குமறும் நெஞ்சம்:4
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குமரன், பட்டம் முடித்து, பலவிடங்களில் விண்ணப்பித்தும் சரியான வேலை கிடைக்காமல் நொந்துபோனான். பெற்றோரை இழந்த அவனுக்கு வழிகாட்டவும் உதவவும் ஆதரவு காட்டவும் யாருமில்லை. எனினும் மனத்துணிவை இழக்காமல் சொந்தத் தொழில் தொடங்க முடிவு செய்தான். அரசுடையாக்கப்பட்ட வங்கிகளில் கடனுக்காக அல்லாடித் தோற்றான். அரசு தரும் உதவிகளுக்கு மாமூல் வழங்க அவனிடம் காசு இல்லை. மனந்தளராமல் முயன்று நண்பர்களின் உதவியுடன் முட்டி மோதி ஒரு தொழிலைத்தொடங்கி இன்று கோடீஸ்வரனாகிவிட்டான். அவன் வீதி வீதியாக வாழ்வுதேடி அலைந்தபோது அவனைத் தெருப்புழுதியாகப் பார்த்த அரசு இன்று அவன் பணம் படைத்தவனாகிவிட்டபின் அவன்மேல் பாய்ந்து வரியைப் பெருந்தொகையாய் பிடுங்க வருகிறது.
'துவண்டுநின்றபோது எந்த உதவியும் செய்யாது என்னை அலையவிட்ட அரசுக்கு இப்போது வரிகேட்பதற்கு என்ன அருகதை?' என்று அவன் மட்டுமல்ல அவனைப்போல இந்த நாட்டின் விதவிதமான வரிகளை நாளும் கட்டிவரும் பலரும் கேட்பது காதில் விழுகிறது:
ஒழுங்காக மின்சாரம் நீ தந்தால் நான் நகைவிற்று இன்வெர்டர் அல்லது ஜனரேட்டர் வாங்கும் நிலை வந்திருக்குமா?
நீர்மேலாண்மையில் அக்கறை காட்டமல் வறட்சியில் நீ வாட விட்டதால் தானே நான் ஆயிரங்களைச் செலவழித்து ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிலைக்கு ஆளானேன்!
அரசுப் பள்ளிகளை நீ ஒழுங்காக நடத்தாமையால் தானே தனியார் பள்ளிகளை நாடி எல்கேஜிக்கே ஆயிரங்களைக் கொட்டிக்கொடுத்தேன்!
பொதுப் போக்குவரத்து உதவாக்கரையாக, நெரிசலுக்குப் போதாமல் இருப்பதால்தானே ஏழை எளியோர் கூட கடன்பட்டு இருசக்கர வாகனங்களை வீட்டுக்கு வீடு வாங்கும் கட்டாயத்தை உருவாக்கினாய்!
அவசர நேரத்தில் கூட நாட முடியாத அளவுக்கு அரசு மருத்துவமனைகள் தரமற்று, நம்பிக்கையற்று இருப்பதால் தானே கார்பரேட் மருத்துவமனைகளை நாடும் அவலத்தைத் தோற்றுவித்தாய்!
முதுமையடைந்து, குடும்பம் கைவிட்டால், கையில் காசு இல்லையென்றால் இந்தத் தேசம் எனக்கு என்ன பாதுகாப்பு வழங்கும்? அநீதிகள் நிகழும்போது நீதிமன்றம் உடனடி நியாயம் வழங்குமா?. நீதிமன்றங்களில் இன்னும் நீதி வழங்கப்படாத இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியிருப்பது பற்றி அரசுக்கு என்ன அக்கறை?,
காவல்துறை மக்களின் நண்பனாக, மக்களுக்குப் பாதுகாப்புத் தரும் கேடயமாக விளங்குகிறது என்று யாரேனும் சான்றிதழ் தரமுடியுமா? அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்புத் தரவும், அவர்கள் ஏவுவதைச்செய்யவுமே அதன் பெரும்பான்மை சக்தியும் வீணாகிக்கொண்டிருக்கிறது
சாலையில் செல்வோரைச் சாகடிக்கும் வண்ணம் மரணக்குழிகளுடன் அமைந்திருக்கும் அட்டை சாலைகளின் அவலத்தை நீக்க ஏதும் செய்யாது, தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டுநரிடம் மட்டும் காசு வாங்வது கண்ணியமா?
பலவிதங்களில் மக்களிடமிருந்து அரசு உறிஞ்சும் வரி, இவை எதனையும் சரிசெய்யாதபோது நான் ஒழங்காக வரிசெலுத்தவேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்?
ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள- வரிப்பணத்தைக்கொண்டு வாரி இறைக்கும் இலவச திட்டங்களுக்கும், ஆட்சியாளர்களின் ஆடம்பர செலவுகளுக்கும், ஒன்றுக்குப் பத்தாகக் கணக்குக் காண்பித்துத் திட்டங்களை நிறைவேற்றி எஞ்சியதைச் சுருட்டுவதற்கும், ஆளுவோரின் கேடயமான பெருமுதலாளிகள் வங்கித்தொகையை ஏய்த்து சுவிஸ் வங்கிகளில் குவிப்பதற்கும் என் வரிப்பணம் செல்கிறது என்கிறபோது வரிகளைத் தவறாமல் செலுத்தவேண்டும் என்ற நல்லெண்ணம் எங்கிருந்து வரும்?
'நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; நாட்டிற்கு நீ என்ன செய்தாய் என்று கேள்' என்ற பொன்மொழி நல்லரசுகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்நாட்டிற்கு இது பொருந்துமா?
தரமான இலவச கல்வி, சிறப்பான மருத்துவ வசதி, சமூகப் பாதுகாப்பு இவற்றை வழங்கும் நாடுகளில் மக்கள் வரிகளைத் தடங்கலின்றி மகிழ்ச்சியுடன் செலுத்துகின்றனர். . நல்லரசு முகிழ்வது ஒன்றுதான் இங்கும் வரி வருவாய் பெருகுவற்கு ஒரே வழி..
நியாயமானவற்றிற்கு இந்நாட்டு மக்கள் தம்மால் இயன்றதற்கு மேலாகவும் தருவதில்லையா? கேரள வெள்ள நிவாரணத்திற்கு ஏழைகளும் வாரி வழங்கவில்லையா?
மக்களுக்கு நன்மை செய்யா அரசுகள் வரிசெலுத்த வற்புறுத்தும்போது வீர்பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் அன்று ஊருக்கு ஊர் ஒலித்த அந்த வசனமே நினைவுக்கு வருகிறது: 'கிஸ்தி, திறை, வரி, வட்டி! வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி'
அரசுகளே! வெள்ளையரை எதிர்த்து அன்று காந்தி நடத்திய வரிகொடா இயக்கத்தை மீண்டும் வரவழைத்துவிடாதீர்கள்!