காலநிலை மாற்றத்திற்குக் கடைசித் தீர்வு

மெய்ப்பொருள் காண்க:5            

 

கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் காலம் தொலைவில் இல்லை. ஆனால் இதைவிட ஆபத்தான ஒன்று பக்கத்தில் நெருங்கி வருகிறது. புவி வெப்பமாகிக் காலநிலை மாற்றம் ஏற்படுத்திவரும் பேராபத்தை நம்மில் இன்னும் பலரும் பெரிதாக உணர்ந்ததாகத் தெரியவில்லை

தொழில் புரட்சிக்கு முன் உலக சராசரி வெப்பம்140 C. இன்று 15.10 C ஆக உயர்ந்துள்ளது. ஒரு டிகிரி உயர்வுதானே பரவாயில்லை என்று எளிதாகத்  தள்ளிவிடுதற்கில்லை.

புவி வெப்பத்தைக் கட்டுப்படுத்தாவிடில் என்னவாகும்?  இன்னும் 10 C புவிவெப்பம் உயர்ந்தால் இந்தியாவில் 15 கோடி மக்கள் நீரின்றித் தவிப்பார்கள். இமயமலை உருகி அங்குள்ள பகுதிகள் சில காணாமல் போகும்.  20 C உயர்ந்தால் கடலோரப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். புதிய தொற்றுநோய்கள் உருவாகும். பவழப்பாறைகள் வெளுத்து மீன் வளம் மிகவும் குறையும். 30 C உயர்ந்தால் உலகில் 400 கோடி மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிப்பார்கள்.  மழையி்ன்றி வேளாண்மை முழுவதும் அழியும். 100 கோடி மக்கள் பட்டினியால் மடிவார்கள். சில இடங்களில் மிகுதியான மழையால் 500 கோடி மக்கள் பாதிக்கப்படுவர்.  40 C உயர்ந்தால் சென்னை, மும்பை, கல்கத்தா உள்ளிட்ட  கடலோர நகரங்கள்  பேரழிவைச் சந்திக்கும். சென்னையில் பரங்கி மலை உச்சி மட்டுமே கண்ணுக்குத் தெரியும். 50 C உயர்ந்தால் கங்கை பிரம்மபுத்திரா உள்ளிட்ட பேராறுகள் கூட இறந்துவிடும். லண்டன், நியூயார்க் முதலிய உலக நகரங்கள் கடலுக்கடியில் இருக்கும்.

மேற்கண்டது கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் வெளியிடப்பட்ட நீண்ட பட்டியலின் ஒரு சிறு பகுதியே ஆகும். முழுப் பட்டியல் இன்னும் அச்சம் தரக்கூடியது. இன்றைய நிலைமை தொடர்ந்தால் 2030 க்குள் 10 C உயர்வும், 2050 க்குள் 20 C  உயர்வும், 2100 க்குள் 50 C வரை உயர்வும் ஏற்படும் என்பதே உண்மையிலும் உண்மை என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

புவி வெப்பமடைவதைத் தீர்மானிப்பது பசுங்குடில் வாயுக்கள்தான். பசுக்குடில் வாயுக்கள் என்பவை கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஐட்ரோப்ளூரோ கார்பன், ஓசோன். நீராவி  முதலியனவாகும். கதிரவனிலிருந்து வெளியாகும் வெப்பம் பூமிக்கு வந்து அங்கு பயன்பட்டது போக மீதமுள்ள வெப்பம் அகச்சிவப்புக் கதிர்களாக எதிரொலிக்கும். அவற்றை வளி மண்டலத்தில் உள்ள பசுங்குடில் வாயுக்கள் உறிஞ்சி வைத்துக்கொள்ளும். அவை உறிஞ்சுவதன் அடர்த்திக்கேற்ப பூமியின் வெப்பநிலை மிகும். பசுங்குடில் வாயுக்கள் மட்டும் இல்லாவிட்டால் புவி வெப்பநிலை மைனஸ் 180 C ஆக இருக்கும். பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி  அதிகரிக்க அதிகரிக்கப் புவி வெப்பநிலையும் மிகுந்துகொண்டே செல்லும். இதுதான் புவி வெப்பமயமாதலின் அடிப்படை. தொழில் புரட்சிக்கு முன்பு வரை சராசரியாக 140 C இருந்த வெப்பநிலை  இப்போது சூடு பிடிக்கத்தொடங்கிவிட்டது.

மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நிலக்கரி, வாகனங்களை இயக்கப் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், சமையலுக்கான எரிவாயு முதலிய படிம எரிபொருள்கள்தாம் வெப்பநிலை மிகுவதற்கான முதன்மைக் காரணங்களாகும். இவை தவிர இறைச்சி உண்ணுதலின் வாயிலாக வெளிவரும் மீத்தேன் வாயுவாலும்,  காடுகளை அழிப்பதாலும்  கார்பன் டை ஆக்சைடின் அடர்த்தி அதிகரிக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன் வளிமண்டல கார்பன் டை ஆக்சைட் வாயுவின் அடர்த்தி 10 இலட்சத்திற்கு 280 ஆக இருந்தது. இப்போது 415 ஆக அதிகரித்திருப்பதால்தான் வெப்பநிலை 1.10C உயர்ந்துள்ளது. இதன் விளைவுகளைத்தான் நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இந்தப் பாதிப்புகளை 100 ஆண்டுகளுக்குப்பின்தான் மனித குலம் அனுபவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் போர்க்கால நடவடிக்கை எடுக்காவிட்டால் பூமியில் உயிர்கள்  அழிவது உறுதி என இப்போது காலநிலை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். வல்லுநர்கள் கூற்று உண்மை என அண்மை நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.

கடந்த கோடையில் குளிர் நகரமான பாரிசில் 42.60 C வெப்பம் தாக்கியுள்ளது. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையே 950 மிமீ தான். அதே அளவு மழை அடுத்தடுத்து இரு நாள்களில்  ஊட்டியை அடுத்த அவலஞ்சியில் பெய்திருக்கிறது. தமிழகத்தைக் கடந்த 7 ஆண்டுகளில் தானே, வர்தா, ஓகி, கஜா ஆகிய 4 புயல்கள் தாக்கியுள்ளன. ஒடிசா மாநிலத்தை கடந்த ஏப்ரலில் பானி புயல் 43 ஆண்டுகளுக்குப்பின் கோடையில் தாக்கியது.

கால நிலை மாற்றத்தின் ஆபத்தை உணர்ந்தே ஐ.நா காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையின் 26 வது மாநாடு(COP26)  ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்றது. 197 நாடுகள் பங்கேற்ற அந்த மாநாடு 31.10.2021 தொடங்கி 13.11.21 வரை நடைபெற்றது. 2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி  2030 க்குள் உலக சராசரி வெப்பநிலையை 1.50 C க்குள் கட்டுப்படுத்துவதற்கு கிளாஸ்கோ  ஒப்பந்தம்  இலக்கு நிர்ணயித்துள்ளது. அப்படி வேண்டுமென்றால், 2030ஆம் ஆண்டுக்குள் பசுங்குடில் வாயு வெளியீட்டை 45% கட்டுப்படுத்தியாக வேண்டும். 2050ஆம் ஆண்டுக்குள் பசுங்குடில் வாயு வெளியீட்டை ஒட்டுமொத்தமாக நிறுத்தி சுழி நிலைக்குக் (Net Zero Emissions) கொண்டுவர வேண்டும்.      ஆனால் உலக நாடுகள் ஆரோக்கியமான அந்தப் பாதையில் செல்லவில்லை என்பதே உண்மை.  இதனைச் செயல்படுத்த பெட்ரோலிய எரிபொருட்கள், நிலக்கரி ஆகியவற்றின் பயன்பாட்டைக் காலக்கெடு நிர்ணயித்து நிறுத்தவேண்டும். ஆனால் இது குறித்த கிளாஸ்கோ மாநாட்டுப் பரிந்துரைகளை இந்தியா பெரிய அளவில் எதிர்த்தது. ஈரான், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் எதிர்த்தன. இந்திய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பரிந்துரையின் பேரில், திட்டவட்டமான எந்த உத்தரவாதமும் வழங்காத ‘படிப்படியாகக் குறைத்துக்கொள்வோம்’ என்கிற வார்த்தை கிளாஸ்கோ இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. புவிவெப்பம் மிகுந்தால் மூழ்கும் ஆபத்தில் உள்ள. சிறு தீவு நாடுகள் இதனால் பெரும் ஏமாற்றமடைந்தன.  

 

பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைப்பதாக நாடுகள் கொடுத்துள்ள வாக்குறுதிகளின்படி பார்த்தாலும்கூட நூற்றாண்டின் இறுதிக்குள் உலகம் கூடுதலாக 2.40 C வெப்பமடைந்துவிடும் என்று  ‘கிளைமேட் ஆக்‌ஷன் டிராக்கர்’ (CAT) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கணித்துள்ளது.  இது மிகப் பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தும் என அறிவியல் ஆய்வுகள் ஏற்கெனவே எச்சரித்துள்ளன.

 

பசுங்குடில் வாயு வெளியேற்றத்திற்குக் காரணமான செயல்பாடுகளை மாற்றும் தீவிர முயற்சிகளை  உலகநாடுகள் பலவும் செயல்படுத்துவதாக இல்லை. உலகத்தலைவர்கள் பலரும் இதில் அக்கறை காட்டவும் இல்லை. மனிதன் இந்தப் புவியில் வாழ்வதையே கோள்விக்குறியாக்கும்   இப்பிரச்சினையின் முன் உலகின் எல்லாப் பிரச்சினைகளும் சிறியதாகும். இதற்குத் தீர்வுதான் என்ன?

 

இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் அறிவியலாளர் ஸ்டிபன் ஹாக்கின்ஸ் காலநிலை மாற்றத்தின் பேராபத்திலிருந்து மனித இனத்தை விடுவிக்க இறுதித் தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளார்

 

காலநிலை மாற்றத்தால் உலகிற்கு பெரிய கேடு வந்துவிடாது என்று கவனக்குறைவாக இருப்பவர்களுக்கு அவர் கேலியாக விடுக்கும் செய்தி: ‘’காலநிலை மாற்றத்தை ஏற்காதோரை அடுத்த முறை சந்தித்தால் அவர்களை வெள்ளிக் கோளுக்குப் போகச்சொல்லுங்கள். கட்டணத்தை நான் ஏற்கத் தயார்’’.  இன்னும் 200 ஆண்டுகளில் வெள்ளியின் நிலைமையை இந்த உலகம் அடையும். அங்கு 4600 C வெப்பநிலையுடன் , 300 கி.மீ/மணிக்கு வேகத்தில் புயல்காற்று வீசிக்கொண்டிருக்கிறது. 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உயிர்கள் வாழும் தகுதியுடன், நீர் நிலைகளுடன் வெள்ளி இருந்தது. பசுங்குடில் வாயுக்களின் வெப்பத்தால் கடல்களே உறிஞ்சப்பட்டுவிட்டன.

அரசியல் வாதிகளும் மக்களும் வரப்போகும் ஆபத்தை உணரா நிலையில் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற, அடுத்த 100 ஆண்டுகளுக்குள் இன்னொரு புதிய உலகிற்கு மனித சமூகம் குடியேறுவதைப்பற்றி இப்போதே திட்டமிடவேண்டும் என்பதே அவரின் அறிவுறுத்தலாகும்.

 

ஸ்டீபன் ஹாக்கின்ஸ்:புதிய உலகிற்குப் பயணம் (Stephen Hawking: Expedition New Earth) என்ற தலைப்பில் அவரின் இந்த அறிவுறுத்தலை விளக்கும் குறும்படத்தை பிபிசி வெளியிட்டுள்ளது.  புகழ்பெற்ற டெஸ்லோ நிறுவன அதிபர் எலன் மஸ்க், அலிபாபா நிறுவன அதிபர் ஜாக் மா ஆகியோருடன் இணைந்து இந்தச் செய்தியை அவர் உலகிற்கு வழங்கியுள்ளார்.

 

காலநிலை மாற்றத்தால் மட்டுமன்றி வேறு பல காரணங்களாலும் இந்த உலகம் பல ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளது. எனவே விண்வெளியில் பயணிக்கப் புதிய வகை தொழில்நுட்பத்தை நாம் கண்டறிந்தாக வேண்டும் என்பது இவரின் வற்புறுத்தலாகும். அதற்கு  முன்னோடி சோதனை முயற்சியாக 2016 இல் ஸ்டிபன் ஹாக்கின்ஸ்,  ரஷ்யக் கோடீஸ்வரர்  மார்க் சூகர்பர்க், தொழிலதிபர் யூரி மில்னர் ஆகியோர் இணைந்து ப்ரேக்த்ரூ ஸ்டார்ஷாட்(Breakthrough Starshot) என்ற திட்டத்தை 10 கோடி டாலர் செலவில் உருவாக்கியுள்ளனர். அஞ்சல் தலை அளவேயுள்ள ஒரு விண்கலத்தை உருவாக்கி அதனை ஒளியின் 20% வேகத்தில் செலுத்தி நமக்கு அருகிலுள்ள – அதாவது 4.37 ஒளியாண்டு தொலைவில்(ஒளியாண்டு- 9,46,000 கோடி கிமீ) உள்ள-  ஆல்பா சென்டாரி என்ற  இன்னொரு விண்மீன் குடும்பத்தின்  அருகே   சென்று  அங்குள்ள கோள்களில் குடியேறும் வாய்ப்புகள் பற்றி ஆய்வதே இதன் நோக்கமாகும். இந்தப் புதிய வகை விண்கலம் ஆல்பா சென்டாரியை அடைய 20 ஆண்டுகள் ஆகும். ஆனால்  செவ்வாயை 1 மணிநேரத்திலும்  புளூட்டோவைச் சில நாள்களிலும் சென்றடைய முடியும். செவ்வாயில் நாம் குடியேறுவதே அடுத்த தேர்வு என்று ஹாக்கின்ஸ் கருதினார். 2018 இல் அவர் மறைந்தாலும் 2036 அளவில் இந்த விண்கலம் 500-1000 கோடி டாலர் செலவில் செலுத்தபட முயற்சிகள் நடைபெறுகின்றன.

 

பூமியைப்போன்ற சூழலும் மனிதர்கள் வாழும் வசதிகளும் கொண்ட 20 கோள்களை நாசா கண்டறிந்துள்ளது. பல ஒளியாண்டு தொலைவில் உள்ள இந்தக் கோள்களுக்குப் போவது இன்று சாத்தியமாக இல்லை. அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள் நாளை இதனைச் சாத்தியமாக்கலாம். இந்தப் பூமியை  அழிவிலிருந்து மீட்கும் கடைசித் தீர்வு இதுதான் என்பதே மெய்பொருளாகும்.