மெய்ப்பொருள் காண்க:6
உலகெங்கும் ஊழல் உள்ளது. ஆனால் இந்தியாவில் காணப்படும் ஊழல் தனி வகையானது. தவறானவற்றைப் பெற பெரும்பாலான நாடுகளில் இலஞ்சம் தரப்பட்டு ஊழல் நடைபெறுகிறது. இங்கு நியாயமானவற்றை உரிய முறையில் பெறவே இலஞ்சம் தரும் நிலை நிலவுகிறது என்பதே மிகவும் கவலைக்குரியதாகும்.
அடிப்படை உரிமையான மின் இணைப்பையோ, குடிநீர் இணைப்பையோ, பத்திரப் பதிவையோ, வாகன உரிமத்தையோ இலஞ்சம் வழங்காமல் இயல்பாக விண்ணப்பித்து உரிய நேரத்தில் பெற்றேன் என்று எத்தனை பேரால் சொல்ல முடியும்?
சராசரி குடிமகன் நம் நாட்டில் ஊழலால் பாதிக்கப்பட்டதுடன் தன்னளவில் ஊழலைச் செய்வதற்கும் உடன்படுகிறான். இலஞ்சம் வாங்கிச் சிறை சென்றால், இலஞ்சம் கொடுத்துத் தன்னை விடுவித்துக்கொள்கிறான். ஊழல் புரிபவரைக் குறை சொல்பவர் வாய்ப்புக் கிடைத்தல் தாமும் ஊழல் செய்யத் தயங்குவதில்லை. இரு கைகள் தட்டியே இங்கே ஊழல் ஒலி கேட்கிறது என்பதே உண்மை.
கூசாமல் ஓட்டுக்குப் பணம் வாங்குவது, குறுக்கு வழிகளில் காரியங்களைச் சாதித்துக்கொள்ளவது, வரிசையில் நின்று பெட்ரோல் போடும்போது கூட வரிசையை மீறி முன்னேறுவதைத் திறமையாகக் கருதுவது, ஊழல் செய்யத் தெரியாதவனைப் பிழைக்கத்தெரியாதவன் என்று முத்திரை குத்துவது ஆகியன நாம் அன்றாடம் காணும் காட்சிகளே. அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமல்ல இறைவனுக்கே இலஞ்சம் கொடுத்தால் தான் கேட்டது கிடைக்கும் என்ற பழக்க மனஉந்துதல் பக்தர்களுக்கு ஏற்படுவதால் புகழ்பெற்ற கோயில் உண்டியல்கள் நிரம்பி வழிகின்றன. எனவே இந்தியாவில் ஊழல் வாழ்க்கைமுறையாகிவிட்டது. மரியாதைக்குரியவர்களே ஊழல் செய்வதால் ஊழல் கூட இங்கு மரியாதைக்குரியதாகிவிட்டது. இந்திய மாநில முதல்வர்கள் சிலரும் அரசியல்வாதிகள் பலரும் ஊழலுக்காகச் சிறையில் அடைக்கப்படுகின்றனர், எனினும் அவர்கள் மீண்டு வந்து தம் செல்வாக்கைப் புதுப்பிக்கின்றனர். ஊழல் அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிப்பதில்லை. மாறாக ஆட்சியை அவர்களுக்கே வழங்குகிறார்கள்.
ஊழல் வாழ்க்கைமுறையாகிப்போனதால் ஊழல் செய்யமால் ஒழங்காகச் செயல்படும் அதிகாரிகள் ஊழல் அரசியல் வாதிகளால் தண்டிக்கப்படுகிறார்கள். ஊழலை ஒழிக்க முயலும் ஊடகங்களும், அமைப்புகளும், தனிநபர்களும் பழிவாங்கப்படும் செயல்கள் தொடர்கின்றன.
உலக அளவில் ஊழல் பட்டியல் வெளியிடும் டிரான்ஸ்பெரன்சி இண்டர் நேஷனல் என்ற அமைப்பு 2020 இல் வெளியிட்ட அறிக்கையின்படி ஊழல் குறைந்த நாடாக 88 மதிப்பெண்பெற்று முதலிடத்தில் நியூசிலாந்தும் கடைசி நாடாக சோமாலியாவும் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 40 மதிப்பெண் பெற்று 86 வது இடத்தையே பிடித்துள்ளது. நம்மைவிட ஊழல் குறைந்த நாடுகளாக, கானா, அர்ஜன்டீனா, சீனா , தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகள் உள்ளன. (காண்க;https://www.transparency.org/en/cpi/2020/index/nzl)
மாநிலங்களில் மராட்டியமும், நகரங்களில் பெங்களூரும் ஊழலில் முதலிடம் வகிக்கின்றன.
ஊழல் இந்த மண்ணுக்குப் புதிதன்று; இந்திய வரலாறு முழவதும் அது பரவிக்கிடக்கிறது. மனுவும், கௌடில்யரும் புத்தரும் இலஞ்சம் பெறுவோர்க்கு வழங்கும் தண்டனை பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். மகா பாரதத்தில் நீதிபதிகளே இலஞ்சம் வாங்கியதற்கான சான்று உள்ளது. பிரகஸ்பதி இளவரசனிடம், தாம் நீதிபதிக்கு இலஞ்சம் வழங்கியும்கூட மோசமாக நடத்தப்பட்டதாகவும், தமக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கபட்டதாகவும் முறையிடுகிறார். எல்லைக்காவலர்கள் அப்பாவிப்பயணிகளை மிரட்டி, பின் சில்லறை பெற்றுக்கொண்டு வழிவிட்டதாகக் காளிதாசர் கூறுகிறார்( மாலவிகாக்கினி மித்திர காண்டம்:5). சுளரா என்ற நாட்டிய மாது தான் காதலித்த கொள்ளைக்காரனைத் தண்டனையிலிருந்து காப்பாற்ற தன் வாழ்நாளில் ஈட்டிய அத்தனை பணத்தையும் உயர் அதிகாரிக்கு இலஞ்சமாக வழங்கியதை வடமொழி ஜடகங்கள் குறிப்பிடுகின்றன.
நுழைவாயில்களைத் திறக்க காவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்தே பல நகரங்கள் கைப்பற்றபட்டதாக இந்திய வரலாறு கூறுகிறது. இந்தியக் கோட்டைகளைக் கைப்பற்றிய வரலாற்றில் நிதி பரிமாற்றம் நிறைய நிகழ்ந்துள்ளது. முகலாயர்கள் போரில் வட இந்தியர்களை வென்றதற்கு ஊழலுக்கு உள்ளான அமைச்சர்களும் படைத்தலைவர்களுமே பல நேரங்களில் காரணமாகியுள்ளனர். கிருஷ்ணதேவராயரின் அமைச்சர்களே ஊழலுக்கு இலக்காகி அவர் மகனையே நஞ்சூட்டிக்கொன்றனர். 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் இங்குள்ள பல அதிகாரிகள் ஊழல் செய்து கைது செய்யப்பட்டு லண்டன் கோபுரத்தி்ற்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவில் நடைபெற்ற ஊழல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகி அவ்விவாதங்கள் அறிக்கை நூலாகவே வெளியிடப்பட்டன.
ஊழலை நீக்கும் முயற்சிகளாகவே உலகில் எங்குமில்லாத அளவுக்கு மிகுதியான சமயங்களும் அறநூல்களும் இங்கு தோன்றின. முன்னேறிய நாடுகளில் ஊழல் இருப்பினும் பொதுவெளியில் தனிமனித அடிப்படை நேர்மை பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவதால் நாட்டின் வளர்ச்சி தடைபடுவதில்லை. இந்தியாவில் தனிமனித அடிப்படை நேர்மை கேள்விக்குறியதாக இருக்கிறது என்பது கசப்பான உண்மையாகும். இந்த ஊழலால் இந்தியா ஆண்டுக்கு இழக்கும் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு ரூ3,75,000 கோடி என மதிப்பிடுகின்றனர். இதைவிடப் பலமடங்கு மிகுதியாக, கோடான கோடிக்கணக்கில் நிலக்கரியிலும், கிரானைட்டிலும், மணலிலும், பிற தாதுப்பொருள்கள் எடுப்பதிலும் சாலை போடுவதிலும் இந்தியா இழப்பிற்கு மேல் இழப்பைச் சந்திக்கிறது
ஊழல் என்பது இலஞ்சம்(Bribe) மட்டுமன்று. பாரபட்சம் காட்டல்(Nepotism), மற்றவர் தொகையை எடுத்துப் பயன்படுத்தல்(Misappropriation), பதவியை வைத்துத் தவறான செயல்புரிய ஆதரவளித்தல்(Patronage) முதலியனவும் இதில் அடங்கும்.
இன்று ஊழலுக்கு எதிரான சட்டங்களும் அமைப்புகளும் பரப்புரைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஊழலுக்கு எதிராக இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1860, வருமான வரிச் சட்டம் வழக்குப் பிரிவு, 1961, ஊழல் தடுப்புச் சட்டம், 1988, இரவல் பெயரில் பரிமாற்றங்களைத் தடுப்பதற்கு, இரவல் பெயரில் பரிமாற்றங்கள் (தடுப்பு) சட்டம், 1988. பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் முதலியன உள்ளன.
ஊழலுக்கு எதிராக அரசு நிறுவனங்களும் அரசு சாராத நிறுவனங்கள் பலவும் செயல்பட்டே வருகின்றன. ஊழலுக்கு எதிரான இரண்டாவது விடுதலைப்போர் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம், 2020 க்குள் இந்தியாவை ஊழலிலிருந்து விடுவிப்போம் என்று அப்துல் கலாம் இளைஞர்களைச் சபதமிடச்செய்த பெருமுயற்சி, ஊழலுக்கு எதிரான எழுச்சியை ஏற்படுத்திய திரைப்படங்கள்- இந்தியன்(1996), முதல்வன்(1999), ரமணா(2002), அந்நியன்(2005), அப்பாவி(2011), முதல்வர் மகாத்மா( 2012) முதலியன ஏற்படுத்திய மாற்றங்கள் கடலில் பெய்த மழையாகிப் போயினவோ?
இவ்வளவு நிகழ்ந்தும் 2015 இல் உலக ஊழல் பட்டியலில் 76 வது இடத்தில் இருந்த இந்தியா 2020 இல் மோசமாக 86 வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
.ஊழல் என்ற கொடிய விலங்கை வேட்டையாடச்சென்ற பலரும் ஒழுங்காகத் திரும்பிவரவில்லை என்பதையே இது காட்டுகிறது.
எந்தத் துறையையும் விட ஆபத்தான முறையில் நீதித்துறையிலும், மருத்துவத்துறையிலும், கல்வித்துறையிலும் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஊழல்கள் சகிக்கமுடியாதவை; வேரிலே வேல் பாய்ச்சுபவை. மரவீட்டில் புகுந்த கரையான்களான இவை ஒழிக்கப்படும் வரை இந்தியா முன்னேறிய நாடாக மார்தட்டவே வழியில்லை.
ஊழலுக்குக் காரணமாக- பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகம், பெறவேண்டிய உரிமைகளைப் பெறத் தேவையற்ற இழுத்தடிப்பு, தேர்தலுக்காக முதலாளிகள் வழங்கும் நன்கொடைகளும் அதனால் பெருகும் இலஞ்ச லாவண்யம் முதலிய பலவற்றைப் பலரும் ஆய்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். தீர்வுகளையும் முன்வைக்கின்றனர் ஆனால் காலங்காலமாக ஊழலில் திளைத்த இந்த மண்ணில் இவற்றை நடைமுறைப்படுத்துவதே பிரச்சினை ஆகிறது. ஏனெனில் ஊழலால் கிடைக்கும் பலன் கவர்ச்சிகரமானதாகவும் பிடிபட்டால் கிடைக்கும் தண்டனை சிறிதாகவும், பணமிருந்தால் தப்பமுடிவதாகவும் உள்ளது.
அடிப்படையில் சுயநலமும் பேராசையுமே ஊழலின் தூண்கள். இதனைக் கருத்தில் கொண்டு பிற நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வெற்றிகண்ட இந்த 3 வழிகளை நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும். 1) கல்விநிலையங்கள் உயர்ந்த அறமதிப்பீடுகளை மாணவர் மனதில் ஆழப்பதியவைப்பதுடன் மதிப்பீடுகளுக்கான பயிற்சியையும் கட்டாயமாக வழங்கவேண்டும். 2) யாரும் ஊழல் செய்ய அஞ்சும் வண்ணம் தண்டனைகளைக் கடுமையாக்கவேண்டும் 3) அரசியல்வாதிகள், அதிகாரிகள் தலையிட முடியாத வெளிப்படையான மின் செயல்பாட்டை எல்லாத்துறையிலும் நடைமுறைப்படுத்தவேண்டும்.
இன்னல் எது வரினும் ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தியே தீருவேன் என்று வீறு கொண்டு செயல்படும் அதிகாரிகள் இன்னும் உள்ளனர். அவர்களின் போற்றத்தக்க செயல்பாடு ஆறுதலளிக்கிறது. எந்த எதிர்ப்பையும் கண்டு அஞ்சாது ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் அமைப்புகளும் ஊடகங்களும் உயிரோட்டத்துடன் உள்ளன என்பது நிறைவளிக்கிறது. தமிழகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள தலைமை ஊழலற்ற ஆட்சியை நடத்த முயன்று வருவதும் நம்பிக்கையளிக்கிறது
ஊழல் ஒளிருமா ? ஒழியுமா? என்ற கேள்விக்கு ஒழியும் என்ற நல்ல பதிலைக் கேட்கும் நிலை விரைவில் வரவேண்டும்.
அதற்காக நாம் சளைக்காமால் ஊழலுக்கு எதிரான போரை இன்னும் தீவிரமாகத் தொடரந்து நடத்தினால்தான் அடுத்த தலைமுறையை இந்த பரம்பரை நோயிலிருந்து காப்பாற்றமுடியும் என்பதே மெய்ப்பொருளாகும்.