கிரிக்கெட் அவலங்கள்

204 உலக நாடுகள் கலந்துகொண்ட பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்ற  38 விளையாட்டுகளின் பட்டியலில் கிரிக்கெட் இடம்பெறவில்லை. நாம் கேள்விப்படாத ஆட்டங்களெல்லாம் ஒலிம்பிக்கில் இடம் பெற்றும் கிரிக்கெட்டை ஒரு பொருட்டாக மதிக்காமல் புறம்தள்ளுவதற்குக் காரணம் விளையாட்டுக்குரிய குறைந்த பட்ச தேவைகளான - மூன்று எஸ் கள் - ஸ்கில், ஸ்பீட், ஸ்டேமினா ஆகியன கிரிக்கெட்டுக்கு இல்லை என்பது உலகின் தீர்ப்பு.மேலும் உலகில் 8 நாடுகளில் மட்டுமே போட்டியிடத்தகுதிபெற்ற கிரிக்கெட் அணிகள் உள்ளன. கடந்த 100 ஆண்டுகளாக பிரிட்டன் இதற்கு வக்காலத்து வாங்கியும் சீந்துவாரில்லை. காரணம் பிரிட்டனின் அடிமைகளாக இருந்த பெரும்பாலான குட்டி நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் பிற விளையாட்டுகளோடு உயிர் வாழ்கிறது. பூமியெங்கும் மற்ற இடங்களில் வாழும் மக்களுக்குக் கிரிக்கெட் என்றால் என்னவென்றே புரியாது.

 

விளையாட்டு என்றே ஒப்புக்கொள்ளப்படாத ஒரு விளையாட்டைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நம் நாட்டின் பிரதமர், முதலமைச்சர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பேணிச்சீராட்டி வருகிறார்கள்.எதற்கு விடுமறை விடாவிட்டாலும் முந்திக்கொண்டு அரசுகள் கிரிக்கெட் மாட்ச் பார்க்க தொடர்விடுமுறைகள் நல்குகின்றன. நாட்டுப்பற்றை அளக்கும் அளவுகோலாகக் கிரிக்கெட் ஆட்டங்கள் சித்திரிக்கப்படுகின்றன.

 

உலகின் முன்னேறிய நாடுகள் ஒதுக்கித்தள்ளிய கிரிக்கெட்டில் இந்தியர்கள் மட்டும் வெறித்தனமாக ஈடுபாடு செலுத்துவது ஏன்? இந்தியாவின் வரலாற்று, சமூக, உளவியல், சமய போக்கிற்குக் கிரிக்கெட் என்ற விளையாட்டு ரெடிமேட் சட்டை போலப்பொருந்துவதே இதற்குக்காரணம். நேரப்பஞ்சம் நிறைந்த இந்த அவசர யுகத்தில் கிரிக்கெட் நாள்முழுவதும் விளையாடப்படுகிறது. விளையாடியும் முடிவில் யாருக்கும் வெற்றியோ,தோல்வியோ இல்லாமல் போகலாம். 'கடமையைச்செய்; பலனை எதிர்பாராதே' என்ற கீதையின் போதனை நம் சமயக்கலாச்சாரத்தில் ஊறிப்போயிருப்பதால் இந்நிலை ஏற்கப்படுகிறது. இந்தியர்கள் பாம்பாட்டியின் கண்கட்டி வித்தையை நடுத்தெருவில் கூட்டங்கூடி மணிக்கணக்கான ரசிப்பவர்கள். முடிவுதெரியாதவற்றில் மோகம் கொள்ளும் இப்போக்கு கிரிக்கெட்டிற்கும் பொருந்துகிறது. நமக்குப் பிடித்தமான, கூட்டங்கூடுவது, மகிழ்வுலா போவது இவற்றிற்கெல்லாம் கிரிக்கெட் ஸ்டேடியம் ஈடுகொடுக்கிறது. நேர உணர்வின்மை, மந்தப்போக்கு, தலைமை வழிபாடு, கேளிக்கையில் இடைவிடா ஈடுபாடு போன்ற நம் பிற்போக்குத்தனங்கள் அனைத்திற்கும் கிரிகெட் பொருந்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக 2,000  ஆண்டுகள் அடிமைச்சேற்றில் ஊறித்திளைத்த நமக்கு நாம் கடைசி அடிமையாக இருந்த ஆங்கிலேயர்களுக்கு இன்றும் விசுவாசம் காட்டும் அடிமை உணர்வு நீங்கவில்லை.

 

மதங்களைப்போல, திரைப்படம் போல, மதுவைப் போல  கிரிக்கெட் எல்லா உணர்வுகளையும் மழுங்கடிக்கும் போதையாக இருப்பதை விளக்க இன்றைய சூழலில் ஆதாரம் தேவையில்லை. ஈழத்தில் நிகழ்ந்த கொலைவெறித்தாக்குதலில் குழந்தைகளும். பெண்களும், முதியவர்களும் அன்றாடம் பலியாகிக்கொண்டிருந்த நிலையில் அங்கு இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஆடிய கிரிக்கெட் போட்டியில் ஃபோர்களுக்கும், சிக்சர்களுக்கும் இந்திய இளைஞர்கள் கைதட்டிக்கொண்டிருந்தனர். இன்று கிரிக்கெட், விளையாட்டு என்ற நிலையிலிருந்து மிகப்பெரும் வர்த்தகச்சூதாட்டமாகவும், ஊழலின் சுரங்கமாகவும் மாறிப்போயிருக்கிறது. பெரும் தொகை வாங்கிக்கொண்டு வெற்றியை முன்பே தீர்மானிக்கிறார்கள்; விளையாட்டு வீரர்கள் கைமாறிய காசுக்காக  கிரிக்கெட் ஆடுவது போல நடிக்கிறார்கள். இதை உணர்ச்சிப்பூர்வமாகப்   பார்க்கும் முட்டாள் பார்வையாளர்கள்  மேலும் முட்டாள்களாகி வருகின்றனர். அரசியல் வாதிகளின் பின்னணியில் இயக்கும் நிறுவனங்கள் இந்த முட்டாள்கள் வாங்கும் டிக்கெட்  பணத்தால் கொழிக்கின்றன.

 

கிரிக்கெட் போதை மற்ற வீரவிளையாட்டுகளை இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சம் காரணமாகவே சில நாடுகளும், ஒலிம்பிக் குழுவும்  கிரிக்கெட்டை எச்சரிக்கையாக ஒதுக்கி வருகின்றன. ஆசிய விளையாட்டுகளிலும், காமன்வெல்த் போட்டிகளிலும் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இச்சூழலில் நமக்குத்தெரிந்த ஒரே விளையாட்டாக கிரிக்கெட் மாறிப்போயிருப்பது பரிதாபகரமானது. கால்நூற்றாண்டுக்கு முன்பு கால்பந்து, ஆக்கி, கபடி,வாலிபால் முதலிய வீரவிளையாட்டுகளை எங்கும் காணமுடிந்தது.இன்று குக்கிராமங்களில் கூட கோலியும், பம்பரமும் மறைந்து கோவணம் கட்டிய சிறுவர்களும் சுவரில் மூன்று கரிப்பட்டைகளைப்போட்டு மட்டையடிக்கும் காட்சியைக்காண முடிகிறது. இந்நாட்டு இளைஞர்கள் பிற விளையாட்டுகளை ஆடவே தெரியாதவர்களாகி வருகிறார்கள். ஒலிம்பிக் போட்டிகளில் குட்டிதேசங்களைல்லாம் தங்கமும் வெள்ளியும் தட்டிச்செல்லும்போது இந்தியா தகரமெடலுக்குக்கூட சிலமுறை தேறாமல் போவற்குக்காரணம் கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தும் இந்திய விளையாட்டுக்கொள்கேயே. இப்படி இந்தியாவின் பல சீரழிவுகளுக்கும், விளையாட்டு வளர்ச்சியின்மைக்கும் காரணமாக விளங்கும் தீய சக்தியான கிரிக்கெட்டிற்குத் தடைவிதித்தால் என்ன தவறு?  பணமுதலைகளும் அரசியல்வாதிகளும் தம் சுயநலத்திற்காக முன்னிலைப்படுத்தும் கிரிக்கெட்டை ஒழிப்பது அவ்வளவு எளிதில்லை. இதனைச்சாதிக்க கிரிக்கெட்டை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஓர் அணியில் இணைந்து  கிரிக்கெட்போதை விடுதலை இயக்கம் காண்பது அவசியம்; அவசரம்.                          (சிந்திக்க வாங்க: 09.10.10)