குமுறும் நெஞ்சம்:6
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, நீதி, சோசலிசம், ஜனநாயகம், இறையாண்மை முதலியன இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்மொழிவில் உட்பொதிந்த கருத்துகள்!.
ஆனால் இந்த மதிப்பீடுகள் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டுவரும் பேராபத்தில் நாடு உள்ளது. ஆட்சி, . நிர்வாகம், நீதி, ஊடகம் ஆகிய நான்கும் ஜனநாயத்தைத் தாங்கும் தூண்களா? அல்லது தாக்கும் தடிகளா? என்ற ஐயம் எழுகிறது. இன்று பணக்காரர்களின் பிரதிநிதிகள் நாட்டினை ஆளும் நிலையில் நீதியையும், நிர்வாகத்தையும் அவர்கள் விருப்பப்படி வளைக்கும் நிலை உள்ளது. அப்பாவி மக்களின் ஆறுதலாக இருந்த .ஊடகங்களும் கொழுத்த பணக்காரர்களின் வியாபாரத்தின் ஒரு பகுதியாகிவிட்டன. பணத்தால் விசிறும்போது ஜனநாயகம் பஞ்சாகப் பறக்கிறது.
6.5 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நாட்டில் அமைக்கப்பட்ட 182 மீட்டர் உயர பட்டேல் சிலைக்குச் செலவிடப்பட்ட தொகை ரூ3000 கோடி, பெரும்பாலும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்- 900 கோடி, ஒஎன்ஜிசி-500 கோடி, பாரத் பெட்ரோலியம்- 250 கோடி, காஸ் அதாரிட்டி ஆப் இந்தியா லிட்- 250கோடி, பவர் கிரிட்- 125 கோடி, குஜராத் மினரல்ஸ் டெவலெப்மென்ட் கார்ப்பரேஷன்- 100 கோடி, இன்ஜீனியர்ஸ் இந்தியா- 50 கோடி, பெட்ரோநெட் இந்தியா-50 கோடி, பால்மர் லாரி- 50 கோடி)
அதாவது இவை மக்களின் வரிப்பணம்!.இந்த நன்கொடைகளுக்கும் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கும் தொடர்பு உண்டா? என்ற கேள்வியைத் தவிர்க்கமுடியவில்லை. அம்பானிகளோ, அதானியோ, பாபா ராம்தேவோ இந்த சிலைக்கு நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் இல்லை என்பது நம் சிந்நனைக்குரியது.
அரசின் அவலங்களைச் சுட்டிக்காட்டும் இதழ்களும், தொலைக்காட்சிகளும், திரைப்படங்களும் பயமுறுத்தப்படுவதை நாடறியும் அவற்றின் முதலாளிகள் தம் இலாபத்தை இழக்க விரும்பாமல் அரசோடு சமரசம் செய்துகொள்ளும் அவல நிலையில் நான்காவது தூணும் உலுத்துப்போய்விட்டது.
இதே போல சமூக நீதியும் பல தளங்களில் கேட்பாரற்று உள்ளது. இட ஒதுக்கீட்டிற்காகப் போராடி அதற்கான சட்ட அங்கீகாரம் பெற்றுக் கடைநிலையில் இருப்போரும் உயர் நிலைக்கு வரும் வாய்ப்புகள் செழித்துவரும் நிலையில் மீண்டும் ஒரு சறுக்கல்.
டில்லியைச் சேர்ந்த 'யங் இந்தியா' என்ற அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அண்மையில் பெற்ற புள்ளி விவரம் அதிர்ச்சியூட்டுகிறது. 3% மட்டுமே உள்ள பிராமண சமூகத்தினருக்கு மத்திய அரசின் 18 துறைகளில் உள்ள 7842 உயர் பதவிகளில், 6574 பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது 84% ! வெளிநாட்டின் தூதர் பதவிகள் 140 திலும் பிராமணர்களே !. அதே போல உச்சநீதிமன்றத்தின் 26 நீதிபதிகளில் 23 பேர்கள் பிராமணர்களே!
இன்னும் இது மதசார்பற்ற நாடா? என்று ஐயுறும் வண்ணம் அரசு அலுவலகங்கள், வங்கிகள், விற்பனையகங்கள் இவற்றின் நுழைவாயிலில் பிள்ளையார் கோயில்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. 'அணைக்கட்டுகளும், தொழிற்சாலைகளும்தாம் மக்களுக்கான கோயில்கள்' என்றார் நேரு. ஆனால் இந்தியாவில் 15 இலட்சம் பள்ளிகளும், 75,000 மருத்துவமனைகளும், மட்டுமே உள்ள நிலையில் 25 இலட்சம் கோயில்கள் உள்ளன.
நேரு பிறந்த நாளுக்குப் பதில் கிருஷ்ணன் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக்கப்படுகிறது. டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர்-5 க்குப் பதில் வேதவியாசர் பிறந்த ஜீலை-25 ஆசிரியர் தினமாக மாற்றப்படுகிறது.. மே தினத்திற்குப் பதில் விஸ்வகர்ம ஜெயந்தியைத் தொழிலாளர் தினமாகத் திணிக்கும் முயற்சி நடைபெறுகிறது. அரியானா அரசு காயத்திரி மந்திரத்தைப் பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆசிரியர்களுக்கான வரலாற்றுப் பயிற்சிப் பாசறையில் இதிகாசச் சங்காலன் சமிதி என்ற அமைப்பு பாரத, இராமாயண வகுப்பு நடத்துகிறது.
பல சமயத்தினரும் வாங்கும் புகழ்பெற்ற வார இதழ்களில் ஆன்மீக மலர்கள் இணைக்கப்பட்டு அத்தோடு குங்குமம், ஓம்தகடு முதலியன வழங்கப்படுகின்றன. அறவுணர்வே இல்லாதவர்களும் மதச்சின்னங்கள் அணிவது நாகரிகமாகி வருகிறது.
பெயர்களுக்குப் பின்னால் சாதியைப் போடும் பழக்கத்தைத் தமிழ்நாடு ஒழித்துவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில இப்போது திருமண அழைப்பிதழ்களில் சாதியைப் போட்டுத் தம்மைப் பெருமைப்படுத்திக்கொள்ளும் அசிங்கம் முளைத்திருக்கிறது.
நாட்டின் வளர்ச்சியில் அக்கறையுள்ள பகுத்தறிவாளர்கள் ஒன்றுசேர்ந்து இவற்றுக்கெல்லாம் சாவுமணியடிக்கத் தீவிர முயற்சி எடுக்காவிடின் இந்த நாடு சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பாய்வதை யாராலும் தடுக்க முடியாது.
.
.