நாடெங்கும் நாய்த்தொல்லை

குமுறும் நெஞ்சம்:30            

 

இந்தியா முழுவதும் மூன்றரைக் கோடி தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் ஆண்டுக்கு 50,000 பேர்கள் ராபீஸ் நோயால் மடிகின்றனர். உலகின் மொத்த நாய்கடி சாவுகளில் 36% இந்தியாவில்தான் என்பது நமக்குத் தலைகுனிவாகும்.

மாலை, இரவு நேரங்களில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் போன்றோர் பின்னால் நாய்கள் வந்து துரத்திக் கடிப்பதும் இரவு தூங்கவிடாமல் நாய்க்கூட்டம் கோரமாக ஊளையிடுவதும், தமக்குள் சண்டையிட்டு அருவருக்கும் செயல்களில் ஈடுபடுவதும்,   பல இடங்களில் மலம் கழித்துச் சாலை ஓரங்களில் நடந்துசெல்வோரை முகம் சுழிக்கவைப்பதும், குப்பைகளைக் கிளறித் தூய்மைக்கேடு விளைவிப்பதும் கேட்பாரற்று உள்ளன.

இந்தப் பேரவலத்தைக் கண்டும் காணாமலும் நாய் ஆர்வலர்களும், மத்திய அரசும் இனியும் வேடிக்கை பார்ப்பது சகிக்கமுடியாததாகும். இந்தியாவின் ஒவ்வொரு நகரமும் தெருக்களில் திரிந்திவரும் நாய்களால் நாள்தோறும் அனுபவித்துவரும் இன்னல்கள் பற்றி எல்லா ஊடகங்களிலும் பாதிக்கப்பட்டோரின்  கோபக்குமுறல் ஓங்கி ஒலித்த வண்ணம் உள்ளது.

மேனகா காந்தியின் அழுத்தத்தால் போடப்பட்ட விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான உத்தரவு தன்னிச்சையானது என்றே பலரும் கருதுகின்றனர்.  நடைமுறைக்கு முற்றிலும் பொருந்தாத, இந்தக் கடும் உத்தரவால் மிகுதியாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக 2.5  இலட்சம் தெரு நாய்கள் கொண்ட கேரளா உள்ளது. 2015-16 காலக்கட்டத்தில் ஒரு இலட்சம் பேர் நாய்களால் தாக்கப்பட்டுள்ளனர். உச்ச கட்டமாக வர்கலா என்ற ஊரில் வீட்டுத் தாழ்வாரத்தில் அமைதியாகப் படுத்துறங்கிக்கொண்டிருந்த ராகவன் என்ற 90 வயது முதியவரைத் தெரு நாய்க்கூட்டம் கடித்துக்குதறிக் கொடூரமாகக் கொன்றது. இதன் விளைவாக ஏற்கனவே நாய்களால் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் கொதித்தெழுந்தனர். தெரு நாய்களுக்கு எதிரான போரே பல அமைப்புகளால் அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்புகள் நாய்களைக் கொல்ல  குழந்தைகளுக்குப் பயிற்சியே அளித்தன. நாய்களை மிகுதியாகக் கொல்லும் அரசு ஊழியர்களுக்குத் தங்கக்காசு உட்பட்ட ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. கொச்சௌசப் சிட்டிலபிள்ளை, ஜோஸ் மாவேலி முதலியோர்  தெருநாய் ஒழிப்பு இயக்கங்கள்  தொடங்கி இந்தச் செயலுக்காக நீதிமன்றத்தினால் தண்டனைக்கும் உள்ளாயினர்.

கேரளத்தில் மட்டுமன்றிக் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எல்லா மாநிலங்களிலும், பெருநகரங்களிலும் தெருநாய்களால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை பெருகி வருகிறது.  

கடந்த 20 ஆண்டுகளில் மும்பை நகரத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களை விட நாய்களால் மாண்டவர்களே மிகுதி. ஐதராபாதில் 8.4 இலட்சம், அகமதாபாதில் 2.15 இலட்சம் தலைநகர் டில்லியில் 1.9  இலட்சம், மும்பையில் ஒரு இலட்சம், கல்கத்தாவில் 80,000, இந்தூரில் 80,000, ஶ்ரீநகரில் 41,000, அமிர்தசரசில் 40,000, புவனேசுவரில் 28,300 என்று இதுபோல எல்லா இந்திய  நகரங்களிலும் தெருவில் திரியும்  நாய்கள்  ஒழிக்கப்படாமல் உள்ளன.

சென்னையில்  2014 இல் 82,458 ஆக இருந்த தெரு நாய்களின் எண்ணிக்கை 57,366  ஆக சில ஆண்டுகளில் குறைக்கப்பட்டதாக மாநகராட்சி அறிவித்தும் இப்போது மீண்டும் எண்ணிக்கை கூடியதாகத் தெரிகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 8 ஆண்டுகளில் 2.56 இலட்சம் பேருக்கு நாய்கடி பாதிப்பால் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஒரு கி.மீ க்கு 8.87 என்ற விகிதத்தில் தெருநாய்கள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வார்ட்டு பகுதியில் கூட நாய்கள் மேய்வதால் நோயாளிகள் அஞ்சுவதாகப் புகார் எழுந்துள்ளது. ‘ஒரே ஒருநாள் இரவு 11 மணிக்கு மேனகா காந்தியை வேலூர் சத்துவாச்சாரி தெருவில் நடக்கச் சொல்லுங்கள். அப்போது அவர் போட்ட சட்டத்தால் மனிதர்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகிறார்கள் என்பது அவருக்குப் புரியும்’ என வேலூரிலிருந்து கூக்குரல் எழுப்புகிறார் திரு எஸ்.ராமன் என்ற இணைய வாசகர். இதுபோல தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் நாய்ப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

நாய் கடித்தால்தான் ராபீஸ் நோய் வரும் என்றில்லை. அதன் உமிழ்நீர் பட்டாலும், நகத்தால் பிராண்டினாலும் கூட வரலாம். நம் உடலில் சிறு கீரல் இருந்து அதில் நாயின் உமிழ்நீர் பட்டாலும் உடனே நோய் தொற்றும். இந்தியாவில் 2  நிமிடத்திற்கு ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். வெறி நாய் என்பதைக் கண்டறிவது எப்படி? கடும் வெயிலில் அலைவதாலும், வீசி எறியப்படும் பிராய்லர் கோழிக் கழிவுகளை உண்பதாலும் நாய்களுக்கு வெறி பிடிப்பதாகக் கூறப்படுகிறது. வெறிநாய் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும். நாக்கு அளவுக்கு அதிகமாக வெளியே தள்ளிக்கொண்டிருக்கும். அதன் வாயிலிருந்து எச்சில் ஒழுகும். இதர நாய்கள் அந்த நாயைக் கடிக்காது. ஆனால் வெறி நாய் மனிதன், ஆடு, மாடு, பூனை என்று எதையும் விட்டுவைக்காமல் கடிக்கும். கடிபட்டவருக்கு 10 நாள்களுக்குள் எந்தப் பாதிப்பும் தெரியாமல் இருக்கலாம். 30-60 நாள்களுக்குள் கொடிய விளைவுகள் தோன்றலாம். வாயில் எச்சில் ஒழுக நாயைப் போலவே குரைத்துத் தண்ணீரைக் கண்டால் அலறித்துடித்து, இறுதியில் வெறிகொண்ட நாயாகவே மாறி ஹைட்ரோ போபியாவால்  இறக்கும் கொடுமை எந்த மனிதருக்கும் நேரக்கூடாததாகும். இந்த நோய் முற்றினால் அதனைக் குணப்படுத்துவதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தெருநாய் கடித்தால் அது வெறிநாயா இல்லையா என்பதைக் கண்டறிவது கடினம். எனவே நாய் கடித்தவுடன் கடிவாயைச் சோப்புபோட்டுக் கழுவிக் கிருமி நாசினி (டிஞ்சர் அயோடின்/ஸ்பிரிட்) தடவி, கட்டுப்போடாமல் மருத்துவமனைக்குச் சென்று உடனே வெரோ ராப் (Vero Rab) என்ற  தடுப்பூசியை 6 முறை போட்டுக்கொள்ளவது அவசியம்..

இத்தகைய பயங்கரத்தையும் கொடூரத்தையும் விளைவிக்கும் வெறிநாய்களைக் கொல்வதற்கு விலங்குகள் பாதுகாப்புச்சட்டம் தடையாக இருப்பது விந்தையான வேதனை.  சீவகாருண்யம் பேசும் விலங்கு ஆர்வலர்கள் நாய்க்காகவும், உணவுக்காகவும் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் போன்றவை கொல்லப்படுவதற்கு எந்த எதிப்பும் தெரிவிக்காமல் அனுமதிப்பது எப்படி? நாயை விட எந்த விதத்தில் இவை கீழானவை?

நாய்கள் நம் தமிழ்மரபில் பெரும்பாலும் கீழாகவே பார்க்கப்பட்டுள்ளன. யூத இசுலாமிய சமயங்களில் நாய் தூய்மையற்ற விலங்காகவே விலக்கிவைக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு 74 சவுக்கடி தண்டனை வழங்கப்படுகிறது. நாய்களைப் போற்றிப் பாதுகாப்போர் ஒரு புறம் இருக்க உலகின் 14 நாடுகளில் நாய்கறி உண்போர் உள்ளனர். ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஓநாய்களைப் பழக்கி நாயினமாக மக்கள் வளர்த்தெடுத்திருப்பது டிஎன்ஏ  ஆய்வின்வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேட்டைக்கும், வழிகாட்டுவதற்கும், காவலுக்கும், மேய்ப்பைக் கண்காணிக்கவுமே பயன்படுத்தப்பட்ட நாய்கள், மேலைநாட்டுத் தாக்கத்தால் அண்மையில்தான் மிகுதியாகச் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மேல் அன்புகாட்டினால்  அவை நன்றியோடு இருப்பது மறுக்கமுடியா உண்மைதான். நாய் நம் வீட்டில் பிரிக்கமுடியாத உறவாக மாறி நம்மோடு ஒன்றித்து வாழும் அனுபவம் நன்றே. வீட்டில் பத்திரமாக நாய் வளர்ப்பதை நாம் கண்டிக்கவில்லை. போற்றுகிறோம். ஆனால் மற்றவர்களுக்கு அது துன்பம் விளைவிப்பதைத்  தடுக்கத் தவறும்போதே பிரச்சினை ஏற்படுகிறது. அமெரிக்காவில் எழரை கோடி நாய்கள் இருந்தும் அவை தெருவில் திரிந்தால் உடனே கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. தெருநாய் ஒன்று கூட உலவாத நாடு  என்ற நற்பெயரை ஆலந்து எடுத்துள்ளது. மேலை நாடுகளெங்கும் நாயைத் தெருவில் நடத்திச்செல்வோர் அது மலம் கழித்தால் அவர்களே அதனை அகற்றியாகவேண்டும். ஆனால்  இங்கு சில நாய்ப்பிரியர்கள் தம் வீட்டுச் செல்ல நாய்களை மற்றவர்கள் வீட்டுக்குமுன் அல்லது  சாலை ஓரங்களில்  சிறுநீர், மலம் கழிக்கவைக்கும் அநாகரிகம் அன்றாடம் காண்பதாகும்.

1989 இல் வி.பி. சிங்கிடமிருந்து  வலியுறுத்திப்பெற்று மேனாகாவின் விலங்குப்பிடியில் சிக்கியதன் விளைவாக, நடைமுறைக்கு உதவாத விதிகளைப் போட்ட விலங்குகள் நலவாரியம் (AWBI), கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை பற்றியோ, அவற்றிற்கு இதுவரை போட்ட தடுப்பூசிகள்  பற்றியோ எந்தப் புள்ளிவிவரத்தையும் பொறுப்புடன்  வெளியிடவில்லை. இன்னும் 10% நாய்களுக்குக் கூடத் தடுப்பூசிப் போடப்படவில்லை என்பதே உண்மை.  சுற்றுச்சூழல் அமைச்சகம் நாய்களுக்குக் கருத்தடை செய்ய முடியாததன்  படுதோல்வியைச்  சுட்டிக்காட்டியதோடு இதற்காகப் பெற்ற பெருந்தொகையை விலங்கு நலவாரியத்தின் நட்பு அமைப்புகள் சில தவறாகப் பயன்படுத்தியதையும் வெளிப்படுத்தியுள்ளது. ஒழுங்காகத் தண்ணீர் கொடுக்கவே தத்தளிக்கும் நகராட்சிகள் நாய்களுக்குத் தடுப்பூசி போட நிதி ஒதுக்கிச் செயல்படுமா? மேலும்  நாய்க்கடி சிகிச்சைக்குத் தேவைப்படும்  ஆண்டி ராபிஸ் ஊசியும் பற்றாக்குறையில் உள்ளது.

மூன்று இலட்சம்  தெருநாய்களால் அல்லல்படும் பெங்களூர்  நகர மக்களுக்கு ஆதரவாக  2012 இல் கர்நாடக உயர்நீதிமன்றம், மனித உயிர்களுக்குப் பாதுகாப்புத் தேவைப்படும் நிலையில் தெருநாய்களை அப்புறப்படுத்தவும், அல்லது ஒழித்துக்கட்டவும் உரிய அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் 8 ஆண்டுகளாகியும் உச்சநீதிமன்றம் நாய் ஒழிப்பிற்குச் சாதகமான தீர்ப்பு வழங்கத் தாமதப்படுத்திக்கொண்டிருப்பது  நம் தெருக்குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலையைத் தொடர்கதையாக்கியுள்ளது. நாய் பாதுகாப்பைவிடக் குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமில்லையா?

1926 இல் ஆகமதாபாத் ஆலைத்தொழிலாளர்களை நாய்கள் கடித்தும் பயமுறுத்தியும் வந்தபோது தீமை விளைவிக்கும் தெருநாய்களைச் சுட்டுக்கொல்லத்தான் வேண்டும் என்று அகிம்சையைப் போற்றிய காந்தியடிகள் அழுத்தமாகக் கூறினார். இதைக்கேட்டு விலங்குநல ஆர்வலர்கள் வெகுண்டெழுந்தபோது இது பற்றித் தம் யங் இந்தியா இதழில்  ஒரு தொடர் கட்டுரையே எழுதினார். அதில் ஒரு பகுதி: ‘’ எந்த ஒரு தெருநாயும் கெடுதி விளைவிக்கக்கூடியது….. நம்மைப் பாம்பு கடிக்கும்வரை காத்திருக்கிறோமா? கண்டதும் அடித்துக் கொல்கிறோம் அல்லவா? அது போன்றே இதுவும். தெரு நாயிடத்திலும்  இந்த விஷம் பதுங்கிக் கிடக்கிறது. ஆகவே வெறி பிடித்த நாயை மட்டுமே கொல்லவேண்டும் என்று காத்திருக்கலாகாது’’  ( யங் இந்தியா-11.11.1926)

நம் அரசு மேனகா காந்தி வழியைத் தவிர்த்துவிட்டு மகாத்மா காந்தியடிகள் வழியையே பின்பற்றவேண்டும்.