ஏமாற்றுவதற்கும், ஏமாறுவதற்கும் பெருமளவில் ஆட்கள் உள்ள இந்தப் புண்ணிய தேசத்தில், போலிமருந்துகள், போலி பாஸ்போர்ட், போலி ரேஷன் அட்டை, போலிக் குடிநீர், போலி நில ஆவணங்கள் என்று தொடரும் இந்த வரிசையில் போலிச் சாமியார்களும் உலா வருவது ஒன்றும் வியப்பில்லை.
அயோக்கியர்களின் கடைசிப்புகலிடமான அரசியலைவிட கள்ளத்துறவு இப்போது பலருக்குப்பணத்தையும், புகழையும் வாரிவழங்கிக்கொண்டிருக்கிறது.விமான ஓட்டுநராக இருந்து சாமியாரான பைலட் பாபா, பா.ஜ.க எம்.பி ஆக இருந்து துறவியான வேதாந்தி மகராஜ், சோதிடம் சொல்லும் சாமியார் குருவாயூர் சூரிய நாராயண நம்பூதிரி ஆகியோர் தங்கள் ஆசிரமங்களைப் பயன்படுத்திக் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் கைங்கர்யத்தைக் கோடிக்கணக்கில் நிகழ்த்தியவர்கள்.
எல்லாப் போலிகளையும் விடப் போலிச்சாமியார்களாக இருப்பது மிகுந்த இலாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது. மற்ற போலிகளுக்குக் கொஞ்சமெனும் முதலீடு வேண்டும். இதற்கு மக்களின் மக்களின் அறியாமை மட்டுமே முதலீடு. பெரும்பாலான போலிப்பொருட்கள் ஏதோ ஒரு கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தயாரிப்பவர் தண்டனைக்குள்ளாகிறார். ஆனால் மிகச்சில போலிச்சாமியார்களே கண்டறியப்படுகின்றனர். அவர்களிலும் மிகச்சிலரே தண்டிக்கப்படுகின்றனர். மக்களின் அறியாமை தரும் ஆதரவால் பசுத்தோல் போர்த்திய இந்தப் புலிகள் பலரின் வேடம் கடைசி வரை களையப்படுவதில்லை. அறியாமையை வைத்து அறுவடை செய்வதை நிறுத்துவதுமில்லை.
நண்பர்களிடமோ, மனைவியிடமோ, உறவினரிடமோ வெளியிடத்தயங்கும் மன சங்கடங்கள் மக்கள் பலரிடம் உள்ளன. இதை மனந்திறந்து கொட்டவும், ஆறுதல் பெறவும் அலையும்போது, இவர்களின் இயலாமையைக் கடவுளின் பிரதிநிதிகள் போல் தோன்றும் இந்தப்போலிச்சாமியார்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். தம்மை, மனபாரத்தைத் தாங்கும் சுமைதாங்கிகளாக மட்டுமன்றி, எல்லாப்பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கும் சர்வரோக நிவாரணிகளாகவும் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் நம்ப வைக்கிறார்கள். பிரச்சனைகளால் நைந்துபோன மனமுடைய மக்கள் மிக எளிதாக இவர்களிடம் தஞ்சமடைந்துவிடுகின்றனர்.
மேலை நாடுகளில் மக்களுக்குப் பிரச்சினைகள் வரும்போது தத்துவ ஞானிகளை அணுகினர். புதிய சிந்தனைகள் பிறந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கின. இப்படித்தான் மார்க்சியம் முதலானவை உருவாயின.
மக்கள் படும் இன்னல்கள் பலவற்றைத்தீர்க்க விஞ்ஞானத்தை அவர்கள் நாடியபோது புதிய கண்டுபிடிப்புகள் மலர்ந்தன. தீராத நோய்கள் தீர்ந்தன. அளவற்ற வாழ்க்கை வசதிகளை எளிதாக, மலிவாக, விஞ்ஞானம் வாரி வழங்கியது.
ஆளுவோர் நெறி பிறழ்ந்தபோது மக்கள் தெய்வத்திடம் முறையிடவில்லை. ஒன்றிணந்து போராடினர். பிரஞ்சுப்புரட்சியும், ரஷ்யப்புரட்சியும் புதிய சமுதாயத்தை உருவாக்கித் தந்தன.
இதற்கு மாறாக நம்மவர்கள் பிரச்சினை வரும்போது சாமியார்களையோ, சோதிடர்களையோ நோக்கிப் படையெடுக்கின்றனர். தமக்குள்ளே இருக்கும் சக்தியில் நம்பிக்கையற்று போலி வேடதாரிகளிடம், தொலைதூரக் கோள்களிடமும் முழு நம்பிக்கை வைத்து இருக்கும் நிம்மதியையும், பொருளையும் கோட்டைவிடுகின்றனர்.
விஞ்ஞானிகளும், தலைவர்களுமே பிரச்சினைகளைத் தீர்க்கச் சாமியர்களை நாடி அஞ்ஞானத்தில் ஆழ்கின்றனர். நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியிலிருந்து இன்று உள்ள சில இஸ்ரோ விஞ்ஞானிகள் வரை சாமியார்களின் சக்திகளில் நம்பிக்கையுள்ளவர்களாக விளங்குகின்றனர் என்பது தேசிய அவமானமன்றோ? தேசத்தை இப்போக்கு இன்னும் பின்னோக்கி நகர்த்தாதா? பின்பற்றுதலுக்குரியவர்களே இப்படிச் சோரம்போகும்போது பாமரர்களைப்பற்றிப் பேச என்ன இருக்கிறது ?
பகுத்தறிவற்ற, தன்னம்பிக்கையற்ற ஒரு கோழை சமுதாயத்தின் வெளிப்பாடே இந்தப்போலிச்சாமியார்கள். ஆன்மிகமற்ற சடங்குசார்ந்த மத நம்பிக்கைகள் இருக்கும்வரை போலித்தனங்களும், மயக்கங்களும், ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். இத்தகைய மதம் நீடிக்கும் வரை மூடநம்பிக்கைகள் தொடரும். ஒருபோலி சாமியார் போனால் இன்னொருவர் வருவார். மக்கள் தொடர்ந்து ஏமாறக் காத்திருக்கிறார்கள். மதம் என்னும் பேய் விரட்டப்படும் வரை இதற்குத் தீர்வில்லை. கிளைகளை வெட்டிப் பயனில்லை. வேரை வெட்டி வீழ்த்துவதே தீர்வாகும்.
பகுத்தறிவு என்ற வெண்கொற்றக்கொடையின் கீழ், மனித நேயம் என்ற செங்கோல் பிடித்து, அறிவியலின் தன்னம்பிக்கை ஆட்சியே நமக்கு எல்லாப்போலிகளையும் ஒழித்துக்கட்டும்
(12.6.10 அன்று வாசிக்க வாங்க நிகழ்ச்சியில் படிக்கப்பட்டது)