உலகத்தில் மிகுதியான விபத்துகள் நடக்கும் நாடு இந்தியா. இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 14 பேர் சாலை விபத்துகளில் மாண்டு போகின்றனர். இந்தியாவில் மிகுதியான விபத்துகள் நடக்கும் மாநிலம் தமிழகமாகும். இந்திய விபத்துகளில் 14% தமிழகத்தில் நடைபெறுகின்றன. 2009 இல் மட்டும் தமிழகத்தின் 1,67,000 கி.மீ சாலைகளில் 60,794 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 13,746 பேர் உயிர் நீத்துள்ளனர். இதில் சென்னை நகரில் மட்டும் 5060 விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் இறந்தோர் 598 பேர். மிகுதியாக இறந்தோர் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவர்களின் எண்ணிக்கை 185.
உலகத்திலேயே தமிழகம் எதில் முன்னணி வகிக்கிறதோ இல்லையோ சாலை விபத்துகளில் முதலிடம் வகித்துக்கொண்டிருக்கிறது. இப்படியோரு பெருமை தமிழகத்திற்குத் தேவையா? இந்த அவப்பெயரை விடாமல் தக்க வைத்துக்கொண்டிருப்பது பற்றித் தமிழகப்பெருமைபேசும் இங்குள்ள அரசியல் வாதிகளோ, காவல் துறையினரோ, சமூக ஆர்வலர்களோ கூச்சநாச்சமின்றி உள்ளனர்.நாளை மனித உயிர்கள் பலியாகி விடக்கூடாது என்பதற்காகப் பல்வகை இயக்கங்கள் நடத்துவோர் ஒவ்வொரு மணிநேரமும் இப்போது இங்கு உயிர்கள் சாலைகளில் பலியாவதைத் தடுத்து நிறுத்த தீவிரமான எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லையே.
தமிழகத்தில் இந்தப் போக்குவரத்து அவலங்கள் தொடர்வதற்குக் காரணம் என்ன?இங்குப் போக்குவரத்திற்கு மட்டுமா சாலைகள்? இங்குச் சாலையே சகலமுமாக இருக்கிறது. அதுவே பலருக்குக் குடியிருப்பு, வணிக வளாகம், உணவகம், கழிப்பறை, விளையாட்டு மைதானம், வழிபாட்டுத்தளம், திறந்த வெளி மிருகக்காட்சி சாலை, அரசியல் கூட்டவெளி, திறந்த வெளி கலையரங்கம் - இப்படிப்பல - இன்னும் பல. சாலை கட்டுப்பாட்டு விதிகள் இங்கு எதுவும் செல்லாது என்பதே தமிழகத்தின் தலைவிதி. பல ஆண்டுகள் கார் ஓட்டிய வெளிநாட்டுக்காரர் இங்கு வந்தால் 100 அடிகள் ஓட்டவே திணறுகிறார்; சர்கஸ்ஸில் ஓட்டிப்பழக்கமில்லை என்கிறார்.
அடிக்கடி கான்டிராக்ட் பெறும் வாய்ப்பிற்காக அற்ப ஆயுளுடைய அட்டை சாலைகளைப் போட்டுவருவதால், எதிர்பாராக் குண்டும் குழியும் வாகன ஓட்டிகளைத் திணறடிக்கின்றன. விபத்துகளை வரவழைக்கின்றன. குழி ஆடிபோல அமைந்துள்ள இந்த மகத்தான சாலைகளில் 5 நிமிடம் மழை பெய்தாலும், வெள்ளக்காடாகி, ஜல்லிக்கற்கள் பெயர்ந்துபோய் போர்நடந்ததுபோலக் காட்சியளிக்கின்றன.
வீட்டைவிட்டுக்கிளம்பி வாகனத்தில் பயணமானால் மீண்டும் வீட்டுக்குப் பத்திரமாக வந்து சேருவதற்கு உத்தரவாதமில்லை. எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தை அணிந்துகொண்டே பயணிக்கவேண்டியுள்ளது. நாம் எவ்வளவு தான் சரியாக, விதிகளை ஒழுங்காகக் கடைப்பிடித்து வாகனம் ஓட்டினாலும் எதிராளி எப்படி நடந்துகொள்வார் என்பதைக் கணிப்பதற்கில்லை. வாகனங்கள் நிச்சயம் வரக்கூடாத எதிர் திசையில் கொஞ்சங்கூட கவலைப்படாமல் படுவேகமாக ஆட்டோ வந்து அதிர்ச்சிதரும். சிக்கனலில் பச்சைவிளக்கு எரிகிறது என்று நம்பிச் சென்றால் சிக்கனலைப்பற்றியே கவலைப்படாத இருவாகன ஓட்டி நம்மீது பாய்ந்து வந்து மோதுவார் . சிவப்பு விளக்கு அணைவதற்கு முன் வண்டியைக்கிளப்புவதும், ஆரஞ்சு விளக்கு அணைந்தபின்பும் நிற்காமல் விரைவதும், நிறுத்தக்கோட்டைத்தாண்டி நிற்பதும், மஞ்சள் கோட்டை சர்வ சாதாரணமாக மீறிச்செல்வதும் புத்திசாலித்தனமாகவும், சாகசமாகவும் பெரும்பாலான வாகன ஒட்டுநர்கள் நினைக்கிறார்கள். முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழும் நம்மவர்களின் செயலைப்பார்த்து நாகரிக உலக மக்கள் நம்மைக் காட்டுமிராண்டிகள் என்று எள்ளி நகையாடுகிறார்கள்.
சாலையில் எந்தத் தவறுசெய்தாலும் தண்டனையில்லை அல்லது எளிதாக தண்டனையிலிருந்த தப்பிக்கலாம் என்ற சூழலை ஆள்வோர் வளர்த்ததே மக்களின் கட்டுப்பாடு தளர்ந்ததற்குக் காரணமாகும். இது தேர்தல் சனநாயகத்திற்கும் நாம் கொடுக்கும் அநியாய விலையாகும். ஓட்டுநர்கள் செய்யும் பெரும் தவறுகளை வேடிக்கை பார்க்கும் காவலர்கள் கேஸ்பிடிக்கும் நிர்பந்தம் ஏற்படும் மாதக்கடைசி நாள்களில் மட்டுமே தப்பிக்கத்தெரியா அப்பாவிகள் செய்யும் சிறு தவறுகளைச் சிக்கெனப்பிடிக்கிறார்கள்; அபாரதமோ கையூட்டோ பெறுகிறார்கள். வாகனங்களை நிறுத்த எந்த வசதியும் செய்துதரப்படாத நெரிசலான இடங்களில் வேறுவழியின்றி வாகனத்தைச் சில கணங்கள் நிறுத்திவிட்டுத் திரும்பும்போது அதற்குப் பூட்டு பூட்டி பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஆனால் ஒரே இருசக்கரவண்டியில் மூவர் ஆபத்தாக அமர்ந்து செல்வதையோ, படுவேகமாக எதிர்திசையில் வாகனம் ஓட்டி உயிருக்கு உலைவைப்பதையோ, சிக்கனல் விழுவதற்கு முன் சீறிப்பாய்ந்து எதிர்வாகனங்களை பீதியுறச்செய்வதையோ,அடையாறுக்கும், பாரிமுனைக்கும் 120 கி.மீ வேகத்தில் பைக் பந்தயம் வீட்டு காமராசர் சாலையையே கொலைக்களமாக மாற்றிவரும் மூட இளைஞர்களையோ, பேருந்துகளே சரிந்து ஓடும் வண்ணம் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் தற்கொலைஞர்களையோ காவல் துறையினர் பெரும்பாலும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதைவிடப்பெரிய கொடுமை என்னவெனில் வழிகாட்டியாக விளங்கவேண்டிய அரசுத்துறை வாகனங்களும், சட்டத்தைக்காக்க வேண்டிய காவல்துறை மற்றும் நீதித்துறை வாகனங்களும் சட்டத்தை மீறி வரும் அவலமாகும். இவர்கள் இந்த சட்டத்திற்குக் கட்டுப்படாதவர்கள் போல நடந்துகொள்வதைப்பார்க்கும் பொதுமக்கள் எப்படிச் சட்டத்தை மதிப்பார்கள் ? இந்த வழிகாட்டிகள் தவறிழைத்தால் மற்றவர்கள் பெறும் தண்டனையைவிட இவர்களுக்கு இருமடங்கு தண்டனை விதிக்கவேண்டுகிறது சட்டம்.
பட்டப்பகலில் சென்னை அண்ணாசாலையில் நடமாடும் நீதிமன்றம் ஒன்று மஞ்சள் கோட்டைப்பற்றிக் கவலைப்படாது அதைமீறி U வளைவெடுத்துச்சென்ற காட்சியை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் செய்தியாளர் ஹாரி மில்லர் என்ற ஆங்கிலேயர் படமெடுத்து அதிர்ச்சியுடன் கட்டுரை எழுதி வெளியிட்டார். 'இந்த நீதிமன்ற வாகனத்தின் ஓட்டுநர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன் , இந்த கட்டுரைபற்றியோ, படம் பற்றியோ தொடர்புடைய துறையினரோ, வாசகர்களோ பெரிதாக கவலைப்படவில்லை என்பதே எனக்கு இதைவிடப்பெரிய அதிர்ச்சியாகும்' என்றார் மில்லர்.
கால் நூற்றாண்டுக்குமுன் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி இன்றும் இன்னும் மோசமாக அடிக்கடி தொடர்கிறது. மக்கள் விழித்தெழ வாய்ப்பே இல்லையா என்ற கேள்வி நம் நெஞ்சைத்துளைக்கிறது. (சிந்திக்க வாங்க: 14.08.10)