கொசுவை ஒழிக்கவே முடியாதா?

  ஓர் அணுஆயுதப்போர் மூண்டால் மனித இனம் பூண்டோடு மடியுமேயொழிய கொசு அப்போதும் தாக்குப்பிடிக்கும் என்கின்றனர் அறிவியலார். கொசு என்ற குட்டி பயங்கரவாதியின் தீவிரவாத செயல்கள் 2 கோடி 60 இலட்சம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

 

நிலத்திலும், நீரிலும், விண்ணிலும் உள்ள கொடிய,பெரிய விலங்குகளை அழிக்கவும், வலையில் பிடிக்கவும் முடிந்த மனிதன் இரண்டரை மில்லிகிராம் எடையுடைய  இந்தக் கொசுவை ஒழிக்கும் முயற்சியில் மட்டும்  தோலவிக்கு மேல் தோலவியையே சந்தித்து வருகிறான். மனிதனைப் பழிவாங்குவதுபோல், கொசு அவனை வலைக்குள் அடைத்தும், மாலை நேரப்புதிய தென்றலை வரவிடாது கதவுகளையும்,சன்னல்களையும் மூடவைத்து  உயிர்வளியை ஒடுக்கியும், ஆண்டுக்கு 5 கோடிப் பேரைத்தந்திரமாகக் கொன்றும், 50 கோடிப்பேரை நோயாளியாக முடக்கியும்  இடைவிடாத் தொல்லைகொடுத்து வருகிறது.

 

அண்டார்டிக்கா நீங்கலாக, உலகெங்கும் கொசு ஒழிப்புப்போர் நிகழ்ந்தும்  எய்ட்சைவிட  கொசு உருவாக்கும் நோய்களால் மிகுதியானவர்கள் இறக்கிறார்கள். உலகில் 17இறப்புகளில் ஒன்றுக்குக் கொசு காரணமாகிறது.சிறிய உயிரினங்களையும் அழியாமல் காக்க பல நடிவடிக்கைகள் நடைபெறும் இந்நாள்களில், கொசு ஒழிப்புத்தினம் ஆகஸ்டு 20 ஆம் நாள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் மருத்துவர் ரொனால்டு ரோஸ் 1897 ஆகஸ்டு 20 அன்று மலேரியா கொசுக்காளால் பரவுகிறது என்று கண்டறிந்த நாள் அது. இதற்காக அவருக்கு 1902 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

அரசுகள் குறுகிய மற்றும் நீண்ட காலத்திட்டங்கள் தீட்டி கொசுவை ஒழிக்க முயலாமலில்லை. நம் சென்னை மாநகராட்சியும் இதற்கான இடைவிடா செயல்பாடுகளை வகுத்தே வருகிறது. கொசு உற்பத்தி நிலையங்களான அடையாறு கால்வாய், ஓட்டேரி கால்வாய், பக்கிங்காம் கால்வாய், கேப்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் முதலிய 120 கி.மீ தூரம் நீளும் கால்வாய்கள், 1400 கி.மீ நீளும் மழைநீர் வடிகால்வாய்கள், 3 இலட்சம் மேல்நிலைத்தொட்டிகள், 25,000 கிணறுகள், 5000 திறக்கப்படாத கிடங்குகள் மற்றும் திறந்தவெளி நிலங்கள் 1400 குடிசைப்பகுதிகள், ஆங்காங்கே கிடக்கும் தேங்காய் ஓடுகள்,ஆட்டுக்கல், டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை இனம் கண்டு கோடிக்கணக்கில் உற்பத்தியாகும் கொசுக்களை ஒழிக்க சென்ற மாதம் முயற்சி நடைபெற்றதாக செய்தி வந்தது. 350 க்கும் மேற்பட்ட மலேரியா தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 9 கட்டுமரங்கள், 6 பைபர் படகுகளைப்பயன்படுத்தி கால்வாய்களில் உள்ள ஆகாயத்தாமரை, பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன. வீடுகள்தோறும் 700 மாநகராட்சித்தொழிலாளர்கள் மேல், கீழ்நிலை நீர்த்தொட்டிகள், கிணறுகள் முதலியவற்றில் கொசு லார்வா கொல்லி மருந்துகளைத் தெளித்தனர். நாள்தோறும் 350 கைத்தொளிப்பான்கள், 75 எந்திரத்தெளிப்பான்கள், 20 கால் அழுத்த தெளிப்பான்கள், 730 சிறிய புகைபரப்பும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். உபயோகமற்ற டயர்கள்,பாட்டில்கள் போன்றவை  நகரெங்கும் அகற்றப்படனவாம். ஒரு இலட்சம் ஸ்டிக்கர்களை வீடுவீடாகச்சென்று ஒட்டினார்களாம். 5 இலட்சம் மாணவ மாணவியர்க்குச் சுகாதாரத்தூதுவர் அட்டைவழங்கி கொசு ஒழிப்புப்பிரச்சாரம் நடத்தப்பட்டதாம்.

 

இவ்வளவு முயற்சிகளுக்கும் பின்னரும் இன்னும் கொசு குறையவில்லை என்பதே வேதனையான உண்மை. நம்மைக்கடிக்கும் ஒரு பெண்கொசு 3000 முட்டைகளை இடுகிறது. 2முதல் 3 வாரங்கள் உயிர்வாழ்கிறது. சங்கிலித்தொடராகக் பிறக்கும் ஒவ்வொரு கொசுவும் ஆயிரக்கணக்கில் புதிய கொசுக்களை உருவாக்குகின்றன.  இந்த இனப்பெருக்க வேகத்திற்கு எதிராக, எந்தச்சூழலிலும் தன்னைக்காக்கும் ஆற்றலுக்கு எதிராக, நாம் நடத்தும் ஒழிப்புமுயற்சி பிசுபிசுத்துப்போய்விடுகிறது.

 

இன்னும் பெரிய அளவிலும், புதிய உத்திகளுடனும் இந்தப்போராட்டம் முடுக்கிவிடப்படவேண்டும். மக்களின் ஒத்துழைப்பும், இதில் முக்கியமானதாகும்.

மக்கள் தொடர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்திவந்தால் எந்த அரசு முயற்சிகளும் வெற்றிபெறா. கடுமையான சட்டங்களைக்கொண்டுவந்து கொசுவளர துணைசெய்வோருக்கு அபராதம் விதிக்கவேண்டும்.  முழுவீச்சுடன் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் கொசுஒழிப்பை நடைமுறைப்படுத்துதல் கட்டாயம்.

 

தீங்கிழைக்காத, பக்கவிளைவுகள் அற்ற கொசு விரட்டிகள் தயாரிக்கப்பட வேண்டும். இராணுவ ஆராய்ச்சி அமைப்பின் மனிதவளப்பிரிவு தலைமைப்பொறுப்பாளர் செலவமூர்த்தி என்பவர் ''அட்ராக்சிடைட்'' என்ற திரவத்தை உருவாக்கியுள்ளார். இதனை நீர் நிலைகளில் தெளித்தால் கொசுக்கள் தேடிவந்து முட்டையிடும். திரவத்தின் தன்மையால் முட்டைகள் அழிந்துபோகும். இதனை பெரிய அளவில் பயன்படுத்த அரசுகள் பரிசோதனை செய்துபார்த்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் கொசுத்தொல்லை மிகுதி. இதனை முறியடிக்க அசாமில் தேஸ்பூர் இராணுவ ஆய்வுக்கூடத்தில் மூலிகைக்கொசுவிரட்டியை அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். பக்க விளைவுகள் அற்ற இது சாதாரண கொசுவிரட்டிகளை விட ஆற்றல் மிக்கதாகச் செயல்படுகிறது. இன்றைய சாதா கொசுவிரட்டிகள் 5 மணிநேரமே வேலைசெய்யும். ஆனால் இதுவோ  12 மணிநேரம் செயல்படக்கூடியதாகும். இதுபோன்ற கண்டுபிடிப்புகளை முடுக்கிவிடுவதுடன் மக்களுக்கு மலிவு விலையில் அல்லது இலவசமாகக் கொசுவிரட்டிகளை அரசு வழங்க வேண்டும்.

 

உலக அளவில் கொசுக்களை ஒழிக்கவே முடியாதா? நிச்சயம் முடியும். ஒரே வீச்சில் கொசு இனத்தையே இல்லாமல் செய்துவிடும் உத்திகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த அவர்கள் விரும்பவில்லை. கொசு என்ற இனமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவது இயற்கையின் சமன்பாட்டில் சில விரும்பத்தகாத மாற்றங்களைத்தோற்றுவிக்கக்கூடும். கொசு பல உயிரனங்களுக்கு உணவாகிறது. இயற்கையின் செயல்பாட்டில் கொசுவுக்கும் பங்களிப்பு உண்டு. கொசு அழிக்கப்பட்டால் அந்த இடத்தை நிரப்ப காலப்போக்கில் கொசுவைவிட கொடிய உயிரினங்கள் தோன்றக்கூடும். கொசு என்பது தவிர்க்கமுடியாத் தீமை. எனவே முற்றிலுமாகக் கொசுவை ஒழிப்பதை விட மனிதர்களுக்கு இடைஞ்சலில்லா வண்ணம் கட்டுப்படுத்துவதே அறிவுடைமையாகும்.

                                                               (சிந்திக்க வாங்க: 18.09.10)