கெட்டவர்கள், கெட்டவர்களா?

மெய்ப்பொருள் காண்க:3            

 

மனிதர்கள் கெட்டழியாமல் இருக்கவே சமயங்கள் தோன்றின. புலன்களின் பலவீனத்தால் சமூகத்தீமை செய்யும் மனிதர்களை அவை கட்டுப்படுத்த முயல்கின்றன. தனிமனிதன் திருந்தினால் சமூகம் திருந்தும் என்று பலரும் கருதுகின்றனர்.

‘தனிமனிதன் திருந்துவதால் மட்டுமே தீமைகள் ஒழியும் என்பது என்றும் நடைமுறைக்கு வராத பகற்கனவு’ என்று கருதும் சமூக சிந்தனையாளர்களும் உள்ளனர். ‘தீமைகளுக்குச் சமூக அமைப்பே காரணம். முதலாளித்துவ சமூக அமைப்பு முற்றிலுமாக மறைந்து சுரண்டலற்ற பொதுவுடைமைச் சமூகம் மலரும் போதுதான் குற்றங்கள் மிகுதியாகக் குறையும்’ என்கின்றனர் இடது சாரிகள். எனினும் இதுபோன்றதோர் சமூகம் இன்னும் உலகில் தோன்றவில்லை. சிறிய அளவில் இதுபோன்று வாழும் மாதிரிச் சமூகங்களிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

ஒரே வீட்டில் ஒரே சூழ்நிலையில் ஒரே  வளர்க்கப்படும்  ஐந்து குழந்தைகளும் ஐந்து விரல்களைப்போல வெவ்வேறு குணநலன்களுடன் இருப்பது ஏன்? ஒருவன் மிக நல்லவன், ஒருவன் கொடியவன், ஒருவன் அறிவாளி, ஒருவன் மந்தமானவன், ஒருவன் சராசரியானவன் என்று விளங்குவது எப்படிச் சாத்தியமாகிறது?

இந்த விடைதெரியா நிலைபற்றி பலரும் சிந்தித்துவரும் நிலையில் அறிவியல் இதற்குத்தீர்வு காணும் வழிமுறைகளை முன்வைத்துள்ளமை ஆறுதலளிக்கிறது.

மனிதனின் ஆளுமைச் செயல்பாடுகள் அவன் வாழும் சூழ்நிலை, கற்ற கல்வி, கடைப்பிடிக்கும் நம்பிக்கைகள், அவன் சந்திக்கும் பிரச்சினைகள் முதலியவற்றால்  மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. இவற்றிற்கு மேலாக அவன் மரபணுக்களே அவன் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன என்பதே அண்மையில் கண்டறியப்பட்ட அறிவியல் பூர்வமான உண்மையாகும்.

மனித மனம் பற்றிக் கடந்த 100 ஆண்டுகளாகக் கூறப்பட்டுவந்த அடிப்படைகளை இன்றைய ஆராய்ச்சிகள் தலைகீழாகப்புரட்டிப் போட்டுள்ளன. மருத்துவ உளவியல் ஆய்வாளர்களின் இன்றைய கருத்து இதுதான்:

இதயத்தின் வேலை இரத்த ஓட்டம் போல, சிறுநீரகங்களின் வேலை கழிவு நீக்கம் போல, நுரையீரலின் வேலை சுவாசம் போல, குடலின் வேலை செரிமானம் போல, மூளையின் வேலை தான் மனம். மனம் என்பது மூளையின் உயிரியல் இயக்கம். மூளை வன்பொருள் என்றால் மனம் மென்பொருள் ஆகும்.  மூளை நரம்பியல் வல்லுநர்கள் வன்பொருளாளர்கள் என்றால் உளவியல் வல்லுநர்கள் மென்பொருளாளர்கள்  ஆவர்.

எனவே மனம் என்பது மாயை இல்லை. மூளையின் வேலை மனம் என்பதை ஸ்கான் செய்து மெய்ப்பிக்கும் காலம் தொலைவில் இல்லை.

மூளையின் நுண்வேலைப்பாடுகளில் உயிர்வேதி மூலக்கூறுகளின் வேலையில் பிரச்சினை ஏற்படும்போது அது மனிதனின் நடத்தை, எண்ணங்கள், உணர்ச்சிகள் போன்றவற்றில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக மூளையில் செரட்டோனின்(Serotonin) என்ற வேதிப்பொருள் குறைந்தால் மனப்பதற்ற நோய், மனச்சோர்வு, எண்ணச்சுழற்சி முதலியன ஏற்படுகின்றன. நெருங்கிய உறவில் திருமணம் செய்வதாலும் மன, உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கின்றன. உடல் நலக்கோளாறுகளுக்கு மருத்துவர்களை நாடுவதைப்போல மனநலக்கோளாறுகளுக்கும் உளவியல் மருத்துவர்களை(Psychiatrist) நாடுவதற்கு பலரும் அஞ்சுகின்றனர். இந்த அச்சம் தேவையற்றது. அண்மையில் கண்டறியப்பட்ட ஆற்றல்மிக்க  மாத்திரைகளின் மூலம் மேற்கண்ட இந்த நோய்களைச் சிறப்பாகக் குணப்படுத்தமுடியும்.

மனநலப்பிரச்சினைகளுக்கு யோகா செய்வது, கவுன்சிலிங் செய்வது, தியானம் செய்வது, சுயமுன்னேற்றப் பயிற்சிகளில் ஈடுபடுவது என்பன நிரந்தரத் தீர்வாகா என்பதே அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். இவை தற்காலிகப் பலன்தரலாம்; ஆனால் இவற்றால் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்கமுடியா. இதுபோல  300 க்கும் மிகுதியான பிரச்சினைகள் உள்ளன.  இவை சாதி, சமய. பொருளாதார வேறுபாடின்றி யாருக்கும் வரலாம். பெரும்பாலோருக்கு  உடலநலப்பிரச்சினைகள் இருப்பது போல சாரசரியாக உலகில் 30% மக்களுக்கு மனநிலப்பிரச்சினைகளும் இருப்பதாக அறியப்படுகிறது. அதில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ளோர் 80% ஆவர். அதிலும் விளிம்பு நிலை மக்களையே மனநலப் பிரச்சினைகள் மிகுதியாகத் தாக்கிவருகின்றன.

கொலை, கொள்ளை, நூதனத்திருட்டு, பாலியில் வன்முறை போன்ற கொடிய குற்றங்களுக்கு ஆளாகி சமூகத்தாலும், நீதிமன்றத்தாலும் கொடியவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்ட பல கெட்டவர்களை உளவியல் முறையில் ஆய்ந்து பார்த்ததில் பலருக்கு ASPO என்ற  சமூக விரோத ஆளுமைக்கோளாறு (Anitsocial Personality Disorder) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மூளையில் உள்ள உட்சுரப்புக் கோளாறால் விளைந்த நோய் இது. மரபணு விளைவித்த கொடுமை இது. எனவே கெட்டவர்கள் உண்மையில் கெட்டவர்களா ? என்று அனுதாபத்தோடு அவர்களைப் பார்க்கவேண்டியுள்ளது. பலரிடம் உள்ள இந்த நோயை முன்கூட்டி கண்டறிந்து மருத்துவம் செய்திருந்தால் பல சமூக விரோத செயல்களைத் தவிர்த்திருக்கலாம். இவர்களும் நல்லவர்களாக மாறி ஆக்கப்பூர்வமாக வாழ்ந்திருப்பார்கள்.

வெறும் தண்டனைகளால் குற்றங்களைக் குறைக்கமுடியும் என்று சமூகமும், அரசுகளும் நம்பிக்கொண்டிருப்பதால்தான் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் கூடி வருகின்றன. அறிவியல் பூர்வமாகச் சிந்தித்து செயல்படுவதே குற்றங்களைக் குறைக்க நிரந்தர வழியாகும்.

இந்த உண்மையை உணர்ந்தே ஆண்டுதோறும் 10, அக்டோபர்  மனநல நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நலம்(Health) என்ற சொல்லுக்கு உலக சுகாதார நிறுவனம் உடல்நலம், மனநலம், சமூக நலம் என்றே பொருள் கூறுகிறது. இதைக்கருத்தில் கொண்டு தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மனநலத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்ளில் வியாழன்தோறும் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் தலைமை மற்றும் வட்ட அரசு மருத்துவமனைகளில் இப்போது மனநலச் சேவை இலவசமாக்கப்படுள்ளது பாராட்டிற்குரியது. மதுவுக்கு அடிமையாவதும் ஓர் உளநோய் என்பதால் இதற்கும் சிகிச்சை அவசியமாகும். அதே போல அதீத கவலை, தற்கொலை செய்யும் எண்ணம், தேவையற்ற பயம், எந்த வேலையையும் நிலையாக செய்யமுடியாமை, மிகுதியான ஐயம் கொள்ளல், மகிச்சியின் உச்சத்தில் அல்லது சோகத்தின் உச்சத்தில் இருத்தல் போன்ற பலரின் அன்றாட மனநலப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும். இவற்றில் பலவற்றிற்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

2004 ஆம் ஆண்டில் இத்தாலிய நீதி மன்றமொன்றில் ஒரு குற்றவாளி மரபணு கோளாறால்தான் தவறு செய்துள்ளார் என வழக்கறிஞர் மெய்ப்பித்துக்காட்டியதன் விளைவாக அவர் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒரு கொலைக்குற்றவாளியின் தண்டனையும் அண்மையில் குறைக்கப்பட்டுள்ளது. மருந்துகளால் குற்றச்செயல்கள் குறைந்ததை அமெரிக்காவில் பல ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன.

குடும்பநிலை, வளர்ப்பு, சமூப்பாதிப்பு, பொருளாதாரம் முதலிய சூழ்நிலை  காரணங்களால் ஒருவரின் மனோநிலை நிர்ணயிக்கப்படுவது மிகச்சிறிய அளவு மட்டுமே என்பதைப் புகழ்பெற்ற உளவியல் மருத்துவர் டாக்டர்.P. ஆனந்தன் தம் மனதின் புதிர்ப்பாதைகள் என்ற நூலில் ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளார்.

ஒரு துப்பாக்கியை மனிதனாகவும், துப்பாக்கியைச் சுடச்செய்யும் செயலியைச் சூழ்நிலை காரணிகளாகவும், ரவைகளை மரபணுக்களாகவும் ஒப்பிட்டுப்பாருங்கள். அழுத்துவது முக்கியமா? ரவை முக்கியமா? ரவை நிரப்பப்படவில்லையென்றால் ஒருவர் நெற்றியில் ஆயிரம் முறை சுட்டாலும் ஒன்றும் ஆகாது.

எனவே ஒருவரின் மரபணுவே ஆளுமையைத்  தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதே உண்மையிலும் உண்மை. இந்த நிலையில் எழும் ஒரு கேள்வி: இது தலைவிதியை நாம் ஏற்றே ஆகவேண்டும் என்பது போல அல்லவா உள்ளது?  இதற்கு என்னதான் மாற்றுவழி ?

நிச்சயம் மாத்திரைகளால் தலைவிதியை மாற்றமுடியும். மேலும் மரபணு பொறியியல் தொடர்பாக நிகழ்ந்து வரும் ஆய்வுகள் எதிர்காலத்தில் குற்றவாளிகளும், நோயாளிகளும் இல்லாத் தலைமுறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. டார்வின் கண்டறிந்த மரபணுக்களின் இயற்கைத் தேர்வைச் செயற்கைத் தேர்வாக விருப்பப்படி மாற்றியமைக்கும் காலம் நெருங்கி வருகிறது. மரபணுப் பொறியல் தவறான திசைநோக்கிப் போகாமல் தடுக்கப்பட்டால் அறிவார்ந்த, உடல், மன நோயற்ற அடுத்த தலைமுறையை நிச்சயம் உருவாக்கமுடியும். 

எனவே சமயங்களும், சமூகச்சூழல்களும் சாதிக்கமுடியாததை அறிவியல் சாதிக்கும் சாத்தியம் உள்ளது.