பாதுகாக்க 28,000 டாலரும் மூளையை மட்டும் பாதுகாக்க சற்று குறைவான கட்டணமும் விதிக்கிறார்கள். காப்புறுதி நிறுவனங்கள் வழியாகவும் இச்சேவையைச் சிலர் மலிவாகப் பெறுகின்றனர்.

மிச்சிகனில் உள்ள இந்நிறுவனமொன்றின் அதிபர் டெனிஸ் கவால்ஸ்கி இன்னும் 10 ஆண்டுகளில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சாத்தியமுள்ளதாகக் கூறுகிறார்.

2045 ஆம் ஆண்டுக்குள் மூளையைக் கணினியோடு இணைத்து மனதின் செயல்பாடுகளை இன்னொரு உடலில் உணர்வுடன் ஏற்றும் முயற்சியும் நடைபெற்றுவருகிறது.

ஐந்து வழிகளில் தற்போது இறவாமை ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. 1. சாகாமைக்குக் காரணமான மரபணுவைக் கண்டறிந்து அதனை வளர்த்தல். 2.குளோனிங் முறையில் உடல் பகுதிகள் அல்லது உடல் முழுவதும் மாற்றியமைத்தல் 3. கிரயோனிக்ஸ் முறையில் உடலை உறங்கவைத்து பின்னர் எழுப்புதல் 4. சைபர் மூளை- அதாவது உடல் அழிந்தாலும் மூளையைப் பாதுகாத்து மூப்படையாமல் செய்தல். (ரஷ்யா-2045 என்று அழைக்கப்படும் இத்திட்டம் 17 ஆண்டுகளில் சாத்தியமாகுமாம்). 5. செல்லைப் பழுது பார்த்தல்- அதாவது நானோ ரோபோ வழியாக உடல் பகுதிகளைச் சரிசெய்தல்/ மாற்றல்/ புதுப்பித்தல்.

இறவாமை என்பது மனிதர்களின் அடுத்த இலக்கு என்பதை உணர்ந்து இதை நோக்கமாகக்  கொண்ட அரசியல் கட்சிகளும் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், நெதர்லாந்து முதலிய நாடுகளில் தொடங்கப்பட்டுச் செயல்படுகின்றன. மனித ஆயுளை  நீளச்செய்தல், இறவாமை  ஆய்வுகளுக்கு உதவி விரைவுபடுத்தல் ஆகிய  நோக்கோடு இக்கட்சிகள் செயல்பட்டு மக்கள் ஆதரவைப்பெற முயல்கின்றன. அமெரிக்காவில்   சோல்டன் இஸ்ட்வான் (Zoltan Istvan) தொடங்கிய மனிதம் கடந்த கட்சி (Transhumanist Party) 2029க்குள் முதுமையை வென்றுவிடுவோம் என்று அறைகூவல் விடுத்துள்ளது. 2019 அமெரிக்கத்தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக நிற்க முயன்று தோற்ற இவர் 2024 தேர்தலில் மக்களின் ஆதரவைப்  பெறுவேன் என்ற நம்புகிறார்.

இறவாமை என்பதன் மெய்பொருளைக் காண்பதில் அறிவியல் ஒருநாள் வெற்றிபெறும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.