மீண்டும் கிளம்பிவரும் பூதம்

குமுறும் நெஞ்சம்:9                   

 

பகுத்தறிவு சிந்தனைகளுக்கு வித்திட்டு, மூட நம்பிக்கைகளுக்குச் சாவு மணி அடிக்கப் பலரும் முயன்ற மண் தமிழ்மண் என்பதே தமிழருக்குப் பெருமை. .

ஆனால் இச்சிந்தனைகளின் அடித்தளத்தில்   கட்சிகளை உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளோரே பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு எதிராக செயல்படுவதைக் காண்கையில் நெஞ்சம் குமுறுகிறது.

கட்சியை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பில் உள்ளோரே இந்த இழிவுகளைக் கண்டும் காணமல் இருப்பதும் அல்லது தலைமறைவாக ஆதரிப்பதும் பகுத்தறிவுப் பாதையில் இதுவரை முன்னோக்கிப் பயணித்த நம் பயணத்தைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி பாயவைக்கிறது. இத்தகைய ஒரு கட்சியினர் - ஏறத்தாழ 100க்கும் மேற்பட்டோர் தேர்தலில் விருப்ப வேட்பு மனு அளிக்க ராகுகாலம் முடிய காத்திருந்து பின்பே மனு அளித்துள்ளனர். விருப்ப மனு அளிக்க வந்த ஒருவர் கூட இதற்கு விதிவிலக்கில்லை என்பது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும்.. அதிலும் முகூர்த்த நாள், அமாவாசை நாள் பார்த்தே  அதிக எண்ணிக்கையில் விருப்ப மனு அளித்துள்ளனர் இந்தப் பகுத்தறிவு பகலவனின் வழித்தோன்றல்கள்.  

இன்னும் சோதிடத்தையும் ஜாதகத்தையும் மூட நம்பிக்கைகளையும் நம்பிக்கொண்டு இருக்கும் பெரும்பாலான மக்கள் மத்தியில் பெரியார் போட்ட  அறிவுவழிப்பாதை புதுப்பயணத்தை இந்த மண்ணில் தொடங்கிவைத்தது. இலட்சக்கணக்கான இளைஞர்கள் இப்பாதையில் பயணம் தொடங்கியதால், இந்தியாவில் எங்குமில்லாத அளவு இங்கு சமூக நீதியும், பகுத்தறிவுச் சிந்தனையும் செழித்தன. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இப்பெருமையை இன்றுள்ள வழித்தோன்றல்கள் தஞ்சை கோயிலே தலைகுப்புற சாய்ந்தாற்போலச் சரியவைத்திருப்பது தணிப்பறியாத் துயரமாகும்.

யமகண்டத்தில் தான் திருமணம் நடத்துவேன் என்றும் ராகுகாலத்தில் தான் வணிகத்தைத் தொடங்குவேன்   என்றும் சவால் விட்டு மூடநம்பிக்கைகளைத் தூள்தூளாக்கி இந்தக் கண்மூடிப்பழக்கங்களை மண்மூட முயன்றோர் பலர் இருந்தனர். பூனையைக் குறுக்கேவிட்டு விதவைப்பெண்கள் வாழ்த்த  திருமணம் நடத்தி  மணமக்கள்  வாழ்க்கையை வளமாக்கிக் காட்டிய நிகழ்வுகள் நடந்தும் இன்னும் ஏன் இந்த நம்பிக்கைகளைப் பிடித்துகொண்டு மக்கள் தொங்குகின்றனர்?

உலகில் எங்குமில்லாத அளவு இங்குதான் வீடு கட்ட வாஸ்து சாத்திரம் புது மூடநம்பிக்கையாக முளைத்திருக்கிறது. நேரத்தையும், பணத்தையும், இடத்தையும் வீணடிக்கும் இந்த முட்டாள்தனத்தை அங்கீகரிக்கும் அதிமேதாவிகள் பலர் உள்ளனர். 

உலகின் உயரமான துபாயின் புர்ஜ் கலிபாவோ, மலேசியாவின் பெட்ரனாஸ் இரட்டை கோபுரங்களோ வாஸ்து பார்த்துக் கட்டப்படவில்லை.  அறிவியல் நுட்பம் அறிந்து கட்டப்பட்டவை .என்பதால்  உலகின் உயரமான கட்டடங்களாக அவை செம்மாந்து நிற்கின்றன.

எலுமிச்சம்பழம் நசுக்காமல், பூசணிக்காய் உடைக்காமல், நல்ல நாள் பார்க்காமல் கிளம்பிய  அப்பல்லோ-11 முதல் பல விண்வெளிக்கலங்கள் நிலாத்தரையில் மனிதனை இறக்கியும் பிற கோள்களில் கால் பதித்தும் வெற்றிகரமாகத் திரும்பிய நிகழ்வுகளைக் கண்டும் நாம் திருந்தமாட்டோமா?

அறிவியலின் செல்லப்பிள்ளையான கணினியைக்கூட ஜாதகம் பார்க்கவே நம்மவர்கள் பயன்படுத்தி அறிவியலைக்கூடக் கொச்சைப்படுத்திவிட்டனர். நம் நாட்டின் விண்வெளித்துறை உட்பட அறிவில் துறைகள் பலவும்  மூடநம்பிக்கையுள்ளோரின் தலைமையில் இயங்குவது கொடுமையிலும் கொடுமை.

நம் நீதி நூல்கள் எவையும் நாள் கோள் பார்த்துச் செயல்படு என்று அறிவுறுத்தவில்லை. 'ஜோதிடந்தனை இகழ்' என்று புதிய ஆத்திசூடியில் பாரதி முரசறைகிறான். வள்ளலாரும், விவேகானந்தரும், காந்தியடிகளும், அருணகிரிநாதரும், திருஞானசம்பந்தரும் சோதிடத்தைப் புறந்தள்ளியுள்ளனர்.

எல்லா மூடநம்பிக்கைகளும், புராணக்குப்பைகளும் அறிவியல் மாறுவேடம் போட்டுக்கொண்டு நம் மக்களைக் குழப்பிவரும் பேராபத்தும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.. சிறப்பாக மருத்துவத்துறையில், உளுத்துப்போன பொய்களுக்கு முலாம் பூசி உண்மைபோல   மக்களை ஏமாற்றிவரும் போக்கு மிகுந்து வருகிறது.

தொடர்ந்து மூடநம்பிக்கைகளின் மூலத்தை வேரறுக்க அரும்பணியாற்றிய  சான்றோர்கள் வாழ்ந்த மண்ணில்  ஓரளவு இவையெல்லாம் தொலைக்கப்பட்டு வெற்றிபெறுவோம் என்றிருந்த நிலையில் எங்கிருந்தோ பீறிட்டுவரும் சுனாமி போல பழமைவாதமும், மதவெறியும், மூட நம்பிக்கையும், சனாதனமும்  ஒன்றுசேர்ந்து உருவெடுத்த பிற்போக்குப் பெரும்பூதமொன்று நம்மை விழுங்க வந்துகொண்டிருக்கிறது.

இந்தப் பூதத்தை ஏற்கனவே எதிர்கொண்டு தமிழகம் விரட்டியடித்திருக்கிறது. இப்போது மீண்டெழுந்து வந்திருக்கும் இப்பூதத்தைப் புதைத்து மண்ணோடு மண்ணாக்கினாலன்றி நமக்கு விடிவில்லை.