இருபதாம் நூற்றாண்டில் தான் மிகக்கொடிய மரண தண்டனைகள் மனித வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.10 இலட்சம் யூத குழந்தைகள், 20இலட்சம் யூதபெண்கள், 30 இலட்சம் யூத ஆண்கள், இன்னும் உடல்குறையுடையோர், ஓரினச்சேர்க்கையாளர்கள், சமய எதிர்ப்பாளர்கள், ஜீப்சிகள் என 50 இலட்சம் பேர் என மொத்தம் ஓருகோடியே 10 இலட்சம் பேர் சர்வாதிகாரி இட்லரால் மரண தண்டனை விதிக்கப்பட்டனர். கம்போடியாவில் 8 இலட்சம் பேர் பால்பாட் என்ற கொடுங்கோலனால் மரண தண்டனை விதிக்கப்பட்டனர். ரூவாண்டாவில் உள்நாட்டுக் கலவரத்தில் 10 இலட்சம் பேர் மரணதண்டனை விதிக்கப்பட்டனர். இப்படி மிகுந்த மக்கள் மரணதண்டனையால் தண்டிக்கப்பட்டதன் எதிரொலியாக, மரண தண்டனைக்கு எதிரான சிந்தனைகள் தோன்றியுள்ளன.
மரண தண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால் அதனை ஒழிக்கப் பல நாடுகள் முன்வந்துள்ளன. உலகில் 96 நாடுகளில் மரணதண்டனை நீக்கப்பட்டுள்ளது. 58 நாடுகளில் இது நடைமுறையில் இருந்தாலும், பெரும்பாலான நாடுகளில் அரிதாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் 60% மக்கள் மரணதண்டனை நிகழும் நாடுகளில் தான் வாழ்கிறார்கள். மிகுந்த மக்கட்தொகையுள்ள சீனா,இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இன்னும் மரணதண்டனை நடைமுறையில் இருப்பதே இதற்குக் காரணமாகும். ஆயினும், அமெரிக்காவில் சில மாநிலங்களில் மட்டும் மரணதண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 2007 லும் 2008 லும் மரணதண்டனைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்தபோது இந்நான்கு நாடுகளும் எதிர்த்தன என்பது நம் கவலைக்குரியது.
உலக சமயங்களில் புத்தசமயம் மட்டுமே மரண தண்டனையை உறுதியாக எதிர்க்கிறது. புத்த சமயத்தின் தாக்கத்தால் சீனப்பேரரசர் கவான் சாங் கி.பி 747 இல் மரண தண்டனையை ஓழித்தார். 12 ஆண்டுகள் அங்கு அது நடைமுறையில் இருந்தது. பின்னர ஏற்பட்ட புரட்சியால் மீண்டும் முளைத்தது. ஜப்பானிலும் புத்தமதத்தின் தாக்கத்தால், பேரரசர் சாகா கி.பி 818 இல் மரணதண்டனை முடிவுக்குக்கொண்டுவந்தார். அது அந்நாட்டில் கி.பி 1156 வரை 338 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றும் புத்தமதத்தைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் பூட்டான் மரணதண்டனையைத் தடைசெய்துள்ளது. ஆனால் புத்தமதத்தைத் தம் தேசிய சமயமாக பறைசாற்றும் ஸ்ரீலங்கா மரணதண்டை விதிப்பதிலும், மனித உரிமை மீறிய கொடிய உயிர்க்கொலைகளிலும் முன்னணியில் உள்ளது. மனிதர்களின் தலையை மட்டும் வெளியில் தெரியும்படி மண்ணில் புதைத்துவிட்டு, ஒரு யானையை ஏவி தலையைத் துண்டிக்கும் கொடிய மரண தண்டனை விதிக்கும் வழக்கம் அந்நாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
ஆஸ்திரியாவில் 1786, நவம்பர் 30 முதலே மரண தண்டனை ஓழிக்கப்பட்டது. மரண தண்டனை கருவிகள் அழிக்கப்பட்டன. அந்த நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2000 இல் இந்த நாளை 300 உலக நகரங்கள் வாழும் நாள் நகரங்களாகக் கொண்டாடியுள்ளன. ஆனாலும் 2010 இல் மட்டும் உலகில் 17,000 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.அண்மையில் மரணதண்டனையாக ஈரானில் 12 பெண்களும், 3 ஆண்களும் கழுத்துவரை மண்ணில் புதைக்கப்பட்டு கல்லெறிந்து கொல்லப்பட்டது கொடுமையானதாகும்.
மரணதண்டனையை உலகிலிருந்த ஒழித்தே தீருவது என்ற முனைப்புடன் மரண தண்டனைக்கு எதிரான உலகக்கூட்டமைப்பு இயங்கி வருகிறது. 2002, மே 13 ஆம் நாள் ரோம் நகரில் உருவான இவ்வமைப்பில் இன்று 121 உலக அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. அக்டோபர் 10 ஆம் நாளை உலக மரண தண்டனை எதிர்ப்பு நாளாக இவ்வமைப்பு அறிவித்துள்ளது
மரண தண்டனையை இந்திய அரசு நீக்கவேண்டுமென தமிழகத்தில் மக்கள் இயக்கம் உருவாகி, பலமுனை போராட்டங்கள் நிகழ்ந்துவரும் வேளையில், மரணதண்டனை நிகழ்த்தப்படவேண்டுமென தமிழகத்திலேயே ஓரு சாரார் போராடிவருவது அவமானகரமானதாகும். .( சிந்திக்க வாங்க..)