நல்வாழ்வு நம் பிறப்புரிமை

மெய்ப்பொருள் காண்க:7            

 

ஒரு நாட்டின் குறைவற்ற செல்வமே மக்களின் நோயற்ற வாழ்வாகும்.. நலமான உடலில்தான் வளமான சிந்தனைகள் பிறக்கும். மக்கள் நோயாளிகளாக இருக்கும் நாட்டில் பொருளாதார வளர்ச்சி பெருக வாய்ப்பில்லை.  நல்வாழ்வு(Health) பெற்ற மக்களால்தான் நாட்டின் உற்பத்தியைப் பெருக்க முடியும்.  அண்மையில் வந்த கோவிட்-19  இலட்சக்கணக்கான மக்களின் உடல்நிலையைப் பாதித்தபோது அனைத்துத் துறைகளிலும் சரிவு ஏற்பட்டதே இதற்குச் சான்று.

உடல் நலம் பேணும் சிந்தனை தமிழ்மண்ணில் என்றும் உண்டு. நோயற்ற ‘வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற அருமையான பழமொழி ஆழமான பொருளுடையது. சித்தர்களில் சிறந்தவரான திருமூலர் உடல் நலத்திற்கு அளித்த முன்னுரிமையைக் கீழ்க்கண்ட பாடல்கள் உணர்த்தும்:

 

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்பு உளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ''காயமே இது மெய்யடா, இதில் கண்ணும் கருத்தும் வையடா, நோயில்லாமல் காத்து நுாறாண்டுகள் உய்யடா'' என உடல் நலம் பேண வற்புறுத்துவார்.

மருந்து என்ற அதிகாரத்தில் வள்ளுவர் எந்த மருந்தைப் பற்றியும் கூறாமல் உடல்நலம் பேணும் முறைகளையே விளக்குகிறார்.

 ''விசையுறு பந்தினைப் போல் உள்ளம் மேவியபடி செல்லும் உடல் கேட்டேன்,'' என்பது பாரதியின் வேண்டுதல்.

 

உடல்நலமே நாட்டின் நலம் என்ற பேருண்மையை உணர்ந்தே உலகில் ஏறத்தாழ 30 நாடுகளில், மக்கள் நல்வாழ்வு பெற,  மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக்கப்படுள்ளது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தொழிற்சாலைகள், வேளாண்மைபோல வளர்ச்சிக்குரிய செலவினமாக உடல்நலம் பார்க்கப்படுவதில்லை. முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுயராஜ் ஒரு நேர்காணலில் ‘ உடல்நலம் பணக்காரர்கள் சம்பந்தப்பட்டது. இப்போது ஏழைகளுக்கு உணவிடுவதே இந்தியாவில் நம் குறிக்கோள்’ என்று குறிப்பிட்டுள்ளது நல்வாழ்வுக்கு முதன்மை இல்லையென்ற ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை  விளக்கும்.

எனினும் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதையும் தற்போதைய அரசு நல்வாழ்வைப் பேணுவதில் தன்னாலியன்ற அக்கறை செலுத்திவருவதையும் மறுப்பதற்கில்லை.

உடல் நலத்திற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  (GDP) சீனா- 9.5%, பிரான்ஸ்/ஜெர்மனி- 11%, அமெரிக்கா- 17% ஒதுக்கும் நிலையில் இந்திய ஒன்றிய அரசு 1% அளவில்தான் செலவிடுகிறது.  பெரும்பாலான மாநில அரசுகளும் மிகக் குறைந்த தொகையினையே உடல்நலத்திற்கு  ஒதுக்குகின்றன. தேர்தல் வாக்குறுதிகளில் கூட மருத்துவ- நல்வாழ்வு முக்கியத்துவம் பெறுவதில்லை. உலகின் மூன்றில் ஒரு கொரோனா சாவு இந்தியாவில் ஏற்பட்டது என்ற அவலநிலை ஏற்பட்டபோது இந்தியாவின் மருத்துவ உள்கட்டமைப்பு தோலுரித்துக் காட்டப்பட்டது.

2010 இல் 10,000 பேருக்கு 9 மருத்துவப்படுக்கைகள் என்ற நிலை 2020 இல் 5 ஆகக் குறைந்துள்ளது. அதுவும் 70% மக்கள்தொகையுள்ள சிற்றூர் மக்களுக்குக் கிடைத்தது 40% படுக்கைகள்தான். விடுதலைக்குப்பின் நிகழ்ந்த மிகப்பெரும் உடல்நலப் பேரழிவு நிகழ்வான கொரோனா பாதிப்பிலிருந்து நாடு மீட்படைய நிதியமைச்சர் ரூ.6.2 லட்சம் கோடி வழங்கினார். இதில் வெறும் 3% மட்டுமே (ரூ23,220 கோடி)  உடல்நலம் தொடர்பான மருத்துவச் செலவுகளுக்குப் போய்ச்சேர்ந்ததாகத் தெரிகிறது. இந்திய அரசின்  வரவு செலவுத் திட்டம்- 2020இன் படி, மருத்துவ உடல்நலத்திற்கு முன்னுரிமை தருவதில் 154 வது நாடாகக் கடைசியிலிருந்து 5வது இடத்தில் இந்தியா உள்ளது என்பது அவமானகரமானது. ஆனால் குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர்  என்பதுபோல அதே ஆண்டு  46 நாடுகளின் மருத்துவச் சுற்றுலா பட்டியலில் பெருமைமிக 10வது இடம் நமக்கு! இந்தக் கொரோனா காலத்திலும்  மருத்துவச் சுற்றுலாவிற்காக $5 பில்லியனிலிருந்த $6 பில்லியன் வரை அரசு செலவிடும் நிலையில் இந்தியாவின் 100 பெரும் பணக்கார்களின் சொத்து மதிப்போ ரூ12.97 டிரில்லியனாக உயர்ந்துள்ளது.

நம்மை விட  மிகுதியான  மக்கட்தொகை கொண்ட சீனாவில் 97% மக்களுக்குக் காப்புறுதி உள்ளது. ஆனால் 90% இந்தியர்களுக்கு இங்கு எந்த மருத்துவக் காப்பீடும் இல்லை. 68% மக்கள் அடிப்படையான மருந்துகளை வாங்கவே வசதியற்று உள்ளனர். இந்நிலையில் ‘அனைவருக்கும் மருத்துவம்! உலகத்தின் மிகப்பெரும் காப்பீட்டுத்திட்டம்!’ ஆகிய  முழக்கங்களுடன் ஆயுஷ்மன் பாரத் காப்பீட்டுத்திட்டம்   அறிமுகப்படுத்தப்பட்டது அரசின்  மொத்த விளம்பரச் செலவில் வெறும் 0.01% மட்டுமே இதனைப் பரப்புரை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது. இதனால் மக்களுக்குப் போதிய முறையில்  இதன் பலன்கள்  போய்ச் சேரவில்லை. மேலும் இது தனியார் மருத்துவ மனைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை  உட்கொண்டதால் இதன் பயன் ஐயத்திற்குரியதாக அமைந்துள்ளது.

நோய்வரும் முன் காக்கும் வழிகள் இங்கு என்ன? பள்ளிப்படிப்பில் உடல்நலம் பேணுதல் பற்றி முறையாகப் போதிப்பது இல்லை. யோகாசனத்திற்குத் தரும்  முக்கியத்துவம் உடற்பயிற்சிகளின் அரசனான நடைப்பயிற்சிக்கு இல்லை. தூய்மையற்ற காற்றிலும், நீரிலும், உணவிலும்  நோய் பரவுவது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை.

ஒன்றிய அரசின்  மருத்துவ நல்வாழ்வு கோட்பாடுதான் என்ன? 25 இலட்சம் மக்களைக் கொடிய  கொரோனா காலத்தில், கும்பமேளாவில், கங்கையில் நீராட அனுமதித்த அரசு உடல் நலத்தைவிட மத நலத்தையே முன்னிருத்தி வருகிறது. கட்சி ஊர்வலங்கள் நடத்துவதைத் தாராளமயமாக்கி மக்கள் நலனைக் காற்றில் பறக்கவிடுகிறது. சோதிடம் அறிவியலாக்கப்பட்டு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம் பெற்ற நிலையில் அறிவியல் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது. முறையான ஆய்வுகள் செய்யப்படா மாற்றுமருத்துவ முறைகள் உயர்த்தப்பட்டு அறிவியல் பூர்வமான உயிர்காக்கும் அலோபதி மருத்துவமுறை பின்தள்ளப்படுகின்றது.  பசுவின் கழிவுப்பொருள்கள் பல நோய்களுக்கு மருந்தென்றும், ஏன் புற்றுநோயைக்கூடக் குணமளிக்குமென்றும் தவறான பரப்புரை செய்வது அனுமதிக்கப்படுகிறது. ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ என்ற பெயரில் உள்நாட்டு லேகிய வியாபாரிகள் கூடக் கண்டபடி மருந்து தயாரிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். இத்தகையோர் கோவிட்டைத் தீர்த்துக்கட்டும் முதல் தடுப்பூசி தயாரிக்கக்கூட முன்வருவதும் அத்தகையோருக்கு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரியாதை செலுத்துவதும் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

இன்னொரு பக்கம் கொள்ளை இலாபம் அடிக்க தனியார் மருத்துவமனைகளை அனுமதிப்பதால் பெரும்பாலான மக்கள் நோய்வந்தாலே அஞ்சும்நிலை ஏற்படுகிறது. இன்றைய நிலையில் தனியார் மருத்துவ மனைகளில் ஏற்படும் மருத்துவச் செலவுகள் வருமாறு:

                                   நோய்

 தோராயமான  செலவு ரூ

இரத்தப்புற்றுநோய்

10,94,000-    22,00,000

மார்பகப் புற்றுநோய் கதிர்வீச்சு மட்டும்

30,000-  20 இலட்சம்

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை

20- 25 இலட்சம்

சிறுநீரகக் கல் சிகிச்சை

12,856 – 1,13,431

சிறுநீரக மாற்று சிகிச்சை

7- 10 இலட்சம்

இதயம்-  பைபாஸ் அறுவை

95,000- 3,50,000

இதயம்-  திறந்த அறுவை

1.5 – 2.25 இலட்சம்

இதயம்- ஸ்டென்ட்  மட்டும்

7770- 31,584

இதயம்- ஸ்டென்ட்  அறுவை சிகிச்சை

40,000- 1.98 இலட்சம்

டயாலிசஸ்

2356- 5000

புற்றுநோய்க்கான புரோட்டான் தெரபி

30 இலட்சம் முதல் 1.5 கோடி

மருந்துகள், பரிசோதனைகள், மருத்துவ மனை அறை வாடகை போன்ற பிற செலவுகள் தனி.

சாராய வியாபாரிகள் பலரும் கல்வி நிறுவனங்களைத் தொடங்கியதுபோல பெரும் கார்பரேட் நிறுவனங்கள் வெறும் இலாப வேட்டையையே குறிக்கோளாகக்கொண்டு மருத்துவமனைகளைத் தொடங்கி அரசுகளின் ஆதரவுடன் கொள்ளை இலாபம் ஈட்டி வருகின்றன. கொரோனா காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ5000- 15,000 தானே! ஆனால் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இலட்சக்கணக்கில் சுருட்டியபோது ஏன் அரசு வேடிக்கை பார்த்தது? இல்லாத நோயைக்கூறி இழுத்தடித்துப் பல தேவையற்ற பரிசோதனைகள் செய்து பணம் பிடுங்குவதும், இறப்பு உறுதி என்று தெரிந்தும் சூழலைப் பயன்படுத்திப் பெருஞ்செலவில் சிகிச்சை செய்வதாகக்காட்டி கொள்ளை அடிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் இதைவிடப் பெரும் பகல் கொள்ளையில் ஈடுபட்டுவருகின்றன. 300%- 400% இலாபம் வைத்து இவர்கள் விற்பதைக் கேட்க நாதியில்லை. எடுத்துக்காட்டாக ஹீமோ தெரபிக்குப் பயன்படும் ஊசி மருந்தின் உண்மை விலை ரூ900 என்றிருக்க விற்பனை விலை ரூ3700 என்று அச்சிட்டு விற்கிறார்கள். மைதடவி அச்சடித்தால் மறுத்துப் பேச ஆளில்லை.

அரசு மருத்துவமனைகளும் அரசு தரும் காப்பீட்டுத்திட்டங்களும் மக்கள் அனைவருக்கும் முழுமையாகப் பயனளிக்கா நிலையில் ஏழை, நடுத்தர மக்கள் நோய்வந்தால் சகித்து வாழவேண்டும் அல்லது சாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதிலும் சிறப்பாக முதியவர்களுக்கு நோய்வந்தால் சொத்து முழுவதும் தீர்ந்துபோய் அதற்குமேலும் பெரும் கடனாளியுமாகி உடலோடு மனமும்  நோயுற்றுச் சாவை எதிர்கொள்கின்றனர்.

உலக நாடுகள் பலவற்றில் வாழும் மக்கள் மருத்துவச்செலவு பற்றிக் கவலையே இல்லாமல் வாழ்வது கண்டு நாம் ஏன் அங்கு பிறக்கவில்லை என்ற ஏக்கம் பலருக்கும் அழையாத விருந்தாளியாக வருகிறது.

இந்த நிலையை மாற்ற வழிதான் என்ன? மனித உரிமைக்கான அனைத்துலகப் பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் மருத்துவ நல்வாழ்வு வழங்கவேண்டும் என்பது அதில் கூறப்பட்டுள்ள உரிமைகளில் ஒன்றாகும். நல்வாழ்வு இந்தியர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டமும், நீதிமன்றத்தீர்ப்புகளும்  தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில்  இராணுவத்திற்காக ரூ 3,68,418 கோடி செலவிடும் இந்திய அரசு  தம் குடிமக்களின் உடல்நலம் பேண ரூ 37,130 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளமை, இந்திய குடிமகனின் அடிப்படை உரிமையைப் புறந்தள்ளுவதாகும். நல்வாழ்வு நம் பிறப்புரிமை என்பதே மெய்ப்பொருளாகும். இந்தப் பிறப்புரிமையை அரசிடம் உரிமையுடன் தட்டுக்கேட்கும் விழிப்புணர்வு  வந்தாகவேண்டும். நல்வாழ்வு அனைவருக்கும் கிடைக்காவிடின்  இங்கு நரக வாழ்வே தொடரும்.