தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் - முடிவுகளும், படிப்பினைகளும்

ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலமாய் இரு வேறு திராவிடக்கட்சிகளும் மாறி மாறி,இரு தராசு தட்டுகள் போல் ஆட்சி வகித்து வந்த நிலையே இத்தேர்தலிலும் மாறாமல் தொடர்ந்துள்ளது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று இடைவிடாமல் மக்கள் ஏமாறுவது வாடிக்கையாகிவிட்டது.

 

அரசியல் தலைமைக்கு வருகிறவர்கள் சான்றோர்கள் இல்லை. வல்லமை படைத்த நல்லவர்களும் இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்த 60 ஆண்டுகளில் வறுமை தொலைந்திருக்கும். சாதி,மத வெறி நீங்கியிருக்கும் . அறியாமை அகன்றிருக்கும்.  மின்வெட்டு நிரந்தரமாக தீர்ந்திருக்கும். வேளாண்மை உயர்ந்திருக்கும். சுகாதாரக்கேடுகள் பழங்கதையாயிருக்கும். தண்ணீர் பிரச்சனை தொலைந்திருக்கும். கல்வியும் மருத்துவமும் எல்லாரக்கும் எளிதில் கிடைத்திருக்கும். இலஞ்சப்பேய் இறந்திருக்கும். நிர்வாகச்சீர்கேடுகள் இல்லாதிருக்கும். குற்றங்கள் குறைந்திருக்கும். குடிப்போர் எண்ணிக்கை நலிந்திருக்கும்.  நல்ல மதிப்பீடுகள் செழித்திருக்கும்.

 

இவற்றில் ஒன்று கூட நிறைவேறவில்லை. நிறைவேற்ற விடவில்லை. மாறாக  அவக்கேடுகள் அத்தனையும் வளர்ந்த வண்ணம் உள்ளன. வளர்க்கப்பட்ட வண்ணம் உள்ளன.

 

இங்கு வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும்  எந்தத் தகுதியும் தேவையில்லை. அரசிலில் தலைமையேற்க கல்வியோ, உயர்பண்போ, ஒழுக்கமோ, சமூக அக்கறையோ வேண்டா.  என்ன செய்தால் குறுக்கு வழியில் மக்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருந்தால் போதும். மக்களின் பலவீனங்களைத் தூண்டி அவர்களைப் கவர்ந்திழுக்கக் கற்றிருந்தால் போதும். இதையெல்லாம் செய்து மக்களின் வாக்குகளைக் கவருவதே இன்றைய ஜனநாயகமாக உள்ளது. எனவே இங்கு மக்கள் சக்தி சகதியாகத்தான் மாறியிருக்கிறது. இது எந்தச் சாதனையையும் நாட்டுக்கு இதுவரை உருப்படியாகக் கொண்டு வரவில்லை.

 

வாக்காள மக்கள் தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ள வாய்ப்பற்ற நிலையை உருவாக்கித் தங்களுக்கு வசதியாக  வாக்களர்களை அரசியல்வாதிகள் பாதுகாத்துவருகிறார்கள். வாக்களார்களுக்கு தகுதி அறிவித்தால் என்ன? நாட்டின் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க  தகுதி வயது 18 என்பதைத்தவிர வேறு என்ன இருக்கிறது. பித்தனின் கையில் குழந்தையையும், குழந்தையின் கையில் துப்பாக்கியையும் தருவது ஆபத்தல்லவா? வாக்களர்களுக்குத் தகுதியை ஏற்படுத்தியிருந்தால், தேர்தலில் நிற்போருக்கும் தகுதி உயருமே!.

 

மக்கள் சக்தி இயக்கத்தைத் தோற்றுவித்து அரசியலில் நல்ல மதிப்பீடுகளை வளர்க்க முயன்று தேர்தலில் போட்டியிட்ட அறிஞர் உதயமூர்த்தி ஏன் டெபாசிட் இழந்தார் ? 

அரசியலில் இளைஞர்களை ஈடுபடுத்தி புது நெறிகளைக்கொணரும் வண்ணம் தேர்தலில் நின்ற ஐஐடி மாணவர்கள் ஒருவரும் வெல்லமுடியாமல் போனது ஏன்?

நடமாடும் பல்கலைக்கழகமாகக் கருதப்பட்ட நாவலர் நெடுச்செழியன் சிரிப்பு நடிகரால் தோற்கடிக்கப்பட்டதேன் ? கவர்ச்சி நடிகையும், சான்றோர் ஒருவரும் இன்று தேர்தலில் நின்றால் சான்றோர் வெற்றி பெறவதும் சாத்தியமாகுமா?

 

தற்போதைய தேர்தல் ஜனநாகய அமைப்பு சலவைக்குப்போட்டாலும் வெளுக்காத துணியாகவே உள்ளது. இந்த அழுக்குத்துணியை இனி கட்டக்கூடாது என்ற தெளிவான வெறுப்பு மக்களுக்கு ஏற்பட்டாலோழிய உண்மையான நல்லாட்சி நமக்கு வரப்போவதில்லை.

 

சிந்திக்க வாங்க: 14.05.11