குமுறும் நெஞ்சம்:23
மனித இனம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை போர்களில் இறந்தவர்களைவிட மதுவால் மடிந்தவர்களே மிகுதி. தொற்றுநோய், இதய நோய், புற்றுநோய், இயற்கைச் சீற்றம், விபத்துகள் இவற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மதுவால் மாண்டவர்களின் எண்ணிக்கை மிஞ்சுகிறது. உலகில் செழித்த 21 நாகரிகங்களில் 19 நாகரிகங்கள் அழிந்துபோக மதுவே காரணம் என ஆய்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த உண்மைகளை உணர்ந்தவர்கள் தங்கள் நாடுகளை அரக்க மது அழிக்காமல் காப்பாற்றக் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏமன், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சூடான், சோமாலியா, சௌதி அரேபியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், புரூணை, மாலத்தீவு, மௌரிடானியா, லிபியா ஆகிய 13 நாடுகளில் மதுவிலக்குக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வல்லரசான அமெரிக்காவின் 33 மாநிலங்களின் பல பகுதிகளில் மதுவிலக்கு நிலவுவதுடன் கான்சாஸ், மிசிசிபி, டென்னிசி ஆகிய 3 மாநிலங்களில் முழுமையான மதுவிலக்கு உள்ளது. உலகின் பல முன்னேறிய ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் பல பகுதிகளிலும் மதுவை தடைசெய்தே வருகின்றனர்.
ஆனால் நம் புனித பாரதத்தில் குஜராத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் குடிக்கச் சிறிதும் தடையே இல்லை. ‘’நம்மிடையே ஆயிரக்கணக்கான மது அருந்துபவர்கள் உலவுவதைவிட ஓட்டாண்டியான இந்தியாவே மேல்’’ என்று மதுவுக்கு எதிராகக் காந்தியடிகள் உணர்ச்சிகரமாகக் குரல் எழுப்பிய நாட்டில், அவர் பிறந்த மண்ணை மட்டுமே முழுமையாக விட்டுவைத்திருக்கிறார்கள். மதுவிலக்கைப் கடைப்பிடிக்கும் பீகார், மிசோரம், நாகாலாந்து, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் ஊசலாட்டமே காணபடுகிறது. மற்ற மாநிலங்களில் தம் வருவாய்க்காக மதுவைத்திறந்துவிட்டு ஏழைகளின் வருவாயைப் பறித்து வருகின்றனர். குடிப்போரின் வாழ்நாளில் ஆண்டுக்கு 75 நாள்களைக் குறைத்து வருகின்றனர்.
1949 முதல் 1971 வரை மதுவின் நிறமும், மணமும் அறியாத புதிய தலைமுறை தமிழகத்தில் இருந்தது. ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி, குமார சாமி ராஜா, காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை ஆகிய 6 முதல்வர்கள் மதுவாசனையை இளைஞர்களுக்குக் காட்டாமல் இருந்தார்கள். எதிர்ப்புகளுக்கிடையே கருணாநிதி 1971 இல் அரசு வருவாயைப் பெருக்க மதுவிலக்கைக் கைவிட்டார். 1983 இல் எம்ஜிஆர், அரசே நடத்தும் சராயக்கடைகளான டாஸ்மாக்கைத் தொடங்கினார். 2003 இல் ஜெயலலிதா மாநிலத்தின் சாராயக் கடைகளின் ஏகபோக உரிமையை டாஸ்மாக்கிடம் ஒப்படைத்தார்.
இதன் வழியாக இந்தியாவிலேயே சாராயத்தை அதிகாரப்பூர்வமாகக் கடைகள் திறந்து நேரடியாக விற்று முழுவருவாயையும் அரசு கருவூலத்தில் சேர்க்கும் ஒரே மாநில அரசு தமிழக அரசு என்று சிறுமைக்கு உள்ளானோம்.
1983 இல் மதுவரியால் அரசு ஈட்டியது ரூ183 கோடி. 2003 இல் அது ரூ. 3639 கோடியாக வளர்ந்தது. 2019-20 நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1,38,000 கோடி; அதில் டாஸ்மாக் மூலம் பெரும் பாய்ச்சலாக ரூ. 31,157 கோடியை அரசு ஈட்டியது. குடிகாரர்கள் பெருகப் பெருக அரசின் கருவூலம் செழித்தது, மது குடிப்போர் மிகுதியான மாநிலங்கள் வரிசையில் தமிழகத்தை மிஞ்சும் மாநிலங்கள் உள்ளன. ஆனால் குடிகாரர்களை வளர்த்தெடுத்தமையால் மதுவருவாயில் முதலிடம் தமிழகத்திற்கே! சென்ற தீபாவளிக்கு மட்டும் மது விற்பனை 602 கோடி; பொங்கலுக்கு 220 கோடி. தமிழகம் முழவதும் உள்ள 6825 டாஸ்மாக் கடைகளும், 4435 மது அருந்தும் கூடங்களும் விளிம்பு நிலை மக்கள் உட்பட பலரின் குடிக்கும் பலவீனத்தைக் காசாக்கி அதற்குப் பதிலாகக் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய், இதய நோய், நோய்எதிர்ப்பு சக்தி இழப்பு, சாலை விபத்து இவற்றை இலவசமாக வழங்கிவருகின்றன.
தமிழகத்தின் மக்கள் தொகையில் ஆண்கள் பெண்களை விட மிகுந்துள்ளனர். ஆனால் மதுவால் பல ஆண்கள் சாவைத் தழுவுவதால், வாக்காளர் பட்டியலில் பெண்கள் எண்ணிக்கையே மிகுந்துள்ளது.
மதுவிலக்கைக் கொண்டுவரமுடியாமைக்கு அரசு பல்வேறு நொண்டிச்சாக்குகளை அடுக்குகிறது. ‘பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கு கொண்டுவந்தால் தான் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு சாத்தியம்’ என்பது ‘அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துகிறேன்’ என்ற திரைப்பட உரையாடல் பாணியில் உள்ளது. இலவசங்கள் தரமுடியாமல் போய்விடும் என்பது இன்னொரு சாக்குபோக்கு. குடிக்கு அடிமையாகிவிட்ட ஓர் ஏழைத்தமிழர் நாளுக்கு ஒரு குவார்டர் பிராந்தி குடித்தால் 5 ஆண்டுகளில் டாஸ்மாக் கடையில் ரூ1,26,000 இழக்கிறார். ஆனால் அவர் குடும்பம் இலவசமாகப்பெறும் பொருள்களின் மதிப்பு வெறும் ரூ16,000 தான்.
காங்கிரஸ் பேரியக்கத்தைத் தோற்றுவித்த ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் ‘குடிபோதைக் குற்றங்களைத் தூண்டுகிறது. குடியின் மூலம் வரும் வருவாய் பாவத்தின் கூலி ஆகும். அரசுக்கு ஒரு ரூபாய் வருவாய் வந்தால், இதனால் விளையும் குற்றங்களைத் தடுக்க இரண்டு ரூபாய் செலவழிக்க நேரிடும்’ என்ற நீண்ட காலத்திற்கு முன்னரே கூறியது இன்றும் உண்மையிலும் உண்மை.
மதுவிலக்கைச் செயல்படுத்தினால் ஏற்படும் வரி இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்பதற்குப் பல மாற்றுத்திட்டங்களைச் சமூகவியலாளர்களும் பொருளாதார வல்லுநர்களும் முன்வைத்துள்ளனர். அவற்றில் சில:
1. மணல் குவாரி, கல்குவாரி, கிரானைட் போன்ற இயற்கை வளங்களை அரசே ஏற்று நடத்தினால் மது விற்பனை வருமானத்தைவிட பல 100 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாகக் கிடைக்கும்.
2. இலாபம் தரும் அரசு நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருமானத்தைப் பெருக்கலாம். அரசு இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதித்து அதன்வழிப் பொருளீட்டலாம்.
3. வாக்காளர்களை எளிதில் ஏமாற்றும் வசீகரத்திட்டங்களே இலவசங்கள். இதன் மூலம் ஏழ்மையை விரட்ட முயல்வது ஓட்டைப்பாத்திரத்தில் நீர் நிரப்புவதாகும். அரிசி தவிர பிற இலவசங்களை முற்றாக நீக்குவதும், வசதிபடைத்தவர்களைப் பொது விநியோகத்திட்டத்திலிருந்து எடுத்துவிடுவதும் மது வரி இழப்பை ஓரளவு ஈடுகட்டும்..
4. தனியாருக்குக் கடல் கனிமங்களை அரசின் நேரடிக்கண்காணிப்பில் ஒப்பந்தம் செய்து நல்ல வருவாய் ஈட்டலாம்.
5. 1971 க்கு முன் மதுவருவாய் இன்றி ஆட்சி நடத்தியதையும் குஜராத்தில் மதுவருவாய் இன்றி ஆட்சி நடப்பதையும் கண்டறிந்து பாடம் கற்று அவற்றின் நடைமுறை அம்சங்களைச் செயல்படுத்தலாம்.
6. பத்திரம் பதிவுசெய்தல் , உரிமம் பெறுதல் போன்ற பலவற்றில் அரசு ஈட்டும் வரிவருவாய்க்கு முட்டுக்கட்டைபோட்டு கையூட்டுப் பெறுவோரைத் தண்டிக்கக் கடுமையான சட்டங்கள் இயற்றி அரசின் வருவாயைப் பெருக்கலாம்.
7. பொது மக்களிடம் உடல்நல விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசுக்கு ஏற்படும் மிகுந்த மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம். அத்துடன் தெருவில் குப்பைபோட்டு, எச்சில் துப்பி, சிறுநீர் கழித்து சுகாதாரத்திற்குக் கேடு விளைவிப்போருக்குக் கடும் அபராதம் விதித்தும் வருவாயைப் பெருக்குவதுடன் மருத்துவச் செலவுகளையும் குறைக்கலாம். ஊரையும் தூய்மையாக்கலாம்.
இவை போன்ற இன்னும் பல வழிகள் இருக்க மதுவில் சுவைகண்ட குடிகாரர்களைவிட மிகுதியாக மதுவருமானத்தில் சுவை கண்ட அரசு மாற்றுத்திட்டங்களைச் செயல்படுத்த முனைவதில்லை.
சங்க காலத்தமிழகம் குடியால் நலிந்து இருண்ட காலத்திற்குச் செல்வதைக் கண்டே திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தில் மதுவை ஒழிக்க உரத்த குரலில் முழங்குகிறார். எல்லாச் சிறப்புகளையும் இழந்து நஞ்சென்னும் மதுவை அருந்தும் குடிகாரனை, பெற்ற தாயும் வெறுப்பாள் என்கிறார். தமிழரை வீழ்ந்து விடாமல் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட அறநூல்களான பழமொழி, நான்மணிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, இன்னா நாற்பது, ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, நீதி வெண்பா, அறநெறிச்சாரம் முதலியவை மதுவால் வரும் கேடுகளை மனதில் தைக்கும்படி விளக்குகின்றன. சங்ககாலத் தமிழனுக்கு ஏற்பட்ட பாதிப்பு மதுவால் மீண்டும் அவனுக்கு வந்துவிடக்கூடாது என்ற அச்சத்துடன் அவை மதுவிலக்கைத் தீவிரமாக வற்புறுத்துகின்றன.
ஆனால் இன்று பெருகிவரும் குடிகாரர்களின் எண்ணிக்கை நம் தமிழ்ச்சான்றோர்களின் முகத்தில் கரிபூசுவதாக உள்ளது. இன்று தமிழகத்தில் 6 பேரில் ஒருவருக்கு மது அருந்தும் வழக்கம் உள்ளது. அசோசெம் என்ற வர்த்தக கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப்பிரிவு மேற்கொண்ட ஆய்வு கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்களின் மது அருந்தும் வழக்கம் 100% மிகுந்துள்ளதாக அறிவிக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் 28 வயதிற்கு மேல் இருந்த குடிப்பழக்கம் இன்று 13 வயது நிரம்பாதவர்களிடமும் தொற்றி வருகிறது. 13- 21 வயது பழக்கம் இறப்புவரை தொடரும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பணி செய்யும் பெண்களிடமும் மதுப்பழக்கம் விரிவடைந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் மதுரையில் பெண்களுக்கெனத் தனி டாஸ்மாக் கடை தொடங்கியது சமூகத்தையே கலங்க வைத்தது. விரைவில் குடிப்பழக்கமுள்ளோர் எண்ணிக்கை 2 கோடியை எட்டும் என்கின்றது ஆய்வு. மதுப்பழக்கத்தை ஊக்குவிக்க மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தொடங்கி அதன் சார்பாக அதன் மாநிலத்தலைவர் செல்லப்பாண்டியன் பாட்டில் சின்னத்தில் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம் 2530 வாக்குகள் பெற்று டாஸ்மாக் பிரியர்களுக்கு நன்றியும் தெரிவித்திருக்கும் கொடுமை நிகழ்ந்திருக்கிறது.
குடி குடியைக் கெடுக்கும் என்ற வாசகத்தைப் பார்த்து யாரும் திருந்துவதாக இல்லை. மதுக்கடைக்குச் செல்ல பணம் தராத தாயைக் கொன்ற மகன் பற்றியும், மதுவுக்காக மகளை விபச்சார விடுதியில் விற்ற தந்தை பற்றியும் செய்திகளைப் படிக்கையில் நெஞ்சம் குமுறுகிறது.
ஊரடங்கில் மதுவின்றி 21 நாள்கள் பழகி மதுப்பழக்கம் பலருக்கு மறந்துவிட்ட நிலையில் ஊரடங்குத் தளர்வு இந்த நல்ல வாய்ப்பை நிர்மூலமாக்கிவிட்டது. மதுக்கடைகள் திறந்த ஒரே நாளில் 172 கோடிக்கு மது விற்பனையானது. அரசு தவறு செய்தால் நீதிமன்றத்தை நாடலாம். உச்ச நீதிமன்றமே மதுவிலக்கிற்கு எதிரான தீர்ப்பு வழங்கினால் யாரிடம் செல்வோம்?
வேறு வழியின்றித் தெருவில் வந்து தாய்மார்களும், சமூக அக்கறையுடையோரும் போராடுவது தொடரும்.
குடிகாரர்கள் பெருகினால் தமிழகத்தின் முன்னேற்றம் அனைத்தையும் மதுவே குடித்துவிடும். இந்த ஆபத்தை இனியும் தடுத்து நிறுத்தாவிட்டால் மீண்டும் ஓர் இருண்ட காலம் உதயமாவது தவிர்க்கமுடியாததாகிவிடும்.