குமுறும் நெஞ்சம்:25
காவல்துறையின் அத்துமீறலால் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், அமெரிக்காவின் மினியாபோலிசில் ஜார்ஜ் ஃபிளாய்டு ஆகியோர் கொல்லப்பட்டபோது தம் வீட்டில் ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கோடிக்கான மக்கள் கொதித்தெழுந்தனர்..
இங்கும் அங்கும் பொங்கி எழுந்த மக்கள் உணர்ச்சியால், ஊடகங்களின் செய்தி எழுச்சியால் தவறு செய்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை பாயத் தொடங்கியுள்ளது. ஆனால் சத்தமே வராமல் உலகெங்கும் காவல்துறை பலபேரை மிருகவதை செய்வது வெளிச்சத்திற்கு வருவதில்லை. உலகில் ஆண்டுக்கு 19,000 பேர்கள் காவல்துறையினரால் கொல்லப்படுகின்றனர். அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு இதுபோல 1000 பேரைக் காவல்துறை தீர்த்துக்கட்டுகிறது. இந்தியாவில் காவல் கம்பிகளுக்குப் பின்னால் அன்றாடம் 5 பேர் உயிரைவிட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது பற்றி பலரும் கவலைப்படுவதில்லை.
மக்களின் நலன் காக்க, சட்டங்களைப் பாதுகாக்க, உருவாக்கப்பட்ட காவல்துறை ஆளும் வர்க்கத்தின், ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக மாறிவிட்டது கவலைக்குரியதாகும்.
காவல்துறை உலகெங்கும் எப்படிச் செயல்படவேண்டும் என்ற அறிவுறுத்தலை ஐக்கிய நாடுகள் சபை ஒரு கையேடாக வழங்கியுள்ளது. அதிலிருந்து சில முக்கிய துளிகள்:
மக்களிடன் பாதுகாப்பையும் உரிமைகளையும் காப்பதே காவல்துறையின் முதல் கடமையாகும். அது முற்றிலும் சுயேட்சையாக இயங்க வேண்டும் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படியும், ஆணையின்படியும் அது செயல்படவேண்டும். ஒரு கட்சியைச் சார்ந்தோ, குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தோ தனிப்பட்ட நபருக்காகவோ செயல்படக்கூடாது. இன, மொழி, சமய, பால் வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்தவேண்டும். மனித மதிப்பீடுகளையும், அனைவரின் மனித உரிமைகளையும் மதித்துக் காப்பாற்றவேண்டும். கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்தில் இருக்கும் நபருக்கு எந்த வடிவிலும் எந்தத் துன்பமும் தர அனுமதியில்லை. அவர்களைக் கைது செய்த விவரத்தை உடனடியாக அவர்கள் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவேண்டும். குற்றம் சாட்டப்பட்டோர் வழக்கறிஞர்களின் உதவி பெற ஆவன செய்யவேண்டும். காவலில் இருப்போருக்கு உணவு, உடை, மருத்துவ வசதி முதலியவற்றைத் தவறாமால் செய்துதரவேண்டும். வேறு வழியில்லா நிலையில் மட்டுமே ஆயுதங்களைப் பயன்படுத்தவேண்டும்…
இப்படி மனித உரிமை சார்ந்து காவல்துறை உலகெங்கும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை விளக்கும் ‘காவல்துறைக்கான மனித உரிமை அளவுகோல்களும், செயல்பாடுகளும்’ (Human Rights Standards and Practice for the Police) என்று ஐநா வெளியிட்ட இந்த நூலினை இணையத்தில் காணலாம்.
போராடும் கூட்டத்தினரின் மேல் உயிர்க்கொல்லி ஆயுதங்களை வேறுவழியில்லா நிலையில், கடைசிக் கட்டமாகவே பயன்படுத்தவேண்டும் என்று வற்புறுத்துகிறது ஐநா. இதனை நடைமுறைப்படுத்த உயிர்க்கொல்லா ஆயுதங்களைப் பல நாடுகள் பரிசோதித்து வருகின்றன. கண்ணீர்ப் புகைக்குண்டு வீசுதல், மிளகுத்தூளைத் தூவுதல், நீரைப் பாய்ச்சுதல், ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தல் - இவற்றைத்தவிர மைக்ரோவ் கருவி மூலம் எதிர்ப்படுவோருக்குத் தற்காலிக வலி ஏற்படுத்தல், ஆபத்தில்லாத் துர்நாற்றம் வீசும் திரவத்தைத் தெளிப்பான் வழி வீசுதல், மின் காந்தக் கதிர்வீச்சைப் பாய்ச்சி நரம்பு மண்டலத்தில் நெருப்பு பற்றியது போன்ற உணர்வைப் போலியாக ஏற்படுத்தல், குறைந்த நேரம் கண்ணைக் குருடாக்கும் கதிர்வீச்சைப் பாய்ச்சுதல், மனதை நிலைதடுமாற வைக்கும் உளவியல் வேதியல் ஆயுதங்களைப் பயன்படுத்தல் முதலியன இவற்றில் சிலவாகும். இவற்றில் பலவும் எதிர்பார்த்த பலனை நல்கவில்லை. இவற்றாலும் பலர் பாதிக்கப்பட்டு இவையும் சமூக ஆர்வலர்களால் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன. அமெரிக்கா முதலிய சில நாடுகளில் காவலர்களின் உடைகளில் படக்கருவி பொருத்தப்பட்டு அத்துமீறலைக் கண்காணித்து வரும் செயல் ஒரளவு பயனளித்து வருகின்றது.
ஐநா வழிகாட்டுதலைப் பின்பற்றியே உலக நாடுகளின் காவல்துறைச் செயல்பாடுகள் அமைய வேண்டும். ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த அறிவுறுத்தலுக்கு மாறான செயல்பாடுகளே உள்ளன.
உலகின் ஊழல் நிறைந்த முதல் 30 காவல்துறைகளில் இந்தியா 26வது இடத்தில் உள்ளது. சிறப்பாகச் செயல்படும் 10 நாடுகளின் காவல்துறைகளே சில நேரங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு மக்கள் போராட்டங்களாலும், சமூக ஆர்வலர்களின் வற்புறுத்தல்களாலும் சீர்திருத்தத்தி்ற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தியாவில் இதற்கான முயற்சிகள் என்ன?
இந்திரா காந்தியின் அவசரநிலை காலத்தில் காவல்துறை நிகழ்த்திய அத்துமீறல்களைச் சரிசெய்ய அதன் பின் வந்த ஜனதா கட்சி ஆட்சியில் காவல்துறையைச் சீர்திருத்தவும், புதிய காவல்துறைச் சட்டம் கொணரவும் தேசிய காவல் ஆணையம் நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் சில நல்ல பரிந்துரைகளை வெளியிட்டது. இதுவரை இவை ஏதும் செயலுக்கு வரவில்லை. இதன் தொடர்ச்சியாக 2006 இல் உச்ச நீதி மன்றம் 7 கட்டளைகளை அறிவித்தது. ஆனால் எந்த அரசும் முழுமையாக இவற்றை இன்று வரை பின்பற்றவில்லை.
காவல்துறையைச் சீரமைப்பது எளிதான செயலன்று. அது நீதித்துறையோடு தொடர்புடையது. இந்தியத் துணை நீதிமன்றங்களில் ஒரு வழக்கு தீர்ப்புக்குவரச் சராசரியாக 5 ஆண்டுகள் ‘மட்டுமே’ ஆகிறது. 26 இலட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன. 10 இலட்சம் மக்களுக்கு 20 நீதிபதிகளே உள்ளனர். இதே போல ஒரு இலட்சம் பேருக்கு 198 காவல் அதிகாரிகளே உள்ளனர். 22% காவல்துறைப் பதவிகளும்,, 33% சிறைத்துறைப் பதவிகளும் நிரப்பப்படாமல் உள்ளன. 4 காவலர்கள் உள்ள இடத்தில் ஒரே நேரத்தில் 4 திருட்டுப் புகார்கள் வந்தால் காவலர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஒழுங்காக விசாரிக்க முடிவதில்லை. இந்தச் சூழ்நிலையில் காவல்துறைச் ‘சம்மட்டி’ முறையைக் கையாள்கிறது. அதாவது நீதி மன்றத்திற்குச் செல்லாமல் வன்முறையைப் பயன்படுத்திப் புகாரை முடித்துவைப்பது; மக்கள் போராடினால் கோரிக்கைகளைக் கேட்டறியும் முன்பே தடியடி நடத்தி விரட்டுவது; திருட்டு அல்லது வன்புணர்வு நிகழ்த்தியவர்கள் மேல் வழக்குத்தொடர்ந்து தண்டனை வாங்கித்தருவதற்குப்பதில் அவர்களைச் சுட்டுத்தள்ளிக் கதையை முடிப்பது; கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டுக் காவல் நிலையத்தையே நீதிமன்றமாக்குவது- முதலியன இதில் அடங்கும். இருவர் செய்யவேண்டிய வேலையை ஒருவர் மேல் சுமத்துவதால் இந்நிலை ஏற்படுவதாகக் கூறுகின்றனர். இதுமட்டுமன்றிச் செல்வாக்குள்ளவர்கள், ஆளும் கட்சியினர் ஆகியோரின் தலையீடுகளே அவர்களின் கண்ணியத்தை மிகுதியாகக் களவாடி வருகின்றன. புகார் செய்யும் சாதாரண மனிதர் ஒருவர் முதல் கட்ட அறிக்கையைக் காவல் நிலையத்தில் பெறுவதும், அவருக்கு நியாயம் கிடைப்பதும் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் பயண முயற்சியாக உள்ளது.
அண்மைக்காலங்களில் முதலமைச்சர்களின் பொறுப்பில் காவல்துறை விளங்கும்போது சுயேட்சையாக அது செயல்படவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் கக்கனிடம் காவல்துறை ஒப்படைக்கப்பட்டது. அப்போது விருதுநகர் கொலைவழக்கில் காமராஜரின் தங்கை மகனையே காவல்துறை கைது செய்தது. கக்கனின் தம்பி விசுவநாதன் திறமை அடிப்படையில் காவல்துறையில் பணிஆணை பெற்றார். ஆனால் தம் பரிந்துரையால் அது கிடைத்தது என்று யாரும் எண்ணக்கூடாது என்பதற்காக, அதில் அவர் சேரமுடியாதவாறு தம்பியைக் கக்கன் தடுத்து நிறுத்தினார். இன்றைய சூழலில் இதுபோன்ற நிகழ்வுகள் சாத்தியமா? காவலர் எண்ணிக்கையை உயர்த்தியதும், காவலர் பயிற்சிப்பள்ளிகள் தொடங்கியதும், இலஞ்ச ஒழிப்பிற்காகத் தனிக்காவல் பிரிவு தொடங்கியதும், சாதிக்கலவரங்களை முன்கூட்டி அறிய இரகசிய காவல் பிரிவை உருவாக்கியதும் இவர் காலத்தில்தான். உலகின் சிறந்த ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாகத் தமிழகக் காவல்துறை பேசப்பட்டதற்கு இவர் செய்த நேர்மையான முயற்சிகளும் காரணமாகும். எனினும் இவர் பொறுப்பில் இருந்தபோதுதான் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 70 மாணவர்கள் காவலரின் துப்பாக்கிச்சூட்டிற்குப் பலியானார்கள்.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளும், உளவியல் வல்லுநர்களும் காவல்துறைச் சீரழிவுக்குச் சில காரணங்களை முன்வைக்கின்றனர்:
‘மன அழுத்தத்தால் காவலர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். கொரோனா நெருக்கடியில் யாருக்குத்தான் மன அழுத்தம் இல்லை? தர்பூசணிப் பழத்திலிருந்து செல்பேசிவரை எவனாவது இலவசமாகத் தரமாட்டானா என்று எதிர்பார்ப்பது மன அழுத்தமல்ல; அது மனநோய்! பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் சுயமரியாதை கூட இந்தக் காவலர்களுக்கு இல்லாமல் இருப்பது இந்தத் துறையின் சாபக்கேடு. தம்மைத் திட்டும் அரசியல்வாதிகளுக்கே அமைதியாகப் பந்தோபஸ்து தந்துவிட்டு ஒரு சாலையோரப் பெட்டிக்கடைக்காரர் ஒரு கேள்வி கேட்டுவிட்டால் மிருகத்தனமாகத் தாக்குவது அதிகாரத்திமிர்தானே ! . சாதாரணக் குடும்பத்திலிருந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வரும் இவர்களிடம் இந்த வெறி எப்படி வருகிறது என்பதை ஆய்வு செய்யவேண்டும்.’
இச்சூழலிலும் மனித நேயம் படைத்த காவலர்கள் எதிர்நீச்சலிட்டு மக்கள் பணி ஆற்றுவது ஆறுதலளிக்கிறது. சென்னைச் சூளைமேட்டில் விடியற்காலை 3 மணிக்குச் சாலையில் தவித்த பெண்ணுக்கு அங்கேயே பிரசவம் பார்க்கச்செய்து காப்பாற்றிய குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்ராவும், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரசவ வலியோடு நடந்து வந்து கொண்டிருந்த கர்ப்பிணிக்கு, வாகன ஏற்பாடு செய்து உதவியதோடு ரத்ததானமும் செய்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றியுள்ள இளம் காவலர் சையது அபுதாஹீரும், கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவருக்குக் கொரோனா அச்சுறுத்தலையும் மீறி முடிதிருத்தி, புத்தாடை உடுத்தி உணவளித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த செல்வபுரக் காவல்நிலையக் காவலர்களும் - இன்னும் இதுபோலப் பலரும் நிகழ்த்தும் மனிதநேயச் செயல்களைக் கேள்வியுறுகையில் காவல் துறையில் புனிதர்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
காவல் துறைக்கு ஆள் எடுக்கும்போது வெறும் கல்வியையும், உடல் வலிமையையும் மட்டும் அளவுகோலாக வைக்காமல் மனித நேயம் படைத்தவர்களை மட்டுமே இனம் கண்டு தேர்ச்சி செய்யும் முறை வரவேண்டும். காவல்துறையின் கண்ணியம் காப்பாற்றப்பட இதுவே முதன்மையான வழியாகும்.
சாத்தான்குளம் காவல்துறைக் குற்றவாளிகளின் செயலால் அவர்கள் குடும்பத்தினர் பெருத்த அவமானத்திற்கு உள்ளாகியிருக்கின்றனராம். இவர்களை மக்கள் தூற்றுவது காதுகொடுத்து கேட்கமுடியாத அளவு கொடுமையாக உள்ளதாம். இவர்களுக்கு உறவினர்களாக இருப்பதே வெட்கப்பட வைத்திருக்கிறது.
ஒரு சமயம் இந்தக் குற்றவாளிகள் வெளியே வந்துவிட்டாலும் இவர்கள் குடும்பங்கள் சந்திக்கப்போகும் அவமானங்களும், அசிங்கங்களும்தான் இவர்களுக்கான சிறந்த தண்டனையாகும். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்போருக்குச் சிறந்த பாடமுமாகும்.