மருத்துவராகும் வெறி சரியா?

 குமுறும் நெஞ்சம்:28             

               மருத்துவராகும் வெறி சரியா? -    முனைவர் ‘ சுட்டி’ இ.ஜே. சுந்தர்

10வது 12வது வகுப்புகளில் மாநிலத்தின் முதல் மூன்று இடங்களைப்பிடிக்கும் மாணவ மாணவியரிடம் நேர்காணல் செய்யும் போது ஆண்டுதோறும் வரும் வழக்கமான பதில்: ’மருத்துவம் படித்து டாக்டராகி மக்களுக்குச் சேவை செய்யப்போகிறேன்’

வழக்கறிஞராகி சமூக நீதிக்காகப் போராடுவேன்.

அரசியலில் நுழைந்து கேடு கெட்ட அரசியலைத் தூய்மை செய்வேன்.

பொருளாதாரம் படித்து சமூக ஆர்வலராகி மக்களுக்குப் பணிபுரிவேன்.

ஆசிரியராகிச் சிறந்த குடிமக்களை உருவாக்குவேன்.

வரலாறு படித்துத் தொல்பொருள் ஆய்வில் ஈடுபடுவேன்.

இப்படிப்பட்ட பதில்களைக்  கேட்பது அரிதினும் அரிதாகவே உள்ளது

மருத்துவராகும் ஆசைப்பட்டவர்கள்  பலரும் மருத்துவராகி மக்களுக்கு எந்த அளவு சேவை செய்தார்கள் என்ற புள்ளிவிவரம் இல்லை.

மருத்துவப்படிப்பைத் தவிர வேறு எந்த படிப்பும் இலாயக்கற்றது என்று இவர்கள் மனதில் ஏற்படுத்தப்பட்ட மாயைக்குக் கூட்ட மனப்பான்மையின் கேடுகெட்ட அவலமே காரணம். இந்த மருத்துவராகும் வெறி  நீங்கினால்தான் பல தற்கொலைகளைத் தடுக்க முடியும்.

ஏழை, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவப்படிப்பிற்குத் தடையாக இருக்கும் நீட் தேர்வைத் தடை செய்யப்படவேண்டும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. அதேநேரத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறமுடியாமல் மருத்துவராக முடியவில்லையே என்று துவண்டு போகும் இளம் உள்ளங்களுக்குச் சில உண்மைகளை உரத்தக் குரலில் சொல்லவேண்டியுள்ளது.

இந்தியாவின் சிறந்த உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான 23 ஐஐடிகள்(IIT), 31என்ஐடிகள்(NIT), 12 சிஎப்விகள் (CFV), 20 ஐஐஎப்டிகள் (IIFT), 25 ஐஐஐடிகள்(IIIT)  சேர்ந்து 43,917 இடங்களுக்கு நடத்தப்படும் ஜேஇஇ(JEE) தேர்வுகளுக்கு 15 இலட்சம் பேர்கள் போட்டி இடுகின்றனர். இவையும் கடும் பயிற்சி தேவைப்படும் தேர்வுகளே. இதில் தோல்வியுற்ற எந்த மாணவரும் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவில்லை. ஏழை, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இதில் நுழையத்தடையாக இருக்கும் ஜேஇஇ தேர்வுகளைத் தடைசெய்யவேண்டுமென எந்தக்கட்சியும் பொதுநல ஆர்வலர்களும் கல்வியாளர்களும் எதிர்க்கவில்லை.

ஒப்பீடாக  இந்தியாவின் 542 மருத்துவக்கல்லூரிகளில் உள்ள ஏறத்தாழ 80,000 இடங்களைப் பிடிக்க 15.97 இலட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து அதில் 90% பேர்கள்  போட்டியிடுகின்றனர். தற்போது தமிழ்நாட்டில் மட்டும் இதில் 7200  இடங்கள் உள்ளன. இதற்கான  நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்துள்ளனர். கடைசியாக உயிர்நீத்த மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா உட்பட இதுவரை 12 இளங்குருத்துகள் பலியாகியுள்ள கொடுமை தொடரக்கூடாது என்ற ஆதங்கம் உண்மையாக இருக்குமாயின் மருத்துவப் படிப்பு என்ற மாயை பொசுக்கப்படவேண்டும்.

பெயரும் புகழும், பெருஞ்செல்வமும் ஈட்டும் மிகச்சிறந்த தொழிலாக மருத்துவமும், மிக உயர்வானதாக மருத்துவப்படிப்பும் உள்ளதா என்பதை அலசி ஆராய்வோம்.

உலகின் மிகச்சிறந்த 200 கல்வி நிலையங்களின் பட்டியலில் இந்தியாவின் ஒரு கல்லூரியோ பல்கலைக்கழகமோ இடம்பெறவில்லை. மும்பை ஐஐடி 225வது இடத்திலும், சென்னை ஐஐடி 322வது இடத்திலும் உள்ளன, மருத்துவக்கல்லூரிகள் ஒன்று கூட முதல் 400 இடங்களில் இல்லை. எனவே கோடிக்கோடியாகக்கொட்டிப் படிக்கப்படும் இங்குள்ள மருத்துவக்கல்வியின் தரம் பொறியியல் கல்வியைவிட மோசமான நிலையில் உள்ளது என்பதே உள்ளங்கை நெல்லிக்கனியாகும். உலகத்தரத்திற்கு இந்தியாவின் மருத்துவக் கல்வி நிலையங்கள் எப்போது உயரும்?

ஆசிரியர் தொழிலைப்போல, வழக்கறிஞர் தொழிலைப்போல, மருத்துவத்தொழிலும் ஒர் உன்னதமான தொழில் என்பதில் ஐயமிலை. எனினும் மனித உயிரோடு தொடர்புடைய தொழில் என்பதால் இதில் மருத்துவப்பட்டம் பெறும்போது ‘என் மருத்துத் தொழிலின் மதிப்பையும் சிறப்பையும் உயர்த்துவேன், மனித சமூகத்தின் சேவைக்காக என் வாழ்வை அர்ப்பணிப்பேன்’ என்று உறுதி மொழி ஏற்கின்றனர். இவர்கள் பணிசார்ந்தோர்; வெறும் பணம் ஈட்டுவோர் இல்லை என்ற சிறப்புக் கருதியும், தேவையானபோது, தேவையானவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும் டாக்டர் என்ற முன்னொட்டைப் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த அர்ப்பணிப்பும், மனித நேயமும், பொறுமையும் மிகுதியாகத்தேவைப்படும் இப்பணிக்கு அந்தத் தகுதியோடு எத்தனை பேர்கள் வருகிறார்கள் என்பது கேள்விக்குறியே. நீட் தேர்வில் இத்தகுதிகள் அறவே பரிசோதிக்கப்படுவதில்லை. அரம் போலும் கூர்மை இருந்தால் போதும், மக்கட்பண்பில்லாவிட்டால் பரவாயில்லை என்பது தானே நம் போட்டித்தேர்வுகளின் தேர்வுத்தகுதிநிலை!  மனிதநேயம் கிடக்கட்டும், பொருளாதார நிலையிலாயினும் மருத்துவர்கள் நிலை சிறப்பாக இருக்கிறதா? அவர்கள் மனநிறைவோடு தொழில் செய்கிறார்களா? ஆகிய  கேள்விகளுக்கு விடை காண்போம்.

இத்துறையில் 50 ஆண்டுள் அனுபவமும் மனித நேயமும், சமூகப்பொறுப்பும் உள்ள ஒரு மருத்துவ நண்பரை அணுகி இன்றுள்ள மருத்துவர்களின் சமூகப் பொருளாதார நிலை பற்றி  அவரின் கருத்தைக் கேட்டறிந்தபோது சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன.

‘’ஒருவர் மருத்துவப்படிப்பை முழுமையாகப் படித்து  உருப்படியாகத் தொழில் தொடங்க 13 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் நண்பர்கள் - வேறு படிப்பு படித்தவர்கள்- குறைந்த செலவில் படிப்பை முடித்தவர்கள்- பல படிகள் முன்னேறி இலட்சக்கணக்கில் பொருளீட்டுவதை இவர்கள் கண்டும் செயலற்று இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இவர்கள் ஓரளவு தொழிலில் நிலைத்திருக்க முயலும் காலத்தில் இவர்களுக்கு 40 வயது கடந்துவிட  அவர்கள் நண்பர்கள் ஓய்வூதியத் திட்டங்களைப்பற்றித் திட்டமிடும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.

ஐந்தரை ஆண்டுகள் போராடி  எம்.பி;பி.எஸ் படித்தும் அந்த மருத்துவப்படிப்பு இன்றைய நிலையில் மதிக்கப்படுவதில்லை. மருத்துவமனைகளில் வேலைக்குச் சேர்ந்தால் வெறும் ரூ20,000 ஊதியமே தருகின்றனர். எம்,எஸ், எம்.டி போன்ற முதுகலைப் படிப்பில் சேர்ந்து மேலும் படித்தாலும் இப்போது இதுவும் போதவில்லை;  எம்சிஎச் என்ற   உயர் படிப்பு படிக்கவேண்டியுள்ளது. இதற்கெல்லாம் இடம் கிடைப்பது சிரமமாக இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் கோடிக்கணக்கில் செலவிடவேண்டியுள்ளது. மிக உயர்கல்வி கற்று பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற மருத்துவர்களே பெரிய மருத்துவமனைகளில் ரூ 75,000 முதல் ரூ1 இலட்சம் ஊதியம் பெறுகிறார்கள். அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை வாங்கும் கட்டணத்தில் மருத்துவருக்குச் சிறு  பகுதியே வழங்கப்படுகிறது. பல மருத்துவமனைகளில் போதிய காரணங்கள் இல்லாவிட்டாலும் நோயாளிகளைத் தேவையற்ற பரிசோதனைகளுக்கு அனுப்பும்படியும், மருத்துவமனையில் சேர்க்கும்படியும், குறிப்பிட்ட மருந்தைப் பரிந்துரைக்கும்படியும்  மருத்துவமனை நிர்வாகம் மருத்துவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. மனசாட்சிக்கு எதிராக இந்த முகவர் வேலையையும் மருத்துவர்கள் செய்யவேண்டியுள்ளது.

உண்மையைச் சொன்னால் 10% மருத்துவர்கள் மட்டுமே பெரும் வசதியுடன் இருக்கிறார்கள். 50% மருத்துவர்கள் சராசரி வருவாயில் வாழ்கிறார்கள். 40% மருத்துவர்கள் குறைந்த வருவாயில் வெளியே இதனைக் காட்டிக்கொள்ள முடியாதபடி வாழ்ந்து வருகிறார்கள். இரு  சக்கர வாகனம் கூட வாங்கமுடியாத நிலையில் பேருந்தில் பயணிக்கும் மருத்துவர்களும் உண்டு. மருத்துவர் - நோயாளி, உறவும் கெட்டுவிட்டது. மருத்துவத்துறையின் பல குளறுபடிகளுக்கு மருத்துவர்களே காரணம் என நினைத்து மக்கள் முன்பு போல மருத்துவர்களை மதிப்பதில்லை. மன அழுத்தமும் அதிகரித்துவிட்டது. மருத்துவப்படிப்பு வெறும் கானல் நீர் என்று கூறுமளவுக்குக்கூட  இல்லை. அதைவிட மோசம். சமூக உணர்வு இருந்தால் மட்டும் அர்ப்பணிப்போடு மருத்துவப்படிப்பிற்கு வாருங்கள். இல்லையேல் மருத்துவம் படித்ததற்கு வாழ்நாள் முழுவதும்  வருத்தப்படுவீர்கள். ’’  இந்த என் அறிவுரையை வெளியிட்டு வழிதவறிவரும் இளைய தலைமுறையினரைக் காப்பாற்றுங்கள் என நண்பர் வேண்டினார்.

நம்மவர்கள் மிக விரும்பிச்செல்லும் அமெரிக்காவில் மருத்துவர்கள் நிலைபற்றி எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரம் அங்குள்ள மருத்துவர்கள் நிலையையும் வெளிச்சம் போடுகிறது.

0 பத்தில் ஒன்பது மருத்துவர்கள், இளைஞர்கள் இத்தொழிலுக்கு வர வேண்டாமென பரிந்துரைக்கின்றனர். பிற தொழிலில் இல்லாத சவால்கள், காப்புறுதி சட்டங்களின் கெடுபிடிகள், தொடர்ந்து படித்துத் தன்னை மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டியநிலை, மிகுதியாக ஊதியம் பெறுவதாக மக்கள் தவறாக நினைத்தல், குடும்பத்திற்கு நேரம் செலவிட முடியாமை, படித்த கல்வியால் மிகுதியாகக் கடன்படல் முதலிய பல மனக்குறைகளை அமெரிக்க மருத்துவர்கள் முன்வைக்கின்றனர்.

0 43% மருத்துவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ஓய்வுபெற விரும்புகின்றனர்.

0 ஒரு நாளைக்கு 3 டாக்டர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். பொதுமக்களில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கையை விட இது மிகுதி.

0 பிற பெண்கள் மனச்சோர்வு அடைவதைவிட பெண் மருத்துவர்கள் இருமடங்கு மனச்சோர்வு அடைகின்றனர்.

இந்தியக் கல்லூரிகளில் மொத்த மருத்துவ இடங்கள் 76,928. அதில் அரசு கல்லூரி இடங்கள் 41,388. இந்த இடத்திற்கான போட்டிக்கு நீட்டில் தேர்ச்சி பெற்றுள்ள 7,71,500 பேர் போட்டியிடுவர். .அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத சுமார் 7.3 லட்சம் மாணவர்கள் கோடிக்குமேல்
செலுத்திட வேண்டிய தனியார் சுய நிதி கல்லூரிகளில் உள்ள 35,540 இடங்களுக்கு ஏலம் போவார்கள். மொத்தத்தில் நீட்டில் தேர்ச்சி பெற்ற 7 லட்சம் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காது என்பதே உண்மை. தற்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கட்டணம் ஆண்டுக்கு 25 இலட்சம் வரை ஆகும் நிலையில் மருத்துவப்படிப்பை முழுமையாக முடிக்க ரூ2 கோடி முதல் 3 கோடி வரை செலவாகிறது. மருத்துவமனை நடத்துவோரின் வாரிசுகளுக்கு அந்தத் தொழிலை நடத்தவேண்டுமாயின் இது சரிப்பட்டு வரலாம். மற்றவர்கள் இவ்வளவு செலவிட்டு மருத்துவர் ஆனாலும்  நம்பகமாகத் தொழில் இல்லாத நிலையில் எவ்வளவு  ஈட்டிட முடியும்? ரூ 2 கோடியை வங்கி வைப்புநிதியில் போட்டாலே மாதம் ரூ1,25,000 வட்டி வருமே! பணம் சம்பாதிக்க மருத்துவராவது மூடத்தனமல்லவா?

மருத்துவப்படிப்பைப் படித்தே தீருவேன் என்று இங்கு இடம் கிடைக்காதோர் ஆண்டுக்கு  10,000 பேர்கள் ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளுக்குச் சென்று படிக்கிறார்கள். ஆண்டுக்கு 5000 அமெரிக்க டாலர்கள் தான் கட்டணம் என்று முகவர்கள் கூறுவதை நம்பிப் பலரும் தரமற்ற மருத்துவக்கல்லூரியில் சேர்கின்றனர். உலகச் சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ கவுன்சிலும் அங்கீகரிக்காத கல்லூரிகளில் படிப்பவர்கள் இந்தியாவிலும் பல நாடுகளிலும் தொழில் செய்யமுடியாது. இத்தகைய கல்லூரிகளில் ஆள்சேர்க்க ஏற்கனவே மாணவர்களின் பெற்றோர்களையே முகவர்களாக்கி  கமிஷன் ஆசைகாட்டி இக்கல்லூரிகளில் ஆள் பிடிக்கிறார்கள். வாலறுந்த நரிகளான  இவர்களும் தெரிந்தவர்களைச் சிக்கவைக்கின்றனர். தகுதியான வெளிநாட்டுக் கல்லூரியில் படித்தாலும் படிக்கும் நாடுகளில் பணியாற்றுவது கடினம். இந்தியா வந்து பணிபுரிய எப்எம்ஜிஇ(FMGE) தேர்வு எழுதவேண்டும்.  ஆனால் இதில் தேர்ச்சி பெறுவோர் 100 க்கு 20 பேரே.  தேற முடியாதவர்கள் சிலர் தனியாகத் தொழில்செய்து, கண்டறியப்பட்டுப் போலி டாக்டரகள் என கைதுசெய்யப்படுகின்றனர்.

அரை நூற்றாண்டிற்கு முன் மருத்துவப்படிபில் யாரும் எளிதில் சேரும் நிலை இருந்தது. பியுசி-யில் தவளை, கரப்பான்பூச்சி வெட்டவே அருவருப்படைந்து உயிரியல் படிப்பில் சேரவே பலரும் பயந்ததுண்டு. இதன் தொடர்ச்சியாக மருத்துவப்படிப்பில் ஆர்வத்தைவிட அருவருப்பு காட்டியவர்களே மிகுதி. இப்படி ஓர் அளவற்ற மோகம் மருத்துவப்படிப்பின் மேல் ஏற்பட்டுத்தப்பட்டதற்கு மருத்துவக் கல்வி வியாபாரிகளும், அவற்றில் பலவற்றை நடத்தும் அரசியலாளர்களுமே  முக்கிய காரணம்.

இந்த மாயவலையில் விழாமல் நம் இளம் தலைமுறை இனியேனும் விழிப்போடு செயல்படவேண்டும். சமூக உணர்வும் அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே மருத்துவப் படிப்பிற்கு வாருங்கள் என மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

                                தொடர்பிற்கு: ejsundar@gmail.com