குமுறும் நெஞ்சம்:24
இந்திய அளவில் வருமானம் கொழிக்கும் முதல் 500 நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜே.கே பேப்பர் என்ற நிறுவனம் மட்டுமே அச்சு ஊடகம் சார்ந்த ஒரே நிறுவனமாகும்.
அச்சு ஊடகத்தின் அடக்கவிலையில் மிகுதியான பங்கு வகிக்கும் தாள் தயாரிப்பு நிறுவனமான இதனைத் தவிர, பதிப்பகமோ, பத்திரிகைக் குழுமமோ ஒன்று கூட இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.
சமூகத்தின் வளமான பண்பாட்டைப் பிரதிபலிக்கும் பதிப்புத்துறையும், நாட்டின் 4வது தூணான இதழ்த் துறையும் இன்று இரங்கற்பா பாடும் நிலைக்குச் சரிந்துள்ள நிலையைக் கவலையோடு பதிவுசெய்யவேண்டியுள்ளது.
நாட்டின் 22 மொழிகளில் 10,000 பதிப்பகங்கள் நூல்களை வெளியிடுகின்றன. இதனை 20,000 விற்பனையாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். இதில் பாதிக்கு மேற்பட்ட நூல்கள் பாடநூல்களே. புத்தக விற்பனையாளர்களை நம்பி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் பதிப்பகங்களின் குரல்வளையை இந்த ஊரடங்கு மேலும் நெருக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 25,000 அச்சகங்களும் அதை நம்பி ஏறத்தாழ 5 இலட்சம் குடும்பங்களும் உள்ளன. மொத்தமாகப் பதிப்புத்துறையையும் சேர்த்து ஏறத்தாழ 10 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசில் பதிப்பாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது. நூலகங்களுக்குப் புத்தகம் அனுப்பும்போது பதிப்பாளர் நலவாரியத்திற்காக 2.5% பிடித்தம் செய்தனர். இந்தத் தொகை இன்றைய நெருக்கடி காலத்தில்கூடப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிகளில் 10% நூலக வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த வரி பொது நூலகத்துறைக்கு முழுமையாகப் போய்ச் சேருவதில்லை. உள்ளாட்சித்துறையிலிருந்து சுமார் ரூ250 கோடி நூலகத்துறைக்கு வரவேண்டியுள்ளது. நூலகத்துறையால் 1000 க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட நூல்களுக்கு இன்னும் தொகை வழங்கப்படாமையால் அச்சுத்துறை தொடர்பான அனைவரும் வருமானமின்றித் தத்தளிக்கின்றனர். பதிப்பாளர்கள் பலரும் வட்டிக்குத் தொகை வாங்கிப் புத்தகங்கள் அனுப்பியவர்கள் ஆவர்.
இவை தவிர 2018,19 ஆண்டுகளில் நூலக ஆணையை நம்பி அச்சடிக்கப்பட்ட 15,000 நூல்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இனி நூல்களே அச்சடிக்கவேண்டாமென்ற முடிவுக்குப் பல பதிப்பகங்கள் தள்ளப்பட்டுள்ளன. அப்படி அடித்தாலும் தேவைக்கேற்ப அச்சிடும் (print on demand) முறையில் நகலச்சாக 50 அல்லது 100 படிகள் அச்சிட்டால் போதும் என்ற நிலையில் பலரும் உள்ளனர்.
பதிப்பகங்களின் பாதிப்புக்குச் சிறிதும் குறையாமல் இதழ்களின் விற்பனை நாள்தோறும் கடுமையாகச் சரிந்துவருகிறது. மின் ஊடகங்களின் அளவற்ற வளர்ச்சியால் உலகெங்கும் இந்தப் பாதிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகள், நொடிக்கு நொடி பொழியும் இணையத் தகவல்கள், வாசிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி, நஞ்சாக ஏறிவரும் தாள், அச்சகச் செலவுகள், விளம்பர வருவாய் நலிவு முதலியன நாள்தோறும் விற்பனைச்சரிவை உலகெங்கும் நிகழ்த்தி வருகின்றன. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல அச்சு இதழ்கள் நிறுத்தப்பட்டு மின் இதழ்களாக அவை வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்படும் 100 அச்சு இதழ்களின் பட்டியல் அண்மையில் வெளிவந்துள்ளது.
இதழ்கள் பல கோடிகளை இழந்த நிலையில் ஒரே இரவில் பல பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளனர். மிகுந்த ஊதியம் பெறும் அனுபவமிக்க ஊழியர்களை நீக்கி குறைந்த ஊதியம் பெறும் அனுபவம் குறைந்தவர்களை இதழ்கள் வேலைக்கு அமர்த்தத் தொடங்கியுள்ளன. இதன் விளைவாக இதழ்களின் தரம் தாழ்ந்து மேலும் விற்பனை வீழ்கிறது.
உலகின் இரண்டாவது இதழ்ச் சந்தையைக் கொண்டிருக்கும் இந்தியாவில் 22 மொழிகளில் 1,05,443 இதழ்கள்(2016) பதிவு செய்யப்பட்டுள்ளன. பிற இந்திய இதழ்களின் விற்பனை வீழ்ச்சிக்கு முன்னரே இணையப் பயன்பாடு மிகுந்துள்ள தமிழகத்தில் இதழ்கள் வேகமாகச் சரியத்தொடங்கிவிட்டன. 20 முதல் இந்திய நாளிதழ்களில் தினத்தந்தி 8வது இடத்திலும், தினமலர் 20வது இடத்திலுமே இடம் பெற்றுள்ளன. மேலும் சில நாளிதழ்களும், பருவ இதழ்களும் நீண்ட பாரம்பரியம் காரணமாகத் தங்கள் வீழ்ச்சியை வெளியே தெரிவிக்க அஞ்சி திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையில் உள்ளன.
தரமாக வெளிவந்த இந்தியா டுடே இதழின் தமிழ், மலையாள, தெலுங்கு அச்சுப்பதிப்புகள் 20 ஆண்டுகால நட்டத்தை விழுங்கிக்கொண்டு கடைசியில் பிப்ரவரி, 2015 இல் தம் மூச்சை நிறுத்தின..
1926 இல் தொடங்கிய ஆனந்தவிகடன், தொடர் வளர்ச்சி பெற்று அந்த நிறுவனத்தின் வாயிலாக அடுத்தடுத்து பலதுறை இதழ்களை நடத்தினாலும் இன்று அதற்கும் சறுக்கல் தொடங்கிவிட்டது. இதழ் விற்பனை சரிந்ததால் இணையத்தின் வழி செய்திகளை மணிக்கு மணி விகடன் வெளியிடுகிறது. தன் நட்டத்தைச் சமாளிக்க முடியாமல் சுட்டி விகடன், விகடன் தடம், அவள் மணமகள், டாக்டர் விகடன் ஆகிய இதழ்களை அறவே நிறுத்திவிட்டது. விகடனில் பணிபுரிவது பாதுகாப்பானது என்று ஊடகவுலகம் நம்பிக்கொண்டிருந்த நிலையி்ல் 600 பேர் பணிபுரியும் இந்த நிர்வாகத்திலிருந்து திடீரென 176 பேரை விகடன் வேலை நீக்கம் செய்து நிலைகுலைய வைத்துள்ளது. பாரம்பரியமிக்க கல்கி நிறுவனத்தின் சிறுவர் இதழான கோகுலமும் காலமாகிவிட்டது. குமுதம் இதழ் தன் நிர்வாகச் சிக்கல்களிடையே தன் விற்பனைச்சரிவைச் சரிக்கட்ட பல உத்திகளைக் கையாண்டு வருகிறது. முகக்கவசம், கையுறை இவற்றை இதழோடு இலவசமாக அளித்து விற்பனையைத் தக்க வைக்க அரும்பாடுபட்டும் ஊழியர்களுக்கு முழுமையாக ஊதியம் தரமுடியாது தவிக்கிறது. எல்லா நாளிதழ்களும், பருவ இதழ்களும் இதே நிலையில் தான் மூச்சுத் திணறலுடன் வாழ்கின்றன.
கொரோனா ஊரடங்கு, பதிப்பகங்கள் மற்றும் இதழ்களின் நலிவை மேலும் மோசமாக்கி, மரணப்படுக்கையில் தள்ளிவருகிறது. இந்த நிலை மீளுமா? இதற்குத் தீர்வு உண்டா ? என்ற கேள்விகளை உலகெங்கும் ஊடகத்தினர் கேட்டு வருகின்றனர். உண்மை நிலை கசப்பானதாயினும் இந்நிலையைத் துணிவாக மாற்றுவழியில் எதிர்கொண்டே ஆகவேண்டும்.
20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக மாற்றங்கள் நினைத்துப்பார்க்கமுடியா வேகத்தில் நிகழ்கின்றன. இந்த வேகம் இன்னும் மிகும் என்பதே எதிர்காலவியலாளர்களின் கணிப்பாகும். 50 ஆண்டுகளுக்கு முன் மின்சாரமே பலர் அறியாத நிலையிலிருந்து இன்று அலாவுதீன் அற்புத விளக்கின் மறுபிறவியாக உருவெடுத்துள்ள திறன்பேசி(Smart phone) வரை ஏற்பட்டுள்ள அதிவிரைவு மாற்றங்களை எண்ணிப்பார்த்தால் இந்த வேகம் புரியும். எனவே எதிர்கால அதிர்ச்சிகளுக்கு நாம் தயாராவதே புத்திசாலித்தனமாகும்.
அச்சத்தொழில் உருவாகிய 500 ஆண்டுகளில் பெரிய மாற்றமில்லையாயினும் அண்மையில் கணினி, அச்சுத்தொழிலைக் கையில் எடுத்தபின் மாய வேகத்தில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அச்சுக்கோப்பு என்ற சோர்வுமிக்க நிலையிலிருந்து இன்று பேசினாலே எழுத்துகள் அச்சாகின்றன. மெய்ப்புத்திருத்தத்தைக் கணினியே நிகழ்த்துகிறது. அச்சிட்ட எழுத்துகளைப் பார்வையற்றோரும் கேட்கும் வண்ணம் கணினி படித்துக்காட்டுகிறது; உலகின் பல மொழிகளில் கணப்பொழுதில் மொழிபெயர்க்கிறது.
படிக்கும் பழக்கம் மறைந்துவிட்டதே என்று நாம் கவலையுற வேண்டா. படிக்கும் முறைதான் மாறியிருக்கிறது. புத்தகம் படிப்பது போல அதைவிட வசதியாகப் புத்தகவடிவில் கண்ணுக்கு இடையூறு இன்றி அமேசான் நிறுவனம் கிண்டில் என்ற மின்படிப்பானை 2007 இல் அறிமுகப்படுத்தியது. 2011 இல் அச்சிடப்பட்ட நூல்களை விட மிகுந்த எண்ணிக்கையில் இந்நிறுவனம் மின் நூல்களை வெளியிட்டுள்ளது. இந்தக் கருவியில் 10,000 நூல்கள் வரை சேமிக்கலாம் என்பதால் ஒரு நூலகத்தையே இதற்குள் உருவாக்கலாம். கிண்டில் வழி இதுவரை 34 மொழிகளில் 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட மின் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிறுவனம் தமிழில் நூல்களை வெளியிட முன் வந்த சில மாதங்களிலேயே 1000க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றைக் கிண்டில் என்ற மின்படிப்பானில் மட்டுமன்றி திறன்பேசி, கணினி, முதலிய எந்த மின் கருவிகள் வாயிலாகவும் படிக்கலாம்; பகிரலாம். உலகெங்கும் விற்பனைக்குக் கொண்டுசெல்லலாம். அச்சு நூலைப்போல விற்பனையாளர்களைத் தேடி அலைவதும், அவர்களால் இழுத்தடிக்கப்படுவதும், அச்சுப்படிகளைப் பாதுகாக்க இடம் தேடுவதும், காப்பாற்றுவதும் இனிப் பழங்கதையாகிவிடும்.
பதிப்புலகின் மெக்கா என்று கருதப்படும் பிராங்க்பேர்ட் புத்தகத்திருவிழா இவ்வாண்டு நடைபெறுவதையொட்டி அதன் ஒருங்கிணைப்பாளர் ஜூர்கன் பூஸ் ‘’ இனி கண்டம் விட்டுக் கண்டம் வந்து இதில் கலந்துகொள்ளாதீர்கள். ஒலி,ஒளி ஊடகங்களை நாம் சரிவரக் கையாண்டால் ஒரு புதிய உலகைத் திறக்கும் சாத்தியங்கள் மிகுதியாகும்’’ என்று கூறியுள்ளதை நம் புத்தகக்காட்சிகளும், வெளியீட்டாளர்களும் இனிப் பின்பற்றலாம்.
அனைத்து இதழ்களும் இணையப் பதிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. செய்தித்தாள் இயற்கையை அழிக்கிறது என்கின்றனர் சூழலியலாளர்கள். அமெரிக்காவில் அச்சிடப்படும் ஞாயிறு இதழ்களின் தாள் தேவைக்காக மட்டும் வாரத்தில் 5 இலட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன. மின்னூலை விட அச்சு நூல்கள் 3 மடங்கு மூலப்பொருள்களையும் 78 மடங்கு நீரையும் பயன்படுத்துகின்றன. அரசுகள் தாளில்லாச் செயல்பாடுகளைத் தீவிரமாக்கத் தொடங்கிவிட்டன. எனவே விரைவில் அச்சு ஊடகங்கள் மறைந்து தாளில்லா நூல்களும் இதழ்களுமே எங்கும் காணப்படு்ம் நிலை தவிர்க்கமுடியாததாகும்.
அச்சு ஊடகம், ஒலி ஊடகம், காட்சி ஊடகம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்ட அற்புதம் இணையமாகும். தமிழில் வந்த படைப்புகள் அனைத்தும் 2000 க்கும் மேற்பட்ட இணையதளங்கள் வழி வெள்ளத்தால் போகாது, வெண்தணலால் வேகாது, கறையானுக்கு இரையாகாது, கொள்ளத்தான் குறையாது, வாழ்ந்துகொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான செய்திகள் நம் விரலைத் தட்டினால் வெளிவரத் துடிக்கின்றன. இணையத்தையும் உள்வாங்கித் திறன்பேசி வாமன அவதாரத்தில் விசுவரூபம் எடுத்துள்ளது.
இந்த மாபெரும் வசதியைப் பயன்படுத்தத் தெரியாமலும், விரும்பாமலும், கற்கத் தயங்கியும் தமிழறிஞர்கள் உட்பட்ட பலரும் விளங்குவது வருந்துதற்குரியதே. யாப்பிலக்கணம் கற்பதை விட இதனைக் கற்பது பலமடங்கு எளிதானது; ஒற்றுப்பிழைகளை நீக்கும் முறைகளை மனதில் ஏற்றுவதை விட இதன் செயல்பாடுகள் ஒன்றும் கடினமில்லை. இதனைக் குழந்தைகளிடம் வெட்கப்படாமல் பெரியவர்கள் கற்றுக்கொள்வதில் தவறில்லை.
இதழியல் குரு எனப் புகழப்படும் பிலிப் மேயர் என்பாரின் ஆய்வு முடிவின்படி ஏப்ரல், 2043 க்குள் அச்சு ஊடகங்கள் 100% மறைந்துவிடும். இது மிகுதியானக் காலக்கெடு. கொரானா போன்ற பேரிடர் நிகழ்வுகள் அச்சு ஊடகங்களின் மறைவை இன்னும் விரைவுபடுத்தும் என்றே எதிர்பார்க்கின்றனர்.
நாடகத்தால் கூத்தும், திரைப்படத்தால் நாடகமும், தொலைக்காட்சியால் திரைப்படமும், அழிந்தது போல இணையத்தால் அச்சு ஊடகங்கள் உட்பட பலவும் மறைவதும் புதியன மலர்வதும் இயற்கை நியதியாகும்.