மனித மூளையின் ஒரு பகுதியில் பட்டாணிக் கடலையளவு பரிணாம வளர்ச்சியில் மாற்றம் பெற்ற தருணத்திலிருந்து அறிவியலும் தொடங்கிவிட்டது.
ஏறத்தாழ 500 கோடி ஆண்டுகள் தன்னிச்சையாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த இந்தப்பூமியை அவன் வரவு இதுவரை இல்லாத அளவுக்குச் சலசலப்புக்கு உட்படுத்தியது. ஏற்கனவே இயங்கிய ஓர் ஒழுங்கை புரட்டிப்போட்டது.
உலகம் தோன்றி ஒரு நாள் ஆகிறதெனில், மனிதன் தோன்றி ஒரு நிமிடமே ஆகியுள்ளது. அதற்குள் பஞ்சபூதங்களின் செயல்களுக்கு மனிதன் சவால் விட்டான். அவற்றோடு மோதினான். இயற்கையின் ஆற்றலைக் கண்டறிந்து தனக்குச்சாதகமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டான். பாறைகளைக்குடைந்து கற்கருவிகளைத்தீட்டினான். பாறைகளை தேய்த்து நெருப்பை மூட்டினான், மரத்தை வெட்டி சக்கரத்தை உருட்டினான். வேளாண்மை செய்து பூவுலகின் மேனியைக்கீறினான்.
இப்படி காலந்தோறும் நிகழ்ந்த கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியே இன்றைய செல்பேசியும், அணுஉலையும் ஆகும்.
மனிதப்பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இவை அனைத்தும் காலந்தோறும், மனித அழிவிற்காகவும் பயன்பட்டிருக்கின்றன. அறிவியலின் ஆக்கமும், அழிவும் நாணயத்தின் இருபக்கங்களாயின. எல்லா நன்மைகளிலும் தீமைகளும் கலந்திருப்பதே இயற்கையின் அமைப்பு போலும்.
தீமைகள் ஒருபுறம் இருப்பினும், அறிவியல் கண்டுபிடிப்புகள் எத்தனை அச்சங்களிலிருந்தும், வேதனைகளிலிருந்தும மனிதனைக்காத்திருக்கின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றைய செல்பேசி மனித உறவுகளை மேம்படுத்தி தனிமைத்துயரை விரட்டியுள்ளதை எண்ணிப்பார்க்கவேண்டும். பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி அச்சமின்றி உலவ வகை செய்தத்தை எண்ணிப்பார்க்கவேண்டும். கண்காண இடங்களைத்தேடிச்செல்லும் சிரமத்தைக் காணமல் போகச்செய்து, கலங்கரைஙிளக்கமாகியுள்ளதை எண்ணிப்பார்க்கவேண்டும். இருந்த இடத்தில் இருந்தபடி உலகத்தொடர்பைக் கைப்பிடிக்குள் கொணர்ந்து தூரத்தை மாய்த்த மாயத்தை எண்ணிப்பார்க்கவேண்டும். மொத்தத்தில் நம் இணைபிரியா நண்பனாய் நம்மோடு இருந்து உயிரையும், உடமைகளையும் உறவுகளையும் காப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அணுஉலகைகளால் உலகில் இதுவரை 100 பேர்மட்டுமே இறந்துள்ளார்களாயினும் கோடானகோடி மக்களுக்கு மலிவு விலையில் மின்சாரத்தை வழங்கிக்கொண்டிருக்கும் அணுஉலைகளின் செயல்பாட்டை நிறுத்திவிட்டால் உலகமே இரட்டில் ஆழ்ந்துவிடும். இன்னொரு மாற்று கண்டுபிடிக்கப்படும் வரை இவற்றை மூடுவதல்ல,எச்சரிக்கையோடு இவற்றைக் கையாளவதே சரியான தீர்வாகும். தீமைகளை விட நன்மைகள் மிகுந்ததாலேயே கண்டுபிடிப்புகள் தொடர்கின்றன.
நவீன கண்டுபிடிப்புகளின் தீமைகளைக்கண்டு அஞ்சி, இறந்த காலத்திற்குப் பின்னோக்கிச்செல்வது சாத்தியமேயில்லை. அனுபவித்துக்கொண்டிருக்கும் வசதிகளை விட்டு வர மனிதர்கள் எந்நாட்டிலும் தயாராக இல்லை. மேலும் மேலும் புதியன காணும் தீராத முனைப்பே மனிதனை இயக்கிக்கொண்டிருக்கிறது. போதுமென்ற நிலையோடு தேங்கி நிற்பது மனித இயற்கைக்கு மாறானது. வளர்ச்சியின் போக்கிற்கு எதிரானது. நவீன முன்னேற்றங்களை ஏற்காமல் அனைத்தையும் நிறுத்திவிட்டால் மனிதனும், மிருகமும் வேறுபாடின்றி வாழும் நிலையே ஏற்படும்.
மனிதப்படைப்பின் நோக்கம் சிந்தனைக்குரியது. இயற்கை நிகழ்த்திய விபத்தே மனித உருவாக்கம் என்ற கொள்கையுமுண்டு. இயற்கை தன் படைப்பை தானே பார்த்து மகிழ, விமர்ச்சிக்க இந்தப்பூவுலகில் தான் தோற்றுவித்த மனிதனின் மூளை வழியாகச்செயல்படுகிறதோ என்ற சிந்தனையும் இப்போது எழுந்துள்ளது.
இவற்றையெல்லாம் மனதில் உட்கொண்டு முள்குத்தாமல் ரோஜா மலரைப்பறிப்பதுபோல, சேறுபடாமல் தாமரை மலரை எடுப்பதுபோல தீமைகள் நீக்கி அறிவியல் உன்னதங்களை ஏற்பதே அறிவுடைமையாகும்.. (சிந்திக்க வாங்க: 16.04.11)